Loading

அன்னம்மாவைப் பற்றி எண்ணியபடி அறையில் தனியாக அமர்ந்திருந்தவனை அழைக்க வந்திருந்தார் பஞ்சு.

“இளா! ஏண்டா தனியா உட்கார்ந்திருக்க? முகம் வேற வாடியிருக்கு, என்னாச்சு ராசா?” என அவனது முகத்தை நிமிர்த்திக் கேட்டார்.

உடனே அவரது வயிற்றில் முகம் புதைத்து அழுதுவிட்டான். பதறிப்போன பஞ்சுவோ, “என்ன ராசா? எதுக்கு நல்ல நாள் அதுவுமா அழற? அம்மா, அப்பா ஞாபகம் வந்திருச்சா?” எனக் குழந்தையிடம் கேட்பது போலக் கேட்டார்.

அவரிடமிருந்து விலகி கண்ணீரைத் துடைத்தவன், அனைத்தையும் அவரிடம் சொல்லத் தொடங்கினான்.

“ஏன் ராசா, ஊருக்குப் போனதும் தானே உண்மையச் சொல்லணும்னு சொன்ன? இப்போ நீயே ஏன் உண்மையை உடைச்ச?”

“நான் தான் தெரிஞ்சதுக்கு அப்புறம் எதையும் மறைக்க வேணாம்னு சொல்லிட்டேன் பஞ்சு! சண்டை போட்டு கோபத்துல திட்டிட்டா! வலிக்குது பஞ்சு! அவ என்னை ஏத்துக்கவே மாட்டாளா? என் காதலைப் புரிஞ்சுக்கவே மாட்டாளா?”

“இந்த மொபைல் பெட்டியில புரிய வைக்க முயற்சி பண்ணா எப்படிப் புரியும் ராசா?! நேர்ல சந்திச்சு உன் உணர்வுகளையும் காதலையும் புரிய வை கண்ணு! அந்தப் பொண்ணு புரிஞ்சுப்பா! இங்கே இப்படி உடைஞ்சு அழுதா நல்லாவா இருக்கு? நேர்ல போய் பிடிவாதமா இருந்து அவ மனசை மாத்தி கட்டிக்க வேண்டாமா? இப்படியா ஒரு ஆம்பள அழறது?” என்று அவன் முகத்தைத் துடைத்தார்.

“அவ எனக்குக் கிடைப்பாள் தானே பஞ்சு?”

“கண்டிப்பா ராசா!! நல்ல நாள் அதுவுமா சிரி ராசா!” என்றார். அவனும் மெல்ல இதழ் விரிக்க, இவரும் அவனைப் கனிவாகப் பார்த்தார்.

“பஞ்சு, இன்னும் உள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என வசந்தி குரல் கொடுக்க, “வெளிய என்ன நடக்குது பஞ்சு?” எனக் கேட்டான் இளா.

“உன் பிறந்தநாளைக் கொண்டாடணுமாம்! உனக்காக எல்லாரும் காத்திட்டு இருக்காங்க… வா ராசா!”

“எல்லாருமா?” எனச் சந்தேகமாகக் கேட்டிட, “ம்ம்… எல்லாரும்தான். முகத்தைத் துடைச்சுட்டு வா ராசா!” என்று அழைத்தார்.

அங்கே கண்ணம்மா, வசந்தி, மித்ரா மற்றும் சில வேலையாட்கள் இருக்க, அவர்களுடன் வெங்கட்ராமனும் நின்றிருந்தார். இன்ப அதிர்ச்சியில் உறைந்தவன், “சார்” என்ற விளிப்புடன் அவரது காலில் விழுந்து வணங்கினான்.

அவனது தோளைப் பற்றி எழச் சொன்னவர், “நல்லா இரு! எப்பவும் மத்தவங்களுக்காக உழைச்ச நீ, இனி உனக்காக வாழணும். உன் வாழ்க்கை, உன் குடும்பம், உன் உறவுகள்னு நீ இருக்கணும். அடுத்தப் பிறந்தநாளுக்கு நீ ஒரு குடும்பத் தலைவனா இருக்கணும். என்னோட ஆசீர்வாதங்கள் உனக்கு எப்பவும் உண்டு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இளா!” என வாழ்த்தினார். மீண்டும் காலில் விழப் போனவனைத் தடுத்தார்.

தந்தையின் வாழ்த்து மித்ராவிற்குச் சுருக்கென்று இருந்தது. ‘தந்தைக்கு இளா காதலிக்கும் விஷயம் தெரிந்துவிட்டதோ?’ என்ற யோசனையோடு இருந்தவளின் தோளைத் தட்டி, “என்ன யோசனை மித்ரா? உன் பரிசைக் கொடு!” என்றார் வெங்கட்ராமன்.

அவளும் அவனிடம் பரிசைக் கொடுத்து, “ஹாப்பி பர்த்டே இளா!” என்றாள்.

“தேங்க்ஸ்” என்றான் சிரிப்புடன்.

“வா, வந்து கேக் வெட்டு” என்றார். அவன் முன்னே கேக்கை வைக்க, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தவன், கேக்கை வெட்டி முதலில் முதலாளிக்கும் மித்ராவிற்கும் கொடுத்தான். பின் பஞ்சுவிற்கும் கண்ணம்மாவிற்கும் ஊட்டிவிட்டு, அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தான்.

“என் பிறந்தநாளுக்காக அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்தீங்களா சார்?!” என ஆர்வமாகக் கேட்டான்.

“அதுக்காக மட்டுமில்ல இளா! உன்னை ‘செண்ட் ஆஃப்’ பண்ணணுமில்லையா? அதுக்காகவும் தான் வந்தேன்” என்றார்.

“செண்ட் ஆஃப்பா? எங்கப்பா?” என்றாள் மித்ரா அதிர்ச்சியுடன்.

“இளா இந்தியாவுக்குப் போகப்போறான். அங்க போனா திரும்பி வரமாட்டான்மா. இத்தனை நாள் என் இடத்திலிருந்து இந்த வீட்டையும் உன்னையும் பார்த்துக்கிட்ட இவனுக்கு நான் செய்யுற சின்ன மரியாதை இது” என்றதுமே, சுழன்று கொண்டிருந்த மித்ராவின் உலகம் உறைந்துபோனது போல இருந்தது.

“அவனோட கான்ட்ராக்ட்?”

“முடிஞ்சதுமா”

“இன்னும் ஒரு வருஷம் இருந்ததேப்பா?”

“இளா இங்க வந்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சுமா! அவனும் அவனோட வாழ்க்கையைப் பார்க்கணும் இல்லையா? அவனோட உயிர் இந்தியாவுல இருக்கும்போது இவன் இங்கிருந்து என்ன பண்ணப்போறான்? அதான் போகச் சொல்லிட்டேன்” என்றதும் இவள் அதிர்ந்தாள். அவனோ அவரை நன்றியுடன் அணைத்துக் கொண்டான்.

“நீங்க எனக்கு இன்னொரு அப்பா சார்… என் வாழ்நாள்ல உங்களை மறக்கவே மாட்டேன் சார்” என்று கண்கள் கலங்கப் பேசினான்.

தந்தையும் அவனும் சேர்ந்து தனது எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டதில் கடுங்கோபத்தில் இருந்தாள் மித்ரா. அன்று இரவு உணவை வெளியே ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

இரவு முழுக்க இளாவும் தூங்கவில்லை, மித்ராவும் தூங்கவில்லை. அவன் இந்தியா செல்வதைத் தடுக்கப் பல திட்டங்களைத் தீட்டியபடி உறங்காமல் இருந்தாள் மித்ரா.

மறுநாள் வெங்கட்ராமன் அலுவலகம் செல்ல, வசந்தி பஞ்சு பாட்டியை உதவிக்கு அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்

 கண்ணம்மாவை அறையில் வைத்துப் பூட்டியவள், இளாவை அழைத்தாள்.

அவனும் அவள் முன்னே வந்து நின்றான். கூடத்தில் யாருமில்லை என்பதால் அவன் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்தான்.

“யாரைக் கேட்டு இந்தியா போற நீ?”

“யாரைக் கேட்கணும்?”

“என்னைக் கேட்கணும்!”

“எதுக்கு நான் உன்னைக் கேட்கணும்? நீ என் முதலாளியோட பொண்ணு. அதுக்காக உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை” என்றான் திமிராக.

“நீ இந்தியா போகக் கூடாது! இங்கதான் இருக்கணும். நீ என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும். உனக்கு வேற ஆப்ஷன் இல்ல” என்றாள்.

“என் வாழ்க்கையில எனக்கு ஆப்ஷன் கொடுக்க நீ யாரு? நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன். என் வாழ்க்கையில ஒரே ஒரு பொண்ணுதான், அது என்னோட அன்னம்மா தான். படிக்கிற வயசுல காதல் கத்திரிக்காய்னு படிப்பைக் கெடுத்துக்காத” என்று நகர முயன்றவனைத் தடுத்தாள்.

“முடிவா கேக்குறேன், என்னை லவ் பண்ணுவியா மாட்டியா?”

“ச்ச… உன்னை என் பொண்ணாப் பார்க்கிறேன். நம்ம உறவைக் கொச்சைப்படுத்தாதே! இங்கிருந்து நகரு” என்று விலகியவனை மீண்டும் தடுத்தவள், “எனக்கு என் அப்பா இருக்கார். நீ அப்பாவா இருக்கத் தேவையில்ல, புருஷனா இரு…” என்றதும் பளாரென்று அவள் கன்னத்தில் அறைந்தான் இளா.

“வயசுக்கு மீறி பேசாதே! ஒழுக்கமா போய் உன் வேலையைப் பார்” என்று அவன் நடக்க, “அப்போ நீ இங்கிருந்து போகத்தான் போற, அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போற… அப்படித்தானே?” என்றாள் ஆத்திரத்துடன்.

“ஆமா! நான் ஊருக்குப் போகத்தான் போறேன்! என் அன்னம்மாவைக் கல்யாணம் செஞ்சுக்கத்தான் போறேன். உன்னால் முடிஞ்சதைப் பண்ணிக்கோ” என்று அவளைக் கடந்து நடந்தான்.

“எனக்கு நீ இல்லைன்னா வேற யாருக்கும் நீ இல்லை…” எனக் கத்தியவள், அருகில் இருந்த பூஜாடியை எடுத்து அவன் மண்டையில் அடித்துவிட்டாள்.

மயங்கி விழுந்தவன் ரத்த வெள்ளத்தில் கிடக்க, தன் கோபம் எல்லை மீறியதை உணர்ந்து அதிர்ச்சியில் தலையில் அடித்துக் கொண்டாள் மித்ரா. அதே நேரம் உள்ளே வந்த வெங்கட்ராமன், மகளின் இச்செயலைக் கண்டு உறைந்துபோனார்.

“மித்ரா!!!” எனக் குரலை உயர்த்த,

“அப்பா!!” என அதிர்ந்து அவரிடம் தஞ்சமடைந்தவள், “அப்பா, இவன் என்கிட்ட தப்பா நடக்கப் பார்த்தான்பா! அதான் அடிச்சிட்டேன். போலீஸ்க்கு போன் பண்ணுங்கப்பா, இவனை அரெஸ்ட் பண்ணச் சொல்லுங்க!” என்றாள்.

அவளை அருவருப்புடன் பார்த்தவர், “உன்னைத்தான் போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கணும் மித்ரா! அவன் உனக்குக் கிடைக்கலைன்னா எந்த எல்லைக்கும் போவேன்னு அவன் சொன்னது உண்மையாத்தான் இருக்கு. என் பொண்ணா நீ?” எனக் கேட்டார்.

அப்படியே நிலைகுலைந்து அழுதாள் மித்ரா. அவரோ அவளைக் கண்டுகொள்ளாமல், இளாவைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

ரத்தம் அதிகம் வெளியேறியதால் இளாவிற்கு ரத்தம் தேவைப்பட்டது. வெங்கட்ராமனின் ரத்த வகையும் அதுவாகவே இருக்க, அவரே ரத்தம் தந்து இளாவைக் காப்பாற்றினார். சிகிச்சை முடிந்து இளாவிற்கு ஆபத்தில்லை என்றதும் நிம்மதி அடைந்தார். பஞ்சுவையும் கண்ணம்மாவையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வீடு திரும்பியவர், மித்ராவை அழைத்தார்.

“உன் புத்தியை நல்ல விதமா பயன்படுத்தணும்னுதான் உன்னைப் படிக்க வைக்கிறேன். ஆனா நீ இப்படி ஒரு அடிமுட்டாளா இருப்பேன்னு நினைக்கல மித்ரா! உனக்கு அப்பா ஒரு குறையும் வைக்கலையே, அப்புறம் ஏன் உன் புத்தி இப்படிப் போச்சு?”

“குறையே வைக்கலையா? நீங்க என் கூட இல்லாததே பெரிய குறைதான்பா. அம்மா இல்லாத என்னை நீங்கதானே வளர்க்கணும்? ஆனா என்னை வேலைக்காரங்கதானே வளர்த்தாங்க. என்னைப்பத்தி உங்களுக்கு என்ன கவலை? அக்கறை எல்லாம் போன்ல விசாரிக்கிறதோட முடிஞ்சுடுது. எனக்கு என்ன வேணும்னு கேட்டு அணைச்சு ஆறுதல் சொல்ல வேலைக்காரங்களால முடியுமாப்பா? என் சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் அவங்ககிட்ட பகிர முடியுமா? எனக்கு என்ன தேவைன்னு பார்த்துப் பார்த்துச் செஞ்ச இளாவைப் பிடிச்சதுப்பா! நீங்க செய்ய வேண்டியதை அவன் செய்யும்போது, அந்த அரவணைப்பு எனக்கு வாழ்நாள் முழுக்க வேணும்னு நினைச்சேன்… இதுல என்ன தப்பு?” என ஆவேசமாகப் பேசிய மகளின் தவிப்பு அவருக்குப் புரிந்தது. தன் தவறை உணர்ந்து கண்ணீர் வடித்தார்.

“ஸாரிடா! சின்ன வயசுல இருந்து நீ என்னை எவ்வளவு தேடியிருப்பன்னு இப்ப புரியுது. போட்டி, பணம் சம்பாதிக்கிற மோகத்துல உன்னை மறந்துட்டேன். என் தப்புதான். என் பொண்ணு இந்த அளவுக்குப் போக நான்தான் காரணம். இனி நான் உன் கூடத்தான் இருப்பேன். உனக்காகத்தான் வாழ்வேன். அப்பாவை மன்னிச்சு ஏத்துக்கோடா!” எனக் கெஞ்சிக் கேட்க, அழுதுகொண்டே அவரை அணைத்துக்கொண்டாள் மித்ரா.

அவர் அவளது தலையை வருடியபடி, “இளா இந்தியா போகட்டும்டா, அவனை விட்டுடு” என்றதும் வேகமாக எழுந்து அவரை முறைத்தாள்.

“அவன் மனசு முழுக்க வேறொரு பொண்ணு இருக்காடா! உன்னை அவன் பார்க்குற பார்வையை வேற. புரிஞ்சுக்கோ! கஷ்டப்பட்டு அவன் மனசை மாத்தி வாழலாம்னு நினைக்காதே, அது சரி வராது. அவனைப் போக விடு. நீ நல்லா படி, என்னை விட உன்னை அன்பாப் பார்த்துக்கிற பையனா நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார். அவள் அமைதியாகத் தலைகுனிந்து நின்றாள்.

“உன்னை அவன் விரும்பியிருந்தால், நிச்சயம் இளாவின் குணத்திற்கு அவனே உனக்கு நல்ல புருஷனா இருப்பான். ஆனா அவன் உன்னை என் இடத்திலிருந்து பார்க்கிறான், மகளா பார்க்கிறான். எப்படிம்மா வாழ முடியும்? அவனைப் போக விடு” என்றதும், மனதைத் திடப்படுத்திக் கொண்டு ‘சரி’ என்றாள்.

மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து கண் திறந்தான் இளா.

“மன்னிச்சிடு இளா! என் பொண்ணுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்” என்று கையெடுத்துக் கும்பிட்டார் வெங்கட்ராமன்.

பதறிய இளா, அவரது கையைப் பற்றி “சார், மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க! ஏதோ கோபத்துல அடிச்சிட்டா, எனக்குத்தான் எதுவும் ஆகலையே” என்றான்.

மித்ரா முன்வந்து, “ஸாரி இளா! நீ எனக்கு இல்லைன்னு தெரிஞ்ச கோபத்துல அடிச்சிட்டேன். அப்பா தான் எனக்கு எல்லாத்தையும் புரிய வைச்சார். நீ இந்தியாவுக்குப் போ, உன் அன்னம்மா கூட சந்தோஷமா இரு” என்றாள். இளா புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

“என்னை விட அழகா அவ?” எனக் கேட்டாள் மித்ரா.

“இல்ல, உன்னை விட அழகு கம்மிதான்! ஆனா நீ என்னோட தேவதைமா! அப்பா, அம்மாவை இழந்து தனி ஆளா இங்க வந்த எனக்குப் பெரிய ஆறுதல் நீ. உன் பேச்சும் சிரிப்பும் என் வலியையே மறக்க வைச்சது. கல்யாணம் செய்யாமலே என்னை ஒரு அப்பா ஸ்தானத்துல வச்சது நீதான்! நீ காதலைச் சொன்னதும் என்னால ஏத்துக்க முடியல. மகளா நினைக்கிற பொண்ணை எப்படி காதலியா பார்க்க முடியும்?” என்றவனை வெங்கட்ராமன் கனிவாகப் பார்த்தார்.

“நீ நான் பெத்தெடுக்காத பிள்ளைடா! உன்னை அனுப்ப மனசில்ல தான், ஆனா உன் வாழ்க்கை எனக்கு முக்கியம். இந்தியா போ, உனக்குப் பிடிச்சதைச் செய். என்ன உதவி வேணும்னாலும் கேளு” என்றார்.

“சரி சார்… என் கல்யாணத்துக்கு நீங்க வந்து என் அப்பாவா என் பக்கம் இருப்பீங்களா சார்?” என்று இளா கெஞ்சலாகக் கேட்க, “கண்டிப்பா!” என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார் வெங்கட்ராமன்.

மித்ரா கண்களைத் துடைத்துக் கொண்டு மனதைத் தேற்றியபடி புன்னகைத்தாள்.

மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த இளாவைப் பஞ்சுவும் கண்ணம்மாவும் கவனித்துக் கொண்டனர்.

இங்கே, ‘ஒரு வாரத்தில் வந்துவிடுவேன்’ என்றவனிடமிருந்து எந்தத் தகவலும் வராமலிருக்க, பயத்தில் அவனுக்கு அழைத்தாள் அன்னம்மா.

பஞ்சு தான் அழைப்பை ஏற்றார். நடந்தவற்றைச் சொல்ல, அதிர்ந்து போனவள் “அவனிடம் பேச வேண்டும்” என்றாள்.

மருத்துவமனைக்குச் சென்றதும் பேசச் சொல்வதாகச் சொன்ன பஞ்சு, மேலும் அவளிடம், “தாய் தகப்பன் இல்லாத புள்ளை, நீ தான் உலகம்னு வாழ்ந்திட்டு இருக்கான்! அவனை ஏமாத்திடாத ராசாத்தி! அவனை கல்யாணம் செஞ்சு அவனுக்கு எல்லாமுமா நீ இருக்கணும்! அந்த மகிழ்ச்சியான செய்தியை அவன் என்கிட்ட சொல்லணும். எனக்குன்னு எந்த உறவுமில்லை, இங்க வந்த பிறகு பேரனா அவன் கிடைச்சான். அவன் சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்துட்டு நான் கண்ணை மூடணும். அவனை ஏத்துக்கோ ராசாத்தி” என்று கெஞ்சினார்.

அவளால் அதைத் தவிர்க்க முடியவில்லை. “உங்க பேரன் வாழ்க்கையில நல்லது நடக்கும் பாட்டி. அவன் சந்தோஷமா இருப்பான், நீங்க கவலைப்படாதீங்க” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

அவள் பேசியதை பஞ்சு இளாவிடம் சொல்ல, “ம்… நேர்ல பேசிக்கிறேன்” என்றவன், அவள் மீண்டும் அழைத்தும் எடுக்கவில்லை.

மருத்துவர் அனுமதி தந்ததும், அடுத்த நாளே வெங்கட்ராமன், கண்ணம்மா, பஞ்சு ஆகியோரிடம் விடைபெற்று, பாசப் போராட்டத்திற்குப் பின் கண்ணீருடன் கிளம்பினான்இளா.

இந்தியாவிற்குச் செல்லக் கூடாது என்றிருந்தவனின் முடிவை மாற்றியவள் அன்னம்மா! அவனுக்காக மனம் மாறுவாளா? அவனுடன் இணைவாளா?

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்