
இதயம்-6
மேக முட்டையிலிருந்து, சூரியன் கோழிக்குஞ்சாய் வெளிவந்துக் கொண்டிருந்த காலை நேரம். வானம் தோல் சீவிய கேரட்டின் நிறத்தில் விடிந்துக் கொண்டிருந்தது.
அன்றைய காலை நேரத்திற்கான முழு பரபரப்பில் இருந்தான் ஆதன் ரித்விக். தனது மெல்லோட்டத்தைத் துவக்குவதற்காக, ட்ராக் பேண்ட்டும், டி-ஷர்ட்டுடன் தயாராய் நின்றிருந்தவனை அலைபேசியின் அழைப்பு தன்னை நோக்கி வர வைத்தது.
“ம்ப்ச்!” என்ற சலிப்புடனே அலைபேசியைக் கையில் எடுத்து, தொடுதிரையில் மினுங்கும் அலைபேசி எண்களைப் பார்த்தவனுக்கு எடுப்பதா? வேண்டாமா? என்ற யோசனையுடனேயே அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்தான்.
“ஹலோ ஆது!” அந்தப்பக்கம் அவன் தங்கை சம்யுக்தாவின் குரல் கேட்டது.
“சொல்லு சம்யூ! என்ன விஷயம் காலையிலேயே கால் பண்ணியிருக்கே, ஏதாச்சும் அவசரமா?”
“எப்படி ஆது இப்படி ஒண்ணுமே தெரியாதப் பச்சை புள்ளையாட்டம் பேசறே? நீ இப்படி செய்வேன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை.!”
“சம்யூ! நான் சொல்றதைக் கேளு!”
“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். உன்னை அப்பா உடனே கிளம்பி வரச் சொன்னார் வா!”
“நான் அவரைப் பார்க்க வரலை. என்ன விஷயம்ன்னு நீயே சொல்லிடு!”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்பா உன்னை வரச் சொல்லி, உன் கிட்டே சொல்ல சொன்னார். நான் சொல்லிட்டேன்.வர்தும் வராததும் உன் இஷ்டம்.!” பட்டெனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்திருந்தாள் சம்யுக்தா.
அலைபேசியில் பேசிவிட்டு நிமிர்ந்தவனுடய முகம், ஒருமாதிரியாய் மாறிப் போயிருந்தது. கோபமும் எரிச்சலும் எக்கச்சக்கமாய் அவன் முகத்தில் தெரிந்தது. ஆனாலும் அவசரமாய் உடை மாற்றிக் கிளம்பியவன், அடுத்த அரைமணி நேரத்தில் அந்த வீட்டின் வாசலில் நின்றிருந்தான்.
அழைப்பு மணியை அழுத்திவிட்டு அவன் காத்திருக்க, சம்யூ தான் வந்துக் கதவைத் திறந்தாள். கதவைத் திறந்துவிட்டு வேண்டா வெறுப்பாய்,
“வா! அப்பா, உனக்காக வெய்ட் பண்ணுறார்.!” எனச் சொல்லிவிட்டு முன்னால் சென்று விட்டாள்.
துளியும் பிடித்தமின்றியே, சம்யூவைப் பின் தொடர்ந்து மாடியறையை நோக்கிப் போனான் ஆதன் ரித்விக்.
அந்த அறையில் வெள்ளை வேட்டி சட்டையில், ஆதனின் தந்தை சதாசிவம் அமர்ந்திருக்க, அவர் அருகிலேயே அவர் மனைவி காயத்ரி அமர்ந்திருந்தார்.
“அப்பா! ஆது வந்துட்டான். ஏன் அப்படிப் பண்ணான்னு கேளுங்கப்பா!”
“தங்கச்சி, தங்கச்சின்னு உங்கப் புள்ளை சொல்லறதெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்குத்தான். உண்மையாகவே என் பொண்ணு மேல் பாசம் இருந்திருந்தால், இவன் இப்படியெல்லாம் பண்ணிருப்பானா?”
“பாசம் இருக்கிறதால் தான் இதையெல்லாம் பண்ணினேன்.” கோபமும் அழுத்தமும் தெறித்தது ஆதனின் குரலில்.
“பார்த்தீங்களா? உங்கப் புள்ளை எப்படி பேசறான்னு? இதுவே அவன் கூடப் பொறந்தவளாய் இருந்திருந்தால், இப்படியெல்லாம் பண்ணுவானா?.”
“சம்யூவும் என் கூடப் பிறந்தவள் தான்.!”
“இந்த வார்த்தையில் சொல்லுறதெல்லாம் யார் வேணும்ன்னாலும் பண்ணலாம். உண்மையானப் பாசம் மனசிலிருந்து வரணும்!”
“காயத்ரி அமைதியாய் இரு நான் பேசிக்கிறேன்.!” என மனைவியை அடக்கினார் சதாசிவம்.
“ஆது! இது என்ன? இதில் இருக்கிறதெல்லாம் நிஜமா? இல்லை எவனாவது என்மேல் இருக்கிற கோபத்தில் பண்ணிட்டானா?” என்றபடியே அன்னறைய தினத்திற்கான செய்தித் தாளை அவன் முன்னால் போட்டார் சதாசிவம்.
“சென்னையைச் சேர்ந்த, உணவு டெலிவரி செய்யும் பெண்ணிடம், பாலியல் ரீதியாய் தொல்லைக் கொடுத்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். நளபாகம் நிறுவனத்தின் தலைவர் ஆதன் அவர்களின் சாட்சியத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாய் நம்பிக்கையான செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!” என்ற செய்தி, முதல் பக்கத்திலேயே பல்லைக்காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது.
“இந்த செய்திக்கு என்ன?” அலட்சியமாய் ஆதன் கேட்க,
“இதில் இருக்கிறது உண்மையா ஆது?” குரலில் கடினத்துடன் பதில் கேள்வி கேட்டார் சதாசிவம்.
“உண்மை தான். இதை ஏன் என்கிட்டே கேட்கிறீங்க.? நியூஸ் பேப்பரில் தான் தெளிவா போட்டிருக்கானே? இதைக் கேட்க என்னை அங்கிருந்து வரச் சொன்னீங்களா?”
“பார்த்தீங்களாப்பா! என் வாழ்க்கை மேல் ஆதுவுக்கு அக்கறையே இல்லை. சரியான சுயநலவாதி! போச்சு! போச்சு! எல்லாமே போச்சு. என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. நான் நிஷா முகத்தில் எப்படி முழிப்பேன். அவ கேட்கிற கேள்விக்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்வேன்.?” புலம்பத் துவங்கியிருந்தாள் சம்யுக்தா.
“சம்யூ நீ அமைதியாய் இரும்மா!” என மகளை அடக்கியவர்,
“ஏன்டா! என் அரசியல் வாழ்க்கையை முற்றுப்புள்ளி வச்சு முடிச்சுடணும்னு நினைக்கிறியா? என்னதான் மனசில் நினைச்சிட்டு இருக்கே? உன் அப்பன் சாதாரண ஆள் கிடையாது. தமிழ் நாட்டோட சட்டத்துறை மந்திரி. என் புள்ளையாய் இருந்துட்டு, நீ ஏன்டா இப்படி இருக்கே? என்கூட அரசியலுக்கு வாடான்னு சொன்னால் வர மாட்டேன்னு சொல்லிட்டே. சரி, நம்ம ஃபேக்டரியைப் பார்த்துப்பன்னு பார்த்தால், தனியா சாப்பாடு டெலிவரி பண்ணுற கடையை ஆரம்பிச்சு அங்கே போய் உட்கார்ந்துட்டே! இப்போ என்னடான்னா இப்படி சாட்சி சொல்லி வச்சிருக்கே? இப்போ அரெஸ்ட் ஆகியிருக்கிற நாலுபேரில் ஆகாஷும் ஒருத்தன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?”
“தெரியும்! அரெஸ்ட் ஆனவங்களில் ஆகாஷும் இருந்தான்னு தெரியும், அவன் நல்லவன் இல்லைங்கிறதும் தெரியும்.!”
“பார்த்தீங்களாப்பா! ஆது வேணும்ன்னே தான் பண்ணியிருக்கான். என்ன இருந்தாலும் நான் அவனோட தங்கச்சி இல்லையே? உங்க முதல் மனைவிக்குப் பிறந்த உண்மையான வாரிசு அவன் தானே.? நான் ரெண்டாந்தாரத்திற்குப் பிறந்தவள் தானே?” என சம்யுக்தா கோபத்தோடு கத்த,
“சம்யூ! வாயை மூடு! தேவையில்லாமல் பேசாதே! நான் தான் விசாரிச்சுட்டு இருக்கேன்ல!”
“அதானே! உங்கப் பையனை என் பொண்ணு ஒண்ணும் சொல்லிடக் கூடாது. என் பொண்ணு வாழ்க்கை எப்படி போனால் உங்களுக்கென்ன? அவ என்ன தப்பா கேட்டுட்டாள்ன்னு அவளைத் திட்டறீங்க? அவ சொன்னது உண்மைதானே? அவ ஒண்ணும் பொய் சொல்லலையே?” சம்யூவிற்குப் பரிந்து வந்தார் காயத்ரி.
“அமைதியாய் இரு காயத்ரி!”
“என்னை மட்டும் அடக்குங்க! உங்கப் புள்ளையை ஒண்ணும் சொல்லிடாதீங்க!”
“எல்லாம் உன்னால் தான் டா! எனக்குன்னு புள்ளையாய் ஏன் வந்து பிறந்தே? என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா?” எரிச்சலுடன் பேசினார் சதாசிவம்.
“நீங்க இந்தத் தமிழ் நாட்டோட, சட்ட அமைச்சராய் இருக்கலாம் மிஸ்டர்.சதாசிவம். அவ்வளவு ஏன், மதுபான ஃபேக்டரியோட உரிமையாளராவும் இருக்கலாம், ஆனால் என்னைக்கு என் அம்மா இருக்க வேண்டிய இடத்திற்கு இன்னொருத்தரைக் கொண்டு வந்தீங்களோ அன்றைக்கே என்னைப் பொருத்தவரை நீங்க செத்துப் போய்ட்டீங்க! அதாவது என் அப்பா செத்துப் போய்ட்டார். இப்போ இருக்கிறவர் யாருன்னே எனக்குத் தெரியாது. அதனால் இனிமே என்னைக் கூப்பிடுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க!”
“என் மேல் இருக்கிறக் கோபத்தில் தான் சம்யூ வாழ்க்கையில் விளையாடுறியா? இதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்லை ஆது!” கடினம் தெரிந்தது அவர் குரலில்.
“என்னை நீங்கப் புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தான். என்ன தான் என் அம்மாவுக்கு துரோகம் பண்ணினாலும், சம்யூவை நான் அந்நியமா நினைச்சதில்லை. சம்யூ ஆகாஷை கல்யாணம் பண்ணிக்கணும்னா, நான் நிஷாவைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நீங்கப் போட்ட கேவலமான டீலுக்கு நான் ஓகே சொன்னது சம்யூவுக்காக மட்டும் தான். ஆனால் ஒரு பொண்ணை நடுரோட்டில் துரத்திட்டு வந்து அவ மானத்தைக் காவு வாங்க நினைக்கிற பொறுக்கின்னு தெரிஞ்சப்பறம் என்னால் சும்மா இருக்க முடியாது.!”
“ஆது! நீ தப்பா புரிஞ்சுக்கிட்டே! ஆகாஷ் ரொம்ப நல்லவர்.!” ஆகாஷூக்கு பரிந்து வந்தாள் சம்யுக்தா.
“இங்கே பார் சம்யூ! உங்கப்பா உனக்கு அவரை மாதிரியே மாப்பிள்ளையைப் பார்த்திருக்கிறார். அதுவும் கடைஞ்செடுத்தப் பொறுக்கியாய்!” இதழ் வளைய இகழ்ச்சிப் புன்னகையுடன் சொன்னவன், சதாசிவத்தைக் கேவலமான பார்வை பார்த்துவிட்டு, அவர் முறைப்பதையும் பொருட்படுத்தாது வெளியேறியிருந்தான்.
“என்னங்க, உங்கப் புள்ளை இப்படி சொல்லிட்டுப் போறான். இந்த ரெண்டு கல்யாணமும் நடந்தால் தான், நீங்க அரசியலில் அடுத்த லெவலுக்கே போக முடியும். நிஷாவோட அப்பா பெரிய பிஸ்னஸ்மேன். நமக்கு அவங்க ஆதரவும் பணமும் ரொம்பவே அவசியம். இவன் தான் ஆகாஷ் உள்ளே போறதுக்கு காரணம்ன்னு தெரிஞ்சால் அவ்வளவு தான். எப்படி எல்லாத்தையும் சமாளிக்கப் போறீங்க?” காயத்ரி பேசுவது ஆதனின் செவிகளில் விழத்தான் செய்தது.
பணத்தை இடையில் வைத்து இவர்கள் ஆடும் பரமபத விளையாட்டில் தன்னை தாயக்கட்டையாய் உருட்டப் பார்க்கிறார்கள் என்பதும் அவனுக்குப் புரிந்தது.
என்னதான் சட்டத்துறை அமைச்சராய் இருந்தாலும், துளியும் நேர்மை இல்லாது, ஊழலில் புரண்டுக் கிடக்கும், தன் தந்தையையும், அவரின் தொழிலையும் சுத்தமாய் ஆதனுக்குப் பிடிக்காது.
அவன் சதாசிவத்தை அப்பா என அழைப்பதை நிறுத்தியே வருடங்கள் கடந்துவிட்டன. இதோ இப்போது கூட, அவன் வந்தது சம்யூ அழைத்ததன் பேரில் மட்டுமே. அதை சம்யூ உணர்ந்திருக்கிறாளோ இல்லையோ, ஆதனைப் பொருத்தவரை சம்யூவை அவன் உடன் பிறந்தத் தங்கையாகத் தான் பாவிக்கிறான். தங்கையின் வாழ்க்கை கண் முன்னே வீணாவதை எந்த அண்ணணும் விரும்ப மாட்டான் தானே? ஆதனும் அதைத்தான் செய்தான். ஆனால் இதை சம்யூ புரிந்துக் கொள்வாளோ? என்னவோ?
********
அதே நேரம், ஷியாமின் வீட்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்துப் புலம்பிக் கொண்டிருந்தாள் வாஹினி.
“சட்டம் பணம் இல்லாதவங்களை நோக்கி மட்டும் தான் குறி தவறா தோட்டா மாதிரி பாயுது. அதுவே பணக்காரங்க கையில் கைப்பாவையாய் தான் இருக்கு.!”
“இது இப்படித்தான் நடக்கும்ன்னு தெரியும் தானே வாஹினி! அப்பறம் ஏன் புலம்பிட்டே இருக்கே? இங்கெல்லாம் சட்டம் தன் கடமையை இப்படித்தான் செய்யும்.”
“அரெஸ்ட் பண்ணி அரைமணிநேரம் ஆகலை. அவங்களுக்கு எதிரான ஆதாரம் இல்லைன்னு ரிலீஸ் பண்ணிட்டானுங்க! அவங்க அஞ்சு பேரையும் அரெஸ்ட் பண்ணின போலீசும் இடமாற்றம் பண்ணப்பட்டுட்டார். இதில் எங்க ஆட்சி நீதி, நியாயத்துக்குப் பேர் போனதுன்னு பேச்சு வேற.!” அடக்க மாட்டாது கோபம் வந்தது வாஹினிக்கு.
“நான் அப்போவே சொன்னேன் நீ தான் கேட்கவே இல்லை. ஆதன் சாரையும் இதில் இழுத்தது ரொம்ப தப்பு வாஹினி!”
“உனக்கு நான் பண்ணின எல்லாமே தப்பு தான். என்னை அவனுங்க துரத்தினதைப் பார்த்த ஒரே விக்டிம் அந்த ஆதன் தான். அதனால் தான் அவன் கிட்டே கேட்டேன். இப்போ என்ன நான் தான் நேரில் பார்த்த சாட்சின்னு அவன் சொன்னதும் அவன் என்ன கரைஞ்சா போய்ட்டான். பார்க்கிற நேரமெல்லாம் என்கிட்டே ஏகத்துக்கும் வழியறானே, அதுக்கே அவன் நூறு தடவை எனக்காக சாட்சி சொல்லலாம் தப்பில்லை.!” என அவள் சொன்னதும் பக்கெனச் சிரித்துவிட்டான் ஷியாம்.
“டேய்! எருமை! எதுக்குடா சிரிக்கிறே?”
“அவர் எவ்ளோ பெரிய ஆள், அவர் போய் உன்னைப் பார்த்து வழிஞ்சார்ன்னு சொன்னால் சிரிப்பு வராதா? அவர் உச்சியில் உட்கார்ந்திருக்கிறவர், நாம இப்போ தான் தத்தி தத்தி முதல் படியே கடந்திருக்கிறோம். அவர் கிட்டே போய் நீ லூசுத்தனமா டீலெல்லாம் போட்டு வச்சிட்டே!”
“அப்போ நான் பண்ணினது தான் தப்புங்கிறியா ஷியாம்?”
“இங்கே பார் வாஹினி! பிஸ்னஸ் டீல் எப்போவுமே ப்யூர்லி பிஸ்னஸாய் மட்டும் தான் இருக்கணும். நீ அதோட பர்ஸ்னலை எப்போவுமே கொண்டு வரக் கூடவே கூடாது.!” அழுத்தமாய்ச் சொன்னான் ஷியாம்.
“என்னைப் பொருத்தவரை நான் செஞ்சது சரி தான். நீயும் நானும் போய் அந்த ஆள் கிட்டே கம்ப்ளைண்ட் கொடுத்தோமே, அந்த ஆள் கொஞ்சமாச்சும் சட்டை பண்ணினாரா? அதுவே ஆதன் வந்ததும் எப்படி பம்முனார். நீ பார்த்துட்டு தானே இருந்தே! ஆதன் மட்டும் வந்து சொல்லலைன்னா, இந்த அரைமணி நேர ஜெயில் வாசம் கூட, அவன்களுக்குக் கிடைச்சிருக்காது.!”
“என்னதான் இருந்தாலும் வாஹினி, உன்னோட பாதுகாப்புன்னு ஒண்ணு இருக்கே! நீ பாட்டுக்கு கம்ப்ளைண்ட் கொடுத்துட்டே! உனக்கு எதாவது ஆகிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு!”
“நீ எதுக்குடா பயப்படறே.? என்னைக் கொல்றதுக்கெல்லாம் இன்னொருத்தன் பிறந்து தான் வரணும். அப்படி எவன் வந்தாலும் நான் தான் அவன்களைக் கொல்லுவேன்.!” வாஹினி என்னவோ தைரியமாகத்தான் சொன்னாள் ஆனால் ஷியாமிற்கு தான் ரொம்பவே பயமாகவும், கவலையாகவும் இருந்தது.
“என்னடா பயப்படுறியா?” அருகில் வந்து முகத்தை உற்றுப் பார்த்தபடி கேட்டாள் வாஹினி.
“பயமெல்லாம் இல்லை வாஹினி! நீ சமாளிச்சுடுவேன்னு தெரியும், ஆனாலும் அதையும் மீறி எதாவது ஒண்ணுன்னா..!”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை டா! எனக்கு இப்போ என்னைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அவன்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியலையேன்னு தான் கோபமாய் வருது.!”
“அவங்க செஞ்சதுக்கான தண்டனை அவங்களுக்கு நிச்சயம் கிடைச்சே தீரும். எல்லாத்தையும் கடவுள்ன்னு ஒருத்தர் பார்த்துட்டே இருக்கார். அவர் நிச்சயம் தண்டனைக் கொடுப்பார்.”
“எப்போ, பத்தாயிரம் பேரை அவனுங்க கற்பழிச்சுக் கொன்னதுக்கு அப்பறமா?!”காட்டமாய் கேட்டாள் சிம்மவாஹினி.
“ம்ப்ச்! விதண்டாவாதம் பேசாதே வாஹினி!”
“இது விதண்டாவாதம் இல்லைடா ஷியாம். இது தான் எதார்த்தம். குற்றம் செஞ்சவன்களை ராஜ மரியாதையோட ஜெயிலுக்குள்ளே வச்சிருந்து குற்றம் நிரூபிக்கப் படலைன்னு வெளியே விடறது நம்ம நாட்டில் சகஜம் தானே? நம்மை மாதிரி ஆளுங்க தான் சட்டம் தன் கடமையைச் செய்யும். தப்பு பண்ணினால் சாமி கண்ணைக் குத்திடும்ன்னு நம்பிக்கிட்டு இருக்கோம். இதுவே ஆதன் மாதிரி பண பலம் படைச்சவனெல்லாம் எதுக்கும் பயப்படத் தேவையில்லை. ஏன்னா சட்டமும் போலீசும் அவன் காலடியில் கிடக்கும்.!”
“ஆதன் அப்படியெல்லாம் கிடையாது வாஹினி! எனக்குத் தெரிஞ்சு அவர் ரொம்ப நல்லவர் தெரியுமா?”
“என்ன நற்சான்றிதழ் கொடுக்கிறியா? என்னைப் பொருத்தவரை பணம் இருக்கிறவன் அவனோட நன்மையை மட்டும் தான் முதலில் யோசிப்பான். பணத்தை எப்படி சேர்க்கிறது அப்படிங்கிறதில் தான் அவனோட முழுக் கவனமும் இருக்கும். ஆதனும் அப்படிப்பட்டவன் தான்.!”
“சரி விடு! எது எப்படியோ நீ கேட்ட டீலுக்கு அவர் ஓகே சொன்னார் தானே? இப்போ நாமளும் சொன்னபடி நடந்துக்கணும். இன்னும் புதுசு புதுசா நிறைய ஃப்ளேவர்ஸ் கொண்டு வரணும்.”
“அதெல்லாம் பார்த்துக்கலாம் டா! நான் இன்னும் நிறைய ஐடியா வச்சிருக்கேன். மிர்ச்சி சாக்லேட், சாக்லேட்டுக்கு நடுவில் ஐஸ்க்ரீம் வைக்கிறது, ரூபி சாக்லேட்ன்னு நிறைய மண்டைக்குள்ளே ஓடிட்டே இருக்குடா. சீக்கிரம் எல்லாத்தையும் கொஞ்சமா செஞ்சு நாம டெலிவர் பண்ணுற ஃப்ராடெக்ட்ஸ் கூட, சேம்ப்பிள் மாதிரி கொடுக்கணும் டா. டேஸ்ட் கஸ்டமர்ஸ்க்கு பிடிச்சிருந்ததுன்னு வையி நிறைய பண்ணிக்கலாம். இப்போ என் கூட வா, என்னென்ன வாங்கணும்னு லிஸ்ட் போட்டுத் தர்ரேன் வாங்கிட்டு வந்துடு. வெண்ணிலா எஸென்ஸ் கொஞ்சம் அதிகமாவே வாங்கிட்டு வந்துடு டா!” எனப் பேசியபடியே தோழனை உடன் அழைத்துப் போனாள் சிம்மவாஹினி.
*********
“நீ ஏன் இப்படி செஞ்சே ரித்வி? ஹவ் குட் யூ டு திஸ்? ஆகாஷ் என் அண்ணன்னு தெரிஞ்சும்..!” ஆதனின் அலுவலக அறைக்குள் நின்று எரிச்சலுடன் கத்திக் கொண்டிருந்தாள் நிஷா.
“நான் என்ன செஞ்சுட்டேன்? இப்போ இங்கே வந்து நீ ஏன் கத்தறே?”
“அப்போ உனக்கு எதுவுமே தெரியாதுல்ல? நீ எதுவுமே பண்ணவே இல்லையா? ஆகாஷ் என் அண்ணன் ரித்வி!”
“நான் மட்டும் என்ன தம்பின்னா சொன்னேன்.!” நக்கல் தெரிந்தது அவன் குரலில்.
“ரித்வி! நான் சீரியஸாய் பேசிட்டு இருக்கேன் நீ விளையாடாதே! என் டாட் இந்தக் கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிட்டார். அப்போ உன் தங்கச்சி வாழ்க்கையைப் பற்றி உனக்கு கொஞ்சமும் அக்கறையே இல்லையா?”
“வாயை மூடு நிஷா! என்னவோ உங்க அண்ணன் ரொம்ப யோக்கியம் மாதிரி பேசறே? என் தங்கச்சி மேலே அக்கறை இருக்கிறதால் தான், நான் இப்படி பண்ணினேன். நான் ஒண்ணும் பொய் சொல்லலையே? முழு போதையில் உன் அண்ணணும் அவன் பொறுக்கி ஃப்ரெண்ட்ஸ்களும் அந்தப் பொண்ணைத் துரத்திட்டு வர்ரதைக் கண்ணால் பார்த்த ஒரே சாட்சி நான் மட்டும் தான். நான் பார்த்ததை அப்படியே சொன்னேன். அவ்வளவு தான்.!”
“அப்போ உனக்கும் எனக்கும் இடையேயான கல்யாணமும் இதோடு சேர்ந்தே முறிஞ்சு போய்டும் ரித்வி! நல்லா யோசிச்சு பதில் சொல்லு.!”
“இங்கே பாரு யோசிச்சு பதில் சொல்லும் அளவிற்கெல்லாம் நீ வொர்த் கிடையாது. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதே சம்யூக்காக மட்டும் தான். அவள் கேட்டாளேன்னு தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். ஆனால் இதை வச்சு, என் அப்பா ப்ளான் போட்டுருக்காருன்னு தெரிஞ்சப்பவே, நான் கொஞ்சம் உஷாராகிட்டேன். உன் அண்ணனோட மன்மத லீலைகளும் தெரிஞ்சிடுச்சே, இனிமே இந்தக் கல்யாணத்திற்கு என்ன அவசியம் இருக்கு? நோ நீட்..!” பட்டுக் கத்தரித்தாற் போல் ஆதன் சொன்னதும் நிஷாவின் முகம் சுருங்கிப் போனது.
“ரித்வி நீ ரொம்பப் பேசறே! பேசும் முன்னே உன் தங்கச்சியை ஒருமுறை நினைச்சுப் பார்த்துட்டு பேசு.!”
“அவளுக்கென்ன அவளுக்கு நான் ராஜா மாதிரி மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டி வைப்பேன். அதைப் பற்றின கவலை எதுவும் உனக்கு வேண்டாம்.!”
“நீ இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படுவே ரித்வி. என்னை வேணாம்னு சொல்லிட்டல்ல, உன்னைப் பார்க்க வேண்டிய நேரத்தில் பார்த்துக்கிறேன்.!”
“ஹேய்! நீ என்ன ரொம்ப நல்லப் பொண்ணு மாதிரி பேசறே? சாபமெல்லாம் விடுவியோ? நீ உன் அண்ணன் ஆகாஷை விட மோசம்ன்னு எனக்குத் தெரியும். அன்றைக்கு என்னை டேட்டிங் கூப்பிட்டியே, நீயும் உன் ஃப்ரெண்ட்ஸும் பார்ட்டி ஆர்கனைஸ் பண்ணி பாய் ஃப்ரெண்ட்ஸை மாத்திப்பீங்க. அதுக்காகத் தானே என்னைக் கூப்பிட்டே? நான் வரலைன்னு சொன்னதும், வேற எவனையோ கூட்டிட்டு ஹோட்டல் கோல்ட் மூன் போனதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியா?” என ஆதன் கேட்டதும் நிஷாவின் முகம் இரத்தப் பசையற்று வெளுத்துப் போனது.
ஆனாலும், எதையும் முகத்தில் காட்டாமல், முயன்று சமாளித்து நிமிர்ந்தவள்,
“பின்னே! உன்னை மாதிரி சாமியாரா இருக்கச் சொல்றியா? நீயெல்லாம் கண் முன்னே சொர்க்கம் இருந்தும் அதையெல்லாம் அனுபவிக்கத் தெரியாத முட்டாள் தெரியுமா? உண்மையிலேயே நீ ஆம்பளையான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. ஒரு சிக்ரெட், லிக்கர்ன்னு எதுவுமே உன் கிட்டே இல்லை. இப்போ இருக்கிற காலக் கட்டத்தில் இதெல்லாம் பண்ணாதவன் ஆம்பிள்ளையே இல்லை. காலத்துக்கு ஏற்றாற் போல் அப்டேட் ஆகத் தெரியாத நீயெல்லாம் பெரிய பிஸ்னஸ் மேன். எனக்கு சிரிப்புத்தான் வருது. நீ தான் கஸ்மர் மீட்லேயும் கருப்பு காப்பி கொடுக்கிறவன் தானே?” வேண்டுமென்றே அவனை மட்டம் தட்ட வேண்டி பேசினாள் அவள்.
“ஓ! உங்க டிக்ஷ்னரியில் சிக்ரெட், தண்ணி, பொண்ணுன்னு இருக்கிறவன் தான் ஆம்பிள்ளை அப்படித்தானே?” எனக் கேட்டவன், மெல்லிய சிரிப்பினூடே,
“அப்படின்னா இதையெல்லாம் பண்ணி, நான் ஆம்பிள்ளை தான்னு உன் கிட்ட நிரூபிச்சுக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லவே இல்லை. நான் ஆம்பிள்ளைன்னு என் மனைவிக்குத் தெரிஞ்சால் போதும். உடம்பால் நான் ஆம்பிள்ளைன்னு காட்டிக்கிறவன் ஆம்பிள்ளை இல்லை. மனசால் அவன் ஆண்மையோட இருக்கணும். உன்னை மாதிரி, உன் அண்ணனை மாதிரி சிற்றின்பங்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறவன் நான் இல்லை. என்னை யாராலும் அடிமைப் படுத்தவும் முடியாது. என்னை மனசால் ஜெய்ச்சவளால் மட்டும் தான் என்னை அடிமைப் படுத்த முடியும். சத்தியமாய் அது நீயில்லை. என் மனசில் உனக்கு இடமும் இல்லை.!” எனச் சொன்னவனின் மனதிற்குள் கண்சிமிட்டி சிரித்தாள் அவனின் கேண்டி க்ரஷ்.
ஆதன் சொன்னதில் கோபமும் ஆத்திரமும் சூழ, கறுத்துப் போன முகத்துடன், வெளியேறிய நிஷா, தன் கைப்பேசியில் இத்தனை நேரமாய் இணைப்பிலிருந்து இவர்கள் இருவர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்த சம்யூவிடம் பேசத் துவங்கினாள்.
“இங்கே பாரு சம்யூ! உன் அண்ணன் பேசுறதையெல்லாம் கேட்டே தானே? இனிமே உனக்கும் ஆகாஷுக்கும் கல்யாணம் நடக்கவே நடக்காது. இந்தக் கல்யாணம் நடக்கணும்னா நான் சொன்னபடி நீ செஞ்சால் மட்டும் தான் நடக்கும். என்ன செய்றியா?” என அவள் கேட்க, அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, இங்கே நிஷாவின் இதழ்களில் மர்மப் புன்னகை நெளிந்தது.
இசைக்கும்..!
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சம்யூ லூசு.
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் மா 💜