Loading

மதிய வேளையில் மிகச் சோர்வுடன் இல்லம் வந்து சேர்ந்தான் இளநந்தன். அவனது களைப்பு முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

நீலகண்டன் வீட்டிற்கு எதிர்த்த வீட்டைத்தான் முன்பணம் (Advance) கொடுத்துப் பேசி இருந்தான். இனி மீதிப் பணத்தைக் கொடுத்துப் பதிவு செய்துவிட்டால் போதும், அந்த மனை (Plot) அவனுக்குச் சொந்தம்.

இதையெல்லாம் விபுவின் உதவியால்தான் செய்கிறான். இன்று பதிவு செய்வதற்காகச் செய்ய வேண்டிய சிறுசிறு வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டான். மறுநாள் பத்திரப் பதிவு முடிந்ததுமே முழுதாக அவனுக்கு அந்த வீடு சொந்தமாகிவிடும்.

துபாயில் சம்பாதித்த மொத்தப் பணத்தில் முக்கால்வாசி வீடு வாங்குவதில் செலவு செய்தவன், மீதியை அவனது வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறான். பிற்காலத்தில் உருவாக்கிக்கொள்ளும் குடும்பத்திற்காக அப்பணத்தைச் சேர்த்து வைத்திருக்கிறான்.

கூடத்தில் வள்ளி, நீலகண்டன் பேசிக்கொண்டிருக்க, அவர்களுடன் வந்து அமர்ந்தான். அவனது வருகையைக் கண்ட நீலகண்டன் அவனிடம்,

“என்னப்பா, போன வேலை என்னாச்சு?”

“முடிஞ்சது பெரியப்பா! நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ணிட்டு கையில பணம் கொடுத்துட்டா, வீடு நமக்குத்தான்!” என்றான் மகிழ்ச்சியோடு.

“இந்தியா வந்ததுமே பணத்தை வீணாக்காம வீடு வாங்கி நல்ல காரியம் பண்ணி இருக்க நந்து! அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கே?” என வள்ளி கேட்க, அதற்குள் அவனது களைப்பைப் போக்கக் கையில் பழச்சாறுடன் வந்தாள் ஜனனி.

தனக்காக அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஆச்சரியமாகவும், அதே நேரம் ரசிக்கவும் செய்கிறான் இவன்.

அவனுக்காக, அவனுக்கு மட்டும் பழச்சாறு எடுத்து வருவதைக் கண்டு, களைப்பே தெறித்துப் போகுமளவிற்கு அவனிடத்தில் அப்படி ஒரு உற்சாகம்.

பெற்றுக்கொண்டவன், “பெரியப்பா, பெரியம்மாவுக்கு இல்லையா?” எனக் கேட்டான். அவனது மனமோ, ‘இல்லை, உனக்கு மட்டும் ஸ்பெஷல்’ என்று அவள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க, அவளோ, “அவங்களுக்குக் கொடுத்தது போக இருந்த மிச்சம்தான் உனக்கு” என்று கூறிவிட்டுப் போக, வழக்கம்போல எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. உதட்டைச் சுளித்துக்கொண்டான்.

“சரி தம்பி! வீடு வாங்கிட்ட! அடுத்து என்ன பண்ணப்போற? வேலைக்குப்போக எதுவும் பார்த்து வச்சிருக்கீயா? இல்லை பிசினஸ் பண்ணலாம்னு இருக்கியா? என்ன முடிவுல இருக்க?” என நீலகண்டன் கேட்டிட,

“பிசினஸ்தான் பெரியப்பா பண்ணப்போறேன். அதுக்கு முன்ன அதைப்பத்தி முழுசா தெரிஞ்சுக்க வேலைக்குச் சேரப்போறேன் பெரியப்பா! நல்லா கத்துக்கிட்டதுக்கு அப்புறமா பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்.”

“என்ன பிசினஸ் பண்ணப்போற நீ?”

“உங்க மருமகளுக்குப் போட்டியா கேட்டரிங் பிசினஸ் ஆரம்பிக்கப்போறேன் பெரியப்பா! அதனால உங்க மருமககிட்ட சொல்லி, அவங்க கேட்டரிங்ல ஒரு வேலை போட்டுத்தரச் சொல்லுங்க பெரியப்பா!” என்று அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டபடி நின்றிருந்த ஜனனியை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தபடிச் சொன்னான்.

நெகிழித் தட்டின் ஓரத்தை விரலால் சுரண்டிக்கொண்டிருந்தவள், அவன் அவ்வாறு சொன்னதும் சட்டென நிமிர்ந்து அவனை முறைத்துப் பார்த்தாள். அவனும் அவர்கள் அறியாவண்ணம் கண்ணடித்தான்.

அவன் சொன்னதை நகைச்சுவைபோல எடுத்துக்கொண்டவர், அவன் முதுகில் ஒன்று போட்டு, “படவா! என் மருமககிட்டயே வேலைக்குச் சேர்ந்து வேலையக் கத்துகிட்டு, அவளுக்கே போட்டியா வரப்போறியா நீ?” என்று சொல்லிச் சிரிக்க,

“பெரியப்பா! வேலையக் கத்துக்கிட்ட பிறகு குருவை விடச் சிஷ்யன் நல்லா வேலை செஞ்சா, குரு என்ன பொறாமையா படப்போறார்? சந்தோஷம்தானே படுவார்! அதுபோல உங்க மருமககிட்ட இருந்து சில நுணுக்கங்களைக் கத்துகிட்டுப் புதுசா ஒரு கேட்டரிங் ஆரம்பிச்சா, உங்க மருமக என்ன பொறாமையா படப்போறாங்க?” என நீலகண்டத்திடம் கேள்வி கேட்டாலும், புருவங்கள் உயர்த்தி விழிகளால் அவளிடம்தான் கேட்டான்.

“அது…” என அவர் இழுக்கும்போதே, “பொறாமையெல்லாம் படத் தெரியாது. ஆனா கண்ணு முன்னாடி வளர்ந்து நின்னா, கண்டிப்பா சிஷ்யனைக் கண்டு இந்த குரு சந்தோஷம்தான் படுவேன். வீட்டு வேலை முடிஞ்சதும் வேலைக்கு வரச்சொல்லுங்க மாமா” என்று அவரிடம் சொல்வதுபோல அவனுக்குச் சொல்ல, உதட்டைக் கடித்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டான் நந்து. பெரியவர்களும் சிரித்தனர்.

“புது வீடு வாங்கப்போற! பால் காய்ச்சணுமேடா” என வள்ளி சொல்ல,

“ஆமா பெரியம்மா! நீங்க நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்க! விபு குடும்பம், நம்ம குடும்பம், ஜனனியோட அம்மா அப்பா போதும். பெருசா வேற யாரையும் கூப்பிட வேணாம் பெரியப்பா! நம்ம ஜனனி கேட்டரிங்ல புக் பண்ணா மேடம் ரெண்டு வேளை சாப்பாடு தரமாட்டாங்களா? உங்களுக்குத் தெரிஞ்ச ஐயர் வச்சு வீட்டுல ஹோமம் வளர்த்திடுவோம்… என்ன சொல்றீங்க பெரியப்பா?” எனத் தனது யோசனையைச் சொல்ல,

“நீ சொல்றதும் சரியாத்தான் இருக்கு. நீ என்னம்மா சொல்ற?” என ஜனனியைப் பார்த்துக் கேட்டார்.

“இவங்களை மட்டும் கூப்பிட எதுக்கு ஜனனி கேட்டரிங் சர்வீஸ்? வீட்டிலேயே சமைச்சிடலாமே! நானே சமைக்கிறேன் மாமா.”

“இத்தனை பேருக்கு எப்படிம்மா நீ ஒரு ஆளே சமைக்க முடியும்?”

“அதெல்லாம் முடியும் அத்தை, பார்த்துக்கலாம்” என்றவள் அவனைப் பார்க்க, அவனோ யோசனையோடு புருவங்கள் முடிச்சிட அமர்ந்திருந்தான்.

“நீ என்ன தம்பி சொல்ற?” வள்ளி அவனிடம் கேட்க, “ஜனனி சொல்றபடியே செஞ்சிடலாம் பெரியம்மா! அவங்களுக்கு நான் உதவி செய்றேன். சமைக்கிறது எனக்குப் பெருசில்லை… எனக்குச் செலவு மிச்சம் பண்ண நினைக்கிறவங்களுக்கு நான் உதவி செய்ய மாட்டேனா? நாங்க பார்த்துக்கிறோம் பெரியம்மா!” என்று எழுந்தவன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டிவிட்டு அறைக்குள் சென்றான்.

பெரியவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இவளுக்குச் சங்கடமாகவும் பயமாகவும் இருந்தது. இவனது எண்ணம் வீட்டிலேயே தெரிந்தால் என்ன நினைப்பார்கள்? நீலகண்டன் மாமா கோபங்கொண்டு வெளியே துரத்தி விடுவாரா? தனது தந்தை இவனோடு சண்டை பிடிப்பாரா? மீண்டும் இவன் அனாதையாகிடும் நிலை வந்துவிடுமா? மனதை மாற்றிக்கொள்ளாமல் முரண்டுபிடிக்கிறான். வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னால் மறுக்கிறான். இவனை என்ன செய்வது? அவளுக்குள் இருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியும் இல்லாமல் போனது அவன் வந்த நாட்களிலிருந்து. ஆனால் அவனோ எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல், தன்னுடன் சேர்வதையே அவனது குறிக்கோளாக வைத்துக்கொண்டு முழுநேரம் அதே எண்ணத்துடன் பயமின்றிப் பேசுகிறான், நடந்துகொள்கிறான். அதற்கும் சேர்த்து இவள்தான் உள்ளுக்குள் நொந்துபோய் இருக்கிறாள்.

மாலை வேளை அவள் மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரக் கிளம்பிட, அவளை முந்திக்கொண்டவன், “சாவியைக் கொடு! நான் கூட்டிட்டு வர்றேன்” என்று தன் முன்னே வந்தவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.

“என்ன என்னைச் சந்தேகமாப் பார்க்குற? உன் பிள்ளையைக் கடத்தி வச்சு மிரட்டப்போறேன்னு நினைக்கிறீயா? எதுக்கு என் மேலே உனக்கு இப்படி ஒரு சந்தேகம்?” என அவள் பார்வையில் கொஞ்சம் தடுமாறியபடிக் கேட்டான்.

அவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டே வந்த வள்ளியோ பதறி மகனுக்காகப் பேச வந்தார். “ஏன்மா என்னாச்சு? அவனே கூட்டிட்டு வரட்டும். வீட்டுக்குள்ளயே இருக்க அவனுக்குப் போரடிக்கும்ல, போயிட்டு வரட்டுமே!”

“போகட்டும் அத்தை! ஆனா உங்க பேரன் சச்சினை அழைச்சிட்டு வேற எங்கேயும் போகாம நேரா இங்கதான் வருவேன்னு சொல்லச் சொல்லுங்க, நான் அனுப்பி விடுறேன்” என்று இருவரது கள்ளத்தனத்தையும் ஒரே நாளில் கண்டுகொண்டதைக் கண்டு அவன் மெச்சுக்கொண்டான்.

வள்ளி சிரிப்புடன் மகனைப் பார்க்க, அவனோ தலையைச் சொரிந்தபடி வழிந்து நின்றான்.

“உங்க பேரனைப் பத்தித் தெரியாதா அத்தை! மாமாவோட போன நேரத்துக்கு வீட்டுக்கு வரமாட்டாங்க! அதேபோல விபுவும். இப்போ சார்… கண்டிப்பா அவன் எங்கயாவது கூட்டிட்டுப் போகச் சொல்லுவான். அதுக்குத்தான் நானே போறேன், கிளம்புறேன்.”

“மேடம், நீங்கதான் வெளியக் கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறீங்க! நாங்க கூட்டிட்டுப் போனா என்ன இப்போ? சாவி கொடு” என்றவன் அவளிடம் சாவியைப் பறிக்கத்தான் செய்தான்.

“டோன்ட் வொர்ரி, ஒரு அரை மணி நேரம் மட்டும் எடுத்துக்கிறோம்” என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட, வள்ளி இரு பக்கமும் தலையை அசைத்தபடிச் சென்றுவிட்டார்.

ஜனனி, சச்சின் என இருவர் மட்டுமே உலகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் கூட்டிற்குள் அவன் வசிக்க நினைப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. அவனது எண்ணத்தை மாற்ற நினைத்தும் பயனில்லாமலே போய்க்கொண்டிருக்கிறது. இது எதில் சென்று முடியும் என்ற பயம் இருக்கிறது.

சச்சினை அழைத்துக்கொண்ட நந்து, ஜனனியிடம் சொன்னதுபோல அரை மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டு சரியாக வீட்டிற்கு வந்துவிட்டான்.

கண்டதையும் வாங்கிக் கொடுக்காமல் உடலுக்குச் சத்தானதை வாங்கிக் கொடுத்துக் கூட்டிக்கொண்டு வர, சச்சினிடம் அனைத்தையும் கேட்டுக்கொண்டவளுக்கு நிம்மதி.

சமத்தாக அமர்ந்த சச்சினைப் படிக்க அவள் இன்று அவனுடன் போராடவில்லை. முரண்டுபிடிக்காமல் படிப்பவனைக் கண்டு அவளுக்கு ஆச்சரியம்தான். அங்கே கூடத்தில் அமர்ந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நந்துவைத் தான் நோட்டம் விட்டாள்.

அவன் தான் ஏதாவது சொல்லியிருக்கணும். இப்படிச் சமத்தாக உட்கார்ந்து படிப்பவன் அல்ல சச்சின். இதை அலைபேசியில் பேசிக்கொண்ட நேரங்களில் நந்துவிடம் பகிர்ந்து இருக்கிறாள்.

அதைக் கருத்தில்கொண்டுதான் சச்சினை வெளியே அழைத்துச் சென்று பேசிப் பேசி, அவனின் மனதை மாற்றி அவன் அமர்ந்து படிக்கும்படியாகச் செய்திருக்கிறான் என்று எண்ணிக்கொண்டவளுக்கு நந்துவை எண்ணி உதட்டில் சிறு முறுவல்.

முறுவலுடன் நந்துவைக் காண, அவனோ தலையை நிமிர்த்தி இவளைப் பார்க்க, சட்டென இவளும் குனிந்துகொண்டாள். அதைக் கண்டுகொண்டவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

இரவு உணவை அவன் தான் செய்தான். துபாயில் சமைக்கும் எளிமையான இரவு உணவை இவர்களுக்காகச் சமைத்துக் கொடுக்க, ருசித்து உண்டனர். பெரியவர்கள் உறங்கச் செல்ல, ஜனனி மேடையைச் சுத்தம் செய்தபடி, “இதை எப்படிச் செஞ்ச?” என்று நந்துவிடம் கேட்டாள். அவனோ, “கையால்தான்” என்று கடுப்படித்தான். அவனை முறைத்தாள்.

“அன்னம்மா! இதெல்லாம் இப்போ சொன்னா நல்லா இருக்காது. நம்ம மேரேஜ்க்கு அப்புறம் சொல்லித் தர்றேன்.. அப்போதான் ரொமான்டிக்கா இருக்கும்.” என்று சொல்ல,

“நடக்காததைக் கற்பனை பண்ணிக்காத” என்று அவனை முறைத்துவிட்டு முன்னே சென்றவளின் கையைப் பற்ற, அதிர்ந்து போனாள்.

“நந்து என்ன பண்ற?” என்று அவனிடம் கையை உருவ முயல,

“என்னடி, கையைத் தானே பிடிச்சேன்! ஏதோ தப்பு பண்றவன் பிடிச்சதுபோல பிகேவ் பண்ற!”

“நந்து! கையை விடு! எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசு! கையைப் பிடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத!” எனப் பல்லைக் கடித்துக்கொண்டு சொல்ல, அவள் அப்படிச் சொன்னதுமே ஏதோ போலாகிவிட, முக இறுக்கத்துடன் கையை விட்டான்.

“என்ன விஷயம் சொல்லு?”

அவனோ கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான். அவளைப் பாராமல், “மறந்துட்டேன்… நியாபகம் வந்ததும் சொல்றேன்” என்று எட்டி வைத்தவன், திரும்பி வந்து “சாரி உங்க கை பிடிச்சதுக்கு” என்று விறுவிறுவென உள்ளே சென்றுவிட, இவள்தான் உள்ளுக்குள் நொந்துபோனாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்