
இதயம்-15
அந்தக் காலை நேர வெயில், அவளின் பால்நிலா முகத்தை ஊடுருவி அவளுக்கு இன்னும் கொஞ்சம் தேஜஸை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பியபடி, தயாராக வாசலில் நின்றிருந்தாள் சிம்மவாஹினி.
“வாஹினி! எல்லாம் ஓகே தானே.? நானும் வரவா?”
“லூசு! நீயும் என் கூடவே வந்துட்டால், கேண்டி க்ரஷை யார் பார்த்துக்கிறது? செய்யும் தொழிலே தெய்வம். முதலில் அதைப்பாரு!” எனச் சொன்ன வாஹினியின் முகத்தில், நேற்றிருந்த குழப்பம் இல்லாதிருந்ததே ஷியாமிற்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.
“எதுவும் பிரச்சனை பண்ணிட மாட்டியே? எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு வாஹினி!” எனச் சொன்ன ஷியாமின் விழிகளை நேராய் பார்த்தவள்,
“நான் நேற்றை விட, இன்னைக்கு ரொம்பவும் தெளிவா இருக்கேன். நான் என்ன செய்யறேன்? என்ன செய்யப் போறேன்? எல்லாமே எனக்குத் தெரியும். என்னைக் குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணாதே! எனக்கு என்னைப் பார்த்துக்க தெரியும் டா! ரொம்ப கவலைப் பட்டு இளைச்சு போய்டாதே! நீ இப்படி புஸு புஸூன்னு இருந்தால் தான் அழகு!” எனச் சொல்லிவிட்டு இதழில் முகிழ்த்த புன்னகையுடனே வாகனத்தைக் கிளப்பினாள் சிம்மவாஹினி.
வாகனத்தை நிதானமாய் சாலையில் செலுத்திக் கொண்டிருந்தவளின் மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகள்.
‘நான் எடுத்திருக்கும் முடிவு சரியானதா? நான் எதிர்பார்த்த பலனை இதனால் பெற முடியுமா? ஒருவேளை நான் எடுத்த முடிவு தவறானதாய் இருந்தால், அதன் விளைவு என்ன?’ யோசனைகள் ஓடியது.
என்னதான் அவளாகவே எடுத்த முடிவாக இருந்தாலுமே.. அவளுக்கு இதில் துளி விருப்பமில்லை தான்.
இந்த உலகில், சொல்ல முடியாத கணக்கும் இல்லை, திறக்க முடியாத பூட்டும் இல்லை, அவிழ்க்க முடியா முடிச்சும் இல்லை, வெல்ல முடியா இலக்கும் இல்லை. எல்லாவற்றிற்கும் தீர்வு என்று ஒன்று உண்டு. அந்தத் தீர்வைத் தேடித்தான் அவளின் பயணம் துவங்கியிருக்கிறது.
இந்தப் பிரபஞ்சம் ரொம்பவுமே புதிரானது. நாம் அதிகமாய் விரும்புவதை மட்டுமல்ல, அதிகமாய் வெறுப்பதையோ, வேண்டாமென நினைப்பதையோ வற்புறுத்தி நம் கரங்களில் தந்துவிடும்.
தேர்வில் தோற்றுவிடக் கூடாதென ஓயாமல் நினைத்துக் கொண்டிருக்கும் மாணவன் தோல்வியைத் தழுவுவதைப் போல, அவன் வெற்றி பெற வேண்டும் என நினைப்பதற்கு மாறாய், தோற்றுவிடுவோமோ? என நினைத்தது தான் அவன் தோல்விக்குக் காரணம். நம் ஆள்மனதின் சிந்தனைகள், நாம் அதீதமாக ஆசைப்படுவதையோ, வெறுப்பதையோ நம் வசமாக்கித் தந்துவிடும்.
“நீ எதை நினைக்கிறாயோ..
அதுவாகவே ஆகிறாய்..!
உன்னை வலிமை உடையவன்
என்று நினைத்தால் வலிமை
படைத்தவன் ஆவாய்..!
நீ இப்போது இருக்கும்
நிலைக்கு நீயே பொறுப்பு..!”
என்ற விவேகானந்தரின் பொன்மொழி வாஹினியின் வாழ்வில் உண்மையாகிவிட்டதோ.?
அவளின் தற்போதைய நிலைக்கு அவள் தானே பொறுப்பு.
தனிமையை அவள் விரும்பியதைவிட, தன் துணையாக ஆதன் வந்துவிடுவானோ? என்ற பயமே, அவள் வேண்டாமென நினைத்ததை வலுக்கட்டாயமாய் அவள் கரத்தினில் சேர்த்திருக்கிறது.
தாலியைக் கழற்றி வீசி விட்டதாலோ, காவல் நிலையத்தில் புகார் செய்ததாலோ, அவனுடனான பந்தம் முடிவுக்கு வந்து விடாது. என்னதான் அவள் வேண்டாம் வேண்டாமென விலக நினைத்தாலும் கூட, அவன் மீது அவளுக்கிருக்கும் துளி பிடித்தம் அவளை அவனோடு சேர்த்துவிடும்.
தன் யோசனையின் மிச்சங்களையெல்லாம் அப்போதைக்கு மூட்டை கட்டிவிட்டு, அந்த வாகன நிறுத்தத்தில், தன் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள் சிம்மவாஹினி.
அனுமதி வேண்டாது அந்தக் கண்ணாடி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவள் கண்டது, சுழல் நாற்காலியில் தோரணையாய் அமர்ந்திருந்த ஆதனைத்தான். அவனோ இதழில் மேலிட்ட துளி புன்னகையோடு இவளைப் பார்த்தான்.
“வெல்கம்! கேண்டி க்ரஷ்! இப்போ தான் வழி தெரிஞ்சுதா? ஆனால் ரெண்டு நாள் கொஞ்சம் அதிகம் தான்.!” எனச் சொன்னவனின் குரலில் என்ன இருந்தது என்று அவளால் அறிய முடியவில்லை.
“என்னை இங்கே வர வச்சிட்டோம்ன்னு திமிரில் பேசுறியா?”
“நான் வர வச்சேனா? குட் ஜோக் சிமி! நீயே நடந்து தான் என்னைத் தேடி வந்திருக்கே, என்னவோ கையைக் காலைக் கட்டி கடத்திட்டு வந்தது போல பேசுறியே?”
“எதுவுமே தெரியாத பச்சைப்புள்ளை மாதிரி பேசினால், நான் உன்னை நம்பிடுவேனா? என்னை ட்ராப் பண்ணி இங்கே வர வச்சது நீதான். உனக்கெல்லாம் அசிங்கமா இல்லை, ஒரு பொண்ணை இப்படி கார்னர் பண்ணி உன்னைத் தேடி வர வச்சிருக்கியே?” கோபம் அக்னி ஜ்வாலையைப் படரவிட்டிருந்தது அவள் விழிகளில்..
“கூல்! சிமி, நான் ஏன் அசிங்கப்படணும்? என் பொண்டாட்டி என்னைத் தேடி, எனக்காகவே வந்திருக்கிறாள். இதில் அசிங்கப்பட என்ன இருக்கு? நான் ஒண்ணும் உன்னை வரச் சொல்லலியே..!” மிக அமர்த்தலான பதில் அவனிடமிருந்து.
ஆனால் அவன் பேசியதற்கு மாறாக, கண்களில் நட்சத்திரப் பளிச்சிடல். மனப் பெருவெளிக்குள் மத்தாப்பு சிதறல்கள். ஆனால் உள்ளுக்குள் ஊற்றெடுத்துப் பொங்கிக் கொண்டிருக்கும் உற்சாக மனநிலையை அவளிடம் காட்ட முடியாத சூழ்நிலையைக் கருதி, சிரமப்பட்டு அமைதியைக் கடைபிடித்துக் கொண்டிருந்தான் ஆதன் ரித்விக்.
அவள் மட்டும், கண்நிறைய காதலுடன், மனம் நிறைய ஆசையுடன், அவன் முன்வந்து நின்றிருந்தால், இப்படி கைக்கட்டி அமர்ந்திருப்பானா? அவளின் இதழ் வரிகளுக்குள் மீசை முடிகளால் கவிபாடத் துவங்கியிருப்பான்.
ஆனால் கட்டிய மனைவியே கைக்கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர வைத்துவிட்டாள் என்பதில், துளி வருத்தம் இருந்தாலும், அவள் தன்னைத் தேடி வந்ததில் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. இதயம் முழுதும் இதமான உணர்வு ஆட்கொண்டிருந்தது. தனக்குச் சொந்தமானது தன்னிடமே வந்து சேர்ந்துவிட்ட நிம்மதி.
அவனின் இதயம் மகிழ்ச்சியில் நிறைந்து வழிந்தது. அவள் தன்னைத் தேடி வந்து விட்டாள் என்கிற வெற்றிக் களிப்பினால் அல்ல, அவள் மீதான காதலால்.
தன் காதல் கைசேர தூரம் அதிகமில்லை என்ற நிம்மதியால். ஆனால், அவனின் மகிழ்ச்சியான மனநிலையை, அவனவளே தலைகீழாக மாற்றப் போகிறாள் என்பது அப்போதைக்கு அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
அவன் முகத்தில் வந்து போன பாவனைகள், எதிரில் நின்றிருந்த வாஹினிக்கு எரிச்சலைக் கூட்டியது.
“நான் உன்னை வரச் சொல்லலியே..!” என அவன் சொன்னதை தன் வாழ்வின் உட்சபட்ச அவமானமாய் உணர்ந்தாள் அவள்.
‘திருமணத்துக்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் பிரிவதாக மனப்பூர்வமாக முடிவெடுக்கும்பட்சத்தில், இந்த mutual consent (consent divorce) முறையில் விவாகரத்து பெறுவது. இதற்கு, குறைந்தது ஒரு வருடமாவது கணவன்-மனைவி இருவரும் பிரிந்து இருக்கவேண்டியது சட்டப்படி அவசியம். கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும், அவர்களுக்குள் திருமண பந்தம் இல்லாமல், அவர்கள் தனியாக ஒரு வருடம் பிரிந்து இருப்பின், இந்த mutual consent முறையில் விவாகரத்து பெற முடியும்.’
‘புதிதாகத் திருமணமானவர்கள், இந்த முறையில் திருமணத்தை ரத்துசெய்வதற்கு, திருமணமாகிக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகியிருக்க வேண்டும். அதேசமயம், திருமணம் ஆன நாள் முதலே அவர்கள் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். நீங்க கல்யாணமான ஒரே நாளில் விவாகரத்து கேட்டால் கண்டிப்பா கிடைக்காது. ஏன்னா உங்க ஹஸ்பண்ட் மியூச்சுவல் கொடுக்க சம்மதிப்பார்ங்கிறது சந்தேகம் தான். அதனால் தான் சொல்றேன், ஒரே வீட்டில் இருந்தும் நாங்க ஒண்ணா இல்லைன்னு ப்ரூவ் பண்ணினால் ஈஸியாய் டிவோர்ஸ் கிடைச்சுடும். ஆனால் அதற்கு நீங்க குறைஞ்சது ஒரு வருஷமாவது ஒரே வீட்டில் இருக்கணும்.’
என அவள் வழக்கறிஞர் சொன்னது இவள் செவிகளுக்குள் கேட்கவும், கோபத்தின் வீரியத்தில் இதழ் தாண்டி வெளிவரத் துடித்த, வார்த்தைகளை முயன்று விழுங்கினாள் பெண்.
“இங்கே பாரு ஆதன்! நான் இங்கே வந்துட்டேங்கிறதால், நீ நினைச்சதெல்லாம் நடந்துடும்ன்னு கனவு காணாதே! நான் இங்கே வந்ததே உன்னை நிரந்தரமாய் பிரிவதற்கே! எனக்கு நீ வேணாம்! என் வாழ்க்கைக்கும் நீ வேணாம்!”
அவள் சொன்ன அந்த வார்த்தையில் அவன் இதயக் கூடு சில்லுசில்லாய் நொறுங்கியதைப் போல் வலி கண்டது. இத்தனை நேரமாய் இருந்த இயல்பு மனநிலை மாறி சட்டென அவன் முகம் கோபத்தைப் பூசியது. அவள் சொன்ன வார்த்தைகளில் அவனுக்குள் அப்படியொரு வலி.
வார்த்தைகளில் விவரிக்க முடியா வலி! ஓராயிரம் தோட்டாக்கள் ஒருசேர இதயத்தைத் துளைத்தது போன்ற வலி. கத்தியின்றி ரத்தமின்றி எதிரில் நிற்போரைக் காயப் படுத்த முடியுமா? இதோ ஒற்றை வார்த்தையில் இதயத்தை உடைத்து வீசி விட்டு, சாட்சியாய் நிற்கிறாளே! இவளின் இந்த வார்த்தையைக் கேட்பதற்காகவா அவளை அவளுக்கே தெரியாமல் திருமணம் செய்தான்? எத்தனை எதிர்ப்புகள், எத்தனை தடைகள்? எல்லாம் தாண்டி அவன் செய்ததெல்லாம் அவளுக்காக மட்டும் தானே? அவள் தன்னவளாக வேண்டும் என்பதற்காகத் தானே.?
“உன்னை நிரந்தரமாய் பிரிவதற்கே..!”
எத்தனை சாதாரணமாய் சொல்லிவிட்டாள்? நாவு என்ற வில்லில் புறப்பட்ட அம்பாய் சீறி வந்த வார்த்தைகள் குறிபார்த்து அவன் இதயம் தைத்து விட்டதே..!
உள்ளம் தைத்த அம்பை உடைத்து வீசிவிட்டு, கனல் கக்கும் கண்களால் அவளை நோக்கினான் அவன். உச்சபட்ச கோபத்தில், கண்கள் மின்ன கர்ஜிக்கும் சிம்மத்தை ஒத்திருந்தது அவன் தோரணை.
எரிமலையின் நெருப்புக்குழம்பைப் போல், அவன் கண்களில் தகதகப்பு ஏறியிருந்தது.
இருக்கையிலிருந்து எழுந்து தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவனின் தோரணை அவளுக்கு எதையோ நினைவுபடுத்தி திடுக்கிட வைத்தது.
“இது ஒருவழிப் பாதை சிமி! அவ்வளவு எளிதாய் உன்னால் என்கிட்டே இருந்து போக முடியாது. போகவும் விடமாட்டேன். நீ இந்த ஆதனின் மனைவி. நீ சாகும் போது கூட, அந்த அடையாளத்தோட தான் செத்துப் போகணும்! திரும்பிப் போகணும்ங்கிற எண்ணம் உன் மனசில் கடுகளவு இருந்தாலும், அதை மொத்தமா அழிச்சு சிமி! இனி உன் வாழ்க்கை என்னோடு தான். நீ உயிரோடு இருக்கிற கடைசி நொடி வரை..!” அவன் சொன்ன நொடி, அவளுக்குள் மெல்லிய திடுக்கிடல்.
நிதானமாய் அவன் சொன்னது போல் தெரிந்தாலும், அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த அழுத்தம், அவன் அத்தனை எளிதில் அவளை விட்டுவிட மாட்டான், என்பதை காட்டியம் கூறியது. இத்தனை நாளாய் அவள் கண்ட ஆதன் இவனில்லை.
தன்னைப் பார்த்ததும், குழையும் குரலும், கெஞ்சும் பார்வையும் இப்போது அவனிடம் மருந்துக்கும் இல்லை.
“நிஷாவுக்கும் எனக்கும் ஏற்பாடு பண்ணின கல்யாணத்தில், உன்னைக் கையெழுத்துப் போட வச்சு உன் அனுமதியில்லாமல், மனைவியாக்கிக் கொண்ட எனக்கு உன்னை எப்படி தக்க வச்சுக்கணும்ன்னு தெரியும்.!” அவன் சொன்ன வார்த்தைகள் அவள் அடிநெஞ்சின் ஆழத்தில் ஆணியாய் இறங்கியது.
பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல், தனிமையில் கிடந்தவனை அவளின் மீதான காதல்தான் மென்மையாய் மாற்றி புத்துயிரையும் கொடுத்தது.
இன்று அவள் பிரிவை வேண்டியதும் அவனை மூர்க்கனாய் மாற்றுவதும் அதே காதல் தான். காதல் எதையும் செய்ய வைக்கும். கொஞ்சவும் வைக்கும், கெஞ்சவும் வைக்கும், கோபப்படவும் செய்யும். காதலில் எதுவும் சாத்தியம். எதையும் சாத்தியமாக்கும் வலிமை காதலுக்கு உண்டு.
“ஆதன்! என்னதான் என்னை நீ கல்யாணம் பண்ணியிருந்தாலும், என்னைக் கட்டாயப்படுத்தி உன்னோடு வாழ வைக்க முடியாது. அது இந்த சிம்மவாஹினி கிட்டே நடக்காது. உனக்கும் எனக்கும் இடையேயான இந்த பந்தத்தை நான் முறிச்சே தீருவேன். என்னைக் கட்டாயப்படுத்தி, உறவுக் கூட்டுக்குள் அடைக்க முயற்சிக்காதே ஆதன். அது நம்ம ரெண்டு பேருக்குமே வேதனையைத்தான் தரும்.!” ஆழ்மனம் அடக்கமுடியா கோபத்தில் தகித்தாலும் கூட, நிதானமாகவே கேட்டாள் வாஹினி.
“எனக்கு நீ வேணும் சிமி! என் மனசுக்கு பிடிச்ச நீ, என் பக்கத்தில் வேணும்.! எனக்குன்னு கிடைச்சிருக்கிற ஒரே சொந்தம் நீதான். அதை அவ்வளவு எளிதாய் விட்டுட முடியாது சிமி!” அவனிடமிருந்தும் அதே நிதானத்தோடு பதில் வந்தது.
“நான் ஒண்ணும் உயிரில்லாத பொம்மை இல்லை ஆதன்! எனக்குன்னு மனசு இருக்கு. எனக்குன்னு ஆசைகள் இருக்கு. உனக்கு மட்டும் விருப்பம் இருந்தால் போதாது. எனக்கு விருப்பம் இருக்க வேண்டாமா?” கொஞ்சம் குரல் உயர்ந்தது வாஹினிக்கு.
“ஏன், நீ யாரையாவது காதலிக்கிறியா?” பருந்தின் கூரிய பார்வை இரை மீது விழுவதைப் போல், கூர்மையான அவன் பார்வை அவள் விழிகளை ஆழமாய்த் துளைத்தது.
இப்படியொரு கேள்வியை அவன் கேட்பான் என அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.
“ஏன்..?” குரல் வெளிவர மறுத்தது அவளுக்கு.
“கேட்ட கேள்விக்கு பதில் வேணும்? வேறு யாரையாச்சும் லவ் பண்ணுறியா?, இல்லையா?” இருக்கையிலிருந்து எழுந்து, நெருங்கி அருகில் அவன் வரவும், இவள் இதயம் தாளம் தப்பி துடித்தது.
அவனை நெருக்கத்தில் கண்டதும், வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கித் தவிக்க, அவள் சிரம் மட்டும் இல்லை எனும் விதமாய் இடவலமாய் அசைந்தது.
“இதுவரை யாரையும் காதலிக்காதப்போ, என்னைக் காதலிப்பதில் உனக்கென்ன கஷ்டம் கேண்டி? என்னைக் கணவனா ஏற்றுக் கொள்வதில் அப்படி என்ன கஷ்டம்? நிஜமாவே எனக்குப் புரியலை. என்னை விட பெட்டரா வேற எவனும் உனக்கு கிடைக்க மாட்டான்.!” அவன் உதிர்த்த வார்த்தைகள் இவளுக்குள் பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது.
பெரும் பூகம்பம் அவள் உள்ளத்தில். பிளவுகளாய் நிறைய விரிசல்கள் அவள் இதயக் கூட்டிற்குள்.
‘இப்படி எண்ணம் படைத்தவன் தான் தன் கணவனா? இவனை விட பெட்டர் சாய்ஸ் எனக்கு கிடைக்க மாட்டான்னு இவன் எப்படி சொல்லலாம்? நான் என்ன அந்த அளவிற்கு தாழ்ந்து போய் விட்டேனா? நிஜமாவே ஆதன் இப்படிப்பட்டவனா?’ கேள்விகள் மனதிற்குள் எழ, அதிர்வின் அழுத்தமான ரேகைகள் அவள் முகத்தில்.
யாரை நம் மனதிற்கு நெருக்கமாக நினைக்கிறோமோ, அவர்களிடம் தான் கோபமோ, கொஞ்சலோ, குழைவோ, ஆற்றாமையோ, உரிமை உணர்வோ, எதுவாக இருந்தாலும் அதீதமாய் வெளிப்படும்.
அப்படியொரு நிலையில் தான் இருந்தான் ஆதன். ஆனால், விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறியாமலே, அவளைத் திருமணம் செய்து அழைத்து வந்துவிட்டு, உடனே அவள் தன்னைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என நினைப்பதும் தவறு தானே? தாய் உடனிருந்து சொல்லிக் கொடுத்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்குமோ என்னவோ?
தாய் இல்லாத ஆணின் மனதிலுள்ள ஏக்கமும் வெறுமையும் என்றுமே நீக்க முடியாதது அல்லவா? ஆனால், வெறும் தொழில் முறையான உறவாக, ஆதனுடனான உறவை நினைத்திருந்த வாஹினிக்கு அவனின் மன உணர்வுகள் புரிவது சாத்தியம் இல்லை தானே?
இருவருமே ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துக் கொள்ளாமல், மனதளவில் ரொம்பவே காயப்பட்டுப் போனார்கள். ஆதன் அவளைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட, அவனின் சிமியோ, அவனிடமிருந்து விடுபடப் போராடுகிறாள்.
இருவருமே இருவேறு திசையில் பயணிக்க முயல, காலம் இவர்களுக்கு என்ன வைத்துக் காத்திருக்கிறதோ?
அதிர்வோடு நிலைத்த பார்வையும், நெரித்த புருவமுமாய் நின்றிருந்தவளை, சொடக்கிட்டு நடப்பிற்குக் கொண்டு வந்தான் ஆதன் ரித்விக்.
“எவ்வளவு நேரம் இப்படியே அசையாமல் நிற்கப் போறே? வீட்டுக்குப் போகலாம் வா!” தோள் தொட்டுத் திருப்பியவனின் தீண்டல், அவளுக்குள் தீயாய் தகித்தது. அவளால் இப்போதே உதறிவிட்டுப் போக முடியும் தான்.
ஆனால் இவன் மனைவி என்ற அங்கீகாரத்துடன் அவளால் வாழ முடியாது. ஒருவேளை, அவன் மனைவி என்கிற உணர்வே அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையைக் கொடுத்துவிடுமோ? என்ற பயம் அவளுக்குள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தோள் தொட்ட அவன் கரத்தினை வெடுக்கென உதறியவள், உறுதியாய் முடிவு செய்துக் கொண்டாள், அவனை வாழ்க்கையிலிருந்து வெகு விரைவில் உதறிவிட வேண்டுமென்று.
“நான் இனிமே உன்னை நோக்கி வைக்கப் போற ஒவ்வொரு அடியுமே, உன்னை விட்டு விலகறதுக்கான அடிகள் தான் ஆதன்.” என்றவள் அவன் வீட்டை நோக்கிப் புறப்பட முதல் அடியை எடுத்து வைத்தாள், வேறு வழியில்லாமல்..!
ஆனால் அவள் உதறிய கரத்தினை இறுக்கமாய் பிடித்தபடி அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்தபடி உடன் நடந்தான் ஆதன். அவனின் உயரத்திற்கும், உடல்வாகிற்கும், அவனின் ஒற்றைக் கை வளைவிற்குள் பூனைக் குட்டியாய் அடங்கியவளால் எவ்வளவு முயன்றும் அவன் பிடியைத் துளி அசைக்க முடியவில்லை. அவளை அணைத்தாற் போல் பிடித்திருந்த அவன் வலக்கரத்தின் பெருவிரல் அருகிலிருந்த தழும்பு, அவள் ஏற்பத்திய காயத்தினை சட்டென அவளுக்கே நினைவுபடுத்தியது.
கண்களுக்கு புலப்படும் காயங்களுக்கு மருந்திட்டுவிடலாம். கைப்புண்ணுக்கு கண்ணாடி அவசியமில்லையே! ஆனால் மனக்காயத்திற்கு மருந்திடுவது யாரோ..?
“காயங்கள் ஒன்றும் புதிதல்ல..!
காரணங்கள் தான் புதிது..!
இப்போதைய காயங்களின் காரணம்..
காதலின்றி வேறொன்றுமில்லை..!
அவள் மீதான காதலன்றி..
வேறொன்றுமே இல்லை..!”
இசைக்கும்..

