
தேடல் 1:
மையிருட்டு என்று சொல்லும் அளவிற்குச் சுற்றி எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. கருத்த மழை மேகங்கள் வானை சூழ்ந்திருக்க, வெள்ளி ஓடம் என தினமும் ஊர்வலம் போகும் வெண்ணிலவையோ, அதன் துணை செல்லும் நச்சத்திர கூட்டத்தையோ அங்கே காண கிடைக்கவில்லை. மெல்லிய, உடலை அவப்போது வருடி செல்லும் விதமாக வீசிச் சென்றது மழை காற்று. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பெரிய பெரிய தூரல்கள் விழுந்து கொண்டிருந்தது.
இதையெல்லாம் கவனித்தவாரே வீட்டை விட்டு வெளியே வந்தவன், கண்களில் அணிந்திருந்த குளிர் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு வானை ஆராயத் தொடங்கினான். ‘மழை வலுக்குமா..?’ என்ற கோணத்திலேயே இருந்தது அவனின் ஆராய்ச்சி. அவ்வப்போது மெல்லியதாய் வீசும் காற்றில் மேகக் கூட்டம் விலகி நிலவிற்கு வழிவிட, இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்று எண்ணியவன் குளிர் கண்ணாடியை கழற்றி, டீ-சர்டீன் மத்தியில் சொறுகியபடியே தனது இருசக்கர வாகனத்தை அதனிடத்தில் இருந்து வெளியில் எடுத்து உயிர்ப்பித்தான்.
வாகனத்தை இயக்கி கொஞ்சம் கொஞ்சமாய் வேகத்தைக் கூட்ட, காற்றில் அலைப்பாயத் தொடங்கியது அவனின் அடர்ந்த கேசம். சில சமயம் அது கண்களையும் மறைக்க ஒரு கையால் அதைப் புறந்தள்ளி அழுந்த கோதி விட்டுக் கொண்டான். கிட்டதட்ட பதினைந்து நிமிடங்கள் பயணித்திருப்பான். ‘டமால்’ என்ற பெருத்த சத்தமொன்று கேட்க, சத்தம் வந்த திசையை நோக்கி தன்னிச்சையாக விரைந்தது அவனின் வாகனம். இரவு என்பதாலும், மழை காலம் என்பதாலும், அத்தோடு அது ஒன்றும் பிரதான சாலை இல்லை என்பதாலும் அவனை அன்றி அந்த சாலையில் வேறு எவரும் இருக்கவில்லை.
சத்தம் வந்த திசையை நோக்கி அவன் விரைந்து செல்ல, முகப்பு விளக்கை எரியவிட்டபடியே, சாலையின் மத்தியில் ஒரு ஸ்கூட்டி தலைகீழாய் கவிழ்ந்து கிடந்தது. தூரத்தில் லாரி ஒன்று ஹாரன் ஒலியுடன் மறைவதும் கண்ணுக்குப் புலனாகியது. நிலமையின் தீவிரம் உணர்ந்தவன் அவசரமாய் இறங்கி ஆராய, தலையில் ஹேல்மெட் அணிந்த ஒரு பெண் சாலையின் ஓரத்தில் கிடந்தாள். இன்னும் சற்றுத் தொலைவில் இன்னொரு பெண் அருகில் இருந்த மின்கம்பத்தில் தலை மோதி ரத்தம் வெள்ளத்தில் கிடக்க, அவசரமாகக் காவல் துறைக்கும் மருத்துவமனைக்கும் கைப்பேசியில் அழைத்து தகவல் சொன்னவன் இருவருக்கும் உயிர் இருக்கிறதா எனப் பரிசோதித்தான்.
இருவருமே பிழைப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால், முதலாமவள் தலைக் கவசம் அணிந்திருந்ததால் பிழைக்கும் வாய்ப்பு அதிகம். அவன் போன் செய்த அடுத்த ஐந்து நிமிடத்தில் அருகே இருந்த மருத்துவமனையில் இருந்து அவசர ஊர்தியும், காவல் துறையினரும் வந்திருந்தனர்.
அடிப்பட்டவர்கள் இருவரையும் அவசர ஊர்தியில் ஏற்ற, தலையில் அடிப்பட்ட பெண் அதிகச் சிரமத்துடன் கண்களைத் திறந்திருக்க முயல்வது புரிந்தது. அவளுக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களுக்கும் ரத்தப் போக்கிற்கும், எப்போதோ மயங்கி இருக்க வேண்டும். ஆனால், இத்தனையிலும் இன்னும் சிரமப்பட்டு விழித்திருக்க முயன்றாள் அவள். ஒரு வேளை கண்களை மூடினால் அல்லது மயங்கினால் இறந்துப் போவோம் என்பது தெரிந்திருக்குமோ? அவசர ஊர்தியில் ஏற்ற, அவனின் கரத்தை இறுக பற்றிக் கொண்டாள். ஒரு வேளை தங்களைக் காப்பாற்ற முயல்கிறான் என்ற நல்ல எண்ணத்தினால் கூட பற்றி இருக்கலாம். வாகனத்தில் ஏற்றிய பின்னும் அவளின் கரங்கள் இவனின் கரத்தை இறுகப் பற்றிய வண்ணமே இருக்க, நிமிர்ந்து அவள் முகம் நோக்கினான். அவளின் மருண்ட விழியில் என்ன கண்டானோ, ‘ஒன்றும் ஆகாது…’ என்பதைப் போல அழுந்த கண்களை மூடி திறந்து அவளுக்கு நம்பிக்கை ஊட்ட முயன்றான். அதை உள் வாங்கியவள் அவனை ஆழ்ந்துப் பார்த்தபடியே மெல்ல மெல்ல மயக்கத்திற்குச் சென்றிருந்தாள். இன்னும் அவன் கையை அவள் பற்றியிருக்க ஏனோ அதை விலக்கிவிட்டு இறங்க மனமில்லை அவனுக்கு. அவனும் அவர்களுடன் அந்த வாகனத்திலேயே சென்றான்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் ஒரு பிரபலமான பெரிய தனியார் மருத்துவமனை ஒன்றின் முன்பு நின்றிருந்தது அந்த அவசர ஊர்த்தி. அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் இன்னும் அரை மணி நேரம் ஆகலாம். அதற்குள் அவர்கள் இறந்துக் கூடப் போகலாம்.
ஏற்கனவே வாசலில் ஸ்டெச்சருடன் காத்திருந்தவர்கள் அவசர அவசரமாக அடிபட்ட இருவரையும் அதற்கு மாற்றி மருத்துவ மனைக்குள் அழைத்து சென்றிருந்தனர். அவனும் அவர்களை பின்தொடர, இன்னும் அவன் கையை விடாமல் இறுகப் பற்றி இருந்தாள் அவள்.
அது தமிழகத்தில் தலைசிறந்த மருத்துவமனைகளுள் ஒன்று. முக்கியமாக இதய நோய்களுக்கு என்றே பிரத்தியேகமாக பார்த்து பார்த்து வடிவமைக்கபட்டு இப்போது சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துமனையும் கூட.
அறுவைசிகிச்சை அறைக்குள் அழைத்துச் சென்றாலும் இன்னும் சிகிச்சை ஆரம்பிக்கவில்லை அவர்கள்.
“என்ன சார் பண்ணறீங்க எல்லாம்… இங்க இரண்டு உயிர் கொஞ்ச கொஞ்சமா போய்ட்டு இருக்கு… நீங்க என்னனா ட்ரீட்மெண்டே இன்னும் ஆரம்பிக்கல…” அவர்களின் அலட்சியம், அவனை இவ்விதம் பேச தூண்டி இருந்தது.
“சார் இது போலீஸ் கேஸ்… போலீஸூம் அவங்க ரிலேட்டிவ்ஸூம் வரட்டும்… அதுக்குள்ள சீப் டாக்டரும் வந்துடுவாங்க…” என்ற ஒரு மருத்துவரை தீப்பார்வை பார்த்தவன்,
“நீங்க பேசிட்டு இருக்க நேரம் அந்த இரண்டு பேரும் செத்து போய்டுவாங்க… சீப் டாக்டர் தான் எல்லாம் பண்ணனுமுனா டுயூட்டி டாக்கர்னு நீங்க எதுக்கு இருக்கீங்க…” என்றவனிடம் இப்போது அப்பட்டமாக கோபம் வெளிப்பட்டது.
“புரிஞ்சுக்கோங்க சார்… இது போலீஸ் கேஸ்…” என்றவனை இடையிட்டவன், “நான் அக்னிமித்ரன்… இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்… இப்ப ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கறீகளா… இல்ல கமிஷ்னர் வந்து சொல்லணுமா..?” என எரிச்சலாய் கத்தியவன், “அவ்வளவு அலட்சியம்… யார் உயிரோ தானா… போனா போகட்டும் அதானே… அந்தப் பொண்ணுங்களுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும், உங்க மேலையும் உங்க ஹாஸ்பிட்டல் மேலையும் அதுக்கப்புறம் இருக்கு உங்களுக்கு…” என அவன் அடையாள அட்டையைக் காட்டி மிரட்டிக் கொண்டிருக்கும் போதே தலைமை மருத்துவர் உள்ளே நுழைந்தார்.
“என்ன ராகவ் இது… நமக்குப் பேஷண்ட் உயிர்தான் முக்கியம்… முதல போய் ட்ரீட்மெண்ட ஆரம்பிங்க…” என்றவர் மித்திரனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தானும் அவர்களுக்கு மருத்துவம் பார்க்க விரைந்து விட்டார். அவர் செல்லும் நேரம் சரியாகப் பத்து முறை அடித்து ஓய்ந்தது கடிகாரம்.
மனத்தில் புதிதாய் முளைத்த முள் ஒன்று உறுத்த துவங்கி இருந்தது மித்திரனுக்கு. அவளின் கையைப் பற்றி இருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாய் அவள் இதயத் துடிப்பு குறைவது தெளிவாக தெரிந்தது. அவள் இனி பிழைப்பது அரிதே என்ற எண்ணம் தோன்ற தன் இஷ்ட தெய்வத்திடம் அவசரமாய் அவள் பிழைக்க வேண்டுமென்ற வேண்டுதலை வைத்தான். அவனின் வெள்ளை நிற டீசர்ட் அவளின் ரத்ததில் தோய்ந்து சிவந்திருந்தது.
அவன் அங்கையே விட்டு வந்திருந்த இருசக்கர வாகனத்தை இங்கே கொண்டு வந்து நிறுத்திவிட்டு, அதன் சாவியை மித்தரனிடம் கொடுத்தார் ஒரு கான்ஸ்டபிள்.
“அந்தப் பொண்ணுங்க பிராப்பர்டி ஏதாவது கிடைச்சுதா… அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா…”
“இரண்டு பொண்ணுங்களோட ஐ.டீ கார்டும் இருக்கு சார்… ஒரு பொண்ணு ரிப்போர்டர்… ஒரு பொண்ணு ஐ.டி கம்பெனில வேலை பாக்குது… ஒரு பொண்ணோட போன் முழுசா உடைஞ்சு போச்சு… இன்னொனு பேட்டன் லக் எடுக்க முடியல… அதனால வீட்டுக்குக் கான்டெக்ட் பண்ண முடியல சார்…”
“எதுக்கு தான் நீங்க எல்லாம் போலீஸ்காரனு சொல்லிக்கறீங்களோ… அந்த பொண்ணுங்க வேலை செய்யற இடத்துக்குக் கூப்பிட்டு வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ண சொல்ல வேண்டியது தானே…”
“சாரி சார்…”
“போட்டா எடுத்தீங்களா… அதுவும் இல்லையா…”
“இரண்டு ஐ.டீ கார்டையும் எடுத்து இருக்கேன் சார்…”
“காட்டுங்க…” எனவும் அந்த புகைப்படங்களை காண்பித்தார். ஒருத்தி மகிழினி, பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றின் நிருபர். அவர்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கைப்பேசியில் அழைத்து, அவள் குடும்பம் பற்றிய தகவல்களை விசாரித்து அவர்களுக்கும் தகவல் கொடுத்தான். அதைக் கேட்டதும் மகிழினியின் தந்தை அங்கேயே மயங்கி சரிய, இவன் இந்த முனையில் “ஹலோ… ஹலோ…” என்று கத்திக் கொண்டிருக்க,
“மிளிர்… மிளிருக்கு ஒன்னும் ஆகலையே…” அவசரமாகக் கரகரத்த குரலில் கேட்டிருந்தார் இன்னொருவர்.
“மிளிர்… மகிழினி கூட வந்தாங்களே இன்னொருத்தவங்க அவங்களா..?” இவன் யோசனையாய் வினவ,
“ஆமா சார் அது என் பொண்ணு சார்… அவளுக்கு ஒன்னுமில்லையே…” பதற்றமாய்ப் பதில் வந்தது மறுமுனையில்.
“அவங்களுக்கும் தான் சார் ஆக்ஸிடன்ட் ஆகியிருக்கு… சீக்கிரம் வாங்க…” என்றவன் வரவேண்டிய இடத்தை சொல்லி வைத்து விட்டான்.
“மிளிர்… மிளிர்…” எனத் தனக்குள்ளேயே சொல்லிப் பார்த்தவனின் எண்ணம், முழுப் பெயர் என்னவாக இருக்கும் என யோசிக்க, அந்த புகைப்படத்தில் இருந்த இன்னொரு ஐ.டீ கார்டை பார்த்தான்.
“மிளிர்மிகை…” என்ற பெயருடன் சின்னதாய் அழகாய் அருகில் அவளின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம். அவனின் கையைப் பற்றி இருந்தவளே தான். எத்தனை எத்தனை அழகான பெயர். மிளிர்மிகை என்ன அர்த்தமாய் இருக்கும். என்ன இருந்து என்ன இத்தனை சீக்கிரமாய் அவள் இறக்க வேண்டும் என்றிருக்கிறதே என்று எண்ணியவனின் மனம் சுணங்கி தான் போனது.
தனது பணியில் எத்தனையோ இறப்பைக் கண்டவன் தான். ஆனால், ஏனோ அவளின் இறப்பை ஏற்க முடியவில்லை. ஏதாவது அதிசயம் நடந்து அவள் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்பினான்.
கொஞ்ச நேரத்திலேயே அவர்களின் பெற்றோர் வந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்து அவன் அறிந்தது, மகிழினியும் மிளிரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். ஆம், இரண்டு வயதில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான். சில நாட்கள் இடைவெளியே இருவருக்கும். ஒன்றாய் நடை பழகி, ஒன்றை பேச கற்று, ஒன்றாய் பள்ளி சென்று என இருந்தவர்கள் வேலையில் மட்டும் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிளிர் பொறியல் படிக்க, மகிழினி தனக்கு பிடித்த இதழியல் துறை பயின்றாள். அவரவர் துறையில் வேலையும் கிடைத்துவிட, மகிழ்ச்சியாய் சென்றது வாழ்க்கை.
இதோ இன்னும் ஒரு வாரத்தில் மகிழினிக்குத் திருமணம் என்ற நிலையில் பள்ளி நண்பர்கள் அனைவருக்கும் இரவு நேர விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தாள். அதற்கு சென்றுவிட்டு இல்லம் திரும்பும் போது தான் இந்த விபத்து நடந்திருந்தது..
இருவருக்கும் சிகிச்சை ஆரம்பித்து இரண்டு மணி நேரம் கடந்து விட்டுருந்தது. மணிமுள் ஒவ்வொரு நொடியை கடக்கும் போதும், அங்கிருந்தவர்களின் உள்ளமோ கலங்கி தவித்துக் கொண்டிருந்தது. அனைவரும் துடிக்கும் மனநிலையில் வெளியே காத்திருக்க, மெல்ல தனது முக உறையை அகற்றியபடியே வெளியே வந்த மருத்துவரையே பார்த்திருந்தான் மித்திரன். அவரின் சோர்ந்த முகமே சொல்லிற்று மிளிர் இனி இந்த உலகில் இல்லை என்று. இது அவன் எதிர்பார்த்தது தான் என்றாலும் ஏனோ மனம் ஏற்க மறுத்தது.
“என் பொண்ணுக்கு ஒன்னுமில்ல தானே டாக்டர்… அவ பொழைச்சுட்டா தானே… பழையபடி ஆகிடுவா தானே…” மருத்துவரின் கையைப் பிடித்துக் கொண்டு மிளிரின் தந்தை தான் கதறிக் கொண்டிருந்தார். உடன் அவளின் தாயும் சகோதரனும்.
“சாரி… சார்… நாங்க முடிஞ்ச அளவு ட்ரைப் பண்ணிட்டோம்… எங்களால உங்க பொண்ண காப்பாத்த முடியல…” என்று அவர் சொல்லி முடிக்கும் முன், “டாக்டர்… டாக்டர்…” என்றபடியே வெளியே ஓடிவந்தாள் செவிலி பெண் ஒருத்தி.
“சொல்லுங்க சிஸ்டர்…”
“டாக்டர்… அந்த பொண்ணுக்கு… பல்ஸ் இருக்கு டாக்டர்… சீக்கரம் வாங்க…” என்றதுமே விரைந்து உள்ளே சென்றுவிட்டார் அவர்.
அந்தச் செவிலியர் சிகிச்சையின் போது மிளிருக்குப் பொருத்தப்பட்டிருந்த கருவிகளை அகற்றும் போதுதான் மிளிரின் நாடிதுடிப்பு மிகமிகக் குறைவாக மெல்லியதாய் இயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். இதை அறிந்த உடனே துரிதகதியில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலையில் இறங்கினார் மருத்துவர். டிப்ரிலேட்டர் எனப்படும் ஷாக் கொடுத்து நின்றுப் போன இதையத்தை மீண்டும் துடிக்க வைக்க உபயோகிக்கும் கருவி கொண்டு அவளைப் பிழைக்க வைக்கப் போராட்டிக் கொண்டிருந்தார் அவர். கிட்டதட்ட பதினைந்து நிமிட போராட்டத்தின் பலனாக மீண்டும் சீராக துடிக்கத் துவங்கி இருந்தது மிளிரின் இதயம். ஆம், அதிசயத்திலும் பேரதிசயமாக அவள் பிழைத்துக் கொண்டாள்.
புன் சிரிப்புடன் வெளியே வந்த மருத்துவர் மிளிரின் தந்தையின் கையைப் பற்றி, “நீங்க ரொம்ப லக்கி சார்… இதே மாதிரி இதயம் நின்னு மறுபடி துடிக்கறது எல்லாம் லட்சத்துல ஒருத்தருக்கு தான் நடக்கும்… இட்ஸ் எ மெடிகல் மிராக்கிள்… அதான் உங்க பொண்ணுக்கும் நடந்திருக்கு. அவங்க பொழைச்சுட்டாங்க…” என்றார் அதே புன்னகையுடன்.
“அப்போ… அப்போ… அவளுக்கு இனிமே எந்தப் பிரச்சனையும் இல்ல தானே டாக்டர்… அவ நல்லா ஆகிட்டாளா…” பதற்றமும் பயமும் சந்தோஷமும் போட்டிப் போட திக்கி திணறி ஒலித்தது மிளிரின் தந்தையின் குரல்.
“அப்படி எங்களால உத்திரவாதம் கொடுக்க முடியாது… அவங்க உயிர் பிழைச்சுட்டாங்க… ஆனா தலையில பலமான அடி… சோ… மத்த எதையும் இப்ப சொல்ல முடியாது… இன்னும் நாற்பத்தெட்டு மணி நேரத்துல அவங்க கண்ணு முழிக்கனும்… இல்ல நிரந்தரமா கோமாவுக்கு போகவும் சான்ஸ் இருக்கு… கடவுள நம்புங்க… உங்க பொண்ணு உயிர காப்பாத்துன அவரே உங்க பொண்ண மீட்டு உங்கிட்டக் கொடுப்பாருனு நம்புங்க…” என்றவர் ஆறுதலாய் அவர் கையில் தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதே நேரம் மகிழினிக்கு ஆப்ரேஷன் நடந்த இடத்திலிருந்து பெரும் அழுகை சத்தம் கேட்க, அனைவருமே விரைந்து அங்கே சென்றிருந்தனர். மகிழினி இறந்து விட்டுருந்தாள்.
“இன்னும் ஒரு வாரத்துல உன்ன கல்யாண பொண்ணா பாக்க கனவு கண்டுட்டு இருந்தோமே… இப்படி எல்லாரையும் ஏமாத்திட்டு போய்ட்டியேம்மா… இப்படி உன்ன பொணமா பாக்க தான இந்த உயிர கையில புடிச்சுட்டு இருக்கேனா..? கல்யாணத்துக்கு ஒன்னொன்னும் பாத்துப் பாத்து பண்ணோமே… எல்லாம் இப்படி உன்ன எமன்ட்ட தூக்கிக் கொடுக்க தானா… ஐயோ கடவுளே… என் பொண்ணு என்ன பாவம் பண்ணா… இப்படி அவள எங்ககிட்டயிருந்து பறிச்சுட்டீயே…” கதறி அழுத மகிழினியின் தாயை சமாதானப் படுத்த முயன்ற மிளிரின் குடும்பமும் அழுகையிலேயே கரைந்தது. என்ன இருந்தாலும் குழந்தையில் இருந்து மகள் போலவே பார்த்து வளர்த்தவளாயிற்றே. அவளின் இறப்பை அந்தக் குடும்பத்தாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
என்ன விந்தை இது..! நிச்சயம் இறந்துப் போவாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் பிழைத்துக் கொண்டாள். ஆனால், பிழைக்க அதிகம் வாய்ப்பிருந்தவளோ இறந்துவிட்டாள். இதுதான் விதியோ..! யார் வாழ வேண்டும், யார் வீழ வேண்டும் என்பதை அவன் ஒருவனே தீர்மானிக்கிறான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு:
தலைமை மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் மிளிரின் பெற்றோர். கூப்பிட்டு அனுப்பியதில் இருந்தே ‘என்ன சொல்ல போகிறாரோ..?’ எனத் தாளம் தப்பித் துடித்த இதயத்தை நீவி விட்டபடியே, ஏ.சி அறையிலும் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்தபடியே அமர்ந்திருந்தனர் அவர்கள்.
“இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க… உங்க பொண்ணு கண்ணு முழிச்சிட்டாங்க… இப்போ கம்பிளீட்லி ஆல்ரைட்… ஆனா அவங்க பழச எல்லாம் மறந்துட்டாங்க… அவங்க யாருனே அவங்களுக்குத் தெரியல… இப்போதைக்குப் புதுசா பொறந்த குழந்தை மாதிரி அவங்க… ஒவ்வொன்னையும் நீங்க தான் சொல்லி தரனும்… நீங்க அவங்க மேல காட்டற அன்பும் அக்கறையும் தான் அவங்கள மறுபடியும் பழையபடி நடமாட வைக்கும்… வலுகட்டாயமா எதையும் நியாபக படுத்த முயற்சி பண்ணாதீங்க… அவங்களுக்கு எப்போ நியாபகம் வருதோ வரட்டும்… அப்படி மீறி மூளைக்கு அதிக அழுத்தம் கொடுத்தா அவங்க உயிருக்கே கூட ஆபத்தாகலாம்…” என்றவரின் வார்த்தைகளில் சிறு பயம் எழுந்தாலும் மீண்டும் தங்கள் மகள் எழுந்து வந்ததே போதும் என்றிருந்தது அவர்களுக்கு.
– தேடல் தொடரும்…

