Loading

அத்தியாயம் -38

சபரியின் வெளிப்படையான பேச்சு, அனைவருக்கும் அங்கு வெட்கத்தையும் சந்தோஷச் சிரிப்பையும் வரவழைத்து இருந்தது.

“ஏய் மீனா, என்னடி இது? உன் வீட்டுக்காரர் உன் மேலே ரொம்பவே ஆசை வச்சிருப்பார் போல. ம்ம்.. நடத்துங்க நடத்துங்க!” கலாய்த்தாள் அர்ச்சனா.

“அய்யோ! என்னங்க அண்ணி இது? நீங்க வேற” பேசியவாறு உள்ளே ஓடி விட்டாள் மீனா.

நவீனும், சபரியின் பேச்சைக் கேட்டு கூச்சத்துடன் நெளிந்தான். மாணிக்கம் தான் சூழ்நிலையைச் சட்டென்று சமாளித்தார்.

“அதுக்கென்ன மாப்பிள்ள, அப்படி ஒன்னு நடந்தாலும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான். யாரு முந்தினா என்ன, நானும் ரேணுகாவும் தாத்தா பாட்டி தானே! ஏன், ரெண்டு பேரும் ஒரே நேரத்துல சொன்னீங்கன்னா இன்னும் நல்லதாச்சே! ஏண்டா நவீன், நான் சொல்றது சரியா?”

உடனே அங்கு சிரிப்புச் சத்தம் அலைமோதியது.

மாலை ஆனதும் அனைவரும் சேர்ந்து கடற்கரைக்குக் கிளம்பினர். மீனா, சபரி கூறாமலேயே, அவன் முதல் முறை அங்கு வந்திருந்த போது கடைக்குச் சென்று ஆசையாக வாங்கித் தந்த லெஹங்காவை அணிந்து கொண்டு தேவதையாய் வெளியே வந்தாள்.

உண்மையிலேயே சபரி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனதில் ஆனந்தம் பொங்க, அவள் அழகைக் கண்களாலேயே அள்ளிப் பருகினான். மீனா அவனைப் பார்க்கும் போது மட்டும் சட்டென்றுப் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அர்ச்சனாவுமே, நாத்தனாரை அந்த உடையில் பார்த்தவுடன் சிறிது அசந்து நின்று விட்டாள்.

“ஏய் என்னடி இப்படி அசத்துறே? எனக்கே இப்படி இருக்கே! சபரி அண்ணாவுக்கு எப்படி இருந்திருக்கும்? உன்னைப் பாத்து அப்படியே மயங்கி விழுந்துட்டாரா பாவம்?” கிண்டல் செய்தாள்.

“போங்க அண்ணி!” வெட்கப்பட்டாள் மீனா.

வெட்கம் வந்தது போல் நடித்தாளா இல்லை நிஜமாகவே வெட்கம் வந்ததா என்பது அவளுக்கே புரியாத புதிர்!

‘அப்ப தானே எல்லாரும் நம்புவாங்க’ என்று கூறி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.

“ஆமா, இது போன தடவை வந்திருந்தப்ப அவர் உனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்தது தானே?” கேட்டாள் அர்ச்சனா.

“ம்ம்.. ஆமா அண்ணி”

“பரவாயில்ல, உனக்கு எது நல்லாருக்கும்னு பாத்துத் தான் செலக்ட் பண்ணிருக்காரு. ம்ம்.. ஒரே ரொமான்ஸ் தான் போல”

“என்ன அண்ணி, இப்படி எல்லாம் கேக்குறீங்க? போங்க அண்ணி” சொல்லிக் கொண்டே வேகமாக ஓடியவள், அங்கு வந்து கொண்டிருந்த சபரியின் மேல் மோதி விழப் போனாள்.

சட்டென்று விழாதவாறு அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் சபரி.

அப்போது பார்த்து, தன் அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் மாணிக்கம்.

மகளும் மருமகனும் நின்றிருந்த நிலையைக் கண்டு சட்டென்று திரும்பி நின்று கொண்டார். சிரித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்.

வெட்கம் பிடுங்கித் தின்றது மீனாவுக்கு. சபரியிடம் இருந்து அவசரமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து அவளும் உள்ளே ஓடினாள்.

அதே நேரத்தில் சமையல் அறையில் இருந்த ரேணுகாவும் அர்ச்சனாவும் கூட இதைப் பார்த்து விட்டனர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

ஒருவழியாக அடுத்த அரை மணி நேரத்தில் கிளம்பிச் சென்றனர் கடற்கரைக்கு. அங்கு நவீன், அர்ச்சனா மற்றும் சபரி, மீனா இரு ஜோடிகளும் சென்று சிறிது நேரம் தண்ணீரில் நின்று கால்களை நனைத்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி இருந்த மாணிக்கமும் ரேணுகாவும் ஆனந்த மழையில் நனைந்து கொண்டிருந்தனர்.

இப்படியாக அன்றைய நாள் நகர்ந்து அடுத்த நாள் வந்தது. மதியம் அனைவரும் உணவு மேஜையில் கூடியிருந்தனர்.

சபரிக்கு முன்பு நடந்தது எல்லாம் நினைவு வர, சட்டென்று மீனாவை நிமிர்ந்துப் பார்த்தான். அவளும் இவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ஏன் அத்தான், என் முகத்தையே இப்படிப் பாத்துட்டு இருந்தா, அப்புறம் அன்னைக்கு மாதிரி சுடு சாம்பார் கையில கொட்டிடப் போகுது. கை எடுங்க அத்தான்!” வேண்டுமென்றே அவனைத் தாக்கினாள் மீனா.

உடனே அனைவரும் அவர்களைத் திரும்பிப் பார்க்க, அசடு வழிந்த முகத்தைத் துடைத்தவாறு குனிந்து கொண்டான்.

“ம்ம்.. மாப்பிள்ளை நம்ம மீனாவ ரொம்பவே ரசிக்கிறாரு போல! சாப்பாடு நேரத்தில கூட சைட் அடிக்கிறாரே நாத்தனார!” கேலியுடன் வெளிப்படையாகவே கலாய்த்தாள் அர்ச்சனா.

குடும்பமே அதற்குச் சிரிக்க, சபரியும் மீனாவும் ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிரித்து வைத்தனர்.

அன்று இரவு எட்டு மணியளவில் தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். அறைக்கு வந்தவுடன், அதற்காகவே காத்திருந்தது போல் மீனா ஆரம்பித்தாள்.

“என்ன, மதியம் சாருக்கு நான் கேட்ட கேள்வியில அப்படியே முகத்தில ஒரு கிலோ அசடு வழிஞ்சது போல! ரொம்ப அவமானமா போயிடுச்சோ?”

அருகில் வந்து அவன் முகத்தையே பார்த்துக் கேட்ட மனைவியை ஒரு விநாடி கண் இமைக்காமல் பார்த்தான் சபரி.

சட்டென்று எதிர்பாராமல் அவளை இழுத்துத் தன் கைக்குள் வளைத்துக் கொண்டான். இப்போது இருவருடைய முகங்களும் அருகருகே இருந்தன.

“என்ன இது, தள்ளுங்க”

“அவமானம் தான் பேபி. ஆனா நான் செஞ்ச வேலைக்குத் தானே நீ இப்ப திருப்பிக் குடுத்துருக்கே! சோ, நான் அத அவமானமா எடுத்துக்கல. பட்..”

சிறிது நிறுத்தினான். அவனுடைய பிடியில் இருந்த மீனாவோ திமிறிக் கொண்டிருந்தாள். அவன் பேச்சை நிறுத்தியதும் பார்த்தாள் அவனை.

அவ்வளவு நெருக்கமாக அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்ததும், ஒரு கணம் அவளுக்குள் அந்தப் பார்வை ஏதோ செய்தது.

ஆனால் சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள்.

“தள்ளுங்க” குரல் சரியாக வெளி வரவில்லை இப்போது.

“பட் பேபி, ஐ லைக் இட்! நீ இப்படி செய்யச் செய்யத் தான் உன்னை எனக்கு இன்னும் ரொம்பப் பிடிக்குது. உன்னோட இந்தத் துறுதுறுப்பு, கேலி, கிண்டல்.. சான்சே இல்ல. ஐ லைக் இட் வெரி மச்! அண்ட்..”

பேச்சை நிறுத்தி அவளுடைய கண்களையே உற்றுப் பார்த்தான் காதலுடன். பெண்ணவள், அவனுடைய பார்வையைத் தவிர்க்கத் தான் நினைத்தாள்.

ஆனால் அவள் சொல்வதை அவள் மனம் கேட்க வேண்டுமே! அவனையே பார்ப்பேன் என்று அடம் பிடித்தது.

வெட்கத்தில் முகம் சிவக்க, ஒரு நொடி கண்களை இமைக்கக் கூட மறந்தவளாய் பார்த்தாள் அவனை.

“அண்ட் ஐ லவ் யூ சோ மச் மை டியர் பொண்டாட்டி!”

கூறியதுடன் நிற்காமல் அவள் என்ன ஏது என்று உணரும் முன்பு, அவளுடைய இதழ்களை தன் இதழ்களால் சிறை பிடித்திருந்தான். படபடவென கண்களைச் சிமிட்டினாள் மீனா.

ஆழ்ந்த ஒரு முத்தத்திற்குப் பிறகு அவளை விடுவித்தான் சபரி. அந்த நொடி, அவனுடைய அந்த முதல் முத்தம், இருவருக்குள்ளும் ஒரு பெரும் காதல் யுத்தத்தை ஏற்படுத்தி ஓய்ந்து போனது.

இருவரும் சமநிலைக்குத் திரும்ப சிறிது நேரம் எடுத்தது.

“சாரி டியர், என்னால முடியல. நீ என் பக்கத்தில வந்து நின்னு பேசினியா.. உன்னோட அந்த கியூட்நெஸ்ல ஒரு செகண்ட் அப்படியே மொத்தமா விழுந்துட்டேன். பேசுற அந்த உதட்டை அப்படியே இழுத்து முத்தம் தரணும் போல இருந்தது. என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல. வெரி சாரி டியர்!”

அவளோ, நடந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்துப் போயிருந்தாள். பிறகு தான் தன்னிலைக்கு வந்து, வேகமாக ஓடி ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது. முகமெல்லாம் சிவக்க, குளிர்ந்த நீரை, படார் படாரென முகத்தில் தெளித்துக் கொண்டாள்.

சிறிது நேரம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட பிறகு தான் வெளியே வந்தாள்.

“நான் கீழே படுத்துக்குறேன்” படுக்கையை எடுக்கச் சென்றவளைத் தடுத்தான் சபரி.

“மீனா ப்ளீஸ்! உடனே என்னை ஒரு வில்லன் மாதிரி பாக்காதே. இனிமே இப்படி நடக்காது சரியா? நீ இங்கேயே படுத்துக்கோ”

அவளும் பதில் எதுவும் பேசாமல் கட்டிலில் படுத்துக் கொண்டாள். ஆனால் மீனாவுக்குத் தான் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது தன்னையே நினைத்து.

‘இவர் பண்ண வேலைக்கு ஏன் எனக்கு கோவம் வரல? அப்படின்னா, எனக்குப் பி.. பிடிக்குதா இவர் செய்றது?’

கேள்வி கேட்டுக் கொண்டவள், மறு நொடியே அதை மறுத்து அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்துக் கொண்டாள்.

‘எனக்குக் கோவம் வந்ததால தானே, கீழே படுக்குறதா சொன்னேன்! ஆமா கரெக்ட், அவர் செஞ்சது சுத்தமா எனக்குப் பிடிக்கல. ஹும்ம்..’

அவள் மனம் அவனை விரும்ப ஆரம்பித்து விட்டது என்பதை அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதற்காக தனக்குத் தானே ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு அதற்கு ஒரு சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.

ஆனால் மறுநாள் அலுவலகத்தில் இருந்த நேரத்தில் கூட, அவ்வப்போது சபரி தந்த முத்தம் மனதிற்குள் வந்து, அவளை ஏதேதோ செய்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் நகர்ந்தது. அன்று மாலை நேரம் ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தாள் மீனா.

அப்போது அவளுடைய அலைபேசி சத்தம் எழுப்பியது. கைப்பையில் இருந்ததை எடுத்துப் பார்த்தாள். தொடு திரையில் சபரியின் பெயர் ஓடிக் கொண்டிருந்தது.

‘இந்த நேரத்தில எதுக்கு இவர் கால் பண்ணிருக்காரு?’

யோசித்துக் கொண்டே அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்தாள். எதிர்முனையில் சபயியின் குரல் அவசரமாகவும் பதட்டமாகவும் ஒலித்தது.

“ஹலோ மீனா, நீ உடனே கிளம்பி, நாம எப்பவும் அம்மாவுக்கு செக்கப்புக்காக ஒரு ஹாஸ்பிடல் போவோம்ல, அந்த ஹாஸ்பிடலுக்கு வர்றியா கொஞ்சம்?”

“ஏங்க என்னங்க ஆச்சு?” இப்போது பதட்டம் அவளுக்கும் தொற்றிக் கொண்டது.

“நான் சொல்றதக் கேட்டு நீ டென்ஷன் ஆயிடாதே மீனா. நவீனுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட். கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?”

“என்னது, அண்ணனுக்கு ஆக்சிடென்டா? அவர் எப்படி இருக்காருங்க? பயம் எதுவும் இல்லையே?”

அழுகை கலந்த குரலில் கேட்டாள்.

“பயமெல்லாம் இல்ல மீனா. நீ சீக்கிரமா வா. உங்க வீட்டில யாருக்கும் சொல்லல. அவங்க டென்ஷன் ஆயிடுவாங்க அப்புறம். அது தான், நீ இங்கே வந்ததுக்கு அப்புறமா சொல்லிக்கலாம்னு இருக்கேன். சரி, இப்ப பேச நேரமில்ல. நீ உடனே கிளம்பி வா”

என்றவாறு அழைப்பைத் துண்டித்து விட்டான்.

மீனாவுக்கு பதட்டத்திலும் பயத்திலும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

உடனே ஒரு ஆட்டோவை அழைத்து ஏறிக் கொண்டாள். போகும் வழியில், தன் மாமியாரை அலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூறி, மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பதாகக் கூறி வைத்தாள்.

யோசனையில் உழன்றது அவள் மனம்.

‘கடவுளே! அண்ணனுக்கு என்னாச்சு? எதுவும் ஆகக்கூடாது!’ கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சத்தமில்லாமல் அழுதாள்.

‘வீட்டில யாருக்கும் தெரியாதுன்னா, இவர் எப்படி அண்ணனைப் பாத்தாரு? எங்கே பாத்தாரு? இவருக்கு யாரு சொன்னது? யாரு ஹாஸ்பிடல்ல சேத்துருப்பாங்க?’

இப்படிப் பலவிதமான யோசனைகளுடன் இருக்கையில், மருத்துவமனையைச் சென்று அடைந்தது ஆட்டோ.

இறங்கி கண்ணீருடன் வேகமாக உள்ளே ஓடினாள் மீனா.

மருத்துவமனையை அடைந்ததும், பதைபதைக்கும் நெஞ்சுடன் வேகமாக உள்ளே ஓடினாள்.

அங்கு வரவேற்பறையின் கவுண்டரில் தன் அண்ணனைப் பற்றி விசாரிக்க, அங்கிருந்த பெண்ணிடம் சென்றாள்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. எப்படியோ எல்லோருடைய மனதிலும் மீனா மீது எழுந்த (அவனாய் விதைத்த) தவறான எண்ணத்தை போக்கிவிட்டான் சபரி.

    மீனா மனதில் அவன் மீதான நல்லெண்ணம், ஈர்ப்பு, உரிமை எல்லாம் இருந்தும் சட்டென இயல்பாய் அவனை, அவன் காதலை ஏற்க இயலாமல் தவிக்கின்றாள்.

    சபரி தான் செய்த தவறை நியாயப்படுத்தவில்லை என்றாலும், செய்ததன் காரணத்தை விளக்கி கூறி விலகி நிற்காமல் மனதால் அதனை ஒத்துக்கொண்டு அவன் காதலையும் வெளிக்காட்டுகின்றான்.