Loading

நினைவுகள் -38

அன்று…

” நான் அனன்யாவை கல்யாணம் செய்துக்கிறேன்.” என்ற விஸ்வரூபனின் வார்த்தைகளை கேட்டதும், ருக்குமணியின் முகம் மலர… ரஞ்சிதத்தின் முகமோ மாறியது. அதை வெளிக்காட்டாமல் இருக்க முயன்றார். ஆனால் அவரால் முடியாமல் போகவே வெளியே சென்றார்.

அவருக்கு பின்னே வந்த கிருஷ்ணனோ ஆறுதலாக மனைவியின் கையைப் பிடிக்க.

” ஏங்க… நான் எவ்வளவோ இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்காக பொறுத்துப் போய் தானே இருக்கேன். ஆனால் அத்தை, என்னை இந்த வீட்ல ஒருத்தியா நினைக்கலை. ரூபனையும் அவங்க பேரனா நினைக்கலை. அவங்களுக்கு, அவங்க பேத்தி தான் முக்கியம். நாங்க எங்கிருந்தோ வந்தவங்க தானே.” என்று கதறி அழ…

” ரஞ்சிதம்… அம்மா வயசானவங்க… ஏதோ புரியாம பேசுறாங்க விடு…” என்று கிருஷ்ணன் சமாதானம் செய்ய முயன்றார்.

“சும்மா ஏதாவது என்னை சமாளிக்கறதுக்காக சொல்லாதீங்க. அவங்க வயசானவங்கன்னா இருந்துட்டு போகட்டும். அதுக்காக என் பையனோட ஆசையில் குறுக்க நிப்பாங்களா.”

” அனு நம்ம வளர்த்த பொண்ணு இல்லையா… இப்படி எல்லாம் பேசாத ரஞ்சிதம்.”

” நம்ம பையன் யாரையும் விரும்பலைன்னா, நானே முன்ன நின்னு கல்யாணம் செய்து வைப்பேனே. என் பையன் அவ்வளவு ஈஸியா அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்தாமல் இருக்க மாட்டானே. இப்போ அந்த பொண்ணை மறக்கணும்னா, அவனால முடியுமா? என் பையன் வாழ்க்கை அவ்வளவு தானா?” என்று புலம்பிக் கொண்டே நிமிர்ந்தாள் ரஞ்சிதம்.

அங்கோ அனன்யா, அனைத்தையும் கேட்டு விட்டேன் என்பது போல முகம் வெளுக்க நின்றாள்.

ஏற்கனவே ஆகாஷ் இல்லாமல் வாழவே விருப்பமில்லாமல் இருந்தவள், குழந்தை உண்டானதும் தான் கடவுள், அவளது வாழ்க்கையில் கருணை காட்டியதாக நினைத்தாள்.

ஏனென்றால், அவளது ஆகாஷின் ஜீவனல்லவா, அவளது வயிற்றில் உதித்திருக்கிறது.

ஆனால் அதை எண்ணி சந்தோஷம் கூட பட முடியாமல், அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்தேறிட, அலையில் மிதக்கும் துரும்பாக மிதந்தாள்.

 நேற்று இரவு நடந்த களேபரத்தில் கூட, தனக்கு ஆறுதலளிக்க தான் குழந்தை உண்டாகிருக்கிறது என்று உள்ளுக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி ஏற்பட்டது.

 ஆனால் அதுவும் இப்பொழுது நொறுங்கி போய் விட்டது. தனது மாமாவின் காதலுக்கு தானே முட்டுக்கட்டையாக இருக்க போவதை எண்ணிக் குழம்பியவள், வெளியே வர ‌…

தனது அத்தை பேசிய அனைத்தையும் கேட்டு உள்ளுக்குள் மரித்தாள். தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும். தான் இருந்தால் எல்லோருக்கும் தொல்லை தான் என்று எண்ணத் தொடங்கினாள்.

குழந்தைக்காக கூட உயிர் வாழ வேண்டும் என்று எண்ணவில்லை அனன்யா.

அனன்யா வெளியே சென்ற பிறகு, அவளைத் தேடி வந்தான் விஸ்வரூபன்.

அவனிடம், ” மாமா… இந்த கல்யாணம் வேண்டாம்.” என்று அனன்யா உறுதியாகக் கூற.

“நான் பாட்டியிடம் வாக்குக் கொடுத்து விட்டேன். இதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். ” என்றவன்,

கிருஷ்ணனிடம், ” பாட்டி இப்பவே, இங்கேயே திருமணம் செய்யணும் என்று சொல்றாங்க. ஏற்பாடு பண்ணுங்க அப்பா.” என்றவன் அவனது ஓய்வு அறைக்குச் சென்று விட்டான்.

” ரூபா…” என்ற ரஞ்சிதத்தின் குரல் அவனது செவியை எட்டவில்லை. அதற்கு பிறகு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மிகப் பெரிய சுகம் ஹாஸ்பிட்டலின் சேர்மனின் திருமணம், ஹாஸ்பிடலில் எளிமையாக நடந்தது.

 தன் பேத்தியின் திருமணம் நடந்த சந்தோஷத்தில், மீண்டும் ஹார்ட் அட்டாக் வர, ருக்குமணியின் உயிர் மகிழ்ச்சியோடு பிரிந்தது.

                    ******************

 தினமும் எவ்வளவு வேலை இருந்தாலும், ஒரிரு நிமிடங்களாவது ஃபோன் செய்து பேசும் விஸ்வரூபன் பேசாமல் இருக்க, ராதிகாவிற்கு ஏனோ மனம் பதட்டமாகவே இருந்தது.

இரவு முழுவதும் அவனுக்கு அழைத்துக் கொண்டு இருக்க… ஹாஸ்பிட்டலில் இருந்ததால் சைலன்டில் போட்டிருந்தான்.

காலையில் முதல் வேலையாக அனன்யாவிற்கு, அழைத்தாள் ராதிகா.

அவளோ பாட்டி இறந்த அதிர்ச்சியிலும், திடீர் திருமணத்திலும் பிரம்மை பிடித்தாற் போல் இருந்தாள்.

அருகில் இருந்த நர்ஸ் தான் ஃபோனை எடுத்து, அனன்யாவின் பாட்டி இறந்த தகவலைக் கூற…

 ஒரு நிமிடம் அனுவையும், விஷ்வாவையும் நினைத்து கவலைக்கொண்டவள், பிறகு சுந்தரியிடம் சென்று, ” மா… அனுவோட பாட்டி இறந்துட்டாங்க. நான் போகணும் மா.” என ராதிகா கூற.

” இன்னைக்கு விக்ரம் கடைக்கு வர மாட்டான். ஃப்ரெண்டோட ரிஷப்ஷனுக்கு போகணும்னு சொன்னான். உங்க அப்பா வர்றது சந்தேகம்.” என சுந்தரி கூறினார்…

‘ கடைசியா விஷ்வாவோட பாட்டிய பார்க்கக் கூட முடியாதா… எத்தனையோ முறை, அனுவும், விஷ்வாவும் கூப்பிட்டாங்களே… அப்போதே போயிருக்கலாமோ…’ என தனக்குள் யோசித்து முகம் வாடி நின்றாள்.

வெளியே சென்றிருந்த சண்முகமும் உள்ளே வந்தவர் ,வாடி நின்ற ராதிகாவை தான் பார்த்தார்.

” ஏன் டா ராது… என்னமோ போல இருக்க. என்ன பிரச்சினை?”என்று வினவ.

சுந்தரி தான் நடந்ததைக் கூறினார்.

சண்முகமோ, ” நான் வர முடியாது மா. ஆனால் விக்ரம் சென்னைக்கு தான் போறான். அவனோட போய் உன் ஃப்ரெண்ட் வீட்ல இறங்கிக்கோ. விக்ரம் பங்ஷன் முடிந்து, திரும்ப வரும் போது உன்னைக் கூப்பிட்டுப்பான்.” என்று அவளது வருத்தத்தைப் போக்க உடனடியாக தீர்வு கண்டுப் பிடித்தார்.

விக்ரமோடு கிளம்பியவள், விஸ்வரூபனது வீடு இருக்கும் ஏரியாவில் இறங்கிக் கொண்டாள்…

” ஃபோன் பண்ணுறேன் ராதிகா. டேக் கேர்.” என்று விட்டு விக்ரம் அவனது வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.

ராதிகா அந்த வீட்டிற்குள் கூட நுழையவில்லை. வெளியே தான் எல்லோரும் இருக்க. ருக்குமணியை தூக்குவதற்கு ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது.

அனுவைப் பார்த்தவள் மெல்ல அவளருகில் சென்று, ” அனு…” என ஆறுதலாக அழைக்க.

இதுவரை எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், ராதிகாவைப் பார்த்ததும் அழுகை கட்டுக்கடங்காமல் பெருகியது.

அனுவோ, தான் அவளது வாழ்க்கையை தட்டிப் பறித்ததை நினைத்து அழுது கரைய… ராதாகாவோ, பாட்டியை நினைத்து அழுவதாக எண்ணி, ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். ” அனு..‌. பாட்டி நம்மக் கூடத்தான் இருப்பாங்க. அழாதே.” என்றாள்.

அனு அழுவதைப் பார்த்த பெரியவர், ” தம்பி விஸ்வரூபா… உன் பொண்டாட்டிய பாரு. அழுதுக்கிட்டே இருக்கா. அவளை சமாதனப்படுத்து.” என்று தனது கட்டைக் குரலில் கூறினார்.

அவரது குரல் செவியில் நுழைய, அதிர்ச்சியாக தன் தோழியைப் பார்த்தாள் ராதிகா.

 அனன்யாவோ தலைக் குனிந்து நின்றாள்.

தான் கேட்டது பிரம்மையோ என்று எண்ணிய ராதிகா அனன்யாவை மீண்டும் பார்க்க.

அவளது கழுத்தில் இருந்த மஞ்சள் மாறாத தாலிக்கயிறு, ராதிகாவின் செவியில் விழுந்தது எல்லாம் உண்மை தான் என்று சொல்லாமல் சொல்லியது.

பெரியவரின் குரலில் அனுவைத் தேடி அவ்விடத்திற்கு வந்தான் விஸ்வரூபன்.

அனுவிற்கு அருகில் இருந்த ராதிகாவை பார்த்தவன், என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்க.

ராதிகாவோ கண்ணீரோடு அவனைப் பார்த்து விட்டு,தடுமாறிக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

அனன்யாவும், விஸ்வரூபனும் ,” ராது…” என்றழைக்க…

அவளோ, திரும்பிப் பார்க்காமல் தளர்ந்த நடையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

 விக்ரம் வரும் வரைக்கும், அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அவளது காதல், அவளுடைய வீட்டில் யாருக்கும் தெரியாமலேயே போனது .

விஸ்வரூபனோ மனதிற்குள், ‘ ராதிகாவிற்கு எல்லாம் தெரிந்தது நல்லது தான். என் மேல் உள்ள கோபத்திலாவது அவளுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளட்டும்.’ என்று நினைத்தான்.

நாட்களும் வேகமாக மறைய… அனன்யா ஏனோ தானோவென்று இருந்தாள். குழந்தை அதுபாட்டுக்கு வளர்ந்தது.

 ஒழுங்காக மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளாமல் அவளது உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டு இருந்தாள்.

வேண்டுமென்று செய்யவில்லை, ஆனால் அலட்சியமாக இருந்தாள்.

திடீரென்று ஒரு நாள் கிருஷ்ணனுக்காக காத்திருந்தவள் அவர் வந்ததும், ” மாமா… என்னோட ஃப்ரெண்ட்க்கு நம்ம காலேஜ்ல ஒரு சீட் அலார்ட் பண்ணுறீங்களா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

” அனு மா… நம்ம காலேஜுன்னு சொல்லிட்டு, அப்புறம் என்னமா தயக்கம். அது உன்னோட காலேஜ். யாரை வேணும்னாலும் சேர்க்கலாம், எத்தனை பேரை வேணும்னாலும் சேர்க்கலாம் சரியா…” என்றவர் அவளது தலையை வருட.

 கலங்கிய கண்களை சமாளித்துக் கொண்டு, ” சரி.” என்பது போல் தலையை ஆட்டினாள்.

” மாமா… ஆனால் என் பேரை சொல்லாமல், நம்ம சேலவர் டாக் மூலமாக , ஃப்ரீ கோட்டால ஏற்பாடு பண்ணுங்க.” என்று மெல்லிய குரலில் கூற…

தனது மருமகளை கூர்ந்துப் பார்த்தார் கிருஷ்ணன்.

அவரது பார்வையில், தடுமாறிய அனன்யா, ” மாமா! சிபாரிசில் சேர அவளுக்கு விருப்பம் இல்லை. அதான்…” என்று ஏதேதோ கூறி சமாளித்தாள்.

” சரி டா.” என்ற கிருஷ்ணனுக்கு, உள்ளுக்குள் சந்தேகமாக தான் இருந்தது. ‘ என்னைக்காக இருந்தாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது.’ என்று எண்ணிக் கொண்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார்.

“தேங்க் காட்.” என்று கடவுளுக்கு நன்றி கூறினாள் அனன்யா. ஆம் அவள் எப்படியாவது ராதிகாவை, இங்கே வர வைத்து, அவளையும், விஸ்வரூபனையும் சேர்த்து வைத்து விட்டு, தான் அவர்களது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என்று எண்ணினாள்.

அவர்களது வாழ்க்கை விட்டு தான் விலக வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் இறைவனோ, இவ்வளவு நாள் அவள் பட்ட துன்பங்களே போதுமென அவரிடம் அழைத்துக் கொண்டார்.

தனது மாமாவின் சம்மதம் கிடைத்தவுடன்,’ ராதிகாவை ஒரு முறை தஞ்சாவூர் சென்று பார்த்தால் என்ன?’ என்று தோன்றி விட.

“தஞ்சாவூர் கோவிலுக்கு போகணும்னு ஆசையா இருக்கு அத்தை…” என்று ரஞ்சிதத்திடம் கூறினாள்.

” அப்படியா தங்கம். இரு ரூபனை கூட்டிட்டு போக சொல்றேன். அப்படியே பக்கத்துல உள்ள கோயில்களுக்கும் போயிட்டு வாங்க.” என்றவர் உற்சாகமாக திட்டம் தீட்டினார்.

எப்படியாவது தன் மகனும், மருமகளும் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்தார்.

அவரது கோபமெல்லாம் சில நாள் தான் இருந்தது. அதுவும் அவரது மாமியார் மேல் மட்டுமே. அவரும் இறந்து விட… இறந்தவர் மேல் கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது என்று விட்டுவிட்டார்.

விஸ்வரூபன் வீட்டிற்கு வந்ததும் ரஞ்சிதம், “தம்பி… அனு தஞ்சாவூர் கோவில் பார்க்கணும்னு ஆசைப்படுறா… போயிட்டு வாங்க.” என்றார்.

அங்கு ஹாலில் டிவியில் கண் வைத்துக் கொண்டு, காதை இவர்கள் பேச்சில் வைத்துக் காத்திருந்தாள் அனன்யா.

அவளை ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்த்தவன் தன் தாயிடம், ” சரி மா.” என்று விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான்.

‘ ராதிகாவை பார்க்கவே கூடாது.’ என்று கடவுளுக்கு அவசர வேண்டுதல் வைத்து விட்டு, ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான் விஸ்வரூபன்.

ஆனால் அவளை சந்தித்ததும் அல்லாமல், அவளது தவிப்பைக் கண்கொண்டு பார்த்து விட்டும் தான் வந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்