
இதயம்-8
தன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வாஹினியின் முகம் முழுவதுமே யோசனையைச் சுமந்திருந்தது.
மனம் அந்த மாலை நேரத்து வானம் போலவே கொஞ்சம் கலங்கலாகத்தான் இருந்தது. எதிர்க்காற்று முகத்தில் மோதி சற்று முன் நடந்தவைகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தித் தொலைத்தது.
அவள் கழுத்தோரம் உரசியக் கூந்தல் கற்றையை அவன் காதோரமாய் ஒதுக்கியதில், அவன் நுனிவிரல் தீண்டிய இடங்களெல்லாம் தீயாய்க் காந்துவதைப் போல் தோன்றியது அவளுக்கு.
இதற்காகத் தானே, இதெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தானே, அவனோடு தொழில் முறையான தொடர்போ நட்போ வேண்டாம் என அடித்துக் கொண்டாள். ஆனால் எதையுமே அவள் தோழன் ஷியாம் கேட்கவே இல்லையே?. அவள் எதையெல்லாம் வேண்டாம் என விலகிப் போக நினைக்கிறாளோ, காலம் வேண்டுமென்றே அவள் கரங்களில் தந்துவிட்டு வேடிக்கைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது.
ஏனோ ஆதன் குழைவதும் உருகுவதும் அவளுக்குச் சுத்தமாய் பிடிக்கவே இல்லை. எல்லாவற்றிற்கும் காரணாமான ஷியாமின் மீது அவளுக்குக் கோபம் வேறு வந்து தொலைத்தது.
ஒற்றைப் பனைமரங்கள் துணையைத் தேடுவதில்லை. தனியே இருப்பது தான் அதற்கு அழகு.
அதே போல் தான் வாஹினியின் வாழ்க்கையும். அவள் தனியே இருப்பது தான் அழகு. ஷியாமைத் தவிர, உறவாகவோ, நட்பாகவோ யாரையும் ஏற்றுக் கொள்ள அவள் துளியும் விரும்பவில்லை.
அவளைப் பொருத்தவரை தனிமை என்பது தவம். அவள் நொடி நேரம் கூட கலைக்கவே விரும்பாத தவம். நினைவு தெரிந்ததிலிருந்தே தனிமையில் பழகியவளுக்கு தன் வாழ்க்கைக்குள் இன்னொருவாரைத் துணையாய்க் கொண்டு வரப் பிடித்தமில்லை என்பதே நிஜம்.
தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான் நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும், அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும். இது அவளாக ஏற்றுக் கொண்ட ஒன்று அத்தனை எளிதில் அவளை விட்டுப் பிரிந்து விடாது.
‘என்னை என்னால் பார்த்துக்க முடியும் போது எனக்கெதுக்கு துணை? தன்னைப் பார்த்துக்க முடியாதவங்களுக்கு வேணும்னா துணை தேவைப்படலாம். எனக்கு அது தேவையில்லை.!’ என்ற ஆழ்மன எண்ணங்கள் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.
மேகம் சூழ் நீலவானில், நட்சத்திரங்கள் கோடிக் கோடியாய் கொட்டிக் கிடந்தாலும், தன்னந்தனியாய் உலாப் போகும் நிலா எத்தனை அழகானதோ, அதே போல் தான் சிம்மவாஹினியின் வாழ்க்கையும்.
சிம்மவாஹினி எனும் நிலவின் வாழ்வில், விதிவிலக்காய் ஒற்றை நட்சத்திரமாய் அவள் பக்கத்திலே உறுதுணையாய் இருப்பவன் ஷியாம் மட்டுமே.
ஆனால் ஒன்றை மட்டும் வாஹினி சுத்தமாய் மறந்தே போனாள், விதிகள் இருந்தால், விதி விலக்குகளும், விதி மீறல்களும் இருக்கத்தானே செய்யும்? ஒருவேளை விதிவிலக்கு வாஹினியாக இருக்கும் பட்சத்தில் விதிமீறல் ஆதனாக இருந்தால்..?
யோசனையோடே வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவளின் மனம் முழுதுமே, கோபமும் ஆத்திரமும் மட்டுமே மையமிட்டிருந்தது. அவளைப் பொருத்தவரை அவள் வாழ்க்கையில் ஆதனுக்கு மட்டுமல்ல எந்த ஆணுக்கும் இடம் என்பது இல்லை.
‘என் வாழ்வில் எந்த ஆணுக்குமே இடமில்லை.!’ மனதுக்குள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். சொன்னதைக் துளி பிசகாது கடைபிடிக்கும் வைராக்கியமும் அவளுக்குக் கொஞ்சம் அதிகம் தான்.
மனதிற்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க, அதை தடைசெய்யும் விதமாய், அவளின் வாகனம் தடுமாறி நடு சாலையில் நின்றது. மொட்டை வெயிலில் நட்டநடு சாலையில், திடீரென நின்றுவிட்ட வாகனம் வேறு எல்லையில்லா எரிச்சலைக் கிளப்பியது.
“இது வேற நேரம் காலம் தெரியாமல்..!” சலிப்போடு முனகியவள், இருசக்கர வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு, ஷியாமிற்கு அழைக்க முயன்றாள்.
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாய், சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாய் மீண்டும் மீண்டும் காதுக்குள் தொனதொனத்து எரிச்சலுட்டிய அலைபேசி சொல்லமுடியாத ஆத்திரத்துடன் பார்த்தவள், இணைப்பைத் துண்டித்தவள், வாகனத்தைப் பூட்டி ஓர் ஓரமாய் நிறுத்திவிட்டு கண்களால் சுற்றத்தை ஆராய்ந்தாள்.
“என்னாச்சு மேடம்? நான் உதவி பண்ணவா?” பல் இளித்தபடி வந்து நின்றவனை, பார்வையாலே தள்ளி நிறுத்தினாள் சிம்மவாஹினி.
அந்த நபரை அவளைப் பார்த்தப் பார்வையிலே அத்தனைக் கோபம் இருந்தது. பெண்ணின் பலவீனத்தைப் பயன்படுத்தி, கிட்டே நெருங்க முயற்சிக்கும் கேவலமானவர்கள்.
“யோவ் போய்யா! உன்கிட்டே உதவி வேணும்ன்னு கேட்டேனா?” அலட்சிய தோரணையுடன் சொன்னவள், பின் யோசித்து முடிவு செய்தவளாய், சாலையைக் கடந்து அருகிலிருந்த இரயில் நிலையத்திற்குள் நுழைந்தாள்.
இரயில் நிலையத்தின் வாகன நிறுத்தத்தில், தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அதற்கான இரசீதையும் பெற்றுக் கொண்டவள், பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு, படிகளில் இறங்கி, இரயிலுக்காகக் காத்திருக்கத் துவங்கினாள்.
மதிய வெயிலின் உபயத்தால், வியர்வைத் துளிகள் வைரங்களாய் மாறி, அவள் முகத்தில் பளபளக்க, கைக்குட்டையால், முகத்திலிருந்த வியர்வையை ஒற்றியபடியே சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். அந்த இரயில் நிலையம் அவளின் கல்லூரிக் காலங்களை நினைவு படுத்தியது.
அவளும் ஷியாமுமாய் சேர்ந்துக் கொண்டு, இரயில் நிலையத்தை விலைக்கு வாங்கியதைப் போல் சுற்றித் திரிந்தக் காலங்கள் எல்லாம் நினைவில் வந்து போனது. இரயில் நிற்பதற்கு முன்னதாகவே ரன்னிங்கில் ஏறுவது இறங்குவதெல்லாம் கண்ணுக்குள் காட்சியாய் வந்து போக, இதழை மீறாத துளியளவு புன்னகை எட்டிப் பார்த்தது.
புன்னைகையுடன் திரும்பியவளின் கண்களில் பயமும், பதற்றுமாய் நின்றுக் கொண்டிருந்த அந்தப் பெண் விழுந்தாள். முகம் ரொம்பவே கலங்கிப் போயிருந்தது. அந்தப் பெண்ணின் பார்வையோ, யாராவது பார்க்கிறார்களா? என சுற்றிலும் அலசியபடியே இருந்தது.
அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில், வாஹினியின் புருவ மத்தியில் முடிச்சொன்று விழுந்தது. நெற்றியைச் சுருக்கி யோசனையோடு அந்தப் பெண்ணைப் பார்த்தவளின் கண்களுக்குள் ஏதேதோ கலங்கலான காட்சிகள். சில நொடிகள் யோசிப்பின் பின் நிதானித்து அந்தப் பெண்ணைப் பார்த்த வாஹினிக்கு அந்தப் பெண்ணைத் தற்போது நன்றாகவே அடையாளம் தெரிந்தது.
‘அன்று அங்கே பார்த்த அதே பெண்தானே? பார்த்தால் ரொம்பவும் வசதியானப் பெண்ணாகத் தெரிகிறாள், அவளுக்குத் துளியுமே சம்மந்தமே இல்லாத இடத்தில் இவளுக்கென்ன வேலை?’ யோசனையோடு நின்றிருந்த வாஹினிக்கு, இரயில் வருவதை பயமும் ஆர்வமுமாய் பார்க்கும் அந்தப் பெண்ணின் பார்வை, நிகழப் போகும் விபரீதத்தை அச்சுப் பிசகாமல் உணர்த்தியிருந்தது.
“ஏய்..!” நிலவரம் புரிந்து அவள் அழைக்கும் முன்னமே அந்தப் பெண் இரயிலுக்கு முன்னால் குதிக்கத் தயாராக நின்றிருந்தது. நொடியும் தாமதிக்காது, வேக எட்டுக்களில் அந்தப் பெண்ணை நெருங்கி, அவள் கைப்பிடித்து வாஹினி இழுக்கவும், அத நேரம், இரயில் வரவும், இரயிலுக்கு மிக அருகில் நின்றிருந்ததால், இரயில் வந்த வேக விசையில் இருவரும் சற்று தள்ளி கீழே விழவும் சரியாக இருந்தது.
‘நொடிப் பொழுது தாமதித்திருந்தாலும், இரயிலுக்கு முன் பாய்ந்து உயிரை விட்டிருப்பாள். என்ன முட்டாள் தனம் இது?’ எரிச்சலோடு கீழே விழுந்துக் கிடந்தவளைப் பார்க்க, விழுந்த வேகத்தில், தலையில் அடிபட்டு இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. உடனே இரயில் நிலையத்தின் அவசர உதவியில் சொல்லி, மருத்துவமனைக்கு விரைந்திருந்தாள் சிம்மவாஹினி.
********
“ஆமாடா! அங்கே தான். ஜி.ஹெச் தான்..!”
“சீக்கிரம் வந்து தொலை! எல்லாமே உன்னால் வந்தது தான்.!” எரிச்சலுடன் அலைபேசியை அணைத்த வாஹினி தன் எதிரில், மருத்துவமனைக் கட்டிலில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த சம்யுக்தாவைத் தான் நோக்கினாள். ஆம்! வாஹினி இரயில் நிலையத்தில் காப்பாற்றியது சம்யுக்தாவை தான்.
“உன் பேரு என்ன?”
“சம்யூ..! சம்யுக்தா!”
“செத்துப் போற அளவிற்கு உனக்கு அப்படி என்ன கஷ்டம்? பார்க்க வசதியானப் பொண்ணாகத் தான் தெரியறே, வாழறதை விட சாகறது அவ்வளவு ஈஸியா இருக்கா என்ன?”
“பணக்காரங்களா இருந்தால் கஷ்டம் இருக்காதா என்ன? என் கஷ்டம் எனக்கு? ஏதோ உதவி பண்ணி ஹாஸ்பிட்டலில் சேர்த்திருகீங்க, எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க கொடுத்துடுறேன்.!”
சம்யூ பேசியதிலிருந்தே அவள் முகத்தில் தெரியும் முதிர்ச்சி மனதிற்குள் இல்லையெனப் புரிந்துக் கொண்டாள்.
சிறு வயதிலிருந்தே கஷ்டமே இல்லாமல் வளர்ந்தவளுக்கு என்ன முதிர்ச்சி இருந்துவிடப் போகிறது? நினைப்பதெல்லாம் கையில் கிடைத்துவிட்டால், போட்டியிடும் மனப்பான்மையோ, போராடி வெல்லும் பக்குவமோ இல்லாமல் போய், சிறிய ஏமாற்றத்திற்கெல்லாம் உயிரையே மாய்த்துக்கொள்ளும் மனோபாவம் தன்னால் வந்துவிடுகிறது.
தெளிவாக சம்யூவின் மனநிலை புரியவும், புன்னகையோடு அவளை நோக்கியவள்,
“இந்த உலகத்தில் நீ பிறந்தது எப்படி உன்னால் முடிவு செய்யப்படலையோ, அதே போல் உன் இறப்பும் உன்னால் முடிவு செய்ய முடியாதது. தற்கொலைங்கிறது நம்மைப் படைச்ச ஆண்டவனுக்கும், நம்மைப் பெத்தவங்களுக்கும் நாம செய்யற நம்பிக்கை துரோகம். சாகறதில் இருக்கிற வைராக்கியத்தில், ஒரேயொரு துளி வைராக்கியம் வாழறதிலும் இருந்தால் போதும், வாழ்க்கையை ஈஸியாய் ஜெய்ச்சுடலாம்.!”
“தத்துவம் யாரு வேணும்ன்னாலும் பேசலாம்! அட்வைஸ் யார் வேணும்னாலும் பண்ணலாம், ஆனால் அந்தச் சூழ்நிலை அவங்களுக்கு வரும் போது தான் அதன் வீரியம் புரியும். சும்மா தொனதொனன்னு பேசாமல், எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க நான் கொடுத்துடுறேன்.!” சம்யுக்தா சொல்லவும்,
“எதுக்கு நான் போனதும், மாடியிலிருந்து குதிக்கலாம்ன்னூ ப்ளான் பண்ணுறியா? உன் வீட்டுக்கு தகவல் சொல்லியிருக்கேன். வந்ததும் கிளம்பிடுறேன்.!” எனச் சொல்லிவிட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள் வாஹினி.
“யா.. யாருக்கு கால் பண்ணி சொன்னீங்க?” தடுமாற்றமும் தயக்கமும் எட்டிப் பார்த்தது சம்யூவின் குரலில்.
“ஏன் பயமா இருக்கா? நான் சொல்லலை, ஹாஸ்பிட்டலில் இருந்தே உன் வீட்டுக்கு தகவல் சொல்லிட்டாங்க! வந்ததும் யாருன்னு தெரிஞ்சுக்கோ!” சாதாரணமாய் சொன்ன வாஹினிக்கு அவள் ஆதனின் தங்கை என்பது தெரியாதே..
ஆனால் சம்யுவின் முகம் ஒருமாதிரியாய் மாறிப் போயிருந்தது.
‘ஒருவேளை அப்பா வந்தால்..?’ நினைக்கும் போதே நெஞ்சு நடுங்கியது சம்யுக்தாவிற்கு. என்னதான் பாசமாகப் பார்த்துக் கொண்டாலும், வீட்டு விஷயங்கள் வெளியே தெரிவதை சதாசிவம் சுத்தமாய் விரும்ப மாட்டார்.
உள்ளே நடுக்கதுடன் வாசலைப் பார்த்தபடியே சம்யூ அமர்ந்திருக்க, அங்கே வந்து நின்றவன் ஆதன் ரித்விக்.
“ஆது..!” என அழைத்தபடியே, ஆதனை சம்யுக்தா ஓடிச் சென்று கட்டிக் கொள்ள, வாஹினியோ குழப்பமாய் விழித்தபடி நின்றாள்.
‘இன்னைக்கு தானே இவனைப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சேன். மறுபடியுமா?’ என மனம் நினைத்துக் கொண்டிருக்க, அவளின் மையிட்ட கருவிழிகளோ, அவனின் கை காயம் தன்னை ஆராய்ந்துக் கொண்டிருந்தது.
அவனைப் பார்க்காதே என மூளை எச்சரித்த போதும் கூட, அவள் கண்கள் கேட்பதாய் இல்லை. அவள் அவனையே பார்த்தபடி நின்றிருக்க,
“ஹேய் சிமி! நீ எப்படி இங்கே?” உரிமையாய் அவன் விளித்த விதம் இவளுக்குச் சுத்தமாய் பிடிக்கவே இல்லை.
“என்னாச்சு சம்யூ? உனக்கு எப்படி அடிபட்டது?” கேள்வி சம்யூவிடமிருக்க பார்வை மட்டும் வாஹினியை அழுத்தமாய் தொட்டு மீண்டது.
“ஹலோ! என்னை எதுக்கு உத்துப் பார்க்கிறே? நான் ஒண்ணும் செய்யலை. எதுவா இருந்தாலும் அங்கே கேளு. நான் ஒண்ணும் அவங்களை இரயிலில் பிடிச்சு தள்ளி விடலை. சாகப் போனவங்களைக் காப்பாத்தியிருக்கேன்.! இந்த காலத்தில் யாருக்கும் இரக்கப்படக் கூடாது. நல்லது செய்யணும்ன்னு நினைச்சாலே அசிங்கப்பட்டு தான் நிற்கனும் போல!” அவள் சத்தமாகவே முணுமுணுக்க,
“ஹேய்! ஸாரி, நீ தப்பா புரிஞ்சுக்கிட்டே, நான் என்ன நடந்ததுன்னு கேட்கத்தான் உன்னைப் பார்த்தேன். என் தங்கச்சிக்கு எதுவும் ஆகாமல் காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ்..!” அவளைச் சமாதானப் படுத்த முயன்றான் அவன்.
“யாராக வேணும்னா இருக்கட்டுமே, நான் உண்டு என் வேலை உண்டுன்னு போயிருக்கணும். முதலில் சாகத் துணியற அளவிற்கு உன் தங்கச்சிக்கு என்ன பிரச்சனைன்னு கேளு! அதை விட்டுட்டு சிமி, சிமின்னு எரிச்சலைக் கிளப்பிக்கிட்டு..!” எனச் சொன்னவள் எழுந்து கிளம்ப முயல,
“ஏய்! உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா? அவள் யாருன்னு தெரியுமா? அவளைப் போய், இப்படி ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து வச்சிருக்கே? என் பொண்ணோட நகம் கூட இப்படியொரு இடத்தில் படக் கூடாது! அவள் இந்த சதாசிவத்தோட பொண்ணு. அமைச்சர் சதாசிவத்தோட பெண்ணு!” ஆதனின் பின்னாலிருந்துக் கேட்ட குரல் சதாசிவத்தினுடையது தான்.
கட்சி கரையிட்ட வெள்ளை வேட்டி சட்டையில், முன்வழுக்கையும், தொப்பையுமாய் முகத்தில் திமிருடன் நின்றிருந்தார் மனிதர்.
“நீங்க யாராய் வேணும்னாலும் இருந்துட்டுப் போங்க! அதைப் பத்தி எனக்கு கவலையில்லை.வேணும்னா சொல்லுங்க, உங்கப் பொண்ணை மறுபடியும் தண்டவாளத்தில் தள்ளிட்டு பொறுமையாய் ப்ரைவேட் ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணறேன்.!” எரிச்சலாய் மொழிந்தாள் வாஹினி.
“இங்கே பாருங்க! இது ஹாஸ்பிட்டல், உங்கப் பொண்ணை அவங்க ஹாஸ்பிட்டலில் சேர்த்ததற்கு நன்றி சொல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. அவங்க செஞ்ச உதவியை அசிங்கப் படுத்தாதீங்க!” வாஹினிக்குப் பரிந்து வந்தது சாட்சாத் ஆதனே தான்.
“ஏய்! உன் கிட்டே நான் விளக்கம் கேட்டேனா? அப்பன்னு மட்டு மரியாதை இல்லாமல் பேசறவன் கிட்டே எனக்கு எந்தப் பேச்சும் இல்லை. இப்போ சம்யூ இந்த நிலையில் வந்து நிக்கிறாள்ன்னா அதற்கான ஒட்டு மொத்தக் காரணமும் நீதான். நீ மட்டும் அந்த நிஷாவைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது. இனி நான் உன்னை ஆட விட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டேன்.” எனப் பூட்டிய அறைக்குள் சதாசிவம் கத்திக் கொண்டிருக்க, இனி இங்கிருப்பது அதிகப்படி என நினைத்து அங்கிருந்து கிளம்பியிருந்தாள் வாஹினி.
“நீ நிஜமாவே சம்யூவை உன் தங்கச்சியாய் நினைக்கிறேன்னா இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக்கோ!”
“முதலில் அவள் ஏன் அப்படியொரு முடிவுக்கு வந்தாள்ன்னு கேளுங்க! உங்க இஷ்டத்திற்கு முடிவெடுக்க இது ஒண்ணும் உங்க வாழ்க்கை இல்லை. ஆகாஷோட வாழப் போறது நீங்க இல்லை சம்யூதான். அதை முதலில் மனசில் வச்சிக்கோங்க!” அழுத்தம் திருத்தமாய் ஆதன் சொல்ல, அதைக் காதில் கேட்கக் கூட விரும்பாத சதாசிவம்,
“அவள் சின்னப் பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்? அவளுக்கு எது நல்லதுன்னு எனக்குத் தெரியும். அவளுக்கு ஆகாஷ் தான் சரியாய் இருப்பான். அவள் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா நீ நிஷாவைக் கல்யாணம் பண்ணிக்கணும். ஆகாஷுக்கும் அவளுக்கும் கல்யாணம் நடக்காதுங்கிற விரக்தியில் தான் அவள் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாள், அதை முதலில் நீ புரிஞ்சுக்கோ..!” என்றவர்,
“அப்பா சொன்னது சரி தானே சம்யூ?” எனக் கேட்டார். ஆனால் வெளியில் சிரித்துக் கொண்டே சொன்னாலும், நீ சம்மதம் சொல்லித்தான் தீர வேண்டுமென்கிற மறைமுக மிரட்டல் ஒளிந்திருந்தது.
ஆதன் தங்கையின் முகத்தைப் பார்த்தபடியே யோசனையோடு நின்றிருக்க,
‘ஏன் இந்த ஆதன் அடிக்கடி கண்ணு முன்னே வர்ரான்? நான் எந்தப் பக்கம் போனாலும், இந்த விதி அவனோடே என்னைச் சேர்க்க முயற்சிக்கிறதே ஏன்? எனக்கு இதெல்லாம் வேண்டாம். எந்த ஒரு புது உறவும் எனக்குத் தேவையே இல்லை. உறவெனும் மீள முடியா புதை குழிக்குள் நான் விழவும் தயாராக இல்லை.!’
என மனதிற்குள் உறுதியெடுத்தவள், ஷியாமுடன் சேர்ந்து வீட்டை நோக்கி தன் பயணத்தைத் துவக்கியிருந்தாள்.
இசைக்கும்..!

