Loading

அத்தியாயம் 26 :

இளம்பரிதி ❤️ இளமதி.

வரவேற்பு இனிதாக நடந்து முடிந்தது.

உள்ளூரிலேயே இருக்கும் உறவினர்கள் அனைவரும் மண்டபம் விட்டு கிளம்பிட… மற்ற வெளியூர் உறவினர்கள் அனைவரும் மண்டபத்தில் அவர்களுக்கென கொடுக்கப்பட்ட அறைக்குள் முடங்கினர்.

அப்போதே நேரம் ஒன்றை நெருங்கியிருந்தது.

புகைப்பட கலைஞர் மணமக்களை விதவிதமாக புகைப்படம் எடுப்பதாக அவர்களை நாணத்தில் மிதக்கச் செய்து கொண்டிருந்தார்.

அதனை பார்த்தபடி நண்பர்கள் நால்வரும் மேடைக்கு கீழே இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஒருபக்கம் அதிகாலை திருமணத்திற்கு மணமேடையை பூக்களால் அலங்கரிக்கும் வேலை நடைபெற்றது.

“நீயெப்போ கிளம்புற பாரி?”

“மேரேஜ் முடிஞ்ச வன் ஹவரில் கிளம்பினாதான் சரியா இருக்கும் அவி. எக்ஸ்டரா ஒன் மினிட் லேட் ஆனாலும் ட்ரில் எடுத்திடுவாங்க” என்று சொன்னவனின் பயிற்சியின் கடுமை அவர்கள் அறிந்ததே.

அவர்களின் பேச்சு பல திசைகளில் பயணித்தாலும், கல்லூரி நாட்களை மட்டும் கவனமாகத் தவிர்த்தினர்.

“அடுத்து உனக்கு ட்ரெயினிங் பீரியட் முடிஞ்சாதான் மீட் பண்ண முடியும்.”

ஜென் சொல்லிட பாரியின் அருகில் அமர்ந்திருந்த பூ அவனின் கையை இறுகப்பற்றிக்கொண்டாள்.

அதன் பொருள் புரிந்த பாரி, பிடியில் அழுத்தம் கொடுத்து ஆறுதல் படுத்தினான்.

“ரெண்டு பேரையும் போட்டோகிராபர் வச்சு செய்யுறார்” என்று அவர் கொடுக்கச் சொல்லும் போஸ்களை பற்றி சொல்லிச் சிரித்தான் பாரி.

அடுத்து நால்வரும் மேடை ஏறிட, மணமக்களுடன் சேர்ந்து போட்டோகிராபர் அரண்டு போகும் அளவிற்கு அவரை வைத்து ஒரு வழி செய்தனர்.

“எல்லாம் நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு பார்த்துக்கலாம்… விடியகாலை கல்யாணம் போய் செத்த உறங்குங்க” என்று அரசு வந்து சொல்லும் வரை அவர்களின் அட்டகாசம் அவ்விடத்தை அதிர வைத்தது.

அந்நேரம் அரசுவிடம் வேகமாக ஓடிவந்த மணி தங்கத்திற்கு திடீரென உடல்நிலை மிகவும் பின்னடைவதாகச் சொல்ல… மொத்த குடும்பமும் அங்கு அவரது அறையில் குழும்பியது.

அவரால் தானே இத்திருமணம் இத்தனை விரைவாக நடைபெறுகிறது. அவரில்லாமல் எப்படி. அவரை தகுந்த பாதுகாப்போடு மண்டபத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் எடுத்திருக்கும் முடிவு. அதற்காகவே தற்போது நன்றாகயிருக்கும் அவர் உடல்நிலை சரியில்லாததைப்போல் நடிக்க ஆரம்பித்திருந்தார். இளையவர்களை தவிர மற்றவர்கள் அவருக்கு உதவும் வகையில் உடல்மொழியில் பதட்டம் காட்டி நின்றிருந்தனர்.

மூச்சு இரைக்க படுக்க முடியாது கட்டிலில் நன்கு சாய்ந்து அமர்ந்திருந்த தங்கம்… நெஞ்சில் கை வைத்துக்கொண்டு… மிகவும் முடியாததைப்போல் மூச்சு விடவே சிரம்மப்படுவதாக, கண்களை சொருகியபடி தன்னை காட்டிக்கொண்டார்.

மணி அவரின் நெஞ்சை நீவியபடி இருக்க… பார்வதி வேகமாக சுடு நீரை ஆற்றிக் கொண்டிருந்தார்.

அரசு கண்களில் கவலையோடு தங்கத்தின் காலுக்கு அருகில் அமர்ந்து பிடித்துவிட்டுக்கொண்டு இருக்க… தில்லை அரசு கொடுத்த மருத்துவர் எண்ணிற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்.

பார்ப்பவர்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் தங்கத்தின் உயிர் பிரிந்துவிடும் எனும் தோற்றம்.

பூவும் இளாவும் கலங்கிய விழிகளுடன் அவரின் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க… பாரி, பரிதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவி மற்றும் ஜென்னுடன் அவர்களும் பார்வையாளர்களாகிப் போயினர்.

பாரிக்கு பூ அழுவதை கண்கொண்டு காண முடியவில்லை.

அனைவரையும் விலக்கி தள்ளிவிட்டு தங்கத்தின் அருகில் சென்ற பாரி…

“இங்க பாருங்க பாட்டி… உங்களுக்கு ஒன்னுமில்லை. நீங்க நல்லாத்தான் இருக்கீங்க. புது இடம் மூச்சு முட்டுது அவ்வளவு தான். நீங்க நல்லாத்தான் இருக்கீங்கன்னு நீங்க முதலில் நம்பணும்” என்றவன் பார்வதியின் கையிலிருந்த வெந்நீரை வாங்கி அவனே அவருக்கு மெல்ல புகட்டினான். அடுத்து மணி கையிலிருந்த மருந்தை வாங்கி கொடுத்தவன்… “இப்போ சரியாப்போகும்” என்றவன், “அவங்களுக்கு இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி அழற நீ” என்று பூவை அதட்டியவன் அவளின் கண்ணீரை துடைத்து… “அவங்க நல்லாத்தான் இருக்காங்க பாரு” என்றான்.

“நான் கூட பாட்டி மேல பாசமுன்னு தப்பா நினைச்சிட்டேன்” என்று அவி முணுமுணுக்க…

“இவன் தமிழ் அழுதான்னு பாட்டியை கவனிச்சிருக்காண்டா” என்று ஜென் வாயில் கை வைக்க… அந்நிலையிலும் அவர்களின் பேச்சை கேட்ட பரிதி வாய்மூடி சிரித்தான்.

சில நிமிடங்களில் தன்னை சீராகக் காட்டிக்கொண்ட தங்கம் அனைவரின் முகத்தையும் தனித்தனியாக சில நொடிகள் பதித்து பார்வையால் வலம் வந்தார்.

இறுதியில் அரசுவின் முகத்தில் நிலைத்தவர்…

“எனக்கு நம்பிக்கையில்லை அரசு… நான் நாளைக்குள்ள போயிடுவேன் போல” என்றவர் சில நிமிடங்கள் வராத இரும்பலை வரவழைத்து இரும்பினார்.

அரசு பதறியவராக…

“அம்மா கொஞ்சம் அமைதியா இரும்மா. நீயி இன்னும் நூறு வருசத்துக்கு எங்கூட இருக்கணும்மா… இருப்பம்மா” என்று தங்கத்தின் கைகளை பிடித்துக்கொண்டு கதறினார்.

“அண்ணன் பெர்ஃபார்மென்ஸில் பின்றாரு.” பார்வதி தில்லையின் காதில் கிசுகிசுத்தார்.

“இல்ல அரசா… எனக்கு என் முடிவு தெரியுது. அதோ வாசப்பக்கம் என்னை கூட்டிப்போவ எமன் காத்து நிக்குறான்” என்று திணறலோடு வாயில் பக்கம் கை நீட்டினார்.

அனைவரது பார்வையும் வாயிலைத் தொட்டு அவரின் பக்கம் மீண்டது.

“எனக்கு ஒரே ஆசை தாம்யா… கடைசி ஆசைன்னு வச்சிக்கோயேன்.”

“ஏம்மா இப்படிலாம் பேசுத.”

“அத்தை…”

மணியும், அரசுவும் ஒன்றாக பதற்றம் கொண்டனர்.

“யென் ரெண்டு பேத்தி கல்யாணத்தையும் கண் குளிர பார்த்துப்புடனும். இல்லைன்னா இந்த கட்ட வேவாது அரசா” என்றார் மூச்சினை இழுத்து விட்டபடி.

“அதான் விடியலில் இளாக்கு கல்யாணம் வச்சிருக்கே அத்த.” மணி சேலைதலைப்பில் அழுகையை அடக்கினார்.

“இளா யென் செல்ல பேத்தின்னா. தமிழு ஆசை பேத்திட்டி… அவள் கல்யாணாத்தை பாக்கணும்டி” என்றவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு இரும்பினார்.

‘இப்போ இந்த பாட்டி என்ன சொல்ல வருது?’ பாரி காதினை கூர்மையாகத் தீட்டி பார்த்திருந்தான்.

தங்கத்தின் பேச்சைக் கேட்ட அனைவரும் ஒருசேர அதிர்வை காட்டினர்.

“இப்போ எப்படிம்மா அது முடியும். கல்யாணமுன்னா சும்மாவா? எம்புட்டு இருக்கு. அதுமட்டுமில்லாம திடீர்னு மாப்பிள்ளை பையனுக்கு நான் எங்கம்மா போவேன்” என்ற அரசு பூவை பிடித்துக்கொண்டு அழுதார்.

பூவை கை காட்டி தன் பக்கம் அழைத்த தங்கம்…

“நீயென்னடா சொல்லுத?” என்றார். நெஞ்சை தேய்த்துக்கொண்டார்.

அவளின் மனம் முழுக்க பாரி இருக்க அவளெப்படி சம்மதம் சொல்வாள். கண்ணீர் கன்னம் தாண்டிட தலை குனிந்தாள்.

“அரசா என் கடைசி ஆசைப்பா… யென் ரெண்டு பேத்தி கல்யாணத்தையும் ஒட்டுக்கா கண்ணு குளிர பார்த்துப்புட்டா நிம்மதியா போய் சேருவேன். செத்த புரவாட்டி என்னிய அலைய விட்டுப்புடாத அரசா” என்றவர் மூச்சை இழுத்து வெளிவிடாது கண்கள் சொருகியபடி மூச்சை அடக்கி அனைவருக்கும் பயம் காட்ட… உண்மையில் அவரின் அச்செயலில் பயந்தே போனார். உண்மையிலும் எதுவும் ஆகிவிட்டதோ என்று.

ஆனால் அப்படியில்லை என்று சில கணங்களின் மூச்சை சீராக்கி அனைவரையும் தெளிவாக்கினார்.

அதில் பயந்தது போல்…

“நீயி என்ன சொன்னாலும் செய்யுதேன்” என்று அரசு தலையாட்டிட…

இப்போது தங்கம் பார்வதியையும் தில்லையையும் தன் பக்கம் அழைத்தார்.

இருவரின் கையையும் பிடித்துக்கொண்டு பாரியை ஒரு பார்வை பார்த்தவர்,

“தமிழுக்கு உங்க ரெண்டாவது மவனை கட்டித்தாறிங்களா?” என்றார். அவரின் குரலில் கெஞ்சல். மன்றாடல். ஒருங்கே இருந்தது.

பாரி அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான் என்றால் பூ தன் காதில் கேட்டதை நம்ப முடியாது இருந்தாள்.

“உன்னை எம் பொண்ணா நினைக்குதேன். அந்த உரிமையில கேட்குதேன். மறுத்துப்புடாத தாயீ” என்றவர் இரு கரம் இணைத்து கூப்பி வேண்டிட, நடிப்பு என்றாலும் தங்கத்தின் அச்செயலில் பார்வதி உண்மையிலேயே பதறி வேகமாக சம்மதமென்று தலையாட்டினார்.

“உங்க ரெண்டு பேத்திக்கும் என் ரெண்டு பசங்களோடு காலையில கல்யாணம் நடக்கும். நீங்க தெம்பா இருங்க” என்று தில்லை வாய்விட்டே கூறினார்.

அடுத்து யாரும் பாரியை கவனிக்காததைப்போல் கடந்து நடக்க வேண்டியதை வேகமாக செய்ய ஆரம்பித்தனர்.

மேடை அமைப்பவர்களிடம் சென்ற தில்லை இரண்டு மேடை போட சொல்லிவிட்டு வர,

அவரை வழிமறித்து நின்றான் பரிதி.

“என்னப்பா நடக்குது இங்க. சம்மந்தப்பட்ட ரெண்டு பேர்கிட்டையுமே ஒரு வார்த்தை கேட்கல” என்றான்.

“கேட்டா ஒத்துப்பாங்களா?” என்று அவர் கேட்க, இது அவர்களின் திட்டமென்று பரிதிக்கு புரிந்தது.

“இது தப்பில்லையாப்பா?”

“நடந்தா நீ சந்தோஷப்படமாட்டியா பரிதி.”

அதற்கு மேல் பரிதி ஒன்றும் பேசவில்லை. நடந்தால் அவனுக்கும் மகிழ்ச்சி தானே அதனால் அமைதியாக இருந்து கொண்டான்.

இங்கு அறையில் பார்வதியிடம் பாரி தான் தாம்தூம் என்று கத்திக் கொண்டிருந்தான்.

“யாரை கேட்டு நீங்க சம்மதம் சொன்னீங்க. நான் அங்கதான நின்னேன். என்னை ஒருவார்த்தை கேட்டிங்களா?” கோபத்தில் வெடித்தான்.

“எங்களை நல்லா தெரிஞ்ச நீங்களே இப்படி செய்யலாமாம்மா.” ஆற்றாமையுடன் வினவினான்.

“இதுல என்னப்பா இருக்கு என் மகன் கல்யாணம் பண்ண நான் முடிவெடுக்கக்கூடாதா?”

“நான் இல்லைன்னு சொல்லலையேம்மா” என்றவனுக்கு இவர்கள் தன்னை புரிந்து கொள்ளமாட்டார்களா என்று ஆயாசமாக இருந்தது.

“ப்ளீஸ் ம்மா, பூவை நான் எப்படிம்மா? என்னால முடியாதும்மா” என்றான்.

அவனது பூவை மனைவி என்ற இடத்தில் வைத்து பார்க்க கற்பனையிலும் அவனால் முடியவில்லை.

“புரிஞ்சிக்கோங்கம்மா.”

பார்த்திருந்த அவிக்கும் ஜென்னிற்கு கூட பாரி சம்மதிக்க வேண்டுமே என்றிருந்தது.

தில்லையும் பரிதியும் வர அவர்களிடமும் இது வேண்டாமென்று கிட்டத்தட்ட கெஞ்சினான்.

“இதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை பாரி. என் பேச்ச கேட்குற நிலையில இங்க யாருமில்லை” என்று பரிதி ஓரம் சென்று நின்று கொண்டான்.

அவர்கள் அவர்களது பிடியில் நிலையாக நிற்க பாரி முடியவே முடியாதென்று அடமாக இருந்தான்.

“நான் சம்மதம் சொல்லிட்டேன் பாரி. நாளைக்கு எங்க மரியாதை உன் கையில் தான் இருக்கு” பார்வதி அழுத்தமாக மகனை பார்த்தார்.

“இதுதான் உங்க முடிவாம்மா?”

“ஆமா.”

“பூ சம்மதிச்சா எனக்கும் ஓகே. ஆனால் அவள் என்கிட்ட அவளோட சம்மதத்தை சொல்லணும்” என்றான்.

பாரிக்கு பூவின் நட்பின் மீது அத்தனை நம்பிக்கை. நிச்சயம் அவள் ஒப்புக் கொள்ளமாட்டாளென்று.

“அவள் ஓகே சொல்லிட்டா, அதுக்கு அப்புறம் மறுக்கமாட்டியே?”

பூவை நன்கு அறிந்தவன் என்ற எண்ணத்தில்,

“நிச்சயம் மாட்டேன்” என்றான்.

தங்கத்துடன் இருந்த பூவைத்தேடி வந்த ஜென்,

“பார்வதி ஆண்ட்டி உன்னை கூப்பிட்டாங்க தமிழ்” என்று கையோடு அழைத்துச் சென்றாள்.

செல்வதற்கு முன் தங்கம் தன் பேத்தியின் கையில் அழுத்தம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

இப்போது அங்கு அரசு மற்றும் மணியும் கூட இருந்தனர்.

“வாடா” என்று பூவை கைபிடித்து அழைத்த பார்வதி…

“உனக்கு பாரியை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா தமிழ்” என்று கேட்டிருந்தார்.

அரசுவை நிமிர்ந்து பார்த்த பூ…

‘தன் காதல் இப்படித்தான் நிறைவேற வேண்டும் போல’ எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவளாக… தன் காதல் நிறைவேறிட கிடைக்கும் வாய்ப்பினை இழக்க விரும்பிடாது

தலை கவிழ்ந்தவாறே “சம்மதம்” என்றாள்.

பாரி முற்றிலும் அதிர்ந்தான். இதயத்தில் வலிக்க வலி ஒன்று மெல்ல படர்ந்தது.

அவளின் அருகில் சென்றவன், “உன் பாட்டிக்காக சொல்லாத பூ. அவங்களுக்காக நாம வாழ முடியாது” என்று அவளின் சம்மதத்தை ஏற்காது வேண்டாமென்று சொல்லச்சொல்லி கெஞ்சினான்.

“பூ ப்ளீஸ் டா. நோ சொல்லு.”

பாரி கெஞ்சுவது அவளுக்கும் பிடிக்கவில்லை தான். ஒரு நொடி அவனுக்காக முடியாதென்று சொல்லிவிடலாமா என்றுகூட யோசித்தாள். ஆனால் அவளின் காதல் மனம் விடவில்லை.

பாரி அத்தனை இறங்கி மன்றாடினான் அவளிடம். வேண்டாமென்று.

ஆனால் அவளால் அவளின் பாட்டிக்கு என்பதைவிட… இப்போது தனக்காக என்று யோசிக்கும் மனதை தடுக்க முடியவில்லை.

அவளால் பாரியில்லாது நிச்சயம் வாழ முடியாது. அதற்கு இப்படியொரு வாய்ப்பு கிட்டுமென்று அவளே எதிர்பார்த்திடாத போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது தானே புத்திசாலித்தனம். பின்னால் வருந்துவது பிரயோஜனம் இல்லையே.

அதனால் பாரியை வருத்துகிறோம் என்று தெரிந்தே அவனின் கெஞ்சலை கண்டுகொள்ளாது சம்மதம் என்றாள்.

“எல்லாரும் சொல்லும் போது…”

பூவின் வாயில் தன் கை வைத்து மூடியவன்… இரு பக்கமும் தலையாட்டினான்.

“அவள் சம்மதம் சொல்லிட்டா சரி சொன்னியே” என்று பார்வதி கேட்க…

தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவன்,

“எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை” என்றான் திடமாக. அவனின் குரலில் அவனது பூ தந்த ஏமாற்றத்தின் கோபம். அவனது நட்பின் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கை மொத்தமாக உடைந்து நொறுங்கிய ரணத்தின் உச்சமாய் அழுத்திக் கூறினான்.

“இப்போ நீயில்லன்னாலும் அவளுக்கு கல்யாணம் நடக்கத்தான் போகுது பாரி. ஆனால் அவசரத்துல ஒருவனை பார்த்து, அவனால உன் பூவோட வாழ்க்கை நல்லாயில்லாம போனா உனக்கு சந்தோஷமா?” என்று அவனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டுமே என்று பார்வதி பேசினார்.

“எனக்கு முடியாதுன்னா முடியாதுதாம்மா” என்று கத்தியவனின் முகத்தில் தெரிந்த சீற்றத்தில் அனைவருமே மிரண்டனர்.

“அவள் அவளோட குடும்பத்துக்காக ஒத்துக்கும் போது நீ உன் குடும்பத்துக்காக ஒத்துக்கோயேன் பாரி.” தில்லை கூறினார்.

“என்னால முடியாதுப்பா” என்றவன் தன் முடிவில் நிலையாக நின்றான்.

பூவின் மீது உண்டான கோபம் அவனின் கத்தலில் தெரிந்தது.

“அப்போ இதுதான் உன் முடிவா?” பார்வதி தான் கேட்டிருந்தார்.

“ஆமா” என்றவன் அப்போதே அங்கிருந்த கிளம்ப தன் பையினை கையிலெடுக்க…

“நீ எங்களை உண்மையாவே உன் குடும்பமா, எங்களை உன் அப்பா அம்மாவா நினைச்சா தமிழ் கழுத்துல தாலி கட்டு.”

பார்வதி சொல்லியதில்

“அம்மா” என்று பரிதி அத்தனை சத்தமாகக் கத்தியிருந்தான்.

தான் சொல்லும் வார்த்தை தன் மகனின் உயிர்வரை வலி கொடுக்கும் என்று தெரிந்தே அவ்வார்த்தைகளை சொல்லிச்சென்றார் பார்வதி.

பார்வதியின் சொற்களில் அப்படியே அங்கிருந்த மெத்தையில்  பொத்தென்று அமர்ந்தான் பாரி.

பாரியின் முகம் முழுக்க வார்த்தையில் வடிக்க முடியாத வேதனை. மறந்தே போயிருந்த ஒன்று காயத்தில் காயத்தை உண்டாக்கி வலி கொடுத்தது. நெஞ்சம் பிளக்கும் வேதனை.

அவரைத் தொடர்ந்து பூவைத் தவிர்த்து அனைவரும் அவர்களுக்குத் தனிமை கொடுத்து வெளியேறினர்.

அவர் சொல்லிச்சென்ற வார்த்தையின் வீரியம், பாரியின் அந்த ரகசியம் அறிந்திருந்த பூவுக்குமே அத்தனை வலி கொடுத்தது. இப்போது பாரியின் மனம் எத்தனை வேதனையில் மூழ்கியிருக்குமென்று அவளால் உணர முடிந்தது.

பாரியின் அருகில் செல்லவே இப்போது பூவிற்கு தயக்கமாக இருந்தது.

அவனின் கண்ணீரை கண்டவள் தயக்கம் துறந்து அவனின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

“வேந்தா…”

“அப்படி கூப்பிடாதடி” என்றவன் அவளை வேகமாக உதறி தள்ளியிருந்தான்.

“உன்னால எப்படிடி முடிஞ்சுது. மனசு முழுக்க வலிக்குதுடி. பொண்ணுங்க எல்லாருமே இப்படித்தான் உங்க மேல வைக்கிற நம்பிக்கையை உடைப்பீங்களா?”

அந்த அமிர்தாவோடு தன்னை ஒப்பிட்டு பேசியதில் பூ துடிதுடித்தாள். அதிலும் அவனின் வார்த்தைகள் அவளைக் கொன்றன.

“வேந்தா…”

“அப்படி கூப்பிடாதன்னு சொன்னேன். அப்படி கூப்பிடாதடி அது என் பூவுக்கான அழைப்பு.” கத்தினான். கத்தலில் தன் இயலாமையை காட்டினான்.

“நான் உன் பூ தான் வேந்தா.”

“நீயில்லை… நீ என் பூவா இருக்க முடியாது. என் பூ என் கண்ணை பார்த்தே எனக்கு விருப்பமில்லாத ஒன்னை விலக்கி வச்சிடுவாள். ஆனால் நீ… நிச்சயம் நீ என் பூ இல்லை” என்று பித்து பிடித்தவன் போல் அரற்றினான்.

“என் முன்னால நிற்காத… போ… போடி” அவளின் கழுத்தில் கை வைத்து அறையிலிருந்து வெளியில் தள்ள முயன்றான்.

பூவை பார்க்க பார்க்க அவனுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையை எண்ணி கோபம் அதிகமாகியது.

“வேந்தா…”

“அப்படி கூப்பிடாதடி” என்றவன் அங்கிருந்த நிலைக்கண்ணாடியை ஒற்றை குத்தில் சில்லு சில்லாக்கியிருந்தான்.

பதறி ரத்தம் வழியும் அவனின் கையை பிடித்தவள், தன் துப்பட்டா கொண்டு கட்டிட முயற்சிக்க…

“ச்சீய்” என்று அவளை உதறினான்.

“எவ்வளவு கெஞ்சினேன். என்னை என்னை போய் உன்மேல கோபப்பட வச்சிட்டியே. வலிக்குது பூ” என்றவன்… “இல்லை இல்லை நீ என் பூ இல்லை” என்று மீண்டும் அவளிடம் காய்ந்தான்.

அதில் பார்வதி இறுதியாக சொன்னது அவனின் இதயத்தை அறுக்க…

“இங்க வலிக்குதுடி… எப்பவுமே நான் அம்மா அப்பா இல்லாதவன்னு உணரவிடாம பார்த்துக்கிட்ட என் அம்மா வாயலே என்னை யாரோன்னு நினைக்க வச்சிட்டாங்கடி.

அதுக்கு காரணம் நீ. உன் பாட்டி.

நீ நோ சொல்லியிருந்தா…” என்றவன் ரத்தம் வழியும் கையால் முகத்தை மூடி கதறினான்.

பூ பாரியின் கதறலை காண முடியாது… அவனின் வார்த்தையின் வலி கொடுக்கும் ரணம் தாங்க முடியாது… எல்லா நேரத்திலும் தனக்கு ஆதரவாக ஆறுதலாக இருந்தவனுக்கு இப்போது தன்னால் ஆறுதல் அளிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவனின் முன் சமைந்து அவன் தள்ளி விட்ட அதே நிலையில் தரையில் அமர்ந்திருந்தாள்.

கண்களில் கண்ணீர் கரை புரண்டது.

அவளது வேந்தனின் இந்த வலிக்கும் அழுகைக்கும் காரணம் அவளல்லவா.

இதற்கு… இதற்குத்தானே… பாரியின் இந்த உணர்வுகளுக்கு பயந்து தானே தன் காதலை இத்தனை நாள் சொல்லிடாது, சொல்ல தவியாக தவித்து… எங்கு சொல்லிவிடுவோமோ என்று அஞ்சி… பிரிவை தானாகவே ஏற்று அவனிடமிருந்து தள்ளியிருந்தாள்.

இதுதான் நடக்குமென்று விதியிருந்தால், எத்தனை தூரம் சென்றாலும் நடந்து தானே ஆகும். அதற்கு அவளின் வாழ்வும் எண்ணமும் விதிவிலக்கல்லவே!

பாரியின் சொற்களை அவளால் கேட்டிட முடியவில்லை. அவனுக்காகவே துடித்தாள்.

அவனை அள்ளி அரவணைக்க துடிக்கும் கைகளை கட்டுப்படுத்த முடியாது அருகில் சென்றவளை அடிக்க ஓங்கிய கையை சுவற்றில் குற்றி அவளை முறைத்தான்.

“என்னை மிருகம் ஆக்காத. போயிடு… என் முன்னாடி நிற்காத. போயேண்டி…”

“என் பூ… என் பூவை அப்படி என்னால பார்க்க முடியுமா? அவளால எப்படி இதை ஏத்துக்க முடிஞ்சுது? இப்பவும் எனக்கு முதல்முறை சாப்பாடு ஊட்டிவிட்ட அந்த பன்னெண்டு வயசு பூவாத்தாண்டி பார்க்கிறேன்.”

அவனின் அரற்றலான கத்தலில் பூ நடுநடுங்கினாள்.

“வேந்தா பிளீஸ்…”

“ஹேய்… ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாது. என் பூ நீயில்லை. என்னை அப்படி கூப்பிடாத!”

அவனின் கோபம் கண்டு அவனை அமைதி படுத்த நினைத்தவள்…

“ஓகே… ஓகே… நான் கூப்பிடல” என்றவள்,

“உனக்கு விருப்பமில்லைன்னா நீ கிளம்பு. நான்… நான் பேசிக்கிறேன்” என்று அழுகையூடே சொல்ல பாரியிடம் விரக்தி புன்னகை.

“என் அம்மா சொன்னது உனக்கு கேட்கலையா?” என்று கேட்டவனின் கன்னங்களில் கண்ணீர் திரண்டு உருண்டது.

ஆணின் கண்ணீர் அத்தனை வலிமை மிக்க வலிகளுக்கு பின்னரே இமை தாண்டி வெளிவரும்.

“அவங்களை என் குடும்பமா நினைச்சா…” அதற்கு மேல் அதனை கூற முடியாது… தன் நெஞ்சிலேயே குத்திக்கொண்டான்.

தடுக்க வந்தவளை பார்வையாலையே தடுத்திருந்தான்.

“அவங்க சொன்னதை நான் கேட்கலைன்னா… நான் அவங்க பிள்ளை இல்லைன்னு ஆகிடும்ல…” என்றவன், “நான் அவங்க மகனே இல்லைதான” என்று அழுதவனின் அழுகை அவ்விடத்தையே நிறைத்தது.

பக்கத்து அறையில் தான் சொன்ன வார்த்தையின் கனம் தாங்காது… தன் மகனைத் தானே வலிக்க அடித்துவிட்டோமே என்று குற்றுயிராக அமர்ந்திருந்த பார்வதியை தில்லையும், பரிதியும் மாற்றி மாற்றி திட்டிக் கொண்டிருந்தனர்.

அங்கு பூவைத் தவிர மற்ற யாருக்கும் ஏன் அவி மற்றும் அரசுவிற்கு கூட பாரி அவர்களின் மகனில்லை என்கிற உண்மை தெரியாது.

அதனை இப்படி அனைவரின் முன்பு உடைத்து விட்டாரே என்று பரிதிக்கு கோபம் எரிமலையாய் வெடித்தது.

“கேட்குதா… கேட்குதாம்மா… உன் பிள்ளை அங்க அழற அழுகை சத்தம்… அந்த சத்தம் உனக்கு கேட்குதா?” என்ற பரிதி… “அவன் என் தம்பிம்மா… எனக்கு வலிக்குதும்மா” என்றவன், அதற்கு மேல் பாரியின் அழுகை சத்தம் கேட்க முடியாது அவனிருந்த அறைக்கு ஓடினான்.

பாரி தில்லையின் தம்பி மகன். அவருக்கு உறவென்று இருந்த ஒரே உறவு அவரின் தம்பி மட்டுமே. அவரும் அவரது மனைவியும் பாரியின் ஏழாவது வயதில் எதிர்பாராமல் மரணித்துவிட்டனர். அதுவரை தம்பி மகனாக இருந்த பாரி அவர்களின் சொந்த மகனாகினான்.

ஒருநாள் ஒருபொழுது ஒருநொடி கூட அவனை தன் தம்பியின் மகனாக தில்லையோ தன்னுடைய கொழுந்தனின் மகன் என்று பர்வதியோ நினைத்தது இல்லை. பாரியை நினைக்க விட்டதுமில்லை.

சொல்லப்போனால் பரிதியை விடவே பாரியைத்தான் தங்களின் அனைத்துமாக பார்த்தனர். பரிதி உட்பட.

பாரியின் முகச்சுருக்கம் கூட பார்வதியை பதற வைத்திடும். அவனுக்காகவே அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அவனின் சந்தோஷத்திற்காக எதுவும் செய்வார். அது பூ விடயத்திலேயே தெரிந்திருக்கும்.

இப்போதும் அவனுக்கே புரிந்திடாத அவனின் மனம் புரிந்ததால் தான் அவனால் ஏற்க முடியாதென்று தெரிந்தும், தன் மகன் இறுதிவரை தனியாளாக நின்றிடுவானோ என்று பயந்து… அவனின் பிடிவாதம் உணர்ந்து, எடுத்த முடிவை நிறைவேற்றியே ஆக வேண்டுமென நினைத்து… எதை கூறினால் அவனை கட்டிவைக்க முடியுமோ அதைகூறி… தாங்கள் சொல்வதை ஏற்காது மறுத்து கிளம்பியவனை தடுத்திருந்தார்.

“பாரி…”

பரிதியின் குரலில் வேகமாக நிமிர்ந்த பாரி மழலையென ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டான்.

“பரிதிண்ணா… நான்… நான்… உன் தம்பியில்லையாண்ணா?” என்று கேட்பவனை தன் நெஞ்சுக்குள் புதைத்து மேலும் இறுக்கிக்கொண்ட பரிதி…

“நீ என் தம்பிடா… என் தம்பி… எனக்கு மட்டும்” என்று கூறி அவனும் கண்ணீரில் கரைந்தான்.

“அம்மா மனசார அப்படி சொல்லியிருக்க மாட்டாங்க பாரி. அப்பா அம்மாவை அடிச்சிட்டாங்க.”

அதில் பாரிக்கு இன்னுமே முகம் வேதனையில் கசங்கியது.

தில்லைக்காவது அவன் தம்பி மகன் என்கிற ஒட்டுதலும், பாசமும் இருக்கும். ஆனால் பார்வதிக்கு… அவனை பார்த்துக்கொள்ள வேண்டுமென்கிற அக்கறை இருப்பதே பெரிய விடயம் தானே. ஆனாலும், ஒருநாளும் நீ என் மகனில்லை என்று ஒரு நொடியும் நினைக்க விட்டிருக்கமாட்டாரே.

சொல்லப்போனால் பாரிக்கு அவனது தாய் தந்தை முகமே மறந்துவிட்டது. மங்கலாகக் கூட நினைவில் இல்லை. அவர்களின் நினைப்பு இந்த கணம் கூட அவனை வருந்தச் செய்யவில்லை. இப்போது அவர்கள் நினைவில் உதித்தது கூட பார்வதி உதிர்த்துவிட்டுச் சென்ற வார்த்தைகளால் மட்டுமே.

தன் மகனுக்கும் மேலாக உயிருக்கு நிகராகப் போற்றி பார்த்துக்கொண்டவரின் சொல்லைத் தாண்டி தன்னுடைய மனம், கோபம், விருப்பமென்று அவனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை.

இருப்பினும் பூவை வேறொரு கண்ணோட்டடத்தில் ஏற்கவும் முடியாது தவித்தான்.

“ரிலாக்ஸ் பாரி. எதையும் யோசிக்காத! உனக்கு வேண்டான்னா வேண்டா. நீ உன்னை கஷ்டப்படுத்திக்காத!” என்று பரிதி பாரியின் முதுகை நீவி விட்டான் ஆறுதலாக.

ஆனால் பாரிக்கு பார்வதி சொன்னதை கடந்து வர முடியவில்லை. தன்னை ஒப்புக்கொள்ள வைக்கத்தான் அவர் கூறியிருப்பார் என்றாலும், அதனை ஏனோ மீறிட அவனுக்கு திராணி இல்லை.

எங்கு தன் விருப்பத்திற்கு சென்றுவிட்டால் தான் அவரது மகனில்லை என்பது உண்மையாகி விடுமோ என்ற எண்ணம் அவனை கையறு நிலையில் நிற்க வைத்தது. அதுவே பூவை மணக்க அரை மனதாக கூட இல்லாது சம்மதிக்க வைத்தது.

தனக்குள் உழன்றவனுக்கு,

அப்போதுதான் இன்னும் இரண்டு மணி நேரத்தில் பரிதிக்கு திருமணம் என்பதே நினைவில் வந்தது. உடன் அவனுக்கும் என்பதும்.

‘தன்னால் தன் அண்ணனின் திருமணமும் நின்று விடுமோ’ என நினைத்து தன் அழுகை, வலி, வருத்தம், வேதனை அனைத்தையும் அடக்கி தன்னை நிலைப்படுத்தி நிமிர்ந்தவன்…

“அம் ஓகே பரிதிண்ணா” என்றிட வேகமாக அறைக்குள் வந்த பார்வதி,

பாரியிடம் பேச வர,

“என்னை சொல்லிட்டு நீங்கதான் அதிகம் வருத்தப்பட்டிருப்பீங்க” என்று எங்கோ முகத்தை வைத்தபடி கூறியவன்,

“நான் எப்பவும் உங்க பிள்ளை தான். அதை நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கீங்க. அதுக்காக மட்டும் தான் இந்த கல்யாணம்” என்றான் பாரி.

“சந்தோஷம் பாரி” என்ற பார்வதி, அவனின் தலையை ஆதுரமாய் வருட… அவரின் கையை நாசூக்காக தள்ளி விட்டான்.

மகனின் செயலில் மரித்த போதும்… அவனின் நன்மைக்குத்தானே என்று தன்னை ஆறுதல் செய்து கொண்டார் பார்வதி.

தில்லை பாரியை அணைத்து “நீ எப்பவும் என் மகன் தாண்டா. அதை நீயே நினைச்சாலும் மாத்த முடியாது” என்று கூறி அவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தார். அவரின் சிவந்த கண்கள் அடக்கப்பட்ட அவரின் கண்ணீரை பறைசாற்றியது.

“அப்பா” என்றவன் மேலும் இறுக்கமாக அவரை அணைத்துக்கொண்டான்.

அங்கே, எங்கோ வெறித்தபடி தரையில் அமர்ந்திருந்த பூவை எழுப்பி, ஜென்னிடம் ஒப்படைத்து… தயாராக பார்வதி அனுப்பி வைக்க… பூ அவ்வறையின் வாயிலில் கால் வைத்திட்ட நேரம் பாரி சொல்லிய வார்த்தையில் அதிர்ந்து சீரானாள்.

“உங்களால என்னை தாலி மட்டும் தான் கட்ட வைக்க முடியும்.” பாரி அவ்வாறு சொல்லிட பார்வதி கூட அதிர்ந்தார்.

ஆனால் பூ மீது பாரிக்கு இருக்கும் அன்பை எண்ணி பார்த்தவர் கண்டிப்பாக அவனால் பூவை விட்டு இருக்க முடியாது, அவனால் பூவை என்றுமே கஷ்டப்படுத்த முடியாது என்று தவறாக எண்ணிக்கொண்டார்.

அவளின்றி அவனிருக்க பழகிக் கொடுத்தவளே அவள் தானே.

*****

அதிகாலை முகூர்த்த நேரம்…

மண்டபமே பரபரப்பாக காட்சியளித்தது.

வந்திருப்போர் அனைவருக்கும் இரண்டு மேடைகள் ஆச்சர்யத்தைக் கொடுத்தன.

அவரவர் அறையில் மணமக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

குடும்பத்தில் யாருக்கும் மருந்துக்கும் முகத்தில் சிரிப்பென்பதே இல்லாது வலம் வந்து கொண்டிருந்தனர்.

“நம்ம ரெண்டு பிள்ளைங்களுக்கும் ஒரே நேரத்தில் கல்யாணம். இது எதிர்பார்த்தது தானே.

பரிதி இளா பத்தி கவலையில்லை.

பாரியும், தமிழும் விலகினாலும், அவங்களுக்கு அவங்க தான் சரியான ஜோடி. இதை அவங்கள புரிஞ்சிக்கிற காலமும் வரும். அதுவரை அவங்களுக்குத் துணையா நாம இருப்போம். அப்புறம் எதுக்கு பெரியவங்கன்னு நாம இருக்கோம்.

தற்சமயத்துக்கு விலகலாம் ஆனால் நிரந்தரமானதா இருக்காது.

எல்லாம் சரி செய்திடலாண்ணா. இப்போ பிள்ளைங்க கல்யாணத்தை சந்தோஷமா செய்து வைப்போம்” என்று அனைவரையும் பார்வதி தான் தேற்றினார்.

“விட்டா லைஃப் லாங் பூவை என்னோடவே பத்திரமா வச்சிக்குவேன்.” என்றோ பாரி சொல்லியது. அரசுவின் காதில் எதிரொலித்தது.

பார்வதியின் பேச்சுக்கு உடன்பட்டார்.

உடனே இல்லையென்றாலும் பாரியுடன் தமிழும் ஒரு நிறைவான வாழ்வை வாழ்வாளென்று பெற்றவர்களுக்கு உறுதியே.

அவர்கள் இருவர் மட்டுமே சரியான ஜோடி. அவர்களே மறுத்தாலும் அதுதான் உண்மை.

அப்படிப்பட்டவர்களை ஒன்று சேர்க்கும் வாய்ப்பு இப்போது விட்டால் வேறெப்போதும் வாய்க்கப்பெறாது என நினைத்து அனைவரும் தங்கள் அளவிற்கு தெளிவாகிட… அடுத்து அனைத்தையும் ஒருவித நிறைவுடனே செய்தனர்.

இளாவிற்கு என்று இருந்ததைப்போலவே புடவை, நகை என அனைத்தும் ஒன்று போலவே இருக்க…

இது இவர்களால் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவென்று பூ கணித்திருந்தாள்.

பூ அர்த்தமாக அங்கு அமர்ந்திருந்த தங்கத்தை ஏறிட்டாள்.

தங்கம் மறந்தும் அவளின் பார்வையை சந்திக்கவில்லை.

“ஏன் அப்பத்தா?” தழுத்தழுத குரலில் வினவினான்.

“எல்லாம் பாரியோட நல்லதுக்குன்னு வச்சிக்கோயேன்” என்றபடி உள்ளே வந்தார் பார்வதி.

“பாரிக்கு இப்படியேதும் செய்து கல்யாணம் பண்ணத்தான் உண்டு” என்றவர்,

“எதுவும் நினைக்காத தமிழ். இந்த அத்தைக்காக அவனை ஏத்துக்கோடா” என்றார்.

பாரியிடம் சொல்லிடாத போது… அவன் மீதுள்ள அதிக காதலை மறைத்துக்கொண்டு, அவர்களுக்காக ஒப்புக்கொண்டதைபோல் தலையசைத்தாள்.

“சந்தோஷம்டா” என்று அவளின் கன்னம் வழித்தவர், தன்னுடைய இரண்டு மருமகளின் நெற்றியிலும் முத்தம் வைத்து, தானே மண மேடைக்கு அழைத்துச் சென்றார்.

இறுக்கமாக ஐயர் சொல்வதை வேண்டா வெறுப்பாக செய்துகொண்டிருந்த பாரி எப்போதடா இங்கிருந்து எழுந்து செல்வோமேன்ற மனநிலையில் இருந்தான்.

“புள்ளையாண்டான் கொஞ்சம் சிரிக்கலாமே!”

பாரியிடம் ஐயர் சொல்ல…

“வந்த வேலையை மட்டும் பாருங்க” என்று வார்த்தையை பற்களுக்கிடையில் கடித்து துப்பினான்.

“கொஞ்சம் கோபமில்லாம இருடா பாரி.” மாலையை சரிசெய்வது போல் அவி குனிந்து அவனின் காதில் சொல்ல…

“முடியலடா” என்றான் பாரி.

“பரிதிண்ணாவை பாரு பாரி. ஐயர் சொல்றதை செய்யாம உன்னைத்தான் பார்த்திருக்கார் கவலையா” என்று ஜென் சொல்லிட…

பரிதியை திரும்பி பக்கவாட்டில் பார்த்த பாரி…

“அம் ஓகே பரிதிண்ணா” என்று உதடசைத்தான்.

அதன் பின்னர் மணப்பெண்கள் இருவரும் மேடையேறினர்.

பூ அருகில் அமர பாரியின் உடலில் விறைப்புத்தன்மை. ஒரு அடி தள்ளி அமர்ந்தான்.

வேகமாக அவனை ஏறிட்ட பூவுக்கு கண்கள் கலங்கின.

“தமிழ் ரிலாக்ஸ்” என்று அவளின் தோள் தொட்டு ஜென் சொல்லிட… கலங்கிய கண்களை சிமிட்டி ஒன்னுமில்லை என்று செய்கை செய்தாள் பூ.

சில நிமிடங்களில் கேட்டிமெளம் ஒலிக்க மந்திரம் முழங்க, பரிதி இளாவின் கழுத்திலும்… பாரி பூவின் கழுத்திலும் மங்கள நாணை பூட்டியிருந்தனர்.

ஐயர் கொடுத்த தாலியை கையில் ஒருவித நடுக்கத்துடன் வாங்கிய பாரி வாங்கி அப்படியே பிடித்திருக்க… “கட்டுப்பா” என்ற தங்கத்தின் குரலில் அவரை அவன் முறைக்க…

எங்கு மணமேடை வரை வந்து தாலி கட்டாமல் விட்டுவிடுவானோ என பயந்த அரசு பாரியின் தோளை தொட… அவரின் கலக்கம் சுமந்த முகத்தின் மொழியை மறுக்க முடியாது… தன் தாய் தந்தையை ஏறிட்டான். அவர்களும் ஒருவித உணர்வு பிடியில் இருக்க… பூவின் பக்கம் கூட திரும்பாது கைகளை மட்டும் கொண்டு சென்று வேகமாக முடிச்சினை போட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

பாரியை காணும் துணிவின்றி தலை கவிழ்ந்தே இருந்த பூ… தன் மார்பில் ஊசலாடும் தாலியை நம்ப முடியாது தலை நிமிர்த்த… அவளால் பாரியின் முதுகைத்தான் வெறிக்க முடிந்தது.

பூ விக்கித்து அமர்ந்திருக்க…

“அவனுக்கு கொஞ்சம் டைம் கொடுப்போம் தமிழ்” என்று அவளோடு சேர்த்து அனைவரையும் பார்வதி தான் தேற்றினார்.

பாரி, பூவை விடுத்து தங்களால் எவ்வித சடங்கையும் செய்திட முடியாதென்று பரிதியும் இளாவும் மறுத்துவிட பெரியவர்களும் அவர்களின் வழியில் ஒப்புக்கொள்ளும்படி ஆனது.

விருந்தினர்கள் அனைவரும் நடப்பது எதுவும் புரியாது திருமணம் முடிந்ததும் செய்ய வேண்டியவற்றை செய்து… விருந்து முடிந்து கிளம்பிட… அடுத்த இரண்டு மணி நேரத்தில் மண்டபம் குடும்பத்தாரை தவிர்த்து காலியாகியிருந்தது.

எஞ்சியிருந்தது வீட்டார் மட்டுமே.

அனைவரும் மேடைக்கு கீழவே அமர்ந்து அடுத்து என்னவென்று பேசிக்கொண்டிருக்க… பாரி மட்டும் அறையில் அமர்ந்து வந்திருப்போர்ர எல்லோரும் எப்போது கலைவரென்று காத்திருந்தான்.

அப்போது அறை வாயிலில் நிழலின் அரவம் உணர்ந்து பார்த்தவன்…

மணக்கோலத்தில் நின்றிருந்த பூவை உருத்து விழித்தான்.

சற்று நேரத்திற்கு முன் தான் கட்டிய தாலி அவளின் கழுத்தில் பளிச்சென்று தெரிய…

அந்நொடி தன் நட்பு மரித்து போனதென்று உள்ளுக்குள் மருகினான்.

“உண்(ங்)குல…” உணவடங்கிய கையோடு தன் முன் நீண்ட கரம் கண்ணில் விரிந்து அவனது மனதை மலையாய் அழுத்தியது.

தன்னை தன் பூவே ஏமாற்றிவிட்ட உணர்வு இதயத்தை ஆக்கிரமிக்க…

ஏற்கனவே தயாராக வைத்திருந்த தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பியவன், அவளை கடந்து செல்ல முற்படுகையில்…

“வேந்தா” என்று விளித்தாள்.

“இன்னொருவாட்டி அப்படி கூப்பிட்ட… நீ கூப்பிட நான் இருக்க மாட்டேன்.” அழுத்தமாகக் கூறினான்.

“இந்த உலகத்திலேயே நான் அதிகம் நம்பினது உன்னைத்தாண்டி” என்றவன்,

அவளின் கண்ணீர் சுமந்த விழிகளை காண சகியாது… கோபம் தலைக்கேற,

“நீ என் பூ இல்லை. அது மட்டும் தான் என் மண்டைக்குள் ஓடுது. நீ தமிழ். எல்லாருக்கும் பிடிச்ச தமிழ். எனக்கு மட்டுமே பிடிச்ச என் பூ இல்லை. அதனால தான் எல்லாருக்கும் பிடிச்ச தமிழா அவங்க சொன்னதுக்கு உடன்பட்டு நான் உன் பூ இல்லைன்னு எனக்கு உணர்த்திட்ட” என்றவன், “ரொம்ப வலிக்குதுடி” என்று தன் நெஞ்சுப்பகுதியை தேய்த்தான்.

அப்போது அவன் கையில் சிக்கிய சங்கிலியை அப்படியே இழுத்து அறுத்து எடுத்தவன், அவளின் முன் தூக்கி பிடித்து காண்பித்தான்.

பூ என்ற எழுத்து இருவருக்கும் இடையில் ஆடிக்கொண்டிருந்தது.

“ட்ரெயினிங்ல கையில கயிறு கட்டக்கூட அனுமதி கிடையாது. அப்போகூட இதை கழுட்ட எனக்கு மனசு வரலடி… ஆனால் இப்போ இது என் கழுத்தை நெறிக்குற மாதிரி இருக்கு” என்று அவளின் கையில் சங்கிலியை வைத்தவன்,

“நீயெப்படிடி சம்மதம் சொன்ன? அது தாண்டி அதிகமா வலிக்குது.”

“என் வாழ் நாள்ல இனி உன்னை நான் பார்க்கவே கூடாது. என்னையவே என் பூவை திட்டவும் அடிக்கவும் வச்சிட்டியேடி” என்றவன் “என் பூவை எனக்கு இல்லாமல் ஆக்கிட்டியே” என்று அவளை வார்த்தையால் அடித்துவிட்டு எல்லோரும் பார்க்க, யாரிடமும் சொல்லாது வேகமாக மண்டபத்தை விட்டு நொடியில் வெளியேறியிருந்தான்.

தடுக்க முயன்ற பரிதியையும்,

“நான் உங்க தம்பின்னா இனியாவது என் விருப்பத்துக்கு மதிப்பு கொடுங்க” என்று தடுத்திருந்தான்.

மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து நின்றது.

பூ தான் அனைவரையும் தேற்றினாள்.

குடும்பத்தார் அனைவரும் மாற்றி மாற்றி பாரிக்கு அழைத்திட… அலைபேசியை அணைத்து போட்டான்.

முகாமிற்கு அழைத்தாலும் பேசிட மறுத்தான்.

பாரியுடன் இணைந்து அவனது மனைவியாகத்தான் சென்னைக்கு அவர்களது வீட்டிற்கு வருவேனென்று இங்கு பாபநாசத்திலேயே பூ தங்கிட பார்வதிக்கு அதிக குற்றவுணர்வாகிப்போனது.

“நாம நல்லது நினைச்சு தான் செய்தோம். கண்டிப்பா நல்லதே நடக்கும்” என்று தற்போது அக்குடும்பத்திற்கே பெரியவர் என்கிற முறையில் அனைவரையும் சரிசெய்து சீரான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியிருந்தார் தங்கம்.

இப்போது தங்கம் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து நன்றாக இருக்கிறார்.

ஐந்து மாதங்கள் ஓடியிருந்தன.

பாரி தன் கோபத்திற்கு பயிற்சியை வடிகாலாக பயன்படுத்தி தன்னை முற்றிலும் அதிலேயே தொலைத்தான். அதன் பலனாக பயிற்சியில் அவன் தான் அனைத்திலும் முதலிடத்தில் இருந்தான்.

அலைபேசி பயன்படுத்துவதையே தவிர்த்திருந்தான். அனைவரிடமும் தன்னைத்தானே விலக்கிக்கொண்டான்.

அன்று காலை நேர பயிற்சிக்கு பாரி தயாராகிக் கொண்டிருக்கும்போது,

“பாரி உன்னை பார்க்க ஆள் வந்திருக்கு. ஆபீஸ் ரூமிலிருந்து தகவல் வந்தது” என்று அவனின் நண்பன் ஒருவன் வந்து சொல்ல…

“பார்க்க முடியாது சொல்லு” என்று சிறிதும் யோசிக்காது சொல்லியிருந்தான்.

பாரியின் அருகில் சென்ற அந்த நண்பன்,

“நீயேன் இப்படி எல்லாரையும் தவிர்க்கிற தெரியல பாரி. ஆனால் இவ்வளவு தூரம் வந்தவங்களை ஒருமுறை போய் பாரேன். எனக்காக” என்றான்.

நண்பனின் பேச்சினை தட்ட முடியாது, பயிற்சி சீருடையில் கிளம்பியவன்…

“நான் அப்படியே ட்ரெய்னிங் கோட் வந்துடுறேன்” என்று அலுவலக அறை நோக்கிச் சென்றான்.

அங்கு, கார்டன் ஏரியாவில் அவர்கள் இருப்பதாக சொல்ல பாரி தன் வேக நடையில் அப்பகுதிக்கு செல்ல பூ அவனுக்காகக் காத்திருந்தாள்.

நிச்சயம் அவன் பூவை எதிர்பார்க்கவில்லை. பரிதியாக இருக்குமென்று நினைத்துதான் வந்தான். பூ என்று தெரிந்திருந்தால் நண்பன் சொல்லியதையும் கேட்டிருக்கமாட்டான்.

அப்படியே திரும்பி செல்ல இரண்டடி வைத்தவனை கண்டுவிட்ட பூ…

“வேந்தா…” என்று அழைத்திட…

திரும்பி வேகமாக அவளின் அருகில் வந்தவன், அவளின் இரு கன்னத்தையும் ஒற்றை கையால் அழுந்த பிடித்தவன்…

“அப்படி கூப்பிடாத. கூப்பிடுற உரிமை உனக்கில்லை” என்று கத்தியவனின் கண்களில் அவன் கட்டிய தாலி விழ…

“ச்சீய்” என்று வேகமாக கைகளை உதறினான்.

“உன்னை பார்க்கவே பிடிக்கலடி. இனி என் முன்னாடி வந்துடாத” என்றவானாக அவளை பேசக்கூட விடாது வேகமாக அங்கிருந்து சென்றிருந்தான்.

அவள் கண்களில் கண்ணீர் வழிய அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அவன் உருவம் புள்ளியாய் தேய்ந்து மறைந்தது.

அன்று அவனுக்காகத் தொடங்கிய அவளின் காத்திருப்பு இன்று வரை தொடர்கிறது.

°காலங்கள் தாண்டி காத்திருப்பேன்.
காதலை ஏந்தி காத்திருப்பேன்.
கனவுகளாய் காத்திருப்பேன்.
கரைந்திடும் முன்னே உன்னை காண்பேனே!°

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
41
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment