Loading

அத்தியாயம்-38

 

காலை சாவகாசமாய் எழுந்து குளித்துத் தயாராகி தனம் வெளியே வர, கூடத்தில் சுயம்புலிங்கத்திற்கு தேநீர் கொண்டு வந்த தெய்வா மகளைக் கண்டதும் மேஜையில் கோப்பையை ‘டொம்’ என்ற சப்தத்துடன் வைத்துவிட்டு, அவளை முறைத்தபடியே முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு செல்ல, ஒருநொடி ஸ்தம்பித்துதான் நின்றாள்.

 

“ஏ தெய்வா.. என்னதிது? புள்ளய பாத்து இப்புடியா மொகத்த வெட்டிட்டு போவ?” என்று சுயம்புலிங்கம் கேட்க,

 

“ஒங்க புள்ள பண்ணது மட்டும் என்னவாம்? குடும்பமே கூடியிருக்கையில எம்புட்டு தெகிரியமா நெஞ்ச நிமித்திட்டு எவனயோ காதலிக்கேம்பா” என்று கோபமே உருவாய் தெய்வா கேட்டார்.

 

“கொலை குத்தமா ம்மா பண்ணினேன் நானு?” என்று தனம் கேட்க,

 

“அப்புடியிருந்தாகூட மனசு ஆரியிருக்கமடி” என்று தெய்வா கூறினார்.

 

“தெய்வா.. நாம தீபிக்குக் கட்டி வைக்கலியா? நீயு இப்புடி பேசுறத மாப்பிள்ள கேட்டாக்கா என்ன நெனப்பாவ?” என்று சுயம்புலிங்கம் கேட்க,

 

“ஏங்க ஆம்பள அவரு பேசுறதும் இவோ பேசுறதும் ஒன்னா?” என்றார்.

 

“அதுசரி.. சமத்துவமெல்லாம் பேச்சுக்குத்தான் போல? நம்ம வூட்டுலயே காணலியே” என்று தனம் கூற,

 

“நேசத்துல என்னத்த ஆணு பொண்ணுனு? அவோ எம் வளர்ப்புடி. தப்பா ரோசிச்சிருக்க மாட்டானு நான் நம்புதேம். ஒனக்கு நம்பிக்க இல்லயா?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.

 

“நம்பித்தான இப்புடி அம்புட்டு பேரு மூன்னுக்க மூக்கறுக்குறாப்ல பேசினா?” என்று கோபமாய் தெய்வா கேட்க,

 

“அம்புட்டு பேரு அம்புட்டு பேருனா யாரு முன்ன பேசினேம்? எல்லாம் நம்மூட்டு ஆளுவதான? ஒன்னு நடந்தாக்கா பட்டுனு அவியளுக்குத்தான அடிச்சு கூப்பிடுதோம்?” என்று கேட்டாள்.

 

“அகத்தப் பாத்தீயளா இவளுக்கு? இந்த பேச்சுக்குத்தாம்டி எனக்குப் பயந்து வருது. ஆருனு கேட்டா மட்டும் ஏம்டி வாயத்தெறக்க மாட்டுத?” என்று தெய்வா கேட்க,

 

“அவியளே வந்து பேசுவாவனு சொன்னேம் தானம்மா?” என்றாள்.

 

“ஏன் நீயு சொல்லத்தான? போயி மனச கலச்சிபுடுவம்னு அச்சபடுதியோ?” என்று அவர் கேட்க,

 

“அதுலாம் ஒங்களால முடியாத காரியம்மா. ஐயா மனசுலருந்து ஒங்கள கலைச்சுட முடியுமா சொல்லுவ? என்ன ஐயா? நான் வந்து பேசினாக்கா அம்மாவ மறந்துட்டு போயிடுவீயளா?” என்று கேட்டாள்.

 

“அதுயெப்புடித்தா?” என்று அவரும் மகளுக்கு ஒத்து ஊத, தெய்வா கணவரை முறைத்தார்.

 

“நீயு பாக்குறத பாத்தா ஆமானு சொல்லிருக்கனும் போலருக்கே?” என்று சுயம்புலிங்கம் தேநீரை ருசித்தபடியே கூற,

 

அவரை மேலும் முறைத்தவர், “அவிய எம்புருஷேம்டி” என்று மகளிடம் பாய்ந்தார்.

 

“அவியளும் எம்புருஷம்தாம்மா” என்று அவள் ஒரு அர்த்தத்தில் கூற,

 

நெஞ்சில் கைவைத்துக் கொண்ட தெய்வா, “ஏங்க இவ பேச்ச கேட்டீயளா? அடியே.. ஊரு சிரிக்க என்னத்தயாது பண்ணிட்டு வந்து அந்த மனுஷன நெஞ்ச புடிக்க வச்சுபுடாதடி” என்று மீண்டும் கத்தத் துவங்கினார்.

 

“ஷ்ஷோ..” என்று தலையைத் தேய்த்துக் கொண்டவள் தந்தையை நோக்க, “தெய்வா.. அனக்கத்தக்கூட்டாத உள்ளக்க போ” என்று சுயம்புலிங்கம் சப்தம் போட்டார்.

 

“ஆமா ஒன்னு பேச விடாதீய இந்தூட்டுல என்னய. என்னமாது செய்யக்கூடாதத செஞ்சுட்டு வந்த பொறவு அய்யோ அம்மானு அடிச்சுட்டு ஏம் வளர்ப்பயில்ல பேசுவீய” என்று புலம்பியபடியே அவர் உள் செல்ல,

 

தந்தையின் அருகே வந்து அமர்ந்து அவர் கரம் பற்றியவள், “நீங்க என்ன நம்புறீங்க தான ஐயா?” என்று கேட்டாள்.

 

அவள் தலையைப் பரிவாய் கோதியவர், “ஓங்கண்ணுல பயமில்லத்தா. அதுவே நீயு எம்புட்டு உறுதியாருக்கனு சொல்லுது. அம்புட்டு உறுதியிருக்குன்னா நீயு நல்ல பாதையிலதேம் போயிருப்ப. ஐயா ஒன்னய நம்புதேம். அவியள வந்து பேசச்சொல்லு. பாத்து முடிவு செய்யுவம்” என்று கூற,

 

கண்கள் கலங்க தந்தையை ஏறிட்டவள், “அம்மா ஏம்ப்பா நம்பவே மாட்டிக்காவ? நாயென்ன ஓடியா போவப்போறேம்?” என்றாள்.

 

“அவோள பத்தித் தெரியாதா கண்ணு? பழய ரகம். ஊரு விட்டு ஊரு பொண்ணு எடுக்கவே அந்த குதிகுதிச்சாவ. எல்லாம் பயந்தேம் கண்ணு. நீயு என்னமாது தப்பா கிப்பா முடிவு எடுத்துபுட்டு வெசனப்பட்டா ஆருக்கு வருத்தம்? முக்கி மொனங்கி முத்தா பெத்தவன்ன? அதேம் சவட்டுமேனிக்கு பேசிட்டு அலையுதா. வெசனப்படாத தாயி” என்று மகளையும் விட்டுக் கொடுக்காது, மனைவியையும் குறைத்துப் பேசாது பேசினார்.

 

அதில் சிறு புன்னகையுடன் தன் கண்ணீர் துடைத்தவள், “அம்புட்டு லவ்ஸுன்ன ஐயா அம்மா மேல?” என்க,

 

“இல்லாங்கட்டிக்கு வாழ முடியுமாத்தா?” என்று சிரித்தார்.

 

சிறு புன்னகையுடன் தலையசைத்தவள் எழுந்து சமையலறை செல்ல, அங்கு சங்கமித்ரா மதிய உணவுகளை கட்டிக் கொண்டிருந்தாள்.

 

“மைணி பசிக்கி” என்று அவள் கூற,

 

“அவோளுக்கு ஒன்னுமில்லனு சொல்லியனுப்பு” என்று உள்ளிருந்து தெய்வா குரல் கொடுத்தார்.

 

முகத்தில் அறைந்தார் போன்ற பதிலில் முகம் சுருங்கிய தனத்தைக் கண்டு வருத்தம் கொண்ட சங்கமித்ரா, ‘இரு வரேன்’ என்பதாய் சைகை செய்துவிட்டு உள்ளே சென்றவள் தட்டில் உணவுடன் வந்தாள்.

 

“அதுசரி.. இவோ என்னிக்கு எம்பேச்ச கேட்டா இன்னிக்குக் கேக்க. நாஞ்சொன்னா அதுக்கு மறுப்பாதான செய்வாவ. ஆனாலுங்கூட நானு ஒன்னும் சொல்லிடக்கூடாது. ஆரயும் மூட்டிக்கொடுத்து என்னய வில்லியாக்க பா(ர்)ப்பா” என்று தெய்வா சங்கமித்ராவை சப்தம் போட,

 

தட்டைவைத்துவிட்டு எழுந்த தனம், “என்னய பேசனும்மினா எங்கிட்ட பேசும்மா. அவோள வையாத. என்ன நாஞ்சாப்பிடக்கூடாதாக்கும்? உண்கல தாயி. இந்தா.. நான் திங்காமதான இந்தூட்டுல பண்டம் மிச்சமாவப்போவுது” என்று கத்திவிட்டு நகர்ந்தாள்.

 

அவள் கரம் பற்றி நிறுத்திய சங்கமித்ரா, “நான் புதுசா சொல்ல வேணாம் தனம். விவசாயம் பண்றவங்க கூடதான பொறந்து வளந்துருக்க? உன் தட்டுல மிஞ்சி குப்பைக்குப்போறது கூட இல்லாம எத்தனைப்பேர் பட்டினி கிடப்பாங்க? சாப்பிடு. யாரும் என்னமும் பேசுறாங்கனு அதை சாப்பாடுல எப்பவுமே காட்டக் கூடாது” என்று பொதுவாய் கூறுவதைப் போல் மாமியாரைக் குறித்துக் கூற,

 

அங்கு வந்த கார்த்திகா, “என்னாச்சு சங்கு?” என்றாள்.

 

ஓரக்கண்ணால் தன் மாமியாரைப் பார்த்துக் கொண்டவள், “சாப்பிடு தனம்” என்க,

 

தனத்திற்கு கண்ணை முட்டிக்கொண்டு கண்ணீர் வந்தது. அது வருத்தம் என்பதைவிட கோபத்தின் வெளிப்பாடாகவே வெளிப்பட்டது.

 

அப்படியே தனம் நிற்க, அவளை அமர்த்தி தட்டிலுள்ள உணவை சங்கமித்ரா ஊட்ட, அன்னையை முறைத்துக் கொண்டே அதை வாய் திறத்து வாங்கிக்கொண்டாள்.

 

இவற்றைப் பார்த்த தெய்வா முகத்தைத் திருப்பிக் கொண்டு சமையலறைக்குச் சென்றுவிட, “மைணி போதும் விடு. நாங்கெளம்புதேம்” என்று கூறினாள்.

 

“இருக்குற கோவத்த சாப்பாட்டுல காட்டி என்னடி பண்ணப்போத? ஒழுங்கா பசியாறிட்டு போ” என்று கார்த்திகா அதட்ட,

 

“அதேம் ஒங்க மாமியா நெறக்க நெறக்க குடுத்துட்டாவளே. இன்னும் வேற வேணுமா? ஒருநா மிச்சம் வச்சு பாவம் வந்தா நானே கட்டிகிடுதேம்” என்றவள், “நீயே சாப்பிட்டுடு மைணி. எனக்கு சத்தியமா தொண்டைக்குக் கீழ எறங்க மாட்டுது” என்று கூறினாள்.

 

அவளைப் பார்க்கவே சங்கமித்ராவிற்கு பாவமாக இருந்தது. “சொல்லிடலாம்ல தனம்? சொல்லாமருக்கப்போய் தான அவங்க பயப்படுறாங்க” என்று சங்கமித்ரா மெல்லொலியில் கேட்க,

 

“பொல்லாத பயம்.. போ மைணி. எங்கைய்யாக்கு உள்ள நம்பிக்க இவியளுக்கு இல்லத்தான? பொட்டப் புள்ள காதலிக்கக்கூடாதாம். கட்டிகிட்டு பொறவு காதலிக்க மாட்டேம்னா ஆவுமா? இவிய பாத்து குடுக்கவனாயிருந்தா எனக்குக் காதலு வந்தே ஆவனும். நானா தேடிகிட்டா வரக்கூடாதாம்ல?” என்று கோபமாய் கேட்டவள் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

 

“ஏன்டி சொல்ல மாட்டிக்க. ஈகோவோ பயமோ. என்னவாருந்தா என்ன? ஒன்னய வையாமருப்பாவதான?” என்று கார்த்திகா கேட்க,

 

“அவிய வந்து சொல்லுவாவ மைணி” என்று இருக்கமாய் கூறினாள்.

 

அவளுக்குள் ஏதோ முடிவாகியிருக்கின்றாள் என்பது பெண்கள் இருவருக்கும் புரிந்தது. அதைத் தோண்டித் துருவ விரும்பாது அவர்கள் விட்டுவிட, “நான் வாரேம் மைணி” என்று எழுந்தாள்.

 

தட்டை வைத்துக் கொண்டு சங்கமித்ரா கெஞ்சுதலாய் பார்க்க,

 

அவள் கையிலுள்ளதை வாங்கிக் கொண்டு, “போதும் மைணி. ப்ளீஸ். முடியல” எனச் சென்றுவிட்டாள்.

 

சங்கமித்ராவால் அவள் வலியை புரிந்துகொள்ள முடிந்தது. தன்னவன் தனக்கில்லையென்ற வலியை அவள் உணர்ந்திருக்கின்றாள். தன்னவன் தனக்குத்தான் என்றபோதும் அவனுக்காக தனம் வலி சுமக்கின்றாள். அவ்வளவு தான் வித்தியாசம் என்று அவள் பெருமூச்சு விட்டுக்கொள்ள, “அத்தைய என்ன ரகத்துல சேக்கனே புரியலட்டி” என்று கார்த்திகாவும் பெருமூச்சு விட்டாள்.

 

வண்டியில் செல்ல மனமில்லாது பேருந்தில் செல்லுவதற்கு புறப்பட்டு ஏறி அமர்ந்த தனலட்சுமி மனம் பலதரப்பட்ட உணர்வுகளில் சிக்கி சில நினைவுகளில் சென்று நின்றது.

 

‘வளவாண்ணே.. ஓங்க கூட்டுக்காரவ என்னைய ஆட்டத்துல தோக்கடிக்காவ எப்பப்பாரு.. அவோள இனிமே வெளாட கூட்டிக்கிட்டு வராதீய. என்னைய தோக்க தோக்க வைக்காவ’ என்று சிறு பிராயத்தில் ஓடி பிடித்து விளையாடும்போது வடிவேல் எப்போதும் அவளை பிடித்துவிடுவதில் கோபம் கொண்டு அவள் கத்த,

 

“ஒனக்கு எங்கிட்டருந்து தப்பி ஓட தெரியில. ஒழுங்கா ஆட கத்திகிட்டுவா. பச்ச புள்ளயாருந்துட்டு சாட்டு சொல்லிட்டுருக்கவ” என்று வடிவேல் கூறினான்.

 

அவனைப் பார்த்து மூக்கு விடைக்க முறைத்துவிட்டு அவள் செல்ல, அதில் கைகள் தட்டி இவன் சிரித்துக் கொண்டான்.

 

அந்த பொன்னான நினைவில் அவள் இதழ்கள் பூவாய் மலர்ந்தது.

 

‘யாருடி அவிய? தெரிஞ்சவியளா?’ என்று கல்லூரி படிக்கும் வயதில் பேருந்து நிலையத்தில் தன்னை பத்திரமாய் அழைத்துவந்து விட்டுச் செல்பவனையே பார்த்து நின்றவளிடம் அவளது தோழி ஒருத்தி கேட்க,

 

‘அண்ணே பிரெண்டு’ என்று அவனைப் பார்த்தபடியே கூறித் திரும்பியவள் மனதில் ஒருவித இனம் புரியாத சிலிர்ப்புத் தோன்றி மறைந்திருந்தது.

 

‘ஏ புள்ள..’ என்று பேருந்து நிலையத்திற்கு ஓடிவந்த வடிவேல் மூச்சிறைக்க நிற்க,

 

‘எதுக்கு இந்த ஓட்டம் ஓடி வாரீய?’ என்று தனது தண்ணீர் போத்தலை எடுத்து நீட்டினாள்.

 

மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அதைவாங்கிப் பருகியவன், ‘சாப்பாட விட்டுப்போயிட்டியாம். அத்தே குடுத்துவிட்டாவ’ என்று நீட்ட,

 

‘இதுக்கா இம்புட்டு ஓட்டம்? இல்லாங்கட்டிக்கு அங்கனயே வாங்கி சாப்பிட்டுருப்பேம்ல?’ என்று கேட்டாள்.

 

‘சாப்டியா இல்லயானு யோசனையாவே இருக்கும்ல?’ என்றவன் அவளது பார்வையில் தடுமாறி, ‘அத்தைக்கு.. அத்தை ரோசிச்சுட்டே இருப்பாவன்ன?’ என்க,

 

‘ம்ம்.. ரேசனலாம் வேணாம். சரியா நேரத்துக்கு சாப்டுடுவேம்’ என்று அதை வாங்கியவள், ‘ஒங்க அத்தைக்கு.. அத்தைக்கு சொல்லிடுவ’ என்றாள்.

 

கல்லூரி இளநிலை முடியும் தருவாய் ஒன்றில் தனது புத்தகம் ஒன்றில் இதயம் போன்று வரைந்து அதில் ‘TV’ என்று எழுதி அவள் அழகு பார்க்க, ‘என்ன டீவிடி? என்ன படம் ஓடுதாம்? காதல் படமோ?’ என்று அவள் தோழி கேட்டாள்.

 

அதில் வெட்கம் கொண்டு புன்னகைத்தவள், ‘ஓடும்.. காதல் படந்தேம் கூடிய சீக்கிரத்துல ஓடும்’ என்று கூற, ‘ரைட்டு.. இது முத்தப்போவுது போலயே’ என்று அவள் கூறினாள்.

 

ஒரு நாள் கீரை ஆய்ந்துக் கொண்டிருந்த கார்த்திகாவிடம் வந்தமர்ந்தவள், வேறு யாருமில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு, ‘எனக்கு அவோள புடிச்சுருக்கு மைணி’ என்க,

 

கீரையை ஆய்ந்தபடியே, ‘எவோள?’ என்று கேட்டாள்.

 

‘அதேம்..’ என்றவள் கொஞ்சம் வெட்கத்தோடு, ‘வளவாண்ணே கூட்டுக்காரவ’ என்க,

 

‘வேலு அண்ணேனயா?’ என்றாள்.

 

‘ம்ம்..’ என்று தலையசைத்தவள், ‘அவோளுக்கும் பிடிக்கும்னுதேம் நெனக்கேம்’ என்க,

 

‘அதெப்புடி சொல்லுத?’ என்று கேட்டாள்.

 

‘அதுலாம் தோனும் மைணி’ என்றவள், ‘இன்னும் ரெண்டு வருஷம் படிச்சு முடிச்சு பொறவாட்டிக்கு சொல்லுவேம் மைணி. அவியளுக்கும் என்னய புடிக்கும்ன. காத்திருப்பாவ’ என்று கண்கள் பிரகாசிக்கக் கூற,

 

‘நீயு கிரஷ்ஷுனு சொல்லிட்டுச் சுத்தும்போதே நெனச்சேம்டி. இப்பத முத்திபோச்சுன்ன?’ என்று கேலி செய்த கார்த்திகா, தன்னாலான அறிவுரைகளையும் கூறிவிட்டே சென்றாள்.

 

நினைவுகளின் பயணத்தை அவளது பயண முடிவு தடை செய்ய, ஒரு பெருமூச்சுடன் எழுந்து கல்லூரிக்கு நடையைக் கட்டினாள், தனலட்சுமி.

 

அங்கு தென்னந்தோப்பில் மரத்தடியில் சாய்ந்து அமர்ந்துகொண்டிருந்த வடிவேலுவிற்கு குழப்பமான மனநிலையில் நெஞ்சம் தவித்தது.

 

அவன் அருகே ஏதோ சப்தம் கேட்டு நிமிர, நந்தியையும் மருதையும் பிடித்துக் கொண்டு வளவன் நின்றிருந்தான்.

 

அவர்களைப் பார்த்துக் கொண்டு அவன் மீண்டும் சிரம் தாழ்த்த, மருது அவன் அருகே வந்து அவன் மடியில் முகம் வைத்துப் படுத்துக் கொண்டது.

 

அதில் தன்னைப்போல் அவன் இதழ்கள் கனிவாய் விரிய, கரம் தன்னியல்பில் மாட்டின் தலையைக் கோதிக் கொடுத்தது.

 

“என்னம்லே பிரச்சின? ஏன் இப்புடி இடிஞ்சிருக்கவ?” என்று வளவன் கேட்க,

 

“தவிப்பாருக்குதுலே” என்றான்.

 

“ஏம்லே? என்ன ஆவிப்போச்சு இப்பத? நீயுன்னா வீட்டுல அம்புட்டுபேரும் கண்ண மூடிக்கிட்டு சரினுடுவாவ” என்று வளவன் கூற,

 

“அதுக்குலாம் பயமில்லலே. அதெல்லாம் சரினு சொல்லுவாவனு நம்பிக்கருக்கு. ஆனா போயி பேசனுமே” என்று தவிப்பாய் கூறினான்.

 

அவனது தவிப்பான நிலைகண்டு அவன் தோளில் கரமிட்ட வளவன், “அவோ அண்ணேனா இல்லாது வேற ஆளா நெனச்சுகிட்டு சொல்லுலே. ஒன்னய தப்பாலாம் நெனக்க மாட்டேம்” என்க,

 

“நீயு என்னய எப்பவுமே தப்பா நெனச்சுகிட மாட்டலே” என்று பெருமையாய் கூறிக் கொண்டவன், “மாமாவ நெனச்சு பயமில்லலே. அத்தேதாம் ஏதாது பேசிபுடுமோனு வெசனமாருக்கு. போதாதுக்கு இன்னும் கடன அடச்ச பாடில்ல. ஒன்னய நம்பி உள்ளக்க விட்டமேனு ஒத்த பார்வ பாத்துச்சுனாகூட செத்துடுவேம்லே” என்று கூறியவன் கண்கள் ரத்தமாய் சிவந்துபோனது.

 

“ஏலே மாப்ள.. கடன அடச்சுபோட்டுதேம் நீயு கட்டிகிடனும்முனா எப்புடிலே? அத கட்டிகிட்டு கடன அடைக்க முடியாதா? ஓங்கடன அடைக்க நாந்தாரேம்னு சொல்ல எனக்கு செத்த நேரமாவாதுலே.. ஆனாகூட அது ஒனக்கு தோதில்லனு புரிஞ்சுதேம் தள்ளி நிக்கேம். ஒன்னு புரிஞ்சுக்கலே.. யாரும் ஒன்னய கடம்பட்டவனா பாக்க மாட்டாவ. நீயு அதயே நெனக்காத. மிஞ்சிபோனா ரெண்டு மூனு வருஷத்துல அடச்சுபுட மாட்டீயா? அதுவே கூடலே. நீயு ஒத்த வருஷத்துலகூட அடச்சுபுடுவ. பொறவு ஏம்லே அதயே நெனக்க?” என்றவன், “அடுத்து அம்மா வெசயத்துக்கு வாரேம். அம்மா துடுக்கா பேசுறவதேம். ஆனா நீ நெனக்குற வார்த்தைய சொல்லுவாவனு எனக்கு தோனலலே. அப்படியே சொன்னாலுங்கூட நீயேம் வெசனப்படனும்முங்கேம்?” என்க,

 

நண்பனை புரியாத பார்வை பார்த்தான்.

 

“நீயு ஒன்னும் அத ஏமாத்திட்டு போவலலே. ஒருநாகூட தப்பா ஒரு பார்வ பாத்தது இல்லவே. ஏங்கூட்டுக்காரனயும் எனக்கு தெரியும், ஏந்தங்கச்சியவும் எனக்குத் தெரியும். அதுகூட ஒன்னு ரெண்டுமொற ஆசபட்டு பேசிருக்கும்லே. ஆனா நீயு நெசத்துக்கும் பம்பிட்டு போவத்தேம் பாத்திருப்ப” என்று நண்பனை அறிந்தவனாய் கூற,

 

வடிவேலின் கண்கள் கலங்கியது.

 

“ஊரு பாக்க அதுக்கு நீயு மஞ்ச கயிறு கட்டலலே. மத்தபடிக்கி அது ஓம்பொஞ்சாதிதேம். அதுட்ட ஒனக்கு உரிமையா இல்ல? அத்த மாமானு வாயி நெறக்க கூப்பிடுததான? ஓம் மாமேன் மவள பாக்கவும், பேசவும் கட்டிகிடவுந்தேம் ஒனக்கு உரிம இல்லையா என்ன? எங்கம்மா அப்புடி ஒரு வார்த்தையா கேட்டுச்சுனா, ஏம்மருமவேன்னு நீங்க கூப்பிட்டது மட்டும் வெறும் பேச்சானு நெஞ்ச நிமித்துட்டுக் கேளுலே” என்று அவன் தோள் தட்டி வளவன் கூற,

 

நண்பனை அணைத்துக் கொண்டு, “வளவா..” என்று அழுதேவிட்டான்.

 

“லே.. என்னலே சின்னபுள்ளையாட்டம்?” என்று கேட்ட வளவன் அவனுக்குத் தட்டிக் கொடுக்க,

 

“சத்தியமா ஒன்னய போலலேம் ஆருக்கும் கூட்டுக்காரன் அமையமாட்டியாம்லே. ஓந்தங்கச்சிய விரும்புறேன்னதுக்கும் பொல்லாப்பு காட்டல. ஒங்கம்மா பேசுமேன்னதுக்கும் ஒடக்கிழுக்கல. இம்புட்டுக்கும் எனக்காவ பேசாறீயேலே” என்று கேட்டான்.

 

“ஏன்னா நீயு ஏம் வேலுலே. ஏம் வேலன எனக்குத் தெரியாதாக்கும்? காதலு ஒன்னும் கொலயோ குத்தமோ இல்லியேலே. நாம போற பாத சுத்தமாருந்தா, நம்ம காதலும் சுத்தமாதாம்லே இருக்கும். ஓங்காதலு சுத்தமான காதலுலே. ஒன்னய கட்டிகிட ஏந்தங்கச்சி குடுத்து வச்சிருக்கனும். பொறவு என்னம்லே வெசனம்?” என்று வளவன் கேட்க,

 

கண்ணீருடன் நண்பனைப் பார்த்து, “உருக்குறலே நீயு என்னைய” என்றான்.

 

“போலே போ.. ஏந்தங்கச்சிட்ட பேச வேண்டியதலாம் எங்கிட்ட பேசுற. சும்மாவே அவோ இப்பம்லாம் ஒன்னய பாத்தா பொறாமையாருக்குண்ணேனு சொல்லிட்டுத் திரியிரா” என்று வளவன் கூற,

 

“என்னத்துக்காம்?” என்று கண்ணீர் துடைத்து சிரித்தபடி கேட்டான்.

 

“ஓங்கூடயே நாயிருக்கேனாம்” என்று வளவன் சிரிக்க,

 

“அதுசரி” என்று சிரித்தவனுக்கு அழகாய் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

 

நந்தி தன் தலையை ஆட்டி அசைத்து வளவனை அழைக்க, “வாரேம்லே வாரேம் வாரேம்” என்று எழுந்தவன், “சின்னவரே வாரீயலா?” என்று மருதை தட்டிக் கொடுத்துக் கேட்க,

 

மருது வடிவேலிடமிருந்து எழுந்தானில்லை.

 

“சரிதேம்.. செத்த நேரம் வச்சுட்டு ஒரு நட நடத்தி கொட்டால கட்டிடுலே. நானு இவேனோட போயி ஒருக்கா சோலிய பாத்துபோட்டு வாரேம்” என்று கூறிய வளவன் நந்தியோடு செல்ல,

 

மருதை தடவிக்கொடுத்தபடி சாய்ந்து அமர்ந்தவன் மனக்கண்ணில் பூவாய் சில நினைவுகள் மலர்ந்தது.

 

அவள் கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பவனைப்போல் அவன் நின்றுகொண்டிருக்க,

 

கல்லூரி முடித்து வந்தவள், “யாருயா அது? நம்மண்ணே கூட்டுக்காரவளா? என்ன இந்த பக்கம்?” என்று அவன் அருகே வந்த கேட்டாள்.

 

அவள் தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டு மனதில் அடைமழையில் ஆட்டம்போட்டபோதும், ஏதோ இப்போதுதான் பார்ப்பதைப்போல் திரும்பியவன், “அட நீயு என்னம்மா இங்கன?” என்றான்.

 

“அதுசரி.. நாங்க கேக்க வேண்டியத நீய கேக்கீயளாக்கும்?” என்றவள், “எங்காலேஜு இங்கனதேம் இருக்குன ஒங்களுக்கு தெரியாதுன்ன?” என்று கேட்க,

 

அசடு வழிவதை மறைத்துக் கொண்டு, “ஆமாம்மா.. ஒரு சோலியா வந்தேம்” என்றான்.

 

“ஏ தனம்.. யாருபா?” என்றபடி அவள் தோழி அருகே வர,

 

வடிவேலைப் பார்த்தபடி, “எங்கண்ணேனோட கூட்டுக்காரவ” என்க,

 

“யாரு நீ சொல்லுவியே..” என்று கூற வந்தவளை விழிகள் விரித்துப் பார்த்தபடி, “ஏ பிள்ள.. ஓன் அக்கா போனடிக்க சொன்னாவன்னியே” என்றாள்.

 

“என் அக்காவா?” என்ற அந்த பெண்ணும் தனக்கு முளைத்தத் திடீர் அக்காவைப் பற்றி புரியாமல் விழிக்க,

 

“ஆம்மா.. உன்ன்.. அக்க்காதேம்ம்” என்று கண்களை உருட்டி அவள் அழுத்திக் கூறினாள்.

 

அவள் அழுத்தத்தில் விடயம் புரிந்துகொண்ட அவள் தோழி, “ஒ..ஓ.. என் அக்காவா.. ஆமா ஆமா.. கூப்பிட சொன்னாங்க. நான் கூப்பிட்டுட்டு வரேன்” என்று நகர,

 

செல்பவளைக் கண்டு பெருமூச்சுவிட்டுக் கொண்டு திரும்பியவள், “வண்டில வரலியாக்கும்?” என்றாள்.

 

“இல்லத்தா. சர்வீசுக்கு விட்டிருக்கேம். வளவேனும் சோலினு மொதயே ரொம்ப தூரம் கெளம்பிட்டியாம். சரி நமக்கு பக்கந்தானேனு வந்துட்டேம். பஸ்ஸு எப்ப வரும்?” என்று வடிவேல் கேட்க,

 

“இந்தா வந்துடும்” என்றவள், அடுத்து என்ன பேசி பேச்சை வளர்ப்பதென்று காரணம் தேடினாள்.

 

“சாப்டீயளா? ஆளே என்னவோபோல இருக்கீய?” என்று அவள் கேட்க,

 

“வேனா வெயிலுத்தா. அதேம் கொஞ்சம் தெணயாருக்குது. சாப்பாடெல்லாம் சாப்டத்தேம் செஞ்சேம்” என்றான்.

 

“தர்பூசணி விக்காவ வாங்கி சாப்பிட்டத்தான?” என்று அவள் கூற,

 

அங்கிருந்த கடையைப் பார்த்தான்.

 

அவளுக்கு தர்பூசணி என்றாள் கொள்ளை பிரியம் என்று அவனுக்கா தெரியாது? ஆனாலும் கூட இப்போது அவனுக்காவே கூறினாள்.

 

சென்று இரண்டு துண்டுகளை வாங்கி வந்தவன் அவளிடம் ஒன்றை நீட்ட, போக்கு காட்டாமல் உரிமையுடன் வாங்கிக்கொண்டாள். அவள் தன்னிடம் எடுத்துக்கொள்ளும் அந்த உரிமை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

தர்பூசணிச்சாறு இதழோரம் வழிய அவள் உண்ணும் அழகைப் பார்க்கவே, அவன் தாகம் தனிவதாய் ஒரு எண்ணம். மாறாய் அவளுக்குத்தான் அவன் பார்வையில் தாகம் கூடியது.

 

இன்ப அவஸ்தையோடு அதை உண்டு முடித்தவள், “பஸ்ஸு வருது” என்க,

 

“ம்ம்” என்று தலையசைத்தான்.

 

பேருந்து வரவும் இருவரும் ஏறிக்கொள்ள, ஒரு ஜோடி இருக்கைகள் அவர்களுக்காகவே காத்திருப்பதைப்போலிருந்தது.

 

சென்று அமர்ந்தவள் அவனை நோக்க, அவன் அவள் அருகே சென்று நின்றுக்கொண்டான்.

 

உட்காரென்று அவள் இதழ்கள் மட்டும்தான் கூறவில்லை, அதேபோல் வேண்டாம் என்பதையும் அவன் இதழ்கள் மட்டுமே கூறவில்லை.

 

“எய்யா நீயி ஒக்காரப்போறியாக்கும்?” என்று ஒரு பெண்மணி வந்து கேட்க,

 

“இல்லைங்கக்கா.. நீங்க ஒக்காருவ” என்றான்.

 

அந்த பெண்மணியை உள்ளே அனுப்பியவள் அவனை முறைத்துவிட்டுக் திரும்பிக் கொள்ள,

 

‘இரவா பகலா குளிரா வெயிலா

என்னை ஒன்றும் செய்யாதடி

கடலா புயலா இடியா மழையா

என்னை ஒன்றும் செய்யாதடி

 

ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி

என்னை எதோ செய்யுதடி, காதல் இதுதானா

சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்

கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்

 

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்

என்றும் ரகசியம்தானா

கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா’ என்று பாடல் பேருந்தில் ஒலித்தது.

 

அதில் சட்டென இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

 

அந்த பார்வையில் இருவருக்குமே ஒருவித தடுமாற்றம் உருவானது.

 

வெவ்வேறு புறம் முகம் திருப்பிக் கொண்டவர்களுக்கு, அந்த தடுமாற்றத்தை சமன் செய்ய கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது.

 

அவளை விட அவனுக்குக் கூடுதலாகவே தேவைப்பட்டது.

 

அழகான பாடல்களுடன் அப்பயணம் முடிவடைய, இருவரும் கீழே இறங்கினர்.

 

“வீட்டுக்கு வாரியளா?” என்று அவள் கேட்க,

 

“தோப்புக்கு போகனும்” என்றான்.

 

சுருங்கத்துடித்த முகத்தை சரிசெய்தவள், “சரி.. போய்வாரேம்” என்க,

 

“ம்ம்” என்று கையசைத்தான்.

 

கொஞ்சம் தூரம் சென்றவள் திரும்பிப் பார்க்க, அவளையே பார்த்து அவள் பார்வைக்காக காத்திருந்தவனுக்கு அப்படியொரு உணர்வு தோன்றியது.

 

அவன் உவகையை படம் போல் காட்டிய முகத்தைக் கண்டவள் மனமும் குளிர்ந்து போக, உற்சாகமாய் கையசைத்துவிட்டுச் சென்றாள்.

 

‘அவோளுக்கு என்னய புடிச்சுருக்குது. அவோ கண்ணே சொல்லுது’ என்று தன் நெஞ்சை நீவிக் கொண்டவன், ‘ஐ லவ்யூ சொல்லுவியா புள்ள எனக்கு?’ என்று எண்ணிக் கொள்ள,

 

அந்த நினைவுகளை நினைத்துத் தற்போதும் அவன் இதழ்கள் விரிந்தன.

 

‘ஐ லவ் யூ சொல்லி கட்டிக்கனு வந்து நின்னுபுட்டா’ என்று மனதோடு கூறிக் கொண்டவன் மருதைத் தட்டிக் கொண்டு எழ, ‘ஈவினிங் பேசனும். பஸ் ஸ்டாப்பிக்கு வந்துடுவ’ என்று அவனுக்கு தனலட்சுமி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

 

அதைப் பார்த்தபடியே பதில் அனுப்பாது அவன் நிற்க,

 

‘ஒங்கள பாத்து பேசனும். அம்புட்டுதேம். வாரீய தான?’ என்று கேட்டாள்.

 

‘ம்ம்..’ என்று அவன் பதில் அனுப்ப, ‘ரொம்ப ரோசிக்காதீய. ஒங்களுக்கும் ஒங்க கற்புக்கும் என்னால எந்த பங்கமும் வாராது’ என்று பதில் அனுப்பினாள்.

 

‘அடியாத்தீ..’ என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சிரித்தவன், ‘கோம்ப… கொழுப்பாடி ஒனக்கு?’ என்க,

 

‘ஆமாங்கேம். அதுக்காவ என்ன செய்யப்போறீயளாம்? வந்து அளந்து பாக்க போறீயளாக்கும்?’ என்றாள்.

 

‘’ஏட்டி.. என்னட்டி பேச்செல்லாம் ஒருபடியாருக்கு’ என்று அவன் கேட்க,

 

‘காலையில சாப்டீயளா?’ என்று வேறு பேச்சுக்குத் தாவினாள்.

 

‘சாப்டேம்.. சாப்டுதேம் வயலுக்கு வந்தேம்’ என்று அவன் கூற,

 

‘அப்ப சரி. நாஞ்சாப்பிடல. சமாதானம் பண்ணி என்னைய சாப்பிடச் சொல்லுங்க’ என்றாள்.

 

அதை கண்டு பக்கென்று சிரித்தவன், ‘நானா கேட்டு சொல்லனும் அத’ என்க,

 

‘அதெல்லாம் எனக்கு பிரச்சினயே இல்ல. நீங்களா கேக்காட்டியும் நானா கேட்டு வாங்கிப்பேம்’ என்றவள், ‘அதுக்கு உரிம இருக்குதான?’ என்று கேட்டாள்.

 

‘ஒனக்கில்லாதாத்தா?’ என்று கேட்டவன் குறுஞ்செய்தியில் அவன் உயிரே உருகி வழிவதாய் அவளுள் ஒரு உணர்வு…

 

‘பாக்கனும்போலருக்கு’ என்று அவள் செய்தி அனுப்ப, மருதோடு சேர்ந்து ஒரு சுயமி எடுத்து அனுப்பினான்.

 

‘நல்ல அழுவ போல?’ என்று அவன் கண் பார்த்து கதைபடித்தவளாய் கேட்க,

 

சிரிக்கும் பொம்மைகளை அனுப்பினான்.

 

‘வந்துபுடுங்க.. பாக்கனும். மனசு பாக்கனும்மினு தவிக்கி’ என்று கூற,

 

‘வாரேம் லச்சு’ என்றான்.

 

‘ம்ம்..மணியாச்சு.. வரேம்’ என்றவள், ‘போட்டா?’ என்க,

 

‘’போய்வா’ என்று பதில் அனுப்பிவிட்டு வைத்தான்.

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்