Loading

தேடல் 2:

இரண்டு வருடங்களுக்குப் பிறகு:

“அடே… தீவிட்டி தடியா… உன்ன என்ன பண்ண சொன்னா… நீ என்னடா பண்ணிட்டு இருக்க… சாவடிக்கப் போறேன் பாரு உன்ன… போடா போய் ஃபேனத் தொடை போ…” மிளிர் தான் காட்டுக் கத்தலாய்க் கத்திக் கொண்டிருந்தாள், அவளின் அருமைத் தம்பி யாழினியனிடம்.

அவனோ, ‘நீ என்ன சொல்வது… நான் என்ன செய்வது…’ என்பதைப் போல, அவளை ஒரு அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் முகம் முழுவதும் ஏதோ ஒரு கலவையைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவளிடம் கடலை வறுக்கத் தொடங்கி விட்டான்.

அதைக் கண்டு கொதித்தெழுந்தவள், “சூரி…” எனக் கத்தியதில், பதறியடித்துக் கொண்டு முன்னே வந்து அவன் நின்றிருப்பான் என நீங்கள் நினைத்தால் அது தான் தவறு.

அவள் நாலைந்து முறை சூரியை ஏலம் விட்ட பிறகு எத்தனை பொறுமையாய் முடியுமோ அத்தனை பொறுமையாய், சுண்டு விரலால் காதைக் குடைந்தபடியே மிளிரின் முன் வந்து நின்றாள் அவள். ஆம்… அந்த அவள் சூரி என்கிற சூர்யபிரபா.

“ஏன்டி உன்ன எத்தன தடவ கூப்பிடறேன்… காதுல விழல… கூப்பிட்டா பட்டுனு வர மாட்டீயா..? என்னமோ ஆடி அசைஞ்சு திருவாரூர் தேர் மாதிரி தரைய அளந்துட்டு வர…” என சிடுசிடுத்தாள் மிளிர்.

“ஏன் க்கா… நான் உங்ககிட்ட எத்தன தடவ சொல்லறது… ஒன்னு சூர்யானு கூப்பிடுங்க… இல்ல பிரபானு கூப்பிடுங்கனு… நீங்க மட்டும் நான் சொன்னதக் கேக்கறீங்களா..?” என்றாள் பதிலுக்கு சூர்யா அலட்சியமாய்.

“இப்போ இப்படிக் கூப்பிட்டதால என்ன குடியா மூழ்கிப் போச்சு..?” என்றாள் கடுப்பாய் மிளிர்.

“சூர்யபிரபா என என்னை ஈன்றெடுத்த சிவகாமி தேவியார் அதி அற்புதமாய் ஒரு திருநாமத்தைச் சூட்டி இருக்கும் போது, தாங்கள் சூரி… பூரி… என அழைப்பது தங்களுக்கே கொஞ்சமாவது நியாயமாகப் படுகிறதா..?” என்றாள் நீட்டி முழக்கி சூர்யா. அவளின் அன்னையின் பெயருமே சிவகாமி தான்.

“சின்ன கேப் கிடைக்கக் கூடாதே… மேடம் நாக்குல செந்தமிழ் டிக்கோ ஆடுமே…” என்றாள் எள்ளலாய் மிளிர்.

“சும்மா தேவையில்லாம வளவளனு பேசிட்டு இருக்காதீங்க… எனக்கு நிறைய வேலை இருக்கு… எதுக்குக் கூப்டீங்க..? முதல்ல அத சொல்லுங்க… நான் போய் இன்னொரு பொண்ணுக்கு கோல்டன் பேசியல் போடணும்… அந்தப் பொண்ணுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம்… சீக்கிரம் முடிச்சு அனுப்பி விடுங்க..‌ ஷாப்பிங் போகணும்னு நச்சரிச்சுட்டே இருக்காங்க…” என்றாள் சூர்யா.

“அதெல்லாம் பொறுமையாப் போடலாம்… முதல்ல இவன அடிச்சு வெளிய தொரத்து…” என்றாள் மிளிர் கடுப்புடன் இனியனைக் கைக்காட்டி.

‘யாரை..?’ என்பது போல் திரும்பிப் பார்த்தவள், அங்கே யாழினியன் கால் மேல் கால் போட்டபடியே முகத்தில் பேசியல் செய்திருந்த ஒரு பெண்ணிடம் அதி தீவிரமாக எதையோ விவாதிப்பதைப் பார்த்ததும், அப்படியே மிளிரின் பக்கம் பார்வையைத் திருப்பியவள், தலைக்கு மேல் கைகளைச் சேர்த்து வைத்துப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டாள்.

“போதும்டா சாமி… உங்க அக்கா தம்பி பஞ்சாயத்துக்கு நான் ஆளில்ல… நீங்களாச்சு… உங்க தங்கக் கம்பியாச்சு… என்னை ஆள விடுங்க…” என்றாள்.

“இப்போ அவன இங்கிருந்து உன்னால போக சொல்ல முடியுமா..? முடியாதா..?” என்றாள் இடுப்பில் கைவைத்து அவளை முறைத்துக் கொண்டே மிளிர்.

“நானா அவன என் அருமத் தம்பி… தங்கக் கம்பினு வெத்தல பாக்கு வச்சு இங்க கூட்டிட்டு வந்தேன்..? நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க… அப்ப நீங்களே போய் போக சொல்லுங்க… நான் போய் சொன்னா… இது என் சொக்கா கடை… நான் போக முடியாதுன்னு சட்டமா நாலு பக்கத்துக்கு வசனம் பேசி அந்தப் பொண்ணு முன்னாடி சீன் கிரியேட் பண்ணுவான்… தேவையா இது எனக்கு..?”

“அவன் பக்கம் பக்கமா வசனம் பேசறானோ இல்லையோ… ஒரு வேலை சொன்னா அதச் செய்ய முடியாதுனு சொல்லறதுக்கு நீ நாலு பக்கம் மூச்சு விடாமப் பேசற… இங்க நீ முதலாளியா இல்ல நான் முதலாளியானே தெரியல… இருடி உன் சீட்டக் கிழிக்கறேன்…”

“ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன்… முதல்ல நீங்க கடையத் தொறங்க முதலாளி அம்மா… அதுக்கு அப்புறம் என் சீட்டக் கிழிக்கறதப் பத்தி யோசிப்போம்…” என்றவள் தான் பாதியில் விட்டு வந்த வேலையைச் செய்ய சென்று விட்டாள்.

“இம்சடா இதுங்க கூட…” என வாய்விட்டுப் புலம்பியபடியே யாழினியன் அருகில் வந்தவள், அவன் இடது காதைப் பிடித்துத் திருக, வலித்தாலும் சத்தம் எழுப்பாது முகத்தில் மட்டும் வலியைக் காட்டியடியே அவளைப் பார்த்தான் இனியன்.

“ஜெஸ்ட்… ஒன் மினிட் பேப்… என் சிஸ்டர் கூப்பிடறா… என்னனு கேட்டுட்டு இதோ இப்ப வந்துடறேன்…” எனக் குழைவாய் அந்தப் பெண்ணிடம் சொன்னவன், மிளிரிடமிருந்து வலுகட்டாயமாகத் தனது காதைப் பிடுங்கிக் கொண்டு, அவளை இழுத்துக் கொண்டு சற்றுத் தள்ளி வந்தான்.

“ஏன்டி… உனக்குக் கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லயா? சின்னஞ்சிறுசுங்க இரண்டு பேரு பர்சனலா பேசிட்டு இருக்கும் போது இப்படி தான் வந்து டிஸ்டர்ப் பண்ணுவீயா…” என்றான் அடிக்குரலில் கடுப்பாய்.

“யாருக்கு..? எனக்கு மேனர்ஸ் இல்லையா… உனக்குத் தான்டா தடிமாடு கொஞ்சம் கூட சென்ஸே இல்ல… உன்ன இங்க எதுக்குக் கூட்டிட்டு வந்தா, நீ என்ன பண்ணிட்டு இருக்க..?” என்றாள் கடுப்பாய் மிளிர்.

“ஏன் என்ன பண்ணிட்டு இருக்கேன்..?” எனத் திரும்ப அவளிடமே கேட்டான் அவன்.

அவனின் கேள்வியில் மிளிர் அவனை முறைத்துப் பார்க்க, அதற்குள் அங்கே முகத்தில் ஏதோ கலவையுடன் அமர்ந்திருந்தவள், “கம் ஃபாஸ்ட் பேப்…” எனக் குரல் கொடுத்தாள். “ஜெஸ்ட் ஒன் மினிட் பேப்…” என இங்கிருந்தே பதிலுக்கு தேனைக் குழைத்தது போன்ற குரலில் சொன்னான் அவன்.

“இருடா தடிமாடு… நீ இங்க பண்ணறதெல்லாம் அம்மாட்ட போட்டுக் குடுத்து, நாட்டாம படத்துல வர தம்பி சரத்குமார் மாதிரி அன்னம் தண்ணி ஆகாரம் புழங்காம, வீட்ட விட்டுப் பத்து வருஷத்துக்கு உன்னத் தள்ளி வைக்கல…” என்றவளை இடைமறித்தான் அவன்.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேனு நீ இவ்வளவு ஆவேசமா சபதம் எல்லாம் எடுக்கற… போய்த் தொடைடா தடிமாடுனு தலையில இரண்டு தட்டு தட்டிப் பாசமா சொன்னா, போய் ஃபேன தொடைக்கப் போறேன்… இதுக்குப் போய்…” என்றான் இனியன் பதறிக்கொண்டு. பின்னே தன் மகள் சொல்வதை வேதவாக்காக ஏற்று, அவனை இருபது வருடம் கூடத் தள்ளி வைக்க அஞ்சாதவர் அவனின் அன்னை என்று அவனுக்கா தெரியாது.

“அது…” என கெத்தாக சொன்னவள், “அப்படியே அந்த ஜன்னல எல்லாம் தண்ணி தொட்டுத் தொடைச்சு, சந்தனம் குங்குமம் எல்லாம் வச்சு பக்காவா ரெடி பண்ணிடு… நாளைக்குப் பாக்க அப்படியே புதுக்கடை மாதிரிப் பளபளனு மின்னனும்… என்ன புரியுதா..?” என்றாள் மிரட்டலாக.

“அதுக்கு நீ இத இடிச்சுட்டுப் புதுசாத்தான் கடையக் கட்டணும்…” என இனியன் வாய்க்குள் முணுமுணுக்க,

“என்ன சொன்ன..?” என்றாள் முறைப்பாய் மிளிர்.

“ஒன்னுமில்ல… இதோ போறேன்னு சொன்னேன்ங்க அக்கா…” என்றவன், “ஒரு சின்ன ஒர்க் பேப்… சீக்கரமே வந்துடுவேன்…” என அங்கே அமர்ந்திருந்தவளுக்கு குரல் கொடுக்கவும் மறக்கவில்லை.

செல்லும் அவனையே புன்முறுவலோடு இமைக்காது பார்த்திருந்தாள் மிளிர். இந்த இரண்டு வருடங்களில் அவளின் வாழ்க்கை எப்படி எப்படியோ மாறிப் போய்விட்டது.

தன்னையே அடையாளம் தெரியாத நிலையில் கண் விழித்தவளுக்கு, அவளின் மொத்தக் குடும்பமுமே பக்க பலமாய்த் துணை நின்றது. மற்ற எல்லாவற்றையும் ஓரம் ஒதுக்கி இவளைக் கவனிப்பதை மட்டுமே தங்களின் முழுநேரப் பணியாக்கிக் கொண்டனர். இந்த உலகிலேயே அவள் ஒருத்தி தான் தங்களுக்கு முக்கியம் என்பது போலத் தான் இருந்தது அவர்கள் மூவரின் செயலும்.

எழுந்து நடக்கவே தடுமாறியவளை நடக்கப் பழக்கி, உணவூட்டி என சிறு குழந்தையைப் பராமரிப்பது போலத் தான் பார்த்துக் கொண்டது அவளின் மொத்தக் குடும்பமும். தில்லைநாதருக்கும் வசுமதிக்கும் மகளின் நிலை மனதைப் பாரமாக அழுத்தினாலும் ஒரு போதும் அதை அவளிடம் வெளிப்படுத்தியதே இல்லை.

ஆரம்பத்தில் அவர்கள் யார் என்றே தெரியாது இவள் தடுமாறி நிற்கும் போதெல்லாம் அவளின் மனதிற்கு ஆறுதல் சொல்லி, தெம்பூட்டி அவளை மீட்டு வரப் பெரும்பாடு பட்டனர் அவர்கள். சில தினங்களில் எழுந்து வரும் போது மீண்டும் அவளுக்கு அவர்கள் யாரென்று மறந்து போயிருக்கும். ஒரு சிறு குழந்தைக்கு முகம் சுளிக்காது சொல்லிக் கொடுப்பது போலத் தான், அவள் ஆயிரம் முறை மறந்தாலும் முகம் சுளிக்காது ஒருவர் மாற்றி ஒருவர் அவளுக்கு நினைவூட்டினர்.

எத்தனை தான் அவளைத் தேற்றி நன்றாகக் கவனித்துக் கொண்டாலும், ஒரு குழப்பத்துடனும் சோகத்துடனுமே சுற்றிக் கொண்டிருந்தவளை தன்னியல்புக்கு மீட்டு வர இனியன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம்!

தன் தமக்கை சிரிக்க வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் கோமாளியாக மாறிப் போவான் அவன். அவளை விட இரண்டு வயது இளையவன் அவன். ஆனாலும் தொடர் உடற்பயிற்சியால் முறுக்கேறிய உடல், அவளுக்கு அவனை அண்ணனைப் போன்றுதான் காட்டும். அது உண்மை என்னும் வகையில் தான் அவனின் சிறுசிறு செய்கைகளும் அவளின் பாதுகாப்பையும் சந்தோஷத்தையுமே முன்னெடுப்பதாக இருக்கும். எப்போதும் அவளை அவன் எடுத்தெறிந்து பேசுவது போல தோன்றினாலும், அவள் வார்த்தையை அவன் தட்டியதே இல்லை. இந்த இரண்டு வருடங்களில் ஒரு அன்னையாய், தந்தையாய், சகோதரனாய், நண்பனாய், ஆசானாய், எல்லாமுமாய் அவன் அவளுக்கு மாறிப் போயிருந்தான் என்பதே உண்மை.

வீட்டிற்குள்ளேயே இருந்தால் பழையதைத் திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வர முயன்று தன்னையே வருத்திக் கொள்கிறாள் என்பதைக் கண்டு கொண்டவன், ஆறு மாத அழகுக் கலைப் பயிற்சி வகுப்பில் அவளைக் கட்டாயப்படுத்தி சேர்த்துவிட, ஆரம்பத்தில் ஆர்வமில்லை என்றாலும் நாளாக நாளாக வெளியாட்களுடன் பழகுவது அவளுக்கு ஒரு உற்சாகத்தை தந்தது. அப்படி அவள் பயிற்சி வகுப்பிற்கு சென்ற சமயம் அறிமுகமானவள் தான் சூர்யா. ஏனோ பார்த்தவுடனே நீண்ட நாட்கள் பழகியதைப் போல மிளிரிடம் அவளே தேடித் தேடி வந்து பேச, முதலில் தடுமாறினாலும் விரைவிலேயே அவளின் நட்பை ஏற்றுக் கொண்டாள் மிளிர்.

வகுப்புகள் முடிந்து சில மாதங்கள் தாங்கள் கற்றவரிடமே உதவியாளராகப் பணிபுரிய, அந்த சமயத்தில் தான் இந்தக் கடையை மூடப் போவதாக அவளுக்குத் தகவல் வந்தது. ‘அதைத் தான் எடுத்து நடத்தினால் என்ன..?’ என்ற எண்ணம் தோன்ற, அதை அப்படியே தந்தையிடமும் சொல்ல, தனது மகளின் விருப்பம் எப்படியோ அப்படியே என்று விட்டார் அவர்.

நாளைக்குத் தான் கடைதிறப்பு விழா என்ற நிலையில், இன்று வந்து அதற்கான மீதமிருந்த ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தனர் அவர்கள். அதற்கு உதவி செய்யத் தான் இனியனை அழைத்து வந்திருந்தாள். ஆனால், இன்றும் இருவர் அவசரம் என பேசியல் செய்ய வந்துவிட வாடிக்கையாளரை இழக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவளும் செய்ய, அவனோ வந்த வேலையை விட்டுவிட்டு அவர்களிடம் கடலை வறுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக எல்லா வேலைகளையும் முடித்துக் கிளம்ப இரவு எட்டானது. இடையில் தில்லைநாதரும் ஒரு முறை வந்து பார்த்துவிட்டே சென்றார். நாளை ஒரு கணபதி ஹோமமும், குபேர பூஜையும் நடத்தத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து வைத்துவிட்டு, சூர்யாவையும் அனுப்பி வைத்துவிட்டு, அக்காவும் தம்பியும் தங்கள் இல்லம் கிளம்பினார்கள்.

தனது ஸ்கூட்டியை மிளிர் எடுக்க பின்னால் அமர்ந்து கொண்டான் இனியன். எந்தக் காரணம் கொண்டும், இதைச் செய்ய வேண்டாம்; அதைச் செய்ய வேண்டாம் என அவளை யாருமே தடுப்பதில்லை. அதனால் அவளின் தன்னம்பிக்கை குறைந்து உள்ளுக்குள்ளேயே முடங்கிப் போவாள் என்று, ஆரம்பத்தில் மறுத்த தனது பெற்றோரைக் கூட சமாதானப்படுத்தி எல்லாவற்றிற்கும் சம்மதிக்க வைத்ததே இனியன் தான்.

நகரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அவர்களது வீட்டிற்குச் செல்ல அது ஒன்று தான் வழி. அத்தனை நேரம் சாதாரணமாக வந்தவள், உள்ளுணர்வின் உந்துதலாலோ என்னவோ ‘அந்த’ இடத்தைக் கடக்கும் போது எதனிடமிருந்தோ தப்பிப்பதைப் போல அத்தனை வேகமாக ஓட்டினாள். சரியாக அந்த மின்கம்பத்தில் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் பார்வையை பதித்தவள், அடுத்த நொடியே பார்வையைத் திருப்பிக் கொண்டு வேகமாகச் சென்றுவிட்டாள். அந்த இடத்தைப் பற்றி எவரும் அவளுக்குக் கூறவில்லை என்றாலும் அவளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஆதரவாய்த் தோளை அழுத்திக் கொடுத்தான் இனியன், ‘நாங்கள் இருக்கிறோம்’ என்பதைப் போல.

இதுவரை மிளிருக்குப் பழைய விசயங்கள் எதுவும் நினைவிற்கு வரவில்லை. மற்றவர்களும் அதை நினைவுபடுத்த முயலவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது ஏதாவது நினைவுக்கு வர அதைப்பற்றி யோசிக்கும் போது தலைவலியே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் தலைவெடித்து விடுவதைப் போன்ற வலியுடன் மயங்கிச் சரிந்தாள் அவள். அதைக் கண்டு மற்ற மூவரும் பதறித் துடித்துப் போக, அவர்களின் பயத்தை அறிந்தவள் பின்பு எதைப் பற்றியும் சிந்திப்பதையே அடியோடு நிறுத்தி விட்டிருந்தாள். அதற்குப் பயந்தே தன்னை ஏதாவது ஒரு வேலையில் எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டும், எந்நேரமும் சுற்றி ஆட்கள் இருப்பதைப் போலவும் பார்த்துக் கொண்டாள். ஆனால், வாழ்நாள் முழுவதையும் இப்படியே கடத்திவிட முடியாதே! என்றாவது ஒருநாள் எல்லாம் நினைவுக்கு வந்து தானே ஆக வேண்டும்.

இல்லம் வந்தவள் உணவருந்தி விட்டு இனியனுடனும் பெற்றோருடனும் கொஞ்ச நேரம் அளவளாவி விட்டு, உறக்கம் வந்த பிறகே தனது அறைக்குச் சென்றாள். கண்களை மூடிய சில நிமிடங்களிலேயே நிம்மதியான உறக்கம் அவளைத் தழுவிக் கொண்டது.

ஆள் அரவமற்ற அந்த சாலையில் இவள் மட்டுமே தனித்து நிற்கிறாள். இரவின் கருமை சூழ்ந்த அந்த இடத்தில் அமைதியைத் தவிர வேறொன்றும் இல்லை. மயான அமைதி என்பார்களே, அப்படி ஒரு அமைதி! உள்ளுக்குள் குளிரெடுக்க வைக்கும் அமைதி! அவள் மூச்சுக் காற்றின் ஓசை அவளையே தீண்டிச் செல்லும் அளவிற்கான அமைதி! தாறுமாறாகத் துடிக்கும் அவள் இதயத்தின் துடிப்பை அவள் செவிகள் உணரும் அளவிற்கான அமைதி! அந்தச் சூழலே அவளுக்கு அதிகமான பயத்தைக் கொடுக்க, உடலில் உதறல் எடுக்க ஆரம்பித்திருந்தது.

உடலெங்கும் வியர்வை ஆறாய் வழிந்தோட, பயத்தை உள்ளுக்குள்ளையே புதைத்துக் கொண்டு, முயன்று வரவைத்துக் கொண்ட தைரியத்தோடு கண்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் சுழல விட்டவளுக்குத் தன்னைச் சுற்றி எவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. ஒரு எல்லைக்கு மேல் பார்வையை விரிவுபடுத்த முயலாமல், வேரூன்றி நின்றிருந்த கால்களை வெகு சிரமப்பட்டு நகர்த்தியவளுக்கு, இரண்டடி வைப்பதற்குள் மூச்சு முட்டுவதைப் போல் இருந்தது.

நீண்ட மூச்சுகளை எடுத்துத் தன்னைச் சமன் செய்து கொண்டவள், இன்னும் சில அடி தூரம் நடந்திருப்பாள் அவ்வளவே. பயங்கரமாகக் குரைத்தபடி அந்த இருளில் சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து முழுவதும் கருமை நிற நாய் ஒன்று அவளின் மீது பாய, பதறிப் பின்னால் நகர்ந்தவள் கால் தடுமாறிக் கீழே விழுந்தாள்.

காதின் அருகே கேட்ட அந்த நாயின் குரைப்பு சத்தமும், அதன் சிவந்த கண்களும், தோளில் பதிந்த அதன் ஒரு பாதமும் அவளுள் இன்னும் இன்னும் பயத்தைக் கூட்டி இருந்தது. எந்நேரமும் அவளை கடித்துக் குதறிவிட அது தயார் நிலையில் இருந்தது. இறுகக் கண்களை முடிக் கொண்டவள் அப்படியே அமர்ந்திருக்க, சற்று நேரத்தில் நாயின் குரைப்புச் சத்தம் முழுவதும் நின்றிருந்தது.

வெளியே வந்து விழுந்து விடுவேன் என்னும் அளவிற்கு வேகமாகத் துடித்த இதயத்தை ஒரு கையால் பற்றிக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்ற இப்போது அந்த நாய் அங்கு எங்கும் இல்லை.

உடலெங்கும் வியர்வை வெள்ளம் வழிந்தோட பதற்றத்தில் எழ முயன்றவளால், அது முடியாமல் போனது. அதே சமயம் அழுத்தமான காலடி ஓசை ஒன்று மிக அருகில் கேட்க, அந்த இருளை ஊடுருவிக் கூர்ந்து கவனிக்க, யாரோ ஒருவர் அவளை நோக்கி வருவது நிழல் உருவமாகத் தெரிந்தது.

பயத்துடன் அமர்ந்த வாக்கிலேயே அவள் பின்னோக்கி நகர, அழுத்தமான காலடி எட்டுகளுடன் அவளை நெருங்கிக் கொண்டிருந்தது அந்த உருவம். ‘எழுந்து ஓடு..!’ என மூளை இட்ட கட்டளையை ஏற்க மறுத்து அங்கேயே வேரூன்றி இருந்தது அவள் கால்கள். அந்த உருவம் அவளை நெருங்க நெருங்க, இதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது அவளுக்கு. அருகில் வரவர அது ஒரு ஆடவன் என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவன் உருவம் மனதில் பதியவில்லை. அந்த முகம் அதுவும் தெரியவில்லை. ஆனால் இருளிலும் ஒளி வெள்ளமாக மின்னிய அந்தக் கண்கள் அவளின் விழியோடு நுழைந்து உயிரோடு கலந்து உள்ளுக்குள் உதறலை ஏற்படுத்தியது. அடர் பச்சை நிறக் கண்ணின் பாவையும், அதைச் சுற்றி இருந்த மரகதப் பச்சைக் கருவிழியும் எவரையும் தன்னுள் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை தான். ஆனால், அந்த விழிகளில் தெரிந்த கொலைவெறியில் பயந்து நடுங்கித் தான் போனாள் அவள். சற்றுமுன் அவளைப் பயமுறுத்திய நாயின் வெறி ஏறியிருந்த கண்களுக்கும் இந்தக் கண்களுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்தியாசமில்லை.

இன்னும் அவளை நெருங்கி வந்தவன், முட்டியில் கையை ஊன்றி, குனிந்தபடியே அவளின் முகத்திற்கு மிக நெருக்கத்தில் வர, “அம்மா…” என்ற அலறலுடன் எழுந்து அமர்ந்தவளுக்கு, தான் கண்டது கனவு என உறைக்கவே நீண்ட நேரமாகியது. நேரத்தைப் பார்க்க, நள்ளிரவு இரண்டரை என்றது கடிகாரம். வியர்வையில் நனைந்துவிட்ட உடலில் இன்னும் நடுக்கம் மிச்சமிருந்தது. நல்ல வேளையாக அறைக் கதவு சாற்றி இருந்ததாலும் மற்றவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்ததாலும் அவளின் அலறல் அவர்களுக்குக் கேட்கவில்லை.

அருகே பாட்டிலில் இருந்த நீர் முழுவதையும் பருகிய பின்னும் அவளின் படபடப்பு முழுதாய் நீங்கவில்லை. எத்தனை முயன்றும் அந்தக் கண்களையும், அதில் தெரிந்த கொலை வெறியையும் அவளால் ஒதுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அதுவே அவள் நினைவுகளில் தோன்றி இம்சித்தது. உறக்கம் எங்கோ தொலை தூரத்திற்குச் சென்றுவிட, நீண்ட நேரம் அதையே நினைத்திருந்ததில் தலைவலியே மிஞ்சியது. அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணியவள் எப்போதாவது வலி பொறுக்க முடியாத நேரங்களில் மட்டும் பயன்படுத்தச் சொல்லி கொடுத்த தூக்க மாத்திரை ஒன்றை அவசரமாய் விழுங்கி விட்டு, இனி அந்தக் கனவு வரக்கூடாது என தனது இஷ்ட தெய்வத்திற்கு அவசரமாக ஒரு வேண்டுதலையும் வைத்து படுத்து விட்டாள். இறுகக் கண்களை மூடிக் கொண்டவள் இடைவிடாது தனது இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தபடி இருக்க, சில நிமிடங்களிலேயே மீண்டும் உறக்கம் அவளைத் தழுவிக் கொண்டது.

 

– தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்