Loading

அத்தியாயம் -37

மீனாவின் பிறந்த வீட்டில் இருந்து, தங்கள் மகளையும் மாப்பிள்ளையையும் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறி அழைப்பு வந்தது மாலதிக்கு.

அனுப்பி வைப்பதாக பதில் கூறியவர், அன்று இரவே, மகனிடமும் மருமகளிடமும் விஷயத்தைக் கூறினார்.

“டேய் சபரி, இன்னைக்கு மீனா அம்மா ஃபோன் பண்ணி இருந்தாங்கப்பா. உங்க ரெண்டு பேரையும் ரெண்டு நாள் அனுப்பி வைக்கச் சொல்லி கேட்டாங்க. ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க?” என்று இருவரையும் பார்த்தார்.

“அதுக்கென்னம்மா, போயிட்டு வர்றோம். ரொம்ப நாளாச்சே போயிட்டு வந்து” தன் அம்மாவிடம் கூறி விட்டு மனைவியைப் பார்த்தான் சபரி.

“என்ன மீனா? நாம நாளைக்குப் போகலாமா?” என்று கேட்டான்.

மீனாவுக்கோ, சென்ற முறை அவர்கள் அங்கு சென்ற போது நடந்தவை தான் மனதில் எழுந்தன முதலில்.

அதனால் பதில் எதுவும் கூறாது அமைதியாக இருந்தாள். அவளுடைய அமைதியைக் கண்ட பிறகு தான், அவையெல்லாம் சபரியின் நினைவில் வந்து நிழலாடின.

சட்டென்று ஒருவித சங்கடத்துடன் பார்த்தான் மீனாவை. பார்வையாலேயே அவளிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்சினான்.

“என்ன மீனா, சபரி கேட்டுட்டு இருக்கான், நீ பதிலே சொல்லாம அவனையே பாத்துட்டு இருக்கே! உன் வீட்டுக்குப் போக உனக்கு இஷ்டமில்லையாம்மா?” கேட்டார் மாலதி.

“அ.. அப்படி எல்லாம் இல்ல அத்த” அவசரமாகப் பதில் கூறினாள் மீனா.

“அதொன்னும் இல்லேம்மா.. திடீர்னு அம்மா வீட்டுக்குப் போகப் போறோம்னவுடனே அவளுக்குச் சந்தோஷத்தில பேச்சே வரல போல. இல்லையா மீனா?” தன் அம்மாவிடம் சமாளித்தான் சபரி.

“ஆ.. ஆமாங்கத்த, அதே தான். ரொம்ப சந்தோஷமாஆஆஆ இருக்கு” நக்கல் கலந்த ஒரு பதிலுடன் பார்த்தாள் கணவனை.

அவளுடைய பார்வையைத் தவிர்த்துத் திரும்பிக் கொண்டான் அவன். குற்றம் செய்த நெஞ்சாயிற்றே! குறுகுறுக்கும் அல்லவா!

“நாங்க நாளைக்குப் போயிட்டு அங்கேயே ஒரு நாள் ஸ்டே பண்ணிட்டு நாளைக் கழிச்சு வர்றோம்மா” கூறிவிட்டுத் தன் அறைக்குள் புகுந்து கொண்டான் சபரி.

மீனாவுக்குத் தான், தன்னுடைய பிறந்த வீட்டிற்குப் போகப் போகிறோம் என்கிற ஒரு சந்தோஷமே இல்லை.

அதற்கு மாறாக தன் பிறந்த வீட்டினரை நினைத்து பயம், பதட்டம், சங்கடம் என்று அனைத்து உணர்வுகளும் சேர்ந்து கொண்டு அலைக்கழித்தன அவளை.

சென்ற முறை போயிருந்த சமயத்தில், அவர்களுக்குத் தன் மீது விழுந்த அதிருப்தியும் சங்கடமும் கவலையும் இன்னமும் அப்படியே இருக்குமோ என்று நினைத்தாலே கண்களில் கண்ணீர் வந்தது அவளுக்கு.

ஆனால், அவளுடைய நினைப்பிற்கு முற்றிலும் மாறாகத் தான் இம்முறை நடக்கப் போகிறது என்பதை சற்றும் எதிர்பார்த்திருக்கவே மாட்டாள் பெண்ணவள்.

ஆம்.. மீனாவுக்கு, அவளுடைய வீட்டாரிடம், தான் வாங்கிக் கொடுத்த கெட்ட பெயரைத் துடைத்து எறிவது தான் தன் தலையாய கடமை என்பது போல் இருந்தான் சபரி.

மீனாவும் சபரியும் தெருமுனையில் வரும் போதே, அவர்களைப் பார்த்து விட்டாள் மீனாவின் அண்ணி அர்ச்சனா. ஏகப்பட்ட சந்தோஷம் அவளுக்கு.

வேகமாக உள்ளே சென்று மாமியாரையும் கணவனையும் அழைத்தாள்.

“ஏங்க, இங்கே வந்து பாருங்களேன்! உங்க தங்கச்சி, அவ புருஷனோட சேர்ந்து வண்டியில எப்படி வர்றான்னு. அத்தே, நீங்களும் வாங்க”

அவளுடைய உற்சாகக் குரலில், ஆச்சரியத்துடன் வேகமாக வாசலுக்குச் சென்றனர் நவீனும் ரேணுகாவும். உள்ளிருந்து மருமகளின் குரலைக் கேட்டுக் கொண்டிருந்த மாணிக்கமும் ஆர்வம் தாங்காமல் முன்னே சென்றார்.

அங்கே, சபரியும் மீனாவும் முகம் நிறைய சந்தோஷத்துடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

மீனாவின் கை, சபரியின் இடுப்பை வளைத்துப் பிடித்திருந்தது. அது தான் அவர்களுடைய அந்த சந்தோஷத்துக்குக் காரணம்.

சென்ற முறை அவர்கள் வந்திருந்த போது தான், மீனா தன்னுடன் சந்தோஷமாகச் சேர்ந்து வாழ்வதில்லை என்றல்லவா சபரி கூறி வைத்திருந்தான்?

அதனால் அவ்வப்போது அவர்களை நினைக்கும் போதெல்லாம், இருவரும் எப்படி இருக்கிறார்களோ என்கிற கவலை வாட்டிக் கொண்டிருந்தது அவர்களுக்கு.

அந்தக் கவலை இப்போது மகளையும் மருமகனையும் இப்படிப் பார்த்த மாத்திரத்தில் பறந்து போயிருந்தது. வண்டியை நிறுத்திய பிறகும் இருவரும் கை கோர்த்துக் கொண்டு நடந்தனர்.

தன் குடும்பத்தினரின் முகங்களைப் பார்த்தே அவர்களின் சந்தோஷத்திற்குக் காரணம் புரிந்து விட்டது மீனாவுக்கு.

சபரியை நினைத்து ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. அவளுடைய வீட்டாரிடம் அவள் மேல் ஒரு அதிருப்தி இருக்கிறது என்றால் அது தன்னால் தான் என்பதை ஒத்துக் கொண்டது மட்டும் அல்லாமல் அதைச் சரி செய்வதற்கு எப்படி எல்லாம் யோசித்து இருக்கிறான் என்பதை நினைத்துத் தான் அவளுக்கு ஆச்சரியம்!

ஆம், இதெல்லாம் சபரியின் திட்டம்.

தன்னையும் அறியாமல், முதல் நாள் வீட்டில் நடந்தது நினைவில் வந்தது அவளுக்கு.

மறுநாள் தன் பிறந்த வீட்டில் தன்னை எப்படி வரவேற்கப் போகிறார்கள், தன்னை எப்படி எல்லாம் கேள்வி கேட்கப் போகிறார்களோ என்றெல்லாம் மனதில் நினைத்து வாடிய முகத்துடன் இருந்தாள் மீனா.

அவளுடைய முக மாறுதலை வைத்தே, அவளுடைய மனநிலையைப் புரிந்து கொண்டான் சபரி. அதற்குக் காரணகர்த்தாவே அவன் தானே! புரியாமல் எப்படி இருக்கும்?

இரவு அறைக்குள் வந்தவுடனே எதுவும் பேசாமல் உறங்கத் தயாரானாள்.

“மீ.. மீனா, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”

ஆனால் அவளோ அவனைத் திரும்பிப் பார்க்காமல் “எனக்குத் தூக்கம் வருது” என்றாள்.

“என்னை மன்னிச்சிடு மீனா. உன் மனசு எனக்கு ரொம்ப நல்லாவே புரியுது. போன தடவை உன் வீட்டில நான் செஞ்ச பிரச்சினைய நினைச்சா எனக்கே கஷ்டமா இருக்கு. உனக்கு எப்படி இருக்கும்?

என்னால உனக்கு வந்த கெட்டப் பெயரை நானே சரி செய்யணும்னு நினைக்கிறேன் மீனா. ஆனா அதுக்கு உன்னோட கோவாபிரேஷனும் எனக்குக் கொஞ்சம் வேணும். மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே மீனா ப்ளீஸ்!”

கெஞ்சியவனைப் பதில் எதுவும் கூறாமல், முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தாள்.

“ப்ளீஸ் மீனா!”

“என்ன பண்ணனும்னு சொல்றீங்க?”

“நா.. நான் சொல்றது கேட்டு நீ கோச்சுக்கக் கூடாது!”

‘அப்படி என்ன சொல்லப் போறீங்க?’ என்பது போல் பார்த்தாள் மீனா.

“டூ வீலர்ல போகலாம்னு நினைச்சிருக்கேன் நான். போறப்ப, இ.. இங்கே இருந்து எல்லாம் இல்ல, உங்க வீடு இருக்கிற தெருவுக்குப் போனவுடனே, நீ என்னைப் பிடிச்சுகிட்டா ந.. நல்லது! அதுவும் நீ என் இ.. இடுப்பைப் பிடிச்சிருந்தா, அவங்களுக்கு அதைப் பாக்குறப்பவே சந்தோஷமா இருக்கும்”

அதற்கு அவனை முறைத்தாள் அவள்.

“அப்ப மட்டும் தான். அதுவும் நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கோம்னு அவங்கள நம்ப வைக்கத் தான் இந்த நாடகம். மத்தபடி எந்த ப்ளானும் இல்ல இதில. என்னை நம்பு!”

மீனாவுக்கும் அப்போதைக்கு வேறு வழியில்லை. தன் அப்பாவும் அம்மாவும் தன்னை நினைத்து எந்தக் கவலையும் படக்கூடாது என்றால் அதற்கு சபரி சொல்வதற்கு ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

“சரி, வேற வழி? இப்படி கண்ட கண்ட பிரச்சினை எல்லாம் பண்ணி வச்சு, என்னை வம்பில மாட்டி வச்சுட்டீங்க. இப்ப அதுக்கு ஏதாச்சும் பண்ணித் தானே ஆகணும். ஓகே, நீங்க சொல்றதுக்கு ஒத்துக்குறேன். பட், இதையே சாக்கா வச்சிட்டு ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாது என் கிட்ட! ஞாபகம் வச்சுக்கோங்க!”

“அதெல்லாம் எதுவும் மாட்டேன் மீனா. நான் செஞ்ச தப்பை நானே சரி செய்யணும்னு நினைக்கிறேன். வேற எந்த நோக்கமும் இல்ல எனக்கு”

“ஓகே ஓகே”

“அப்புறம் அ.. அது மட்டும் இல்ல. அப்பப்ப நான் உன்னைத் தொட்டு கிட்டுப் பேசினாலும், நீ கண்டுக்கக் கூடாது!”

அதற்கும் ஒரு முறை முறைத்து விட்டுப் படுத்தாள் மீனா.

மறுநாள் இருவரும் வீட்டிலிருந்து கிளம்பி, மீனாவின் வீடு இருக்கும் தெருமுனைக்குச் சென்றவுடன், வண்டியின் வேகத்தைக் குறைத்தான் சபரி.

தயக்கத்துடன் பின்னால் திரும்பி மனைவியைப் பார்த்தான். வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு தன் கையால் அவனுடைய இடுப்பைப் பிடித்துக் கொண்டாள்.

மனைவியின் கை பட்டதும், சபரிக்கு மெய் சிலிர்த்தது. மனதிற்குள் சந்தோஷப் பிராவகம் ஊற்றெடுத்தது.

மீனாவின் குடும்பமே வாசலுக்கு வந்து நின்றதைக் கண்டு, தன் கணவனின் யோசனை மிகச் சரியாக வேலை செய்திருக்கிறது என்பது அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது அவளுக்கு.

வீட்டிற்கு அருகில் வந்ததும் வண்டியை நிறுத்திய சபரி, வீட்டை நோக்கி நடக்கும் போது மீனாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.

அதைக் கண்டு இன்னமும் சந்தோஷம் அவர்களுக்கு எல்லாம். எப்படியோ, வீட்டை அடையும் போதே, தன் குடும்பத்தினரின் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்த சபரியை நினைத்து, உண்மையிலேயே பெருமையாக இருந்தது.

ஒரு தவறைச் செய்து விட்டு, அதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைக்கும் அவனுடைய இந்தக் குணம் அவளுக்குப் பிடித்திருந்தது.

“வாங்க மாப்பிள்ள, வாம்மா மீனா, வாங்க வாங்க!” சத்தம் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள்.

உள்ளே சென்றதும் அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சின் நடுவே நவீன் அர்ச்சனாவின் திருமணம் நடந்ததைப் பற்றிய பேச்சு வந்தது.

“நவீன், உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?” கேட்டான் சபரி.

“டூ இயர்ஸ் கம்ப்ளீட் ஆயிருச்சு மாப்பிள்ள” என்றான் நவீன்.

அதற்குள் ரேணுகா குறுக்கிட்டார் நடுவே.

“டேய் நவீன், மூணு வருஷம் ஆறதுக்கு இன்னும் மூணே மாசம் தான் இருக்கு. அது தான் காலாகலத்தில ஒரு குழந்தையப் பெத்து கையில குடுக்கச் சொல்றேன். ரெண்டு பேரும் தள்ளிப் போட்டுட்டே இருக்கீங்க” அங்கலாய்த்தார்.

அதற்கு நவீன் பதில் சொல்வதற்கு முன்பு சபரி முந்திக் கொண்டு பேசினான்.

“ஏன் நவீன், ரொம்ப லேட் பண்றீங்க? அத்த ஆசைப்பட்றது நியாயம் தானே நவீன்!”

“நல்லா சொல்லுங்க மாப்பிள்ள” மாணிக்கம் வந்தார் இடையே.

“நவீன், நான் ஒன்னு சொல்லிட்றேன். இந்த விஷயத்தில நீங்க ரொம்ப லேட் பண்ணிட்டே இருந்தீங்கன்னா அப்புறம் நாங்க முந்திக்கப் போறோம். அப்புறம் எங்க மேலே கோவப்படக்கூடாதுப்பா. இப்பவே சொல்லிட்டேன். என்ன மீனா, நான் சொல்றது சரி தானே?”

மீனாவைப் பார்த்துக் கண்ணடித்தான். அனைவரின் எதிரே சபரி இப்படிக் கேட்டதும் திடுக்கிட்டு விட்டாள் மீனா. உண்மையிலேயே அவளுக்குக் கொஞ்சம் வெட்கமாகத் தான் போய் விட்டது.

அர்ச்சனாவும் ரேணுகாவும் கூட, இதென்ன மாப்பிள்ள இப்படி இவ்வளவு வெளிப்படையா பேசுறாரே என்று அவர்களுக்கும் சிறிது வெட்கமாகத் தான் இருந்தது. தலையைக் குனிந்து வாயைப் பொத்திச் சிரித்தனர்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தவறான புரிதலில் அவன் செய்த தவறை எல்லாம் அவனே சரி செய்ய விழைகிறான் நன்று.

    குடும்ப உறுப்பினர்களின் மகிழ்விற்காக மீனாவும் அவன் கோரிக்கைக்கு செவிசாய்த்துவிட்டால்.

    ஒரே கல்லில் இரு மாங்காய் போல், செய்த தவறை சரி செய்து தனது குற்றஉணர்வை குறைக்கும் வாய்ப்பும், தனது ஆழ்மன ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பும்.

    ஆதர்ஷ தம்பதிகள் போல் காட்டிக்கொள்கின்றான் சபரி. அவனது நடிப்பை அன்றும் நம்பினர் இன்றும் அப்படியே. கைதேர்ந்த நடிகன் தான் போல்.

    அன்பானவர்களுக்காக எதுவும் செய்யும் ஒரு அன்பானவன்.