
நினைவுகள் -33
.” அனு… வர்ற சண்டே அவங்களை வீட்டுக்கு வர சொல்லு. நாங்க அவங்களைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டு தான், எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுவோம். கொஞ்சம் பொறுமையா இரு.”
” அதெல்லாம் நீங்க ஓகே பண்ணிடுவீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா. அப்புறம் ராதுக் கிட்ட இப்போ எதுவும் சொல்லாதீங்க. ஆகாஷோட வீட்ல இருந்து வந்துட்டு போகட்டும். நான் தான் அவக் கிட்ட சொல்லுவேன்.” என்றுக் கூறி அனு புன்னகைக்க…
” ம் சரி அனு…” என்றவனோ மனதிற்குள், ‘ நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்.’ என்று வேண்டிக் கொண்டான். ஆனால் நடந்ததோ வேறு.
யாருடைய சப்போர்ட் இருக்கு என்று அனு உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்காளோ, அவங்களே ஆகாஷின் பெற்றோரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லப் போவதை அறியவில்லை
இதை எதையும் அறியாத பேதைப் பெண் அனன்யா, மறுநாள் உற்சாகமாக கல்லூரிக்கு கிளம்பினாள்.
பாட்டியிடம் மட்டும்,” ஈவினிங் லேட்டாகத் தான் வருவேன் ருக்கு.” என்று விட்டு ஓடி விட்டாள்.
” வாடி எப்படியும் இங்க தானே வந்தாகணும். என்னையே பேர் சொல்லிக் கூப்பிடுறீயா.” என்று கத்திக் கொண்டிருந்தார்.
” எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்.” என்றபடியே உணவருந்த அமர்ந்தாள் கௌரி.
” பாவம் டி குழந்தை. எதுவும் சொல்லாத. நல்லபடியா, அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைச்சுட்டா, இந்த உசுரு நிம்மதியா போய் சேரும்.” என்று கண்கள் கலங்க.
” அனு… நல்லபடியா இருப்பா. எதுக்கு இப்போ கண் கலங்குறீங்க. மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்ற அன்னைக்கு என்ன செய்யணும்? டின்னருக்கு தான் வருவாங்க என்று அனு சொன்னா? டிஃபன் வீட்ல செஞ்சுடலாம். ஸ்வீட் வீட்ல செய்யலாமா? இல்லை கடையில் வாங்கலாமா அத்தை.” என்று ரஞ்சிதம், அவரது மனதை பேத்தியின் விஷேஷத்தில் திசை திருப்பினார்.
அவர் நினைத்தது போலவே ருக்குமணி அன்னைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கலானார்.
” ரஞ்சிதம்… என்னதான் கடையில வாங்கி செய்தாலும், வீட்டில் செய்வது போல் இருக்காது. அதனால் வீட்டிலே செஞ்சிடலாம். மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும் என்று அனுக்கிட்ட கேட்டு, அதையே மெனுவா செஞ்சுடுவோம். அப்புறம் வீட்டை கிளீன் பண்ண சொல்லணும்.” என்று இருவரும் திட்டம் போட்டுக் கொண்டிருக்க…
கௌரியோ, ‘மாமியாரையும், மருமகளையும் திருத்தவே முடியாது.’ என்று நினைத்துக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.
இவர்கள் இங்கு இப்படி ப்ளான் போட அனுவோ, காலேஜுக்குச் சென்றவள் எப்போது தான் வகுப்புகள் முடியும் என்று காத்திருந்தாள்.
வகுப்புகள் முடியவும், அவனை இழுத்துக் கொண்டு அருகிலுள்ள பார்க்கிற்க்குச் சென்றாள்.
” அனு! உங்க வீட்ல எப்படி ஓகே சொன்னாங்க. நீ வேற பாதியிலே ஃபோனை வைக்கவும் பயந்துட்டேன். ” என்று ஆகாஷ் கூற.
அவன் தோளில் சாய்ந்து, ” எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆக்ஸ். நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். சண்டே ஈவினிங் ஃப்ரீ தானே. அங்கிள், ஆன்ட்டி, ஆதியை அழைச்சிட்டு வந்துடு.”
” இப்போ தான் நிம்மதியா இருக்கு.
எங்க ஒருவேளை உங்க மாமாவுக்கு கட்டி வைத்து விடுவார்களா என்று ஒரே டென்ஷன்.” என.
” சேச்சே… எங்க ரெண்டு பேருக்குமே அந்த மாதிரி தாட்ஸ் கிடையாது. அதுவுமில்லாமல் எங்க மாமா சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்காங்க. என்னோட ஃப்ரெண்ட் ராதிகாவைத் தான் மாம்ஸ் லவ் பண்ணிட்டு இருக்காங்க. ராதிகாவை தெரியும்ல…” என.
” ம் நல்லா தெரியும். தினமும் இரண்டு, மூணு தடவையாவது அவங்களைப் பத்தி பேசாமல் இருக்க மாட்டியே.” என்று சொல்லி சிரிக்க…
அவளும் சிரித்தாள்.
” எங்க வீட்டுக்கு நீங்க வரும்போது, நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி கலர்ல டிரஸ் பண்ணுவோமா… மேட்சிங், மேட்சிங் எல்லாரும் நிச்சயதார்த்தம் கல்யாணத்துல தான் போடுவாங்க. நாம கொஞ்சம் டிஃப்ரெண்டா இருப்போம். ” என்று தனது கலர் கலரான கனவுகளைக் கூறினாள்.
அவளது கல்யாணத்தில் நடக்காது என்பதால் முன்கூட்டியே செய்ய விரும்பினாளோ என்னவோ?
நாட்கள் வேகமாக செல்ல, அந்த ஞாயிறு மாலையும் வந்தது.
வீட்டிலுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர்.
கௌரியும் அன்று ஓய்வு என்பதால், ரஞ்சிதத்துக்கு கிச்சனில் உதவி செய்து கொண்டிருந்தாள்.
வேலையாட்கள் ஒரு பக்கம் உதவ, உணவு எல்லாம் தயாராக இருந்தது.
இவர்கள் காத்திருக்கும் போதே, இன்னோவா க்ரிஸ்டா கார் போர்டிகோவில் வந்து நின்றது.
ஆகாஷும், ஆதவனும் முதலில் வீட்டிற்குள் நுழைய… அனுவோ வெட்கத்தில் சிவந்தாள்.
இருவரும் நீல கலரில் உடை அணிந்திருந்தனர்.
அவர்கள் பின்னே வந்த இருவரையும் பார்த்து, கௌரி அழுவதைப் போல இருக்க… கிருஷ்ணனும், ரஞ்சிதமும் திகைத்து நின்றனர். விஸ்வரூபன் ஒரு எமர்ஜென்சி என்று வெளியே சென்று இருந்தான்.
பாட்டிதான் முதலில் சுதாரித்து, ” எங்கே வர்றீங்க? என் வீட்டுக்கு வர்றதுக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?” என்று ஆங்காரமாக வினவ.
ஆகாஷுன் பெற்றோருக்கு அப்போது தான் அவரையே நியாபகத்திற்கு வந்தது. ஆகாஷும், ஆதவனும் பேச்சிழந்துப் போய், தர்மசங்கடத்துடன் இருக்கும் தாய், தந்தையை பார்த்து யோசனையில் ஆழ்ந்தனர்.
இன்று…
அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. யாருடைய நிழல் கூட இந்த வீட்டில் படக்கூடாது என்று நினைத்தானோ, அவனோ தங்களது வீட்டு ஹாலில் அமர்ந்து காஃபிக் குடித்துக் கொண்டே, அவந்திக்குட்டியை கொஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்ததும் உடம்பெல்லாம் தீப்பிடித்தாற்போல இருந்தது.
” அம்மா… ” என்று வேகமாக கத்த…
பதறியடித்துக் கொண்டு வந்தார் ரஞ்சிதம்.
” முதல்ல குழந்தையை வாங்கிட்டு போங்க.” என்று விஸ்வரூபன் கர்ஜிக்க…
ரஞ்சிதமும் நடுக்கத்துடன் குழந்தையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.
ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வரேன் என்று மாடிக்குச் சென்றிருந்த ராதிகா, விஸ்வரூபனது குரலில் வேகமாக இறங்கி வந்தாள்.
” என்னாச்சு…” என்று பதறிய அவளை அலட்சியம் செய்து விட்டு, ஆதவனைப் பார்த்து, ” கெட் லாஸ்ட்.” என்றான்.
” விஷ்வா ஸ்டாப் தி நான்ஸென்ஸ். ஹீ இஸ் மை கெஸ்ட்.” என்றாள் ராதிகா.
ஆதவனோ, குழந்தையை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தான். அதான் பலமுறை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லியிருந்தும், திரும்ப அந்த வீட்டிற்கு வந்திருந்தான்.
இப்போதோ மனதிற்குள் ஒரு சின்ன நிம்மதி. ராதிகா அவனுக்கு ஆதரவாக பேசியதைக் கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
கோபத்தை கட்டுப்படுத்த அமைதியாக கண்மூடி நின்று கொண்டிருந்தான் விஸ்வரூபன். ஆனால் ராதிகா விடாமல், கேள்விக் கேட்க.
” அந்த ஆதவன் என் வீட்டுக்குள்ள வரக்கூடாது அவ்வளவு தான்.” என்றவன் வேகமாக வெளியே சென்று விட்டான்.
‘ எனக்கு இந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லையா.’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். யாரிடமும் பேச பிடிக்காமல் தனது அறைக்குள் சென்று விட்டாள்.
இரவு உணவிற்கு வந்தப் போது, எல்லோருடைய முகமும் ஒரு மாதிரியாக இருந்தது. அதைப் பார்த்த ராதிகாவிற்கு குழப்பம்.
‘ஆதி அப்படி என்ன செய்தான்? அவனுக்கும், இந்த குடும்பத்திற்கும் என்ன பிரச்சினை? ஒன்றும் புரியலையே! ‘ என்று நினைத்துக் கொண்டே உணவருந்தினாள்.
கிருஷ்ணன், ” ராதிகா சாப்பிட்டதும் கார்டனுக்கு வா. உன்னிடம் கொஞ்ச பேசணும்.” என்றார்.
“சரி.” என்று தலையாட்டியவள், அவர் பின்னே சென்றாள்.
” ஆதவனோடு பேச்சு வச்சுக்காத ராதிகா. நம்மக் குடும்பத்தோட, அவன் எந்தவித தொடர்பு வச்சுக்கிறதை நான் விரும்பலை.” என…
” ஏன் அங்கிள்? ஆதி மேல கோபமா இருக்கீங்க. ஒரு வேளை, அந்த வீடியோ அவன் போட்டதா நினைக்கிறீங்களா? இல்லையே… ஃபர்ஸ்ட் வந்த வீடியோல ஆதியை, விஷ்வா அடிக்கிற மாதிரி தானே இருந்தது. அப்போ ஏற்கனவே இரண்டு பேருக்குள்ள பகையா? அப்போ ஆதி என்னை யூஸ் பண்ணிக்கிட்டானா? அந்த வீடியோஸை அவன் தான் போட்டானா… ஐயோ! தலையே வெடிச்சுடும் போல இருக்கே.” என்று புலம்ப.
” காம் டவுன் ராதிகா. ஆதவன் அந்த வீடியோவை எல்லாம் போடலை. அது என் மேல் உள்ள கோபத்துல, ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணுற ட்ரைனிங் டாக்டர் பண்ண வேலை.
அங்கே வேலைப் பார்க்குற நர்ஸை, லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணான். அதுக்காக வார்ன் பண்ணேன்.
அந்த கோபத்துல என் பையனோட கேரக்டரை டேமேஜ் பண்ண நினைத்தான்.
ரூபன் வார்ன் பண்ணி விட்டுட்டான். இனிமேல் அவனால எந்த தொந்தரவும் வராது. ஆதவன் விஷயம், ரூபன் தான் சொல்லணும். சரி மா, நீ போய் படு.” என்றார்.
உள்ளே வந்தவளுக்கோ உறக்கம் தான் வருவேனா என்றிருந்தது.
காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பினாள் ராதிகா.
குளித்து முடித்து விட்டு கண்ணாடி முன் நின்று பார்க்க… முகமோ வீங்கி போய் இருந்தது. இரவெல்லாம் தூங்காமல் அழுததன் பலன்…
கீழே உணவருந்த வந்தவளை, ஒரு நிமிடம் கிருஷ்ணனும், விஸ்வரூபனும் ஆராய்ச்சியாக பார்த்தனர்.
விஸ்வரூபன் அவளைப் பார்த்து விட்டு, அலட்சியமாக திரும்பி விட…
கிருஷ்ணனோ, ‘ பாவம் ராதிகா.’ என மனதிற்குள் எண்ணினார்.
அவளை சமாதானம் படுத்துவதற்காக, ” ராதிகா… இந்த வீக்கென்ட் தஞ்சாவூருக்கு இரண்டு பேரும் போயிட்டு வந்துடுங்க.” என.
கிருஷ்ணனை நிமிர்ந்துப் பார்த்தான் விஸ்வரூபன். கிருஷ்ணனோ, ‘நீ கண்டிப்பாக போய்த்தான் ஆகணும்.’ என்பதுப் போல் பார்த்தார்.
அவரது பார்வையில், விஸ்வரூபன் அமைதியாகி மீண்டும் உணவில் கவனத்தை செலுத்தினான்.
” ஓகே அங்கிள்.” என்ற ராதிகா, மகிழ்ச்சியாக காலேஜுக்கு கிளம்பினாள்.
காலேஜுலோ ராதிகாவிற்காக காத்திருந்தான் ஆதவன். ராதிகாவோ, அருகில் அமர்ந்திருந்தவனை ஒரு பொருட்டாக நினையாமல், அவனுடன் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்…
வகுப்புகள் நடந்ததால் ஆதவனும், பொறுமையாக காத்திருந்தான்.
லஞ்ச் பிரேக்கில், ” ஏன் ராது… உன் ஹஸ்பெண்ட் என்னை வீட்டை விட்டு அனுப்புனதை நினைச்சு பீல் பண்றியா?” என.
ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்து முறைத்தாள் ராதிகா.
” என்னாச்சு ராதிகா?”
” உனக்கும், விஷ்வாக்கும் என்ன பிரச்சனை? ஏற்கனவே உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துவராது தானே? சொல்லு… என்கிட்ட நீ எதுவும் சொல்லலை. உன்னை என்னோட ஃப்ரெண்டா தான் நினைச்சேன். நீ அப்படி எதுவும் நினைக்கலை. என்னை வச்சு ஏதோ கேம் ப்ளே பண்ணியிருக்க… ரைட்… ” என்றாள் ராதிகா.
” ராது… ” என்று ஆதவன் இழுக்க.
” எதுவும் இல்லை என்று சொல்லாத… எந்த சால்ஜாப்பும் வேண்டாம். உனக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு. அவன் ஒருத்தன் என்ன போட்டு படுத்துறது போதாதுன்னு… நீ வேற… என்ன நடந்ததுன்னு இரண்டு பேரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க… எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு...” என்று கண்கள் கலங்க ராதிகாக் கூற.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

