
அத்தியாயம் -12
மகன் சபரி கூறியதைக் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டது மாலதிக்கும் சாம்பசிவத்துக்கும்.
‘இதென்ன அநியாயமா இருக்கு! கல்யாணம் முடிஞ்ச மறுநாளே எந்த ஒரு பொண்ணாவது, தன்னோட புருஷன் கையில சுடு சாம்பாரக் கொட்ற அளவுக்கு அவ்வளவு அலட்சியமா இருப்பாங்களா? சொல்லப்போனா பாத்து பாத்துல்லே கவனிப்பாங்க யாரும். இவ என்ன இப்படி இருக்கா?’
மாலதிக்கு இதை நம்பக்கூட இயலவில்லை.
“என்னது, என்னடா சொல்றே? மீனா தான் ஏதோ யோசனையில இப்படி செஞ்சாளா?”
மருமகளையே திகைப்புடன் பார்த்தபடி மகனிடம் கேட்டார் மாலதி.
“ஆமாம்மா. ஆனா பாவம்மா அவ. என்ன வேணும்னேயா பண்ணிருக்கப் போறா? தெரியாம நடந்துருக்கும் விடுங்க”
‘பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ற கதையால்ல இருக்கு இவர் பண்றது! வேணும்னே நான் செஞ்சேன்னு சொல்லிட்டு இப்ப நல்லவர் மாதிரி எனக்குப் பரிஞ்சு பேசுற மாதிரி நடிக்கிறாரே!’
கணவனைக் கோபமாகப் பார்த்தாள்.
அவனோ, உன் கோபம் என்னை எதுவும் செய்யாது என்பது போல் பார்த்தான் அவளை.
“மீனா, நீ என்ன இவ்வளவு கவனக்குறைவாவா இருப்பே? சாம்பார் சூடா இருக்குனு உனக்கு என்ன தெரியாதா? அப்புறம் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையா இருப்பே? இவனைப் பாரு, கையி எப்படி சிவந்து போயிருக்குன்னு பாரு” கோபமாகக் கேட்டார் மாலதி.
மீனாவுக்கு அதற்கு பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்.
“இ..இல்லேங்க அத்தே.. நா எ.. எதுவும் பண்ணல” திக்கித் திணறிக் கூறினாள்.
“ஏம்பா சபரி, இங்கே என்ன நடந்துட்டு இருக்கு என்றதே எனக்குச் சுத்தமா புரியல. ஏம்மா மீனா, காலையில என்னன்னா, கோவிலுக்குப் போற விஷயத்த உன் அத்த எத்தனை தடவை சொல்லியும் அவன் கிட்ட நீ சொல்லாம அலட்சியமா இருந்து இருக்கே.
இப்ப என்னன்னா, சூடா இருக்கிற சாம்பாரைக் கொஞ்சம் கூட கவனம் என்றதே இல்லாம கையில கொட்டி வச்சிருக்கே. ஏன் இப்படி எல்லாம் செய்றே நீ? சமையல் வேலையை அவ்வளவு நேர்த்தியா, ருசியா செய்யத் தெரிஞ்ச உனக்கு, இந்தச் சின்ன சின்ன விஷயங்கள்ல எப்படி இவ்வளவு கவனம் இல்லாம போகும்?
இதெல்லாம் உனக்குத் தெரியாம தான் நடக்குதா இல்லே வேற என்னவா இருக்கும்னு யோசிக்கத் தோணுதும்மா எனக்கு. ஏம்மா இப்படி எல்லாம் பண்றே? மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!”
உண்மையாகவே அவருக்கும் அங்கு நடந்தது குழப்பத்தைத் தர, தன்னுடைய மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டு மனைவியைத் திரும்பிப் பார்த்தார் சீனிவாசன்.
“கைக்கு ஏதாச்சும் மருந்து பூசி விடு மாலதி. சரியாப் போயிடும்”
கூறியவாறு அங்கிருந்து இறுகிய முகத்துடன் நகர்ந்தார்.
அந்த நேரத்தில் அவள் என்ன சொன்னாலும் அது அவர்களின் காதில் ஏறாது போல் தான் தோன்றியது மீனாவுக்கு. என்ன தான் இருந்தாலும், மகனை விட்டுக் கொடுக்க முடியுமா அவர்களால்? அதனால் அவளுடைய நியாயத்தைக் கூறக் கூட முடியவில்லை அவளால்.
“சரி சரி, மசமசன்னு அப்படியே நிக்காம ஃபிரிட்ஜில இருக்கிற தோசை மாவு கொஞ்சம் எடுத்துட்டு வா. புள்ளையோட கையில பூசி விட்றேன். கை எரிச்சலாவது குறையும். சீக்கிரம் எடு போ”
கோபம் கொஞ்சமும் குறையாமல் உரைத்தார் மாலதி. மீனாவும் வேகமாகச் சென்று ஒரு கரண்டியில் மாவை அள்ளி எடுத்து வந்தாள்.
விமலா அதை வாங்கி,சபரியின் கைகளில் அதை மெதுவாகப் பூசி விட்டார்.
“நல்லவேளை, கை சிவக்க மட்டும் தான் செஞ்சிருக்கு. கொப்புளம் எல்லாம் எதுவும் ஆகல”
அவராகப் புலம்பிக் கொண்டார்.
“இங்கே பாரு மீனா, இனிமே கவனமா இருந்துக்கோ! இன்னொரு தடவை இப்படி எல்லாம் எதுவும் நடக்கக்கூடாது. அப்படி ஏதாவது நடந்ததுன்னா, அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் பாத்துக்கோ”
கடுமையாகப் பேசி விட்டு சமையலறையை நோக்கிச் சென்றார்.
அங்கு நடப்பதை எதுவும் புரிந்து கொள்ள இயலாமல், குழப்பம் நிறைந்த முகத்துடன், கண்ணீர் தேங்கிய விழிகளுடன் நின்றவள், ஏதோ ஒரு உந்துதலில் சட்டெனத் திரும்பிக் கணவனைப் பார்த்தாள்.
அவனோ, இவளையே எகத்தாளமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ஒரே நாள்ல என் அப்பா கிட்டேயும் அம்மா கிட்டேயும் நல்ல பேர் வாங்கி, அவங்களக் கைக்குள்ள போட்டுக்கலாம்னு பாக்குறியாடி? அது நடக்கவே நடக்காது! அந்த ஒரே நாள்ல உன் இமேஜை எப்படி எல்லாம் உடைச்சேன்னு பாத்தேல்லே? இனி நீ எத்தனை தோப்புக்கரணம் போட்டாலும் உன்னால எதுவும் கிழிக்க முடியாது அவங்க கிட்ட! உன்னோட கெட்ட பேரை அழிச்சுட்டு அங்கே நல்ல பேரைக் கொண்டுட்டு வரவே முடியாது உன்னால!’
அவனுடைய அந்த எகத்தாளப் பார்வையில் அந்த அர்த்தம் தான் பொதிந்து இருக்கிறது என்பதை மீனாவால் இப்போது நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
அவன் தன்னைப் பழி வாங்கத் தான் திட்டம் போட்டு தன்னைத் திருமணம் செய்து கொண்டான் என்பதையே மீனாவால் இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில், அவனுடைய பழி வாங்கும் படலத்திற்காக இப்படிப்பட்ட காரியத்தை எல்லாம் செய்கிறான் என்பது அவளுக்கு இன்னும் கூடுதல் அதிர்ச்சியைத் தந்திருந்தது.
அவன் எப்போது எப்படி நடந்து கொள்வான் என்பதை அவள் அறிந்து கொள்ள முடிந்தாலாவது, அதற்கேற்ப தன்னைத் தயார் செய்து கொள்ள முடியும் அவளால்.
ஆனால், அவன் செய்யும் ஒவ்வொன்றும் சுத்தமாகத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை அவளுக்கு. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அவள் நிலைமை.
ஆனால் அவனோ, அந்த ஒரு சம்பவத்தை வைத்தே அடுத்த சற்று நேரத்தில், இன்னும் அதை விடப் பெரிதாகத் தன்னை மாட்டி விடப் போகிறான் என்பதை அவள் சற்றும் எதிர்பார்த்தே இருக்க மாட்டாள் பாவம்!
அந்தப் பிரச்சினை அத்தோடு முடிந்தது என்று தான் நினைத்திருந்தாள் அவள். ஆனால் அங்கு நடந்ததோ வேறு.
மகனுக்குக் கையில் குளிர்ந்த மாவை வைத்துப் பூசி விட்ட மாலதி,
“கொஞ்ச நேரம் கைய அப்படியே வச்சிரு சபரி. அப்புறம் கை கழுவலாம். எரிச்சல் குறைஞ்சிடும். உள்ளே போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ரெடி பண்ணிக்கோ போ. கோவிலுக்குப் போகணும்னு சொன்னேன் இல்லையா?”
“சரிம்மா” என்றவாறு எழுந்து சென்றான் சபரி.
“எரிச்சல் இப்ப எப்படிடா இருக்கு? கொஞ்சம் பரவாயில்லையா?”
“ஆமாம்மா.. நல்ல குறைஞ்சிருக்கு. நீங்க ரொம்ப கவலைப்படாதீங்க. இது சின்ன விஷயம் தானே! இதுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டப் பட்றீங்க?”
“போடா, கொதிக்கிற சாம்பார் கையில கொட்டினா எப்படி இருக்கும்? என்னமோ நீ அசால்டா பேசுறே?”
“அவ்வளவு கொதி எல்லாம் இல்லேம்மா ஒன்னும்”
“ஆமாமா.. கொதிச்சது கொட்டி இருந்ததுன்னா கொப்புளம் எல்லாம் ஆயிருக்கும் கையில. நல்லவேளை!”
ஒரு நிமிடம் நிறுத்தி விட்டுத் தொடர்ந்தார்.
“ஆனாலும் உன் பொண்டாட்டி இப்படி ஒரு வேலையப் பண்ணுவான்னு நான் கொஞ்சமும் நினைக்கல”
முகத்தைச் சுழித்தவாறு கூறினார்.
“என்னம்மா இது! அவ என்ன வேணும்னேயே செஞ்சா? விடுங்க”
மீனாவுக்கோ அவன் பேசுவதைக் கேட்க கேட்க ஆத்திரமாய் வந்தது.
‘எப்படி நடிக்கிறான்? நல்லா இரட்டை வேஷம் போடுறான்! இவனை எல்லாம்..’ கைகளை மடக்கி அவனை முஷ்டியால் குத்துவது போல் மனதிலேயே நினைத்துக் கொண்டாள்.
பின், உண்மையில் செய்ய முடியுமா என்ன? ஆனால் அவளுடைய அந்தக் கோபம் யாரை என்ன செய்து விடப் போகிறது?
“அது தான் ரெண்டு பேரும் சாப்பிட்டுப் போயாச்சே. நீயும் வா, சாப்பிடலாம் நாம”
சலிப்புடன் அழைத்தார் மருமகளை. அவளுடைய முகத்தைக் கூடப் பார்க்கவில்லை அவர். சிறிது நேரத்திற்கு முன்பு மீனா மேல் காட்டிய அன்பும் பரிவும் கனிவும் இப்போது தவறிப் போயிருந்தது அவருடைய பேச்சில்.
எதுவும் பேசாமல் இருவருக்கும் தட்டு எடுத்து வந்து அமர்ந்தாள் மீனா. அவளுக்கு இப்போதைக்கு இதையெல்லாம் சமாளிப்பதற்கு வழி எதுவும் தெரியவில்லை.
அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே உத்தமம் என்கிற முடிவுடன் இருந்தாள். மாலதியும் எதுவும் பேசவில்லை.
“அப்புறம் சாப்பிட்டு நீயும் ரெடி பண்ணிக்கோ. லேட் பண்ண வேண்டாம்” அதை மட்டும் அவளுடைய முகத்தை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல் யாரிடமோ பேசுவது போல் வேண்டா வெறுப்பாகக் கூறினார்.
“சரிங்கத்தே” அமைதியாகப் பதில் கூறினாள் மீனா.
சாப்பிட்டு முடிந்ததும் தன் அறைக்குத் திரும்பினாள். மாமியார் கூறியது போல் கோவிலுக்குச் செல்லத் தயாராகும் எண்ணத்துடன், எந்தப் புடவையைக் கட்டலாம் என்று யோசித்துக் கொண்டே சென்றாள்.
அதற்குள் பின்னால் இருந்து மாமியாரின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.
“கல்யாணச் சேலையக் கட்டணும் கோவிலுக்குப் போறதுக்கு” என்று கூறினார் சத்தமாக.
“தாலி கட்றப்ப கட்டி இருந்த புடவையா அத்த?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் மீனா.
“ஆமாமா, அது தான்”
“சரிங்கத்தே”
அறைக்குள் நுழைந்ததும் கதவைத் தாழிடச் சென்றாள்.
“இரு இரு, கதவைத் தாப்பா போட வேண்டாம். நான் வெளியே போகணும். தொறந்து இருக்கட்டும்”
அறைக்குள் இருந்து சபரி கூறவும், யோசனையுடன் தாழ் போடாமல் கண்ணாடி முன் சென்று நின்றாள்.
அப்போது வெளியே இருந்து மாலதி, மகனை அழைக்கும் குரல் கேட்டது.
“சபரி, எப்பா சபரி, உன் ஃபோன் இங்கேயே இருக்குடா. வந்து எடுத்துக்குறியா?”
அவர் கேட்டது உள்ளே இருந்த இருவருக்குமே கேட்கத் தான் செய்தது. ஆனால் சபரியோ, அது காதிலேயே விழாதது போல் லேப்டாப்பில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தான்.
மீனாவோ, அத்தையின் குரலுக்கு மதிப்பு கொடுத்து, தான் சென்று எடுத்து வருவதா இல்லை என்ன செய்வது என்கிற குழப்பத்துடன் தலை சீவிக் கொண்டு இருந்தாள்.
மகன் கேட்கவில்லை என்று மாலதியே அதற்குள் அவர்களின் அறையை நோக்கி வருகிறார் என்பது அவருடைய குரல் அருகில் கேட்டதில் இருந்து புரிந்தது மீனாவுக்கு.
“உக்காந்த இடத்தில அப்படி அப்படியே வச்சிட்டுப் போயிட்றது ஃபோன. இதே வேலையாப் போச்சு இவனுக்கு!”
இப்போது அறைக்கு மிக அருகில் வந்து விட்டார் என்று தெரிந்தது.
தன் அம்மாவின் குரல் அறைக்கு வெளியே மிக அருகில் ஒலிக்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தும், சபரி, எதுவுமே தெரியாதது போல் இருப்பதைக் கண்டு, இதிலும் ஏதாவது உள் நோக்கம் இருக்குமோ? பெரிதாக பிரச்சினை எதுவும் செய்வதற்குத் தான் அடி போடுகிறானோ என்று மீனா நினைத்து முடிப்பதற்குள், அவ்வளவு நேரம் வேலையில் மூழ்கிப் போனவன் போல் அமர்ந்து இருந்த சபரி, எழுந்து அவளருகே வந்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ என்ன பண்ண போறானோ இந்த சபரி … பயங்கரமான ஆளா இருப்பான் போல
மிக்க நன்றி 😊
அடுத்து என்னச் செய்ய போறானோ?
மிக்க நன்றி 😊
சமையலை சிரத்தையாக செய்து முடித்த மருமகள் சிறு விடயத்தில் கவனக்குறைவாக செயல்படவும் அதனை அவள் தெரியாமல் செய்தாக எண்ண இயலாமல் தடுமாறுகின்றனர் சபரியின் பெற்றோர்கள்.
அவனால் புனையப்பட்ட அவளது அலட்சியமும், அஜாக்கிரதையும் அவர்களுக்கு அவளின் மேல் சந்தேகத்தை விதைப்பதாக.
அரும்பாடுபட்டு அவனது பெற்றோர்களின் மனதில் அவளது மதிப்பையும் மரியாதையையும் குலைக்கின்றான்.
மிக விறுவிறுப்பாக செல்கின்றது.
மிக்க நன்றி 😊
இவங்க பெற்றோர் அங்கு என்ன நடந்தது முழுசா பார்க்கவில்லை.
அறிவாளி மகன் சொன்னத வச்சு மட்டும் பேசுறாங்க. இல்ல கோபப்படுறாங்க
வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள் தப்பு செய்திருந்தா கூட அதை முகச்சுணக்கம் இல்லாம சொன்னா அவளுக்கும் ஆறுதலா இருக்கும்.
இப்படி 3 பேரும் பேசினா பிறகு நரகமா தானே தோன்றும்.
ஏண்டா அறிவு கெட்டவனே, உனக்கு என்ன தான்டா பிரச்சனை? இப்படியா அவளைக் கட்டிக் கொண்டு வந்து வதைப்பது?
மிக்க நன்றி 😊