
“அப்பா வா” என சச்சின் இழுக்க, அனைவரின் பார்வையும் இப்போது இளாவின் மீது இருந்தது.
அவனோ பெரிதாக எதையும் கண்டுகொள்ளாமல், “நான் உனக்குச் சித்தப்பா தான் வேணும். ஆனா நீ என்னை நந்துப்பா, இல்ல நந்துனு கூப்பிடலாம்…” என அப்படியே மாற்றிவிட்டு, தன் மேல் பார்வை மாற்றாது இருக்கும் அனைவரையும் ஓரக்கண்ணால் பார்த்தான்.
மீண்டும் அவனே, “என்னாச்சு பெரியப்பா, நான் தப்பா எதுவும் சொல்லிட்டேனா? நீங்க எனக்குப் பெரியப்பானாலும் அப்பானு கூப்பிட்டா ஏத்துப்பீங்க தானே! அதான் சித்தப்பாவா இருந்தாலும் இவன் என்னை அப்பான்னு கூப்பிட்டா என்ன தப்பு?” என்று கேட்டு அனைவரையும் கேள்வியாகப் பார்த்தான். அவர்களின் பார்வையோ ஒரு கணம் ஜனனி மீது பட்டுவிட்டுத் திரும்பியது.
“ஒரு தப்பும் இல்லடா! சச்சின் செல்லம், நீ அவனை நந்துப்பான்னு கூப்பிடு!” என வள்ளி சூழ்நிலையை இலகுவாக்கினார்.
“தேங்க்ஸ் பெரியம்மா” என்றவன், ஜனனியைப் பார்த்து யாரும் அறியாவண்ணம் கண் ஜாடை காட்ட, அவளோ அவனைப் பார்வையாலேயே எரித்தாள்.
விபு, ‘வந்ததும் வேலையை ஆரம்பிச்சிட்டானே… ஈஸியா எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணிடுவானோ! இவனுங்க மத்தியில நம்ம தலை உருட்டாம இருந்தா சரிதான்’ என எண்ணிக் கொண்டான்.
“சின் குட்டி, உனக்காக நான் துபாய்ல இருந்து நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன்… வா பார்க்கலாம்” என்று தனது பை இருக்கும் இடத்தில் அமர்ந்து, அவனுக்கு வாங்கிக் குவித்த விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொடுக்க, வாயைப் பிளந்தான் சச்சின்.
“இதெல்லாம் உனக்குத்தான், வச்சுக்கோ!” என்று அவன் கைகளில் திணிக்க, அவைகளைப் பிடிக்கக் கைகள் பத்தவில்லை.
“இதெல்லாம் எனக்கா?” என இன்னும் ஆச்சரியம் மாறாமல் கேட்டவன், தன் அம்மாவைப் பார்த்து, “ம்மா! இதெல்லாம் எனக்காம், நான் வாங்கிக்கட்டுமா?” எனக் கண்களில் ஆர்வமும் குதூகலமும் பொங்கக் கேட்டான்.
அவளோ என்ன சொல்வதென்று தடுமாற, அவளை முந்திக்கொண்ட நீலகண்டனும், “வச்சுக்கோ சச்சின், உனக்குத்தானே வாங்கிட்டு வந்திருக்கான்” என்றார்.
“தேங்க்ஸ் நந்துப்பா!” என அவன் கன்னத்தில் முத்தம் வைக்க, திடீரென அவனிடம் எதிர்பாராத முத்தத்தைக் கண்டு கண்களில் கண்ணீர் ததும்ப அவனைப் பார்த்தான். பின் ஜனனியைப் பார்த்தான்.
அவனால் அங்கே உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. இருந்தும் சாதாரணமாகத் தன்னைக் காட்டிக்கொள்வது போல இருந்தவன், பதிலுக்கு அவனுக்கு முத்தம் தந்தான். பார்ப்பதற்கு அழகாய் இருந்தது அவர்களது உறவு.
பின் விபு, ஜோவிற்கு வாங்கிய ஆடைகளையும் இருவர் பெயர் பதித்த தங்கக் கைக்காப்புகளையும் (Bracelet) பரிசாக அளித்தான்.
“எதுக்குடா இதெல்லாம்?” என விபு வாங்காமல் இடையில் கை வைத்துக்கேட்க,
“உங்க கல்யாணத்துக்கு வர முடியல, அதனால இந்த கிஃப்ட் வாங்கிக்கோடா” என்றதும் அவர்களும் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டனர்.
“தேங்க்ஸ்” என்றவள், “ஆமா, நீங்க எனக்கு என்ன முறை வேணும்? என்ன முறை சொல்லி உங்களை கூப்பிடணும்?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
“ஏன் அண்ணன் சொல்லி கூப்பிட்டா ஆகாதா? முறையைத் தெரிஞ்சிட்டுதான் கூப்பிடணுமா?” என அவள் காதில் விபு கடிக்க, “அப்பட்டமா பொறாமைப்படாதே! முறையைத் தெரிஞ்சுக்கிறதுல என்ன தப்பு?” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி பதில் தர, அவளை முறைத்தான்.
“விபுவும் அவனும் அண்ணன் தம்பி முறை வேணும் ஜோவி மா! உனக்கு அவன் மாமா முறை வேணும்” என்றார் சுதா!
உடனே அவளும் “தேங்க்ஸ் நந்து மாமா” என்றவளின் பார்வை விபு மீதுதான் இருந்தது. அவனைக் கடுப்பேற்றவே அவ்வாறு சொன்னாள். விபுவின் கண்களில் தெரிந்த பொறாமையையும் கடுகடுப்பையும் கண்டு இவளுக்குள் ஜில்லென்று இருந்தது.
துபாயிலிருந்து தனது பெரியம்மா, பெரியப்பா, சுதா என மூவருக்கும் வாங்கி வந்ததைக் கொடுத்தான்.
சச்சின் தான், “நந்துப்பா, அம்மாக்கு நீ எதுவும் வாங்கிட்டு வரலையா?” எனக் காலியான பையைப் பார்த்து கேட்டான்.
“இல்லையேடா சின்னு! உங்க அம்மாக்கு என்ன(னை)ல்லாம் பிடிக்கும்னு எனக்குத் தெரியாதே! அதான் வாங்கிட்டு வரல” என்றான் நக்கலாக.
“நீ அம்மாக்கு போன் பண்ணிக் கேட்டிருக்கலாம்ல?”
“சச்சி! கொஞ்சம் அமைதியா இரு” என அவனை அடக்கினாள் ஜனனி. சச்சினும் வாயை மூடிக்கொண்டான்.
“ஆங் விபு!!! பத்திரப் பதிவு முடியற வரைக்கும் ஏதாவது ஹோட்டல்ல ரூம் எடுத்துக் கொடு! அங்கிருந்துக்கிறேன்” என்றான்.
விபு பேச ஆரம்பிக்கும் முன்பே, நீலகண்டன், “அப்பன் வீடு இருக்கும்போது எதுக்குடா ரூம்ல தங்கணும்? நீ வீட்டுக்கே வாடா!” என்றார் கட்டளையாக.
“இல்ல பெரியப்பா அது வந்து…” என்று தலைகுனிய,
“பாருங்க இன்னும் நம்மளை அந்நியமாத்தான் நினைக்கிறான் இவன்!” என வள்ளி கண்ணைக் கசக்க,
“அச்சச்சோ பெரியம்மா!! நான் உங்களோடவே தங்கிக்கிறேன் போதுமா?” என அவரைச் சமாதானம் செய்யவே அவர் சிரித்தார்.
மாலையில் அனைவரும் கிளம்ப, நீலகண்டன், வள்ளி, சச்சினை அழைத்துக்கொண்டு கிளம்ப, அவர்களுடன் நந்துவும் சென்றான்.
இங்கோ மீதமிருந்த உணவுகளை மூன்று வீடுகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டுப் பாத்திரங்களை அடுக்கித் கொண்டிருந்தாள் (ஜோ).
அவள் அருகே வந்தான் விபு. அவளோ அவனை அசட்டை செய்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.
“என்னடி என் மேல கோபமா?”
“கொலைவெறியில இருக்கேன் போயிடு” என்றாள். அவனுக்கோ சிரிப்பு வந்தது.
“எதுக்குடி?”
“எதுக்குன்னு தெரியாதுல உனக்கு?”
அவனும், “தெரியும், ஆனா அது குறிப்பிட்ட எந்த விஷயம்னு எனக்குத் தெரியலடி?”
“ம்ம்… நந்துவோட டச்ல இருக்கிறதை ஏன் சொல்லல? அவனுக்கு பிளாட் பார்த்துக் கொடுத்ததை ஏன் சொல்லல? அவன் இந்தியாவுக்கு வர்றதை ஏன் சொல்லல? இன்னும் என்னென்ன விஷயத்துல எல்லாம் நீ அவனோட கூட்டா இருக்க?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.
அவனோ மிகப் பெருமையாகவும், அதே நேரம் இதழைச் சுழித்து ஊதியபடியும், “டீச்சர் டி நானு, என்கிட்டயே இவ்வளவு கேள்வி கேட்பியா நீ?” என்றவன் மேற்கொண்டு, “நான் பதில் சொல்றதுக்கு முன்ன நான் கேட்கிறேன். நீ என்ன என்கிட்ட பகிர்ந்துகிட்டனு என்கிட்ட கேள்வி கேட்குற? ஆரம்பத்துல இருந்து உங்களுக்குள்ள நடக்குற பிரச்சனை வரைக்கும் என்கிட்ட சொன்னியா? என்கிட்ட மட்டும் கேட்குற? இப்போ நீ சொல்லுடி” என்றதும் தடுமாறியவள், அவனைத் தீயாக முறைத்தாள்.
“முறைச்சா மட்டும் நீ செஞ்சது சரின்னு ஆயிடாது! நீயும் மறைச்ச, நானும் மறைச்சேன் சரியா போச்சு! இனி நீ ஏன் கேட்டா? நானும் கேட்பேன்” என்று முறுக்கிக் கொண்டான். அவளும் “ரொம்பத்தான்” என உதட்டைச் சுழிக்க, அவனும் அவ்வாறு செய்தான். அதற்கு ஒரு அடி கொடுத்தவள், “சரி!! அவன் எந்த இன்டென்ஷனோட (நோக்கத்தோட) இங்க வந்திருக்கான்?”
“வேற எதுக்கு வருவான்? பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டி என வாழத்தான் வந்திருக்கான்” என்றதுமே கண்கள் சிவக்க அக்னியை அவன் மீது வீசினாள்.
“என்ன சொல்லிட்டேன், இப்படி தீப்பார்வை பார்க்கிற?”
“அவனுக்குப் பிடிச்ச பொண்ணு யாருனு உனக்குத் தெரியாதா?”
“தெரியும்! அதுனால என்ன?”
“அதுனால என்னவா? அவன் லவ் பண்றது என்னைன்னு தெரிஞ்சுமா நீ ஹெல்ப் பண்ணப்போற? எல்லாரும் என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லும்போது, நீ ‘உன் இஷ்டம் போல இரு’ன்னு சொல்லுவ! இப்போ அவனுக்கு உதவி பண்றதா சொல்ற? எனக்குப் புரியல!”
விபுவும் சிரித்துக் கொண்டே, “ஆமா!!! உனக்கு நடந்த கல்யாணம் கட்டாயக் கல்யாணம். என்னை தாலி கட்டச் சொன்னதும் கட்டாயப்படுத்திதான்! அதனாலதான் இனி யாரும் உன்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாதுன்னு உன் இஷ்டம் போல இருன்னு சொன்னேன். ஆனா இப்போ நந்து மூலமா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குதுன்னா கண்டிப்பா நான் உதவி செய்றதுல தப்பு இல்லைன்னு தோணுச்சு” என்று தோளைக் குலுக்கிச் சொன்னான்.
“அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கொடுக்கிறது நம்ம கடமை. அவன் மனசை மாத்தி நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் விபு!!! நீ அவன் மனசை மாத்தி வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுடா!!”
“வெரி சாரி!!! அது என்னால முடியாது. ஐ ஆம் ஹெல்ப்லெஸ்! வேணும்னா நீ முயற்சி பண்ணு” என்று கைகளை விரித்தான்.
“உன்னால முடியலைன்னா என்ன?! நான் அவன் மனசை மாத்தி அவனுக்குப் பிடிச்ச பொண்ணாப் பார்த்து கட்டி வைக்கிறேன்” என்று சவாலாகச் சொன்னாள்.
“அதையும் பார்க்கலாம் அன்னம்மா” என்று அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு நக்கலாகச் சிரித்துவிட்டுச் சென்றான்.
இவளோ அதைப் போட்டியாக எடுத்துக் கொண்டாள்.
வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவில்தான் வீட்டிற்கு வந்தாள். கொஞ்சம் அசதியாக இருந்தது அவளுக்கு. தலைவலி வேறு.
கூடத்தில் வள்ளி, நீலகண்டன் அமர்ந்திருக்க, அவர்களுடன் சச்சின் புதிய விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அவள் வந்ததும் அவளது சோர்வான முகத்தைக் கண்டதும், “இருமா நான் டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்” என வள்ளி எழ, “இல்ல அத்தை இருக்கட்டும்… நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, நாசியைத் துளைக்கும் மணத்துடன் டீ போட்டு எடுத்துவந்து அவளிடம் நீட்டினான் நந்து.
விழிகளை மட்டும் உயர்த்தி அவனையும் கையிலிருந்த தேநீரையும் மாறி மாறிப் பார்த்தாள். பின் பக்கவாட்டில் இருந்தவர்களை ஒரு கணம் பார்த்துவிட்டு வாங்கிக்கொண்டாள்.
ஒரு மிடறு விழுங்கியவளுக்கு அமிர்தமாக இருந்தது அந்தத் தேநீர். ருசித்துப் பருகினாள். ‘ஒரு டீயிலயே ஆளைக் கவுத்திடுவான் போல’ என உள்ளே எண்ணிக்கொண்டாள்.
தேநீரைப் பருகியதுமே புதுத் தெம்பு வந்தது போல இருந்தது. நீலகண்டனிடம் கணக்கு வழக்கையெல்லாம் சொல்லிவிட்டு, “குளிச்சிட்டு வந்து சமைக்கிறேன் அத்தை” என்று உள்ளே சென்றுவிட்டாள்.
“பெரியம்மா, இன்னைக்கு நைட் டின்னர் நான் தான் செய்வேன்” என்று அறையிலிருந்து வந்தான் நந்து.
“உனக்கு ஏன்டா சிரமம்! நானும் ஜனனியும் பார்த்துக்கிறோம்” என்று அவர் சொல்ல,
“பாவம் ஜனனி!!! இன்னைக்கு அவளுக்கு வேலை அதிகமா இருந்திருக்கும்! இப்பவும் சமைக்கணுமா? சாம்பார் இருக்கு, தோசை ஊத்தறேன்” என்று சமையலறைக்குள் செல்ல, வள்ளியும் நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
மூவரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க, விதவிதமான தோசைகளை வார்த்து வந்து கொடுத்தான். மூவரும் ருசித்துச் சாப்பிட்டனர்.
குளித்து முடித்து வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சிதான், மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து.
வள்ளி அவளைக் கண்டதும், “வாம்மா நீயும் வந்து உட்காரு! நந்து தோசை சுட்டுக் கொடுக்கிறான். ரொம்ப ருசியா இருக்குமா” என்றதும் இவளுக்குக் கோபம் வந்தது. அதை அடக்கிக்கொண்டு, “இருக்கட்டும் அத்தை, அவருக்கு உதவி செய்றேன்” என அவளும் உள்ளே செல்ல, அவன் தோசையோடு திரும்பச் சரியாக இருந்தது. அவனிடம் தோசைத் தட்டைப் பிடுங்கிக்கொண்டு வெளியே செல்ல, அவன் சிரிப்புடன் தோசை சுட்டான்.
இருவரும் சாப்பிட்டு எழ, சச்சின் மட்டும் மெதுவாகச் சாப்பிட்டான்.
நந்துவும் இருவருக்கும் சேர்த்து ஊற்றிக் கொண்டுவர, சங்கடமாக அவனோடு அமர்ந்து உண்டாள்.
“நந்துப்பா தோசை சூப்பர்” என்று சச்சினும் சொல்ல, அவளோ கெத்தாகப் புருவம் உயர்த்தி ஜனனியைப் பார்த்தான்.
அவளோ “ரொம்பத்தான்” எனச் சலித்துக்கொண்டு தோசையைச் சாப்பிட்டாள். பெரியவர்கள் அறைக்குள் செல்ல, சிறுவன் விளையாடச் செல்ல, இருவரும் தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
“இதுக்காகத்தான் அங்கிருந்து இங்க வந்தியா நீ?”
“ஏன், நான் பண்றது பிடிக்கலையா?”
“இங்க வந்து அதே வேலையைத்தான் பார்க்கணுமான்னு கேட்டேன்?”
“முதல்ல பணத்துக்காக வேலையா செஞ்சேன். இப்போ என் குடும்பத்துக்காகச் செய்றேன். ரொம்ப மனநிறைவா இருக்கு. ப்ளீஸ், என்னை தள்ளி வச்சு ஹார்ட் பண்ணிடாதே! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அன்னம்மா” என்றான் உணர்வுபூர்வமாக.
அவளும் அமைதியாகச் செல்ல, “அன்னம்மா” என்றான். திரும்பிப் பார்த்தாள்.
“லவ் யூ”
சட்டெனக் கூடத்தைப் பார்த்தாள். சச்சின் இவர்களைக் கவனிக்காமல் விளையாடிக்கொண்டிருந்தான். திரும்பி அவனை முறைக்க, இதழ் குவித்து முத்தமிடுவது போல அவன் செய்ய, “பொறுக்கி” என்று முணுமுணுத்துச் செல்ல, இவனும் சிரிப்புடன் அவளைத் தொடர்ந்தான்.
மகனை அறைக்குள் அழைத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள். இவனும் இன்னொரு அறைக்குள் சென்றான். ‘இந்த நிலை மாறும்’ என்ற நம்பிக்கையுடன் மெத்தையில் விழுந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

