Loading

தேடல் 5:

 

இனியன் பார்த்தது பார்த்தபடி அப்படியே அதிர்ந்து நிற்க, அவனை பார்த்து முறைத்தபடியே நின்றிருந்தாள் மிளிர். செல்லும் வழியின் இருபுறமும் கைகளை ஊன்றி வழியை மறைத்தபடி நின்றவள், அவனை ஏற இறங்க பார்த்தபடியே, “வாடா என் தம்பி..! தங்க கம்பி..! வெள்ள காக்கா மல்லாக்க பறக்குமா..? யக்கா நான் கடைக்கு வரேன்… யக்கா நான் கடைக்கு வரேனு காக்கா மாதிரி நீ கத்திட்டு பின்னாடி வந்தப்பவே நான் சுதாரிச்சு இருக்கனும்… வச்ச அரியர கிளியர் பண்ண வக்கு இல்ல… தொரைக்கு லவ்வு கேக்குதோ லவ்வு…” என்றாள் அவனை முறைத்தபடி.

 

“அடியே… குள்ள கத்திரிக்கா…” என வேகமாக ஆரம்பித்தவனை முறைத்துப் பார்த்தபடியே, “என்ன… என்ன சொன்ன இப்போ… மறுபடியும் ஒருக்கா சொல்லு…” என்றாள் மிளிர் சரியாக விழவில்லை என்னும் பொருள் படும்படி காதை குடைந்துக் கொண்டே மிரட்டலாய்.

 

“அதுங்க அக்கா… நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்லைங்க அக்கா… நான் நீங்கனு நெனைச்சு அந்த புள்ள மேல தண்ணீ ஊத்திட்டேனுங்க அக்கா… அதுக்கு மன்னிப்பு கேக்கும் போது தான் நீங்க பாத்துட்டீங்க அக்கா… மத்தபடி நீங்க நினைக்கற மாதிரி ஒன்னுமே இல்லைங்க அக்கா…” முகத்தை சிறுப்பிள்ளைப் போல் வைத்துக்கு கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அக்கா என்றுக்கூறி ஏமாற்றப் பார்த்தான் அவளை.

 

“கேக்கறவ கேனையா இருந்தா… பாக்கிஸ்தான் பார்டர்ல உக்காந்து பாயசம் குடிச்சேனு சொல்லுவீயே…”

 

“உசுர வாங்காத க்கா… நான் பாயசமும் குடிக்கல பாய்சனும் குடிக்கல… என்ன நம்பு…”

 

“யாரு… உன்ன… அப்படியே நம்பிட்டாலும்… எப்படியும் உரிச்ச தேங்க கடைதெருவுக்கு தானே வரனும்… அப்போ பாத்துக்கறேன் நான்…”

 

“நீ சொல்லற எல்லா பழமொழியும் தப்பு…”

 

“அப்படிங்களா தமிழ் புலவரே… நீ பண்ணதையும் நான் சொன்னதையும் நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்புக்கிட்ட சொல்லுவோம்… அப்போ தெரிஞ்சுடும் யாரு சரி… யாரு தப்புனு…” என்றாள் அவள் மிடுக்காய் ஒற்றை புருவம் ஏற்றி இறக்கி.

 

“ஐய்யோ யக்கா… அம்மாட்ட மட்டும் சொல்லத க்கா… அம்மா நாதஸ்கிட்ட போட்டு கொடுத்துடும்…” என அவன் கெஞ்சலில் இறங்க,

 

“நல்ல பாம்பு உனக்கு பாலுத்தட்டும்… இல்ல பாயசம் ஊத்தட்டும்… அத பத்தி எனக்கு என்ன… நான் சொல்லுவேன்… சொல்லுவேன்… சொல்லியே தீருவேன்…” என்றாள் அவள் உறுதியாய்.

 

“இப்போ என்ன உனக்கு… நீ என்ன சொன்னாலும் செய்யறேன் போதுமா…”

 

“அப்படியா சொல்லற… உன்ன நம்பலாமா…”

 

“ம்ம்ம்… நம்பலாம்…”

 

“அப்போ… குடுகுடுனு ஓடிப்போய்… அக்காக்கு ஒரு லிட்டர் பாதங்கீர் வாங்கிட்டு வா பாப்பும்… அதுவும் உன் பாக்கேட் மணில…”

 

“நாதஸே தினமும் எனக்கு இருபது ரூபா தான் குடுக்காரு… அதுவும் உன் கண்ண உருத்துதோ…” என்றான் எரிச்சலாக இனியன்.

 

“நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே… நான் சொல்லும் சேதி கேளு நல்ல பாம்பே…” என அவள் ராகமிழுத்து பாடிக்கொண்டே அவளின் கைப்பேசியில் தாயை அழைக்க, வேகமாய் அதை வாங்கி அணைத்தான் அவன்.

 

“இப்போ என்ன… நான் போய் வாங்கிட்டு வரேன்… போதுமா…” என அவன் சொல்லி முடிப்பதற்குள் வசு மீண்டும் மிளிருக்கு அழைத்துவிட்டார். இனியனை பார்த்து ஏளனமாய் சிரித்துக் கொண்டே போனை காதுக்கு கொடுத்தாள் மிளிர்.

 

“என்னம்மா… கூப்பிட்டு இருந்த…”

 

“ஒன்னுமில்லைங்கம்மா… வீட்டுக்கு போய்ட்டீங்களானு கேக்க தான் கூப்பிட்டேனுங்க அம்மா…”

 

“நாங்க பத்திரமா வந்துட்டோம்மா… நீ ஏதாவது சாப்பிட்டீயா…”

 

“இன்னும் இல்லைங்கம்மா… தம்பிய தான் குடுக்க பாதங்கீர் வாங்கிட்டு வர சொன்னேன்… போக மாட்டேங்கறேன் ம்மா…”

 

“அப்படியா… நீ போன அவன்கிட்ட குடு…” என வசு சொல்லவும் வாயுக்குள்ளையே சிரிப்பை அடக்கிக் கொண்டு போனை இனியனிடம் நீட்டினாள் மிளிர்.

 

வசு அங்கே எண்ணெயில் இட்ட மிளகாயாய் காய, “இதோம்மா… போய்ட்டே இருக்கேன் ம்மா…” என்றபடி வாசலை நோக்கி விரைந்தான் அவன். அவளும் அவனுடனே விரைய, கைப்பேசியை அணைத்து அவளிடம் கொடுத்துவிட்டு, தனது பைக்கை எடுத்தவனை மிளிரின் குரல் தடுத்தது.

 

“பைக்ல கைவச்ச முத டெட்பாடி நீதான்… நடந்து போய் வாங்கிட்டு வாடா என் வென்று…” என அவள் உரைக்கவும் தனது விதியை நொந்தபடியே அவள் சொன்னதை செய்தான் அவன்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் அவன் பாதாங்கீருடன் வர, அவனை கொஞ்சமும் லட்சியம் செய்யமால் அவளோடு சேர்த்து அங்கிருந்த மற்ற அத்தனை பேரும் குடிக்க, விட்டால் போதுமென கிளம்பிவிட்டான் இனியன். பின் அங்கேயே இருந்து அவள் சொல்வதை எல்லாம் செய்ய அவனென்ன மடையனா? அவன் விழுந்தடித்து கிளம்புவதை கண்டு சிரித்தவளின் முறுவலில், “இத்தோடு உன்னை விட்டேனா பார்…” என்ற பொருள் பொதிந்தே இருந்தது.

 

நாட்கள் அதன் போக்கில் விறுவிறுவென நகர, கிட்டத்தட்ட ஒரு வாரம் காலம் வேகமாக ஓடி விட்டிருந்தது. மிளிரும் தன் மன கிலேசங்களை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு தொழிலில் கவனம் பதிக்க தொடங்கி இருந்தாள். புதுப்புது மனிதர்கள், புதுப்புது அனுபவங்கள் என அத்தனையும் அவளுக்கு பிடிக்கவே செய்திருந்தது. மற்றவை எதையும் சிந்திக்க விடாத அளவுக்கு அவள் வேலை அவளை முழுமையாய் ஆட்கொண்டது என்றும் சொல்லலாம். அவப்போது மனதின் ஓரத்தில் சஞ்சலத்தை எழுப்பும் அந்த கண்களையும் முயன்று தன்னை விட்டு தூர நிறுத்த பழகியிருந்தாள் அவள்.

 

அதிகாலை இரண்டரை மணியிலிந்து அலாரம் விடாது அடிக்க, அவளோ இன்னிசை தாளாட்டு பாடி அவளை தூங்க வைப்பது போல முகத்தில் புன்னகையை தவழவிட்டபடியே உறங்கிக் கொண்டிருந்தாள்.

 

அடித்த அலார சத்தத்தில் பக்கத்து அறையில் இருந்து எழுந்து வந்த இனியன், கைகளை கட்டிக் கொண்டு மிளிரை முறைத்தபடி நின்றான்.

 

“நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்…

 

நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்…

 

காற்றில் எந்தன் கீதம்…

காணாத ஒன்றை தேடுதே…”

 

இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகி தன்னை மறந்து உருகிப் பாடிக் கொண்டிருக்க, அவனுக்கோ பத்திக் கொண்டு வந்தது. ‘இடியே விழுந்தாலும் எழாதவளுக்கு அலாரத்துக்கு இந்த பாட்டு ஒரு கேடா… அப்படி என்னதான் இருக்கோ இந்த பாட்டுல… ரீங்டோனுக்கு இந்த பாட்டு… மேஜேஜ் டோனுக்கு இந்த பாட்டு… இப்போ அலாரத்துக்குமா… விளங்குன மாதிரி தான்…’ என நினைத்தவனுக்கு புரிந்தேதான் இருந்தது, இது அவள் உள்ளத்து உணர்வுகளின் வார்த்தை வடிவமென்று.

 

அலாரத்தை அணைத்தவன் அறையில் விளக்கை எரியவிட்டு மின்விசிறியை அணைக்க, அடுத்த ஐந்து நிமிடத்திற்கெல்லாம் தன்னைப் போல் எழுந்தமர்ந்தாள் அவள். எழுந்ததுமே அவளை திட்ட வாய் திறந்தவளை, “இப்படியே நீ என்ன திட்டிட்டு ஆற அமர கிளம்பி போனா கல்யாண பொண்ணுக்கு மேக்கப் போட முடியாது… அந்த பொண்ணு வளைகாப்புக்கு தான் மேக்கப் போட முடியும்…” என அவன் சொல்லவும் தான், நினைவு வந்தவளாக போர்வையோடு வாறி சுருட்டிக் கொண்டு குளியலறையை நோக்கி ஓடினாள்.

 

அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தி, “அத எங்கடீ எடுத்துட்டு போற…” என இவன் கேக்கவும் தான் உரைத்தது தான் போர்வையை தலைவரை போர்த்தியபடி செல்வது. வேகமாக அதை உறுவி அவன் முகத்தில் விட்டெறிந்தவள் துண்டையும் கையில் கிடைத்த உடையும் எடுத்துக் கொண்டு அதே வேகத்தோடு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். இவளின் செய்கைகளை கண்டு சிரித்தபடியே போர்வையை மடித்து உரிய இடத்தில் வைத்துவிட்டு அவனும் சென்றுவிட்டான்.

 

இது அவளுக்கு கிடைத்திருக்கும் முதல் கல்யாண ஆடர். மூகூர்த்த நேரம் அதிகாலை நாலரை முதல் ஆறு வரை. அவள் வீட்டிலிருந்து அரைமணி நேர பயண தூரத்தில் தான் மண்டபம் என்பதால் வீட்டிலேயே தாங்கிக் கொண்டாள் அவள்.

 

அடுத்த பதினைந்து நிமிடத்தில் இவள் குளித்து ரெடியாகி வரவும், அவள் முன் சூடான டீயையும் பிஸ்கெட்டுகளையும் நீட்டினான் இனியன். அதை கண்டவுடன் அவள் முகம் பூவாய் மலர்ந்தது. இவள் டீயை வாங்க கை நீட்ட, அவன் இப்படியும் அப்படியுமாக அதை நகர்த்த கடுப்பாகி போனது அவளுக்கு.”டீய குடுடா தடிமாடு…” என்றபடி அவள் வெடுக்ககென அவனிடமிருந்து பறித்து அதன் வாசத்தை சுவாசத்தில் நிறைத்து, மிடறு மிடறாய் ரசித்துக் குடிக்க, அவள் ரசித்துக் குடிக்கும் அழகைக் காணவே, இன்னொரு கப் போட்டு கொடுக்க தோன்றும் பார்ப்பவர்களுக்கு. இஞ்சி, ஏலம், கருப்பட்டியை தட்டிப் போட்டு, கொஞ்சம் அதிக இனிப்பு சுவையோடு இருக்கும் டீ என்றால் அத்தனை பிரியம் மிளிருக்கு.

 

“எதில நீ அரியர் வச்சாலும் டீ போடறதுல வைக்க மாட்டடா… வசுவாலேயே உன்ன தட்டிக்க முடியாதுனா பாத்துக்கோயேன்…” என சிலாகித்து அவனை பாராட்டிவிட்டு, இதை நாம் பாராட்டாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் அவள்.

 

“நானும் வரேன்…” என்ற இனியனை பார்த்துக் கேலி சிரிப்பு சிரித்தாள் மிளிர்.

 

“இன்னும் ஒரு வாரத்துல அரியர் எக்ஸாம் வச்சுட்டு என் கூட ஊர சுத்த பிளான் போடுறீயா… கல்யாணத்துக்கு கலர் கலர பீகரு வருமுனு பிட்ட போடறீயா… போடா… போய் அந்த நேரத்துல உருப்படியா உக்காந்து நல்லாதா நாலு பிட் எழுதனாலும் இந்த தடவயாவது பாஸ் ஆவ… போ… போ… போய் வேலைய பாரு…” என அவனைக் கேலி செய்தபடியே வாசல் வரை வந்து விட்டவள், அவன் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு, “இங்க தானே இனியா… கொஞ்ச நேரத்தில போய்டுவேன்… போய்ட்டு உனக்கு கால் பண்ணறேன்… நீ போய் படி…” என்றபடியே தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியும் விட்டாள்.

 

இவள் மண்டபத்திற்கு சென்ற நேரம், பாதிக்கும் அதிகமானவர்கள் விழித்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மணப்பெண் அப்போது தான் குளித்து முடித்து வெளியே வர இன்னும் மூகூர்த்த நேரத்திற்கு நாற்பது நிமிடங்களே இருந்தது. முதல் நாள் கொடுத்த நலுங்கு புடவையை உடுத்தி அந்த குறைந்த நேரத்திலேயே அத்தனை நேர்த்தியாய் அவளை தயார் படுத்தி இருந்தாள் மிளிர். இனி கல்யாணப்பட்டை வைத்துக் கொடுத்தவுடன், புடைவை மாற்றி அதற்கான நகைகளை அணிவித்து கொஞ்சம் டச்அப் செய்ய வேண்டும் அவ்வளவே. அதற்குள் வெளியே பரபரப்பாக அனைவரும் கல்யாண சடங்குகளில் ஈடுபட்டிருந்தனர்.

 

கொஞ்ச நேரம் வெளியே காற்றாட அமரலாம் என இவள் நினைத்த நேரம் அவள் வயதை ஒத்த பெண்கள் தங்களுக்கும் அலங்காரம் செய்ய சொல்லி வந்து விட்டனர். முடியாதென்றா சொல்ல முடியும். அவர்களுக்கும் மிதமான அலங்காரம் செய்துவிட, அதற்குள் மணமகளை அழைத்திருந்தனர். அடுத்த கொஞ்ச நேரத்தில் கல்யாண பட்டு கொடுத்து அனுப்பப்பட, அந்த புடவையை கட்டி மீண்டும் சிறிது ஒப்பனை செய்து, மணமேடைக்கு அனுப்பிய பின்தான் சற்று ஓய்வு கிடைத்தது அவளுக்கு. மீண்டும் புகைப்படம் எடுக்கும் போது, கலைந்ததை எல்லாம் சரிசெய்ய வேண்டி இருக்கும். ஆக, இன்றைய பாதி பொழுது அங்கே தான் என புரிந்து போனது அவளுக்கு.

 

ஒரு மூளையில் வந்து அமர்ந்து கல்யாணத்தை பார்த்து கொண்டிருந்தவள் தன்னை அறியாது எப்போது உறங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. தன்னை யாரோ உழுக்கி எழுப்புவது போல தோன்ற, கையில் காபியுடன் நாற்பது வயது பெண்மணி ஒருவர் நின்றிருந்தார்.

 

“ரொம்ப தேங்க்ஸ்ங்க…” என்றபடி வாங்கிக் கொள்ள, “தேங்க்ஸ அந்த தம்பிக்கு சொல்லும்மா…” என்றபடி நகர்ந்துவிட்டார் அவர்.

 

அவர் கைகாட்டிய திசையில் ஆறடிக்கும் கொஞ்சம் உயரமான உருவத்தில் பட்டு வேட்டி சட்டையில் யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனை பார்க்க முயல, முதுகுப்புறம் தான் தெரிந்ததே அன்றி முகம் தெரியவில்லை. ‘சரிதான் போடா’ என அவள் காபியில் ஆழ்ந்துவிட, சிறிது நேரத்தில் திருமணமும் முடிந்துவிட்டிருந்தது. ஒரு வழியாக உறவினர்களுடன் புகைப்படங்கள் எடுத்து முடித்து, மணமக்களை மட்டும் எடுக்க தனித்து மணமகனின் அறைக்கு அழைத்துச் செல்ல, டச்அப் செய்வதற்காக இவளும் உடன் சென்றாள்.

 

புகைப்படம் எடுக்க முடியாத அளவிற்கு ஒருவர் மாற்றி ஒருவர் வந்துக் கொண்டிருக்க, மிளிர் சென்று கதவை சற்றி அதில் சாய்ந்து நின்றுக் கொண்டாள். உறவினர்கள் உடனிருந்தால் கேலி கிண்டலில் விரைவாக எடுத்து முடிக்க முடியாது என அந்த புகைப்பட கலைஞர் வேண்டாம் என்றுவிட்டார்.

 

புகைப்பட கலைஞர் வளைத்து வளைத்து மணமக்களை தனது கேமராக்குள் சுருக்கிக் கொள்ள, இவளுக்கு சலித்துப் போனது. பசிக்க வேறு ஆரம்பித்து இருந்தது. இவள் கொஞ்சம் இலகுவாய் நிற்கும் சமயம், கதவு வேகமாய் திறந்தது. அதை எதிர் பார்க்கதவள், தடுமாறி கீழே விழப் போக எதிர்புறத்தில் கையில் அவர்களுக்கான பழச்சாறுடன் நின்றிருந்தவனும் இதை எதிர்பார்க்கவில்லை போலும். கதவு தாழிட்டிருக்கும் தட்டலாம் என அழுத்தமாக கை பதித்தவன் கதவு திறந்துக் கொள்ளவும் ஒரு நொடி தடுமாற இரண்டு பேருமே மில்லி செகண்ட் இடைவெளியில் கீழே விழுந்திருந்தனர். அவள் கீழே இருக்க அவன் அவள் மீதிருக்க ஒரு நொடி உலகம் மறந்து போனது அவனுக்கு. அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவள் தானா அது என அவன் ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அதற்குள் அவளோ முழுதாய் மயக்கத்திற்கே சென்றிருந்தாள்.

 

        – தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்