
இதயம்-4
அந்தக் கடைசி டெலிவரியை முடித்துவிட்டு, அங்கிருந்த மது மற்றும் போதை வஸ்துக்களின் வாடையையும், அங்கிருந்த ஆண்களின் பார்வையையும் சகித்துக் கொள்ள முடியாமல், ஏதோ தன்னைத் துரத்துவது போல் அவசரமாய் வெளியேறி, வேகமாய் வாகனத்தைச் செலுத்தியிருந்தாள். அதே நேரம், வாகனத்தில் டயர் எதிலோ குத்தி பழுதாகி இருக்க, குறுக்கே வந்து நின்ற சொகுசுக் காரின் கண் கூசும் வெளிச்சத்தில் கடினப்பட்டு கீழே விழாமல் சுதாரித்து வாகனத்தை நிறுத்தியவளுக்கு, அப்போது தான் வழி மாறி வந்திருப்பதே புரிந்தது.
“ச்சே! எப்படி வழி மாறி வந்தேன்? கண்ணுக்கு எட்டின வரை மெய்ன் ரோடு தெரியவே இல்லையே? கொஞ்சம் பொறுமையாய் வந்திருக்கலாம்.!”
“ம்ப்ச்! இப்போ என்ன பண்ணுறது? ஷியாமுக்கு கால் பண்ணி தான் வரச் சொல்லணுமோ?”
“வருவானா தெரியலையே? வண்டியும் சரியான நேரத்தில் காலை வாரிடுச்சு. எந்த பரதேசி ரோட்டில் ஆணியைப் போட்டு வச்சதுன்னு தெரியலையே?”
“இருட்டுக்குள்ளே எவ்வளவு நேரம் நிற்க முடியும்? வேணாம்! வேணாம்! இங்கே நிற்கிறது ரொம்ப ரிஸ்க். ஷியாமைக் கூப்பிடுறது தான் பெட்டர்.!” என தனக்குத் தானே பேசிக் கொண்டவள், அலைபேசியை எடுத்து ஷியாமிற்கு அழைப்பு விடுத்துக் காத்திருந்தாள்.
அதே நேரம், தன்னை நெருங்கி வரும் சில காலடிகளின் ஓசை அவள் செவிதனைத் தீண்டியது. அப்போது தான், தன் விழிகளை மெல்ல உயர்த்தி எதிரே பார்த்தாள். சற்று முன் தன் கண்ணில் ஒளிவெள்ளம் பாய்ச்சிய அந்த சொகுசு கார் எதிரே நிற்பதும், அதிலிருந்து இறங்கிய நால்வர், இவளை நோக்கி வருவதும் புரிந்தது.
முதலில் உதவிக் கேட்கலாம் என்றெண்ணி, வாயைத் திறந்தவள், அவர்களின் கையில் பாதி காலியான மது புட்டிகள் இருப்பதையும், தான் சற்று முன் டெலிவரி செய்த வீட்டிலிருந்த ஆண்கள் இவர்கள் என்பதையும் அறிந்துக் கொண்டிருந்த மாத்திரத்தில், ஷியாமுடன் இணைப்புக் கிடைத்ததையும் பொருட்படுத்தாது அவள் கரம் வாகனத்தில் எதையோ தேட ஆரம்பித்தது.
“ஹலோ! வாஹினி! எங்கே இருக்கே?!” ஷியாம் கேட்டதையும் கவனத்தில் கொள்ளாது, அவள் கரங்கள் இருட்டுக்குள் துளாவிக் கொண்டிருக்க, விழிகள் எதிரில் வருபவர்களையே பதற்றத்துடன் பார்த்திருந்தது. அவர்கள் தன்னைத் தொட்டுவிடும் தூரத்தில் நெருங்கியதும், அவளின் கால்கள் வேகமெடுத்து ஓடத் துவங்கியிருக்க, கையிலிருந்த அலைபேசி நழுவி சாலையில் விழுந்து பின்னால் துரத்தி வருபவர்களின் ஷு கால்களில் நொறுங்கியிருந்தது.
இவளுக்கோ நிற்க நேரமில்லை. நான்கு பேர் துரத்தும் நிலையில் ஒருத்தியாக சமாளிப்பதும் அவ்வளவு எளிதில்லை.
“யோசி! வாஹினி யோசி!”
“தனியா சமாளிச்சுடுவியா?”
“இல்லை நாலு பேரை சமாளிக்கிறது கஷ்டம்!”
“தனித் தனியாய் வந்தால் சமாளிச்சுடலாம். மொத்தமா வந்தால் கஷ்டம். போதாக் குறைக்கு நாலு பேரும் மூக்கு முட்டக் குடிச்சிருக்கானுங்க. உன்னால் முடியும் வாஹினி!”
“எனக்கு டைம் வேணும்! நான் யோசிக்கணும்!” தனக்கு தானே கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லிக் கொண்டவள், ஓடிக்கொண்டே யோசித்தாள்.
வெகுதூரம் ஓடியதில், கால்கள் வலிக்க, உடலும் ரொம்பவே தளர்ந்து போயிருந்தது. ஆனாலும், நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தாள். பின்னால் துரத்துபவர்களின் காலடிச் சத்தம், வெகு அருகில் கேட்டதும், இவளுக்குள் பயம் துளிர் விட்டது. கண்களுக்குள் இருள் பரவ, ஏதேதோ காட்சிகள் மங்கலாய் மனக் கண்ணில் தோன்றி மறைந்தது.
“ஏய்! பிடி! விட்டுடாதே!”
“வலிய வந்து மாட்டியிருக்கா எப்படி விடுவோம்!”
“மிட் நைட் டெலிவரி அதுவும் ஒரு பொண்ணு இவளுக்கு எவ்வளவு தைரியம் பார்த்தியா மச்சி?”
“இவ்வளவு அழகா இருந்துட்டு வெளியே வர்ரது எவ்வளவு பெரிய தப்பு?”
“ஏய் நில்லுடி! எங்களை மீறி, நீ இந்தக் காட்டுக்குள்ளே எங்கேயும் தப்பிச்சு ஓட முடியாது.”
“வேகமா போய் அவளைப் பிடிங்க டா!” என்றக் குரல்களும் சேர்ந்தே அவளைத் துரத்த,
‘இதோ பக்கத்தில் வந்து விட்டார்கள். அவ்வளவு தான் முடிந்து விட்டது. அவர்கள் கையில் சிக்கிக் கொள்ளப் போகிறேன்.!’ என மனதில் நினைத்தவளின் கண்களுக்குள் இருள் படர்ந்து அவள் கீழே விழப் போகும் தருணம்,
“நீ தோல்வியை ஒத்துக்கிறியா வாஹினி. உன்னால் முடியும் வாஹினி. உனக்கு நீயே ஆயுதம் தான். உன்னோட பல்லும் நகமும் கூட ஆயுதங்கள் தான். பெண்கள் எப்போவும் பயந்து ஓடக் கூடாது. அவங்களை ஓட விடணும். உன்னால் முடியும் வாஹினி. ஓடாதே! நில்லு. அவங்களை எதிர்த்து நில்லு. உன்னால் முடியும் நீ உன்னை நம்பு.!” என்ற குரல் அவள் மனதிற்குள் கேட்ட மாத்திரத்தில், ஓடிக் கொண்டிருந்தவள் சட்டென நின்று, எதிரில் வந்தவர்களைத் திரும்பி நோக்கினாள்.
எதிரில் நிற்பவர்களை எரித்துக் கொண்டிருந்த அவளின் பார்வையில் கனல் தெறித்தது.
“என்ன மச்சி, பொண்ணு திரும்பி நின்னு முறைக்குது!”
“முறைச்சா முறைச்சிட்டுப் போகட்டும். நாம வந்த வேலையைப் பார்ப்போம் வாங்க டா!” அவர்கள் முன்னேற, அசையாமல் அதே இடத்தில் அப்படியே சிலை போல் நின்றாள் சிம்மவாஹினி.
“என்னடா இவ்வளவு நேரமும் பி.டி உஷாக்கு அக்கா மாதிரி ஓடின பொண்ணு இப்படி அசையாமல் நிக்கிது?”
“அசையாமல் கத்தாமல் இருந்தால் நமக்கு வசதி தானே? அந்தப் புதர் பக்கமா இழுத்துட்டு வாங்க டா!” என ஒருவன் சொல்ல, அவள் மீது கை வைக்கப் போன இன்னொருவனோ, ஆ..ஆ..ஆ..! என்ற அலறலுடன் கீழே விழுந்திருந்தான்.
கீழே விழுந்தவனைப் புரியாமல் பார்த்தபடியே, இன்னொருவன் அவளை இழுக்க கையை உயர்த்த, தான் கற்ற தற்காப்பு கலையின் உதவுயிடன், எக்ஸ் வடிவில் மார்பின் குறுக்கே கையைக் கொண்டு லாவகமாக தன்னைத் தொட வந்தவனின் கையைத் தடுத்தவள், அவன் சுதாரிக்கும் முன்னதாகவே, அவன் வயிற்றில் ஓங்கி உதைத்திருந்தாள்.
“அம்மா..ஆஆ..!” என்ற அலறலுடன் அவனும் கீழே விழுந்திருக்க, அடுத்து நின்ற இருவரும் ஒரே நேரத்தில் இவளை நோக்கி வர, கொஞ்சமும் சளைக்காது, நிமிர்ந்த பார்வையுடன் நின்றவள்,
“என்னடி திமிரா! ரெண்டு பேரை அடிச்சுட்டா நீ பெரிய இவளா? உன்னை என்ன பண்ணுறோம் பாரு! உருத் தெரியாமல் அழியப் போறே பாரு!” என திமிராய் பேசியபடியே இருவரும் நெருங்கி வர, புன்னகையுடன் அவர்களைப் பார்த்தவள், தன் வாகனத்திலிருந்து, இருட்டில் துளாவி எடுத்து, இத்தனை நேரமாய் மறைத்து வைத்திருந்த, பெப்பர் ஸ்ப்ரேயை விருட்டென எடுத்தவள், அவர்கள் எதிர்பாரா நேரத்தில் அவர்கள் மீது தெளித்திருந்தாள்.
“ஏய் என்னடி பண்ணுறே?” கண்ணைக் கசக்கியபடி, அவர்கள் அலறிக் கொண்டிருக்க, அதே நேரம், இதற்கு முன் கீழே விழுந்த இருவரும், வேகமாய் எழுந்து இவளை நோக்கி தடுமாறியபடியே வர, கீழே கிடந்தக் கற்களை அவர்களை நோக்கி எறிய ஆரம்பித்திருந்தாள்.
நிறுத்தாமல் கற்களை அவள் வீசிக் கொண்டே இருக்க, கோபமும், ஆத்திரமும் ஒருசேர அவள் வீசிய வேகத்தில், நெற்றியிலும், முகத்திலும் பட்டு இரத்தம் வழியத் துவங்கியது.
“பொண்ணுன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா டா? பரதேசி நாய்ங்களா! உங்களை மாதிரி பொறுக்கிகளால் தான் சின்னக் குழந்தைகள் கூட, நடமாட முடியலை. நீங்களெல்லாம் உயிரோட இருந்து என்னத்தை சாதிக்கப் போறீங்க? செத்து ஒழிங்கடா!” ஏதோ பத்திரகாளியைப் போல், மூச்சு வாங்க அவள் நின்றிருந்த தோற்றமும், அவள் கற்களை வீசியெறியும் வேகமும் கிலியைக் கிளப்ப, தட்டுத் தடுமாறியபடி எழுந்து நின்றவர்கள் வேகமாக ஓடத் துவங்கவும், பின்னால் துரத்திக் கொண்டே கற்களை எறிந்தபடி இவள் ஓடவும், அவர்களின் குறுக்கே கார் ஒன்று வந்து தரையை உரசியபடி நிற்கவும் சரியாக இருந்தது.
“ஐயோ! காப்பாத்துங்க சார்!”
“ஹெல்ப்! ஹெல்ப்!”
“இந்தப் பிசாசுகிட்டே இருந்து காப்பாத்துங்க சார்! என எதிரில் வந்து நின்ற காரின் கண்ணாடியை அவர்கள் தட்டவும்,
“யார்கிட்டே இருந்து காப்பாத்தணும்?” என்றபடியே கீழே இறங்கிய ஆதன் ரித்விக், அங்கே நின்றிருந்த சிம்மவாஹினியை அதிர்ச்சியாய் பார்த்திருக்க, அதே நேரம் அவள் எறிந்தக் கல்லொன்று அவன் நெற்றியையும் பதம் பார்த்துச் சென்றது.
“ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ..!” என நெற்றியைப் பிடித்தபடி அவன் நின்றிருக்க, அதற்குள் அந்த நால்வரும் இருளில் சென்று மறைந்திருந்தனர்.
“யோவ்! லூசு! குறுக்கே வந்து நின்னுக்கிட்டு, அவன்களைப் போய் பிடிய்யா!”
“இப்போ என்னத்துக்கு என் மூஞ்சியைப் பார்த்துட்டே நிக்கறே!”
“ச்சே! சரியான பைத்தியம்!” எனச் சொன்னபடியே, அவன் கையிலிருந்த அலைபேசியைப் பறித்தவள், போலீசுக்கு அழைத்திருந்தாள்.
ஆதனோ அவளையே பிரம்மிப்பாய் பார்த்தபடி நின்றிருந்தான்.
“இப்படி நெத்தியைப் பிடிச்சுக்கிட்டே பொம்மை மாதிரி நிக்கப் போறியா? ஃபர்ஸ்ட் எய்ட் கிட் காரில் இருக்கா?” அதட்டலுடனே அவள் கேட்க, சம்மதமாய் அவன் தலை அசைந்தது.
“வாயைத் திறந்துப் பேசவே மாட்டியா? தள்ளி நில்லு!” என அவனை தள்ளி நிற்கச் சொன்னவள், டாஷ்போர்டிலிருந்து முதலுதவிப் பொருட்களை எடுத்து, அவன் காயத்தைத் துடைத்து மருந்திட்டு, பிளாஸ்டரையும் ஒட்டினாள்.
ஒட்டுமொத்த சூழ்நிலையையும் இருள் ஆக்கிரமித்திருந்தக் காரணத்தால், தான் அருகே நிற்பவன் ஆதன் எனத் தெரியாமல் அவள் இத்தனையையும் செய்துக் கொண்டிருக்க, தன்னவளின் அருகாமையில், அவளின் மென்மையானத் தீண்டலில் ஒட்டுமொத்தமாய் தொலைந்துக் கொண்டிருந்தான் ஆதன் ரித்விக்.
“ம்ப்ச்! நீ மட்டும் குறுக்கே வராமல் இருந்திருந்தால், அவன்களைப் பிடிச்சிருப்பேன். நீ குறுக்கே வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டே! யாருய்யா நீ?” எரிச்சலுடன் அவள் வினவ,
“நான் ஆதன் ரித்விக்!” என அவன் பதில் தந்த மாத்திரத்தில், விழி மலர்த்தி அண்ணாந்து பார்த்தாள் வாஹினி.
“நீ.. நீங்க.. நீ எதுக்கு இங்கே வந்தே?” அவனை எவ்வாறு விளிப்பதெனப் புரியாமல் தடுமாறினாள் அவள்.
“பரவாயில்லை நீ என்னை ஒருமையில் கூப்பிடலாம்.” எனச் சொன்னவன்,
“என்ன கேட்டே? நீ எதுக்கு இங்கே வந்தேன்னு தானே கேட்டே? இந்த சென்னை மாநகரம் உனக்கு மட்டும் இல்லைம்மா எனக்கும் சொந்தம் தான்.!” என பதிலும் தந்தான்.
“ரொம்ப அறிவாளியாய் பேசறதா நினைப்பா? உன்னால் தான் அந்த ஃப்ராடு பசங்க தப்பிச்சுப் போய்ட்டாங்க. போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்து அவன்களை வச்சுக்கிறேன்.” பற்களை நறநறத்தாள்.
“நீ ஏன் இந்த அர்த்த ராத்திரியில் இங்கே வந்தே? இந்த மாதிரி ஏரியாவிற்கெல்லாம் டெலிவரி பண்ணலைன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போய்டாது. இங்கெல்லாம் உன்னை யார் வரச் சொன்னது?” கோபமும் அக்கறையும் கலந்தே அவன் குரலில் தெரிந்தது.
“நான் எங்கே வந்தால் உனக்கென்ன? இதை சாக்காய் வச்சு என் கிட்டே டை-அப் கேட்கலாம்ன்னு நினைக்கிறியா? அதெல்லாம் நடக்காது. ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிச்சால் நான் உன்னை நம்பிடுவேனா?” எனச் சொன்னதைப் பார்த்ததும் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“மிஸ்.சிம்மவாஹினி! அதையெல்லாம் விடுங்க! இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நிற்பதாய் உத்தேசம்?”
“போலீஸ் ஸ்டேஷனில் இங்கேயே தான் நிற்கச் சொன்னாங்க! உனக்கு நேரமாச்சுன்னா நீ போ! நான் பார்த்துப்பேன்!” தைரியமாய் சொன்னவளை, இமை கூடச் சிமிட்டாது பார்த்தவன்,
“இந்தப் பக்கமெல்லாம் போலீஸ் வரமாட்டாங்க. இங்கே எல்லாமே லக்ஸுரியஸ் அப்பாட்மெண்ட்ஸ் அன் வில்லாஸ் தான். நிறைய பேர் ஹையர் அஃபிஷியல்ஸோட பசங்களா இருப்பாங்க. ஸோ, தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சாலும் வர மாட்டாங்க!”
“இர்ரிடேட்டிங் இடியட்ஸ். இப்படி ஃபேவரிஸம் காட்டுறவங்க எதுக்கு போலீஸ் வேலைக்கு வர்ராங்க? சம்பளம் மட்டும் வாங்கிப்பாங்க. ஆனால் வேலையை மட்டும் செய்ய மாட்டாங்க!” என எரிச்சலுடன் சொன்னவள், வேகமாக நடக்கத் துவங்கியிருந்தாள்.
“ஹேய்! சிமி! நில்லு எங்கே போறே? மறுபடியும் தனியாய் போய் எதிலாவது மாட்டிக்காதே! நான் ட்ராப் பண்ணுறேன்!” என அவன் சொல்லவும், ஷியாம் இருசக்கர வாகனத்தில் வந்திறங்கவும் சரியாக இருந்தது.
“ஷியாம்!” ஓடிப் போய் அணைத்துக் கொண்டவள்,
“எல்லாம் உன்னால் தான்டா! நான் எதாவது கோபத்தில் பேசினால், நீ அப்படியே போயிருவியா டா? எல்லாம் உன்னால் தான்டா எருமை மாடு.” உரிமையாய் அவனிடம் கோபம் கொண்டு அவனை அடிக்கத் துவங்கியிருந்தாள்.
“வாஹினி! ரிலாக்ஸ்! ஒண்ணுமில்லை! நான் தான் வந்துட்டேனே? இனிமே எங்கேயும் போக மாட்டேன். நான் இல்லாதப்போ டெலிவரி போகாதேன்னு உனக்கு சொல்லியிருக்கேன் தானே? நீ என் வந்தே?” சிறு குழந்தையைப் போல் சமாதானப் படுத்தியவன், கேள்வியும் கேட்டான்.
“அப்போ நீ வந்திருக்க வேண்டியது தானே டா? பெரிய இவன் மாதிரி பேசறே?”
“ஓகே! ஓகே! ஐ அம் ரியலி ஸாரி! என்ன நடந்துச்சு வாஹினி?”
“ஒண்ணும் இல்லை டா! நானே எல்லாத்தையும் சமாளிச்சுட்டேன். வா! கிளம்பலாம்!” எதுவுமே நடவாதது போல் ஷியாமை அழைத்தாள் அவள். அப்போது ஷியாமின் பார்வை, எதிரே கை கட்டி நின்றபடி, கண்களில் துளி பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதனின் மீது விழுந்தது.
“இவர் யாரு வாஹினி!”
“இவன் தான் அந்த நளபாகம் சி.இ.ஓ” சலிப்பாய் சொன்னாள் அவள்.
“அவர் காதில் விழப் போகுது வாஹினி! கொஞ்சம் மரியாதையாய் பேசு!” கிசுகிசுப்பாய் சொன்னவன் ஆதனை நோக்கிப் போனான்.
“ஹாய் சார்! வெர்ரி க்ளாட் டூ மீட் யூ! ஐ அம் ஷியாம்!”
“நைஸ் டூ மீட் யூ ஷியாம். நீங்க தான் கேண்டி க்ரஷோட பார்ட்னர். அம் ஐ ரைட்?” கேள்வியை விழிகளில் தேக்கிப் பார்த்தான் ஆதன்.
“எஸ் ஸார்! யூ ஆர் ரைட்!” எனச் சொன்னவன், தள்ளி நின்றிருந்த வாஹினியை ஒருமுறை பார்த்துக் கொண்டான். பின் ஆதனிடம் திரும்பி,
“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா இங்கே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா? வாஹினி கண்டிப்பா சொல்ல மாட்டாள். அவளோட ஸேஃப்டி எனக்கு ரொம்பவும் முக்கியம்.” எனக் கேட்டான் ஷியாம்.
“ஐ டோன்ட் நோ ஷியாம்! நான் இந்தப் பக்கமா காரில் வரும் போது, நாலு பேர் இவங்களுக்கு பயந்து ஓடி வந்தாங்க! அது மட்டும் தான் எனக்கு தெரியும். இவங்க கல்லால் அடிச்சு என் நெற்றியையும் பதம் பார்த்துட்டாங்க!” எனச் சிரித்தவன்,
“நீங்களும் சிம்மவாஹினியும் லவ்வர்ஸா? இத்தனை நேரமாய் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்ததைக் கேட்டே விட்டான்.
“நாங்க லவ்வர்ஸ் கிடையாது அதுக்கும் மேலே..!” என ஷியாம் சொன்னதும் ஆதவின் இதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது.
‘ஒருவேளை கல்யாணம் பண்ணிக்கப் போறவங்களோ?’ என நினைத்து அவன் மனம் தவிக்கத் துவங்க,
“நாங்க ப்ரெண்ட்ஸ் ஆதன் சார். வாஹினிக்கு எல்லாமே நானும் என் அம்மாவும் தான்.” பேச்சில் துளி கர்வத்துடனே சொன்னான் ஷியாம்.
“உங்க ஃப்ரெண்ட்ஷிப் பார்த்து எனக்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே பொறாமையாய் இருக்கு. ஓகே ஷியாம் வில் மீட் ஆஃப்டர் சம் டைம்.!” எனச் சொல்லிவிட்டு, கை குலுக்கி ஆதன் விடைபெற,
“உங்களை சசந்தித்ததில் ரொம்ப சந்தோஷம் ஆதன். அன் வாஹினிக்காக நான் ஸாரி கேட்டுக்கிறேன். ஐ அம் ரியலி ஸாரி. அவ வேணும்ன்னு பண்ணியிருக்க மாட்டாள்!” என ஷியாமும் ஆதனுடன் கை குலுக்கியபடியே பேசினான்.
“ஐ நோ! ஷியாம். சொல்லப் போனால் ஐ அம் இம்ப்ரஸ்ட் வித் யுவர் ஃப்ரெண்ட்ஸ் ஆட்டிட்யூட். ஐ திங்க் நாம இனி அடிக்கடி மீட் பண்ணுவோம்ன்னு நினைக்கிறேன். அடுத்த முறையாவது இப்படி ரோட்ல மீட் பண்ணாமல் இருக்கணும். பை மிஸ்டர்.ஷியாம். பை சிமி!” என சிரித்தபடியே ஆதன் விடை பெற, இங்கே அவனை முறைத்துக் கொண்டு நின்றாள் அவனின் சிமி. அவனோ தன்னவளின் முறைப்பைக் கண்களால் சிறைப் பிடித்து தன் இதயக் கூட்டிற்குள் பத்திரமாய் பதுக்கியபடியே விடைபெற்றான்.
**********
“உனக்கு என்னடா அவன் கூட அவ்வளவு நேரம் பேச்சு வேண்டி கிடக்கு? எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் பேசறே?”
“அமைதியாய் வண்டியில் ஏறி உட்காரு வாஹினி!” அவன் குரலில் தெரிந்த அழுத்தம் அவன் கோபமாய் இருக்கிறான் என்பதைப் பறைசாற்றியது.
“ஷியாம் கோபமாய் இருக்கியாடா!”
“இல்லை குளுகுளுன்னு இருக்கேன்.!”
“இப்போ எதுக்கு கோபம்? அதுதான் எனக்கு ஒண்ணும் ஆகலையே? நான் நல்லா தானே இருக்கேன்?”
“ஒருவேளை எதாவது ஆகியிருந்தால்… என்னால் கற்பனைக் கூட பண்ணி பார்க்க முடியலை வாஹினி. நீ என்னவோ அசால்ட்டாய், ஒண்ணும் ஆகலைன்னு சொல்றே? நாலு பேர் உன்னைத் துரத்தியிருக்காங்க, நீ அவங்களை அடிச்சு விரட்டியிருக்கே, உனக்கு மட்டும் எதாவது ஆகியிருந்தால்..? என் மெஸேஜ் படிக்காமல் அவாய்ட் பண்ணிட்டு, டெலிவரி பண்ணுறதுக்காக வந்துட்ட தானே?”
“ஹேய்! டோன்ட் ட்ரீட் லைக் அ கிட் டா. என்னைக் குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணாதே ப்ளீஸ்! என்னால் தனியா சர்வைவ் பண்ண முடியும் டா! நீ என்னைப்பற்றி ரொம்பவும் கவலைப் படாதே! நான் என்னைப் பார்த்துப்பேன்.” இருசக்கர வாகனம் சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்க, ஷியாமின் தோளில் நாடி பதித்தபடி பேசிக் கொண்டிருந்தாள் வாஹினி.
“உன் ஸ்கூட்டியில் ஜி.பி.எஸ் ஃபிக்ஸ் பண்ணினது நல்லதாய் போச்சு. இல்லைன்னா சரியான லொக்கேஷனுக்கு உன்னைத் தேடி வந்திருக்க முடியாது!”
“இது எப்போ பண்ணின டா? அதுவும் எனக்குத் தெரியாமல்? என்னடா என்னை வேவு பார்க்கிறியா?”
“ஏய்! லூசு, உன்னை நம்பாமல் இல்லை. உன்னோட பாதுகாப்புக்காக மட்டும் தான். என்னை சந்தேகப் படறியா வாஹினி!”
“சந்தேகம் எல்லாம் இல்லைடா! நீ பண்ணுறதையெல்லாம் பார்க்கும் போது, நான் என்னவோ எல்.கே.ஜி படிக்கிற ஸ்கூல் பொண்ணு மாதிரி தோணுது.”
“இப்போவும் அதே ஸ்கூல் பொண்ணோட புத்தியோட தான் இருக்கே! கொஞ்சமும் மெச்சூர்டா பிஹேவ் பண்ணுவோம்ன்னு இல்லை. ராத்திரி டெலிவர் பண்ண நீ போகாதேன்னு சொன்னால் கேட்க மாட்டேங்குறே! இங்கே வந்து பிரச்சனையில் மாட்டிக்கிட்டே! போதாக்குறைக்கு ஆதனையும் கல்லை விட்டு அடிச்சுருக்கே! அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?”
“என்ன ரொம்ப கவலைப் படுறியோ? அந்த ஆதன் சாரு தான் குறுக்கே வந்தார். நான் ஒண்ணும் வேணும்ன்னு அடிக்கலை.!”
“சரி வாஹினி! நீ வேணும்னு அடிக்கலை. பட், ஒரு வார்த்தைக்காகவாவது ஸாரி கேட்டுருக்கலாமே..!”
“ஏய்! என்ன விளையாடுறியா? நான் எதுக்கு அவன் கிட்டே ஸாரி கேட்கணும்? நான் கல்லெறியும் போது குறுக்கே வந்தது அவன் தப்பு. அவனால் தான் அந்த நாலு பேரும் தப்பிச்சுப் போய்ட்டாங்க! நீ முதலில் வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு. நான் கம்ப்ளைண்ட் பண்ணணும்.!”
“நடு ராத்திரியில் போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் நின்னால், நல்லா இருக்காது வாஹினி, எதுவா இருந்தாலும் மார்னிங் பார்த்துக்கலாம்.”என அவன் சொல்ல,
“இடியட்ஸ்! ஃபுட் டெலிவர் பண்ண வந்த பொண்ணுக்கிட்டே எப்படி நடந்துக்கணும்னு தெரியாது. அத்தனை பேரும் எமகண்டத்தில் பிறந்த எருமை மாடுகள். ஒரு பொண்ணை எப்போவுமே கவர்ச்சிப் பதுமையாய், உடல் தேவையைப் பூர்த்தி செய்ற ஜடமாகத் தான் பார்க்கிறாங்க. ச்சே!” எனப் புலம்பியவளின், புலம்பலைக் கேட்ட ஷியாமிற்கு வேதனையாகத்தான் இருந்தது.
“சும்மா புலம்பிட்டே இருக்காதே வாஹினி.! இந்த உலகம் இப்படித்தான்னு தெரிஞ்சு போச்சு. முதலில் யாரையும் குறை சொல்லாமல், நாம ஸேஃபா இருக்கணும். இனிமே உன்னை அசால்ட்டாய் விட முடியாது. இனி நான் சொல்றதைத் தான் நீ கேட்கணும்.!”
“ஏய்! அதெல்லாம் முடியாது போடா! நான் நானாகத் தான் இருப்பேன். நீ சொல்றதையெல்லாம் நான் கேட்கவே மாட்டேன்.” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஷியாமின் வீடு வந்திருந்தது.
“போதும்! நான் சொன்னால் நீ கேட்க மாட்டே! எதுவா இருந்தாலும் அம்மா கிட்டே பேசிக்கோ!” எனச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் நடந்தான் ஷியாம்.
வீட்டின் கூடத்தில், பாதி உறக்கத்தோடு, நாளிதழைப் புரட்டியபடியே அமர்ந்திருந்தார் ஷியாமின் அன்னை சாவித்ரி.
“ஆன்ட்டி! நீங்க ஏன் இன்னும் முழிச்சிருக்கீங்க? இந்த தடிமாடு தான் என்னைக் கூட்டிட்டு வருவானே? அப்பறம் ஏன் நீங்க கண் முழிச்சு உடம்பைக் கெடுத்துக்கிறீங்க?” அவள் குரலில் நிஜமான அக்கறை தெரிந்தது.
“வாஹினி! உனக்கு ஒண்ணும் இல்லையே டா! இந்தப் பாழாய் போன நைட் டெலிவரி ஐடியாவெல்லாம் நமக்கு வேணாம்னு சொன்னால் கேட்குறீங்களா? எல்லாம் இவனைச் சொல்லணும். நீ சொல்றதுக்கெல்லாம் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறான்.!”
“ஆன்ட்டி! மிட் நைட் டெலிவரியால் தான் எல்லாம் சக்ஸஸ் ஆச்சு. நம்ம கடை நாலு பேருக்கு தெரிஞ்சது.”
“எல்லாம் சரி தான் வாஹினி! ஆனால் நடைமுறைன்னு ஒண்ணு இருக்கே! எல்லாரும் பகலில் வேலை செஞ்சுட்டு ராத்திரி தூங்கறாங்க! நீங்க ராத்திரி வேலை செஞ்சிட்டு பகலில் தூங்குறீங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு? இதோ, இன்னைக்கு பாரு, உன்னைக் காணோம்ன்னு, நானும் அவனும் தவிச்ச தவிப்பு எங்களுக்கு தான் தெரியும்.!” ஆற்றாமையோடு பேசினார் சாவித்ரி.
“அதைத்தான் நானும் சொல்றேன். இவ தான் கேட்கவே மாட்டேங்குறா! நல்ல ஆஃபர் ஒண்ணு வந்திருக்கும்மா! டெலிவரி பண்ண வெளியே போக வேண்டிய தேவையே இல்லை. எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க! லாபமும் நம்ம கைக்கு வரும். பிஸ்னஸூம் பெருசாகும்.”
“அப்பறம் என்ன அதுக்கு ஓகே சொல்ல வேண்டியது தானே?” என்றபடியே, டைனிங் டேபிளில் உணவைப் பரிமாறியவர்,
“முதலில் ரெண்டு பேரும் சாப்பிடுங்க!” எனச் சொன்னார்.
“ஆன்ட்டி! எனக்கென்னவோ அந்த டீல் பிடிக்கலை. ஷியாம் தான் கேட்கவே மாட்டேங்குறான்.!” சப்பாத்தியை வாயில் அடைத்தபடியே சொன்னாள் அவள்.
“இங்கே பாருங்க! நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை மாத்தி ஒருத்தர், குறை சொல்லிக்காமல், நம்ம கடைக்கு எது நல்லதுன்னு பார்த்துப் பண்ணுங்க! என்னைக் கேட்டால், நீங்க அந்த டீலுக்கு ஓகே சொல்றது நல்லதுன்னு தோணுது!” எனச் சொல்லிவிட்டு சாவித்ரி உள்ளே சென்றுவிட,
“டேய்! ஆன்டியைக் காக்கா பிடிச்சுட்டியா? நீ என்ன தான் பண்ணினாலும் நான் இதுக்கு ஓகே சொல்லவே மாட்டேன் ஷியாம்!” உறுதியாய் சொன்னாள் அவள்.
“இங்கே பாரு வாஹினி! உனக்கு இப்படி நடந்ததுக்கான காரணம் நான் தான். நான் வந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது. ஸோ, நீ என்ன சொன்னாலும் நான் கன்வீன்ஸ் ஆக மாட்டேன். காலையிலேயே நாம ஆதன் சாரை மீட் பண்ணப் போறோம். ரெடியாய் இரு!” எனச் சொன்னவன், உண்டு முடித்து கை கழுவி எழுந்து சென்று விட்டான்.
“டேய்! ஆதன் எங்கே இருந்துடா வந்தே? என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டேங்குறே! நாளைக்கு நான் உன்னை வேறே பார்க்க வரணுமா? உன் மூஞ்சியைப் பார்க்கவே பிடிக்கலை. இந்த ஷியாம் வேற சொல்றதைக் கேட்க மாட்டேங்குறான். இதற்கு எதாவது ஐடியா பண்ணி ஆட்டையைக் கலைச்சு விடணுமே..! என்ன பண்ணலாம்..?” என யோசனையாய் அமர்ந்திருந்தாள் சிம்மவாஹினி.
இசைக்கும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சிம்மவாஹினி வாவ்