அத்தியாயம் 21 :
வீட்டிற்கு வந்த அவி’தான் பரிதிக்கு அழைத்து பூவின் நிலையை சொல்லியிருந்தான். அதனால் தொழிற்சாலையிலிருந்து விரைந்து வந்தவன், பூவின் அறை முன் நின்றான்.
கதவை திறந்த பூ என்னதான் சிரித்தபடி இருந்தாலும், அவளின் அழுகையை அவளது கண்கள் பரிதிக்கு காட்டிக்கொடுத்தது.
பூவின் முகம் அழுகையில் வீங்கி… கண்கள் தடித்து ரத்தமென சிவந்து காட்சியளித்தது. பார்த்ததும் பரிதியால் யூகிக்க முடிந்தது. அவள் அழுதிருக்கிறாள் என்பதை.
ஆனால் அதைப்பற்றி எதுவும் கேட்டிடாது, அவளின் வருகை குறித்து நலம் அறிந்தபடி அறை வாயிலில் நின்று பேசிட… பரிதியை உள்ளழைத்த பூ, அவன் வருவதற்கு ஏதுவாக விலகி நகர்ந்து அவனைத் தொடர்ந்து உள் சென்றாள்.
“நீங்க பேக்டரி போயிட்டிங்க அத்தை சொன்னாங்க… நடுவில் இந்தநேரம் வரமாட்டிங்களே?” அவனின் இந்நேர வருகை குறித்து அறிந்திட வினவினாள்.
அவி சொல்லி வந்தேனென்று சொல்ல முடியாததால்,
“இந்த வாலு பொண்ணை பார்த்து ரொம்ப நாளேச்சே… பார்க்கலாமுன்னு வேலையை விட்டு வந்தால், ஏன் வந்தன்னு கேள்வி கேட்குற நீ?” என்றான்.
அவி சொல்லும் போதே…
“பூவிடம் எதையும் நேரடியாக் கேட்கக்கூடாது. கேட்டா ஃபீல் பண்ணுவா” என்று கூறியதால், அவளின் வருத்தம் எதனால் எனத் தெரிந்தும் கேட்டு ஆறுதல் கூறிட முடியாத நிலையில் அவனது குட்டிம்மாவின் ஓய்ந்த முகத் தோற்றத்தை அவதானித்தபடி இருந்தான்.
“அவ்வளவு பாசமிருந்தா ஸ்டேஷனுக்கு ஓடி வந்து காத்திருக்கணும். என் வேந்தன் மாதிரி” என்ற பூ தன்னுடைய சீண்டலுக்கு அவனிடம் பதிலின்றி போக, பரிதியை தொட்டு… “என்னாச்சு மாமா?” எனக் கேட்டாள்.
‘அவி என்னவோ சொன்னான். இங்க இவள் பேச்சில் அப்படி எதுவும் தெரியலயே’ எனத் தனக்குள் பேசிய பரிதி அவளின் தொடுகையில் மீண்டு…
“நத்திங்டா” என்றான்.
“பாரி சர்ப்ரைஸ் சொன்னான். அத்தோடு என்னை வரக்கூடாது சொல்லிட்டான். நான் இருந்தால் உன்னோட அட்டென்ஷன் முழுசா அவனுக்கு கிடைக்காதாம். என்கிட்டவே போட்டி போடுறான்” என சொல்லியதோடு,
“சர்ப்ரைஸ் எப்படி இருந்தது?” என அவளின் மனநிலையை திசைத் திருப்புவதாக நினைத்துக் கேட்க, அது பூவின் முகத்தை சடுதியில் கலங்கச் செய்தது.
பாரி கொடுத்த ஆச்சர்யத்தோடு அமிர்தா கொடுத்த அதிர்ச்சியும் நினைவில் உதித்த பலன்.
பூவின் வாடிய முகம் கண்டு பரிதி பதறிப்போனான்.
“என்னம்மா?” எனக்கேட்ட பரிதியின் வார்த்தையிலிருந்த கனிவு சட்டென்று கண்ணீரை கொட்டச் செய்தது.
“டேய் குட்டிம்மா…!” என்றவன் அங்கிருந்த கோச்சில் அமர்ந்திருக்க… எழுந்து அவளின் அருகில் வர முற்பட,
பூ அவனுக்கு முன் தரையில் அமர்ந்து அவனது மடியில் தலை கவிழ்த்தாள்.
தன்னுடைய மனதை மறைத்தவள், அமிர்தா காதல் சொல்லியதையும், அதனை பாரி ஏற்றுக்கொண்டதையும் கூறினாள்.
“இது ஏற்கனவே எதிர்பார்த்தது தானடா!”
‘ஆனால் என்னால முடியலையே! உள்ளுக்குள் என்னவோ பண்ணுதே மாமா.’ மனதுக்குள் ஓலமிட்டவள், பரிதியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“அஃப்கோர்ஸ் மாமா. ஆனால் நிஜத்தில் அக்செப்ட் பண்ண முடியல நினைக்கிறேன்” என்று தன்னிடமே தெளிவில்லை என்பதை வார்த்தையில் உணர்த்தினாள்.
பரிதிக்கு விளங்கவில்லை.
அவி கேட்கக்கூடாது என்று சொல்லியதையும் மீறி,
“தமிழ்… நீ பாரியை…” என ஆரம்பித்தவனால் அவ்வார்த்தையை பூவிடம் கேட்கக்கூட முடியவில்லை. கேட்டு பாரியை போல் பூவும் விளக்கம் கொடுத்தால் அது தானே இருவரையும் நம்பாததைப்போல் தோற்றம் கொடுக்குமே எனத் தயங்கி நிறுத்தினான். ஆனால் பூவிற்கு அத்தயக்கம் இல்லை. பாரிக்கு பிறகு அவள் அனைத்தையும் மறக்காது பகிர்ந்துகொள்வது பரிதியிடம் தான். இளா நெருக்கமாக இருந்தாலும், உடன் பிறந்தவள் அக்கா என்கிற முறையில் அவளிடம் ஒரு மரியாதை. அது அனைத்தையும் அவளிடம் சொல்லவிடாது.
அதனால் இச்சூழலிலிருந்து வெளிவர வேண்டுமென்றால் மனதை பரிதியிடம் பகிர வேண்டுமென்றுத் தோன்றியது. தனக்குள்ளிருக்கும் சஞ்சலத்தை அவனிடம் மறையாதுக் கூறினாள். அந்நிலையிலும் தன்னுடைய காதலை உரியவனிடமே சொல்லிடாத போது, பரிதியே ஆகினும் மற்றவர்களிடம் சொல்ல விரும்பவில்லை.
ஆதலால் தன்னுடைய தனதென்ற காதலை தனக்குள்ளே மூடி வைத்தாள்.
“நீங்க நினைக்கிற மாதிரி இல்லை மாமா” என்று மனதை கல்லாக்கிக்கொண்டு, அவன் நினைத்த காதலில்லை என்று அவன் கேட்க நினைத்ததை யூகித்தவளாக அதற்குரிய பதிலை முதலில் கூறினாள்.
பரிதி, வேறென்ன… எதனால் இந்த சோகம், கண்ணீர் என்று வார்த்தையால் கேட்டிடாது பார்வை தாங்கி வினவினான்.
“இதுவரை… இந்த பத்து வருஷத்தில், நான், வேந்தா, நாங்க இதுதான் மாமா. எங்களுக்குள்ள யாரும் வந்ததில்லை. வரவும் நாங்க விட்டதில்லை. நாங்கங்கிறதைவிட வேந்தன் இதுல தெளிவா இருந்தான். யாரவது நடுவில் வந்து எங்களுக்குள்ள இடைவெளி வந்துடக்கூடாதுன்னு.
அவி, ஜென் அந்தவகையில் எங்களை நல்லா புரிஞ்சிக்கிட்ட ஃபிரண்ட்ஸ். நட்பை புரிஞ்சிக்கிற நட்பு கிடைப்பதும் ரொம்பவே அரிது மாமா. எங்க ரெண்டு பேருக்கான ஸ்பேஸ், அவங்க ரெண்டு பேர்க்கிட்டவும் உண்டு. எங்களுக்குண்டான நெருக்கம் அவங்க ரெண்டு பேருக்கும் எப்பவும் சந்தோஷம் தான். அதனால் அவங்க எங்களோட இருந்தாலும் இதுநாள்வரை இப்படி… எனக்கும் பாரிக்கும் நடுவில் யாராவது வந்துடுவாங்களோன்னு தோனினதில்லை. ஆனால் அமிர்தா?” என பெரும் கேள்வியோடு நிறுத்தியவள், பரிதியின் விழிகளை கூர்ந்து நோக்கியவளாக தான் நினைப்பதை பேசினாள்.
“அமிர்தா எங்க வட்டடத்திற்குள் வந்ததே வேந்தனுக்காகத்தான் மாமா. அவனை இம்ப்ரெஸ் செய்யத்தான் என்கிட்ட நெருங்கினாள். இதை வேந்தாகிட்ட நான் சொல்லாததற்கு காரணம்… அவனுக்கும் அவளை பிடிச்சிருக்குன்னு என்கிட்ட சொன்னான்.
அவனுக்கு பிடிச்சது எனக்கும் பிடிச்சதாதான மாமா இருக்கும். வேந்தனுக்காக எல்லாம் செய்றவள், அவனை நல்லா பார்த்துப்பான்னு தான் அவனுடைய லவ்வுக்கு நான் எந்த தடையும் சொல்லல.
ஆனா… ஆனால் மாமா… இப்போ, இப்போ அவளால எங்களுக்குள்ள இடைவெளி வந்திடுமோன்னு பயம். நிச்சயம் வேந்தன் அந்தளவுக்கு விடமாட்டான். இருந்தாலும் ஏதோ பயம். ரொம்ப பயந்து வருது மாமா” என்றவள் சத்தமாகக் கதறிவிட்டாள்.
முதல்முறை பூ இப்படி கதறி காண்கிறான். அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவி ஒன்று சொல்லியிருக்க… பூ ஒன்று சொல்லுகிறாள். அவனால் அவி சொல்லியதை இக்கணம் நம்ப முடியவில்லை. நம்பியிருந்திருக்கலாமோ?
‘ஒருவேளை தமிழின் இத்தகைய பயம் குறித்த கவலை அவிக்கு தமிழும் பாரியை விரும்புகிறாள் என்கிற தோற்றத்தைக் கொடுத்திருக்கலாம். அதனால் அவன் அப்படி தன்னிடம் கூறியிருக்கலாம்’ எனக் கருதியவன், பூவின் தலையை மென்மையாக வருடினான்.
“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. உன் வேந்தனுடைய நட்பில் உனக்கு நம்பிக்கை இல்லையான்னு கேட்கமாட்டேன். ஆனால் எந்த இடத்தில் உன்னுடைய நம்பிக்கை குறையுது எனக்குத் தெரியல” என்றான்.
“இதில் நம்பிக்கை எங்கிருந்து வந்துச்சு மாமா. என்னைவிட அவன் எங்களுடைய பிரண்ட்ஷிப்பை விட்டுத்தரமாட்டான்னு அவ்வளவு நம்பிக்கை எனக்கிருக்கு. சும்மா என்னை சீண்டாதிங்க” என்று அழுகையை நிறுத்திவிட்டு பரிதியிடம் பாய்ந்தாள்.
பரிதிக்கும் இதுதானே வேண்டும். அழும் பூவை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவளை சீண்டி சுயம் மீட்டான்.
“இந்த வாலுப்பொண்ணு அதிரடி பேச்சுதான் நல்லாயிருக்கு. அதைவிட்டு அழறதெல்லாம் உன் பழக்கமில்லையே குட்டிம்மா. நடக்கும்போது பார்த்துக்கலாம். ஃபிரியா விடு” என்றான் பரிதி.
பூவுக்கும் அதுதான் தோன்றியது.
‘இப்படி அழுவதெல்லாம் தன்னுடைய பழக்கமில்லையே. வேந்தன் விஷயத்தில் மட்டும் நான் ஏன் இப்படி இருக்கேன்?’ என்றவளை இதயத்தில் தைய்த்தது அவளின் காதல்.
காதலின் வலி இன்னும் இன்னும் அழச்செய்திடும் என்று அக்கணம் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இனி ஒவ்வொரு நொடியும் காதலின் வலியை வேந்தனின் வழி உணரவிருக்கின்றாள்.
பரிதியிடம் பேசியது மனதை சற்று அமைதிப்படுத்தியிருக்க… தன்னுடைய வருத்தத்தை தனக்குள் மறைக்க முடிவு செய்தவள், அதில் வெற்றியும் பெற்றாள்.
இரண்டு நாட்கள் முடித்து கல்லூரி விடுதி வந்தவள் முழுவதும் வேறொரு பூவாக மாறியிருந்தாள்.
லீலாவுடன் அதிகம் பேசினாள். சிரித்தாள். படிப்பில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள். பாரியிடம் அலைபாயும் மனதை மெல்ல மெல்ல கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டாள். அதற்கு பெரிதும் உதவியாக இருந்தது லீலாவின் நட்பு. எதையும் பாரியிடம் பகிர்ந்துகொள்பவள், அவனிடம் பகிர முடியாத தன்னுடைய காதல் பக்கத்தை லீலாவிடம் சொல்லி தன் மனதை இலகுவாக்கிக்கொண்டாள். பாரியிடம் எப்போதும்போல் பேசினாள். பழகினாள். ஆனால் அனைத்தும் அமிர்தாவின் முன்னிலையில் தவிர்த்தவளாக.
கேட்கும் வேந்தனிடம் “தனக்கானவனுக்கு தான் தான் முதல் பிரையாரிட்டியா இருக்கணுங்கிறது எல்லா பெண்களோட ஆசை வேந்தா. உன்னை எனக்குத் தெரியும். அமிர்தாவுக்கு இதெல்லாம் பழகுறவரை அவகிட்ட நெருக்கமா இரு” என்று தன்னுடைய விலகளுக்கு தானே விளக்கம் கொடுத்து அவனிலிருந்து தனித்து நின்றாள்.
அமிர்தா பாரியை நெருங்க நெருங்க… பூ தன்னை அவனிலிருந்து தள்ளி வைக்கத் துவங்கியிருந்தாள்.
நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் அவிக்கும் ஜென்னுக்கும் பூவிடம் எதையும் கேட்க முடியவில்லை என்பதைவிட அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு அவள் வழங்கவே இல்லை.
அப்படி ஒருநாள் பூ தனித்திருக்கும் போது…
“பாரியை நீ அமிர்தாவுக்கே பட்டாபோட்டு கொடுத்திட்டியா தமிழ்?” அத்தனை கோபம் அவனிடத்தில்.
“அவனோட பிரண்ட்ஷிப்பில் நான் தெளிவா இருக்கேன் அவி” என்ற அவளின் பதிலில் அவி அசந்துபோனான். அதற்குமேல் என்ன கேட்பதென்று தெரியாது வாயடைத்துப்போனான்.
இந்தப்பக்கம் பூ பாரியின் கவனம் தன்னைவிட அமிர்தா மீது அதிகமாக இருக்க வேண்டுமென்று நினைத்து அவனுக்காக எல்லாம் செய்திட… அந்தப்பக்கம் அமிர்தா, பூவின் பக்கமே அவனது பார்வை சென்றிடக் கூடாதென பாரியை தன்னிடமே இழுக்க முயற்சித்தாள்.
ஆனால் அவன் எப்போதும் பூவின் வேந்தனென்று அமிர்தாவிற்கு சிறுசிறு செயல்களிலும் காண்பித்தான்.
அமிர்தா பாரி பாரி என்றிட… அவனின் பேச்சு முழுவதும் பூவைப்பற்றியே இருந்தது.
முன்னர் எப்படியிருந்தானோ அதில் சிறிதளவும் அமிர்தாவால் மாற்றம் கொண்டுவர முடியவில்லை. ஆனால் பாரி காதலிலும் நட்பிலும் மிக மிகத் தெளிவாக இருந்தான்.
அதனை அமிர்தா தான் புரிந்துகொள்ள முயலவில்லை.
பாரி அமிர்தாவின் அருகில் அமராதது அவளுக்கு மிகுந்த கோபத்தை கொடுக்கிறது. அதைவிட தான் அவனது பக்கத்தில் அமர்வது அவளை நிலையிழக்கச் செய்கிறது என்பதை புரிந்துகொண்ட பூ அவிக்கும் ஜென்னுக்கும் இடையில் அமரத் துவங்கினாள்.
பூவிற்கு புரியும்போது பாரிக்கு புரியாதா?
காதலை ஏற்பதற்கு முன்பு கவனிக்கத் தவறிய அனைத்தையும் தற்போது கவனிக்கத் தொடங்கியிருந்தான்.
அவியை நகர்த்திவிட்டு அங்கு பூவை அமர வைத்தான்.
அமிர்தாவிற்காக பார்த்து பூ தன்னை விலக்குவதாக உணர்ந்த பாரி பூவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டான்.
“அமிர்தாவைவிட நீ எனக்கு ரொம்ப முக்கியம். அது உனக்கும் தெரியும். விட்டுக்கொடுக்கிற நினைப்பிருந்தால் நான் செத்…”
வேகமாக பாரியின் வாயினை மூடிய பூ,
“அமிர்தாவுக்கும் சில ஆசைகள் இருக்கும் வேந்தா, புரிஞ்சிக்கோ!” என்றாள்.
“எனக்கு எதுவும் புரிய வேண்டாம். உன்னை விட்டுக்கொடுத்துதான் எனக்கு ஒன்னு வேணும்னா அது எனக்கு எப்பவுமே வேணாம்” என்று அழுத்தமாக சொல்லிட… பூவிற்குத்தான் என்னவோ போலானது.
தங்களின் நெருக்கமே அமிர்தாவின் இயல்பை தொலைக்க வைக்கிறது என்பதை பூவால் அவனிடம் சொல்ல முடியவில்லை.
‘நடப்பது நடக்கட்டும். எதுவாக இருந்தாலும் பாரி பார்த்துப்பான்’ என்று அதன்பின்னர் பாரியிடமிருந்து பூ விலக நினைக்கவில்லை.
ஆனால் மொத்தமாக பிரிந்து செல்லுமாறு அமிர்தா செய்திருந்தாள். இறுதியில் பூ நினைத்ததுபோல் அவர்களின் பிரிவு அமிர்தாவால் தான் நேர்ந்தது.
என்னதான் பாரி காதலித்தாலும், சிறுவயது முதல் ஒரு பெண்ணின் நெருங்கிய நட்பில் இருந்தவனால் மற்ற ஆண்களை போல் காதலியாக இருந்தாலும் அமிர்தாவிடம் வேறு வகையில் நெருக்கம் காண்பிக்க முடியவில்லை. அதற்காகவே அவளிடம் பழகவே இல்லையென்று சொல்லிவிட முடியாது. பூவிடம் காட்டும் அன்பு அக்கறை அனைத்தையும் காதலியாகிய அமிர்தாவிடமும் காண்பித்தான். ஆனால் அதனை ஏனோ அமிர்தாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
பூவைவிட அவனின் காதலி தனக்கு அவனிடம் முக்கியத்துவம் இல்லையா என்கிற பொறாமை அமிர்தாவை பாரியின் உண்மையான காதலை புரிந்துகொள்ள விடவில்லை. அமிர்தாவும் உணர்ந்துகொள்ள முயலவில்லை. அவளின் கண்ணோட்டம் அப்பவும் இப்பவும், பாரி காட்டும் அன்பும் அக்கறையும் பூவிடம் அதிகமா அல்லது தன்னிடம் அதிகமா, அவனுக்கு தான் முதலிடமா அல்லது பூ முதலிடமா என்ற ஒப்பீடு செய்வதிலேயே இருந்திட… பாரியின் காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம் அவளுக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் பாரியை எதைப்பார்த்து காதலித்தாளோ தற்போது அதுவே அவளின் கண்களுக்குத் தவறாகப்பட்டது.
முதன் முதலாக பாரியை பார்க்கும்போது மனதில் மெல்லிய சலனம் ஏற்பட்டபோதும்…
பாரி பூவின் மீது காட்டும் அக்கறையான அன்பில் தான் அவனை காதலிக்கவே ஆரம்பித்தாள். இப்போது அதுவே அவளுக்கு பிடிக்கவில்லை.
முன்பு அவனின் காதலுக்காக அதனை மறைத்து வைத்திருந்தவள், அவன் காதலை ஏற்றதும் வெளிப்படடையாக காண்பிக்க ஆரம்பித்தாள்.
அதன் விளைவாக, முன்பு போல் அமிர்தா பூவிடம் இல்லை என்பதை ஒரு சில நாட்களிலேயே பாரி கண்டுகொண்டான். ஆனால் அதற்காகவெல்லாம் காதல் இல்லை என்று சொல்ல அவன் நினைக்கவில்லை. அமிர்தாவிற்கு எப்படியோ, ஆனால் பாரி அவளை பிடித்து தான் காதலித்தான். அதனால் பொறுமையாக இருக்கவே முயற்சித்தான்.
அவனது பொறுமையும் ஒரு எல்லைக்குள் தான் என்பதை அவனே அறியவில்லை. அவனது பொறுமை கரை கடக்கும் வேலை… அமிர்தா என்கிற அலை பாறையில் மோதி சிதறும் நீர்த்திவலைகளாக தெரிக்கவிருக்கின்றது.
பாரிக்கு பூ இயல்பாக செய்யும் ஒன்றை அமிர்தா அவள் செய்திடக்கூடாது என்பதற்கான போட்டிக்காகவே செய்தாள். அதனை பாரி உணராமல் இல்லை.
அவனை பொறுத்தவரை வாழ்வில் காதல் என்பது ஒருமுறை மட்டுமே. அது கோணலாக இருந்தாலும் சரி செய்திடவே முயன்றான். ஏனோ அமிர்தாவால் அவனது வரையறைக்குள் இருந்திட முடியவில்லை.
காதலித்த பிறகும் கூட அமிர்தாவால் பாரியின் இருசக்கர வாகனத்தில் அமர முடியவில்லை.
ஒருமுறை அவள் வெளிப்படையாகக் கேட்டும் பாரி மறுத்துவிட்டான்.
“என்னிடம் சிலது எப்பவும் பூவுக்கு மட்டும் தான். திருமணத்திற்கு பிறகு மாறலாம்” என்று.
அதில் மிகவும் அமிர்தா அடி வாங்கினாள்.
மற்றவர்கள் கண்களுக்கு தங்களது காதல் தவறாக சித்தரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதினாலேயே பாரி சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தான். அவை யாவும் அமிர்தாவுக்கு பூவின் நட்பினாலேயே என்று தான் எண்ண வைத்தது.
அன்று பூ கல்லூரிக்கு வரவில்லை. போன் செய்தாலும் அவளிடம் பதிலில்லை.
அமிர்தா தனக்கு நெருக்கமான ஒருவரை சந்திக்க வைப்பதாகக் கூறி பாரியுடன் வெளியே செல்ல திட்டமிட்டிருந்தாள். உண்மையில் அவள் சந்திக்க வைக்க நினைத்தது ரித்தேஷை.
ராயப்பனுக்கு ரித்தேஷ் என்றால் அத்தனை பிடித்தம். அவன் மூலம் தன்னுடைய காதலை ராயப்பனிடம் கொண்டுசெல்ல நினைத்து அந்த ஏற்பாட்டை செய்தாள்.
ரித்தேஷ் அப்போதே தந்தையுடன் அரசியலில் இறங்கியிருந்தான். அதனால் அவன் எப்போதும் படு பிஸியாக சுற்றிக்கொண்டிருக்க, அவனிடம் நேரம் வாங்குவதே அவளுக்கு குதிரை கொம்பாக இருந்து, இன்று பாரியுடனான சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டிருந்தான்.
அதனால் கல்லூரி வந்ததும் பாரியிடம் சொல்லியிருந்தாள்.
அவனோ,
“பூ வந்ததும் சொல்லிட்டு கிளம்பலாம்” என்றிட பூ வரவேயில்லை.
“அவி சொல்லிப்பான் நாம கிளம்பலாம். அவள் எப்போ வந்து நாம போறது. நேரமாகுது” என்று அமிர்தா படுத்தி வைத்தாள்.
ஆனால் பூவிடம் சொல்லாமல் செல்ல ஏனோ பாரியின் மனம் இடமளிக்கவில்லை. எப்போதும் எதையும் பூவிடம் சொல்லி செய்தே பழகிவிட்டான் அல்லவா!
பூ அழைப்பை ஏற்கவில்லை என்றதும் பாரிக்கு தன்னைப்போல் பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது.
பொறுத்து இருந்தவன், அதற்கு மேல் முடியாது லீலாவின் வகுப்பிற்கு அவியுடன் சென்றான்.
பாரியை பார்த்ததும் லீலாவிற்கு கைகள் உதறத் துவங்கின.
பூ விடயத்தை பாரியிடம் சொல்லிவிடக் கூடாதென்று அத்தனை முறை சொல்லியிருக்க… இப்போது பாரியை கண்டதும் எங்கே உளறிவிடுவோமோ என்று அவ்வளவு பயந்தாள்.
“என்ன பாரி. எங்க கிளாஸ் பக்கம் காத்து வீசுது” என்று அந்த வகுப்பில் ஒரு மாணவன் பாரியிடம் கேட்டிட… அவனோ லீலாவை தேடினான்.
“லீலா எங்க?”
“இங்கதான இருந்தாள்” என்ற மாணவன் அவளின் இடத்தை பார்க்க, அவளோ பெஞ்சிற்கு கீழ் குனிந்திருந்தாள்.
“இதே கீழ குனிந்திருக்கா” என்று அவன் பாரியிடம் சொல்ல… அப்போதுதான் பாரியை கவனித்தது போல் எழும்பியவள்,
“போட்டாக் குடுக்குற பக்கி” என்று காட்டிக்கொடுத்திட்ட அந்த மாணவனை திட்டிக்கொண்டே பாரியின் அருகில் வந்தாள்.
“அது பேனா கீழே விழுந்துடுச்சு” என்று அவள் சொல்ல… அதை கண்டுகொள்ளாது “பூ எங்க?” எனக் கேட்டிருந்தான்.
என்ன சொல்வதென்று திருத்திருத்த லீலா… அவியையும் பாரியையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.
“சொல்லு லீ. இன்னும் கொஞ்ச நேரமானா இவனை கன்ட்ரோல் பண்ண முடியாது. இப்போவே பூவைப்பற்றி ஒண்ணும் தெரியலன்னு குதிக்க ஆரம்பிச்சிட்டான்” என்றான் அவி.
“பூவா… என்னோடதான் காலேஜ் வந்தாள். கிளாஸ் வரலையா?” என்று தனக்கும் தெரியாது என்பதைப்போல் லீலா சமாளிக்க நினைக்க…
‘உன்னை நான் கண்டு கொண்டேன். பொய் சொல்ல வேண்டாம்’ என்பதைப்போல் பார்த்து வைத்தான் பாரி வேந்தன்.
உண்மையில் பாரியின் பார்வையில் லீலாவுக்கு உதறல் எடுத்தது. அதனை மறைத்துக்கொண்டு அவள் சொல்லியதை அவன் நம்பவில்லை என்பது அவனது அழுத்தமான இறுகிய முக பாவனையே காட்டியது.
‘சொன்னா அவள் திட்டுவாள். சொல்லலைன்னா இவன் அடிச்சிடுவான் போலயே.’ மனதிற்குள் நொந்து போனாள் லீலா.
லீலா அமைதியாக நின்றிருப்பதிலேயே அவள் மறைக்கின்றாள் என்பது அவிக்கு கூட புரிந்தது.
“வா லீலா அங்க மரத்துகிட்ட போகலாம்.”
அவள் சொல்லத் தயங்குகிறாள். பாரி சொல்லாது விடமாட்டான். வகுப்பில் அனைவரின் முன்பும் தாங்கள் காட்சிப்பொருளாக வேண்டாமென்று நினைத்த அவி இருவரையும் அழைத்துக்கொண்டு சரக்கொன்றை மரத்திடம் வந்தான். அங்கு ஏற்கனவே ஜென்னும், அமிர்தாவும் அமர்ந்திருந்தனர்.
“இப்போ சொல்லு லீலா.” அவி தான் கேட்டிருந்தான்.
இப்போதும் பாரியிடம் நீ சொல்லித்தான் ஆக வேண்டுமென்கிற அழுத்தமான பார்வை மட்டுமே.
லீலா இவ்வளவு தயங்கும்போதே பூ சொல்லக்கூடாதென சொல்லி வைத்திருக்கிறாள் என்பது பாரிக்கு புரிந்தது. அதனாலே அவளாக சொல்லட்டுமென்று பார்வையாலேயே வினவிக்கொண்டிருந்தான்.
அமிர்தாவிற்கு என்னவென்றெல்லாம் விளங்கவில்லை. ‘இப்போது கிளம்பினால் தான் ரித்தேஷை சரியான நேரத்திற்கு பார்க்க முடியும்’ என்று நினைத்தவள் பாரியிடம் அதனை சொல்லவும் செய்தாள்.
அத்தோடு,
“பூவை வந்து பார்த்துக்கலாம் பாரி” என்று சேர்த்து சொல்ல… அவ்வளவு தான் இருக்கும் மொத்த கோபத்தையும் அவளிடம் காட்டிவிட்டான்.
“உனக்கு வேணும்னா நீ போ. எனக்கு என் பூ தான் பர்ஸ்ட்.” விட்டால் அடித்திருப்பான் போல்.
பூ தன்னிடமே மறைக்கின்றாள் என்றால் விடயம் பெரிதென்று யூகித்தவனுக்கு, ‘அத்தகைய பெரிய விடயத்தை பூ தன்னிடம் சொல்ல வேண்டாமென்று வேறு சொல்லி வைத்திருக்கிறாளே’ என்று உள்ளுக்குள் கனன்ற கோபம் அது. அமிர்தா அரண்டு தான் போனாள்.
“காம் டவுன் பாரி.” அவியும் ஜென்னும் அவனின் இருபுறமும் கையை பிடித்தவாறு நின்றுவிட்டனர்.
“அது… பாரி…” லீலாவிற்கு சொல்லவே அவ்வளவு தயக்கமாக இருந்தது.
பூ சாதாரணமாக பாரியிடம் சொல்லக்கூடாது என்றால் அதனை பொருட்படுத்தாது சொல்லியிருப்பாள். ஆனால் பூவோ, ‘இது அவனுக்குத் தெரிஞ்சா கோவத்தில் ஏதும் செய்வான் அது இன்னும் ப்ராப்ளம் ஆகும்’ என்று காரணமும் சொல்லியிருக்க அதனை லீலாவால் மீற முடியவில்லை.
இம்முறை அவிக்கே சற்று கலக்கமாக இருந்தது.
“நீ சொல்லாம தவிர்ப்பதை பார்த்தாதான் பயமா இருக்கு லீ” என்றான் அவி.
“சொல்ல வேண்டாம் லீ. நீ போ” என்ற பாரி பின் தலையை தடவியவாறு மரத்தின் மேடையில் அமர்ந்தான்.
“என்ன தான் பிரச்சனை லீ. பூவுக்கு சின்னதா எதுவும்னாலே அவன் ரொம்ப பண்ணுவான். இப்போ நீ வேற ஓவர் பில்டப் கொடுத்திட்டு இருக்க” என்று ஜென்னும் கோபத்தைக் காட்டினாள்.
“தமிழ் சொல்லக்கூடாதுன்னு…”
“இட்ஸ் ஓகே லீ. பூ எனக்குத் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறாள் அப்படின்னா எனக்கும் அது தெரிய வேண்டாம்” என்று லீலாவின் பேச்சை தடை செய்த பாரி, “பூ ஓகே தான! அவளுக்கு ஒன்னுமில்லல?” என்று பூவின் நலன் மட்டும் தெரிந்தால் போதுமென்று வினவினான்.
“ஷீ இஸ் நாட் ஓகே பாரி. பட் நார்மலா இருக்க மாதிரி காட்டிக்கிறாள்.”
“ஹோ.”
அதன் பின்னர் அங்கு பலத்த அமைதி.
“நான் ஹாஸ்டல் போய் பார்த்து வரவா பாரி.” ஜென் கேட்டதற்கும் வேண்டாமென்று சொல்லிவிட்டான்.
பாரியின் வருத்தம் லீலாவை கவலைக்குள்ளாக்கியது.
“தமிழுக்கு உன்கிட்ட மறைக்கணும் நோக்கமில்லை பாரி. நீ கோவத்தில் எதாவது செய்துடுவியோ, அதனால் உனக்கேதும் ப்ராப்ளம் வரும் அப்படின்னு தான்…” என்று லீலா சொல்லாமல் நிறுத்த,
“ஹேய் லீ… என் பூவைப்பற்றி எனக்குத் தெரியும்” என்றவனின் இதழில் வருத்தமான மென்னகை.
“அப்புறம் என்ன பாரி. அதான் அவளுக்கு ஒண்ணுமில்லையே, நாம கிளம்பலாமா?”
பாரி பார்த்த பார்வையில் அமிர்தாவின் உடலில் அப்பட்டமான நடுக்கம்.
“இப்போ எதுக்கு இப்படி முறைக்கிற பாரி. எவ்வளவு கஷ்டப்பட்டு ரித்தேஷை ஒத்துக்க வச்சிருக்கேன் தெரியுமா?” பாரியின் பார்வையில் தோன்றிய பயத்தை மறைத்தவளாக அவனிடம் தன்னிலைக் கூறினாள்.
“இப்போ இதுக்கு அவசரமென்ன அமிர்தா? இன்னும் நம்ம ஸ்டடிஸ் கம்ப்ளீட் பண்ணல. அதுக்குள்ள வீட்டில் சொல்லணும் என்ன அவசியம்.” பாரி சரியாகத்தான் கேட்டான். நிதானமாக. ஆனால் அமிர்தாவிற்கு இவ்விடயத்தில் அவனின் பொறுமை கோபத்தைத்தான் உண்டாக்கியது.
“அப்போ நம்ம லவ் உனக்கு இரண்டாம் பட்சமா பாரி?” அமிர்தா.
சூழல் திசை மாறுவதை உணர்ந்த அவி, “இப்போ இந்தப்பேச்சு எதுக்கு அமிர்தா?” எனக் கேட்டான்.
“நான் உன்கிட்ட கேட்கலை. அவன்கிட்ட… என்னை லவ் பன்றானே அவன்கிட்ட கேட்கிறேன்” என்றாள் விரல் சுட்டி.
“இப்போ எதுக்கு இவ்வளவு சத்தமா கத்தி பேசுற அமிர்தா. பொறுமையா பேசு.” அமிர்தாவின் சத்தமான பேச்சில் அங்கிருந்த ஒருசில மாணவர்கள் அவர்களை பார்க்க தன்மையாகவே அவளிடம் பேச முயன்றான் பாரி.
“இப்போ நான் கத்துறங்கிறது விஷயமில்ல பாரி. நான் கேட்டதுக்கு பதில்” என்றாள்.
“நான் எப்போ அப்படி சொன்னேன் அமிர்தா.” அலட்டல் இல்லாத பதில் அவனிடம்.
“சொன்னதில்லை. ஆனால், ஒவ்வொரு சின்ன விஷயத்தில் கூட நான் உனக்கு இரண்டாம் பட்சம்ன்னு எனக்கு காட்டிட்டே இருக்க” என்றாள். ஆவேசமாக.
“காம் டவுன் அமிர்தா.” ஜென் அமிர்தாவின் அருகில் சென்று அவளை அமைதிபடுத்த முயற்சித்தாள்.
தன்னை பிடித்த ஜென்னின் கையை வேகமாக உதறினாள் அமிர்தா.
“நீ பூவோட உன்னை கம்பேர் பண்ணாத அமிர்தா.”
“ஏன்? ஏன்? ஏன் பண்ணக்கூடாது?”
“பூ தான் எனக்கு பர்ஸ்ட். என் அம்மாவே பூவுக்கு அடுத்து தான். அதனால் நீ கம்பேர் பண்ணுற கேட்டகிரியில் பூ வரமாட்டாள்.” சற்றும் அசராது பதில் வழங்கினான்.
அவனின் பதிலில் அமிர்தா தான் ஆடிப்போனாள்.
‘அவசரப்பட்டுவிட்டோமோ?’ வார்த்தைகளை சிதறவிட்டு சிந்தித்தாள்.
‘வாயை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டாள்.’ அங்கிருந்த மற்ற மூவரால் இதனை நினையாது இருக்க முடியவில்லை.
அப்போது பையில் வைபிரேட் மோடில் வைக்கப்பட்டிருந்த அவனது அலைபேசி விடாது ஒலிக்க… பையின் அதிர்வில் எடுத்து பார்த்தான் பாரி.
“பாரி எங்கயிருக்க?” பரிதி கேட்டான்.
“டிப்பார்ட்மெண்ட்டில் தான் பரிதிண்ணா.”
“ஹாஸ்டல் பக்கம் வாடா. நான் வந்திருக்கேன்” என்று பரிதி வைத்ததும் மின்னலென விரைந்திருந்தான்.
அவனின் வேகம் கண்டு, என்னவோ ஏதோவென்று நண்பர்களும் அவன் பின்னால் சென்றனர்.
அனைவரையும் ஒன்றாக பார்த்த பரிதி…
“என்னடா எல்லோரும் வந்துட்டிங்க? கிளாஸ் இல்லையா?” என்க,
“பூவுக்கு என்ன? நீங்க ஏன் வந்திருக்கீங்க?” என்று படப்படத்தான் பாரி.
“வார்டன் கால் பண்ணாங்கடா. பூ நேத்து நைட்ல இருந்தே மெஸ்சுக்கு வரலையாம். இன்னைக்கு காலேஜும் இன்பார்ம் பண்ணாம லீவ் போட்டிருக்காளாம். வந்து என்னன்னு பார்க்க சொன்னாங்க” என்றான்.
பாரி லீலாவைத் தான் பார்த்தான்.
“சாரி பாரி. நான் எவ்வளவோ கம்பெல் பண்ண. அவளை சாப்பிட வைக்க முடியல. மார்னிங் நானும் கூடவே இருக்கேன் சொன்னேன். ஆனால் என்னை ஏதேதோ பேசி காலேஜ் அனுப்பிட்டாள்” என்று இறங்கிய குரலில் கூறினாள் லீலா.
“சரிடா, வெயிட் பண்ணு. நான் வார்டன் பார்த்திட்டு வர்றேன்” என்று பரிதி விடுதி அலுவலக அறைக்குச் சென்றான்.
“நான் பூவை கூட்டிட்டு வர்றேன்” என்று லீலா தங்கள் அறை நோக்கி விரைந்தாள்.
“என்னவா இருக்கும் பாரி?”
“தெரியல அவி. இப்போலாம் நைட் பூ என்னோட கால் பேசுறதே இல்லை. பேசியிருந்தால் எப்படியும் என்னன்னு தெரிஞ்சிருப்பேன்” என்ற பாரியின் வார்த்தை அவிக்காக இருந்தாலும், பார்வை என்னவோ அமிர்தாவிடம் தான் நிலைக்கவிட்டிருந்தான்.
பின்னே அமிர்தா தான் அவர்கள் இரவு நேர பேச்சிற்கு தடையாக இருந்தாளே. பூ அழைக்கும் நேரம் தான் வேண்டுமென்றே அழைப்பாள். பாரி எடுக்காது பூவிடமே பேசிக்கொண்டிருந்தால், பூவிற்கு அழைத்து விடுவாள். அதிலேயே புரிந்துக்கொள்ளும் பூ, பாரியை அமிர்தாவிடம் பேச சொல்லி இணைப்பை வைத்திடுவாள். இதுவே தொடர்கதையாக, பூ இரவு நேரம் பாரியை அழைப்பதையே தவிர்த்துவிட்டாள். பாரியே அழைத்தாலும் மறுத்துவிடுவாள்.
“இவள் ஏண்டா இப்படி பண்ணுறாள்?” கேட்ட ஜென்னிற்கு அவியிடம் பதிலில்லை. தெரிந்தால் தானே அவனும் சொல்வான்.
லீலா அறைக்குள் செல்லும் போது, பூ போர்வைக்குள் சுருண்டிருந்தாள்.
“தமிழ்… பரிதிண்ணா வந்திருக்காங்க. இன்னும் என்ன தூங்குற. வார்டன் வர சொல்லியிருப்பாங்க போல… எழுந்திரு. இப்போ உன்னைக் கூப்பிட ஆள் வரும்” என்று சொல்லிக்கொண்டே லீலா பூவை தூக்க முயற்சிக்க… கையில் உணர்ந்த சூட்டில்,
“காய்ச்சலா தமிழ்” என்று பதறினாள்.
“நேத்தே சொன்னேன். பாரிகிட்ட சொல்லு, வீட்டுக்கு போய் ரெண்டு நாள் இருந்துட்டு வான்னு, இப்போ பாரு காய்ச்சல் வச்சிடுச்சு. பாரிக்கு மட்டும் தெரிஞ்சுது அவனுக்கு இருக்கு. எவ்வளவு தைரியம் இருந்தால் அப்படி நடந்திருப்பான்” என்று புலம்பியபடி தமிழை எழுப்பி உட்கார வைத்த லீலா, குடிக்க தண்ணீர் கொடுத்து முகத்தை துணியால் துடைத்து விட்டாள்.
அந்நேரம் சரியாக ஒரு பெண் வந்து வார்டன் அழைப்பதாக சொல்லிவிட்டுச் செல்ல… நடக்க முடியாது சோர்வடைந்த பூவை லீலா தான் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்.
பூவை அந்நிலையில் கண்டதும் பரிதி வேகமாக ஓடி அவளைத் தாங்கிக்கொண்டான்.
லீலாவை பார்த்த வார்டன்…
“நீ டே காலேஜ் தானே! கிளாஸ் போகலை?” என்று வினவினார்.
“ப்ரீ ஹவர் மேம்” என்ற லீலா வெளியே வந்துவிட்டாள்.
“எப்போதிலிருந்து பீவர் தெரியலை மிஸ்டர்.பரிதி. ஒன் ஹவர் முன்னாடி ரவுண்ட்ஸ் போனப்போ தான் கவனித்தேன். பீவர் அதிகமா இருக்கவும் தான், கார்டியனான உங்க அம்மாவுக்கு கால் செய்தேன். இல்லைன்னா இங்க காலேஜ் ஹெல்ப் செண்டரிலே காட்டியிருப்பேன்” என்றார்.
“இட்ஸ் ஓகே மேம்” என்ற பரிதி…
“நான் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாமா மேம்?” எனக் கேட்டான்.
அவன் முன் ஒரு ரிஜிஸ்டரை வைத்த வார்டன்,
“இதில் சைன் பண்ணிட்டு கூட்டிப்போங்க. பீவர் சரியானதும் கொண்டு வந்து விட்டால் போதும்” என்றார்.
பூ பருத்தியிலான பேண்ட், சட்டை வகை இரவு உடை உடுத்தியிருந்தாள். அதனை கவனித்த பரிதி,
“ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வரியாடா?” என்றபடி பூவை மெதுவாக வார்டர்ன் அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தான்.
அவன் தோளின் மீதே சாய்ந்தவள்,
“முடியும்னு தோணல மாமா” என்றிட, வெளியவே நின்றிருந்த லீலாவிடம் பிளாங்கெட் ஒன்றை எடுத்துவரக் கூறியவன், அவள் கொண்டு வந்ததும் பூவை சுற்றி போர்த்தி கூட்டிச்சென்றான்.
அவர்களை கண்டதும் பாரி வேகமாக ஓடிச்சென்று பூவை தன் தோளில் தாங்கிக்கொண்டான்.
“இவன் ஏன் அவி தமிழ் விஷயத்தில் இவ்வளவு சென்சிட்டிவ்வா இருக்கான்.” பார்த்திருந்த ஜென் அவியிடம் கேட்க,
“அவன் தமிழோட பிரண்ட்ஷிப்புக்கு அடிக்ட் ஆகிட்டான் ஜென்” என்றான் அவி.
“பட் அவங்களை பார்த்தால் லைட்டா ஜெலஸ் ஆவுதுல?” கேட்ட ஜென்னிடம் சுத்தமாக பொறாமை இல்லை.
“அப்படியா?” என்று அவி பார்த்த பார்வையில் இருவருக்குமே புன்னகை அரும்பியது.
“அவங்க பிரண்ட்ஷிப்பை நாம நம்ம லவ்வால் பீட் பண்ணுவோம்” என்றிட, அவனின் தலையில் கொட்டினாள் ஜென்.
பாரி பூவை காரில் அமர வைத்ததும்… அவளின் அருகில் சென்று அவி மற்றும் ஜென் என்னவென்று விசாரிக்க… திடீரென காய்ச்சல் என்று மட்டும் பதில் சொல்லியவள், பாரியை நேருக்கு நேர் பார்த்திட முடியாது இருக்கையின் பின்னால் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.
“நீயும் வரியா பாரி” என பரிதி வினவ,
“பைக் இருக்கு பரிதிண்ணா. நான் பின்னாலே வர்றேன்” என்றான்.
பரிதி காரினை கிளப்பிக்கொண்டு சென்றதும்…
பார்க்கிங் நோக்கி அவசரமாக பாரி நகர்ந்திட, அவனது கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள் அமிர்தா.
இப்போ என்ன என்பதைப்போல் பாரி பார்த்து வைக்க…
“அதான் அவளோட உங்கண்ணன் இருக்காரே. பார்த்துப்பார். நாம ரித்தேஷை பார்க்க போகலாம்” என்று அடம் பிடித்தாள்.
உடன் இருந்த லீலாவுக்குமே அமிர்தாவின் பேச்சும் செய்கையும் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அமிர்தாவிடம் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் அவை வீண் என்று நினைத்த பாரி… எதுவும் சொல்லாது, தன்னுடைய கையை பிடித்திருந்த அவளின் கையை தானே எடுத்துவிட்டவன்…
“புரிஞ்சிக்க முடிஞ்சா புரிஞ்சிக்கோ அமிர்தா” என சொல்லி முன்னே நடந்தான்.
“அவன் தனியா போக வேண்டாம் அவி” என ஜென் சொல்லிட, அவிக்கும் சரியெனப்பட அவனும் பார்க்கிங் ஏரியாவுக்கு ஓடி வந்தான்.
அவி அங்கு வந்த சமயம்…
பாரி அவர்களது சீனியர் மாதேஷை அடி வெளுத்துக் கொண்டிருந்தான். அது வகுப்பு நேரம் என்பதாலும், கல்லூரி வளாகத்தின் ஓரத்தில் ஒதுக்கு புறமாகவும் பார்க்கிங் இருந்ததால் இக்காட்சி மற்றவர் கண்களில் படவில்லை.
வேகமாக ஓடிய அவி பாரியை தடுத்து பிடிக்கும் முன்னர்… மாதேஷை மொத்தமாக துவைத்து கிழித்திருந்தான் பாரி. அவனுக்கு முன் நெற்றியில் ரத்தம் வழிய, உதடு கிழிந்து தொங்கியது. பாரி அவனின் கையை பிடித்து முறுக்கியிருப்பான் போல், கையை அசைக்க முடியாது மாதேஷ் முணகிக் கொண்டிருந்தான்.
அவர்களுக்கு கீழே மாதேஷின் நண்பன் எழ முடியாது தரையில் வயிற்றை பிடித்தபடி சுருண்டிருந்தான்.
“எவ்வளவு தைரியம் உனக்கு?” எனக்கேட்டு பாரி மீண்டும் மாதேஷின் வயிற்றில் உதைத்திட காலை தூக்க… அவனை முதுகு புறமிருந்து அணைத்து பிடித்திருந்தான் அவினாஷ்.
“பாரி விடுடா…” அவியால் பாரியின் திமிரலை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“யாருக்கிட்ட உன் வேலையை காட்டியிருக்க… இனி இங்க நீயெப்படி படிக்குறன்னு நான் பார்க்கிறேன்டா” என்றவன் தன்னை அவியின் பிடியிலிருந்து உதறி வெளிவந்து, பைக்கின் கிக்கரை மிதித்து உயிர்ப்பித்து காற்றில் சீறினான்.
பாரி வீட்டிற்கு வந்தபோது பூ அவளின் அறை படுக்கையில் காய்ந்த சருகென கிடந்தாள். அவளின் தலைக்கு அருகில் பார்வதி அமர்ந்திருக்க… அவர்களின் குடும்ப மருத்துவர் பூவை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
பாரி அறைக்கு உள்ளே கூட செல்லவில்லை. வெளியவே நின்றிருந்தான்.
பரிதி பாரியை பார்த்துவிட்டு அழைத்தபோதும் அவன் உள்ளே செல்லவில்லை. அவனின் முகம் கடுமையாக இருக்க… மூடியிருந்த கையின் இறுக்கத்தில் அவனின் கோபம் தெரிந்தது.
பரிசோதித்த மருத்துவர்… ஊசி போட்டுவிட்டு, காய்ச்சலுக்கான மருந்தினை கொடுத்துவிட்டு வெளியில் வர, அவருடனே வந்தான் பரிதி.
“அவங்க உளறளை கவனிச்சா, அவங்களுக்கு விரும்பத்தகாத நிகழ்வு ஏதோ நடந்திருக்கு. அதை நினைத்து பயத்திலே இருந்ததால் வந்த காய்ச்சல் தான். தூங்குறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். நல்லா தூங்கி எழுந்தாலே சரியாகிடும்” என்று பரிதியிடம் சொல்லியவர் சென்றிட, பரிதி பாரியின் அருகில் வந்தான்.
பரிதி சொல்ல வந்ததை தடுத்தவன்,
“டாக்டர் சொன்னது எனக்கும் கேட்டுச்சு” என்றவனாக பூவின் அறைக்கு நேரெதிரே இருக்கையை போட்டு அமர்ந்துவிட்டான்.
பார்வதிக்கும், பரிதிக்கும் ஒன்றும் புரியவில்லை. பாரி ஏதோ வித்தியாசமாக நடந்து கொள்வதாகப்பட்டது.
பூ தும்மினாலே பதறி அவளை விட்டு நகராது கவனித்துக் கொள்பவன் நேரம் பல சென்றும் அவளது அருகில் கூட செல்லாது அப்படியே அமர்ந்திருந்தான்.
பார்வதி தான் பூவை பார்த்துக்கொண்டார். அவள் மறுத்தபோதும் கஞ்சி புகட்டி மருந்தினை நேரத்திற்கு கொடுத்து கவனித்துக்கொண்டார்.
மாலை கண் விழித்த பூவிற்கு வெகுவாக காய்ச்சல் விட்டிருந்தது. இருள் கவிழத் தொடங்க எழுந்து அமர முயற்சித்தாள். உடல் சோர்வாக இருந்திட குளியலறைக்குள் நுழைந்து சூடான நீரில் குளித்த பின்னர் புத்துணர்வாய் உணர்ந்தவள் அறையைவிட்டு வெளியில் வர, அவளின் அறையையே பார்த்தவாறு அமர்ந்திருந்த பாரி இருக்கையிலேயே உறங்கியிருந்தான்.
பூவிற்கு காய்ச்சல் குறைந்துவிட்டதா என பார்க்க பரிதி வர, எதிரில் பூ நின்றிருந்தாள்.
“ம்மா” என்று பார்வதியை நோக்கி குரல் கொடுத்த பரிதி… “தமிழ் எழுந்துட்டாள். சூடா குடிக்க கொண்டு வாங்க” என்றான்.
அவனின் சத்தத்தில் எழுந்த பாரி… பூவைத்தான் ஆராய்ந்தான்.
அவனின் ஆராய்ச்சியின் பொருள் உணர்ந்தவள்…
“நவ் அம் ஓகே வேந்தா” என்றிட…
“ஆர் யூ ஷ்யர்?” என்றான்.
“அம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் டா” என்க,
இரண்டடி தள்ளி கீழே விழுந்திருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
30
+1
1
+1
1