Loading

கைகளை பிசைந்தபடி நாற்காலியின் முனையில் அமர்ந்திருந்தாள் ஜனனி. “இது பெரிய ஆர்டர். இவர் ஆர்டர் மட்டும் கிடைச்சிடுச்சுன்னா, இவர் மூலமா உனக்கு நிறைய ஆர்டர் கிடைக்க வாய்ப்பு இருக்கு ஜனனி மா. இவருக்கு நட்பு வட்டாரம் அதிகம், கல்யாணத்துல பெரிய பெரிய வி.ஐ.பி-ங்க எல்லாம் வருவாங்க… உன்னோட கேட்டரிங் சாப்பாடு மட்டும் நல்லா இருந்ததுன்னு வை! நீயே போய் கேட்கணும்னு இல்லை, ஆர்டரா வந்து குவியும் பாரு!” என சுப்பிரமணி அன்று சொன்னது, மந்திரம் போல காதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ‘ஆர்டர் கிடைக்குமோ? கிடைக்காதோ?’ என்ற ஒருவிதப் பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள் ஜனனி.

மருமகளின் பதற்றத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக்கொண்ட நீலகண்டன், “ஜனனி மா” என்று அழைத்தார். அவரது அழைப்பிற்கு உடனே செவிசாய்த்த ஜனனி, “என்ன மாமா?” என்றாள்.

“எதுக்குடா மா உனக்கு இவ்வளவு பதற்றம்? பதற்றம் நம்ம நிதானத்தை இழக்க வைக்கும்! நீ என்ன பேசணும்னு நினைக்கிறாயோ, என்ன சொல்ல வந்தாயோ எல்லாம் மொத்தமா மறந்து போயிடும்… நிதானமா இருடா! தண்ணீரைக் குடி! ஆர்டர் கிடைக்குதோ இல்லையோ, நிதானமா பேசணும்மா” என்று சிரித்தபடி தைரியம் கொடுத்தார்.

கண்களை மூடித் திறந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், அருகில் இருந்தவரை புன்னகையுடன் பார்த்தாள்.

“குட்! உனக்கு இந்த ஆர்டர் கண்டிப்பா கிடைக்கும்டா மா!” என்றார் நம்பிக்கையுடன்.

வரவேற்பறையில் இருவரையும் அமர வைத்துவிட்டு, உள்ளே தன் நண்பனைப் பார்க்கச் சென்றார் சுப்பிரமணி. அறைக் கதவைத் திறந்து, “ஜனனி வா! சார் நீங்களும் வாங்க” என விளித்துவிட்டு உள்ளே செல்ல, அவரைத் தொடர்ந்து இருவரும் நுழைந்தனர்.

அங்கே நாலைந்து நபர்களுடன் வரதராஜரும் அமர்ந்திருந்தார். அவரது மகள் வழிப் பேத்தியின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்திட, மண்டபத்திலிருந்து வாசலில் பன்னீர் தெளிப்பது வரை கோடிகளையும் லட்சங்களையும் இறைத்திருக்கிறார் வரதராஜர். அவரது நெருங்கிய நண்பர்தான் சுப்பிரமணி.

திருமணத்திற்கு அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தவர், திருமண விருந்தை மட்டும் விட்டுவைப்பாரா? பெரிய அளவில் ருசியுடன் உணவைத் தயாரிக்கும் கேட்டரிங் சர்வீஸைத் தான் அவரும் தேடிக்கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாக அவர் சென்று வந்த கல்யாண விருந்துகளில் திருப்திகரமான உணவுகளை அவர் ருசிக்கவில்லை என்றும், உணவுப் பட்டியலிலுள்ள உணவுகள் அவருக்குப் பிடிக்கவில்லை என்றும் சுப்பிரமணியிடம் புலம்பினார். சுப்பிரமணிக்கோ சட்டென மூளையில் ஜனனியும், அவள் புதிதாக ஆரம்பித்த கேட்டரிங் சர்வீஸும்தான் ஞாபகத்திற்கு வந்தது.

சுப்பிரமணி வசிக்கும் அபார்ட்மெண்டில் நடந்த சிறு சிறு வீட்டு விசேஷங்களுக்கு ஜனனி கேட்டரிங் சர்வீஸைத்தான் அழைத்தனர்.

சின்ன விசேஷம், பெரிய விசேஷம் என்று பார்க்காமல் அவர்கள் கொடுத்த பட்டியலிலுள்ள உணவு வகைகளைப் பார்த்துப் பார்த்து அமிர்தமாகச் செய்ததோடு, ஆட்களை வைத்து மிக நேர்த்தியாகப் பரிமாற, அது சுப்பிரமணிக்குப் பிடித்துப்போனதால்தான் ஜனனியின் பெயரை நண்பருக்குப் பரிந்துரைத்தார். வரதராஜரும் அவளை வரச் சொல்லியிருந்தார்.

“வரதா! நான் சொன்னேனே நம்ம பொண்ணு ஜனனி! இது அவர் மாமனார் நீலகண்டன்…” என்று அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர், “சின்னப் பொண்ணா இருக்கியேம்மா! கல்யாணத்திற்கு ஆயிரத்திற்கும் மேலே வருவாங்க, உன்னால மேனேஜ் பண்ண முடியுமாம்மா? இப்போதான் ஆரம்பிச்சதா சொன்னான் சுப்பிரமணி! எப்படிம்மா அத்தனை பேருக்கும் சமைக்க முடியும்? சாப்பிட வந்த ஒருத்தருக்கும் ஒண்ணு கூட இல்லாமப் போகக் கூடாது! அந்த அளவுக்கு நிறைய சமைக்கணும், முடியுமா உன்னால?” எனச் சந்தேகமாகக் கேட்டிருந்தார். அவர் அருகே இருந்த இன்னும் இரண்டு மூன்று பேர் அவளது பதிலுக்காகக் காத்திருந்தனர்.

“முடியும் சார் எங்களால! நான் மட்டும் சமைக்கப் போறதில்லை, என்னோட ரொம்ப வருஷம் அனுபவமிக்க சமையல்காரங்க இருக்காங்க… அவங்க உதவியால நிச்சயம் என்னால முடியும்.

மண்டபத்துல சமைக்கப் போதிய வசதி இருந்தால், அங்கே சமைச்சுச் சுடச்சுடப் பரிமாற நாங்க தயார். நீங்க சொல்ற ஆயிரத்திற்கும் மேலே ஆட்கள் வந்தாலும் சமைச்சுப் போட நாங்க ரெடி சார். ஆட்கள் எண்ணிக்கையைச் சரியாக நீங்க சொல்லணும். நீங்க சொன்னதற்கும் அதிகமா சமைக்க வேண்டி வந்தாலும் சமைச்சுத் தர நாங்க தயார். நீங்க அதிகம் கொடுக்கணும்னு இல்லை… எங்களுக்குச் சில பேக்கேஜ்கள் இருக்கு, உங்களுக்கு எந்தப் பேக்கேஜ் வேணுமோ அதைச் சூஸ் பண்ணிச் சொல்லுங்க” என உணவுப் பட்டியல் மற்றும் விலை அடங்கிய கோப்பை (File) நீட்டினாள்.

மேலும் தனது பையிலிருந்த இனிப்பு வகைகள் அடங்கிய பெட்டியை அவர்கள் நடுவே வைத்தவள், “இது எங்க கேட்டரிங்ல இருக்கிற பிரத்யேக இனிப்பு வகைகள், சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க” என்றாள்.

“எங்க எல்லாருக்கும் சுகர் இருக்கேம்மா!” என்றார் ஒருவர். “எல்லாரும் சாப்பிடக்கூடிய வகையில்தான் இந்த இனிப்பு இருக்கும் சார், சாப்பிட்டுப் பாருங்க” என்றாள்.

அவரும் கொஞ்சமாகப் பட்டும் படாமல் எடுத்து வாயில் போட்டார். அது பிடித்துப்போக, மேற்கொண்டு கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டு, “ம்ம்… ரொம்ப நல்லா இருக்குமா!” என்றார். அவரைத் தொடர்ந்து அனைவரும் சாப்பிட்டுப் பார்க்க, ஓரளவுக்கு அனைவருக்கும் பிடித்துத்தான் இருந்தது.

வரதராஜருக்கும் பிடித்திருக்க, அவளது உணவுப் பட்டியலில் பாரம்பரிய உணவுகளும் இருந்தன, நவீன உணவுகளும் இருந்தன. அவருக்கு அனைத்தும் பிடித்திருந்தது. அவரது முகத்தில் மலர்ந்த புன்னகையே அவளுக்குள் பரவசமாக இருந்தது. ‘எப்படியும் கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் அவளும், ‘கொடுக்கலாம்’ என்ற நம்பிக்கையில் அவரும் சுப்பிரமணியைப் பார்த்துக் கண்களாலே கேட்க, அவரும் சம்மதமாகத் தலையை அசைத்தார்.

பழம் நழுவிப் பாலில் விழ வேண்டிய நேரத்தில், சட்டென வந்த குரங்கு பறித்துச் சென்றது போல, புயல் போல வேகமாக நுழைந்தான் அவன்.

கதவைத் தட்டி உள்ளே வரும் பழக்கம் இல்லை அவனுக்குப் போலும். வேகமாகத் திறந்து கொண்டு உள்ளே வர, அமர்ந்திருந்த அனைவரும் பதறிப்போனார்கள். நீலகண்டனும் ஜனனியும் கூடப் பயந்துபோனார்கள்.

“வணக்கம் மாமா! எப்படி இருக்கீங்க?” என்று கைகூப்பிக் கேட்டவனின் விரல்கள் அனைத்திலும் தங்க மோதிரம். கழுத்தில் இரண்டு மூன்று தடிமனான சங்கிலிகள். சங்கிலி தெரிய இரண்டு மூன்று பொத்தான்களைக் கழற்றிவிட்டிருக்க, அவன் நெஞ்சு முடி அப்பட்டமாகத் தெரிந்தது.

‘ஆர்டர் கிடைக்கிற நேரத்துல யார்ரா இவன் கரடி மாதிரி?’ என உள்ளுக்குள் புலம்பினாள்.

அனைவருக்கும் வணக்கம் வைத்தவன், பக்கத்தில் நின்ற ஜனனியைக் கண்டதும் கண்களில் இருந்த கூலர்ஸைக் கீழே இறக்கி, அவளைக் கீழிருந்து மேலாகப் பார்க்க, அவனது பார்வையில் முகத்தைச் சுளித்துத் திருப்பிக்கொண்டாள். அவர்களுக்கு இடையில் முறைத்தபடி வந்து நின்றார் நீலகண்டன்.

“ஓ!” என உதடு குவித்தவன், பார்வை வரதராஜர் பக்கம் திருப்பி, “என்ன மாமா? என்னை விட்டுட்டு கல்யாண விருந்து பத்திப் பேசிட்டு இருக்கீங்க போல! சரியில்லை மாமா இது! பாப்பா கல்யாணத்துக்கு எங்க கேட்டரிங் சர்வீஸைக் கேட்காம யார் யாரையோ கூப்பிட்டுப் பேசிட்டு இருக்கீங்க! எங்க சர்வீஸ் எத்தனை வருஷம் தெரியும்ல? நேத்து முளைச்ச காளானுக்கு என்ன தெரியும்னு நீங்க ஆர்டர் கொடுக்கிறீங்க?” எனக் கேட்டு ஜனனியின் தீப்பார்வைக்கு ஆளானான்.

‘அப்பா! என்னா பார்வை! பத்திக்கும் போலயே!’ என எண்ணிக் கொண்டு மீண்டும் வரதராஜரிடம் பார்வையைப் பதிக்க, “இல்லை கந்தா! சமீபகாலமா எந்த கேட்டரிங் சர்வீஸ்லயும் எனக்குப் பெருசா திருப்தி இல்லை, சுப்பிரமணி சொல்லப்போய் இவங்களை வரச் சொல்லியிருக்கேன்டா!”

“பேசிட்டீங்களா? கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா? கொடுங்க! கொடுத்துட்டு ஏன்டா கொடுத்தோம்னு தலையில அடிச்சுக்கங்க! சொந்தக்காரங்க நாங்க எதுக்கு இருக்கோம்…?! எங்ககிட்ட கலந்து பேசிக்காம நீங்களா முடிவு பண்ணா எப்படி?” எனத் தெனாவெட்டாகப் பேச, இவளுக்குத்தான் ஆயாசமாக இருந்தது.

“இல்லை கந்தா! ஒருமுறை கொடுத்துப் பார்க்கலாம்னு இருக்கேன்!” என மீண்டும் பேச, “கல்யாணமும் ஒருமுறைதான் பண்றீங்க! சாப்பாடு நல்லா இல்லைன்னா என்ன பண்ணுவீங்க? மனுஷங்க அவ்வளவு சீக்கிரம் மறக்கிறவங்க கிடையாது, ஞாபகத்துல வச்சு கேட்டுட்டே இருப்பாங்க, உங்களுக்குச் சங்கடமா இருக்காது…?” எனக் கேட்க, அவரோ தன் முடிவிலிருந்து அசராமல் அப்படியே இருந்தார்.

“இது வேலைக்கு ஆகாது” என்று அலைபேசியில் வேகமாகத் தட்டி யாருக்கோ அழைத்தான்.

“பெரியப்பா! உங்க சம்மந்தக்காரருக்கு எங்க சர்வீஸ்ல திருப்தியா இல்லையாம். யாருக்கோ ஆர்டர் தூக்கிக் கொடுக்கிறார், என்னன்னு கேளுங்க?” எனப் படப்படவெனப் பேசிவிட்டு அவரிடம் கொடுத்தான்.

வரதராஜரும் வாங்கிப் பேசினார். அங்கே என்ன சொல்லப்பட்டதோ, “சரி சம்மந்தி” என முடித்துக் கொண்டு அழைப்பைத் துண்டித்தவர், ஜனனியைச் சங்கடமாகப் பார்த்தார்.

அவளோ வலுக்கட்டாயமாகச் சிரித்தபடி, “இட்ஸ் ஓகே சார், நாங்க கிளம்புறோம்” என்று தனது கோப்பையை எடுத்துக்கொண்டு, “வாங்க மாமா போலாம்” என்று அங்கிருந்த அவனை அழுத்தமாகப் பார்த்துவிட்டுச் செல்ல, இவன் உதடுகளோ வளைந்து மீண்டன.

நீலகண்டனும் ஜனனியும் அமைதியாக வெளியே வந்தனர். ஜனனியின் கண்கள் கலங்கிவிட்டன. முதல் முறையாக வந்த நிராகரிப்பு. அதுவும் கைக்குக் கிடைக்கும் வேளையில் தட்டிப் பறித்துச் சென்றுவிட்டான் அவன்.

தன்னைத் திடப்படுத்திக்கொள்ள தனக்குள்ளே முயற்சி எடுத்துக்கொண்டே அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள் ஜனனி.

இருவரும் அமைதியாக நடக்க, “ஹோய் கண்ணகி!” என அழைக்க, அவள் திரும்பவில்லை.

அவனும் விடாமல் “ஏய் கோமதி, மாதவி, பத்மினி” எனப் பல பெயர்கள் அழைத்தபடி பின்னே வர, பொறுமையிழந்த ஜனனி நின்று திரும்பிப் பார்த்தாள்.

“கூப்பிடுறேன்ல காதுல விழல!” எனச் சட்டமாகப் பேச, அமைதியாகக் கைகட்டிக்கொண்டு நின்றாள்.

“உன் பேர் என்ன?” காலரை இழுத்துவிட்டபடி கேட்டான்.

“உனக்கு ஏன் நான் சொல்லணும்?”

“எதுக்கா? அப்புறம் எப்படி உன்னை கூப்பிடுறது?” என்றதும் விழிகளால் அவனைப் பஸ்பமாக்கிட, “ஆத்தி! கண்ணுலேயே ஃபையர் இருக்கே, பொசுக்கிடாதம்மா! பாவம் நானு!” என்று வழவழத்தவனை முறைத்துவிட்டுத் திரும்பிய வேளையில், “உன் கேட்டரிங் சர்வீஸ் பேர் என்ன? உன் போன் நம்பரைக் கொடுத்துட்டுப் போ!” என்றான் நிதானமாக.

“எதுக்குக் கொடுக்கணும்?”

“இல்லை… சின்னச் சின்ன ஆர்டர் எதுவும் வந்தா உனக்குச் சொல்லலாம்னுதான்” என்றான். அவன் முன் பெரிதாகக் கையெடுத்துக் கும்பிட்டவள், “என்ன பிராயச்சித்தமா? கைக்குக் கிடைக்க வேண்டியதைப் பறிச்சிட்டு, அந்தப் பாவத்தைப் புண்ணியமாக்குறாயோ! எனக்கு உன் உதவி தேவையில்லை… எல்லாரும் உன்கிட்ட வந்து குவியப்போறதில்லை, எனக்கு ஆர்டர் வரும்! நானும் என் திறமையைக் காட்டுவேன்… உன்னைப்போல அடுத்தவங்க வாய்ப்பைத் தட்டிப் பறிக்க மாட்டேன்” என்று சன்னமாகப் பேசிவிட்டு விறுவிறுவெனச் செல்பவளைப் பார்த்தபடி, ‘ஆத்தா… இந்த வருஷம் கல்யாண யோகம் கூடி வருதுன்னு சொல்லுச்சு, நிசமாகிடுமோ?’ என்று அவள் சென்ற திசையைப் பார்த்து

முணுமுணுத்துவிட்டுச் சென்றான் கந்தரூபன்.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்