
சற்று நேரத்தில் சகுந்தலா எழுந்து வந்து பார்த்த போது துஷ்யந்த்தும் பரத்தும் ஹாலில் அமர்ந்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர்.
பரத்திற்கு சமமாக துஷ்யந்தும் சிறு பிள்ளையாக மாறி விளையாடுவதைப் பார்த்த சகுந்தலாவின் முகத்தில் விரக்தியான பாவனை.
சில நொடிகள் கழித்து அவளை அவதானித்த துஷ்யந்த் பரத்தின் காதில் ஏதோ கூறவும், புன்னகையுடன் சரி எனத் தலையசைத்து விட்டு தாயிடம் ஓடினான் சிறுவன்.
சகுந்தலா இன்னுமே ஏதோ யோசனையில் அவர்கள் இருந்த பக்கம் வெறித்தவாறு நின்றிருக்க, அவளின் கரத்தைப் பிடித்து இழுத்தான் பரத்.
அதில் தன்னிலை அடைந்த சகுந்தலா பரத்தை நோக்க, “மம்மி… சாக்லேட் அங்கிள் எனக்கு புது புது கேம்ஸ் எல்லாம் சொல்லித் தந்தார். வாங்க காட்டுறேன். சீக்கிரம் வாங்க மம்மி.” என்றவாறு சகுந்தலாவின் கரத்தைப் பிடித்து இழுத்துச் சென்று நேராக துஷ்யந்த் இருந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினான் பரத்.
பரத்தும் துஷ்யந்தும் இவ்வளவு நேரமும் செஸ் தான் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதைத் தான் சிறுவன் புது கேம் என்று கூறி இருந்தான்.
“வாங்க மம்மி… நாம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடலாம். சாக்லேட் அங்கிள் தான் ரொம்ப நேரமா வின் பண்ணிட்டு இருக்கார். நீங்க அவர பீட் பண்ணி வின் பண்ணுங்க.” என பரத் கூறவும் சகுந்தலா மறுக்க வாய் திறக்க, துஷ்யந்த் அவசரமாக பரத்தைக் கண் காட்டினான்.
மகனின் முகத்தில் இருந்த ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது சகுந்தலாவிற்குமே மறுக்க மனம் வரவில்லை.
எனவே பரத்துடன் சேர்ந்து அமர்ந்து கொண்டவள் துஷ்யந்திற்கு எதிராக விளையாட்டில் காய்களை நகர்த்தத் தொடங்கினாள் சகுந்தலா.
முதலில் ஆர்வமற்று விளையாடத் தொடங்கியவள் பரத்தின் ஆர்ப்பரிப்பில் விளையாட்டில் கவனம் செலுத்தினாள்.
துஷ்யந்தும் விட்டுக் கொடுக்காது சரிக்கு சமமாக விளையாடி பல முறை செக் வைக்க, “செக்மேட்…” எனக் கத்தியவாறு இறுதியில் வென்றது என்னவோ தாயும் தனையனும் தான்.
“ஹே… நாங்க வின் பண்ணிட்டோம். ஜாலி… ஜாலி… சாக்லேட் அங்கிள் தோத்துட்டார். பரத் வின். பரத் வின்…” எனத் துள்ளிக் குதித்தான் பரத்.
மகனின் ஆர்வம் சகுந்தலாவையும் தொற்றிக்கொள்ள, அனைத்தும் மறந்து வாய் விட்டுச் சிரித்தாள்.
துஷ்யந்த்தோ காணக் கிடைக்காத பொக்கிஷம் போல் அக் காட்சியை இமைக்க மறந்தவனாய் ரசித்தான்.
சில நொடிகள் கழித்தே தான் செய்யும் காரியம் உணர்ந்து தலையை உலுக்கிக் கொண்டான்.
“இனாஃப்.. இனாஃப் சேம்ப். ரொம்ப நேரம் விளையாடிட்டீங்க. சோ டயர்டா இருப்பீங்க. அதறால இப்போ குட் போய் போல போய்ட்டு கார்ட்டூன் பாய்ப்பீங்களாம்.” என துஷ்யந்த் கூறவும் துள்ளிக் குதித்தவாறே ஓடிச் சென்றான் பரத்.
மகன் சென்ற திக்கை புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருந்த சகுந்தலா, “ஆர் யூ ஓக்கே நவ்?” என்ற துஷ்யந்தின் குரலில் அவன் பக்கம் திரும்பி புன்னகை மாறாமல் ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்.
சகுந்தலாவின் சின்ன அசைவு கூட துஷ்யந்தின் இதயத்தை மயிலிறகாய் வருடியது.
அவனின் உள்ளம் ஆழ்கடலைப் போல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
அதனை யாருக்கும் வெளிக்காட்டாமல் மறைப்பது துஷ்யந்திற்கு பெரும் சவாலாக இருந்தது.
“சாரி துஷ்யந்த்… உங்கள ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன். என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்.” என சகுந்தலா வருத்தமாய் உரைக்க, சகுந்தலாவை அணைத்து, ‘உன்னோட எல்லா கஷ்டத்திலும் நஷ்டத்திலும் நான் உனக்கு துணையா இருக்கேன்.’ என சொல்லத் துடித்த மனதை அடக்கியவாறு, “ஒரு ஃப்ரெண்டா இதைக் கூட செய்ய மாட்டேனா நான்?” எனக் கேட்டான் துஷ்யந்த்.
“அப்படி இல்ல… ஆல்ரெடி நீங்க நிறைய பண்ணிட்டீங்க. பண்ணிட்டு இருக்கீங்க. இதுக்கெல்லாம் நான் எப்படி கைம்மாறு பண்ண போறேன்னே தெரியல.” என்ற சகுந்தலாவின் கண்கள் கலங்கின.
“சகுந்தலா…” என துஷ்யந்த் அழுத்தமாக அழைக்கவும் சட்டென கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சகுந்தலா, “ஓக்கே… ஓக்கே… நான் அழல. நான் அழல…” என்றாள் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.
“ஓக்கே இந்த அழுகாச்சி சீன்ஸ் எல்லாம் போதும். இன்னைக்கு உன் பையன் பிறந்தநாள். பரத்தோட நாள் இன்னைக்கு. அதை இப்படி அழுதுட்டே கழிக்க ப்ளேனா?” என துஷ்யந்த் கேட்கவும் அப்போது தான் அது நினைவு வந்தவளாக,
“ஆமால்ல… நடந்த கலவரத்துல அதை மறந்துட்டேன் பாருங்க. ஆனா பரத்துக்காக நான் ஒன்னுமே ரெடி பண்ணலயே.” என வருந்தினாள் சகுந்தலா.
ஆனால் துஷ்யந்தோ அதற்குப் பதில் அளிக்காமல் சகுந்தலாவைப் பார்த்துக் கண் சிமிட்டிப் புன்னகைக்க, சகுந்தலாவோ அவனைக் குழப்பமாக நோக்கினாள்.
அதே நேரம், “மம்மி… மம்மி… யாரோ வந்திருக்காங்க.” எனக் கத்திக் கொண்டு வந்து சகுந்தலாவின் கால்களைக் கட்டிக் கொண்டான் பரத்.
“இங்க யாரு வந்து இருப்பாங்க? எனக்கு இங்க யாரையும் பழக்கம் இல்லையே.” எனக் குழப்பமாகக் கூறிய சகுந்தலா மறு நொடியே பயத்தில் முகம் வெளுக்க, “ஒ… ஒருவேளை… ரி..ரிஷி திரும்ப வந்துட்டானோ?” என்றாள் பதட்டமாக பரத்தை அணைத்தவாறு.
ரிஷிகேஷின் நினைவே சகுந்தலாவிற்கு இவ்வளவு நேரமும் இருந்த சந்தோஷ மனநிலையை முற்றாக மாற்றி அச்சம் அடையச் செய்ய, அதனைக் கண்ட துஷ்யந்திற்கு அவ்வளவு வருத்தமாக இருந்தது.
“ஹேய் சகுந்தலா… என்ன பண்ணுற? காம் டவுன். பாரு பரத்தும் உன்னால பயப்படுறான்.” என துஷ்யந்த் கூறவும் தான் பரத்தின் முக மாற்றத்தை அவதானித்தாள் சகுந்தலா.
“மம்மி… மம்மி…” என பரத் முணுமுணுக்க, சகுந்தலாவிடமிருந்து அவனைப் பிரித்து தன் அருகில் நிறுத்திக் கொண்ட துஷ்யந்த், “ஒன்னும் இல்லடா கண்ணா. இன்னைக்கு சேம்ப்போட பரத்டே ல. அதான் அங்கிள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். அதுக்கு தான் அவங்க வந்திருக்காங்க. போய் பாருங்க.” என்றான் புன்னகையுடன்.
“மம்மியும் வாங்க.” என பரத் சகுந்தலாவின் கரத்தைப் பிடித்து இழுக்க, சகுந்தலாவோ துஷ்யந்தின் முகத்தைக் கேள்வியாக நோக்கினாள்.
அவளுக்கு கண்களாலேயே துஷ்யந்த் ஆறுதல் அளிக்கவும் சகுந்தலா பரத்துடன் வெளியே செல்ல, அங்கு நின்றிருந்தது என்னவோ துஷ்யந்தின் தந்தை சந்திரசேகரனும் தாய் பரிமளமும் தான்.
சகுந்தலாவிற்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை.
அதனால் அவள் குழப்பத்துடன் நிற்க, “அம்மா… அப்பா…” என அவளின் அருகில் வந்து நின்ற துஷ்யந்த் அழைக்கவும் சகுந்தலாவிற்கு ஏகத்திற்கும் அதிர்ச்சி.
அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தவளுக்கோ அவர்களை வரவேற்க வேண்டும் என்பது கூட மறந்து விட்டது.
துஷ்யந்தின் பெற்றோர் கூட தம்மை மறந்து தம் மகனினதும் மகனின் அருகில் நின்றிருந்தவளினதும் ஜோடிப்பொருத்தத்தை அதிசயமாக நோக்கினர்.
மறு நொடியே தம் எண்ணம் சென்ற திக்கை நினைத்து அவர்களுக்கே அதிர்ச்சி.
“சாக்லேட் அங்கிள்… எங்க என்னோட சர்ப்ரைஸ்?” என்ற பரத்தின் குரலில் தான் மற்ற மூவருமே தன்னிலை அடைந்தது.
அதே நேரம் பரத்தின் வயதை ஒத்த இன்னும் சில சிறுவர்களும் அங்கு வந்து சேர பரத்தைக் கையில் பிடிக்க முடியவில்லை.
அனைவரும் வரவும், “ஹேப்பி பர்த்டே டூ யூ…” எனக் கோரசாகப் பாடினர்.
பரத்திற்கு தான் குஷியோ குஷி…
எப்போதுமே பரத்தின் மனதில் தன் வயதை ஒத்த சிறுவர்களுடன் விளையாட வெகு ஆசை.
ஆனால் சகுந்தலா தான் பரத்தின் இதயப் பிரச்சினையை மனதில் வைத்து அவனை எங்கும் வெளியே அனுப்ப மாட்டாள்.
இன்று பரத்தின் சந்தோஷத்தைப் பார்க்கும் போது தான் சகுந்தலாவுக்கு தன் தவறு புரிந்து குற்றவுணர்வாக இருந்தது.
அதே நேரம் பரத்தின் பிறந்தநாளைக் கொண்டாட துஷ்யந்தின் பெற்றோர் வருவார்கள் என சகுந்தலா கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை.
அதன் பின்னர் தான் அவர்களைத் தான் வரவேற்கவில்லை என்பதே சகுந்தலாவிற்கு நினைவுக்கு வந்தது.
“அச்சோ… சாரி அங்கிள்… சாரி ஆன்ட்டி… வாங்க… வந்து உட்காருங்க. நீ…நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியாது.” என்றாள் சகுந்தலா சங்கடமாக.
துஷ்யந்தின் பெற்றோரும் சிறிய தலையசைப்புடன் வந்து அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டனர்.
பரத்தும் சகுந்தலாவும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பரிமளத்துக்கு அழைத்த துஷ்யந்த் நிலைமையை மேலோட்டமாகக் கூறி அழைக்க, அத் தாயுள்ளமும் சகுந்தலாவின் நிலையைப் புரிந்து கொண்ட அதேவேளை பரத்திற்காகவும் பரிதாபப்பட்டது.
தன் மகன் என்று வந்து விட்டால் தான் ஒரு சராசரி தாயாக அவரிடம் சுயநலம் குடிகொள்ளும்.
மற்றபடி பரிமளத்திற்குப் பரந்த மனது தான்.
கணவன், தனையன் இருவருமே பெயர் பெற்ற மருத்துவர்களாக இருக்க, பரிமளத்திற்கு பரந்த மனது இல்லாவிட்டால் தான் ஆச்சரியம்.
முதல் நாள் துஷ்யந்தை சகுந்தலாவுடனும் பரத்துடனும் சேர்த்து வைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து பதட்டம் அடைந்தவருக்கு துஷ்யந்த் சமாதானப்படுத்தி அவரிடம் வாக்கு கொடுக்கவும் அது பற்றியே மறந்து விட்டிருந்தார்.
ஆனால் இன்று இருவரையும் ஒருசேரப் பார்த்ததும் தன்னை மறந்து நின்றிருந்தவர் தன் எண்ணம் சென்ற திக்கை எண்ணி மனதில் தன்னையே கடிந்து கொண்டார்.
அவ்வளவு நம்பிக்கை அவருக்கு துஷ்யந்த் மீது.
ஆனால் சந்திரசேகரனுக்கு அவ்வாறில்லை.
தந்தையாக துஷ்யந்தின் பேச்சில் சமாதானம் அடைந்தவரால் ஒரு ஆணாக யோசிக்கும் போது மனதில் ஒரு மூலையில் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.
ஒரு ஆணின் மனது இன்னொரு ஆணுக்குப் புரியும் தானே.
இருந்தும் மனைவியின் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து இங்கே வந்திருந்தார்.
அதற்கு மேலாக தன் மகனின் மனதில் தன் இடம் கீழ் இறங்குவதை அவர் விரும்பவில்லை.
துஷ்யந்திற்கும் அவர்களின் நிலை புரியாமல் இல்லை.
அப்படி இருந்தும் தனக்காக அவர்கள் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததில் அவனுக்கு தான் மனதில் எடுத்த முடிவு மேலும் மேலும் உறுதி அடைந்தது.
பரிமளத்திடம் பேசி விட்டு சகுந்தலாவின் வீட்டிற்கு அருகில் இருந்த வீடுகளில் இருந்த சிறுவர்களுக்கு தானே நேரில் சென்று அழைப்பு விடுத்து விட்டு வந்திருந்தான் துஷ்யந்த்.
பின் அனைவரும் சேர்ந்து துஷ்யந்த் வரவழைத்திருந்த கேக்கை வெட்டி பரத்தின் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கேக்கை வெட்டிய பரத் முதல் துண்டை சகுந்தலாவிற்கு ஊட்டி விட, பதிலுக்கு தானும் ஊட்டி விட்டு மகனை ஆரத்தழுவி முத்தமிட்டாள் சகுந்தலா.
பின் பரத் துஷ்யத்திற்கு ஊட்டி விடவும் பதிலுக்கு துடுப்பாடிய கேக்கை ஊட்டிய துஷ்யந்த் ஒரு பெரிய பேட்டரி காரை பரிசாகக் கொடுக்க, சிறுவர்கள் ஆர்ப்பரித்தனர்.
பரத்திற்கோ தன் புது நண்பர்கள் முன்னிலையில் தனக்குக் கிடைத்த பரிசை எண்ணி பெருமை தாங்கவில்லை.
மறு நொடியே துஷ்யந்தின் கழுத்தைக் கட்டிக்கொண்டு பரத், “தேங்க் யூ சாக்லேட் அங்கிள்… லவ் யூ சோ மச்… இவ்வளோ லவ் யூ” என்றவாறு கைகளை அகல விரித்துக் காட்டி விட்டு துஷ்யந்தின் முகம் முழுவதும் முத்தமிட்டான்.
அதனைக் கண்டு சகுந்தலாவின் விழிகளில் ஈரம் படர, துஷ்யந்தின் பெற்றோரோ மீண்டும் மீண்டும் தம்மை மறந்து அவர்களை குடும்பமாகப் பார்த்து ரசித்தனர்.


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S