Loading

இதயம்-17

தன் முன்னே விதிர்விதிர்த்துப் போய், வியர்வையில் குளித்தபடி நின்றிருந்த தந்தையை இதழில் வழிந்த ஏளனப் புன்னகையுடன் பார்த்தான் ஆதன். ஆனாலும் சட்டென முகத்தை மாற்றிக் கொண்டவர்,

“நான் உன் அப்பாடா, நான் இப்படி பண்ணுவேனா ஆது? நீ சின்னப் புள்ளையாய் இருக்கும் போது உனக்கு என்ன புரிஞ்சிருக்கப் போகுது? ஏதோ புரியாமல் பேசிட்டு இருக்கே ஆது!” நல்லவரைப் போல் பேசினார் சதாசிவம்.

“இப்போ எதுக்கு இந்த நல்லவர் வேஷம்? உங்க சாயம் வெளுத்து நாளாகிடுச்சு! இப்போவும் நீங்க என்மேல் இருக்கிற அக்கறையிலோ, பாசத்தாலேயோ இங்கே வரலைன்னு எனக்குத் தெரியும். எங்க கல்யாணத்தை நான் பகிரங்கமா நியூஸ் பேப்பரில் அறிவிச்சதை உங்களால் பொறுத்துக்க முடியலை. அதனால் தானே இங்கே வந்தீங்க? ரிஜிஸ்டர் மேரேஜ் தானே நடந்தது, யாருக்கும் தெரியாது. இந்தக் கல்யாணத்தை ஒண்ணுமில்லாமல் பண்ணிட்டு, நிஷாவைக் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்ங்கிறது தானே உங்க திட்டம்?” அவர் மனதில் இருந்த திட்டங்களை வார்த்தைகளால் இவன் சொல்ல, நொடிக்கும் குறைவாய் அதிர்ந்தவர்,

“ஆது! ஏன் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறே? அப்பா உன் நல்லதுக்காக மட்டும் தானே சொல்றேன். புரிஞ்சுக்கோடா.! நமக்குன்னு தகுதி, தராதரமெல்லாம் இருக்குடா!”

“நீங்க எனக்கு எந்த நல்லதும் பண்ண வேணாம்! எனக்கு நானே நல்லது பண்ணிப்பேன்! உங்களோட தகுதி தராதரமெல்லாம் எனக்குத் தெரியும்.! உங்க தகுதியைப் பத்தி நான் சொல்லட்டுமா? கட்டின பொண்டாட்டியைக் கொன்ன கொலைகாரர். இந்த தகுதியை விட என் தகுதி எந்த விதத்திலும் குறைஞ்சு போய்டல. சொந்த பந்தம் யாரும் இல்லாவிட்டாலும், சொந்தக் காலில் நிக்கணும்ன்னு நினைக்கிற என் சிமியை விட எனக்கு பொருத்தமானவள் வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. என் வாழ்க்கையைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். முதலில் இங்கிருந்து கிளம்புங்க!” அவரின் பேச்சுகளை துளி கூட லட்சியம் செய்யாது அலட்சியப் படுத்தியவன், தன் கைவளைவிற்குள் தன்னவளை இணைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.

தன்னை தன் தகப்பனின் முன்னால் கூட, விட்டுக் கொடுக்காமல் பேசிய அவனது செயலில் வியந்து அண்ணாந்து அவனைப் பார்த்தபடியே அவனுடன் சென்றாள் சிம்மவாஹினி.

“சம்யூ! நான் பண்ணினதெல்லாம் உனக்காக தானே டா? நீ தானே அந்த ஆகாஷைப் பிடிக்குதுன்னு சொன்னே?” மகன் நகரவும் மகளின் மனதைக் கரைக்க முயன்றார் அவர்.

“சொன்னேன்! நான் இல்லைன்னு சொல்லவே இல்லைப்பா! ஆனால், நம்ம வீட்டுக்குக் கூட்டி வந்து அவனை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சது யாருப்பா? அவனோட உண்மை முகம் தெரிஞ்சும், கேவலம் பணத்திற்காகவும் பதவிக்காகவும்.. பெத்தப் பொண்ணையே.. எனக்கு சொல்லவே கூசுது. ஆது மட்டும் இல்லைன்னா, இன்னைக்கு அந்த ஆகாஷோட பொண்டாட்டியா, அவன் இன்னொரு பொண்ணு கூடப் போறதை வேடிக்கைப் பார்த்துட்டு உயிரோட செத்துட்டு உட்கார்ந்திருப்பேன்! இனியும் உங்களை நம்பி அந்த வீட்டுக்கு வர்ரதுக்கு நான் தயாராய் இல்லை.!” இத்தனை நாட்களாய் குழந்தைத் தனமாய் பேசும் சம்யூவின் பக்குவப்பட்டப் பேச்சில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார் சதாசிவம்.

“சம்யூ! அப்பா அப்படி நினைச்சு பண்ணலைடா! உன் நல்லதுக்காகத்தான் பண்ணினேன்! ஆம்பளைங்க அப்படித்தான்டா இருப்பாங்க! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டால், அந்த சாம்ராஜ்ஜியத்துக்கே நீ தான் ராணி!”

“அப்பா வேணாம்! என்னையும் பேச வைக்காதீங்க! என்னதான் அண்ணன், ஆகாஷ் கிட்டே எந்த ஆதாரமும் இல்லாமல் பண்ணியிருந்தாலும், அங்கே என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியுமே.. எனக்கு உள்ளே உறுத்துது. அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு அவனை நம்பி, அவன் கிட்டே என்னை நானே இழந்து, இவ்வளவு பட்ட பின்னும், செத்துப் போகாமல் உயிரோட இருக்கேன்னா அதுக்கு ஆது மட்டும் தான் காரணம். என்னைத் தைரியப்படுத்தினதும், திடமா நடமாட வச்சதும் அவன் தான். எனக்கு இந்தக் கல்யாணம் கருமாதி இதெல்லாம் வெறுத்துப் போச்சு. எனக்கு என்னோட நிம்மதி ரொம்பவே முக்கியம். உங்களுக்காக என் நிம்மதியை பலிகொடுக்க நான் தயாராய் இல்லை.! அம்மாவையாச்சும் நல்லா பார்த்துக்கோங்க! உங்க பதவி வெறியே உங்களை அழிச்சுடும் பார்த்துக்கோங்கப்பா!” சிறு தடுமாற்றமில்லாது சொல்லிவிட்டு தகப்பனைத் தாண்டி வீட்டுக்குள் சென்றவளின் முதுகை வெறித்துக் கொண்டிருந்தார் சாதாசிவம்.

தான் பெற்ற மகளையே தனக்கு எதிராய் திருப்பிய, ஆதனை நினைத்து உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது அவருக்கு.

‘என் பொண்ணு, என்ன சொன்னாலும் தலையாட்டும் என் பொண்ணையே எனக்கு எதிராய் திருப்பிட்டான். இனியும் நான் சும்மா இருந்தால் சரிவராது. மகனை விட, கட்சியும் பதவியும் எனக்கு ரொம்பவே முக்கியம்! அரசியலில் எத்தனை பேரை பார்த்திருப்பேன். இவன் என் கால் தூசிக்கு சமம்!’ என தனக்குத்தானே மனதிற்குள் பேசிக் கொண்டார் சதாசிவம்.
என்னதான் ஆதன் அவர் மூலமாக வந்தவனாய் இருந்தாலும், அவர் அவனைத் தூசியாய் நினைத்தாலும் கூட, சின்னஞ்சிறு தூசி தான், கண்ணை உறுத்தி பார்வையையே மறைக்கும் வல்லமை படைத்தது என்பதை அவர் மறந்து போனார்.

தோற்றத்தில் மிக நாகரீகமான மனிதர்களைத் தோலுரித்துப் பார்த்தால் தான் தெரியும் எத்தனை மோசமான பிறவிகளென்று.. அப்படிப்பட்ட மோசமான மனிதர் தான் சதாசிவம். புகழ் போதைக்கு அடிமையானவர். பணத்தால் எதையும் வாங்கிவிட முடியுமென்ற எண்ணம் கொண்டவர். ஆனால் பணத்தால் வாங்க முடியாத விசயங்கள் கூட உண்டு என்பதை அவர் இன்னுமும் அறிந்துக் கொள்ளவில்லை என்பது தான் நிஜம்.

அவர் இழந்த மகன் எனும் பந்தத்தை, மகள் இத்தனை நாளாய் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அவரால் வாங்கவே முடியாது.

********

தந்தையின் முன் இணக்கமாய் காட்டிக் கொண்டு, தன் தோள் வளைவிற்குள் அவளை அணைத்தபடி உள்ளே அழைத்து வந்தவன், உள்ளே வந்ததும், தன் பிடிலிருந்து அலட்சியமாய் அவளை உதறினான் .

அவனின் அலட்சியம் இவளுக்குள் கோபத்தை விதைத்தது. சற்று முன் தன் தந்தையிடம் விட்டுக் கொடுக்காதவன், சட்டென உதறித் தள்ளியதில், அவளின் அழகிய மை விழிகள் கோபத்தை மிச்சமில்லாது உச்சமாய் பிரதிபலிக்க, அவனை கண்களால் எரித்தபடி நின்றிருந்தாள் வாஹினி.

அதீத கோபத்தில் முகம் முழுதும் மாதுளை நிறத்திற்கு மாறிப் போனது. தன்னைக் கோபத்தோடு முறைத்துக் கொண்டு நிற்பவளைப் பார்த்ததும், பதிலுக்கு கோபம் வராமல் ரசனை வந்து போனது அவன் விழிகளில். கண்களுக்குள் வந்து போன ரசனையை மனதிற்குள்ளே பதுக்கியவன்,

“கோபம் வருதுல்ல சிமி? உனக்கு கோபம் வருது தானே? இப்படித்தான் எனக்கும் கோபம் வந்துச்சு. நீ லஸ்ட்ன்னு சொல்லி என் காதலை அலட்சியப் படுத்தினப்போ! எனக்கு வலிச்சா உனக்கும் வலிக்கும். நீ செஞ்சது உனக்கே திருப்பி வரும்.! ஒரு சின்ன அலட்சியம், சின்ன உதறல் உன்னை இவ்வளவு பாதிக்கும் போது, உன்னோட அந்த வார்த்தை, என்னை எவ்வளவு பாதிச்சிருக்கும்? அதுக்காக நான் ஒண்ணும் வில்லன் இல்லை! நீ அன்பைக் கொடு நானும் அதை ரெண்டு மடங்கா திருப்பித் தருவேன். அதுக்காக என்னை விட்டு பிரியணும்ன்னு நினைச்சால் உன்னை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதே! நீ பிரிஞ்சே போக முடியாத அளவிற்கு இறுக்கிப்பேன்.!” எனச் சொன்னவனின் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் அவனிடமிருந்து பிரிவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல என்பதைச் சொல்லாமல் சொன்னது.

“கட்டாயப்படுத்தி ஓர் உறவை நீட்டிக்க முடியாது ஆதன். நிச்சயம் இதில் தோல்வி தான் கிடைக்கும். என்னை இவ்வளவு கட்டாயப்படுத்தி உன் கூட ஏன் தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறே?”

“ஏன்னா நீ எனக்கு வேணும்! உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. இதைவிட வேற என்ன காரணம் உனக்கு வேணும்? உனக்கு நான் எந்த விதத்தில் குறைந்து போய்ட்டேன்? பணத்திலா? படிப்பிலா? வசதியிலா? எந்த விதத்தில் நான் உனக்கு குறைச்சல்? நமக்குப் பிடிச்சவங்க நம்ம கூடவே இருக்கணும்ன்னு நினைக்கிறது தப்பு இல்லையே! நானும் அதைத்தானே நினைக்கிறேன்.!” சர்வசாதாரணமாய் சொன்னான் ஆதன்.

“உனக்குப் பிடிச்சிருந்தால் மட்டும் போதுமா? எனக்குன்னு ஆசைகள் விருப்பங்கள், இருக்கு தானே? எனக்கு கல்யாணமே பிடிக்காது! பிடிக்காத ஒண்ணை என்னால் எப்படி ஏத்துக்க முடியும்? பிடிக்காத எதையும் வாழ்க்கை முழுசும் சுமந்துட்டு வாழ முடியாது ஆதன்!”

“அப்போ உனக்கு என்னதான் பிடிக்கும் சிமி? என்னை விட உனக்குப் பிடிச்சது எது?” தன்னை விட வேறொன்றும், அவளுக்குப் பிடித்துவிடக் கூடாதென்று அவன் நினைப்பது அவன் கேள்வி கேட்ட விதத்திலேயே தெரிந்தது.

“தனிமை! எனக்கு தனிமை மட்டும் தான் பிடிக்கும்! வாழ்க்கை முழுசும் நான் தனியாவே இருக்கணும்ன்னு நினைச்சேன். இப்போவும் இது மட்டும் தான் என் மனசில் இருக்கு. ஒரே அறையில் உன்னோட, ஒண்ணா வாழ முடியும்ன்னு எனக்குத் தோணலை!”

“சரி! நீ சொல்றபடியே இருக்கட்டும் சிமி! நான் கேட்கிறதுக்கு மட்டும் உண்மையாய் பதில் சொல்லு! ஆரம்பத்திலிருந்தே இந்த தனிமை உனக்கு பிடிச்சுடுச்சா?!” அவள் விழிகளுக்குள் ஊடுருவிக் கேட்டான் ஆதன்.

விழிகளோடு சேர்த்து தன் இதயத்தையும் சேர்த்தே ஊடுருவிய அவன் பார்வையில், பொய் சொல்வதற்காய் முயன்று திணறி, பின் ‘இல்லை’ என உண்மையைச் சொல்லியிருந்தாள் வாஹினி.

“அப்போ, ஆரம்பத்தில் இந்தத் தனிமை உனக்கு கஷ்டமாகத்தான் இருந்திருக்கு. நாளடைவில் அந்தக் கஷ்டம் உனக்கு பழகிடுச்சு. நீ எப்படி தனிமையை பழகிக்கிட்டியோ, அதே போல் இதையும் பழகிக்கலாமே வாஹினி! எனக்கு இந்தத் தனிமை வேணாம் சிமி! இத்தனை வருஷமாய் தனிமையைத் தவிர வேறு எதுவுமே எனக்கு துணையாய் இல்லை! எனக்கு நீ வேணும் சிமி! ஆயுசு முழுசும் என் துணையாய் நீ மட்டும் வேணும்! நல்லா யோசிச்சு பதில் சொல்லு!” அவளின் இரு கைகளையும் தன் கரத்தினில் பொதிந்து சிறு அழுத்தம் தந்து விலகினான் ஆதன் ரித்விக்.

அவள் கரத்தினில் அவன் தந்துவிட்டுப்போன அழுத்தம் ரகசியமாய் ஆயிரம் செய்திகளைப் பரிமாறியது. ஏதோவொரு அழுத்தம் அவள் மனதிற்குள். ஆரம்பத்தில் கோபமாய் துவங்கினாலும், கண் நிறைந்தக் காதலோடு கடைசியாய் அவன் சொன்ன வரிகள் ‘ஆயுசு முழுக்க என் துணையாய் நீ மட்டும் வேணும் சிமி!’ அவன் சொன்னது இவள் மனதைப் பிசைந்தது.

தொண்டைக் குழிக்குள் ஏதோ சிக்கித் தவிப்பது போன்ற உணர்வில் தத்தளித்தபடியே மாடியேறிச் செல்பவனை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் சிமி!

உயரே இருந்து உதிர்ந்து விழும் காய்ந்து போன இலைக்குக் கூட, கைப் பிடித்து தரையிறங்கக் காற்றின் துணை தேவைப்படும் போது, அவனுக்கும் வாழ்க்கைத் துணையாக அவள் தேவைப்படுவதும் நியாயம் தானே?
யோசனையாய் அவள் நின்றிருக்கும் போது, சம்யுக்தா வெளியே இருந்து உள்ளே வரவும், தன் மனதை மறைத்துக் கொண்டு சினேகமாய்ப் பார்த்துப் புன்னகைத்தாள் வாஹினி.

“வாஹினி! நான் அண்ணின்னு கூப்பிட்டு உங்களை அந்நியப்படுத்த விரும்பலை. அன்னைக்கு நீங்க மட்டும் இல்லாமலிருந்தால், இந்த நிமிஷம், இங்கே நின்னு பேசிட்டு இருந்திருப்பேனா தெரியலை. அப்படியொரு சம்பவம் என் வாழ்க்கையில் நடக்கிறவரை, நானும் ஆதுவுக்கு எதிராகத்தான் இருந்தேன். நீங்களும் சரி, ஆதுவும் சரி, எனக்கு நல்லது பண்ணிருக்கீங்க! இப்போ நான் நல்லா இருக்கேன்னா அதுக்கு நீங்க தான் காரணம். அந்த உரிமையில், உங்களுக்கு நல்லது நடக்கணும்ங்கிற ஆசையில் எதிர்பார்ப்பில் சொல்றேன், ஆதுவை விட்டுடாதீங்க ப்ளீஸ்..!” கண்களில் நீர் நிறைய கையெடுத்துக் கும்பிட்டாள் சம்யுக்தா.

“சம்யூ! என்ன பண்ணுறே? கையை இறக்கு!” பதறி அவள் கையை விலக்கி தன்னோடு சேர்த்துக் கொண்டாள் வாஹினி.

“இல்லை! ஆது, எனக்கு தெரிஞ்சவரை சந்தோஷமாவே இருந்ததில்லை! படிப்பு மொத்தமும் ஹாஸ்டலில் மட்டும் தான். இத்தனை நாள் தனியா இருந்தவன் துணையாய் உங்களை மட்டும் தான் கேட்டிருக்கான். அவன் நிறைய சாதிக்க நினைச்சிருக்கான். அதில் வாழ்க்கையில் உயர்ந்து நிக்கணும்ங்கிற வெறி மட்டும் தான் இருந்தது. ஆனால் உங்க பக்கத்தில் இருக்கும் போது, அவன் கண்ணில் உயிர்ப்பு இருக்கு. அவனை நிராகரிச்சு நடை பிணமாய் மாத்திடாதீங்க ப்ளீஸ்..!” சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் சம்யுக்தா.

கையிலிருந்த பயணப் பொதியை கீழே வைத்துவிட்டு, தொப்பென மெத்திருக்கையில் அமர்ந்தவளின் மனதிற்குள் குழப்ப மேகங்கள் முகாமிட்டிருந்தன. அவள் வரும்போது எதை முடிவு செய்துவிட்டு வந்தாளோ, அதற்கு முற்றிலும் தலைகீழான மனநிலையில் இருந்தாள் வாஹினி.

ஆதனும் சம்யுக்தாவும் பேசிவிட்டுப் போன பேச்சுகள், தெளிவான முடிவெடுக்க விடாமல், தடுமாற்றத்தை ஏற்படுத்த, குழப்பத்துடனே அமர்ந்திருந்தவளின் மனதிற்குள்,

‘வாழ்க்கை என்னோடது! முடிவும் என்னோடதாக மட்டும் தானே இருக்கணும்! இவங்க பேச்சைக் கேட்டு முடிவெடுக்க என்னால் முடியாது.!’ என மதிற்குள் தனக்குத்தானே மீண்டும் மீண்டும் சொல்லி, தான் எடுத்த முடிவை தனக்குத்தானே நினைவுபடுத்திக் கொண்டாள். ஆனால், அவள் மனதிற்குள் எடுத்த உறுதியையும் மீறி அவள் மன ஆழத்தில் கண் சிமிட்டி சிரித்தான் ஆதன் ரித்விக்.

******

“ஷட் அப்! சதாசிவம்! என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசில்? நீங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி, ரிஜிஸ்டர் ஆஃபிஸில் கல்யாணம் நடந்தாலும் பரவாயில்லைன்னு, உங்க தராதரம் பார்க்காமல் ஒத்துக்கிட்டேன் பாருங்க, என்னைச் சொல்லணும்! நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டீங்களே!” கோபத்தோடு அறை அதிரக் கத்திக் கொண்டிருந்தார் பரமேஷ்வர்.

“பரமேஷ்வர், கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்க! நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்.!”

“எதை சரி பண்ணுவீங்க? இன்னொருத்தி புருஷனான உங்கப் பையனை என் பொண்ணுக்கு கட்டி வைக்கப் போறீங்களா? அப்படி பேசுறதாய் இருந்தால் இப்போவே வெளியே போய்டுங்க!” என சமாதானப்படுத்த முயன்றார் சதாசிவம்.

“வேண்டாம்! இதைப் பற்றின பேச்சு இனி வேண்டாம்! பதிவுத் திருமணம் தானே நடந்திருக்கு. யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் தான் நடந்திருக்கு. கல்யாணம் நடந்ததுக்கான ஆதாரத்தை அழிச்சுட்டால், எல்லாம் பழையபடி மாறிடும். அந்தப் பொண்ணு தாலியைக் கழற்றிக் கொடுத்துட்டு போய்டுச்சுன்னு நீங்க சொன்னதை நம்பி இத்தனை நாள் வெய்ட் பண்ணினதும் என் தப்புத்தான்.இனிமே எதையும் நீங்க பார்க்க வேணாம்! எல்லாம் நான் பார்த்துப்பேன். நீங்க விட்டுடுங்க சதாசிவம்!”

“சார்! நீங்களே இப்படி பேசினால் எப்படி? தேர்தல் வர்ர நேரத்தில்..!” தயக்கமாய் இடை நிறுத்தினார் சதாசிவம்.

“ஒரு அரசியல்வாதியை, முக்கியமான பொறுப்பில் கொண்டு போய் உட்கார வைக்கிறது, என்னைப் போல தொழிலதிபர்களும் எங்கக் கிட்டே இருக்கிற அதிகாரமும் தான். உங்களை நான் பெரிய இடத்தில் உட்கார வைக்கணும்ன்னு நினைச்சேன் உங்கப் பையன் செஞ்ச வேலையால் அதுவும் போச்சு. இனி அரசியல் உங்களுக்கு கனவு மட்டும் தான்.!” துளி கோபத்தைக் கூட வெளியில் காட்டாது சாமர்த்தியமாய் பேசினார் பரமேஷ்வர்.

“சார்! அப்படியெல்லாம் பேசாதீங்க! என் பொண்ணு சம்யுக்தாவிற்கும் உங்கப் பையன் ஆகாஷிற்கும் நாளைக்கே கூட கல்யாணத்தை வச்சிக்கலாம்! நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க, எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். எனக்கு இந்தப் பதிவி, அதிகாரம் எல்லாமே ரொம்பவும் முக்கியம் பரமேஷ்வர். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாதீங்க!” பதவி போதை, அவரை இப்படியெல்லாம் பேச வைத்தது.

“அன்னைக்கு ரெஜிஸ்டர் ஆஃபிஸில் பார்க்க தானே செஞ்சே? உன் பொண்ணு என் பையனை என்ன பேச்செல்லாம் பேசினாள்? பார்த்துட்டு சும்மா தானே இருந்தே? உன் பொண்ணு என்ன என் பையனை வேணாம்ன்னு சொல்றது? என் பையன் உன் பொண்ணை வேணாம்ன்னு சொல்லிட்டான். நீ கிளம்பு, இதற்கு மேலும் உன்கிட்டே பேசற பொறுமை எனக்கில்லை.” ஒட்டுமொத்தமாய் சதாசிவத்தை விரட்டுவதிலேயே குறியாய் இருந்தார் பரமேஷ்வர்.

ஆனால் சதாசிவமோ, பதவி போதை தலைக்கேற என்னா வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவராய் இருந்தார். அந்த அளவிற்கு பதவி போதையின் மதமதப்பில் மூழ்கிப் போய் கிடந்தார் மனிதர். பரமேஷ்வர் இத்தனை தூரம் பேசிய பின்னும் கூட,

“நான் என்ன செஞ்சால் என்னை நம்புவீங்க பரமேஷ்வர்?” எனக் கேட்டார் சதாசிவம்.
இந்த வார்த்தைகளை அவர் உச்சரித்த நொடியினில், பரமேஷ்வரின் கண்கள் பளபளப்புடன் மின்னியது.

இதற்காகத்தானே அவர் இவ்வளவு நேரம் பேசியதும். பெற்ற தகப்பனையே மகனுக்கு எதிராய் திருப்பிவிட்டு வேடிக்கப் பார்க்கலாம் அல்லவா.? இரண்டு திருமணங்களையும் தடுத்து நிறுத்தி தன்னை அவமானப்படுத்திய ஆதனின் மீது பழிவெறி ஊறிக் கிடந்தது அவருக்கு.

“நான் என்ன சொன்னாலும் நீ செய்வே! எனக்குத் தெரியும். கட்டின பொண்டாட்டியை அரசியல் ஆதாயத்திற்காக கொன்னுட்டு அமைச்சர் மகளைக் கட்டினவன் தானே நீ? கொலையையே அசால்ட்டாய் பண்ணினவன், நான் சொல்றதையா பண்ண மாட்டே? முதலில் நான் சொல்றதை நீ முடிச்சுட்டு வா! முடிச்சுட்டு வந்துட்டால் அப்பறம் பேசுவோம்!” கண்களில் வன்மத்துடன் பரமேஷ்வர் சொல்ல, புன்னகையுன் தலையைசைத்தார் சதாசிவம் நடக்கப் போகும் விபரீதங்கள் அறியாமல்..!

இசைக்கும்…

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
5
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சம்யூ தெளிவாக வந்துடுச்சு சபாஷ்.

    1. Author

      இப்போவாவது வந்துச்சே.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா ❤