
இதயம்-5
“வாஹினி! இன்னும் என்ன செய்றே? நேரமாகுது பார்!” மாடியை நோக்கி குரல் கொடுத்தான் ஷியாம்.
“ஒன்லி டூ மினிட்ஸ் டா!” குரல் மட்டும் கேட்டது.
“இதோட பத்து டூ மினிட்ஸ் சொல்லிட்டே! ரெண்டு மணி நேரம் ஆகுது. இன்னுமும் இறங்கி வரும் வழியைக் காணோம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற அந்த அப்பாவி ஜீவன் பாவம்.!”
“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவ தான் பாவம் டா ஷியாம்! கிளம்பி வரட்டுமேன்னு பொறுமையாய் வெய்ட் பண்ணத் தெரியாத புருஷன் கிடக்கிறது எவ்வளவு பெரிய சாபம் தெரியுமா?” வலது புறமாய் வகிடெடுத்து, தலை முடியை, ஏதோ சிகைக்காய் விளம்பர மாடல் போல் விரித்து விட்டபடியே படிகளில் இறங்கி வந்தாள் சிம்மவாஹினி.
“அது என்னைக் கட்டிக்கப் போற பொண்ணோட கவலை! நீ கவலைப் படணும்னு அவசியமில்லை!”
“அதே தான் டா! உனக்கும்! அது என்னைக் கட்டி மேய்க்கப் போறவனோட கவலை.!” என்றவள், டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த சாவித்ரியிடம்,
“ஆன்ட்டி! முதலில் உங்கப் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வழியைப் பாருங்க! இம்சை தாங்க முடியலை!” எனச் சொன்னாள்.
“உன் ஃப்ரெண்ட்டுக்கு நீயே பொண்ணு பாரு!” சாவித்ரி சட்டென சொல்லிவிட, திருதிருத்தபடி அமைதியாய் நின்றாள் வாஹினி.
“பேசுங்க மேடம்! நீங்க எனக்கு பொண்ணு பாருங்க. நான் உங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கட்டுமா?”
“ஏய்! ஷியாம், விளையாடாதே டா! என்னால் தனியா இந்த வாழ்க்கையில் சர்வைவ் பண்ண முடியும். யாரையும் நம்பி நான் இல்லை. அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிட்டால் தான் நீயும் பண்ணிப்பேன்னு சொல்றதெல்லாம் சுத்த முட்டாள் தனம்.!”
“உன்னால் சர்வைவ் பண்ண முடியும் போது, என்னாலும் சர்வைவ் பண்ண முடியும் வாஹினி. என்ன தான் நீ என்னைச் சமாதானப் படுத்த முயற்சி பண்ணினாலும், உன் கல்யாணம் நடக்காமல், நான் கல்யாணம் பண்ண மாட்டேன். இது உறுதி! இந்தப் பேச்சை இதோட விட்டுட்டு கிளம்புறியா நேரமாச்சு!” பட்டுக் கத்தரித்தாற் போல் பேசினான் ஷியாம்.
“ஏன்டா இப்படி? நான் அப்படி உனக்கு என்ன செஞ்சேன்.? என் மேல் இவ்வளவு பாசம் வைக்கிறதுக்கு, நான் உனக்கு ஒட்டா? உறவா?”
“தேவையில்லாமல் எதையும் பேசாதே வாஹினி! முதலில் கிளம்பு! ஆதன் சார் நமக்காக வெய்ட் பண்ணுவார்.!”
“ஆதன் சாரா? அங்கே எதுக்கு? நான் வரலை நீ மட்டும் போ!”
“இங்கே பாரு வாஹினி! சும்மா சின்னக் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாதே! உன்னோட பாதுகாப்போட விளையாட நான் தயாராய் இல்லை. நீ பாரதி கண்ட புதுமை பெண்ணாய் இருக்கலாம். ஆனால் இப்போ இருக்கிற உலகில் பொண்ணை ஒவ்வொருத்தரும் பார்க்கிற பார்வை மாறுபடத்தான் செய்யுது. இனிமே நான் ரிஸ்க் எடுக்க தயாராய் இல்லை. நீ முதலில் கிளம்பு!”
“ஆன்ட்டி! நீங்களாச்சும் சொல்லுங்களேன். நீங்க சொன்னால் ஷியாம் கேட்பான் ப்ளீஸ் ஆன்ட்டி! எனக்கும் ஷியாமிற்கும் இடையில் அந்த ஆதன் வர்ரது எனக்குப் பிடிக்கலை. எங்க ஃப்ரெண்ட்ஷிப் பார்த்து கண்ணு வைக்கிறான். கொள்ளிக்கண்ணு பையன்.!” கெஞ்சலில் துவக்கி கோபத்தில் முடித்தாள் வாஹினி.
“அதெல்லாம் நான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். நீ முதலில் வா!” கைப்பிடித்து இழுத்துப் போனான் ஷியாம்.
“கையை விடுடா! நான் ஒண்ணும் குழந்தை இல்லை. எனக்கே நடக்கத் தெரியும். என்னைக் குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணாதேன்னு எத்தனை தடவை சொல்றது. இப்போ என்ன நான் உன் கூட, அந்த வளர்ந்துக் கெட்டவனைப் பார்க்க வரணும் அவ்வளவு தானே? நான் வர்ரேன். ஆனால் அதுக்கு முன்னால், முதலில் போலீஸ் ஸ்டேஷன் போகணும். நீ வண்டியை எடு!” என்றபடியே பின்னால் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
“போலீஸ் ஸ்டேஷனுக்கு எதுக்கு வாஹினி?”
“நீ சொல்றதை நான் கேட்டேன் தானே? அப்போ நான் சொல்றதை நீ கேளு! முதலில் போலீஸ் ஸ்டேஷன் போ!” என அவள் சொல்ல, தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்த நிலையிலேயே பின்னால் திரும்பி வாஹினியை முறைத்தான் ஷியாம்.
“என்னை ஏன்டா இப்படி திரும்பி முறைக்கிறே? கழுத்து சுளுக்கிக்கப் போகுது வண்டியைக் கிளப்பு!” எனச் சொல்லி அவசரப் படுத்தினாள்.
“இப்போ ஆதன் சாரை மீட் பண்ணாமல் லேட் பண்ணணும். அதுக்குத்தானே இதெல்லாம் பண்ணுறே? நீ பண்ணுறது கொஞ்சமும் சரியில்லை வாஹினி! நாம முன்னேறணும்னு நீ யோசிக்கவே மாட்டியா.? ஏன் இப்படி செய்றே?” எனக் கேட்டபடியே கோபத்தோடு வாகனத்தை செலுத்தினான் ஷியாம்.
“சும்மா கோபப் படாதே டா! நம்ம பிஸ்னஸ் நல்ல படியா நடக்கும். நீ எதுவும் கவலைப் படத் தேவையில்லை.!” புன்னகையுடன் சொன்னவள், அவன் தோளில் கை வைத்து அழுத்தினாள். அவள் கரம் தந்த அழுத்தம், உண்மையான நட்பின் ஆழத்தைப் பறைசாற்றியதோடு, அவள் எதையோ இலை மறை காயாய் சொல்கிறாள் என்பதையும் அவனுக்கு உணர்த்தியது.
******-****
“யாருங்க நீங்க? என்ன வேணும்?”
“முக்கியமான விஷயமாய் இன்ஸ்பெக்டரைப் பார்க்கணும்.!”
“என்ன கேஸ்? என்ன விஷயம்ன்னு சொன்னால் தான் மேடம், நாங்க, இன்ஸ்பெக்டர் கிட்டே அனுப்ப முடியும்.!”
“ஈ.சி.ஆர் ரோட்டில் இருக்கிற ட்வின் லோட்டஸ் அப்பார்ட்மெண்ட்ஸில் தங்கியிருக்கிறவங்க மேலே கம்ப்ளைண்ட் கொடுக்கணும்.!”
“யார் மேலே? அவங்க பேர் என்ன கம்ப்ளைண்ட்?”
“ஃப்ளாட் நம்பர், த்ரீ ட்வென்ட்டியில் இருக்கிற ராஜேஷ் மேலே தான் கம்ப்ளைண்ட் கொடுக்கணும். கம்ப்ளைண்ட்கான ரீசன் வுமன் ஹாரஸ்மெண்ட்.!” என அவள் சொல்லவும்,
“வாஹினி! என்ன பண்ணுறே? இதெல்லாம் தேவையில்லாத வேலை. கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன்னு வம்பை விலைக்கு வாங்காதே!” என காதுக்குள் கிசுகிசுத்தான் ஷியாம்.
“எப்படிடா நீயும் இப்படி சொல்றே? தனியா டெலிவரி பண்ண வந்தப் பொண்ணுன்னு கூடப் பார்க்காமல், நடுரோட்டில் நாய் மாதிரி துரத்துனான்ங்க! அந்தப் பொறுக்கி நாய்களைச் சும்மா விடச் சொல்றியா? நான் ஒருவேளை அவங்க கையில் மாட்டியிருந்தால்..? நான் அவன்களைச் சும்மா விடப் போறதில்லை ஷியாம்.!” தீர்க்கமான பார்வையுடன் சொன்னாள் சிம்மவாஹினி.
“ஹாரஸ்மெண்ட்டா? அப்போ நீங்க போய் இன்ஸ்பெக்டரைப் பாருங்க மேடம்!” எனச் சொல்லிவிட்டு, அவள் செல்ல வேண்டிய அறையை நோக்கி, கை நீட்டி, வழிகாட்டியவர்,
“ரொம்பப் பெரிய இடம் போலத் தெரியுதுய்யா! சார் கேஸை எடுக்கிறது சந்தேகம் தான்.!” என அந்தக் கடை நிலைக் காவலர், பக்கத்தில் உள்ளவரிடம் சொன்னது இவள் செவிகளில் விழத்தான் செய்தது.
“வாஹினி! நான் சொல்றதைக் கேளு! இதெல்லாம் வேண்டாம். பெரிய இடம் அது இதுன்னு பேசறாங்க! வா நாம வீட்டுக்குப் போகலாம்.!”
“நான் வர மாட்டேன் ஷியாம்! கம்ப்ளைண்ட் கொடுக்காமல் நான் எங்கேயும் வர மாட்டேன். என் கூட இருக்க விருப்பம் இருந்தால், இங்கே இரு. இல்லைன்னா நீ தாரளமாய் கிளம்பலாம். நான் தனியா பார்த்துப்பேன்.!” என அவள் சொன்ன தோரணையில், கொஞ்சம் அசந்து தான் போனான் ஷியாம்.
“சரி, ஓகே! கம்ப்ளைண்ட் உன் பேரில் வேண்டாம் வாஹினி! என் பேரில் கொடுப்போம்!” என தன் தோழியின் பாதுகாப்பைக் கருதி, தானே புகாரளிக்க முன் வந்தான்.
“என்னடா! என்னை பயந்தாங்கொள்ளின்னு சொல்லாமல் சொல்றியா? என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்! பொண்ணுங்க தைரியமாய் கம்ப்ளைண்ட் கொடுக்க முன் வராததால் தானே, இப்படிப்பட்ட புறம்போக்குகள் எல்லாம் பயமில்லாமல் சுதந்திரமாய் திரியறாங்க! என் பேரிலேயே கம்ப்ளைண்ட் கொடுப்போம் வா!” என நிமிர்ந்த நடையோடு தோழனை அழைத்துப் போனாள் சிம்மவாஹினி.
அந்த மேஜையின் முன் நின்றிருந்த வாஹினியையும், ஷியாமையும் நிமிர்ந்து பார்த்தார் வயதான காவல் ஆய்வாளர். பதவிக் காலத்தின் இறுதியில் இருப்பதை, அவரின் நரைமுடியும், நெற்றிச் சுருக்கமும் சொன்னது.
பற்றாக்குறைக்கு அவரின் பார்வை இருவரின் முகத்தையும் ஆழமாய் துளைத்தது அந்தப் பார்வையிலும் முதிர்ச்சி தெரிந்தது. ஆனால் பேச்சில் தான் அந்த முதிர்ச்சி துளியும் இல்லை.
“என்னம்மா! என்ன கம்ப்ளைண்ட்? எவனாச்சும் கற்பழிச்சுட்டானா? இல்லை இந்தா பக்கத்தில் செவ செவன்னு நிக்கிறானே இவனைக் கூட்டிட்டு ஓடி வந்துட்டியா?”
“சார்! வயசுக்கு ஏத்த மாதிரி கண்ணியமா பேசுங்க சார். நாங்க ஃப்ரெண்ட்ஸ்!” அவசரமாய் சொன்னான் ஷியாம்.
“இந்த ஸ்டேஷன் வாசலை மிதிக்கிறதில் பாதிப்பேர் இதைத்தான் சொல்றாங்க! நீ இந்தப் பொண்ணுக்கு என்னவா வேணும்னா இருந்துட்டு போ! அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. இப்போ எதுக்கு இங்கே வந்தே அதை முதலில் சொல்லு.!”
“ஸார்! என் பேர் சிம்மவாஹினி! நானும் என் ஃப்ரெண்ட் ஷியாமும் சேர்ந்து ஒரு கேக் ஷாப் வச்சிருக்கோம். நேத்து ராத்திரி நான் கேக் டெலிவர் பண்ணுறதுக்காக, ஈ.சி. ஆர்- ல் இருக்கும் ட்வின் லோட்டஸ் அப்பார்ட்மெண்ட்டுக்குப் போயிருந்தேன். அங்கிருந்த சில பேர் என்கிட்டே தப்பா நடத்துக்க முயற்சி பண்ணினாங்க! அது விஷயமாகத்தான் உங்கக் கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணணும்.! கம்ப்ளைண்ட் எடுத்துப்பீங்களா? மாட்டீங்களா?” கொஞ்சம் கோபம் தெறிக்கும் குரலிலேயே சொன்னாள் வாஹினி.
“என்னம்மா! என் ஸ்டேஷனிலேயே வந்து என்னையே மிரட்டுறியா? இது ஒண்ணும் உன் அப்பன் வீடில்லை. உன் இஷ்டத்துக்கெல்லாம் கம்ப்ளைண்ட் எடுக்க முடியாது. முதலில் போம்மா வெளியே!”
“என்ன ஸார்! இப்படி மிரட்டுறீங்க? நீங்க மட்டும் கம்ப்ளைண்ட் எடுக்கலைன்னா, நான் ஐ.ஜி வரை போவேன். உங்க பேரில் முதலமைச்சர் சிறப்பு பிரிவில் புகார் பண்ணுவேன்..!”
“ஓ! தாராளமாய் போய் பண்ணும்மா! நீ என்ன தான் பண்ணினாலும், உன்னால் என்னை அசைக்கவே முடியாது. சிம்மவாஹினின்னு பேர் வச்சால், உனக்கென்ன அந்த சிங்கத்தில் உட்கார்ந்திருக்கிற பத்திரகாளின்னு நினைப்பா? நீ யார்கிட்டே வேணும்னாலும் கம்ப்ளைண்ட் பண்ணிகோ. ஒழுங்கான பொம்பளையா அடங்கி வீட்டில் உட்காருவது கிடையாது. ராத்திரி நேரத்தில் டெலிவரி மண்ணாங்கட்டின்னு போய்ட்டு, என்னை இவன் கெடுத்துட்டான், அவன் கெடுத்துட்டான்னு வந்து நிக்க வேண்டியது. கேட்டால் பெண் சுதந்திரம், ஃபெமினிஸம்ன்னு கண்டதையும் சொல்றது.!” சலிப்பாய் பேசியபடியே சிக்ரெட்டைப் பற்ற வைத்து, வாயில் வைத்தார் அவர்.
“என்ன சார்! இப்படி பேசறீங்க.? உங்கப் பொண்ணு வயசு தானே, இந்தப் பொண்ணுக்கும் இருக்கும். உங்கப் பொண்ணை மனசில் வச்சு யோசிச்சுப் பாருங்க சார்.!” கொஞ்சம் பணிவாய் பேசி, அவரைத் தணிய வைக்க முயன்றான் ஷியாம்.
“யோவ்! என்ன செண்டிமெண்டா பேசி, என்னை ஏமாத்தலாம்ன்னு பார்க்கிறியா? எனக்கு பொண்ணே கிடையாது. பையன் மட்டும் தான்.!”
“சார்! ப்ளிஸ்!” ஷியாம் மீண்டும் கெஞ்ச,
“எம்மா! பொண்ணு, அந்த அப்பார்ட்மெண்ட் பேரு என்ன சொன்னே?” என வாஹினியை நோக்கிக் குரல் கொடுத்தார் அந்தக் காவலர்.
“ட்வின் லோட்டஸ் அவின்யூ. ஃப்ளாட் நம்பர் த்ரீ ட்வென்ட்டி, சி ப்ளாக்” வேண்டா வெறுப்பாய் பதில் தந்தாள் வாஹினி.
“ஏம்மா! உனக்கு அறிவில்லை. அந்த அப்பார்ட்மெண்ட்டில் இருக்கறவங்க எல்லாரும், பெரிய இடத்துப் பசங்க! அவங்க மேல் கம்ப்ளைண்ட் கொடுத்து என் வேலைக்கு உலை வைக்கப் பார்க்கிறியா? ரிட்டயர் ஆக வேண்டிய நேரத்தில் இதெல்லாம் என்னால் பண்ண முடியாதும்மா! நீ முதலில் இடத்தைக் காலி பண்ணு.!”
“நிஜமா கம்ப்ளைண்ட் எடுக்க மாட்டீங்களா? கம்ப்ளைண்ட் வாங்காமல் தட்டிக் கழிக்கிறது சட்டபடி குற்றம்ன்னு தெரியும் தானே?”
“என்னம்மா மிரட்டுறியா? பொண்ணுன்னு இவ்வளவு நேரமாய் மரியாதையாய் பேசிட்டு இருக்கேன். நீயே வலிய வந்து என் வாயைப் புடுங்காதே! வேணும்னா அங்கே நடந்ததுக்கான சரியான ஆதாரமோ, சாட்சியோ கொண்டு வா. அப்பறம் பார்ப்போம். இப்போ முதலில் இங்கிருந்துக் கிளம்பு.!” அவர் அலட்சியமாய் பேசியது இவளுக்குள் எரிச்சலைக் கிளப்பியது.
“இதுக்கு நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க சார்!” எனச் சொன்னவள் விறுவிறுவென வெளியேறி இருந்தாள்.
“வாஹினி! ஏன் இவ்வளவு கோபப்படுறே? வேண்டாம் விடு பார்த்துக்கலாம்.!” என்றபடியே பின்னால் ஓடி வந்தான் ஷியாம்.
“கோபம் வராமல் எப்படிடா இருக்கும்? ஒரு பொண்ணோட பாதுகாப்பை விட, அந்தாளுக்கு அந்தப் பதவி தான் முக்கியமா? நான் இதை இப்படியே விட மாட்டேன். இவங்க எல்லாரும் மக்களுக்காக தானே வேலை செய்றாங்க? என்னவோ வானத்தில் இருந்து குதிச்சு வந்த மாதிரி நினைப்பு. நான் என்ன பண்ணுறேன்னு மட்டும் பாரு..” எனச் சொன்னவளின் முகத்தில் சொன்னதை செய்து முடித்துவிடும் தீர்க்கம் தெரிந்தது.
“இங்கே பாரு வாஹினி! இதெல்லாம் வேண்டாம் வா! நாம எந்த உயர் அதிகாரிக்கிட்டே போனாலும், நமக்கு இதே பதில் தான் கிடைக்கும். இதை இப்படியே விட்டுடு ப்ளீஸ் எனக்காக!” பொறுமையாய் சொன்னான் ஷியாம்.
“நாம எந்த உயரதிகாரி கிட்டேயும் போகப் போறதில்லை டா! நாம மக்கள் கிட்டே போகப் போறோம்.!” எனச் சொன்னவளின் இதழ்களில் மர்மப்
புன்னகை நெளிந்தது.
********
ஆதன் ரித்விக்கின் நளபாகம் அலுவலகம்!
“இங்கே பாரு வாஹினி! நீ அமைதியாய் இருந்தால் மட்டும் போதும். எல்லாத்தையும் நான் பேசிப்பேன்! இங்கிருந்து கிளம்பற வரை நீ எதுவுமே பேசக் கூடாது.!”
“முடியாது! நானும் ஒன் ஆஃப் தி பார்ட்னர் தானே? எனக்கும் பேசறதுக்கு ரைட்ஸ் இருக்கு!”
“இங்கே பாரு வாஹினி! நான் இதெல்லாம் பண்ணுறது எனக்காகவோ, நான் போட்ட பணத்துக்காகவோ இல்லை. இதையெல்லாம் விட, உன்னோட பாதுகாப்பு எனக்கு ரொம்பவே முக்கியம். அதுக்காக மட்டும் தான் நான் இங்கே நிக்கிறேன். உனக்கு புரியுதா?” அழுத்தமாய் அவன் கேட்டதும், புரிந்ததாய் தலையை ஆட்டினாள் வாஹினி.
“குட்! அப்போ அமைதியாய் இருக்கே!” எனச் சொல்லி உள்ளே அழைத்துப் போனான் ஷியாம்.
“ஹாய்! வெல்கம் சிமி! வெல்கம் ஷியாம்! நீங்க இங்கே வர மாட்டீங்கன்னு நினைச்சேனே? நீங்க முதலில் உட்காருங்க!” புன்னகையுடன் வரவேற்றவன், அமர்வதற்கான இருக்கையைக் காட்டினான் ஆதன் ரித்விக்.
‘என்னவோ, டூத் பேஸ்ட் விளம்பர மாடல் மாதிரி ஈஈஈன்னு பல்லைக் காட்டுறான் இடியட்!’ மனதில் நினைத்துக் கொண்டவள், அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“அப்பறம், என்ன சாப்பிடுறீங்க? டீ, காஃபி ஆர் கூல் ட்ரிங்கஸ்?” கேள்வியாய் முகம் பார்த்தான் ஆதன்.
‘ஹான்! ஹாட் ட்ரிங்க்ஸ். நல்ல காஸ்ட்லி சரக்கு கேட்டால் கொடுத்துடுவியா?’ என மனதில் நினைத்தபடியே அவனைப் பார்த்தவள், ஷியாம் பதில் சொல்லும் முன்பாகவே,
“நாங்க ஒண்ணும் விருந்து சாப்பிட வரலை!” எனப் பதில் தந்தாள்.
“அமைதியாய் இரு வாஹினி! வெளியவே சொல்லித்தானே கூட்டிட்டு வந்தேன். ஏன் இப்படி பண்ணுறே?”
“அப்போ நீ விருந்து சாப்பிடத்தான் வந்தியா டா?!” கிசுகிசுப்பாய் அவள் கேட்க, முறைப்பை பரிசாய் தந்தான் ஷியாம்.
“சரி! முறைக்காதேடா! நான் எதுவும் பேசலை போதுமா? நீயே அவன் கிட்டே பேசு.” எனச் சொன்னாள்.
இவர்களின் விளையாட்டை புன்னகையுடன் பார்த்திருந்த ஆதனோ,
“ஓகே! மிஸ்.சிம்மவாஹினி! நீங்க விருந்து சாப்பிட வரலை. ஆனால் காஃபி சாப்பிடலாம் ஒண்ணும் தப்பில்லை!” எனச் சொன்னான்.
“எனக்கு காஃபி பிடிக்காது. ஐ அம் எ டீ பெர்ஸன். அதுவும் ப்ளாக் டீ மட்டும் தான்.!” அவனை வெறுப்பேற்றவென வேண்டுமென்றெ அவள் சொல்ல,
“தேங்க்ஸ் சிமி! உங்களுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியப் படுத்தினதுக்கு!” எனச் சொன்னவன், அவள் சொன்னபடியே ப்ளாக் டீயை வரவழைத்துத் தர, இவள் முகம் கோபத்திற்குப் போனது.
“ஓகே மிஸ்டர்.ஷியாம்! இந்த டீலுக்கு உங்களுக்கு ஓகே தானே? எங்க ஆப் மூலமாக உங்களுக்கு கிடைக்கிற ஒவ்வொரு ஆடருக்கும், நீங்க எனக்கு கமிஷன் தர வேண்டியிருக்கும். அதே மாதிரி உங்க ப்ராடெக்டை நான் டென் பர்ஸன்டேஜ் விலை அதிகமாய் வைத்து தான் விற்பனை செய்வேன். நீங்க இருந்த இடத்திலேயே உங்க வேலையை நிம்மதியாய் பார்க்கலாம்.!”
‘எவ்வளவு பெரிய நியாயவாதி மாதிரி பேசறான் பார். என்னவோ இவன் சமூக சேவை செய்ற ரேஞ்சுக்கு பேசறான். இம்புட்டு பேசுறியே, உனக்கு இதில் இலாபமே இல்லையா? நல்லா ஏமாத்தப் பார்க்கிறான். இந்த லூசு ஷியாமும் மண்டையை ஆட்டுறான்.’ என மனதில் நினைத்தவள்,
“இதில் உங்களுக்கு லாபமே கிடைக்காத மாதிரி பேசறீங்களே, ஆதன்?.” எரிச்சல் வழிய அவள் கேட்க,
“அமைதியாய் இரு வாஹினி!” கரத்தினில் அழுத்தம் தந்து சொன்னான் ஷியாம்.
ஆனால், அதை துளியும் கண்டுக் கொள்ளாதவளோ,
“இங்கே பாருங்க ஆதன், எங்கப் பொருளை நீங்க மேன் பவர் வச்சு விற்பனை செய்து தர்ரேன்னு சொல்றீங்க, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனால், எங்களும், சில டெர்ம்ஸ் அன் கண்டிஷன்ஸ் இருக்கு.!”
“தயங்காமல் சொல்லுங்க சிமி! நோ ப்ராப்ளம். இந்த டீலில் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது. எல்லாமே முன்னமே தெளிவாய் பேசி விடுவது நல்லது தானே?”
“எங்க ப்ராடெக்டோட ரேட்டை நீங்க ஃபைவ் பர்ஸெண்ட்டுக்கு மேலே அதிகமாய் வைக்கக் கூடாது. அதே போல், எங்க ப்ராடெக்ட்டுக்காக வர்ர ஆடர் ஒவ்வொண்ணுக்கும் நீங்க தான் எங்களுக்கு பே பண்ணணும். ஏன்னா, எங்களை மாதிரி, சின்ன சின்ன, ஷாப்ஸ் அன் ஹோட்டல்ஸ் மட்டும் தான் நீங்க இவ்வளவு பெரிய உயரத்தில் இருபதற்கான முக்கியக் காரணம். ஸோ, நீங்க எங்களுக்கு பே பண்ணுறதில் தப்பில்லை.!” தெளிவாய், அவன் கண் பார்த்து அவள் சொன்ன தோரணை அவனுக்குப் பிடித்திருந்தது.
“கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் பேசறே வாஹினி! இதெல்லாம் சாத்தியமே இல்லை” என அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவனுக்கு, இருவரும் வீட்டிலிருந்து கிளம்பும் சமயம் அவள் தோள்களில் தந்த அழுத்தத்தின் அர்த்தம் புரிந்தது.
வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படக் கூடாது அதே நேரம் லாபமும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அவள் இவ்வாறு செய்கிறாள் என்பதும் அவனுக்குப் புரிந்தது. ஆனால் இது சாத்தியமா? என்பது அவனுக்குத் தெரியவில்லை.
“லூசு! லாஜிக்கெல்லாம் பார்த்தால் நாம சக்ஸஸ் ஆக முடியாது ஷியாம்.” எனச் சொன்னவள்,
“ஏன் ஆதன், நான் லாஜிக் இல்லாமல் பேசறேனா?” என அவனிடமே கேட்டாள்.
“நோ! நோ! சிமி, நீங்க உங்களோட எதிர்பார்ப்பைச் சொல்றீங்க! இதில் ஒண்ணும் தப்பில்லையே!” அவளை ரசனையாய் பார்த்தபடியே பதில் சொன்னான் ஆதன்.
“எதிர்பார்ப்பு மட்டுமில்லை ஆதன். இதுக்கு நீங்க ஓகே சொன்னால் மட்டும் தான், இந்த டீலுக்கு நாங்க ஓகே சொல்ல முடியும்.!” தெளிவாய் அதே நேரம் நிமிர்வாய் பேசினாள் வாஹினி.
“உங்களுடன் டை-அப் மட்டும் கிடைச்சால் போதும். நீங்க ட்வென்ட்டி பர்ஸன்டேஜ் கூட எங்க ப்ராடெக்ட்டுக்கு ரேட் ஏத்திக்கோங்க!” எனச் சொல்பவர்கள் மத்தியில், தனது வாடிக்கையாளர்கள் பெரிதாய் பாதிக்கப்படக் கூடதென நினைத்து அவள் பேசியது அவனுக்குப் பிடித்திருந்தது.
“ஓகே! சிமி, நீங்க சொன்ன டீலுக்கு எனக்கு டபுள் ஓகே! உங்களுக்கும் ஓகேன்னா நாம அக்ரிமெண்ட் சைன் பண்ணிக்கலாம்.!” சாதாரணமாய் அவன் சொல்லிவிட, விசுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் வாஹினி.
சட்டென்று அவன் சரியெனச் சொல்வான் என அவள் நினைத்திருக்கவில்லை. விழியுயர்த்தி, அவள் அவனைப் பார்க்க, நொடி நேரம், இருவரின் பார்வையும் தீண்டி விலகியது. அவன் கண்களை நேராய் அவள் பார்த்த அந்த நொடியில், மின்சாரம் பாய்ந்த உணர்வு அவளுள்.
“உன் எண்ணமெல்லாம் நானறிவேன் கண்மணியே!” என்பது போல் அவன் பார்வை இவளைத் துளைத்தது.
அதற்குள், ஏதோ யோசித்தவள், புன்னகையுடன் நேராய் அவனை நோக்கினாள்.
“அடுத்தது என்ன?” என்பது போல் பதில் பார்வை பார்த்தான் ஆதன் ரித்விக்.
“இதைத் தவிர எனக்கு இன்னொரு டீலும் இருக்கு. அதுக்கும் நீங்க ஓகே சொன்னால், தாராளமாய் இப்போவே அக்ரிமெண்ட் சைன் பண்ணிக்கலாம்.!”
“இன்னும் வேற என்ன டீல் வாஹினி?” கேள்வியாய் பார்த்தான் ஷியாம். அவன் மனதிற்குள் ‘அடுத்து என்ன செய்யப் போகிறாளோ? ஏடாகூடமாய் எதையாவது கேட்டுவிட்டு விடுவாளோ?’ என்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டேயிருந்தது.
“நீ சும்மா இரு ஷியாம். அவர் பதில் சொல்லட்டும்!” எனச் சொன்னவள், நேராய் ஆதனைப் பார்த்து அந்த விஷயத்தைச் சொல்ல,
“ஏய்! வாஹினி! என்ன சொல்றே?” என்றபடி ஷியாம் அதிர்ச்சியாய் அவளைப் பார்க்க,
‘இந்தச் சிறு பெண்ணுக்குள் இத்தனை புத்திசாலிதனமா? இவள் சிறு பெண்ணல்ல, தன் காரியத்தை சாதிக்கத் தெரிந்தவள். இவள் சாதாரண பெண்ணும் அல்ல. பெயருக்கேற்றாற் போல், சிம்மவாஹினியே தான்!’ என அவளைப் பிரம்மிப்புடன் பார்த்திருந்தான் ஆதன் ரித்விக்.
துளியளவே இருக்கும் விதையிலிருந்து பெரும் விருட்சம் வெளி வருவதைப் போல், அவன் மனமென்னும் மண்ணில் விதையென விழுந்து விருட்சமாய் வேரூன்றத் துவங்கியிருந்தாள் சிம்மவாஹினி அதுவும் அவன் அறியாமலே..!
அவன் அறியாமலே அவன் நெஞ்சம் துளைத்து அவள் குடியேறிவிட்டதை ஆதன் உணரும் நாள் எந்நாளோ?
இசைக்கும்..
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வாஹினி ஷியாம் நட்பு அழகு. ஆதன் சிமி மேல் காதல் பித்து ஆரம்பம்.
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா 💜