
இதயம்-10
கூட்டத்தைக் கண்டு மிரண்டு போய் தன் கரத்தினை அழுத்தமாய் பற்றியவளை, கைப்பிடித்து அருகில் கொண்டு வந்து, அவளுக்கு அரணாய் தன்னை முன் நிறுத்திக் கொண்டவன், அவளைத் தன் முதுகின் புறமாய் நிறுத்தினான்.
கழுகைக் கண்டதும் தாயின் சிறகுகளுக்குள் ஒளிந்துக் கொள்ளும் கோழிக்குஞ்சைப் போல், அவன் அகன்ற முதுகின் பின் குழப்பம் சூழ் முகத்துடன் நின்றிருந்தாள் வாஹினி.
புற்றீசல் போலக் கூடியிருந்தக் கூட்டத்தைப் பார்த்து, முதலில் சற்று மிரண்டவள் பின் தன்னை சுதாரித்து, அவனை விட்டு விலகி நகர முயல, அவள் எதிர்பாரா விதமாய் கைப்பிடித்து அவளைத் தடுத்திருந்தான் ஆதன். அவனைத் தாண்டிச் செல்ல முயன்றவள், பக்கவாட்டில் திரும்பி அவனை நோக்க, அதே நேரம் சுற்றி நின்ற கேமிரா கண்கள் பளிச் பளிச் கண் சிமிட்டல்களுடன், அவர்களைப் படமெடுத்துக் கொண்டது.
“உங்களுக்கு எந்தக் கேள்வி கேட்கணும்னாலும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் முறையாய் கேளுங்க! இப்படி அநாகரீகமா நடந்துக்காதீங்க! இட்ஸ் இரிட்டேட்டிங்!” அதீத கோபம் வந்த போதிலும் கூட, நிதானமாய்ப் பேசினான் அவன்.
கோபத்திலும் நிதானம் ஆண்மைக்கு அழகல்லவா? அது ஆதனிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
“சார்! சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க! மத்ததெல்லாம் ப்ரஸ் மீட்டில் பார்த்துக்கலாம்.!”
“சார்! ப்ளீஸ் சார்!”
“முக்கியமானக் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க சார் ப்ளீஸ்..!” என ஆளாளுக்கு கேட்கவும், சம்மதமாய் தலையசைத்து, பின் மணிக்கட்டைத் திருப்பி மணியைப் பார்த்துக் கொண்டே,
“அஞ்சு நிமிஷத்துக்குள்ளே என்ன கேட்கணுமோ, கேளுங்க!” அழுத்தமானக் குரலில் சொன்னான் ஆதன்.
அவனுக்கு நேரம் ரொம்பவே முக்கியம். ‘சென்றுக் கொண்டிருப்பவன் காலத்தை வென்றுக் கொண்டிருக்கிறான். நின்றுக் கொண்டிருப்பவன் காலத்தைத் தின்றுக் கொண்டிருக்கிறான்’ என்ற எண்ணம் கொண்டவனுக்கு வீணாக நின்று காலத்தை வீணாக்குவது அந்த அளவிற்கு பிடித்தமில்லை.
அதே நேரம், அவன் பிடிக்குள் சிக்கியிருந்த தன் கரத்தை விடுவிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் வாஹினி.
“என் கையை விடு! நான் போகணும்! இவங்க முன்னால் நான் பேசு பொருளாய் மாற நான் விரும்பலை. இப்போ நீ என் கையை விடலைன்னா அசிங்கமா போய்டும் ஆதன்!” அவனுக்கு மட்டும் கேட்கும்படி அழுத்தமானக் குரலில் சீறினாள் சிம்மவாஹினி.
“போகலாம் சிமி! பீ கூல்! இப்போ நீ இங்கிருந்து ஓடினால், தப்பு இருக்கப் போய் பயந்து ஓடிட்டதா சொல்வாங்க! இப்போ நீ இங்கே இருக்கிறது ரொம்ப முக்கியம்!” அவள் புறம் குனிந்து காதருகே கிசுகிசுப்பாய் அவன் பேச, ஏதோ ரகசியம் பேசுவது போல் தெரிய, அவள் அறியாமலே பேசு பொருளாகிக் கொண்டிருந்தாள் சிம்மவாஹினி.
“சரி, நான் போக மாட்டேன்! கையை விடு!” எரிச்சல் நிறைந்தக் குரலில் சொன்னவளைப் பார்த்தபடியே அவள் கரத்தினை மென்மையாய் விடுவித்தான் ஆதன். அவன் அழுத்தமாய்ப் பற்றியதில், வலியெடுத்த கரத்தினை, தேய்த்தபடியே அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
அதற்குள் பத்திரிக்கையாளர்கள், கேள்விகளைக் கேட்கத் துவங்கவும், வாஹினியிடமிருந்து வலுக்கட்டாயமாய் தன் பார்வையைத் திருப்பினான் ஆதன். ஏனோ அவளிடமிருந்து கண்கள் நொடி நேரம் விலக மறுத்தது.
‘வேரூன்றி விட்டாய் என் உயிருக்குள் -இனி
விலகல் என்பதெல்லாம்
நொடிக்கு நொடி எனக்கு மரணம் தான்.’
என அவளை விட்டு பார்வையை விலக்கியதற்கே அடம் பிடித்த மனதை கடினப்பட்டு தன் எதிரில் நின்றவர்கள் பக்கமாய் திருப்பினான் ஆதன் ரித்விக்.
“சாருக்கு மேடம் கிட்டே பேசவே நேரம் போதலை, இதில் நம்மக்கிட்டே எங்கே பேசப் போறார்?” கூட்டத்திலிருந்து கேட்ட குரல், அவன் இதயத்திற்குள் குளுகுளுப்பைக் கூட்டியது.
கிசுகிசு பிடித்தது அவனுக்கு.. அவன் பெயரோடு அவள் பெயரும் சேர்ந்ததால்..!
“உங்க நிறுவனத்தோட பெயரைக் கெடுக்கணும்னு யாரோ இதைத் திட்டமிட்டு செஞ்சிருக்காங்க. அதைப் பத்தின உங்கள் கருத்து என்ன?”
“எதிரிகளை கணக்கில் வச்சிக்கலாம். நான் துரோகிகளைக் கணக்கில் வச்சிக்கிறதில்லை.!” துளி புன்னகையோடு அவன் சொன்ன வார்த்தைகளைப் கண்களில் பிரம்மிப்போடு பார்த்தாள் வாஹினி.
“இப்படி பொதுவா சொன்னால் எப்படி சார்? அது எப்படி உங்களுக்குத் தெரியாமல் இருக்கும்? குறிப்பிட்டு இவராய் இருக்கலாம்ன்னு க்ளூ கொடுக்கலாமே?”
“ஏன், உங்க ஹெட்லைன்க்கு ஹாட் நியூஸ் எதுவும் கிடைக்கலையா? இன்னைக்கு உங்க டார்கெட் நான் தானா?” அதே இதழ் மீறாப் புன்னகையுடன், நக்கல் தொனிக்கச் சொன்னான் ஆதன் ரித்விக்.
“யாருன்னு தெரிஞ்சும் நீங்க எந்த ஆக்ஷனும் எடுக்காமல் இருக்குறீங்க? அப்போ அந்த வீடியோவில் இருந்தவங்க உங்களுக்கு ரொம்ப நெருக்கமானவங்களா இருப்பாங்களோ?”
“மே பீ! பட் ஐ டோன் க்நோ! நான் எதிர்மறையான எண்ணங்கள் கொண்டவங்கக் கிட்டே இருந்து விலகி இருக்கணும்னு நினைக்கிறேன். ஸ்டே அவே ஃப்ரம் நெகட்டிவ் பீப்பிள், தே ஹேவ் அ ப்ராப்ளம் ஃபார் எவ்ரி சொல்யூஷன் (Stay away form negative people. They have a problem for a every solution) அப்படின்னு நான் சொல்லலை ஐன்ஸ்டின் சொல்லியிருக்கார். ஸோ, நானும் அப்படியே இருக்கணும்ன்னு விரும்பறேன். எனக்கான பாஸிட்டிவ் எனர்ஜி பக்கத்திலேயே இருக்கும் போது, நெகட்டிவ் பத்தி எனக்கு கவலை இல்லை!” எனச் சொன்னவனின் விழிகள் தன்னால் வாஹினியைத் தொட்டு மீண்டது.
இத்தனை தூரம் வருவதற்கே அவன் எத்தனை தடைகள் தாண்டி வந்திருப்பான்? அவனுக்குத் தெரியாதா? எதிரிகளை எங்கே வைக்க வேண்டும், துரோகிகளை எங்கே வைக்க வேண்டுமென்று. வானைக் கிழித்துக் கொண்டு உயரே பறக்கும் கழுகுகள் இறந்த இரையை உண்பதில்லை. அவனைப் பொருத்தவரை முதுகுக்குப் பின் துரோகம் செய்பவர்கள் செத்த இரைக்குச் சமமானவார்களே..!
கருமேகங்களின் ஒளிரும் மின்னல் கீற்றைப் போல், அவளைப் பார்த்ததுமே, அவனுக்குள் மின்னல் வெட்டியது.
அவளைப் பார்த்துக் கொண்டே தான் ஆயுளைப் போக்கிக் கொள்ள, அவனின் அடிமனம் ஆவல் கொண்டது. ஆனால் இதையெல்லாம் அறியாமல், அவன் அருகில் அவஸ்தையாய் நின்றுக் கொண்டிருந்தாள் வாஹினி.
இத்தனை நேரம் வலுக்கட்டாயமாய் இழுத்து வைத்திருந்த பொறுமை காற்றில் கற்பூரமாய் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துக் கொண்டிருந்த அதே நேரம் அந்தக் கேள்வியும் கேட்கப்பட்டது.
“சார்! பெரிய பெரிய நிறுவனங்களோட, டை-அப் வச்சிக்கிற ஆள், ஆனால் நீங்க எப்படி கேண்டி க்ரஷ் மாதிரி சின்ன நிறுவனத்தோட..? இதில் எதாவது பர்ஸ்னல் ரீஸன்ஸ் இருக்கா?” அந்தக் கூட்டத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டவர் யாரெனத் தெரியாது தேடிக் கொண்டிருந்தாள் வாஹினி.
‘யார் இந்தக் கேள்வியைக் கேட்டது? சின்ன நிறுவனம்னா டை-அப் வச்சிக்கக் கூடாதா? இப்போ பெருசா பிரம்மாண்டமா நிக்கிற எல்லா நிறுவனங்களுமே சின்ன புள்ளியிலிருந்து துவவங்கினது தான். லூசு மாதிரி கேள்வி கேட்கிறாங்க, இந்த ஆதனும் பல்லைக் காட்டிட்டு நிக்கறான்.’ சூழ்நிலை கருதி மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டாள் அவள்.
“கேண்டி க்ரஷ் பத்தி சொல்லணும்னா அவங்களை எனக்குப் பிடிச்சிருந்தது. ஐ மீன், அவங்க டெடிகேஷன் அன் அவங்க ப்ராடக்ட் க்வாலிட்டி ரொம்ப நல்லா இருந்தது. ரொம்பவே புதுமையான அவங்களோட இன்னோவேஷன்ஸ் அவங்களை நளபாகத்தோட சேர்த்துடுச்சு. மேடம் கிட்டேயே கேளுங்களேன். மேடம் தான் கேண்டி க்ரஷோட நிறுவனர்.!” அவளை நோக்கிக் கையைக் காட்டிவிட்டு அமைதியாய் நின்றுக் கொண்டான் ஆதன்.
“நீங்க நளபாகத்தோட கிடைத்தை இவ்வளவு பெரிய வாய்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? ஏன்னா சார் ரொம்பப் பெரிய ஆள், நீங்க இப்போ தான் உங்க பயணத்தையே ஆரம்பிச்சுருக்கீங்க? அப்படி இருக்கும் போது, உங்களோட டை-அப் பண்ணினதில் வேற எதாவது காரணம்.. அதாவது லவ் அந்த மாதிரி..” அந்த பெண் நிருபர் தயக்கமாய் நிறுத்த,
“உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? அடுத்தவங்களோட பர்ஸ்னலை அம்பலப் படுத்தறது தான் உங்க வேலையா? ஒரு பொண்ணோட டை-அப் பண்ணினாலே ரகசிய தொடர்புகள் தான் இருக்கும்ன்னு நீங்களா ஏன் கற்பனைப் பண்ணிக்கிறீங்க? பொண்ணு தனியா நின்னு சாதிச்சிடக் கூடாது. எப்போவுமே ஆம்பிள்ளையை நம்பி தான் இருக்கணுமா? ஏற்கனவே சீரியல், சினிமான்னு அதைத் தானே காட்டறீங்க.? பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு டிஸ்கிரைப் பண்ணாதீங்க! பொண்ணுங்க ஒண்ணும் நீங்க எழுதற கதை இல்லை. இப்படித்தான் இருக்கணும்னு நீங்க தீர்மானிக்கிறதுக்கு. நான் எப்படின்னு எனக்கு தெரியும். என் கதையை எனக்ககே எழுதிக்க தெரியும். போய் வேலையைப் பாருங்க!”
அழுத்தம் திருத்தமாய் பேசிவிட்டு கற்றைக் கூந்தல் காற்றிலாட, நடந்துச் சென்றவளைக் கண்களில் அதீத ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதன்.
“இதிகாசங்கள் கூட
இழிவு படுத்தியது பெண்களைத்தான்..!
கனலில் இறங்கி தன்
கற்பை நிரூபித்தாள் பெண்ணொருத்தி..!
கனலில் ஊரை எரித்து தன்
கற்பை நிரூபித்தாள் இன்னொருத்தி..!
இருவரின் கற்பும் தூய்மையானதென்றால்..
இறுதியில் பெரும்பிழை செய்தது யாரோ..?”
‘ஏன் இந்தச் சமூகம் இப்படி இருக்கிறது? எல்லாவற்றிலும் ஒருதலை பட்சமாய் இருப்பது ஏன்? ஆசியர், எழுத்தாளர், வல்லுநர் என பதவிகள் அனைத்திலுமே ஆண்களை மட்டும் குறிப்பது போல், ஆணுக்கு மட்டுமே உரியது போல் வைத்துவிட்டு, பெண்ணிற்கு மட்டும், ஓடுகாலி, வாழாவெட்டி, கைம்பெண், எத்தனை எத்தனை பெயர்கள்? ஆனால், ஆணை இழிவுபடுத்தும் சொற்கள் எதுவும் தமிழ் அகராதியிலேயே இல்லை.’
‘ஏன் உலகில் எந்த ஆணுமே மனைவியை இழப்பதோ, பிரிவதோ இல்லையா? தகாத வார்த்தைகள் கூடப் பெண்ணை, பெண்மையை, இழிவு படுத்துவதாக மட்டுமே கட்டமைக்கப் பட்டுள்ளதே? இது தெரியாமலிருப்பதே இந்தச் சமூகத்தின் ஆகச் சிறந்த அவலம்.!’ என மனதிற்குள் வெம்பியடியே ஆதனின் பார்வை வட்டத்திலிருந்து மறைந்து போனாள் சிம்மவாஹினி.
********
நீரில் மிதக்கும் தாமரை மலர் போல, மனதின் மேற்பரப்பில் மிதந்துக் கொண்டிருந்தன அவளின் ஞாபகங்கள். துணையே இல்லாமல் தனியே இருந்த வாழ்க்கையில் அவள் நினைவுகளின் துணையோடு வீடு நோக்கிப் பயணத்தைத் துவங்கியிருந்தான் ஆதன் ரித்விக்.
கண்களுக்குள் அவள் பிம்பம் வந்து போக, மனம் முழுதும் சற்று முன் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தது. அவளின் நேர்கொண்ட பார்வையும், தெள்ளத் தெளிவாயாய், துளி பயமின்றி பேசும் தோரணையும் அவன் மனதை ஒட்டு மொத்தமாய் கொள்ளைக் கொண்டுவிட்டது.
‘பேரிரைச்சலேடு பெய்துக் கொண்டிருக்கும்,
பெருமழையின் முதல் துளிக்கும்,
கடைசித் துளிக்குமான
இடைவெளியே அவள் ஞாபகங்கள்..’
கவிதை கூட முளைத்து தொலைத்தது அவன் மனதிற்குள். மழையின் முதல் துளிக்கும், கடைசித் துளிக்குமான இடைவெளி எப்படி கணக்கிட முடியாததோ, அதே போலவே அவன் இதயக் கூட்டில் நிறைந்திருக்கும் அவளின் நினைவின் நிமித்தங்களும் கூட அளவிட முடியாதது தான்.
அவன் கேண்டியின் நினைவுகள் அவன் இதயத்திற்குள் துளி துளியாய் தித்திப்பாய் சுகமாய் இதயத்தின் அடியாழம் வரை தித்திக்க அவளை நேரில் கண்ட போது மட்டுமல்ல, நினைக்கும் போதும் கூட, இதழ்களில் விரிந்த புன்னகையுடன் தன் வீட்டை நெருங்கியவனின் முகம் சட்டென சுருங்கிப் போனது.
கருப்பு நிற டெயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) அவன் வீட்டின் முன் கம்பீரமாய் நின்றிருக்க, வாகனத்தின் முன் கட்சி கொடி காற்றிலாடிக் கொண்டிருந்தது.
உள்ளே கோபம் அப்பிய விழிகளுடன் அமர்ந்திருந்தார் சதாசிவம். தன்னைப் பெற்றவரை தன் வீட்டு வாசலில் கண்டதும், அவன் உதடுகளில் அலட்சிய புன்னகை வழிய, ஒலிப்பானை இயக்கி, தானியங்கி கேட் திறந்ததும் தன் வாகனத்தை உள்ளே நிறத்தியவன் திரும்பியும் பாராது வீட்டிற்குள் நுழையப் போக,
“அண்ணா!” சம்யூவின் குரல் அவன் பின்னாலிருந்துக் கேட்டது. ஆச்சர்யத்தில் அவன் புருவங்கள் வியப்பை தாங்கி நிற்க,
“அண்ணனா? நானா? நான் உன் அம்மாவுக்குப் பொறக்கலையே சம்யூ. திடீர்ன்னு எப்படி அண்ணனா மாறினேன்? அதிசயமா இருக்கு.!” நக்கல் தெறித்தது வார்த்தைகளில்.
“ப்ளீஸ் அண்ணா! அப்பா உன் கிட்டே பேசணும்ன்னு வெய்ட் பண்ணுறார். கொஞ்சம் வெளியில் வர்ரியா?”
“உங்க அப்பாவோட அரசியல்வாதி புத்தி போகவே போகாது. நடுத்தெருவில் வச்சு பேசி, உன் வாழ்க்கையை விளம்பரப்படுத்தணுமா? வேணும்ன்னா உள்ளே வரச் சொல். இல்லைன்னா அப்படியே போய்டச் சொல்லு!”கடவுச் சொல்லை இயக்கி கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.
வெள்ளை நிறத் தங்கமாய் மூன்றடுக்கில் கம்பீரமாய் நின்றிருந்த அந்த வீட்டிற்குள் சிறு தயக்கத்தோடேயே நுழைந்தார் சதாசிவம். நுழைந்ததுமே விருந்தினர்களை உபசரிப்பதற்கு வசதியாக ஸோஃபாக்கள் போடப்பட்டு நடுவில் கண்ணாடி டீப்பாய் மீது, சில ஆங்கில பத்திரிக்கைகள் காற்றிலாடிக் கொண்டிருந்தது.
அதைக் கடந்ததும் பெரிய லிவிங் ரூம், சுவற்றை அடைத்தாற் போல் சுற்றில் தொங்கிக் கொண்டிருந்தது தொலைக்காட்சி. கை வேலைப்பாடுகளால் செய்யப்பட்ட கதவுகள் ஜன்னல்கள். ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்த ரசனையான ஓவியங்கள், சுவ்வற்றில் நவீன வேலைபாடுகள், இளம் பீச் வண்ணத்தில் சுவர் வண்ணம் தீட்டப்பட்டிருக்க, கருப்பு நிற தரை ஓடுகள் அழகுக்கு அழகு சேர்த்தது.
தன்னை விட்டுப் பிரிந்து வந்து மகன் கஷ்டப்படுவான் என நினைத்திருந்த சதாசிவத்தின் முகம் லேசான பிரம்மிப்புக்குப் போனது.
இன்னும் சமையலறை, மற்ற இடங்களை அவர் பார்க்கவில்லை, இதுவரை பார்த்ததிலேயே, மகனின் ரசனையும் அதிலிருந்த நேர்த்தியும் புரிந்தது. இதையெல்லாம் செய்வதற்கு நிறையவே உழைத்திருக்கிறான் என்பதும் புரிந்தது.
“இதெல்லாம் உங்களை மாதிரி லஞ்சப்பணத்தில் வாங்கினது இல்லை சதாசிவம், என் உழைப்பில் என் சொந்தப் பணத்தில் வாங்கினது.!” பின்னாலிருந்து ஆதனின் குரல் கம்பீரமாய் கேட்டது.
மாடிப்படிகளில் அரசிளங்குமாரனின் தோரணையோடு இறங்கி வந்துக் கொண்டிருந்தான் அவன்.
“புது பணக்காரன் அப்படித்தானே பேசுவே? இதே மாதிரி எனக்கு பத்து வீடு இருக்கு. ஒத்தை வீட்டுக்கு இவ்வளவு மண்டைக்கணம் ஆகவே ஆகாது மகனே!”
“நீங்க பத்து வீடு வச்சிருக்கலாம் மினிஸ்டர் சார்! ஆனால் ஒண்ணாச்சும் உங்க உழைப்பில் சம்பாதிச்சதா? எல்லாமே லஞ்சம்.!”
“உன் வரம்பு மீறி பேசறே ஆது!” கோபத்தில் குரல் தன்னால் உயர்ந்தது அவருக்கு.
“இது என் வீடு! நான் உழைச்சு சம்பாதிச்ச வீடு. நான் இப்படித்தான் பேசுவேன். விருப்பமில்லைன்னா தாராளமாய் வெளியே போகலாம்.!”
“அண்ணா! அப்பா வந்தது எனக்காகத்தான். நீ அவரை ரொம்ப அவமானப் படுத்தறே!”
“உனக்காக வந்தாரா? உனக்காக பாசத்தில் வர்ர ஆளா இவர்.? இலாபமில்லாமல் துரும்பைக் கூட நகர்த்த மாட்டார். அடுத்து வரப் போற தேர்தலில் அந்த பொறுக்கி ஆகாஷ் இருக்கானே அவன் அப்பாவோட சப்போர்ட் மினிஸ்டருக்கு ரொம்பவே முக்கியம். அதுக்கு உன்னையும் என்னையும் பலியாக்கப் பார்க்கிறார் சட்ட அமைச்சர் சதாசிவம். சட்டத்தில் இருக்கிற ஓட்டைகள் தெரிஞ்சவருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?” தந்தையின் மன எண்ணங்களை துளி பிசகாமல் அனுமானித்துச் சொன்னான் ஆதன்.
“அண்ணா! என்னோட ப்ரைவேட்டான வீடியோஸ், ஃபோட்டோஸ் அவன் கிட்டே இருக்கு. நிஷாவுக்கும் உனக்கும், கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா எல்லாத்தையும் நெட்டில் விட்டுடுவான் ப்ளீஸ் எனக்காக..!”
“சரி, உனக்காக நான் செய்யறேன்! எனக்காக இதுவரை என்ன செஞ்சிருக்கே சம்யூ? அவன் சட்டையைப் பிடிச்சு ஏன்டா இப்படிப் பண்ணினேன்னு கேட்கத் திராணியில்லாத உனக்கெல்லாம் எதுக்கு காதல்? எதிர்த்து நின்னு கேள்வி கேட்டால் உங்க அப்பாவோட மானம் கப்பலேறிடுமா? இந்த ஆளை நம்பி உன் வாழ்க்கையை ஆகாஷ் கையில் கொடுத்தேன்னு வையி, நடுத் தெருவில் நிற்க வச்சுடுவான் தெரிஞ்சுக்கோ!”
“ப்ளீஸ் ஆது! நீ நிஷாவை மட்டும், நீ கல்யாணம் பண்ணிட்டா எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடும். நிஷாவை நீ கல்யாணம் பண்ணிகிட்டா ஆகாஷ் எதுவும் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான்.!”
“ஓ! இப்போ இப்படி மிரட்டினவன் நாளைக்கு டிவோர்ஸ் கொடுன்னு மிரட்டுவான் அப்போ என்ன செய்வே? யார்கிட்டே போய் கேட்பே?” ஆதனின் கேள்விக்கு பதில் தெரியாமல் திருதிருவென விழித்தபடி சம்யூ நிற்க,
“அதெல்லாம் நான் பார்த்துப்பேன். அவள் ஆகாஷை கல்யாணம் பண்ண தயாராகத்தான் இருக்கா. நீ தான் நிஷாவைக் கல்யாணம் பண்ணத் தயாராய் இல்லை.! நீ மட்டும் சரியாய் இருந்தால் போதும். உன்னைப் பெத்த எனக்குத் தெரியும் உனக்கு செய்றது நல்லதா கெட்டதான்னு. நீ தான் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறே!”
“எது நல்லது, வரதட்சனைக்காகவும், உங்க அரசியல் இலாபத்திற்காகவும் என்னை விற்கிறது தான் நல்லதா?”
“சம்யூ உன் தங்கச்சின்னு நினைத்தால், அவளுக்கு நீ நிஜமாவே நல்லது பண்ணுறதா இருந்தால், இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக்கோ! இல்லைன்னா விட்டுடு அவள் எப்படி போனால் உனக்கென்ன? அவள் தான் உன் கூடப் பொறந்தவள் இல்லையே..!” எங்கே அடித்தால் அவனுக்கு வலிக்குமோ, சரியாய் குறிபார்த்து அடித்தார் சதாசிவம்.
அவரின் வார்த்தைகளில் ஆதனின் மனம், கலங்கிப் போனது. சம்யூவை வேற்று ஆளாய் நினைத்திருந்தால், முதலில் திருமணத்திற்கு சம்மதித்திருக்கவே மாட்டானே, வாஹினியிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்றதில் தான், ஆகாஷின் முழு சுயரூபம் தெரிந்தது அவனுக்கு.
அதனால் தான் சம்யூவிற்காக சம்மதித்த திருமணத்தை சம்யூவிற்காகவே வேண்டாமென முடிவு செய்தான். ஆனால் அதையெல்லாம் புரிந்துக் கொள்ளாமல், சதாசிவம் சொன்ன வார்த்தைகளில், உள்ளம் கலங்கிப் போக,
“எனக்குச் சம்மதம்..!” என்ற வார்த்தைகளை விருப்பமில்லாமலே உதிர்த்திருந்தான்.
கண்களுக்கு அவன் கேண்டி கண்சிமிட்டி சிரிக்க, உயிர் வலிக்க வலிக்க, அவளின் நினைவுகளை உள்ளுக்குள்ளிருந்து அப்புறப்படுத்த ஆயத்தமானான் ஆதன் ரித்விக்.
இசைக்கும்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கோழை தனமாக சம்யூ ஆதன் இருவரும் இருக்காங்க. கேவலமான அப்பா.
உண்மை தான் கலை மா ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💙