
இரண்டு மணி நேரமாக உறங்கியவள் சட்டெனக் கண் விழித்து எழுந்தாள். சுவரில் பதிந்திருந்த கடிகாரத்தைப் பார்த்து உறங்கிய நேரத்தைக் கணித்த ஜனனி, அலைபேசியைக் கையில் எடுத்து, தனக்காகக் காத்திருக்கும் ஜீவனை மேலும் அலக்கழிக்காமல் அழைத்துப்பேசினாள்.
இளாவின் கோபத்தைப் பேசித் தணித்து வைத்தவளுக்கு அவனை நினைத்துக் கவலை. என்னதான் அவனிடம் தைரியமாகப் பேசினாலும் இளாவையும் அவ்வூரையும் நினைக்க ஜனனிக்கு உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது. எந்த எல்லைக்கும் செல்லும் அந்தப் பெண் (மித்ரா), அடுத்து என்ன விளைவுகளை ஏற்படுத்துவாளோ என்ற பயம் இவளுக்குள்ளும் எழாமல் இல்லை.
மூன்று மாதங்கள் எந்தப் பிரச்சினையிலும் சிக்கிக்கொள்ளாமல் நல்லபடியாக இளா இந்தியாவிற்குத் திரும்பி வர வேண்டும் என்பதே அவளது தற்போதைய வேண்டுதலாக இருந்தது. தொலைதூரத்தில் முகம் தெரியாத ஆடவனுக்காக வேண்டிக்கொள்ளும் தன்னை நினைத்தே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது!
யாரென்று முழுதாகத் தெரியாத ஆணிடம் ஒன்றரை வருடமாகக் கண்ணியமான நட்பு உறவில் இருக்கிறாள். முகநூலில் சமையல் குழு ஒன்றில்தான் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தனர். இளா, முகநூலில் பொழுதுபோக்கிற்காக விதவிதமான உணவுகளைச் செய்து, அதைத் புகைப்படமாக எடுத்துச் செய்முறையோடு பதிவு செய்வான். அதில் அவனுக்கு அலாதி இன்பம். அவன் பதிவு செய்யும் உணவுகளின் செய்முறைகளைப் படித்துவிட்டு, வீட்டில் செய்து அசத்தியிருந்தாள் ஜனனி.
அதற்காகவே இளாவை அவள் பின்தொடர்ந்திருந்தாள். ஆனால் அவனோ அவளது கோரிக்கையை உடனே ஏற்கவில்லை. ஜனனியும் அதைப்பெரிதாக நினைக்கவில்லை.
ஆனால், தொடர்ந்து அவனது பதிவுகளைப் படித்து அதே போல் செய்தாள். ஒருமுறை புது உணவு ஒன்றை அவன் செய்முறையோடு பதிவு செய்திருந்தான். பார்த்ததுமே அவளுக்கு நாவில் எச்சில் ஊறியது. அதைச் செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு வீட்டில் செய்து பார்த்தாள். அவன் செய்தது போலச் சரியாக வரவில்லை.
அந்தப் பதிவிலேயே அவனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டாள். அவனும் அவளது சந்தேகத்தைத் தீர்க்கப் பதில் அனுப்பியிருந்தான். ஆனாலும் அவளுக்குப் புரியவில்லை. ‘புரியவில்லை’ என்ற பதிலை அவனுக்கு அனுப்பினாள்.
அவளது சுயவிவரப் பக்கத்தைச் சென்று பார்த்தான். அவள் அவனுக்கு நட்புக்கோரிக்கை கொடுத்திருப்பது தெரியவர அதை ஏற்றவன், அவள் அனுமதியுடன் மெசஞ்சரில் தெளிவாகப் பேசிப் பதில் அனுப்பியிருந்தான்.
அவளும் அதைக் கேட்டு அப்படியே செய்ய, உணவு நன்றாக வந்திருந்தது. சுதாவும் விபுவும் அதைப் பாராட்டித் தள்ளினர். அதை அவனிடம் பகிர்ந்தாள். அப்படியே அவர்களது அறிமுகப் படலத்துடன் ஆரம்பித்த பேச்சு, ஒன்றரை வருடத்தைத் தாண்டியது. பெரும்பாலும் அவர்களது பேச்சு உணவுகளைச் சார்ந்தே இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல இளா தன்னைப் பற்றிப் பாதி உண்மைகளை மட்டுமே பகிர்ந்திருந்தான்
இவளும் ஒரு கட்டத்தில் அவனை நம்பித் தன்னைப் பற்றியும் பகிர்ந்திருந்தாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகிப் போனார்கள்.
அவளிடம் புகைப்படத்தை அனுப்பச் சொல்லியோ அல்லது தனது புகைப்படத்தை அனுப்பியோ அவன் பேசவில்லை. பெரும்பாலும் அவர்களுக்குள் பகிரப்பட்டது எல்லாமே உணவுகளின் புகைப்படங்களே! அவனது கண்ணியமான பேச்சும் செயலும்தான் இன்றுவரை அவனை அவளது நட்பில் வைத்திருக்கச் செய்தது.
அவனும் எல்லை மீறி அவளிடம் பேசியதில்லை. வரம்புக்குள் நின்று பேசுவதே அவன் மீது நம்பிக்கையை உண்டாக்கியிருந்தது. அவர்கள் நட்பு, எண்களைப் பகிர்ந்து அழைத்துப்பேசிக் கொள்ளும் வரை முன்னேறியிருந்தது.
ஜனனி இளாவை இன்னொரு விபுவாகத்தான் பார்த்தாள். ஆனால், உறவேதும் இல்லாமல் தனிமையில் இருக்கும் இளாவிற்கு அவளது குரலும் குறுஞ்செய்தியுமே உலகம் என்றாகிப் போனது.
அவள் மீது அவனுக்குக் காதலும் வந்துவிட்டது. ஆனால் அவளிடம் பகிரத்தான் முடியவில்லை. தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் அவளிடம் காதலைப் பகிர்ந்து அந்த நம்பிக்கையை உடைக்க அவன் விரும்பவில்லை. “எதுவரை நீள்கிறதோ அதுவரை நீளட்டும் இந்த உறவு” எனத் தன் காதலைச் சொல்லாமல் மறைத்தே அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.
நெருப்பை அணைக்கலாம், ஆனால் புகையை? ஒரு வருடம் என்றாலும் அவர்கள் நட்பு இன்னும் பலமாகிக்கொண்டே போகிறது.
ஆனாலும் ஜனனிக்கு உள்ளுக்குள் ஒரு சிறு நெருடல் இருக்கிறது. முகம் தெரியாத ஆணுடன் நட்பாகப் பேசுவது வெளியே தெரிந்தால் தன்னை என்ன நினைப்பார்கள் என்ற நெருடல்தான் அது.
“ஒரு வார்த்தை கூட எல்லை மீறிப் பேசாத நட்புடன் பேசுவது என்ன தவறு?” என ஒரு மனம் வாதிட்டாலும்,
இன்னொரு மனம் “கண்ணியமாகப் பேசினாலும் வெளியே அதைத் தவறான உறவென்றுதான் நினைப்பார்கள்” என்றது.
உள்ளுக்குள் உரைத்தாலும் ஜனனியால் இளாவைத் தவிர்க்க முடியவில்லை. “வருவதைப் பார்த்துக்கொள்ளலாம், மனநிம்மதியே முக்கியம்” என்று விட்டுவிட்டாள்.
கூந்தலை அள்ளி முடித்துவிட்டு கூடத்திற்கு வர, வள்ளி சமையலை முடித்துவிட்டுப் பேரனுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
“சாரி அத்தை! அடித்துப் போட்டது போலத் தூங்கிட்டேன். இருங்க வேகமாகச் சமைச்சுடுறேன்” எனச் சமையலறைக்குள் நுழைய இருந்த ஜனனியைத் தடுத்தார் வள்ளி.
“சமையல் வேலை முடிந்தது ஜானு! அவர் வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம். நீ இப்படி வந்து உட்காரு! குடிக்க எதுவும் வேணுமா?” என்று மிகச் சாதாரணமாகக் கேட்டார். இவளுக்கு என்னவோ போலானது. “ஏன் அத்தை என்னை எழுப்பல? நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க?” என்றவள், அவரைச் சமைக்க விட்டுத் தூங்கியதை நினைத்து வருந்தினாள்.
“இன்னைக்கு ஒரு நாள் சமைத்தது எனக்குக் கஷ்டமா என்ன? வீட்டு வேலை, கேட்டரிங் வேலைன்னு நீ ஓடுற, நான் வீட்டுல சும்மா இருக்கேன். இன்னைக்கு ஒரு நாள் நான் சமைச்சதுல என்ன கஷ்டம்? போதும்டிம்மா! ஒரு வேலை பார்க்க விடாமல் நீயே எல்லாம் செஞ்சு எங்களை ரொம்பச் சோம்பேறி ஆக்குற” எனப் பொய்யாகக் கோபம் கொள்ள, அதைக் கண்டு சிரித்தவள், “இப்போ நீங்க ஓய்வெடுத்து ஊர் சுற்ற வேண்டிய வயசுல இருக்கீங்க. நல்லா ஓய்வெடுக்கணும். மாமா கூடச் சேர்ந்து வெளிய போய் என்ஜாய் பண்ணனும். இந்த வயசுல இந்த வேலைகளைத்தான் நீங்க செய்யணும் அத்தை!” என அறிவுரை சொல்ல, அவருக்கோ வெட்கம் வந்தது. அவரது வெட்கத்தைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தாள்.
“அது இருக்கட்டும் ஜனனி! ஏன் உன் அம்மா முகம் கொடுத்துக் கூடச் சரியாப் பேசல? என்னாச்சு?” எனக் கேட்க, சிரித்துக்கொண்டிருந்த முகம் இறுகியது. பதில் சொல்லாது தன் மடியில் இருந்த விரல்களைப் பார்த்தபடி இருந்தாள். “என்ன ஜனனி? உன்கிட்டதான் கேக்குறேன் பதில் சொல்லு!”
“அது… அது ஏதாவது பதற்றத்தில் அப்படி இருந்திருப்பாங்க அத்தை! நீங்க அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க!” எனச் சமாளிக்க முயன்றாள்.
ஆனால் அவரோ ஜனனியின் முகத்தை வைத்தே ஏதோ பிரச்சினை என்று கணித்தார்.
“உன் அம்மாவுக்கு என்ன டென்ஷன்? தாய்மாமன் பொண்டாட்டின்னு டென்ஷனா? அதுவும் கல்யாணத் தன்னைக்கு இருந்தாச் சரின்னு சொல்லலாம். வரவேற்புலையும் முகம் கொடுத்துப் பேசலையே ஏன்? நான் என்னம்மா பண்ணினேன்?” என்று அவர் சரியாகக் கேட்க, ஜனனியோ தயங்கி,
“அவங்களுக்கு என் மேலே கோபம் அத்தை. அதைத்தான் என்னைச் சார்ந்த உங்ககிட்ட காட்டிட்டு இருக்காங்க” என்று உண்மையைச் சொன்னாள்.
“என்ன கோபமாம் உங்க அம்மாவுக்கு?”
“வேறென்ன அத்தை, விபு! இன்னொரு கல்யாணம் பண்ணி நல்லா இருக்கான். ஆனா நான் மட்டும் தனியா குழந்தை, நீங்கன்னு இருக்கேன்ல அந்தக்கோபம்தான். என் மேலே இல்லாம உங்க மேலயும் காட்டிட்டு இருக்காங்க” என்று விளக்கினாள்.
“அவங்க கோபத்துல எந்தத் தப்பும் இல்லம்மா” என வள்ளி சொல்ல, அதிர்ந்த ஜனனி, “என்ன அத்தை சொல்றீங்க?” என்றாள்.
“கொஞ்சமும் உன் வாழ்க்கையைப் பார்க்காம உன்னை எங்க கூட வச்சுட்டுச் சுயநலமா இருக்கோமோன்னு தோணுது. இதுவே உன் அம்மா வீட்டுல இருந்திருந்தா நீ இன்னொரு கல்யாணத்தைப் பத்தி யோசிச்சிருப்பேல்ல!” என்றார் கலங்கிய கண்களுடன்.
“அத்தை என்னைப்பற்றித் தெரிஞ்சும் நீங்க இப்படிப் பேசலாமா? இன்னொரு கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இருந்தால், அந்த முடிவை எல்லார்கிட்டயும் சொல்லி மாப்பிள்ளை பார்க்கச் சொல்லியிருக்க மாட்டேனா? என் அப்பா வீட்டுல இருந்திட்டுப் பாருங்கன்னு சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? அங்க போனா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்துவாங்கன்னு தான் இங்கே இருக்கேன் அத்தை. நீங்களாவது என் மனசைப் புரிஞ்சுக்கோங்க. எனக்கு என் சச்சின் போதும், இன்னொரு கல்யாணம் வேணாம் எனக்கு!” என்றாள் தன் நிலையை விவரிக்க முடியாமல்.
“சரி கல்யாணம் வேணாம்… நாங்க இருக்கோம், நீ எங்க கூட இருப்ப, எங்களுக்கு அப்புறம்?”
“சச்சின் இருப்பான் என் கூட” என்றாள்
“அவனுக்கு அப்புறம்?”
அவள் தடுமாறினாலும், “தனியா இருப்பேன் அத்தை… எனக்கு யாரும் வேண்டாம்” என்றாள் உறுதியாக. அவரும் சிரித்துக்கொண்டே,
“சரிம்மா! பார்க்கலாம்… இதே உறுதியோடு இருக்கியான்னு இல்ல உன் மனசு மாறுதான்னு பார்ப்போம்” என்று சிரித்துக்கொண்டே எழுந்து சென்றார். அவளும் தன் முடிவில் மாற்றம் இல்லை என்ற உறுதியோடு இருக்க, அந்த உறுதியை அசைத்துப் பார்க்கவே பிறந்த ஜீவன் அவளுடன் பேச வேண்டிய வேளைக்காக ஆவலுடன் காத்திருந்தது. அந்த ஜீவனையே சோதிக்க இன்னொருவள் தன் நண்பர்களிடம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாள்
இரவு நேரம் நெருங்க, கூடத்திற்கு வந்த இளா, வசந்தி அமர்ந்திருப்பதைக் கண்டு வேண்டா வெறுப்பாக அவர் அருகே சென்று
“இரவு உணவுக்கு என்ன சமைக்கட்டும்?” என்று கேட்டான்
அவரோ அவனை ஏறிட்டுப் பார்த்தவர், அலைபேசியைத் தூக்கிக் காட்டினார்.
“ஆங்… என்ன?” என்றான் புரியாமல். “உன் வாட்ஸ் அப்பில் பட்டியல் அனுப்பியிருக்கேன் பாரு!” என்று சவுடாலாகச் சொல்ல,
“லிஸ்ட்டா?” என அதிர்ந்து வேகமாகப் புலனத்தைத் திறந்து பார்த்தவனுக்கு நெஞ்சு வலி வராத குறைதான். அசைவ உணவுகள் அனைத்தும் அதில் இருக்க, குறுகிய காலத்திற்குள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்று மித்ரா கட்டளையிட்டிருந்தாள். தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் கொடுக்கும் சவால் போல இருந்தது அவனுக்கு.
“என்ன விளையாடுறீங்களா பாட்டியும் பேத்தியும்? இப்போ இந்த லிஸ்ட் கொடுத்துச் செய்யச் சொன்னா எப்படிச் செய்யறது? காலையில சொல்லியிருக்கணும். குறைந்தபட்சம் மதியமாவது சொல்லியிருக்கலாமே! ஏன் என்னை இப்படிப் படுத்துறீங்க ரெண்டு பேரும்?” என ஆதங்கத்தில் கத்தியிருந்தான் இளா.
“இப்படி கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்குறதுக்கு வேகமாப் போய் வேலையைப் பாரு மேன்! என் பேத்தியும் அவ ஃப்ரெண்ட்ஸும் வந்திடுவாங்க. அப்புறம் எதுவும் செய்யலைன்னா கத்துவா! போ” என்று அசால்ட்டாகச் சொன்னார்.
“என்னால எதுவும் செய்ய முடியாது! உங்க பேத்திகிட்ட சொல்லிடுங்க!” என்று வீராப்பாக உள்ளே செல்ல,
“அப்படியா? உன் ஒப்பந்தம் முடிய மூணு மாசம்தான் இருக்கு. அந்த மூணு மாசச் சம்பளத்தைக் கொடுத்துட்டு நீ வேலையை விட்டுப் போகலாம்” என்றார் கட்டளையாக. அவனது நடை நின்றது. திரும்பி அவரைத் தீயாக முறைத்தான்.
“இந்த முறைக்கிற வேலையை விட்டுட்டுப் போய் வேலையைப் பாரு” என்றார்.
கோபத்தில் முஷ்டியை இறுகியபடி இயலாமையுடன் சமையலறைக்குள் சென்றவனுக்குக் கண்ணீர் நிக்காமல் வழிந்தது. ஆண் என்றால் அழக்கூடாதா என்ன? பெண்களுக்கு மட்டும் கண்ணீர் சொந்தமில்லையே! குளியலறை சென்று தண்ணீரை முகத்தில் அடித்துவிட்டு கண்ணீரை மறைத்தவன் வேகமாகச் சமையலறைக்கு வந்து வேலையைத் தொடங்கினான். பஞ்சுவிடம் அவரால் இயன்ற வேலையைக் கொடுத்துச் செய்யச் சொல்லியிருந்தான்.
மித்ரா கொடுத்த உணவுப் பட்டியலில் இருந்த அனைத்து உணவுகளையும் குறித்த நேரத்திற்குள் செய்து முடித்திருந்தான். அதே நேரம் தனது நண்பர்களுடன் வந்து சேர்ந்தாள் மித்ரா. நேரத்திற்கு வீட்டுக்கு வருவதே இல்லை; அதை வசந்தி கண்டிப்பதும் இல்லை. அவளது தந்தை வெங்கட்ராமன் கேட்டால் எதையாவது சொல்லிச் சமாளித்துப் பேச்சை மாற்றி விடுவாள். இவனும் அவளிடம் பேசிப் பார்த்தான், அவளோ கேட்கவில்லை; மாறாகக் காதலை ஏற்கச் சொல்லிப் பேரம் பேசினாள். இளாவோ அவளிடம் பேசுவதை நிறுத்திவிட்டான்.
சமையல் வேலை முடிந்து உணவுகளை மேசையில் அடுக்கி வைத்துவிட்டான். எல்லாம் நேர்த்தியாகச் செய்திருந்தான். உடல் வலி வேறு; தூங்கும் நேரம் தாண்டிச் சென்றுவிட்டது. இந்தியாவின் நேரம் நள்ளிரவாக இருக்கும். ஜனனி உறங்கியே போயிருப்பாள். பேச முடியாமல் போனது. உள்ளுக்குள் ஆதங்கம், இயலாமை, கோபம், வருத்தம் என ஒரு கலவையாகக் கனன்று கொண்டிருந்தது.
மித்ரா உணவு மேசையைப் பார்த்துப் பிரமித்துதான் போனாள். செய்ய மாட்டான் என்று எண்ணியிருந்தாள். அதை வைத்து அவனைத் திட்டி, கன்னத்தில் அவன் கொடுத்த அடியைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், தன் காலைப் பிடித்துக் கதற வைக்க வேண்டும் என்று பல திட்டங்களுடன் வந்தவளுக்கு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பை அவன் தரவே இல்லை. நேரம் காலம் பார்க்காமல் சொன்னதைச் செய்துவிட்டான்.
“நீங்க சொன்னதெல்லாம் செஞ்சிட்டேன். நான் தூங்கப் போறேன்” என்று நகர்ந்தவனைப் போக விடாமல்,
“யார் பரிமாறுறது? எங்க பாட்டியா? வந்து பரிமாறு” என்றாள் புருவங்களை உயர்த்தித் திமிராக.
வேறு வழியில்லாமல் அவனும் பரிமாறினான். அவன் பரிமாறிய உணவுகள் அத்தனையும் ருசியாகத்தான் இருந்தன. ‘எதற்கு வந்தோம்?’ என்பதையே மறந்து உண்பதிலேயே அவர்களது கவனம் செல்ல, மித்ராதான் கடுப்பாகிப் போனாள்.
பக்கத்தில் அமர்ந்திருந்த தோழியை இடித்து, “எதுக்கு வரச் சொன்னா என்னடி பண்ணிட்டு இருக்கீங்க?” என்று பல்லைக் கடித்தாள்.
“ஓ… சாரி! சாப்பாடு நல்லா இருந்தது அதான்…” என்று கையை நக்கியபடியே சொல்ல, அவளைத் தீயாக முறைத்தாள் மித்ரா.
“கோபப்படாத மித்து! இரு எப்படி ஆரம்பிக்கிறேன் பாரு!” என்றவள் தட்டை மேசையில் வீசி, “என்ன டிஷ் இது? வாயில வைக்கவே முடியல!” என்று ஆரம்பித்தாள். அவனோ புருவத்தைச் சுருக்கி அவளைப் பார்த்தான்
“ஆமா! இது நல்லாவே இல்ல, மண்ணு மாதிரி இருக்கு மித்து!” என்று இன்னொருவன் சொல்ல,
“இதுல உப்பு ஜாஸ்தி! வாயில வைக்க முடியல உவ்வே!” என இன்னொருவன் வாந்தியெடுப்பது போல் நடித்தான். மித்ராவின் நண்பர்கள் ஒவ்வொருவராக இளாவின் சமையலைக் குறை சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் குறை சொல்லும் போது பதறியவன் மித்ராவைப் பார்த்தான். அவளது உதட்டில் தவழ்ந்த நக்கல் சிரிப்பிலேயே இதெல்லாம் அவளது திட்டம் என்று புரிந்தது. முஷ்டியை இறுகித் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாக இருந்தான்.
அவன் அருகே வந்து நின்ற மித்ரா, “ருசியாச் சமைக்க முடியல, ஆனா வீராப்பா பேச மட்டும் செய்வ! என்ன சமைச்சிருக்க நீ? என் ஃப்ரெண்ட்ஸை உன்னை நம்பி டின்னருக்குக் கூப்பிட்டிருந்தேன். என்னோட சேர்த்து அவங்களையும் ஏமாத்திட்ட ச்சே… உன்னை நம்பினேன் பாரு! இதெல்லாம் ஒரு சாப்பாடா?” எனக் கேட்டு அவன் முகத்தில் எச்சில் உணவைத் தூக்கி எறிந்தாள்.
“நீயே இதெல்லாம் கொட்டிக்கோ… வாங்க காய்ஸ்!” என்று முன்னே சென்றவள் மீண்டும் அவனிடம் வந்து நின்றாள்.
தலைகுனிந்து நின்றவன் மீண்டும் தன் முன் வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்தான். அவளோ பளாரெனக் கன்னத்தில் அறைந்தவள், “என் டாடி கூட என்னை அடிச்சது இல்ல. ஆனா நீ அடிச்சிருக்க! அதுக்குப்பழி வாங்க வேணாமா? எப்படியோ சாப்பாடு எப்பவும் போல அருமையா இருந்தது! பை” என்று திமிராகப் பேசி, அடியைத் திருப்பிக் கொடுத்த சந்தோஷத்தில் அங்கிருந்து சென்றாள்.
அவனது ஆடையிலும் முகத்திலும் உணவுகள் ஒட்டியிருக்க, அவள் அடித்த தடம் கன்னத்தில் சிவந்திருந்தது. நண்பர்கள் முன் அவமானப்படுத்தப்பட்டதை அவனால் தாங்க முடியவில்லை. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கதறினான். வலி நெஞ்சை அடைத்தது. தாங்க முடியாத வலி. வேகமாக அறைக்குள் சென்று அலைபேசியை எடுத்து நேரம் காலம் பார்க்காமல் ஜனனிக்கு அழைத்திருந்தான்.
மகனை அணைத்து உறங்கிக் கொண்டிருந்தவள், அலைபேசி அலறவும் பதறி எழுந்தாள். சச்சின் சிணுங்க, அவன் நெஞ்சில் தட்டி அமைதிப்படுத்தியபடி அலைபேசியின் சத்தத்தைக் குறைத்தவள், எடுக்க யோசித்தாள். மீண்டும் அழைத்தான். எடுத்து காதில் வைத்து, “ஹலோ இளா? என்ன இந்த நேரத்துல?” எனப் பதற்றத்துடன் கேட்டாள்.
இளாவும் அவள் குரலைக் கேட்டதும் கண்ணீர் வழிய “அன்னம்மா” என்றான்.
அவன் குரல் உடைந்து போயிருக்க, அதை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ போலிருந்தது. “என்னடா?” என்றாள் படபடவென அடித்துக்கொண்டிருக்கும் மனதுடன். சட்டெனச் சுதாரித்தவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே சாய்ந்து அமர்ந்துவிட்டான்.
பாவம் இவள்தான் என்ன ஏதென்று தெரியாமல் பயத்தில் மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.
இளா எடுக்காமல் போக நொந்து போனாள். அவன் பேசாமல் அலைபேசியை வைத்ததும் மீண்டும் மீண்டும் அழைத்து அவன் எடுக்காது போனதையும் எண்ணி அவள் தூக்கத்தைத் தொலைத்திருக்க, நடந்ததை எண்ணி அசைபோட்டுக் கொண்டிருந்தவனும் உறங்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் எண்ணிக்கொண்டு இரவை உறங்காமல் கழித்தனர்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1

