
இதயம்-9
நளபாகம் அலுவலக அறையில் புருவங்கள் நெரிபட, யோசனையோடு அமர்ந்திருந்தான் ஆதன் ரித்விக். நெரித்தப் புருவமும், நிலைத்தப் பார்வையும் ஏதோ தீவிர யோசனையில் இருக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொன்னது.
“சார் டீ..!” வழக்கம் போல் வைத்துவிட்டுப் போனான் பிரபு.
சற்று முன் கிடைத்த தகவல், அவனின் உச்சந்தலையில் சிந்தாமல், சிதறாமல் இடியை இறக்கியிருந்தது. யோசனை, தீவிர யோசனையிலிருந்தான் ஆதன். ஆனால் சிறிதும் கலங்கி விடவில்லை. சிங்கம் அமைதியாக இருப்பதால் அது தோற்றதாய் ஒன்றும் அர்த்தமில்லையே..! அதே சிங்கத்தின் நிலையில் தான் ஆதனும் இருந்தான்.
செங்கல் செங்கலாய் வைத்துச் செதுக்கி அவன் ஒற்றை ஆளாய் சுயம்புவாய் நின்று உருவிக்கிய சாம்ராஜ்ஜியத்தை அத்தனை எளிதில் சரிய விட்டுவிடுவானா என்ன? எத்தனை கேலிப் பேச்சுகள், எத்தனைக் கிண்டல்கள்? இவ்வளவு ஏன் பெற்றவரின் வாயாலேயே எத்தனை கேவலமானப் பேச்சுகள். எல்லாம் எதற்காக தன் காலில் சுயமாக நிற்க வேண்டும் என்கிற வைராக்கியத்திற்காக.
தான் பெற்ற அத்தனை அவமானங்களையும், வலிக்க வலிக்க உள்ளுக்குள் சேர்த்து வைத்து வெற்றியை எட்டியிருக்கிறான்.
உதாசீனப்படுத்திய உதடுகளிலிருந்து பாராட்டுக்களைப் பெறுவது தானே சாலச் சிறந்த வெற்றி.
அவனை அவமானப் படுத்தியவர்களில் பாதிப் பேர், தற்போது அவனின் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள். இது தானே வெற்றி, என்றும் நிலைத்திருக்கும் வெற்றி. ஒருவேளை தந்தையின் சிபாரிசின் மூலமாகவோ, அவர் சேர்த்து வைத்த பணத்தின் மூலமாக அவன் இத்தனையும் செய்திருந்தால், அந்த வெற்றி ருசித்திருக்காது அவனுக்கு.
அப்படிப் பெற்றிருந்தால் அதன் பெயர் வெற்றி அல்ல சலுகை..
துளி துளியாய் மலர்களிலிருந்து தேன் சேமிக்கும் தேனீயைப் போல், துளி துளியாய் சேமித்து இவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறான்.
அவ்வளவு எளிதில், சீட்டுக்கட்டு மாளிகையாய் அவன் நிறுவனத்தை யாரும் சரித்துவிட முடியாது. அப்படியொன்று நடக்க அவன் விடப் போவதும் இல்லை.
“உங்க அப்பா தமிழ்நாட்டோட சட்ட அமைச்சர், நீ சாப்பாட்டுக் கடை வைக்கப் போறீயா தம்பி? இதெல்லாம் சரியா வருமா? வெள்ளை வேட்டி சட்டையைப் போட்டோமா? சட்ட சபைக்குப் போனோமா, எதிர் கட்சியோட சண்டையைப் போட்டோமா? சம்பளத்தை வாங்கினோமான்னு இருக்கணும். அதைவிட்டுட்டு இந்த சாப்பாட்டை வீடு வீடாய் கொடுக்கிறதெல்லாம் சரிப்படாது.!” என்று தன்னை உதாசீனப் படுத்திய உதடுகளே,
“பரவாயில்லை! உங்கப் பையன் நல்ல விவரம்! உணவுத் தொழில் தான் இப்போதைக்கு கொடிக்கட்டி பறக்குது. மூணு வேளையும் எல்லாரும் சாப்பிடணுமே..!” எனப் பாராட்டும்படி செய்தவனுக்கு இப்போது வந்திருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லையே..!
நிதானமாய் எதிரில் இருந்த கருப்பு தேநீரை பொறுமையாய் துளி துளியாய் ரசித்துப் பருகினான்.
முகத்தில் தெளிவும் உறுதியும் பிரகாசித்தது. மீண்டும் அலைபேசியை எடுத்து அந்தச் செய்தியை மீண்டுமொருமுறை ஆராய்ந்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை.
“நளபாகம் உணவு டெலிவரி நிறுவனத்தின் ஊழியர், உணவை டெலிவரி செய்வது போல, போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக டெலிவரி செய்ததன் பேரில் உடனயாகக் கைது செய்யப்பட்டார்.!” என்ற செய்தி முதலில் அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இந்த உலகத்தைப் பற்றித்தான் அவனுக்குத் தெரியுமே, எவன் எப்போது விழுவான் எப்போது ஏறி மிதிக்கலாம் எனக் காத்துக் கொண்டிக்கும் என்பதும் தெரியும். ஒன்றுமில்லாத விஷயங்களை, ஆஹா ஓஹோவெனப் பிரபலப் படுத்துவதும், நல்ல விஷயங்களை, இதெல்லாம் ஒரு விஷயமா? என அலட்சியப் படுத்துவதும் தானே இந்த உலக வழக்கம்.
இப்போது ஊர் முழுதும் வைரலாகி, நளபாகம் நிறுவனத்தின் நற்பெயரே கேள்விக் குறியாகி நிற்க, அடுத்து என்ன செய்வது என்கிற தீவிர யோசனையின் விளைவாய் தீர்க்கமான முடிவை எடுத்திருந்தான் ஆதன் ரித்விக்.
இதற்கிடையில், அவன் நிறுவனத்தோடு வணிகத் தொடர்பில் இருக்கும் உணவகங்கள், முதலீட்டாளர்கள் அத்தனை பேரிடமிருந்தும் விடாது அழைப்புகள் வந்து அவன் பொறுமையைச் சோதிக்கத்தான் செய்தது.
அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் அவன் எந்த விளக்கமும் கொடுக்கவே இல்லை. அவன் சொன்ன ஒரே விஷயம்,
“என்மேல் நம்பிக்கை இருந்தால் அமைதியாய் இருங்கள்! இல்லையென்றால் இப்போதே டீல் கேன்சல் பண்ணிக்கலாம்!” அவ்வளவு தான் சொன்னான்.
அந்தப் பக்கம் மூச்சுவிடாமல் கேள்வி கேட்ட குரல்கள் அத்தனையும் சத்தமில்லாமல் அடங்கித்தான் போனது. அடங்க வைத்திருந்தான் ஆதன்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்!” அனுமதி வேண்டி உள்ளே வந்துவிட்டு அமைதியாய் கையைப் பிசைந்தபடி நின்றிருந்தான் பிரபு.
“என்ன பிரபு, ரிஜெக்ட் நளபாகம்ன்னு ஹேஷ்டேக் படு வேகமாய் பரவிக்கிட்டு இருக்கா?” மீசையினோரம் துளிர்த்த குறுஞ்சிரிப்புடன் கேட்டான் ஆதன்.
“சார்! நம்ம ஷேர்ஸ் எல்லாம் டௌன் ஆக ஆரம்பிச்சுடுச்சு. நிறைய நெகட்டிவ் நியூஸ் ஸ்ப்ரெட் ஆகிட்டு இருக்கு. ஃபுட் டெலிவரிங்கிற பேரில், மென்பொருள் நிறுவனத்திற்கெல்லாம் ட்ரக்ஸ் சப்ளை பண்ணிதான் இவ்வளவு பெருசா வளர்ந்திருக்கோம்ன்னு தப்புத்தப்பா என்னனென்னவோ, இதைவிட மோசமாவெல்லாம் பேசறாங்க. நம்ம சைட் எந்த ஆக்ஷனும் எடுக்கலைன்னா வளர்ந்த வேகத்தை விட, அதி வேகத்தில் கீழே விழுந்துடுவோம்.!”
“பிரபு! இந்த உலகம் நாம நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. ஒரு தொழில்ன்னு இருந்தால் போட்டின்னு பத்து பேர் நமக்கு எதிரில் நிக்றான்னா, பொறாமைங்கிற பேரில் நம்ம முதுகுக்குப் பின்னால் நூறு பேர் நிற்பான். அந்தப் பொறாமை தான் இத்தனை நெகட்டிவ் பப்ளிஸிட்டியைப் பண்ண வைக்குது. பாஸிட்வை விட நெகட்டிவ் தானே சீக்கிரம் ரீச் ஆகுது. கெட்டப் பேராய் இருந்தாலும், இந்த இந்தியா முழுசும் நம்ம பேரு தான் வைரலாகிட்டு இருக்கு. செலவே இல்லாமல் நாம ஃபேமஸ் ஆகிட்டு இருக்கோம்.! அதை நினைச்சு சந்தோஷப் பட்டுக்கலாமே பிரபு தப்பில்லை.!” எனச் சொன்ன ஆதனின் கோணம் முற்றிலும் புதிதாகவும் புதிராகவும் இருந்தது பிரபுவிற்கு.
இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஒற்றை ஆளாய் கட்டி தூக்கி நிறுத்தியவனுக்கு, பிரச்சனை வந்தால் அதை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமலா போய்விடும்.
“சார்! என்ன தான் இருந்தாலும் நம்ம குட்வில் (Goodwill) கெட்டுப் போய்டுமே?”
“அதெல்லாம் பார்த்துக்கலாம் பிரபு! டோன்ட் வொர்ரி. நேரம் எப்பவுமே நேர்மையானது. யாரையும் ஏமாற்றாது. யாருக்கும் கூடவோ குறைச்சோ கொடுக்காது. எல்லாத்துக்கும் ஒரே நேரம் தான். இப்போ அது எப்படி தன் கடமையை ஆற்றுதுன்னு பாரு!” அவன் சொல்லி முடிக்கவும் க்ளிங் என்ற சத்தத்துடன் அலைபேசி ஒளிர்ந்து அடங்கியது.
“யா! காட் இட்!” என்றவன் தன் அலைபேசியிலிருந்த வீடியோவை பிரபுவிடம் காட்டினான் ஆதன்.
“சார்! எல்லாமே ப்ளான்! டெலிவரி பாய் டெலிவரி பண்ணப் போனதும், யாரோ அவர் பேகில் (Bag) பார்சல் வச்சிட்டுப் போயிருக்காங்க! அப்போ, அவங்களே போலீஸில் தகவல் கொடுத்துட்டு, நமக்கு கெட்டப் பேரையும் வாங்கிக் கொடுத்துட்டாங்க! செம்ம ப்ளான் சார்.!” அதிர்விலிருந்து வெளிவர முடியாமல் சொன்னான் பிரபு.
அதற்கு ஆதனிடமிருந்து பதிலாய் கிடைத்தது துளி புன்னகை மட்டுமே..!
துளி புன்னகை பூகம்பத்தை உணர்த்த முடியுமா? அவன் புன்னகை உணர்த்தியது. அவன் கண்களில் தெரிந்த தீர்க்கமும் தீவிரமும் அவனுக்குள் இருந்த நம்பிக்கையைச் சொல்லாமல் சொன்னது.
உலகமே முடியாதெனச் சொல்லும் போது, ‘உன்னால் முடியும்’ என உள்ளத்தின் அடியாழத்திலிருந்து கேட்கும் குரல் தானே நம்பிக்கை. அந்த நம்பிக்கை அவன் முகத்தில் ஒளிர, சட்டென எழுந்து நின்றவனின் முகத்தில், வேட்டைக்குத் தயாரான சிங்கத்தின் கம்பீரம் தெரிந்தது.
“பிரபு! இப்போ எல்லா நியூஸ் சேனலுக்கும், கால் பண்ணி, தவறான செய்தியைப் பரப்பினதுக்கு மான நஷ்ட ஈடு வழக்குப் போடப் போறோம்ன்னு சொல்லு. இந்த வீடியோவை ஃபேஸ் மட்டுமே ப்ளர் (Blur) பண்ணிட்டு ஸோஷியல் மீடியாவில் விட்டுடு. ப்ராப்ளம் சால்வ்ட்!” சர்வ சாதாரணமாய் பிரச்சனையை ஒன்றுமில்லாது செய்தவனைப் பார்க்க பிரம்மிப்புக் கூடத்தான் செய்தது.
“எப்படி சார் இதெல்லாம்..?!” சிலாகித்துப் போய் சின்னச் சிரிப்புடன் கேட்டான் பிரபு.
“இதெல்லாம் வாழ்க்கை எனக்கு கத்துக் கொடுத்த பாடங்கள். சிங்கம் எப்பவுமே கூட்டமாகதான் இருக்குமாம். ஆனால் அந்தக் கூட்டத்தில், பெண் சிங்கங்களும், குட்டிகளும் தான் இருக்கும். வேட்டையாடத் திறனிருக்கும் ஆண் சிங்கங்கள் கூட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்படும். அந்த ஆண் சிங்கம் தனக்குன்னு ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கணும். இல்லைன்னா இன்னொரு கூட்டத்து தலைவன் சிங்கத்துக்கிட்டே சண்டை போட்டு அதைத் தோற்கடிச்சு கொன்னு அந்தக் கூட்டத்தைப் பிடிக்கணும். வெறும் பதிநாலு வருஷம் வாழற சிங்கத்துக்கே இத்தனை இருக்கு. அப்போ மனித வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், துரோகங்கள், ஏமாற்றங்கள் இருக்கும்.? நான் பட்ட அவமானங்களும், துரோகமும் ஏமாற்றமும் கற்றுத் தந்தப் பாடங்கள் தான் இப்போ என் வாழ்க்கையில் நான் இந்த நிலையில் உயர்ந்து நிற்கக் காரணம்.!”
‘அதில் முதல் துரோகியே மிஸ்டர்.சதாசிவம் தான்’ அவரை நினைத்ததுமே இதயம் முழுதுமே கசந்து வழிவதைப் போல் தோன்றியது அவனுக்கு. அவன் விவரம் தெரிந்தது முதலே, அவரைத் தந்தையாய் நினைத்ததே இல்லை. தன் தாய்க்கு துரோகம் இழைத்து விட்டு, என்று காயத்ரியோடு வந்து நின்றாரோ, அன்று மனதிற்குள் விழுந்த வெறுப்பின் விதை, இன்று வளர்ந்து விருட்சமாகி கிளை பரப்பி நிற்கிறது.
அவனைப் பொருத்தவரை, தந்தையாய் அவன் நம்பிக்கைக்கு அவர் செய்த மாபெரும் துரோகம். அவர் மேல் அவன் நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகம். தன் தாயின் இடத்தில் இன்னொருவரைக் கொண்டு வந்து நிறுத்தி, தன்னைப் பெற்றவளுக்குச் செய்த துரோகத்தை தான் இந்த நொடிவரை அவனால் ஜீரணிக்கவே இயலவில்லை.
அந்த ஆதிசிவனின் தொண்டைக்குள் தங்கியிருக்கும் விஷம் போல், ஆதனின் மனதிற்குள் தந்தை மீதான வெறுப்பு அடி நெஞ்சின் ஆழத்தில் ஆலகால விஷமாய் அமிழ்ந்திருந்தது.
“பிரபு! டூ இட் ஃபாஸ்ட்! நான் சொன்னபடி எல்லாமே சரியாய் நடக்கணும். அப்பறம், நம்ம ஆப் (App) மூலமா அடுத்த ரெண்டு மணி நேரத்திற்கு வர்ர ஆர்டர்ஸ் எல்லாத்துக்குமே டென் பர்ஸன்டேஜ் ஆஃபர் கொடுங்க! இனிமே எப்படி நம்ம ஷேர்ஸ் சரியும்ன்னு பார்க்கிறேன்.!” இதற்கடையோரம் எட்டிப்பார்த்த அவன் புன்னகையில் ஏகப்பட்ட அர்த்தங்கள் ஒளிந்திருந்தன.
அடுத்த அரைமணி நேரத்தில், ஆதனின் வழிகாட்டுதலின் படியே, அத்தனையும் நடந்தது. இத்தனை நேரமாய் நளபாகம் நிறுவனத்தைப் பற்றி அவதூறு பேசிக் கொண்டிருந்த அத்தனை செய்தி தொலைக்காட்சிகளும், மன்னிப்பு வேண்டியதோடு, நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுப்பதற்காய் செய்யப்பட்ட சதி எனப் பிதற்றிக் கொண்டிருந்தது.
இத்தனை நேரமாய் உதாசீனப் படுத்திய உதடுகள் இப்போது உண்மையைப் பேசிக் கொண்டிருந்தன. பேச வைத்திருதான் ஆதன். நளபாகம் செயலியின் மூலமாய், உணவை வாங்குபவர்களுக்கு மொத்த பணத்தில் பத்து சதவீத தள்ளுபடியும் கொடுக்கப்பட, விழுந்த தடம் கூடத் தெரியாமல் முன்பை விடக் கம்பீரமாய் எழுந்து நின்றான் ஆதன் ரித்விக்.
******
“மிஸ்டர்.ஆதன் ரித்விக்! என்ன நினைச்சுட்டு இருக்கே? இல்லை என்ன நினைச்சிட்டு இருக்கேன்னு கேடகிறேன்? ஊரு முழுசும் உன் புகழ் தான் பரவி கிடக்கு. நீ என்னடான்னா கூலா உட்கார்ந்திருக்கே?”
‘மனசில் உன்னை வச்சிருக்கேன்னூ சொல்ல ஆசை தான்.. இப்படி சண்டை போடுறதுக்குன்னே வர்ரவக்கிட்டே என்னத்தை சொல்றது?’ மனதிற்குள். ரகசியமாய் புலம்பிக் கொண்டவன்,
“என்னாச்சு சிமி? ஏன் இப்படி கத்தறே.?” எதுவுமே தெரியாத மழலையைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் ஆதன். யாருமே இதுவரை பார்த்திராத, அவனின் குறும்புத்தனமும், விரிந்தப் புன்னகையும் அவளிடம் மட்டும் தன்னால் வெளிப்பட்டது.
‘எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்குமா தெரியவில்லை ஆனால், எதிர்பார்த்த நபர் கிடைப்பதே பெரிய வரம் தான் என்னைப் பொருத்தவரை. நான் எதிர்பார்ப்பது அவளை மட்டும் தான். என் எதிரில் கோபம் கொஞ்ச நிற்கும் அவளை மட்டும் தான்.’ மனம் தன்னால் பேச, அவளின் ஒவ்வொரு பாவனைகளையும் ரசனையோடு பார்த்து வைத்தவனின் பார்வையில், ஏதோ உணர்ந்தவளாய், விரல் நீட்டி அவனைத் திட்டிக் கொண்டிருந்தவள் சட்டென நிறுத்தினாள்.
“முதலில் என்னை இப்படி பார்க்காதே! உனக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியாது அப்படித்தானே? உன் டெலிவரி ஆள் ட்ரக்ஸ் கடத்தினதா, மீடியா முழுசும் போட்டு கிழி கிழின்னு கிழிக்கறாங்க! நீ என்னடான்னா சாவகாசமா உட்கார்ந்திருக்கிறே?” எரிச்சல் நிரம்பி வழிந்தது அவள் குரலில்.
“எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் கேண்டி! அமைதியாய் இரேன். நீ ஏன் டென்ஷன் எடுத்துக்கிறே?” முகம் வருட முயன்றக் கரத்தினை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.
“உன்னை நம்பி என் ப்ராடக்ட்ஸை நான் கொடுத்தேன். இப்போ உன்னோட சேர்ந்து என் ஷாப் பேரும் டேமேஜ் ஆகிடும். முதலில் நம்ம ரெண்டு பேரும் போட்ட அக்ரீமெண்ட்டை உடனே க்ளோஸ் பண்ணு. நான் வேலையைப் பார்க்கிறேன்! நீ உன் வேலையைப் பாரு!” அவளின் ஒட்டுமொத்தக் கனவுமே கேண்டி க்ரஷ் தான்.
அதன் பெயருக்கு ஏதேனும் நேர்ந்தால் நிச்சயமாய் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
என்னதான் ஷியாம் பண உதவி செய்திருந்தாலும், அதை மூன்று வருடங்களில், அசலும் வட்டியுமாய் திருப்பி தந்து விடுவதாகச் சொல்லி ஒப்பந்தம் செய்த பின்பு தான் ஷியாமிடம் பணம் வாங்கவே ஒப்புக் கொண்டாள். அப்படி இருக்கையில், ஆதனின் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கெட்டப் பெயரால், தனது தயாரிப்புகளின் விற்பனையும், நற்பெயரும் பாதிக்கப்படுமோ? என்ற இயல்பான பயம் அவளுக்குள் இருந்தது.
ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும்படி அவள் சொன்னதைக் கேட்டு, முதலில் திடுக்கிட்ட ஆதன், பின் நிதானமாய்,
“லைஃப் டைம் அக்ரிமெண்ட் சிமி! அவ்வளவு ஈஸியாய் க்ளோஸ் பண்ண முடியாது.!” எனச் சாதாரணமாய்ச் சொன்னான்.
“வாட்?” புரியாமல் முகம் பார்த்தவளிடம்,
“அக்ரீமெண்ட்டை ஒழுங்கா பார்க்கலையா சிமி? அஞ்சு வருஷத்திற்கு அக்ரீமெண்ட் போட்டுத்தான் நாம டீல் ஓகே பண்ணினோம். உனக்கு ஞாபகமில்லையா?” என அவன் சொல்லவும் விழிகளை அகல விரித்து அதிர்வுடன் பார்த்தாள் சிம்மவாஹினி.
“அஞ்சு வருஷம் உன்னோட அக்ரிமெண்ட் போடுறதுக்கு நான் என்ன முட்டாளா?”
“நீ முட்டாளா? இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் போட்ட டீல் அஞ்சு வருஷத்துக்குத்தான். நான் ஷியாம் கிட்டே டீடெய்லா எல்லாமே சொல்லிட்டேனே? உனக்குத் தெரியலைன்னா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. இட்ஸ் நாட் மை ஃபால்ட். இட்ஸ் யுவர் ஃபால்ட். பிஸ்னஸ் விஷயத்தில் எப்போவுமே நான் நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரியாய் இருப்பேன். இப்போவும் எல்லா பிரச்சனையும் சால்வ் பண்ணியாச்சு. என் மேல் நம்பிக்கை இருந்தால், நிஜமாவே நம்பிக்கை இருந்தால் மட்டும் இதைத் தொடரலாம். நம்பிக்கை இல்லைன்னா, இப்போவே இந்த டாக்யூமெண்டில் சைன் பண்ணிட்டு கிளம்பிட்டே இருக்கலாம்.!” அழுத்தமாய் அவளை நோக்கி, அவள் கண்பார்த்துச் சொன்னான்.
என்னதான் அவளிடம் வீராப்பாய் சொல்லிவிட்டாலும், ‘டீல் கேன்சல் பண்ணிடாதே சிமி!’ மனம் கிடந்து துடியாய் துடித்தது. கண்களில் பரிதவிப்பு எட்டிப் பார்த்தது.
ஆனால் எதையும் காட்டிக்கொள்ளாமல், பிராயத்தனப்பட்டு சலனமில்லா முகத்துடன் அமர்ந்திருந்தான் ஆதன்.
ஏனோ, வாஹினியிடம் மட்டும், இவனுடைய கோபம் எடுபட மறுக்கிறது. அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவள் காலடியில் குழந்தையாய் தவழ அடம் பிடிக்கும் மனதை மறைக்க வழி தெரியாது, அவளையே இமை சிமிட்டாது அவன் பார்த்திருக்க,
“நான் இப்போ கிளம்புறேன். ஆனால், உன்னை நம்பினதால் இல்லை. ஷியாமை நம்பினதால் அமைதியாய் போறேன்.!” எனச் சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள். நொடி நேரம் அவள் சென்றதைக் கூட உணராது நின்றவன், சித்தம் மீண்டவனாய் அவளை நோக்கிப் போனான்.
படிகளில் இறங்கி அவள் தரைதளம் தொட்ட நொடி ஆதனும் அங்கே சென்று சேர்ந்திருக்க,
“நீ எதுக்கு என் பின்னாலேயே வர்ர? எனக்கு வழி தெரியும்!”
நுனி நாசி சிவக்க அவள் சொன்ன நொடி, பத்திரிக்கையாளர்கள் கூட்டமாய் அவர்களைச் சூழ்ந்துக் கொள்ள, திடீரெனக் கூட்டமாய் அவர்கள் சூழ்ந்து நின்றதில் மிரண்டு போய், ஆதன் கரத்தினை அழுத்தமாய் பற்றியிருந்தாள் ஆதனின் சிமி..!
இசைக்கும்..
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


செம ஆதனுக்கு கெட்டதிலும் நல்லது ஆதன் கூட சிமியும் படம் எடுத்துடுவாங்க.