
என்ன தான் சகுந்தலா மற்ற பெண்கள் போல் பல கனவுகளுடன் இத் திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைக்காவிடிலும் குறைந்த பட்சம் தன்னையும் தன் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கக் கூடியவனாக ரிஷிகேஷ் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்தாள்.
ஆனால் இங்கு நடந்ததோ எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்கக் கூடாத பெரும் அநீதி.
எதிர்காலமே சூனியமாகத் தோன்றியது.
மெதுவாகக் திரும்பி தனக்கு அருகில் மனித ரூபத்தில் உறங்கிக் கொண்டிருந்த கொடும் மிருகத்தை வெறித்துப் பார்த்தவளுக்கு இவனுடனா தன் எதிர்காலம் என்ற எண்ணமே வேப்பங்காயாய் கசந்தது.
கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தவள் அவசரமாகப் போர்வையை எடுத்து தன் உடலை மூடிக் கொண்டாள்.
இதற்கு மேல் மூடினால் என்ன? மூடாவிட்டால் தான் என்ன?
சகுந்தலாவின் மனசாட்சியே அவளை எள்ளி நகையாடுவது போல் தோன்றியது அவளுக்கு.
போர்வையை முழுதாகக் கூடப் போர்த்த முடியவில்லை.
போர்வை படும் இடம் எல்லாம் எரிந்தது.
வெறி பிடித்த மிருகத்தை விட மோசமாக அவளை வேட்டையாடி இருந்தான் அந்தக் காமுகன்.
சத்தமிட்டு அழக் கூட முடியாத நிலை.
எங்கே சகுந்தலாவின் சத்தத்தில் ரிஷிகேஷ் எழுந்து விட்டால் முன்னிரவு விட்டதை மீண்டும் தொடருவானோ என அஞ்சினாள்.
குளியலறையை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவளுக்கு வலியில் உயிர் போனது.
எப்படியோ வலியைப் பொறுத்துக்கொண்டு குளித்து விட்டு துவாலையைக் கட்டிக்கொண்டவளுக்கு அப்போது தான் மாற்று உடையை வெளியேயே வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது.
பெருமூச்சுடன் துவாலையைக் கட்டிக் கொண்டே வெளியே வந்தவள் மாற்றுடையைத் தேடி எடுக்க, சூடான மூச்சுக் காற்று அவளது பின்னங்கழுத்தை உரசியது.
பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட, சட்டென நிமிர்ந்தாள் சகுந்தலா.
மறு நொடியே அவளின் உடலைச் சுற்றி இருந்த துவாலையை அவிழ்த்து வீசிய ரிஷிகேஷ் சகுந்தலா மறுக்க மறுக்க மீண்டும் அவளை வேட்டையாடத் தொடங்கினான்.
அடுத்து வந்த மூன்று நாட்களுமே சகுந்தலாவிற்கு நரகத்தை விடக் கொடூரமாகத் தான் கழிந்தன.
ஹோட்டலில் இருந்து நேராக மறு வீடு சம்பிரதாயம் என சகுந்தலாவின் வீட்டுக்குத்தான் இருவரும் வந்திருந்திருந்தனர்.
அதற்கு முன்னதாகவே சகுந்தலாவை பல விதத்திலும் எச்சரித்துத் தான் ரிஷிகேஷ் அழைத்து வந்திருந்தான்.
“இங்கே பார்… இந்த சொசைட்டில எனக்குன்னு ஒரு பெயர் இருக்கு. நீ பெரிய இவ போல எனக்கு எதிரா ஒரு துரும்ப அசைக்க நினைச்சா கூட விளைவு ரொம்ப மோசமா இருக்கும். இது உனக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லல்ல. உன் அப்பாவோட பிஸ்னஸ்ல இருந்து எல்லாமே இப்போ என் கைல. என்ன பார்க்குற? அவரோட மொத்தக் கடனையும் அடைச்சிருக்கேன். ஆனா இந்த ரிஷிகேஷ் தான் அவ்வளவு நல்லவன் இல்லையே டார்லிங். சும்மாவெல்லாம் அப்படி பணத்த வாரி இறைப்பேனா? எல்லாத்தையும் என் பெயருக்கு எழுதி வாங்கிட்டு தான் கடனை அடைச்சிருக்கேன். அதனால சொடக்கு போடுற நேரத்துல என்னால உன் மொத்த குடும்பத்தையும் நடுத்தெருவுல நிறுத்த முடியும். சோ பேபி… நீ கேர்ஃபுல்…” என்றான் வன்மமாக ரிஷிகேஷ் சகுந்தலாவின் தாடையை அழுத்தமாகப் பற்றியவாறு.
சகுந்தலாவுக்கு உலகமே தலைகீழாக மாறியது போல் உணர்வு.
‘திருமணம் முடித்த எல்லாப் பெண்களின் நிலையும் இது தானா? இல்லாவிட்டால் தனக்கு மட்டும் தான் இவ்வாறு நடக்கிறதா?’ என்ற மனநிலையில் இருந்தாள் சகுந்தலா.
எவ்வளவு தான் பெரிய படிப்புகளைப் படித்து இருந்தாலும் குடும்பம் என வரும் போது தன் சுயநலத்தை விட குடும்பத்தின் நலனே முன்னுக்கு வருகிறது பெரும்பாலான பெண்களுக்கு.
சகுந்தலாவும் அதற்கு விதிவிலக்கு இல்லையே.
சகுந்தலாவின் வீட்டுக்கு வந்ததில் இருந்தே முற்றாக வேறு ஒரு ஆளாக மாறிப் போய் இருந்தான் ரிஷிகேஷ்.
நல்லவனிலும் நல்லவன்… அவ்வளவு நல்லவன்…
சகுந்தலாவிற்கே தான் இத்தனை நாட்களும் கனவு கண்டு கொண்டிருந்தோமோ என்றே தோன்றியது.
ஆனால் அவளின் உடலில் இருந்த காயங்களோ அனைத்தும் நிஜம் என சாட்சி கூறியது.
என்ன தான் ரிஷிகேஷ் பலவாறு மிரட்டி அவளை அழைத்து வந்திருந்தாலும் தன் பெற்றோர் தான் கூறாமலே தன் முகத்தைப் பார்த்தே தனக்கு நடந்த அநியாயத்தைக் கண்டு கொள்வார்கள் என எண்ணினாள் சகுந்தலா.
ஆனால் அவர்கள் நடந்து கொண்ட முறையில் சகுந்தலாவிற்கு வாழ்வே வெறுத்துப் போனது.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அதனைத் தன் விடயத்தில் கண்கூடாகக் கண்டுகொண்டாள் சகுந்தலா.
அவளின் பெற்றோருக்கு தம்மைக் கடனில் இருந்து மீட்டெடுத்த மருமகன் கடவுளை விட மேலானவன் என்ற எண்ணம்.
ஆனால் அதற்கு அவர்கள் கொடுத்த, இல்லை இல்லை… அவர்களின் மகள் கொடுத்த விலை அதிகம் என அவர்கள் அறியவில்லை.
திருமணம் முடித்து சென்ற மகள் எப்படி இருக்கிறாள்? அவளது திருமண வாழ்க்கை எவ்வாறு செல்கிறது? என்ன? ஏது? என்ன கேள்விகள் எதையும் சகுந்தலாவிடம் கேட்கத் தோன்றவில்லை அவர்களுக்கு.
ஊர் உலகத்தில் இல்லாத மாப்பிள்ளை போல் ரிஷிகேஷை விழுந்து விழுந்து கவனித்தார்கள்.
ரிஷிகேஷும் சகுந்தலாவின் தந்தை மாதவனும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சமையலறையில் இருந்த தாய் சரசுவிடம் சென்றாள் சகுந்தலா.
“அம்மா… எனக்கு அங்க எதுவுமே பிடிக்கலமா.” என்றாள் சகுந்தலா முயன்று வரவழைத்த குரலில்.
சகுந்தலாவின் வார்த்தைகளில் அதிர்ந்த அவளது தாய் பட்டென அவளின் முதுகில் ஒரு அடியைப் போட்டாள்.
ஏற்கனவே உடல் முழுவதும் நகக் கீறல்களும் பற்தடங்களும் என காயத்துடன் இருந்த சகுந்தலாவுக்கோ வலியில் சட்டெனக் கண்கள் கலங்கி விட்டன.
“ஆஹ் அம்மா…” எனத் தன்னை மறந்து கத்தி விட, “ஷ்ஷ்ஷ்… சத்தம் போடாதே. மாப்பிள்ளை காதுல விழுந்தா என்ன நினைப்பாரு? கல்யாணம் முடிஞ்சு நாழு நாள் தான் ஆகி இருக்கு. பாவிப்புள்ள… என்ன வார்த்தை சொல்லிட்ட?” என அதட்டினார் சரசு.
“இல்லம்மா… என்னன்னு சொல்றது உங்க கிட்ட? அந்த விஷயத்துல எல்லாம் ரொம்ப ஹர்ட் பண்ணுறார் மா.” என்றாள் சகுந்தலா இயலாமையுடன்.
என்னைப் புரிந்துகொள்ளேன் என்ற பாவனை அவளிடம்.
சரசு அவசரமாக சமையலறை வாயிலைப் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சகுந்தலாவின் வாயிலேயே மீண்டும் ஒரு அடியைப் போட்டார்.
“பாவி மகளே… கல்யாணம் பண்ணியும் கூட உனக்கு இன்னும் அறிவு வளரலயா? கல்யாணம்னு ஒன்னு பண்ணினா எல்லாப் பொண்ணுங்களும் கடக்க வேண்டியது தான் அது. அதைப் போய் வெளிய சொல்லுவியா? உன் புருஷனுக்கு தெரிஞ்சா எங்க வளர்ப்ப தான் தப்பா நினைப்பார். என் கிட்ட சொன்னது போல மாப்பிள்ளை கிட்டயும் போய் இப்படி கண்டதையும் உளறித் தொலையாதே. இதெல்லாம் புருஷன் பொண்டாட்டிக்கு இடையில நடக்குற அந்தரங்கம். இனிமேலாவது பார்த்து நடந்துக்க. உனக்கு கிடைச்சிருக்குறது ஒரு நல்ல வாழ்க்கை. இப்படி ஒரு புருஷன் கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும். புகுந்த வீட்டுல எல்லோரையும் அனுசரிச்சு நடந்துக்க. பெத்தவங்களா எங்களுக்கு உன்னால கொடுக்க முடிஞ்ச சந்தோஷம் அது தான்.” என்றார் அதட்டலாக.
அதே நேரம் மாதவனும் ரிஷிகேஷும் வீட்டினுள் நுழைய, அவசரமாக அவர்களைக் கவனிக்கக் கிளம்பினார் சரசு.
சகுந்தலாவிற்கு எதிர்காலமே சூனியமாகத் தோன்றியது.
சரசுவைத் தொடர்ந்து சமையலறையை விட்டு வெளியே வந்த சகுந்தலாவை ஏறிட்டுப் பார்த்த ரிஷிகேஷின் பார்வையில் சகுந்தலாவின் நெஞ்சில் கிலி பரவியது.
ஆனால் மறு நொடியே யாரும் கவனித்து விடாதவாறு சட்டென முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டான் ரிஷிகேஷ்.
சகுந்தலாவின் மனமே வீட்டுக்குச் சென்ற பின் என்னவெல்லாம் நடக்குமோ என இப்பதே அதனை நினைத்து அஞ்சத் தொடங்கியது.
அவள் எண்ணியவாறே அன்று இரவு அவளுக்கு மிக மோசமாகக் கடந்தது.
அடுத்த மூன்று நாட்களில் இருவரும் லண்டன் கிளம்பினர்.
சகுந்தலாவின் பெற்றோர் அவர்களை வழி அனுப்பி வைக்க ஏர்போர்ட் வரை வந்திருக்க, சகுந்தலாவைத் தனியே அழைத்துச் சென்ற சரசு அவளுக்கு ஏகப்பட்ட அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது கூட சகுந்தலாவின் முகத்தில் கிஞ்சித்தும் சிரிப்பு இல்லை என்பதை இருவருமே கவனிக்க மறந்தனர்.
அப்படியே கவனித்து இருந்தால் கூட அது பற்றி கவலைப்படுவார்களா என்பது சந்தேகம் தான்.
லண்டனுக்கு சென்ற பின்னர் தான் சகுந்தலாவிற்கு ரிஷிகேஷின் நூறு சதவீதம் நிஜமான சுயரூபம் வெளியே தெரிந்தது.
இவ்வளவு நாளும் அவன் நடந்து கொண்டது எல்லாமே சாதாரணம் தான்.
லண்டன் சென்ற பின் நடந்த அனைத்துமோ அநியாயத்தின் உச்சம்.
________________________________________________
அன்றைய நினைவுகளை மீட்ட சகுந்தலாவுக்கு இப்போதும் கூட அந் நினைவில் பயத்தில் உடல் சில்லிட்டது.
“அ….அவன்… அப்…புறம்…” எனத் திக்கித் திணறிக் கூறியவளுக்கு அதற்கு மேல் முடியாது மூச்சு வாங்கினாள்.
“ஓக்கே ஓக்கே காம்டவுன்… உனக்கு கஷ்டமா இருந்தா வேணாம்டாம்மா…” என்ற துஷ்யந்த் சகுந்தலாவின் உள்ளங்கையை சூடு பறக்கத் தேய்த்து விட்டான்.
“ஒன்னும் இல்லடா… ஒன்னும் இல்ல… நீ எதைப் பத்தியும் யோசிக்காம கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு. எல்லாம் சரியாப் போய்டும். ஆல் இஸ் வெல்.” என்றான் துஷ்யந்த் சகுந்தலாவின் தலையை வருடியவாறு.
“ப…பரத்… பரத்… என் பையன்…” எனப் பதறியவாறு எழுந்த சகுந்தலா பரத் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு வேகமாகச் சென்று அவன் அருகே படுத்து பரத்தை இறுக அணைத்துக் கொண்டு, “என் பையன என் கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது. என் பையன்… யாருக்கும் கொடுக்க மாட்டேன்.” என ஏதேதோ முணுமுணுத்தாள்.
சகுந்தலாவைப் பின் தொடர்ந்து வந்த துஷ்யந்திற்கு சகுந்தலாவின் நடவடிக்கைகளில் உள்ளம் வெகுவாக வேதனை அடைந்தது.
தாயையும் தனையனையும் சில நொடிகள் வெறித்துப் பார்த்தவனிடம் நீண்ட பெருமூச்சு.
அதன் காரணம் அவன் மட்டுமே அறிவான்.
அதே நேரம் ரிஷிகேஷை எண்ணும் போது கோபத்தில் துஷ்யந்தின் கழுத்து நரம்புகள் புடைத்தன.
ஆனால் தான் அவசரப்பட்டு ஏதாவது செய்தால் அது சகுந்தலாவையும் பரத்தையும் தான் பாதிக்கும் என்பதால் அமைதி காத்தான்.
பரத்தை அணைத்தவாறு படுத்திருந்த சகுந்தலா தன்னை மறந்து உறங்கி இருக்க, அந்த இடைவெளியில் அவசரமாக அலங்கோலமாகக் கிடந்த வீட்டை ஒழுங்குபடுத்தினான் துஷ்யந்த்.
பின் தனக்குத் தெரிந்த அளவில் லேசாக சமைத்தும் வைக்க, திடீரென அவன் கால்கள் இரண்டையும் யாரோ கட்டிக்கொள்ளவும் துஷ்யந்தின் முகத்தில் புன்னகை.
இவ்வளவு நேரமும் இருந்த அழுத்தம் மறைந்து போக, மெதுவாகக் குனிந்து தன் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த பரத்தை அள்ளித் தூக்கி முகம் முழுவதும் முத்தமிட்டான்.
“எழுந்துட்டீங்களா சேம்ப்? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாமே.” என்றான் துஷ்யந்த் புன்னகையுடன்.
அவன் தோள்களில் முகம் புதைத்து மறுப்பாகத் தலையசைத்த பரத், “பசிக்குது… அம்மா வேணும்… அம்மா…” என்றான் சிணுங்கலாக.
“சேம்ப் குட் போய் தானே. அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல. அதனால அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம். அதுவும் இல்லாம என் சேம்ப் இப்போ பிக் போய் ஆகிட்டார்ல. அதனால அவரே இப்போ சமத்தா சாப்பிடப் போறாராம். ஓக்கேயா?” என துஷ்யந்த் புன்னகையுடன் கேட்கவும், “பரத் பிக் போய்… பிக் போய். இவ்வளவு பிக் போய்.” எனக் கைகளை விரித்துக் காட்டவும் துஷ்யந்தின் முகத்தில் புன்னகை.


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S