
இள நந்தனின் பிறந்த நாளும் வந்தது. அதிகாலை வேளையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தனக்கு உயிர் தந்த தாய் தந்தையரின் புகைப்படத்திற்கு முன் நின்று வணங்கியவனுக்கு, கண்கள் முத்து முத்தாய்க் கண்ணீர் துளிகளை உதிர்த்தன.
இளாவின் தாய் தந்தை இருந்தபோது, அவனது பிறந்தநாள் அவர்களுக்கு ஒரு பெரும் திருவிழாவாக இருக்கும். கோவிலுக்குச் சென்று அவன் பெயரில் அர்ச்சனை செய்து, இயலாதவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை அவன் கையாலேயே தானம் வழங்கச் செய்வார்கள். வீட்டில் அவனுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து, இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஊட்டி விடுவார்கள்.
மாலையில் அவனது நண்பர்களை வரவழைத்து, கேக் வெட்டிச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அவர்களுடன் இருந்த கடைசிப் பிறந்தநாள் அப்படித்தான் கொண்டாடப்பட்டது.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நாளில், அவனை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் திருவண்ணாமலைக்குச் சென்றனர். இளா எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள் வர, அதைப்பார்த்து குதூகலித்தவன், உடனே தாய்க்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்தான். அவர்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. வந்த ஒரு செய்தி அவ்வேளையை முற்றிலுமாக மாற்றிப் போட்டது. எதிரே வந்த வாகனத்தைக் கண்டு தடுமாறி நிலை குலைந்த நேரத்தில், லாரி மோதி இருவரும் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். அதன் பின் மாமனின் உதவியோடு அவர்களது உடல் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
சொந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர். உடைந்து போய் ஓரமாக அமர்ந்திருந்தவனைத் தேற்றி, இறுதிச் சடங்குகளைச் செய்ய வைத்தது அவனது நண்பர்கள்தான். சொந்தங்கள் சென்ற பின்னும் நண்பர்களும் மாமனும் அவனுடனேயே இருந்தார்கள்.
நாட்கள் நகர, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட, இளா தனியாக வாழத் தொடங்கினான். தனக்குப் பிடித்த ‘கேட்டரிங்’ (Catering) படிப்பை முடித்த கையோடு துபாய் சென்றவன், அதன்பின் இந்தியா திரும்பவே இல்லை.
பழைய நினைவுகள் மேலோங்க அவனது உடல் நடுங்கியது. முகத்தில் கண்ணீர் கோடுகள் விழ அழுதிருந்தான். சரியாக அப்போது அலைபேசி ஒலிக்க, கண்களைத் துடைத்துவிட்டு எடுத்தான். ‘அன்னம்மா’தான்! முதல் அழைப்பு அவளுடையதாகத்தான் இருக்கும்.
“சொல்லு அன்னம்மா! என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க?”
“ஹாப்பி பர்த்டே செஃப்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இளா! எப்பவும் நீ சந்தோஷமா இருக்கணும். அம்மா, அப்பா கூட இல்லைன்னு அழுதுட்டு இருக்காத. அவங்க எப்பவும் உன் கூடவே இருந்து உன்னைப் பாதுகாத்துட்டு இருப்பாங்க. அவங்க சார்பா நான் இருக்கேன். இந்தியா வா, உன்னை நான் பார்த்துக்கிறேன்” என்றாள் வேறொரு அர்த்தத்தில்.
அவனுக்குள் இருந்த தனிமையையும் ஏக்கத்தையும் அவளது பேச்சு முழுவதுமாகத் துடைத்தெறிந்தது.
“அப்புறம் அன்னம்மா, இந்தியா வந்ததுக்கு அப்புறம் பேச்சு மாற மாட்டேல?” எனக் கேட்டான்.
“நான் ஏன் பேச்சு மாறப்போறேன்? நீ இந்தியா வாடா, உனக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு” என்றாள்.
அவனும் சிரித்துக்கொண்டே, “இன்னும் ஒரு வாரம்தான் அன்னம்மா! அந்த ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பறந்து வந்துடுவேன். எனக்கு இந்தியா வரணும்ங்கிற நினைப்பே இருந்தது இல்லை. அங்க உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லாததால வர இஷ்டமில்லை. ஆனா, இப்போ கொஞ்ச நாளா மனசு அங்க வரணும்னு அடம்பிடிக்குது. உன்னையும் சின்னுவையும் பார்க்கணும்… அவன் கூட விளையாடணும்னு தோணிட்டே இருக்கு” என்றான் உற்சாகத்தோடு.
அந்த உற்சாகம் அவளையும் தொற்றிக்கொள்ள,
“ஒரு வாரம் ஒரு நிமிஷமா ஓடிடும்! அப்புறம் நீ என் பையன்கிட்டயும் என்கிட்டயும் மாட்டிட்டு முழிக்கப்போற! பேசாம துபாயிலேயே இருந்திருக்கலாமோன்னு தோணும் பாரு!”
“தனியா கிடந்து புலம்புறதை விட, ரெண்டு செல்ல இம்சைகள்கிட்ட மாட்டிக்கிறது எவ்வளவோ மேல்” என்றான்.
“அப்படியா சொல்ற? இந்தியா வந்ததுக்கு அப்புறமும் இதே சொல்லுவியான்னு பார்ப்போம்…” என்றவள், சட்டென நினைவுக்கு வந்தவளாக, “எப்படி இருக்கு நம்ம சர்ப்ரைஸ் இளா?” என்றாள்.
“எதிர்பார்க்கலை அன்னம்மா! அம்மா தான் என் பிறந்தநாளுக்குச் சட்டை எடுத்துத் தருவாங்க. அதே செலக்சன் போல இருந்தது. தேங்க்ஸ் அன்னம்மா!” என்றான், அவள் எடுத்துத் தந்த ஆடையைத் தடவியபடி.
நேற்று இரவுதான் கொரியரில் அவள் அனுப்பிய பிறந்தநாள் உடை வந்தது. அவள் ஆடை எடுத்து அனுப்புவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. முதல் வருட பிறந்தநாளுக்கு வெறும் வாழ்த்து மட்டும் சொன்னவள், இந்த வருடம் இந்த அன்புப் பரிசைத் தந்திருந்தாள். குளித்ததும் அந்தச் சட்டையைத்தான் அணிந்து கொண்டான்.
“ரொம்பப் பிடிச்சிருக்கு அன்னம்மா! எதுக்கு இதெல்லாம்?”
“அதான் ‘அன்னம்மா’ன்னு சொல்லி அம்மா இடத்துல என்னை வச்சுட்டியே! அப்புறம் இதைச் செய்யாம இருப்பேனா? சரி சரி, நீ வேலையைப் பாரு. நான் அப்புறமா கால் பண்றேன்” என்றாள்.
“ஏன் அன்னம்மா, ஏதும் வேலை இருக்கா?”
“ஆமா, சமைச்சுட்டு இருக்கேன். ஒரு பதினைந்து பார்சல் போடணும்… அப்புறம் கோவிலுக்குப் போய் உன் பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு அந்தப் பார்சல்களைக் கொடுக்கணும்.”
“எதுக்கு அன்னம்மா? ஏதும் வேண்டுதலா?”
“வேண்டுதலா? இன்னைக்கு உன் பிறந்தநாள் இல்லையா, அதுக்குத்தான் இதெல்லாம் செய்றேன்.”
“அன்னம்மா…” என்றவன் குரல் தழுதழுத்தது.
“ம்ம்… என்ன?”
“ஏன் அன்னம்மா இதெல்லாம் பண்ற?”
“சொன்னேனே! உன் அப்பா அம்மா சார்பா நான் இருக்கேன்னு. அப்போ அவங்க செய்றதை நான் செய்யணும்ல?”
“நிஜமாவா அன்னம்மா? நீயாவது கடைசி வரை என்னோடு இருப்ப தான? குடும்பம், உறவுன்னு சொல்லி என்னை விட்டுப் போகமாட்டே தானே? என்னால தாங்கிக்க முடியாது அன்னம்மா!” என அவன் குரல் உடைந்து விம்மினான்.
“ஏன்டா நல்ல நாள்ல அழற? அவங்க சார்பா இருந்து உனக்கு எல்லா நன்மையும் நான் செய்வேன்.”
“ஏன் அன்னம்மா என் மேல இவ்வளவு பாசம்?”
“நீயும் எனக்கு விபு போலத்தான். ஆன்லைன்ல பெண்களைத் தவிர வேறு ஆண்கள் கிட்ட நான் பேசினது இல்லை. ஆண்களை எனக்கு அவ்வளவு சீக்கிரம் பிடிக்காது. ஆனா உன்னோட குணமும் நல்ல மனசும் தான் நம் நட்பை வளர்த்திருக்கு. உன்னை உன் பெற்றோர் நல்லா வளர்த்திருக்காங்க. அதுக்காகவே இதையெல்லாம் செய்யலாம்.”
“என்னை நம்புற தானே அன்னம்மா?” எனக் கேட்க, “என்ன கேள்வி இது? உன்னை நம்புறதாலதானே இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன்” என்றாள்.
‘இதே நம்பிக்கை நான் காதலைச் சொல்லும்போதும் இருக்குமா அன்னம்மா?’ என மனதிற்குள் கேட்டுக்கொண்டான்.
“சரிடா, வேலை கிடக்கு அப்புறம் கால் பண்றேன்” என்று இணைப்பைத் துண்டித்தாள். பெற்றோர் அவனோடு இருப்பது போன்ற உணர்வை அவள் கொடுத்திருந்தாள். அந்த உணர்வே அன்றைய நாள் முழுக்க அவனை உயிர்ப்போடு வைத்திருந்தது.
விடுமுறை நாள் என்பதால் வெளியே சென்ற இளா, உற்சாகமாகப் பஞ்சு மற்றும் கண்ணம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினான். அவனது மகிழ்ச்சியைக் கண்ட வசந்தி தன் பேத்தியிடம் சொல்ல, அவளோ அவனுக்காக ‘கேக்’ ஆர்டர் செய்ததோடு, ஆன்லைனில் ஏதோ பரிசு தேடிக்கொண்டிருந்தாள்.
அன்று ஒரு சுதந்திரப் பறவை போலச் சுற்றித் திரிந்தான்.
அன்னம்மாவிற்காகவும் சின்னுவிற்காகவும் தேடித் தேடிப் பொருட்கள் வாங்கினான். அவளது மாமனார், மாமியார், விபு, ஜோவிதா என அனைவருக்கும் வாங்கினான். பிடித்த இடங்களுக்குச் சென்று செல்ஃபிக்கள் எடுத்துக்கொண்டு, மனதிற்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு மாலை வீடு திரும்பினான்.
வந்ததும் மெத்தையில் விழுந்தான். உடல் சோர்வாக இருந்தாலும் மனம் உற்சாகமாக இருந்தது.
அன்னம்மாவிற்கு அழைத்தான். கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தவள், புன்னகையுடன் அழைப்பை ஏற்றாள்.
“பர்த்டே பாய்! எப்படி இருக்கு இன்றைய நாள்?” என்றாள்.
“நீ இல்லாத குறைதான்…” என மெல்ல முணுமுணுத்தான்.
“என்னடா சொன்ன?” என்று அவள் கேட்க, “இல்லை, நல்லா என்ஜாய் பண்ணேன் அன்னம்மா! கூண்டுல இருந்த பறவையை வெளிய விட்டா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு” என்றான்.
“இந்தியா வந்துட்டா நீ ‘ஃப்ரீ பேர்டு’ (Free Bird) தான்” என்றாள்.
“ட்ரீட் கேட்டியே அன்னம்மா, என்ன வேணும் சொல்லு வாங்கிட்டு வர்றேன்” என்றான் இளா.
“நீ வாங்கிட்டு வர வேணாம்… உன் முகத்தைக் காட்டு, பார்க்கணும்” என்றாள். இளா ஒரு நிமிடம் அதிர்ந்து எச்சில் விழுங்கினான்.
“முகத்தைக் காட்டுடான்னு கேட்டேன். என் செலக்சன் உனக்கு எப்படி இருக்குன்னு பார்க்கணும். வீடியோ கால் பண்றேன் அட்டென்ட் பண்ணு” என்று சொல்லி வீடியோ கால் செய்தாள்.
அவனும் அழைப்பை ஏற்று, முகத்தை மறைத்தபடி இருந்தான். “ஏன் முகத்தை மறைச்சு வச்சிருக்க? காட்டு” என்றாள்.
அவன் தயக்கத்துடன் முகத்தை விலக்க, திரையில் தெரிந்த நபரைக் கண்டு அதிர்ந்து போனாள் ஜனனி.
“நந்து!” என்றாள். அவன் தலை குனிந்தபடி நின்றான்.
“நந்து! நீதான் என்கிட்ட இளாவா பேசினியா?”
“ஆமா…”
“ஏன் உண்மையைச் சொல்லலை?”
“நந்துன்னு சொன்னா என்கிட்ட பேசமாட்டியே! உனக்குப் பிடிக்காத நந்துவா பேசுறதை விட, உனக்குப் பிடிச்ச இளாவா பேசினேன்.”
“ஏன்?”
“உன்னை காதலிக்கிற நந்துவை உனக்கு எப்பவும் பிடிக்காதே! இந்தியா வந்ததும் உண்மையைச் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா நீ வீடியோ கால் பண்ணுவேன்னு எதிர்பார்க்கல.”
அவள் அமைதியாக இருக்க, அவன் தொடர்ந்தான். “இளாவோ, நந்தனோ… ரெண்டு பேருமே உன்னை உயிரா காதலிக்கிறோம் அன்னம்மா! என் காதல் எப்பவும் மாறாது ஜனா” என்றான் கண்ணீருடன். அவளும் கலங்கிய கண்களுடன் அவனையே பார்த்திருந்தாள்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
+1

