
அத்தியாயம் -36
சபரியின் ஒவ்வொரு செய்கையையும் மனதிற்குள் ரசிப்பதும், அதற்கு அவன் தன் புருஷன் தானே என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்வதுமாக இருந்தாள் மீனா.
அவளுடைய இந்த மாற்றத்திற்கு, அவளுடைய மனசாட்சியே அவளைக் கேள்வி கேட்டது. அதைத்தான் தடுக்கவே முடியவில்லை அவளால்.
‘என்னமோ புருஷன் தானேன்னு ரொம்ப உரிமையா சொல்லிக்கிறே? என்ன நினைச்சிருக்கே நீ உன் மனசுல? நடந்த எல்லாத்தையும் ஒரே நிமிஷத்தில மறந்துட்டு அவனை உன் புருஷனா ஏத்துக்கப் போறியா? எல்லாத்துக்கும் மேலே, பாவம் ஆகாஷ்! அவன் என்ன ஆனான்னு இன்னைக்கு வரைக்கும் தெரியல. அவனையும் நீ சுத்தமா மறந்துட்டியா மீனா? அவன் எப்படி இருக்கான்.. என்ன ஆனான்ற அக்கறை உனக்கு கொஞ்சமாவது இருக்கா?’
ஆகாஷின் நினைவு வந்தவுடன், மனமெல்லாம் பதறிப் போனது அவளுக்கு.
‘அய்யோ ஆமால்ல.. ஆகாஷ்.. ஆகாஷ்.. அவர எப்படி மறந்தேன் நான்? பாவம் இல்லையா அவர்? அவர் எதுக்காக இதில பாதிக்கப்படணும்? அய்யோ.. இப்ப எப்படி இருக்கார்னு கூட தெரியலையே! என்ன பண்றது? எப்படி தெரிஞ்சிக்கிறது?’
‘ஏன்.. இப்ப தான் இவர் திருந்திட்டாரே. இவர் கிட்டேயே கேக்க வேண்டியது தான். இன்னைக்கு வீட்டுக்குப் போனவுடனே மொதோ வேலையா அது தான் செய்யணும்’
தானே கேள்வி கேட்டு தானே பதிலையும் சொல்லிக் கொண்டாள்.
இப்படியே அன்றைய நாளில் அலுவலகத்தில் அவளால் ஒரு நிலையிலேயே இருக்க முடியவில்லை.
அன்று இரவு வேலை முடிந்து அறைக்கு வந்ததும், வேகமாகச் சென்று உடை மாற்றிக் கொண்டு வந்தாள்.
சபரியிடம் பேச்சை எப்படித் துவக்குவது என்று தெரியாமல் முழித்தாள். ஆனால் அவளுக்கு சிரமம் வைக்காமல் சபரியே அவளிடம் தானாக வந்து பேசினான் அதுவும் சிறிது தயக்கத்துடன்.
“மீ..மீனா, உன் கிட்ட ஒன்னு சொல்வேன். நீ கோச்சுக்காம கொஞ்சம் கேக்குறியா?”
அவனுடைய தயக்கத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியமாகிப் போனது மீனாவுக்கு. பதில் எதுவும் கூறாமல் நிமிர்ந்து பார்த்தாள் கணவனை.
“ப்ளீஸ் மீனு, இனிமே நீ இங்கே கட்டில்லேயே படுத்துக்கோயேன். நான் தப்பித் தவறிக் கூட உன் பக்கத்தில வர மாட்டேன். நான் இதோ.. தள்ளி அந்த மூலையில படுத்துக்குறேன் சரியா? ப்ளீஸ் மீனா, இதுக்கு மட்டும் ஒத்துக்கோயேன்!”
உடனே சிறிதும் தாமதிக்காமல் தன்னுடைய கேள்வியைக் கேட்பதற்குத் தயாரானாள் மீனா.
“மொதோ நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கணும். அதுக்கு பதில் சொல்லுங்க நீங்க. இதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்”
“சரி சரி கேளு. ஆனா நான் பதில் சொல்லிட்டா நீ இங்கே படுப்பே தானே?”
“அது உங்க பதிலைப் பொறுத்துத் தான் முடிவெடுக்க முடியும். இப்ப சொல்ல முடியாது” வீராப்புடன் பேசினாள்.
“ஓகே சொல்லு, என்ன கேக்கணும் உனக்கு?”
“ஆகாஷை என்ன பண்ணீங்க? அவர் நல்லா தானே இருக்கார்? உடனே, அவர் மேலே எனக்குக் காதல், அப்படி இப்படின்னு கண்ட கேள்வியைக் கேட்காதீங்க. அவர் ஒரு அப்பாவி! நீங்க என்னைக் கல்யாணம் பண்ணனும் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் அவரைத் தூக்கி இருக்கீங்க. மத்தபடி அவருக்கும் இந்தப் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எந்தக் காரணமும் இல்லாம அவர் எதுக்கு பாதிக்கப்படணும்? சொல்லுங்க.. அவர என்ன பண்ணீங்க?”
“ஆகாஷை நான் எதுவுமே பண்ணல மீனா. நமக்குக் கல்யாணம் ஆகுற வரைக்கும் தான் அவர் என்னோட கஸ்டடியில இருந்தாரு. அதுக்கு அப்புறம் அவரை வெளியே அனுப்பியாச்சு. நீ பயப்பட்ற மாதிரி எதுவும் நடக்கல. என்னை நம்பு மீனா!”
அதன் பிறகு தான் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது அவளால். ஆனாலும் மறுநாள் ஆகாஷின் எண்ணிற்கு அழைத்துப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
“சரி, உன் டவுட் கிளியர் ஆயிடுச்சுல்ல. மேலே வந்து படு”
“இல்லே, அதெல்லாம் முடியாது”
“ஏய், இது தானே வேணான்றது. டீல்னா டீல்! கரெக்டா இருக்கணும். வா மீனா ப்ளீஸ்!”
“வேணாங்க, பேசாம படுங்க நீங்க”
“ஏய், நான் ஒன்னும் வில்லன் எல்லாம் கிடையாதுடி. உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் நான். வேணும்னா நடுவில வரிசையா தலையணை வேணா வச்சுக்கலாம் வா”
அதற்கும் செவி சாய்க்காமல், அதே மூலையில் தரையில் படுக்கையை விரித்து, அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில், அவளுக்குப் பின்னால் சத்தம் ஏதோ கேட்டதும், பதறியடித்து திரும்பிப் பார்த்தாள்.
அவளுடைய படுக்கைக்குச் சிறிது தள்ளி, தரையில் தனது படுக்கையை விரித்துக் கொண்டிருந்தான் சபரி.
“எ.. என்ன பண்றீங்க நீங்க? நீங்க எதுக்கு இங்கே படுக்கணும்? போங்க மேலே”
“என் பொண்டாட்டி கீழே தரையில படுக்குறப்ப, எனக்கு மட்டும் கட்டில்ல படுத்துத் தூங்குறதுக்கு மனசு வரல டார்லிங். உன்னை மேலே வரச் சொன்னா நீ வர மாட்டேன்றே. அது தான் நான் கீழே வந்துட்டேன். நானும் இங்கேயே உன் கூட படுத்துக்குறேன். சரி சரி, எனக்குத் தூக்கம் வருது. தூங்கப் போறேன்”
கூறிவிட்டு அங்கேயே படுத்து, கண்களை இறுக மூடிக் கொண்டான்.
“அய்யோ இம்சை இம்சை. வந்து தொலைங்க!” கோபத்துடன் கூறி எழுந்து கட்டிலுக்குச் சென்றாள்.
சபரியும் உற்சாகத்துடன் எழுந்து சென்றான். தலையணைகளை அவனே எடுத்து வரிசையாக நடுவில் வைத்தான் தடுப்புக்கு.
“இப்ப ஓகே தானே உனக்கு? நீ அந்தப் பக்கம் படுத்துக்கோ. நான் இந்தப் பக்கம் படுத்துக்குறேன். சரி தானே?”
கூறிவிட்டு படுத்துக் கொண்டவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது. மீனாவுக்கு, அவனைப் பார்த்து, அவனுடைய அந்த முகத்தைப் பார்த்து ஒரு மாதிரியாக மனம் நெகிழ்ந்து போனது.
‘பாவம், இவர் நல்லவர் தான்! ரொம்ப நல்லவர்! ஆனாலும் என் விஷயத்தில இவர் செஞ்சது கொஞ்சம் ஓவர். எப்படி அதை அவ்வளவு ஈசியா மன்னிக்க முடியும்? ஹும்ம்..’
திரும்பி சுவரைப் பார்த்துப் படுத்துக் கொண்டாள்.
நாட்கள் இப்படியாகவே நகர்ந்தது. மீனா அவனுக்குக் கோபம் வர வேண்டும் என்பதற்காகவே ஏதாவது செய்வதும், ஆனால் அவன் இவளிடம் கோபப்படுவதற்குப் பதிலாக அவளை இன்னும் அதிகம் இரசிப்பதுமாகவே ஆகின.
மீனா தான் எதுவும் செய்வதறியாது முழிக்க வேண்டியதாயிற்று. தினமும் ஒரு முறையாவது ஏதாவது ஒரு சாக்கை வைத்துக் கொண்டு அவளிடம் தன் காதலைக் கூறினான்.
மீனாவின் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக இளகி, அவன் பக்கமாக சாய ஆரம்பித்து இருந்தது. ஆனால் அதை ஒப்புக்கொள்ளத் தான் அவளால் முடியவில்லை.
அவன் மேல் இன்னும் கொஞ்சம் அன்பும் காதலும் வருவதற்கு அடுத்த இரண்டு நாட்களில் நடந்த ஒரு நிகழ்ச்சி காரணமாக அமைந்தது.
அன்று எப்போதும் போல் அலுவலக வேலைகளில் மும்முரமாக இருந்த நேரம். திடீரென, ஏதோ அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு நடந்த தாக்குதலை ஒட்டி, மக்கள் ரகளையில் ஈடுபட்டதால் அரசாங்கமே பந்த் அறிவிப்பு தந்திருப்பதாகக் கூறி அலுவலகத்தில் இருந்து அனைவரும் கிளம்பலாம் என்று கூறி விட்டனர்.
உடனே பதட்டம் நிலவத் தொடங்கியது அங்கு. அனைவரும் அவசரமாகப் புறப்பட்டுச் சென்றனர் தத்தம் வீடுகளுக்கு.
மீனாவும் அவளுடன் இன்னும் இரண்டு பெண்களும் கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர்.
சிறிது நேரத்தில் மீனாவுடன் இருந்த அந்த இரு பெண்களும் ஏறக்கூடிய பேருந்து வந்து விட்டது.
“மீனா, பத்திரமா போங்க. வீட்டுக்குப் போயி ஃபோன் பண்ணுங்க” என்று அவசரமாகவும் அக்கறையுடனும் கூறி விட்டு அப் பெண்கள் பேருந்தில் ஏறினர். அவர்கள் ஏறிக் கொண்டதும் பேருந்து புறப்பட்டுச் சென்றது.
இப்போது அங்கு பேருந்து நிலையத்தில் மீனாவைத் தவிர ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். மீனாவுக்குப் பயத்தில் அழுகையே வந்து விட்டது.
கண்களில் கண்ணீர் திரள நின்றிருந்தாள். அடுத்த பேருந்து வரவும் இன்னும் சிலர் குறைந்து, இருவர் மட்டுமே இருந்தனர்.
அவர்கள் இருவரும் ஆண்கள். ஒருவருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசி விட்டு, “பஸ் கூட வராதாம்பா. எப்படியாவது இங்கே இருந்து கிளம்புற வழியப் பாருங்க” என்று கூறி விட்டு மீனாவைப் பார்த்தார்.
“ஏம்மா, ரொம்ப நேரம் தனியா நிக்காதீங்க இங்கே. வீட்டில யாராச்சும் இருந்தா வரச்சொல்லி சீக்கிரமா வீடு போயி சேர்ற வழியப் பாருங்கம்மா” என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தார் அவர்.
என்ன செய்வதென்று தெரியாமல் பீதியுடன் சுற்றிலும் பார்த்தாள் மீனா. அந்நேரத்தில் சபரியை அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்ற, அலைபேசியை எடுக்கும் போது, அங்கு வண்டி ஒன்று அவளை உரசிக் கொண்டு வந்து நின்றது.
அதிர்ந்து பார்த்தாள் பெண்ணவள். அங்கு வண்டியில் சிரித்தபடி அமர்ந்து இருந்தவன் சபரியே தான். இவள் பார்த்ததும் படக்கென்று கண்ணடித்தான்.
ஆனால் அவளுக்கோ, இவ்வளவு நேரம் தாயைப் பிரிந்திருந்த குழந்தை, அம்மாவைப் பார்த்ததும் நிம்மதியான ஒரு உணர்வில் அழுகை வருமே, அப்படி இருந்தது. அழுகை பெருக்கெடுத்தது.
“ஹேய், அழறியா பேபி? அது தான் அத்தான் வந்துட்டேன்ல? இனிமே என்ன பயம்? இன்னும் கொஞ்சம் முன்னாடியே வந்துருப்பேன். நடுவில ஊர்வலம் வேற. அதுதான் லேட் ஆயிடுச்சு”
அவன் பேசப் பேச அழுகை பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு. அருகில் சென்று அவனைக் கட்டிக் கொள்ளாதது மட்டும் தான் குறை.
சபரியும் அவளைப் புரிந்து கொண்டான். அந்நேரத்தில் எந்த ஒரு கேலியோ கிண்டலோ பேசாமல் அவளுடைய கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டான். தோளைத் தட்டிக் கொடுத்தான். மீனாவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. மனதில் இருந்த பயமெல்லாம் விலகி, வண்டியில் அவன் பின்னே ஏறி நிம்மதியுடன் அமர்ந்து கொண்டாள்.
‘இவருக்கு என் மேலே காதலும் அன்பும் மட்டும் இல்ல, அக்கறையும் நிறைய இருக்கு. நான் ஏன் இவர மன்னிச்சு, நல்லபடியா சந்தோஷமான ஒரு வாழ்க்கைய வாழக்கூடாது?’
வீடு சென்று அடையும் வரையில் தான் இந்த நினைப்பு. பிறகு திரும்பவும் முருங்கை மரம் ஏறி விட்டது.
மற்ற அனைத்து விஷயங்களிலும் அவனை மன்னித்தாலும், தன் திருமணத்தை நிறுத்தி, தன் தாய் தந்தையை அவமானத்திற்கு உள்ளாக்கி, அவர்களை அழ வைத்ததை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவளால்.
அந்த நிகழ்ச்சியை மட்டும் மறக்கவும் தயாராகவில்லை அவள்.
நடுவே இரண்டு முறை ஆகாஷின் எண்ணிற்கு அழைப்பு விடுத்துப் பார்த்தாள். அது ‘சுவிட்ச் ஆஃப்’ என்றே வந்தது.
அந்த வார இறுதியான சனிக்கிழமைக்கு முதல் நாள் திடீரென, மீனா வீட்டில் இருந்து மாலதிக்கு அழைப்பு வந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


குடும்பத்தின் மீதான சபரியின் உண்மையான அன்பை, அக்கறையை, நேசத்தினை கண்கொண்டு பார்த்திருக்கிறாள் மீனா.
இன்று தனக்கும் அந்த நேசத்தினை வழங்க அவன் முயல்கின்றான் என்றும் தெரிகின்றது.
ஆனால் திருமணத்தின் போது தனது தாய், தந்தை அடைந்த அவமானம், அவர்களின் பரிதவிப்பு எல்லாம் சேர்ந்து அவளை நிலையான முடிவை எடுக்க இயலாமல் தடுக்கின்றது.
மிக்க நன்றி 😊