அத்தியாயம் 15 :
நகரத்தின் பிரபலமான பொறியியல் கல்லூரி அது. முதலாம் வருட மாணவர்களுக்கான முதல் நாள்.
கனவுகளை நிஜமாக்கிட மாணவர்கள் எடுத்து வைக்கும் முதல் அடி. இங்கு நீளப்படும் சிறகுகளில் கனவுகளின் எல்லை பரந்து விரியும்.
அனைத்து சந்தோஷங்களும் நிறைந்த இடம்.
ஒவ்வொருவரும் பலவித ஆசைகளையும் கனவுகளையும் மனதில் வைத்து கல்லூரிக்குள் பாதம் பதிக்க ஒருவன் மட்டும் முகத்தில் சோகத்தை தேக்கி வைத்தபடி வந்திருந்தான்.
தன்னுடைய இருசக்கர வாகனத்தை அதன் தருப்பிடத்தில் நிறுத்தியவன், அதன் மீதே அமர்ந்திருந்தான்.
அவனுடன் வந்த மற்றொருவன் தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு அவனுக்கு அருகில் வந்தான்.
“வா பாரி. ஆடிடோரியம் போகணும்” என்று அழைத்தவன் அவினாஷ்.
“எனக்கு பூக்கிட்ட ஒருமுறை ஒரேமுறை பேசணும் அவி.” பாரியின் முகத்தில் பூவைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற தவிப்பு அப்பட்டமாக தெரிந்தது.
‘பூ எப்படியிருக்கின்றாள்? என்ன படிக்கப்போகிறாள்? கல்லூரியில் சேர்ந்துவிட்டாளா? என்ன செய்துகொண்டிருக்கிறாள்?’ இப்படி அவளைப்பற்றிய பாரியின் கேள்விகள் நீண்டிருந்தன.
“பூ தாத்தாவைப்பற்றி சொன்னியே பாரி. இப்போ திரும்ப கால் பண்ணா, அங்க பூவுக்கு ஏதும் ப்ராப்ளம் ஆகப்போகுதுடா?” என்றான் அவி.
“பேசணும் போல இருக்குன்னு தாண்டா சொன்னேன். கால் பண்றன்னு சொல்லலையே?” என்ற பாரிக்கு எண்ணம் முழுக்க பூவிடம் தான்.
இங்கோ விடுதி மெஸ்ஸில் உண்டு கொண்டிருந்த பூவிற்கு புரையேறியது. பக்கத்திலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தும் நிற்க சில கணங்கள் எடுத்துக்கொண்டது.
“உன்னை யாரோ நினைக்கிறாங்க தமிழ்?” என்றாள் அவளின் அறை தோழியான லீலா.
அப்படி அவள் சொல்லியதும் பாரியின் நினைவில் கலங்கிய கண்களை தன்னுடைய புது தோழிக்குத் தெரியாமல் மறைத்தாள் பூந்தமிழ்.
மெஸ்ஸிலிருந்து அறைக்கு வந்த லீலா கல்லூரிக்கு செல்லும் எண்ணமில்லாது மீண்டும் படுக்கையில் விழுந்தாள். போர்வையை முகம் வரை இழுத்துவிட்டு உறங்க முயன்றாள்.
“என்ன லீலா தூக்கம் வருதா? காலேஜ் வரல?”
முதல் நாள் தேவைப்படும் என பையில் ஒரு குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்து வைத்தபடி தமிழ் வினவ, போர்வையை முகத்திலிருந்து விலக்கிய லீலா…
“பர்ஸ்ட் ஆடிட்டோரியம் தான போகணும் தமிழ். காலேஜ் பெருமையை பேசுறேன்னு ஒரு நாலு கிழம் ரம்பம் போட்டு அறுக்கும். அடுத்து சீனியர் ரேக் நடக்கும். அதனால் மதியம் போல போகலாம் தமிழ். என்னால சீனியர் சொல்லுற மொக்கையை எல்லாம் செய்ய முடியாது” என்றவள் “புது இடம், நைட் சரியாவே தூங்கல… இப்போ தூங்கிக்கிறனே” எனக்கூறி போர்வைக்குள் தன்னை மறைத்துக்கொண்டாள்.
கிளம்பிய தமிழுக்கும்… ஆடிட்டோரியம் செல்ல விருப்பமில்லாததால் இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
பாரியின் யோசனையாகவே இருந்திட பார்வதியின் எண்ணிற்கு முயற்சித்திட… இம்முறை முழு அழைப்பும் சென்று நின்றது. எடுக்கப்படவில்லை.
மீண்டும் முயற்சித்திட பலனில்லை.
‘அத்தை வேலையா இருப்பாங்க. இல்லைன்னா புது நெம்பர் அப்படின்னு கூட எடுக்காமல் இருக்கலாம்’ என நினைத்து “அத்தை நான் தமிழ்” என்று புலனம் வழி செய்தியனுப்பியவள் நொடிக்கு ஒருமுறை பார்த்துவிட்டாரா என பார்த்துக்கொண்டே இருந்தாள்.
ஆடிட்டோரியத்தில் வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தான் பாரி. ஆனால் அவி சுற்றி பார்வையால் அவ்விடத்தையே அலசிக் கொண்டிருந்தான்.
“ஸ்டேஜ் பாரு அவி. அந்த வாலண்டியர் சீனியர் உன்னைத்தான் பார்க்கிறார்.” ஓரிடத்தில் பார்வையை நிலையாய் நிறுத்தாது அங்குமிங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருந்த அவியை பிடித்து நிறுத்த முயன்றான் பாரி.
அப்போது சரியாக செனட் மாணவன் ஒருவன் அவியின் அருகில் வந்து…
”ஒழுங்கா மேடையை கவனி” என்று அதட்டிவிட்டுச் சென்றான்.
ஆனால் அவியோ யார் சொல்லியும் கேட்காது… சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே இருந்தான்.
“டேய் அவி அப்படி யாரத்தான் தேடுற?” பாரிக்கு பொறுமை எங்கோ போயிருந்தது. கடுப்பாகக் கேட்டான்.
“எந்த பொண்ணாவது செட் ஆகுமான்னு பார்க்கிறேன் மச்சி” என்ற அவியை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்த பாரி தலையில் தட்டிக்கொண்டு மேடையில் கவனத்தை பதித்தான்.
இப்போது தான் கல்லூரியின் பெருமைகளை ஒருவர் சொல்லி முடித்திருக்க… அடுத்ததாக மாணவர்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களை மாணவத் தலைவன் அறிமுகம் செய்யத் தொடங்கியிருந்தான்.
“அச்சோ இதுக்கு நாளைக்கே வந்திருக்கலாம்.” பாரி அலுத்துக்கொண்டான். விட்டால் அவன் தூங்கிவிடுவான். ஆனால் இழுத்து பிடித்து அமர்ந்திருந்தான்.
அந்நேரம் தேவையில்லாது பரிதியின் மீது கோபம் கனன்றது.
காலையில் கல்லூரிக்கு கிளம்பாது உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி, கிளம்ப மறுத்தவனை வம்படியாக தயாராக வைத்து தானே உணவும் ஊட்டி, இரண்டு நாட்களுக்கு முன்பே அவனுக்காக வாங்கிய இருசக்கர வாகனத்தின் சாவியை அவனது கைகளில் கொடுத்தவன், புது அலைபேசி ஒன்றையும் நீட்டி, “என்ஜாய் யூர் காலேஜ் டேய்ஸ்” என்று வாழ்த்தினான் பரிதி.
நியாயமாக பரிதி கொடுத்த வண்டிக்கும் அலைபேசிக்கும் இந்நேரம் பாரி சந்தோஷத்தில் ஆர்ப்பரித்திருக்க வேண்டும். ஆனால் அவனோ வேண்டா வெறுப்பாக வண்டியில் ஏறினான்.
“காலேஜ் போயே ஆகணுமா பரிதிண்ணா” என்றவனுக்கு,
“காலேஜ் போகாம போலீஸ் எப்படி ஆகுறது” என்று பார்வதியின் குரல் வந்தது.
“ம்மா ப்ளீஸ்ம்மா… நாளைக்கு போறனே! இன்னைக்கு உட்கார வச்சு பேசியே ரம்பம் போட்டுடுவாங்கம்மா” என சிணுங்கினான் பாரி.
உண்மையில் பூ என்ன படிக்கிறாள் என்று தெரியாது அவனுள் படிப்பின் மீது நாட்டமே செல்லவில்லை.
“பரிதிண்ணா ப்ளீஸ்.”
“எனக்காக இன்னைக்கு ஒருநாள் போ பாரி. நாளைக்கு நீயே போறேன்னு முதல் ஆளா கிளம்புவ” என்றிட, பாரிக்கு எரிச்சலாக வந்தது.
“இன்னைக்கு என்ன? நாளைக்கும் நான் போகமாட்டேன்னு தான் சொல்லுவேன்” என்றான் பிடிவாதகமாக.
“உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் பாரி. அது காலேஜில் தான் இருக்கு. எனக்காக போ.”
இம்முறை ஏனோ பரிதியின் பேச்சினை தட்ட முடியாது, தனக்காக முன்னரே வந்து காத்திருந்த அவியுடன் தனித்தனியாக தத்தம் வாகனத்தில் வந்து சேர்ந்திருந்தனர்.
‘ஏதோ சர்ப்ரைஸ் சொன்னாங்க. இங்க வந்தா ஒன்னுமில்லை. என்னை காலேஜ் அனுப்ப என்னலாம் பிளான் பன்றாங்க’ என நினைத்தவன் இருக்கையில் சரிந்து அமர்ந்து அவியின் தோள் சாய்ந்துவிட்டான்.
அனைத்து பேச்சுக்களும் முடிந்து மேடையில் வீற்றிருந்த தாளாளர், முதல்வர், பேராசிரியர் என அனைவரும் சென்றதும், மேடையேறினான் கல்லூரி மாணவத் தலைவன்.
“வெல்கம் டூ அவர் காலேஜ்” எனத் தொடங்கியவன், “இதுக்கு அப்புறம் உங்களுக்கு கிளாஸ் இருக்காது. சீனியர்ஸ் கிட்ட நீங்களா இண்ட்ரோ ஆகிக்கோங்க. அவங்க சொல்ற சின்ன சின்ன விஷயங்களை ஜாலியா பண்ணா போதும். ரேக்கிங் அப்படின்னு நினைக்க வேண்டாம். வயலன்ஸ் இருக்காது. ஜஸ்ட் ஃபன் தான். ரேக் இன்று ஒருநாள் மட்டும் தான். ஃபார் ஸ்டார்டிங் பாண்டிங். லெட்ஸ் என்ஜாய். லாட்ஸ் அவர் மட்டும் அவங்கவங்க கிளாசில் ஆஜர் ஆகிக்கோங்க. உங்க டிப்பார்ட் சீனியர்ஸ் உங்களுக்கு ஃபிரஷர்ஸ் டே வெல்கம் கொடுப்பாங்க. இப்படியே வீடு கிளம்பலாம் திங்க் பண்ண வேண்டாம். கண்டிப்பா உங்க சீனியர்ஸை நீங்க மீட் பண்ணியிருக்கணும்” என்றவன் சென்றிட, மாணவர்கள் அனைவரும் கலையரங்கம் விட்டு வெளியில் வர, சரியாக மதிய உணவு தொடங்கியிருந்தது.
அப்போதே ஜூனியர் மாணவர்களுக்கான ரேக்கிங் தொடங்கியிருந்தது.
அனைத்தும் வகுக்கப்பட்ட எல்லைகளுக்குள் வரம்புமீறாது, சீனியர், ஜூனியர்க்கு இடையே நட்பினை ஆரம்பிக்கும் வகையில் நகைச்சுவையாகவே இருந்தன.
கேன்டின் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்த பாரியும், அவியும் சீனியர்ஸிடம் இண்ட்ரோ ஆக வேண்டும் என்பதற்காகவே கல்லூரி வளாகத்தை சுற்றி நடை போட்டனர்.
“நம்ம டிப்பார்ட்மெண்ட் யாரு என்னன்னே தெரியலையே பாரி” என்ற அவிக்கு,
“அதை தெரிஞ்சிக்கத்தான் லாஸ்ட் ஹவர் கிளாஸ்” என்றான் பாரி.
“ஹோ” என்ற அவி பக்கென்று சிரித்தான்.
“எதுக்குடா சிரிக்குற?” என்ற பாரியும் அவியின் பார்வை சென்ற திக்கில் பார்க்க, அங்கு ஒரு பெண் தலையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு… நின்ற இடத்திலேயே கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் இடுப்பில் வைத்து, கன்னம் இரண்டும் பலூன் போல் உப்பி வர ஊதிக் கொண்டிருந்தாள்.
அவி சிரித்ததில் கண்களை திறந்து பார்த்த பெண், தன்னருகில் இருந்த சீனியர்ஸ் யாருமில்லாததை கண்டு விழித்து பின் அவியை பார்த்து முறைத்தபடி வேகமாக அவனருகில் வந்தாள்.
“என்ன சிரிப்பு. ஹான்… அப்படியே கொட்டுனேன்னு வச்சிக்கோ” என்றவள் சொல்லிய வேகத்தில் கொட்டியும் இருந்தாள்.
“அய்யோ பாரி” என்று தலையில் கை வைத்த அவி முகத்தை சுருக்கி தேய்க்க…
“அச்சோ பலமா கொட்டிட்டனா. சாரி, சாரி” என இருவரிடமும் மாற்றி மாற்றி சாரி கேட்க,
“தனியா நின்னு வாயிலே பலூன் ஊதிட்டுருந்தா யாராயிருந்தாலும் சிரிக்கத்தான் செய்வாங்க” என்று அவி வலியில் கூறினான்.
“சீனியர் செய்ய சொன்னதைத்தான் செய்துட்டிருந்தேன். கண்ணை திறந்து பார்த்தால் யாருமில்லை” என்று தன்னிலை விளக்கிட…
“இட்ஸ் ஓகே. இவன் என்ன அடிச்சாலும் தாங்குவான்” என்ற பாரியும் அவியின் முதுகில் வேகமாக ஒன்று வைத்திட…
“போடா ஆளாளுக்கு அடிக்குறீங்க. நான் அம்மாகிட்ட சொல்றேன் இருங்க” என்று சிறு பிள்ளையாய் சிணுங்கிய அவனை அவளுக்கு ஏனோ முதல் பார்வையிலேயே பிடித்துவிட…
“அம் ஜென்சி” என்று அவியிடம் கை நீட்டியிருந்தாள்.
அவியும் இன்னும் வலிக்காத தலையை தேய்த்துக்கொண்டே, “அவி… அவினாஷ்” என்று அவளின் கரம் பற்றி குலுக்கினான்.
ஜென்சி பாரியிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ள… பாரியும் தனது முழுப்பெயரையும் சொல்லி அவளின் கரம் குலுக்கயிருந்தான்.
“எந்த டிப்பார்ட்மெண்ட்?”
“சிஎஸ்சி.”
“வாவ்… சூப்பர். நானும்” என்றவள் “பிரண்ட்ஸ்” என்றிட ஏனோ பாரிக்கு பூவிடம் முதன் முதலாக ஃபிரண்ட்ஸ் என கை நீட்டியது நினைவிற்கு வந்தது.
பாரி சிலையாகியிருக்க… ஜென் அவனையே ‘என்ன கேட்டுட்டோம்?’ என்கிற ஆராய்ச்சில் பார்த்திருந்தாள்.
ஜென்னை தன் பக்கம் திருப்பிய அவி, “அவனுக்கு அவன் பூ நினைவு வந்திருக்கும். கொஞ்ச நேரத்தில் நார்மலாகிடுவான். வீ ஆர் பிரண்ட்ஸ்” என்றான்.
“பூ?” ஜென் கேள்வியாய் இழுக்க…
அப்பெயரில் நிலைபெற்ற பாரி, “ஷீ இஸ் மைன்” என்றான் முகத்தில் முகிழ்த்த கனிவுடன்.
முகம் விகசிக்க அவன் நின்றிருந்ததை கண்டு… அவியின் புறம் நன்கு நெருங்கிய ஜென் அவனது காதில் “லவ்வரா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
“இதை அவன்கிட்ட கேட்டிடாத வாயிலே குத்துவான். ஃபிரண்ட்… அவனோட சோல்(soul) ஃபிரண்ட்” என்றான் அவி.
ஜென் மெல்ல தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.
“பாரி வாடா எவ்வளவு நேரம் இங்கயே நிக்கிறது. அப்படியே நடப்போம் வா. இவளை மாதிரி இன்னும் லூசுங்க இருக்கான்னு பார்ப்போம்” என்று சொல்லி மீண்டும் ஜென்னின் கையால் தலையில் கொட்டு வாங்கினான் அவினாஷ்.
“யாருடா லூசு?”
“நீதான்.”
“என்னைப்பார்த்தா அப்படியா பாரி தெரியுது?” பாரியை துணைக்கு அழைத்தாள்.
“பார்த்தா தெரியல” என்று பாரி சொல்ல…
“நீ செய்து கொண்டிருந்ததை பார்த்தா அப்படித்தான் தெரியுது” என்று முடித்த அவி அவளைப்போலவே ஊதி காண்பிக்க ஜென் அவனை அடிக்க கை கொண்டு செல்ல அவனோ அவளிடம் சிக்காது ஓட்டம் எடுத்தான். அவளும் அவன் பின்னால் துரத்திச் சென்றாள்.
அங்கு நடக்கும் ரேக்கிங் காட்சிகளையெல்லாம் பார்த்தபடி யாரிடமும் சிக்காது தன்னுடைய துறையை கண்டுபிடித்து வகுப்பில் தனியாக அமர்ந்துவிட்டான் பாரி.
ஓடி வந்த அவியும் ஜென்னும் சீனியரிடம் மாட்டிக்கொண்டனர்.
“என்ன ஓடிப்பிடிச்சு விளையாடுறீங்க?” என அவர்களிடம் கேட்ட சீனியர் மாணவன் ஒருவன், இருவரையும் ஓரமாக நிற்க வைத்தான்.
அங்கு ஏற்கனவே இன்னும் சிலர் நின்றிருந்தனர். அவர்களின் கலக்கமான முகமே அவர்களும் முதல் வருட மாணவர்கள் என்று காட்டிட அமைதியாக இணைந்து நின்றனர்.
அந்த சீனியர் குழு இருவரை முன்னிறுத்தி, ஒரு பெண்ணிடம் “நீ நூறிலிருந்து தலைகீழா சொல்லு” என்றும், இன்னொரு பெண்ணிடம் “அவள் சொல்லுவதை நேரா சொல்லு” என்றும் சொல்ல… இருவரும் சொல்லத் துவங்க, சீனியர் பெண் ஒருத்தி, “அப்படி ஓரமா போய் சொல்லுங்க” என்று அவர்களை அப்புறப்படுத்தி அடுத்த இருவரை முன் வரச் செய்தாள்.
“நீங்க பசங்க ரெண்டு பேரும் தோளை பிடிச்சிக்கோங்க” என்று சொல்ல அவர்களும் அப்படியே செய்ய… “மாத்தி மாத்தி நீ பைத்தியம், நீ பைத்தியம் சொல்லிக்கிட்டே ரெண்டு காலையும் ஆட்டிக்கிட்டே அப்படி ஓரமா போங்க” என்றிட அந்த பசங்களும் அவ்வாறே செய்ய… அங்கே சிரிப்பலை பரவியது.
“போச்சு போச்சு அடுத்து நாமதான்.” லீலா தனக்கு பின்னால் நின்றிருந்த தமிழிடம் கலக்கத்துடன் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“உன்னாலதான் நா(ன்)பாட்டுக்கு தூங்கிட்டு இருந்தேன். என்னை காலேஜ் பர்ஸ்ட் டே போகலன்னா நல்லாயிருக்காதுன்னு சொல்லி இழுத்துக்கிட்டு வந்து இப்படி மாட்டிவிட்டுடியே” என்ற லீலா, “அங்கப்பாரு அங்கப்பாரு… அவன் பன்னுறதை நான் பண்ணா எப்படியிருக்கும் கொஞ்சம் திங்க் பண்ணிப்பாரு தமிழ்… அய்யோ செம காமெடியா இருக்கு லூசு போல” என தமிழிடம் புலம்பிக்கொண்டே இருக்க, அது அவர்களை அடுத்து நின்றிருந்த அவி மற்றும் ஜென்னிற்கு கூட கேட்டது.
அவளது புலம்பலில் இருவருக்கும் சிரிப்புக்கூட வந்திட சிரித்தும் விட்டனர்.
“சிரிக்காதீங்கப்பா” என்று அவி மற்றும் ஜென்னை பார்த்து சொன்ன லீலா, “இந்த மாதிரி குரங்கு போல குதிச்சா லூசு போலத்தான இருக்கும்” என்று அப்பாவியாகக் கேட்க அவர்களும் ஆமென்று தலையசைத்தனர்.
“எல்லாரும் என்னை லூசு சொல்லப்போறாங்க.” விட்டால் லீலா அழுதுவிடுவாள் போலிருந்தாள்.
“லீலா இது ஜஸ்ட் ஃபன். சீனியர் ஜூனியர் இண்ட்ரோ மீட்டப். ஜாலியா பண்ணிட்டு போ” என்று தமிழ் இலகுவாகச் சொல்ல அப்போதுதான் தமிழின் முகத்தை அவியும் ஜென்னும் நன்றாக பார்த்தனர்.
தெளிவான தீர்க்கமான முகம். பார்த்ததும் பிடித்தது போலிருந்தது இருவருக்கும்.
“செம பொண்ணுல.”
அவி சிலாகித்துக்கூற…
“அழகா ஒரு பொண்ணை பார்த்திட்டா உடனே வழிஞ்சிடுவீங்களே!” ஜென் அவனை வாறினாள்.
“ஹேய் அரை மெண்டல். அந்த பொண்ணுகிட்ட ஏதோ குட் ஃபீல். அதான் அப்படி சொன்னேன்” என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்த ஜென் “நம்பிட்டேன்” என்று நம்பாது கூறினாள்.
அதனை அசட்டை செய்த அவி தானாகவே தமிழிடம் பேசினான்.
“ஹாய் அம் அவினாஷ்.”
“ஹாய்” என்றவள் “தமிழ்” என்று மட்டும் கூறினாள்.
ஏனோ பாரிக்கு பூ என்பது சொந்தமாகிவிட மற்றவர்களுக்கு தமிழாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தாள். பாரிக்கு மட்டுமே பூவாக இருந்திட விருப்பம் கொண்டாள்.
அதனாலேயே பூ என அழைத்துக்கொண்டிருந்த பரிதி பார்வதியைக்கூட தமிழென்றே விளிக்கச் செய்திருந்தாள். அதன்பொருட்டே இப்போது அவியிடம் தன் பெயரின் பிற்பாதியை மட்டும் கூறியிருந்தாள்.
“நைஸ் நேம்.” அவி தமிழிடம் சொல்ல…
“அப்போ நீ இங்கிலீஷ், ஹிந்தின்னு வச்சிக்கோ” என்று ஜென் கேலி செய்திட அவியின் முகம் போன போக்கை வைத்து தமிழ் சிரித்துவிட்டாள்.
“சிரிக்காத தமிழ் அடுத்து நம்மளை கூப்பிட்டிடப்போறங்க” என லீலா சொல்லி முடிக்கவில்லை அவர்கள் இருவரையும் அழைத்து விட்டனர்.
“ஆல் தி பெஸ்ட் தமிழ்.”
“தேன்க்ஸ் அவி.”
எவ்வித அலட்டலும் இல்லாது தானாக பேசிய அவியை தமிழ் ஏற்கவே செய்தாள். சொல்லப்போனால் தமிழுக்கு அவியிடம் ஏனென்றே தெரியாத ஒரு ஒட்டுதல் தோன்றிய உணர்வு.
லீலா சீனியர் முன்பு சென்றதும் அவளை கொஞ்சம் தள்ளி நிற்க வைத்திட… சீனியரில் ஒருவன், “இந்தபொண்ணு அழகா இருக்காடா. விட்டுடலாம்” என்று சொல்ல, “அப்படியா?” என்று தமிழிடம் வந்து “நீ மூன்றாம் பிறை பட கிளைமாக்சில் கமல் செய்வாறே அந்த மாதிரி செய்” என்று மாணவி ஒருத்தி கூறிட…
“நான் அந்த படம் பார்த்ததில்லை சீனியர்” என்றாள் தமிழ்.
“சோ?”
“நீங்க செய்துகாட்டுங்க” என்றாள்.
“ஹேய் என்ன திமிரா?”
“அச்சோ சீனியர் நிஜமா எனக்கு தெரியாது.” தமிழ் பொய் சொல்வதைப்போல் தெரியவில்லை.
“ஓகே ஒரு பாட்டு பாடு.”
“காது பத்திரம் சீனியர்” என்ற தமிழ் தன்னுடைய தொண்டையை செருமி பாடத் தயாராக… அவள் கொடுத்த பில்டப்பை பார்த்து அரண்டு போன அந்த சீனியர் பெண்…
‘ரொம்ப கொடூரமா இருக்குமோ’ என எண்ணியபடியே,
“ஹேய் வேணா(ம்) வேணா(ம்)” என்று அலறினாள்.
அதில் அவ்விடமே சிரிப்பில் மூழ்கியது.
“நீ கலாய்க்க பார்த்தா அவள் உன்னை கலாய்ச்சிட்டா” என்று சீனியர்ஸ் இருவர் அப்பெண்ணை கிண்டல் செய்திட… மேலும் சிரிப்பு சத்தம் அதிகமாகியது.
“சரி சரி ரொம்ப அவங்களை ஒட்டாதீங்க சீனியர்” என்று அந்த பெண்ணிற்காக பேசிய தமிழ் அவள் சொன்னது போலவே பாடல் ஒன்றை பாட அவ்விடமே அமைதியாக தமிழின் குரலில் உருகி கரைந்தது.
சில வரிகள் பாடிவிட்டு தமிழ் நிறுத்திட கைத்தட்டல் அதிர்ந்தது.
அவியும் ஜென்னும் தமிழின் அருகில் ஓடி வந்து “சூப்பர் வாய்ஸ்” என்று அவளின் கரத்தினை ஆளுக்கொன்றாய் பிடித்துக்கொள்ள… லீலா ஆவென்றபடி சூப்பரென விரல் சேர்த்து தலையாட்டினாள்.
சீனியர்ஸ் உட்பட தமிழின் பாடலை நன்றாக இருந்தது என்று சொல்லிட சில மணித்துளிகளில் அங்கு அனைவரும் கலைந்தனர்.
அவி, தமிழ், ஜென், லீலா நால்வர் மட்டும் எஞ்சிட…
“திரும்ப ஏதாவது ஒரு குரூப்கிட்ட மாட்டுறதுக்கு முன்னாடி கிளாஸ் போயிடலாம்ப்பா” என்ற ஜென்னின் கூற்றை அனைவரும் ஆமோதித்தனர்.
“உங்க டிப்பார்ட்?” என்று அவி… லீலா மற்றும் தமிழிடம் வினவ,
“அவள் கம்ப்யூட்டர் சயின்ஸ்” என்று தமிழைச்சுட்டிக்காட்டிய லீலா, “நான் ECE” என்றாள்.
“வாவ்” என்ற ஜென் தமிழிடம், “அப்போ வாங்க நாம ஒண்ணாவே போலாம்” என்று சொல்ல…
“அய்யோ நான் தனியா போகனுமா?” என்று லீலா அரண்டுவிட்டாள்.
“நீ வந்து என் கிளாஸ் பார்த்து, விட்டுப்போ தமிழ். தனியா போக பயமாயிருக்கு. திரும்ப சீனியர்ஸ்கிட்ட மாட்டிப்பேனோன்னு” என்று கெஞ்ச…
“நீங்க போங்க. நான் அவளை விட்டுட்டு வர்றேன்” என்று அவி மற்றும் ஜென்னிடம் கூறிய தமிழ் லீலாவை அழைத்துக்கொண்டு செல்ல அவர்களுக்கு எதிர்பக்கம் மற்ற இருவரும் சென்றனர்.
“பாரியை காணோமே” என்ற ஜென்னிடம், “அவன் கிளாஸ்க்கு போயிருப்பான்” என்றபடி முன்னே நடந்தான் அவி.
இருவரும் வகுப்பிற்குள் நுழைந்திட பாரி பெஞ்சில் தலை கவிழ்ந்திருந்தான்.
____________________________
ஆங்காங்கே மாணவர்களுக்கிடையே ரேக்கிங் நடந்து கொண்டிருக்க…
மற்ற குழுவிடம் மாட்டிவிடாது பதுங்கி பதுங்கி தங்களது வகுப்பிற்குள் நுழைந்தனர் அவினாஷ் மற்றும் ஜென்சி.
வகுப்பில் யாரும் வந்திருக்கவில்லை.
பாரி மட்டும் பெஞ்சில் தலை கவிழ்ந்திருந்தான்.
“என்னடா இவன் இப்படி இருக்கான்?”
கேட்ட ஜென்னை அமைதியாக இருக்குமாறு கண்காட்டிய அவி, பாரியின் அருகில் சென்று அமர்ந்தான்.
அரவம் உணர்ந்து எழுந்த பாரி…
“ரேக்கிங் ஓவரா டா?” எனக் கேட்டிருந்தான்.
“முடிஞ்சிடும் பாரி. லாஸ்ட் ஹவர் ஸ்டார்ட் ஆகபோகுதே” என்று பதில் அளித்த அவி, “நீ ஏண்டா இப்படியிருக்க? வெளிய பசங்கலாம் எவ்வளவு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டிருக்காங்க… பாட்டு, டான்ஸ், ஜோக்ஸ், அப்படின்னு சீனியர்ஸ் ஜூனியரை வச்சு செய்யுறாங்க. பார்க்கவே நல்ல ஃபன்னா இருக்கு” என்ற அவிக்கு பாரியின் உணர்வற்ற பார்வையே பதிலாகக் கிடைத்தது.
“இதெல்லாம் ரொம்ப ஓவர் பாரி” என்ற அவி, “பூக்கிட்ட தானடா பேசக்கூடாது. அவளோட அப்பாகிட்ட பேசு. அவளைப்பற்றி என்ன தெரியணுமோ தெரிஞ்சிக்கோ” என்று தனக்குத் தோன்றிய வழி ஒன்றைக் கூறினான்.
“எனக்கு இது தோனிருக்காது நினைக்கிறியா அவி” என்ற பாரி…
“அன்னைக்கு பூவோட தாத்தா அவளை அறைஞ்ச சத்தம் இன்னமும் என் காதுல கேட்டுட்டு இருக்கு. ரெண்டு முறை என்னால என் பூ அடி வாங்கியிருக்கா(ள்). எனக்காக. இதுக்கு மேல வேண்டாம்.”
எத்தனைக்கு எத்தனை பூவிடம் பேச முடியவில்லை என்று தவிக்கின்றானோ அதே அளவிற்கு தன்னால் அவளுக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருக்கின்றான்.
“அவளை நான் நினைச்சிட்டு இருக்க இந்த செக் கூட அவளும் என்னைத்தான் நினைச்சிட்டு இருப்பாள்” என்ற பாரி ஜென்னின் “தமிழ்” என்ற விளிப்பில் பதறி எழுந்து வாயிலைத் திரும்பி பார்த்தான்.
லீலாவின் வகுப்பு அடுத்த கட்டிடத்தில் இருக்க… தேடி கண்டுபிடித்து அங்கு சென்று அவளை விட்டுவிட்டு, தன்னுடைய துறை இருக்கும் கட்டிடத்திற்கு வந்தாள் பூ.
முதல் வருட மாணவர்களுக்கான வகுப்பு எங்குள்ளதென்று அங்கிருந்த அனைத்து வகுப்புகளையும் பார்த்தவாறு பூ சென்று கொண்டிருக்க,
பாரியும், அவியும் பேசுவதை கேட்டபடி தற்செயலாகத் திரும்பிய ஜென் சன்னல் வழித் தெரிந்த பூவை பார்த்து
“தமிழ்” என அழைத்திருந்தாள்.
பூ சன்னலை கடந்திருக்க… ஜென்னின் குரல் கேட்டு அறை வாயிலிற்கு வந்து யாரென்று பார்ப்பதற்குள், பாரி தமிழ் என்ற பெயரில் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பதறி எழுந்து சுற்று முற்றும் பார்வையை ஓடவிட்டான்.
பாரியின் செயல் இருவருக்கும் விளங்கா நிலை.
ஏனோ ஜென் அழைத்த தமிழ் என்ற பெயருக்கு சொந்தக்காரி நிச்சயம் உன் பூ தான் என்று அந்த அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் பலமுறை முரசு கொட்டியது அவனின் மனம்.
வகுப்பறையைச் சுற்றிய பாரியின் பார்வை வாயிலில் பதிய, பூவும் தன் பாதத்தை பதித்திருந்தாள்.
பூவை கண்ட பாரி… ஆச்சரியத்தில் விழி விரித்து… முகம் பிரகாசிக்க… உள்ளத்து அன்பின் உணர்வையெல்லாம் ஒட்டு மொத்தமாகத் தேக்கி “பூ” என்று ஓசையின்றி அவனது உதடு மட்டும் அசைத்தான்.
தன்னை அழைத்தது யாரென்று வாயிலில் நின்று ஜென்னை ஏறிட்ட பூ, தன் செவி நுழைந்து மனம் நிறைந்த அவளது வேந்தனின் மௌன அழைப்பில் அதன் ஒலியின் திசையில் கருவிழியைத் திருப்பிட… தன்னை கண்ட மகிழ்ச்சியை அப்பட்டமாக முகத்தில் காட்டியபடி தனக்கு முன் சில அடிகள் இடைவெளியில் நின்றிருந்தவனை கண்டதும்…
அதுநாள் வரை அவனுக்காக அடக்கி வைத்திருந்த ஏக்கங்கள் யாவும் கண்ணில் நீராக சுரந்திட… தன்னுடைய ஆருயிர் நட்பை கண்கள் சந்தித்துவிட்ட மகிழ்வில் பூவாகியவளின் மனமும் முகமும் ஒரு சேர மலர்ந்து இதழ் விரித்திட…
“வேந்தா” என்ற மென் கூவலுடன் ஓடிவந்து அவனுக்கு முன் இழை இடையில் நின்றாள். பாரியின் கைகள் அகல விரிந்தன. அரை நொடியும் தாமதியாது அவன் விரித்த கைகளில் பாந்தமாகத் தன்னை நுழைத்துக்கொண்டாள்.
அவ்வணைப்பில் இருக்கும் அன்பை மனம் முழுக்க நட்பு என்ற ஒன்றை கொண்டிருக்கும் அவ்விருவரால் மட்டுமே உணர முடியும். எவ்வித விகல்பமும் இல்லா தூய்மையான அன்பினது வெளிப்பாடு அது. பிரிவு அவர்களுக்குள்ளான நேசத்தை மேலும் வலுப்படுத்தியிருந்தது.
“வேந்தா” என்றவள் அவனை இறுக அணைத்திட… அவனோ அவளின் உச்சியில் தன் நாடியை அழுந்த பதித்து கண்களை இறுக மூடியிருந்தான்.
இருவரும் தங்களது பிரிவின் வலியை குறைத்திட முயன்றிருக்க… அவர்களை அந்நிலையில் கண்ட அவியும், ஜென்னும் திருத்திருத்து நின்றிருந்தனர்.
“டேய் அவி என்னடா நடக்குது இங்க?”
“அதான் தெரியல ஜென்” என்ற அவி, “இது தமிழ் தானே?” எனக்கேட்டான்.
“அவள் அப்படித்தான் சொன்னாள்” என்ற ஜென் அவியின் முகம் பார்க்க அவனும் அக்கணம் அவளைத்தான் பார்த்தான்.
இருவரும் ஒரே சமயம் ஆமென்று தலையசைத்தனர்.
“பூ” என்று அப்பூவை விட மென்மையாக அழைத்த பாரி, “எப்படிடா இருக்க?” என்று வினவ,
அவனிடமிருந்து பிரிந்து இரண்டடி பின் சென்று நின்ற பூ அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.
அவிக்கு விழிகள் தெறித்தது. ஜென் தனக்கு விழுந்ததுபோல் கன்னத்தில் கை வைத்து விட்டாள் அதிர்வில்.
“என்னா அடி.” அவி.
ஆனால் பாரிக்கு அடியென்றெல்லாம் தெரியவில்லை போலும். பூவின் முகத்திலிருந்த கோபத்தை பார்த்தபடி உதடுகள் விரிய காட்சியளித்துக் கொண்டிருந்தான்.
“இளா எதோ சொன்னான்னா நீயி கால் பண்ணமாட்டியால… அம்புட்டு வீம்பால?” எனக்கேட்ட பூவின் கோபம் பாரிக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தது.
“நீ பண்ணிருக்கலாமே! ஏன் பண்ணல பூ.” சிரிப்புடன் திருப்பிக் கேட்டிருந்தான்.
“அது… அது… வந்து…” பூ பதில் சொல்ல முடியாது தடுமாறினாள். பாரியின் சிரிப்பு மேலும் நீண்டது.
“என்னத்துக்குல இப்போ சமஞ்ச பொண்ணாட்டம் சிரிச்சிட்டு நிக்குத. மொத நிப்பாட்டுல… நிப்பாட்டுங்கிறல.” இம்முறை அதட்டினாள்.
“இவள் தமிழ் தான் பேசுறாளா அவி?” ஜென் அவியிடம் அதி முக்கிய சந்தேகத்தைக் கேட்டாள்.
“அப்படித்தான் நினைக்கிறேன். ஒவ்வொரு வோர்ட் புரியுதே!”
“சீனியர்ஸ் முன்னாடி நல்லாதான பேசினா(ள்)?”
“அதை அப்புறம் கேட்டுப்போம். முதலில் என்ன நடக்குது கவனிப்போம்” என்ற அவி ஜென்னின் தலையை அவர்களை நோக்கித் திரும்பினான்.
“பொன்னுக்கு பயந்து தாம்லே நீயி போன் போடல?”
“என் பூவுக்கு பயந்து. அவளுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு பயந்து.”
“போல… மூச்சு முட்டிடுச்சு” என்றவள் ஓரிடத்தில் அமர பாரியும் அவளின் அருகில் அமர்ந்தான். பூ அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
“எனக்கு லவ்வர்ஸ் மாதிரிதான் தெரியுது அவி.”
“எனக்கு அவங்களுக்குள்ள இருக்க பிரண்ட்ஷிப், அதோட ஆழம், புரிதல் தான் தெரியுது ஜென். இவங்களை நீ இன்னைக்குத்தானே பார்க்குற… நான் தமிழை பார்க்கலன்னாலும் பாரி அவளைப்பற்றி சொல்லி நிறைய கேட்டிருக்கேன். அதனால உன்னை மாதிரி என்னால அவங்களை அந்த மாதிரி பார்க்க முடியல… நீ முதலில் உன் பார்வையை மாத்து” என்றான் அவி. இப்போது ஜென்னிற்கு பாரி மற்றும் தமிழை பார்க்கும்போது சற்று பொறாமையாகக்கூட இருந்தது.
“நீ எப்படிடா இங்க?”
“எனக்கு இங்க வரவரைக்கும் கூட இங்கனதேன் வரோமுன்னு தெரியாது வேந்தா” என்று பாரியின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்த பூ, இரண்டு மாதங்கள் நடந்த நிகழ்வு முதல் இங்கு வந்து பார்வதிக்கு அழைத்ததுவரை சொல்லி முடிக்க… அவர்களுக்கு முன் கதை கேட்கும் பாவனையில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தனர் அவியும், ஜென்னும்.
“என்னடா இப்படி உட்கார்ந்திருக்கீங்க?”
“இப்போதான் உன் கண்ணுக்கு நாங்க தெரிஞ்சோமா மச்சான்” என்று கேட்ட அவி…
“அவி இவள் தான்…” என்று ஆரம்பித்த பாரியின் முன் நிறுத்து என்பதைப்போல் கையை காண்பித்து,
“பூ” என்றான்.
“எப்படிடா?” பாரி வேண்டுமென்றே ஆச்சர்யமாகக் கேட்பதைப்போல் கேட்டான்.
“அதான் உன் முகத்தில் இருக்க வெளிச்சமே சொல்லுதே” என்ற அவி,
“உன் பெயர் தமிழுன்னு தான எங்ககிட்ட சொன்ன?” என்று தமிழிடம் வினவினான்.
“பூ… பூந்தமிழ்” என பாரி சொல்லியிருந்தான்.
“அவள் சொல்ல மாட்டாளாடா?” ஜென் முன் வந்தாள்.
“பாரி மட்டும் தான் பூ சொல்லணும். அதான் தமிழ் சொன்னேன்.” தோள் குலுக்களோடு கூறினாள் பூ.
“ரொம்பத்தான்…” என்ற ஜென்… அவியிடம், “நாம் இவங்களுக்கு டஃப் கொடுப்போம் அவி” என்றாள்.
“என்னால லூசு கூடலாம் எப்போபாரு சுத்திட்டு இருக்க முடியாது” என்று உடனடியாக பதில் சொல்லி ஜென்னிடம் தலையில் கொட்டும் வாங்கிக்கொண்டான் அவி.
“கொட்டிட்டே இருக்க… என்கிட்ட வச்சிக்காதே!” என்று அவி ஜென்னை விரல் நீட்டி மிரட்ட… ஜென் அவனது விரலை பிடித்து ஒடிக்க அவன் அலறினான்.
“நிறுத்துங்கடா… பார்த்து ஒருநாள் முடியல, சண்டை போட்டுட்டே இருக்கீங்க” என்ற பாரி தமிழுக்கு முறையாக அவர்களை அறிமுகப்படுத்தினான்.
“உன்னைப்பற்றி வேந்தன் நிறைய சொல்லியிருக்கான்” என்று பூ அவியிடம் சொல்ல…
“அதையெல்லாம் நம்பாத தமிழ்” என்று வேகமாக மறுத்தான் அவன்.
“உன் வேகத்தை பார்த்தா எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு” என்று ஜென் இழுக்க…
“நல்லவிதமாத்தான்” என்று சொல்லி அவனை அசுவாசப்படுத்தினாள் பூ.
அதன் பின்னர் நால்வரும் ஏதேதோ பேசி நேரத்தை கடத்திக்கொண்டிருக்க… இனி அவர்களுடன் பயணிக்கவிருக்கும் மாணவர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கினர்.
அவர்களுடன் சீனியர்ஸும் வர… அவ்விடமே அதிர ஆரம்பித்தது. ஒருவருக்கொருவர் அறிமுகப்படலம் துவங்கி, தனித்தனியாக ஜூனியர்ஸை முன் வரவழைத்து அவர்களுக்கு என்ன வருமோ அதனை செய்ய வைத்து ஆட்டமும் பாட்டமுமாய், உற்சாகமும் கொண்டாட்டமுமாய், நகைச்சுவையும், சிரிப்புமாய் அந்நேரம் முடிவடைய… சீனியர்ஸ் ஜூனியர்ஸ் இடையே நல்ல ஒட்டுதலும் புரிதலும் ஏற்பட்டிருந்தது.
“இன்னையோட இந்த ரேக் எல்லாம் முடிஞ்சுது. இனி எங்களை பார்த்து ஓடி ஒளியலாம் வேணாம். பார்த்தா ஹாய், சின்ன ஸ்மைல், ஜாலியான பேச்சு. நாளைக்கு பார்ப்போம்” என்று துறை தலைவன் முன்வந்து சொல்லிட அனைவரும் அன்றைய நாள் மகிழ்வினை ஏற்று வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்தனர்.
பாரியும் பூவும் அமைதியாக உட்கார்ந்திருக்க…
“எல்லாரும் போயிட்டாங்க இன்னும் எத்தனை நேரத்துக்கு இப்படியே உட்கார்ந்திருக்கப் போறீங்க?” என்ற ஜென், மேலும் சில நிமிடங்கள் அவர்கள் வருவார்களென்று காத்திருக்க… அதற்கான அறிகுறியே தென்படவில்லை.
“இதுக்குமேல என்னால முடியாது அவி. லேட்டா போனா போலீஸ்காரர் என்னை ஜெயிலில் போட்டாலும் போட்டுடுவார். நான் வர்றேன்” என மூவருக்கும் பொதுவாகச் சொல்லி ஜென் கிளம்பிவிட்டாள்.
“இவள் யாரடா போலீஸுன்னு சொல்லிட்டுப்போறாள்?” என்ற அவி, “டேய் இனி பூ உன்னோடதான். டெய்லி கிளாசில் பார்க்கலாம். வீக்கெண்ட் உங்க வீட்டுக்கே கூட்டிப்போலாம். இப்போ நாம வீட்டுக்குப்போலாம். தமிழ் ஹாஸ்டல் போகட்டும் வா” என்று அவி பாரியை அழைத்திட…
பாரிக்கு அவி வீடென சொல்லிய பின்னர் தான் பரிதி சொல்லிய சர்ப்ரைஸ் என்ற வார்த்தை நினைவிற்கு வந்தது. அந்த சர்ப்ரைஸ் பூ தான் என்பதும் புரிந்தது.
“நாம பிரியக்கூடாதுன்னு நம்மளை விட நம்ம வீட்டு ஆளுங்க அதிக வேலை பார்த்திருக்காங்க பூ” என்று சொல்லியவன் பரிதியின் வார்த்தைகளையும் கூறினான்.
தனக்கான ஒவ்வொன்றையும் தன்னைக்கேட்டு தன் விருப்பமறிந்து செய்யும் தந்தை இவ்விடயத்தில் எதுவும் கேட்காது முடிவு செய்தது எதற்காக என்பது புரிந்த கணம் உள்ளுக்குள்ளேயே தன்னுடைய தந்தையை உணர்வுகளால் ஆரத் தழுவியிருந்தாள் பூ.
“சரிடா வீட்டுக்கு போகலாம் வா” என்று பாரி பூவை அழைத்திட…
“ஹாஸ்டல் ரூல்ஸ் எப்படின்னு தெரியல பாரி… வீக்கெண்ட் கார்டியன் வீட்டுக்கு மட்டும் அலோவ்ட் சொன்னாங்க. நாளைக்கு எப்படின்னு தெரிஞ்சிக்கிட்டு வரேன்” என்றவளின் கூற்றை ஏற்றான்.
“அப்போ கிளம்பலாம் பூ” என்ற பாரி அவியையும் அழைத்துக்கொண்டு வெளியில் வர,
“இதுக்கு அப்புறமாவது முகத்தை தூக்கி வச்சிக்கிறதை நிறுத்திடுவ தான பாரி” என்று கேட்டான் அவி.
புன்னகை முகமாக அவனது முதுகில் மெல்லத் தட்டிய பாரியின் பார்வை அவியின் மீது இருந்தபோதும் உடன் நடந்த பூ படியில் தடுமாறிட அவளை கீழே விழுந்திடாதவாறு மின்னலென பிடித்திருந்தான்.
“பார்த்து பூ” என்றவன்,
“கால்ல எதுவும் அடியில்லையே” என படியிலே அமர்ந்து அவளது கால்களை ஆராய்ந்தான்.
“எதுவும் ஆகல வேந்தா… அம் ஓகே” என்று பூ அழுத்தமாக சொல்லிய பின்னர் தான் பாரி எழுந்தான்.
“ஜஸ்ட் ஸ்லிப் அவ்வளவு தான்” என்ற பூவிற்கு தன் மீதான அக்கறையில் பாரியின் கண்களில் கண்ட பறிதவிப்பில் முதல் முறையாக உள்ளுக்குள் இனம் புரியா உணர்வு.
அவள் மீதான அவனின் இந்த கவனம், கவனிப்பு எல்லாம் அவளுக்கு புதியதல்ல… ஆனால் இன்று ஏனோ அவனது அன்பில் மனதில் அலைப்புறுதல். அர்த்தம் விளங்கிடா ஆர்ப்பரிப்பு.
பூவின் நிலை விவரிக்கப்படாமல் இருக்க…
பூவிடம் பாரி காட்டிய அக்கறையில் வெளிப்படையாக அவனை ரசித்திருந்தது ஒரு ஜோடி விழிகள். மனதிற்குள் பூவும் பாரியும் காதலர்களாக மட்டும் இருக்கக்கூடாதென்று விரைவான வேண்டுதல் வேறு.
“தமிழ் இவனை எப்படி சமாளிக்கிற… உனக்கு தும்மல் வந்தாக்கூட படுத்தி வைப்பான் போலிருக்கே” என்ற அவி பாரியின் செயலை கேலி செய்ய அதையெல்லாம் பாரி பொருட்படுத்தவே இல்லை.
பூவிற்கான இடம் தன்னுடைய இதயத்தில் எப்போதும் தனி என்பதை அறிந்தே இருப்பவன், எவ்விதத்திலும் பூவிற்கான இடத்தை விட்டுக்கொடுத்திடவும் தயாராக இல்லை என்பதில் உறுதியாக இருந்தான்.
“நடக்க முடியும் தான பூ…”
“வேந்தா…” அவளது முறைப்பில்,
“சில் மலரே” என்றவன் அவள் மாட்டியிருந்த பையை தான் வாங்கிக்கொண்டான்.
“அதை அவளால தூக்க முடியாதாடா?” அவி வேண்டுமென்றே கேட்டான்.
“இப்போ உனக்கு என்னடா?”
“ஒன்னுமில்லை.” அவி முகத்தை சுருக்கிட… பாரியும் பூவும் ஒன்றாக நகையொலி செய்தனர்.
மூவரும் நடந்தபடி ஹாஸ்டல் பக்கமாக சென்றனர்.
“ஹாஸ்டல் ஒகேதான பூ?”
“ஓகே தான் வேந்தா” என்றவள், ஹாஸ்டல் பகுதிக்கு வந்ததும், அவனிடமிருந்து தன்னுடைய பையினை வாங்கி அலைபேசியை அதிலிருந்து எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
பாரியும் தன்னுடைய அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
இருவரும் அவரவர் கையிலிருந்த அலைபேசியின் தொடுதிரை விளக்க முகப்பு படமாக இருவரும் பள்ளி சீருடையில் ஒருவர் தோள் மீது ஒருவர் கைபோட்டபடி ஐஸ் கேண்டி சுவைக்கும் புகைப்படம் வீற்றிருந்தது.
“உங்களுக்குள்ள செம வேவ் லென்த் தான் போங்க” என்று அவி சொல்லிக் கொண்டிருக்கும்போதே… அவரவரிடமிருந்த அலைபேசியிலிருந்த சிம்மை கழுட்டி மாற்றிக்கொண்டனர்.
“என்னடா இது? மொபைல் எக்ஸ்சேஞ்சா?” என்ற அவிக்கு, இருவரும் ஒன்றாகவே தோளை குலுக்கினர்.
“என்கிட்ட புது மொபைல் வாங்கியதை சொல்லவாது செஞ்சியாடா நீ?” என்று அவி சோகம் போல் கேட்க…
அவனின் இருபக்கமும் வந்து நின்ற பாரியும் பூவும் அவியின் தோளில் கையை போட்டு “நண்பேன்டா” என்று சொல்ல… அவியும் இருவரையும் சேர்த்து அதையே கூறினான். மூவரின் முகமும் சிரிப்பில் நிறைந்திருந்தது.
அந்நேரம் யாரோ பின்னாலிருந்து பூவின் கண்களை மூடிட… தொடுகையிலே யாரென்று இனம் கண்டு கொண்டாள்.
“மாமா” என்று பூ உற்சாகமாகக் கூவியபடி, கைகளை பிரித்தெடுத்து திரும்பிட பரிதியும், பார்வதியும் நின்றிருந்தனர்.
“அத்தை” என்று பூ பார்வதியின் கரம் பிடித்து துள்ளி குதித்திட… அவர் அள்ளி அணைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்து விடுத்தார்.
“எப்படி மாம்ஸ் இருக்கீங்க?” என்று பரிதியிடம் கேட்ட பூவின் உச்சியில் தன் உள்ளங்கை வைத்து ஆட்டிய பரிதி… “சூப்பர்டா” என்று பதில் அளித்தான்.
“நான் கால் பண்ணேன் எதுக்கு அட்டெண்ட் பண்ணல அத்தை?” பூ பார்வதியிடம் உரிமையாகக் கோபித்துக் கொண்டாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலான்னு தான். உன்கிட்ட பேசினா உளறிடுவேன் இல்லையா… அதான் எடுக்கல” என்ற பார்வதியின் விளக்கத்திற்கு பின்னால் சமாதானம் அடைந்தாள்.
“என்னடா இனி காலேஜ் போகமாட்டேன்னு அடம் பிடிக்க மாட்டியே?” என்று பரிதி பாரியிடம் கேட்டிட….
அண்ணனை தழுவியிருந்தான் பாரி.
“தேன்க்ஸ் பரிதிண்ணா. இதை நான் எதிர்பார்க்கல” என பரிதியின் கன்னத்தில் இதழ் ஒற்றினான்.
அங்கு பூவின் பாதுகாவலர் பார்வதியும், தில்லையும் தான் என்று தெரிந்திட… பாரிக்கு இரட்டிப்பு மகிழ்வு. இனி தடையில்லாது பூ தன் வீட்டிற்கு வந்து போகலாம் என்பதால்.
அங்கே அனைவருக்கும் மனம் நிறைந்திருந்தது.
பாரியையே தொடர்ந்து வந்து கொண்டிருந்த பார்வைக்கு மட்டும் பூவை நினைக்கையில் பொறாமை பற்றி எரிந்தது. அவர்களது நெருக்கம் அவ்விழிகளுக்கு சொந்தக்காரருக்கு என்னவோ செய்தது.
பார்வதியையும் பரிதியையும் பார்த்த பின்னர்… பூ அவர்களுக்கு உறவினர் என்ற வகையில் பாரிக்கு நெருக்கம் என்று நினைத்த பின்னரே தன்னை தன் மனதை சற்று தனித்துக் கொண்டது.
ஆனால் பாரி மற்றும் பூவின் நட்பால் மட்டுமே அவர்களது குடும்பத்துக்குள் உறவு மலர்ந்தது என்பது தெரிந்திருக்கவில்லை.
*ஒரு சிலரின் மீது காரணமின்றி நாம் கொள்ளும் அன்புக்கு பெயரோ/விளக்கமோ கிடையாது. நட்போ/காதலோ ஒன்றன் வரையறையில் அடக்கிட முடியாது. அது ‘அன்பு’ அவ்வளவுதான்.*
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
37
+1
+1
So antha kangal tha amirtha
May be
Super epi sis…