
நினைவுகள் -36
அன்று…
முகமெல்லாம் களையிழந்து, இரத்தப்பசையின்றி ஆகாஷின் வீட்டிற்கு அருகில் இருந்த பார்க்கிற்குள் நுழைந்தாள் அனன்யா.
ஏற்கனவே ஆகாஷிற்கு ஃபோனில் அழைத்து இங்கே வரச் சொல்லியிருக்க…
அவளது குரலை வைத்தே, ஏதோ சரியில்லை என்றுணர்ந்த ஆகாஷ், உடனே கிளம்பி வந்திருந்தான்.
அவளைப் பார்த்ததும்,அவளது அருகில் வந்தவன், ” என்ன அனு… ஏதும் பிரச்சனையா?” என்று வினவ.
அது பொது இடம் என்பதை மறந்து, பொல பொலவென அழுதாள் அனன்யா.
” அனு என்னமா ஆச்சு. கன்ட்ரோல் யுவர் செல்ஃப். எல்லோரும் பார்க்குறாங்க.” என்றுக் கூற.
அவளோ, அழுகையை நிறுத்தியபாடு இல்லை.
பிரச்சனை சற்று பெரியது தான் என்பதை புரிந்து கொண்ட ஆகாஷ் அவளை அணைத்துக் கொண்டான்.
அவளது அழுகை குறையவும்,” இப்போ சொல்லு அனு.” என்று அவளது முகத்தைத் துடைத்துக் கொண்டே வினவினான் ஆகாஷ்.
” ஆக்ஸ்… இன்னைக்கு ஈவினிங் எனக்கு நிச்சயதார்த்தம். என் கிட்ட சொல்லாமலே வீட்ல ஏற்பாடு பண்ணியிருக்காங்க. என் மேல ஏதோ சந்தேகம் வந்துடுச்சு போல. என்னால வீட்ல உள்ளவங்களையும் ஹர்ட் பண்ணவும் முடியாது, உன்னையும் விட முடியாது. அதனால நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்று அழுதப்படியே கூறினாள் அனன்யா.
” அனு இப்பவே எப்படி கல்யாணம் பண்ண முடியும். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும்னாலும் அதுக்குன்னு சில பார்மலிடீஸ் இருக்கு. ஒன் மன்த்துக்கு முன்னாடியே பதிவு பண்ணனும்.” என.
” எனக்கு அதெல்லாம் தெரியாது. இப்பவே நம்ம கல்யாணம் நடக்கணும். இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.” என்று அவனை அணைத்தப்படியே அழ.
” ஷ்… அனு அப்படியெல்லாம் சொல்லாத… உன்னோட திகட்ட திகட்ட வாழணும். உனக்கென்ன இன்னைக்கே நம்ம கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே நான் ஏற்பாடு பண்றேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல வொர்க் பண்ணுறான். நான் அவன் கிட்ட ஹெல்ப் கேட்குறேன்.” என்றவன் அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தவன், அவளது தலையை ஆறுதலாக வருடிக் கொண்டே ஃபோன் செய்தான்.
” ராகவ் எனக்கு ஒரு ஹெல்ப்…” என்றவன், எல்லாவற்றையும் கூற…
” நீங்க ரெண்டு பேரும் வாங்க. நான் பார்த்துக்கிறேன் ஆகாஷ். ரெண்டு பேரோட ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பர்த்சர்டிஃபிகேட் ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க. முதல்ல இன்னைக்கு மேரேஜ் பண்ணிக்கலாம். மேரேஜ் சர்டிஃபிகேட் ஒன் மன்த்துக்கு அப்புறம் வாங்கிக்கலாம்.”
” சரிடா… ரொம்ப தேங்க்ஸ்.”
” நமக்குள்ள என்ன டா தேங்க்ஸ் எல்லாம்… வரும் போது, தாலி, மாலை எல்லாம் வாங்கிட்டு வந்துடு.” என்றான்.
” சரிடா.” என்றவன் அனுவிடம் திரும்பி, ” அனு சில டாக்குமெண்ட் தேவைப்படுது. வீட்ல போய் எடுத்துட்டு கிளம்பலாம். உன்னோடத ஃபோன்ல இருந்து எடுத்துக்கலாம். அதுவுமில்லாமல் இன்னைக்கு ஆதி பிறந்தநாள். நீ சொன்ன சர்ப்ரைஸெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். அவனுக்கு விஷ் பண்ணிட்டு கிளம்பிடலாம்.” என்றான்.
அனுவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றவன், ஆதவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து விட்டு, காலேஜில் முக்கியமான வகுப்பிருப்பதாகக் கூறி விட்டு கிளம்பினர்.
அடுத்த அரைமணி நேரத்தில் ரிஜிஸ்டர் ஆஃபிஸீல் இருந்தார்கள்.
இருவருக்கும் பெற்றோர், உறவினர் எல்லோரும் இருந்தும், யாரும் இல்லாதது போல் திருமணத்திற்கு தயாரானர்கள்.
காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் இருவரை சாட்சி கையெழுத்துக்காக அழைத்திருந்தான்.
இவர்களது முறைக்காக காத்திருந்த போது, அனுவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டிருக்க…
” அனு… இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல வீட்டுக்கு வேணாம் போகலாமா?” என.
” வேண்டாம்…” என்று தலை அசைத்தாள்.
பிறகென்ன ஆகாஷ், அவனது தம்பியைக் கூட அழைக்காமல் அவளை திருமணம் செய்து தனது சரிபாதியாக்கிக் கொண்டான்.
அவர்கள் இருவரையும் வாழ்த்திய தோழர்கள், அங்கேயே விடைப்பெற.
” டேய்… சாப்பிட்டு போகலாம் வாங்கடா.” என்றான் ஆகாஷ்.
” யூ கேரி ஆன் மச்சான். இன்னொரு நாள் பார்க்கலாம்.” என்றவர்கள், மெல்லிய குரலில் அவனை கேலி செய்து விட்டே அந்த இடத்தை விட்டு கிளம்பினர்.
இதையெல்லாம் கவனிக்கவில்லை அனன்யா. இப்போது அவளது மனதில் ஒரு குற்றவுணர்வு ஓடிக் கொண்டிருந்தது. ‘ நான் சுயநலமா நடந்துக்கிட்டேனா? அம்மாவைப் பற்றி யோசிச்சு இருக்கணுமா? அம்மா என்ன நினைப்பாங்க? பாட்டி என்ன நினைப்பாங்க?’ என்று யோசனை மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
நண்பர்கள் கிளம்பவும், அனன்யாவைப் பார்த்த ஆகாஷ், பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
” வா அனு…” என.
” எங்க?” என பதறினாள் அனன்யா.
” நீ ரொம்ப ரெஸ்ட்லஸ்ஸா இருக்க. எங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறமா என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் டா.” என்று அவளது கையை ஆதரவாக பற்றினான்.
” ம்.” என்று தலையசைத்தாள்.
” சரி ஏறு.” என்றவன் பைக்கை ஓட்ட…
அவனது முதுகில் சாய்ந்துக் கொண்டாள் அனன்யா.
வேகமாக வண்டியை ஓட்டியவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் கெஸ்ட்ஹவுஸில் நிறுத்தினான்.
முதலாளியைப் பார்த்ததும், சல்யூட் அடித்தவன் மணக்கோலத்தில் வந்தவர்களை யோசனையுடன் பார்க்க…
“ரெண்டு பேருக்கும் லஞ்ச் வாங்கிட்டு வாங்க.” என்று பணம் கொடுத்து அனுப்பியவன், அவளது மனதை திசைத் திருப்ப கேலியில் இறங்கினான்.
” ஹேய் அனு… முதல்ல நம்ம வீட்டுக்கு வர்ற, வலது காலை எடுத்து வச்சு வா. இல்லைன்னா சொல்லு, நான் தூக்கிட்டு வரேன். எது உனக்கு வசதி?.” என.
” ப்ச்… சும்மா இரு ஆக்ஸ். வீட்ல யாருமில்லையா?” என்று முகம் சிவக்க, படபடப்புடன் கேட்டாள்.
“வாட்ச்மேனோட வைஃப் டெய்லி வீட்டை சுத்தம் செய்துட்டு போய்டுவாங்க. பக்கத்துல தான் வீடு. சரி வா உள்ளே போகலாம்.” என்று அழைத்துச் சென்றான்.
இருவரும் வலதுக்காலை எடுத்து வைத்து நுழைந்தனர்.
அடுத்து என்ன செய்வது என்று இருவருக்கும் புரியவில்லை. அனன்யா தன்னுடைய வீட்டை நினைத்து கவலையிலிருக்க.
ஆகாஷிற்கோ, அவளுடனான தனிமை, முதன் முறையாக அவனுக்கு பயத்தைக் கொடுத்தது. இங்கு அவளை அழைத்து வந்திருக்கக் கூடாது என்று எண்ணினான்.
தற்காலிகமாக இவனைக் காப்பத்துவதற்காக வாட்ச்மேன் வந்தார்.
இன்று…
ராதிகாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும்,” அழாதே ராது… அதான் உன் கிட்ட சொல்லாமல் தள்ளிக்கிட்டே போனேன். உன்னை பார்த்ததுமே பேபி தான் ஞாபகம் வந்தது. பட் அப்போ நீ யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேபி என் கிட்ட பேசுன பத்து வார்த்தைல, இரண்டு வார்த்தை ராது… ராது… என்பதாகத் தான் இருக்கும். அந்த ராது நீதான்னு அதுக்கப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்புறம் உன்னை வச்சு ப்ளே பண்ணனும் நினைக்கலை. உன் மூலமாவது குட்டி பேபியை பார்க்கணும் நினைச்சேன். தேங்க் காட்… குட்டிமாவைத் தூக்கிக் கொஞ்சிட்டேன்.” என்றவன் அமைதியாக அவளைப் பார்க்க…
” சாரி ஆதி… நான் உன்னை தப்பா நினைச்சுட்டேன். நீ கவலைப்படாதே… சீக்கிரமே பாப்பாவோட உன்னை சேர்த்து வைக்கிறேன்.” என்றாள் ராதிகா.
” அவ்வளவு பெரிய ஆசையெல்லாம் இல்லை. எப்பவாவது உங்க வீட்டுக்கு வந்து போக அனுமதி தந்தாளே போதும். ஆனால் எப்பப் பார்த்தாலும், வீட்டை விட்டு வெளியே போ என்று உங்க வீட்டு ஆளுங்க சொல்லிட்டே இருக்காங்க .” என்று பெருமூச்சு விட்டபடியே கூறினான் ஆதி.
” அதெல்லாம் பார்த்துக்கலாம். இந்த வீக்கென்டே பாப்பாவை பார்க்க வைக்கிறேன்.” என்றவள் மனதிற்குள்ளோ, ‘ என் வீடு என்று என் கிட்டேயே சொன்னல்ல விஷ்வா டியர். இரு உன்னை கதறடிக்கிறேன்.’ என்று மனதிற்குள் நினைத்தாள் ராதிகா.
*********
வெள்ளிக்கிழமைப் பொழுது அழகாக விடிந்தது. கல்லூரியில் காலை வகுப்பு மட்டுமே…
மதிய உணவு முடிந்ததும் தஞ்சாவூருக்கு கிளம்புவதாக பிளான்.
அவந்திகாவையும் அழைத்துச் செல்ல, கௌரியிடமும், ரஞ்சிதத்திடமும் பர்மிஷன் வாங்கியிருந்தாள்.
அவந்திகாவின் துணிகளை உற்சாகமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அதில் மண் அள்ளிப் போடுவது போல் வீட்டிற்கு வந்த விஸ்வரூபன், ” எதுக்கு பாப்பா ட்ரெஸ்ஸெல்லாம் எடுத்து வைக்கிறீங்க. பாப்பா இங்கேயே இருக்கட்டும்.” என்றுக் கூற…
ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தவள், ரஞ்சிதத்தைப் பார்க்க…
அவர் சப்போர்டுக்கு வந்தார்.
” தம்பி… குழந்தை ராதிகாவை விட்டுட்டு இருக்க மாட்டேங்குறா. அவ காலேஜ் போயிட்டு வர வரைக்கும் வச்சு சமாளிக்க முடியலை. இதுல இரண்டு நாள்னா சமாளிக்க முடியாது பா. கூட்டிட்டு போங்க. ” என்று முடித்து விட்டார்.
மாலைப் பொழுதில் கிளம்பியவர்கள் இரவு உணவிற்கு சென்று விட்டனர்.
சுந்தரியின் கவனிப்பில் விஸ்வரூபன் விழி பிதுங்கி நின்றான்.
” போதும்ங்க… ” என்று தடுக்கப் பார்க்க…
” இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க மாப்பிள்ளை.” என்று வற்புறுத்தி வைத்தார்.
தனது அருகிலமர்ந்து, பாப்பாவிற்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த ராதிகாவிடம் திரும்பி, “போதும்னு சொல்லு உங்க அம்மாக்கிட்ட. நைட் இவ்வளவுலாம் நான் சாப்பிட மாட்டேன்.” என்றான்.
ராதிகா அடிப்பட்ட பார்வை அவனைப் பார்க்க…
அவனுக்கோ, தான் செய்த தவறு உரைத்தது.
” சாரி… அத்தைக் கிட்ட போதும்னு சொல்லு…” என.
ராதிகாவின் முகம் பூவாக மலர்ந்தது.” வேண்டாம்னு சொன்னா அம்மா மனசு வருத்தப்படும். நீங்க வாங்கிக்கோங்க. வேண்டாம்னா நான் சாப்பிடுறேன்.” என.
அவளை ஒரு பார்வை பார்த்தவன், ” வேண்டாம். ஐ கேன் மேனேஜ் மைசெல்ஃப்.” என்றான்.
” ஓகே.” என்று தோளைக் குலுக்கியவள் குழந்தையிடம் கவனத்தை செலுத்தினாள்.
ஒரு வழியாக உணவருந்தி விட்டு அவர்களுக்கான அறைக்குச் சென்று ஓய்வெடுத்தனர்.
காலையில் சீக்கிரமாக எழுந்திருந்த ராதிகா குழந்தையுடன் கீழே வந்தாள்.
இவளைப் பார்ப்பதற்காகவே, விக்ரம், ஸ்வேதா, விகர்தனா எல்லோரும் வந்திருந்தனர்.
ராதிகாவிற்கு திருமணமாகவுமே, மாடியை வெகேட் செய்து விட்டு, பக்கத்தில் ஒரு வீடு காலியாக… அங்கே ஷிப்ட் ஆனார்கள்.
” ஏய் ஸ்வீட்டி…” என்று கத்தியப்படியே விகர்தனாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
விகர்தனாவும், ” ஸ்வீட்டி…” என்று ராதிகாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ள…
அவந்திகாவும், ராதிகாவை விடாமல் கட்டிக் கொண்டாள்.
” இங்கே பாரேன். இரண்டு குட்டிஸும் போட்டிப் போட்டுக் கொண்டு, என் மகளைப் படுத்துறதை…” என்ற சுந்தரி, அவந்திகாவை தூக்கி விளையாட்டுக் காட்டினாள்.
ஸ்வேதா, விக்ரம், ராதிகா மூவரும் கலகலவென பேசிக் கொண்டிருந்தார்கள்.
பேச்சு, பேச்சாக இருந்தாலும், ஒரு பார்வை வாசலிலே வைத்திருந்தாள்.
சற்று நேரத்திலே அவள் எதிர்பார்த்த ஆளும் வந்திருந்தான்.
” ஹேய் ஆதி… ஏன் இவ்வளவு லேட்.” என்று ராதிகா வினவ.
அவளைப் பார்த்து புன்னகைத்தான் ஆதவன்.
” வாப்பா ஆதவா. வந்து உட்கார் ” என்று சுந்தரி அழைக்க…
அங்கிருந்த விக்ரம், ‘ யார்?’ என்பது போல யோசனையாகப் பார்த்தான்.
விக்ரமின் பார்வையை ஆதவன் கவனிக்கவே இல்லை. ஸ்வேதா தான் பதிலளித்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1
