
காலை வேளையில் அலாரத்தின் அலறலில் பதறி எழுந்தமர்ந்தாள் ஜனனி. கண்களைத் திறக்க முடியவில்லை; தீயில் வெந்ததைப் போல திகுதிகுவென எரிந்தது.
இரவு முழுக்க அவனது அழுகையையும் புலம்பலையும் கேட்டு, விடியவிடிய கனத்த மனதுடன் ஈரவிழிகளோடு உறங்காமல் கிடந்தவள் கண் அயர்ந்தது என்னவோ விடியலின் தொடக்கத்தில்தான்.
கண் எரிச்சலால் முகம் கழுவி வந்தவள் மீண்டும் மெத்தையில் அமர்ந்தாள். வெளிச்சத்தின் உற்சாகமே விடியல்தான். ஆனால் அவளுக்கோ அவ்வுற்சாகம் வடிந்து, பாரமேறிய மனதுடன் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.
பெண்ணிற்கு மட்டுமே இவ்வுலகில் பெரும் வேதனைகளும் துயரங்களும் உண்டு என்று எண்ணியிருந்தவள், முதல் முறையாக ஒரு ஆண் படும் வேதனையையும் துயரையும் கேட்டுத் தன் கூற்றைத் திருத்திக் கொண்டாள். உலகில் மனிதராகப் பிறந்த அனைவருக்கும் துயரங்களும் வேதனைகளும் உண்டென்று உணர்ந்தாள்.
“அன்னம்மா” என்ற விளிப்புடன் அழைத்து, அவளது உறக்கத்தைச் சடுதியில் பறித்தவன், மறுமுனையில் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
‘அன்னம்மா’ என்று அவன் அழைக்கும் போதெல்லாம் அக்குரலில் டன் கணக்கில் இருக்கும் உற்சாகம் இன்று இருக்கவில்லை. உடைந்த குரலோடும் அழுகையோடும் தான் அப்பெயரை அழைத்திருந்தான்.
அவ்வாறு அழைத்துவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்திருக்க,
வழக்கம் போல் துடிக்கும் ஜனனியின் இதயம் அவனுக்காக இன்னும் வேகமாகத் துடித்தது. நெஞ்சில் கை வைத்துச் சமன் செய்தவள், மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.
நான்கு முறை அவளது அழைப்பை ஏற்காமல் துண்டித்தவன், ஐந்தாவது முறையாக எடுத்து காதில் வைத்திருந்தான். அவனது மூச்சுக்காற்றைத் தவிர அந்தப் பக்கம் எந்தச் சத்தமுமில்லை.
“உனக்கு கொஞ்சமாச்சும் புத்தின்னு ஒன்னு இருக்கா? எந்த நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என ஜனனி கோபத்தில் கத்த,
தன் வேதனையைக் கேட்காமல், தூங்கும் நேரத்தில் அழைத்துத் தொந்தரவு செய்ததால் அவள் கோபத்தில் கத்துகிறாள் என்று அவன் மனம் மேலும் வேதனைப்பட்டது.
உயிராக நினைப்பவள் கூடத் தன்னைப் பற்றி நினைக்காமல், அவள் தூக்கத்தைக் கலைத்ததற்காகக் கோபம் கொள்கிறாள்; அவனைப் பற்றிக் கவலை கொள்ள யாருமில்லை என்ற பச்சதாபத்தில் அவளிடம், “சாரிங்க!” என அந்நியமாக விளித்தவன்,
“இந்த நேரத்துல கால் பண்ணி உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன். இனி இது மாதிரி போன் பண்ணித் தொந்தரவு பண்ணமாட்டேன், சாரி! வச்சிடுங்க” என அழுத்தமாகச் சொன்னவன் மீண்டும் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அவளுக்கோ அவனது பேச்சில் கோபம் மேலும் கூடியது. அவனது இச்செயலால் அவனை நறுக்கென நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் போல இருந்தது. மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைக்க, மூன்றாம் அழைப்பில் ஏற்று அமைதியாக இருந்தான்.
“நானா உனக்கு கால் பண்ணேன்? நீயா கால் பண்ணி ‘அன்னம்மா’ன்னு சொல்லிட்டு போனை வச்சா, நான் என்ன நினைக்கிறது? நேரங்கெட்ட நேரத்துல கூப்பிட்டு விஷயம் என்னன்னு சொல்லாம போனை வச்சா யாரும் பயப்பட மாட்டாங்களா? அதுனாலதான் உனக்கு அறிவு இருக்கான்னு கேட்டேன்… உன்னை ஏன் தொந்தரவு பண்ணினன்னு கேட்கல! கால் பண்ணிட்டுப் பேசாம போனை ஏன் வச்சேன்னு தான் கேட்கிறேன்? சொல்லு என்ன பிரச்சனை? என்னாச்சு உனக்கு? ஏன் உன் குரல் சரியில்ல?” என நிதானமாகக் கேட்டாள்.
அவளது பேச்சில் நிறைந்திருந்த நிதானமும் அக்கறையும் அவனது உள்ளக் கொதிப்பை அணைத்துவிட்டது. துளிர்விட்ட கோபமும் பட்டுப்போக, அவள் மடியில் கண்ணீர் விட்டுக் கரைய மனம் துடித்தது. ஜனனியின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் வார்த்தைகளைத் தனக்குள் முடக்கி வைத்து அமைதி காத்து, அவளது பொறுமையைச் சோதித்தான்.
பொறுமை இழந்த அவளோ, “பச்! எருமையே! என்ன பிரச்சனைன்னு சொல்லித் தொலையேன்டா!” எனக் கடுப்பில் கத்திவிட்டாள். அந்தச் சோகத்திலும் அவளுக்கு இதமாக இருந்தது அவளது ‘எருமை’ என்ற அழைப்பு. மெனக்கெட்டுத் தன் வாயிலிருந்து வார்த்தைகளையும் வேதனைகளையும் அவளிடம் பகிர்ந்தான். அனைத்தையும் கேட்ட பின் அவளிடம் பேரமைதி.
“அன்னம்மா” என்றான் மீண்டும்.
“ஆங்… சொல்லு!” என்றாள் யோசனையிலிருந்து மீண்டு.
“என் துயரத்தைக் கொட்ட எனக்குன்னு இருக்குற ஒரே உயிர் நீ மட்டும்தான் அன்னம்மா! நேரங்காலம் பார்க்காம உனக்கு போன் பண்ணதுக்குக் காரணமும் அதுதான். சாரி!” என ஒரு குழந்தையைப் போல அவன் விளக்க, அவள் உள்ளம் உருகிவிட்டது. அவனை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்டு வர வேண்டும் என்று நினைக்கிறாள்; ஆனால் வழிதான் தெரியவில்லை.
“பச்… அதை விடு! இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறமும் நீ அங்க இருக்கணுமா? வேலையே வேணாம்னு சொல்லிட்டு வந்திடு! நீ ஒன்னும் அவங்களுக்கு அடிமை இல்ல… என்ன செஞ்சாலும் பொறுத்துட்டுப் போக! கிளம்பி இங்க வந்திடு…” என்றாள்.
அவளது மருந்தான வார்த்தைகளைக் கேட்ட பின், அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த காயங்கள் குளிர்ந்து போயின.
“வேலை வேணாம்னு கான்ட்ராக்ட் முடிச்சிட்டா, மூணு மாச சம்பளத்தைக் கொடுத்துட்டுதான் வரணும் அன்னம்மா!”
“கொடுத்துட்டு வாடா! அதுக்காக அசிங்கப்பட்டு அங்க இருக்க முடியுமா? மூணு மாச சம்பளம் எவ்வளவு இருக்கப் போகுது? பைசல் பண்ணிட்டு இந்தியா வந்திடு” எனச் சர்வ சாதாரணமாகத் தீர்வு சொன்னாள்.
உலகம் தெரியாத அவளது வெகுளித்தனமான குணத்தைக் கண்டு அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வெளிநாட்டுக்கு மகனை அனுப்பி வைத்த தாய், பிரச்சனை என்றதும் எதையும் யோசிக்காமல் ‘வா’ என்று அழைப்பது போலத்தான் இருந்தது ஜனனியின் அழைப்பு.
“என் மூணு மாச சம்பளம் இந்திய மதிப்புக்கு எவ்வளவு தெரியுமா அன்னம்மா?”
“எவ்வளவு?” என்றாள் அசால்ட்டாக.
“மூணு லட்சம்!”
“எதே… மூணு லட்சமா?” என வாயைப் பிளந்தாள் ஜனனி. அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“அவ்வளவாடா?” என நம்பாமல் கேட்க,
“ம்… எனக்குக் கொடுத்துட்டு வர்றதைப் பத்திப் பிரச்சனை இல்லை. ஆனா நான் இந்தியா வர்றப்ப, எனக்குன்னு சொந்தமா ஒரு குடிசையாவது இருக்கணும்னு நினைக்கிறேன். ரோசப்பட்டு உழைச்ச காசை இவனுங்களுக்குத் தூக்கிக் கொடுக்கணுமா? அதான் பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுமையா இருக்கேன். இல்லன்னா ‘போங்கடா உங்க வேலையும் நீங்களும்’னு தூக்கிப் போட்டுட்டு வர முடியாதா என்னால?! இது இந்தியா இல்லையே அன்னம்மா…” என்று தன் பக்க நியாயத்தை அவன் புரிய வைக்க, அவளுக்கும் புரிந்தது.
யோசனையில் பதிலளிக்காமல் இருந்த ஜனனியிடம், “என்ன யோசனை அன்னம்மா?” என்றான் இளா.
“நீ சொல்றதும் சரிதான். ஆனா எத்தனை நாளைக்கு மித்ராவோட அராஜகத்தைப் பொறுத்துட்டுப் போவ? இதுக்கு ஒரு தீர்வு வேணும் இல்லையா? மூணு மாசம் முடியற வரைக்கும் அவன் என்ன செய்வான்னு நிம்மதி இழந்து கிடக்குறதுக்கு, இதற்கொரு தீர்வா அவங்க அப்பாகிட்ட பேசிடு இளா! அவ எல்லை மீறிப் போயிட்டே இருந்தா பிரச்சனை உனக்குத்தான்… நாளைக்கே பேசிடு!” என அறிவுறுத்தினாள்.
“ம்… பேசுறேன் மா! ஆனா…” என அவன் இழுக்க, “என்ன ஆனா?”
“அவர் என்னை நம்பணுமே! ‘நான் தான் காதலிக்கிறேன், தொல்லை பண்றேன்’னு அவ சொல்லிட்டா, அதுக்கப்புறம் அவர் என்னை நம்புவாரா?”
“இத்தனை வருஷமா அவர் அந்தப் பாட்டியை நம்பித்தான் மித்ராவை விட்டுட்டுத் தனியா வேற ஊருக்குப் போய் வேலை பார்க்கிறார்னு நினைச்சிட்டு இருக்கியா? இல்லவே இல்லை! எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவர் உன்னை நம்பித்தான் மகளை உன் பொறுப்புல விட்டுட்டுப் போயிருக்கார். நிச்சயம் உன்னை நம்புவார். நீயும் காலத்தைக் கடத்தாம உண்மையைச் சொல்லிடு, இல்லைன்னா பொய் முந்திக்கும் இளா!” என்றாள்.
அவனும் ‘சரி பேசிடுறேன்’ என்றான். இரு பக்கமும் ஒரு அமைதி. அடுத்து என்ன பேசுவதென்று தெரியாதிருக்க, இளா தான் “அன்னம்மா!!!” என்றான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்.
இந்த முறை ‘அன்னம்மா’ என்ற விளிப்பில் உற்சாகம் பொங்கி வழிந்தது. அதில் அவளுமே அவன் சரியானதில் ஆசுவாசம் கொண்டாள்.
“ம்… சொல்லு இளா.”
“தேங்க்ஸ்”
“எதுக்கு?” எனக் காரமாகக் கேட்க, சிரிப்புடனேயே, “தூரமா இருந்தாலும் எனக்கு ஒன்னுன்னா பதறி நேரத்தைக் கூடப் பார்க்காம பேசுறியே அதுக்கு. என் அம்மாவைக் காட்டுற உன் அன்பான பேச்சால! சத்தியமா உருட்டல, உண்மையா மனசுல இருந்து சொல்றேன். எப்பவும் எனக்கு அம்மாவா இருப்பியா அன்னம்மா?” என்று அவன் கேட்க, இவள் தடுமாறிப் போனாள்.
‘பொண்டாட்டியா இருப்பியான்னு கேட்கணும்… மாத்திக் கேட்கிறியே மடையா?’ என அவனது மனசாட்சி அவனை இடிக்க, ‘அவ பிளாக் லிஸ்ட்ல என்னையும் சேர்க்கணும்னு நினைக்கிறியாடா நீ? முடியாது மவனே! இந்தியாவுக்குப் போய் அவ முன்னாடி நின்னு தான் ப்ரோபோஸ் பண்ணுவேன். இப்போ இல்லை…’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டான்.
பதில் எதுவும் பேசாமல் இருக்கும் ஜனனியை மீண்டும் அழைத்தான் இளா.
“அன்னம்மா! போய் தூங்கு. இப்போ கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸா இருக்கு. நானும் தூங்கப் போறேன். தூங்கினாதான் எல்லாத்தையும் மறக்க முடியும்… நீயும் போய் தூங்கு. இப்போ நான் வைச்சிடுறேன்” என்றான் மனமில்லாமல்.
“ம்… குட் நைட்” என்று அழைப்பை வைத்தாள். முழுதாகத் தீர்வு காணாமல் அவர்களால் நிம்மதியான உறக்கத்தைத் தழுவ முடியவில்லை. இருவரும் அதையே சிந்தித்துக் கொண்டிருக்க, நேரம் கடந்தே உறங்கிப் போனார்கள்.
“ம்மா…” மகனின் முனகலில் நினைவுக்கு வந்தவள், அவன் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு எழுந்து வெளியே வந்து காலை வேலைகளைக் கவனித்தாள்.
“ஜனனி மா! சுப்ரமணி சார் கல்யாண ஆர்டர் இருக்குன்னு வரச் சொல்லியிருந்தாரே! இன்னைக்குப் போகணும் இல்லையா?” என்று பேரனைத் தயார் செய்து கொண்டே நீலகண்டன் நினைவுபடுத்த, “ஆங்… ஞாபகம் இருக்கு மாமா. சொன்ன நேரத்துக்குப் போயிடலாம்” என்றாள் சமையலறையிலிருந்து.
“ஐ… அப்போ இன்னொரு கல்யாண ஆர்டரா? அப்போ விதவிதமா சாப்பிடலாம்… தாத்தா! இந்த முறையாவது அம்மாவைச் சிக்கன், ஃபிஷ்ன்னு நான்-வெஜ் சமைக்கச் சொல்லுங்க… எப்பவும் அவங்க வெஜ் தான் போடுறாங்க. விபு ஃபங்க்ஷன்ல வெஜ் தான். நான்-வெஜ் போடச் சொல்லுங்க… ப்ளீஸ்” எனச் சச்சின் கெஞ்சினான்.
“வெஜ்ஜா? நான்-வெஜ்ஜான்னு நாம முடிவு பண்றதில்லை சச்சி! இது ஆர்டர் தரவங்கதான் முடிவு பண்ணுவாங்க. அவங்க சொல்றதை நாம சமைக்கணும்… நம்ம விருப்பத்துக்குப் பண்ண முடியாதே” என்று தாத்தா விளக்க, அவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
அருகே வந்த வள்ளியோ, “என்னடா ஜானு எதுவும் செஞ்சு தராத மாதிரி முகத்தைச் சோகமா வச்சிருக்க! நீ கேட்டதும் செஞ்சு தருவா இல்ல, அப்புறம் என்ன வேணும் என் பேரனுக்கு?” எனக் கொஞ்சிக் கேட்டார்.
“அது இல்லை வள்ளி! பனானா லீஃப் (வாழை இலை) விரிச்சு அதுல நான்-வெஜ் சாப்பிடணும்… வாணி பாட்டி வீட்ல சாப்பிட்டோமே அப்படிச் சாப்பிடணும்” என்றான்.
“ஓ… பேரனுக்கு வாழை இலை விருந்து வேணுமா? இந்த ஜனனிகிட்ட சொல்லி வச்சிட வேண்டியதுதான்” என்று மீண்டும் பேரனின் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்ச, அவர்களைப் புன்னகையுடன் கண்டபடி சச்சினின் உணவுப் பையைக் கொண்டு வந்து வைத்தாள் ஜனனி.
பேரனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றார் நீலகண்டன். அவர்கள் சென்றதும் வள்ளியின் உதவியுடன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தயாராகி நின்றாள். நீலகண்டனும் பேரனைப் பள்ளியில் விட்டு நேரத்தோடு வந்துவிட, ஜனனியுடன் கிளம்பினார்.
ஜனனி, விபு வீட்டில் இருக்கும்போது பக்கத்து பிளாட்டில் சமைத்துத் தரச் சொல்லிக் கேட்டவர்தான் சுப்ரமணி. இன்று வரை அவர் வீட்டிற்கு மூன்று வேளை உணவும் ஜனனி தான் சமைத்துத் தருகிறாள். கேட்டரிங் ஆரம்பித்தாலும் முதல் முறையாக அவளை நம்பி வேலை கொடுத்தவர் அல்லவா! அந்த மரியாதை நிமித்தமாகவும் இந்தச் சேவையைச் சலிப்புக் காட்டாமல் செய்கிறாள்.
அதே சுப்ரமணி தான் தன்னுடைய நண்பனின் பேத்தி கல்யாணத்திற்கு ஜனனியின் கேட்டரிங்கை பரிந்துரை செய்ய, அந்த நண்பரும் ஜனனியைப் பார்க்க வரச் சொல்லியிருந்தார். அடுத்த ஆர்டர் கிடைக்கப்போகும் சந்தோஷத்தில் ஜனனி கிளம்பி வந்திருந்தாள்.
ஆனால் இன்றுதான் அவள் தொழிலில் இருக்கும் நல்லது, கெட்டது, எதிரி, துரோகி, அரசியல் என அனைத்தையும் பாடமாகத் தெ
ரிந்து கொள்ளப் போகிறாள் என்று அறியாமல் நம்பிக்கையுடன் உள்ளே செல்கிறாள். அவள் நம்பிக்கை என்னவாகுமோ?
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
+1

