
திருப்பம்-10
“ஹலோ” என்று அழுத்தமான குரல் காதில் விழ,
தன் நெஞ்சாங்கூட்டை அழுத்திக் கொண்டவள் அலைபேசியை சற்றே இறுக்கிப் பிடித்து, “ம்ம்” என்று மெல்லிய ஒலியில் முனகினாள்.
“ஓன் முடிவு என்ன?” என்று எவ்வித பூசலுமின்றி அவன் பளிச்சென்று கேட்டுவிட,
இங்கு பெண்ணவளுக்கு வியர்த்து வழியத் துவங்கியது.
“கேள்வி கேட்டேம்” என்ற இரண்டே வார்த்தையில் அவள் நெஞ்சில் நீர் வற்றச் செய்திருந்தான்.
பதில் பேசிட இயலவில்லையா? தைரியமில்லையா? என்று அவளுக்கே தெரியவில்லை!
“அ..அப்பா என்ன சொல்றாரோ..” என்று கூறுவதற்குள் கண்களில் நீர் வழியத் துவங்க, இதழ் கடித்து அடக்க முற்பட்டாள்.
“ஓம் மனசுக்கு என்ன படுதுனு கேட்டதாதேம் நெனவு” என்று வார்த்தைகளில் பெரும் அழுத்தம் காட்டினான் திருமாவளவன்.
“நானா என்ன முடிவு செய்ய?” என்று வாய்க்குள் அவள் முனகியது அவனுக்குக் கேட்காமல் இல்லை.
“கல்யாணம் பண்ணப்போறவிய யாரு?” என்று மீண்டும் அழுத்தமாய் அவன் குரல் ஒலிக்க,
“எல்லாம் தெரிஞ்சே பேசுற உங்கக் கிட்ட என்ன பதில் சொல்றதுனு எனக்கு தெரியலைங்க” என்று கதறும் குரலைக் கட்டுப்படுத்திக் கூறிவிட்டாள்.
சிலநிமிட மௌனத்திற்குப் பின், “எங்கம்மா பண்ண பிரச்சினையால உங்கப்பா ரொம்ப கோபமா இருக்காரோ?” என்று அவன் கேட்க,
“ஹ்ம்..” என்று பெருமூச்சோடு பதில் தந்தவள், “எனக்கு இப்ப உங்கக்கிட்ட பேசுறதுகூட சரியானதா தெரியலைங்க. என்ன முடிவு எடுக்கனும்னு எனக்கு சத்தியமா தெரியலை” என்றாள்.
மீண்டும் மௌனம்…
“ஒங்கைய்யா மாப்பிள்ளனு ஒனக்குக் காட்டினது யார?” என்று அவன் கேட்க,
அவளிடம் பெரும் அமைதி.
“என் பக்கம் உங்களுக்குத் தெரியும்” என்று அவள் குறைந்த குரலில் கூற,
ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியவன், “போய் சொல்லு. ம்ஹும்.. நீ சொல்ல வேணாம். திருமாவளவன் வெட்ஸ் சங்கமித்ரானு தான் பத்திரிகை இந்த ஜென்மத்துல ஒனக்கு. இத ஒங்கைய்யாவே சொல்வாவ” என்றவன், “எனக்கும் கல்யாணம் ஒன்னும் ஜோக் இல்ல மித்ரா” என்று அழைப்பைத் துண்டித்தான்.
கைகள் நடுங்க தனது அலைபேசியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
கண்களில் நீர் வற்றாது பொழிந்து கொண்டிருந்தது. சற்று முன் வரை அவள் இருந்த மனநிலை என்ன? இப்போதிருக்கும் நிலையென்ன? என்று யோசித்துக் கூட பார்க்க இயலவில்லை.
வேலை முடித்து அழுப்பை மீறிய உவகையுடன் காதல் பாடலைப் புலனத்தில் நிலைபாடாக வைத்துவிட்டு சந்தோஷமாய் அவள் வீடு திரும்ப, “இந்த சம்மந்தமே நமக்கு வேணாம்” என்று சச்சிதானந்தம் கத்திக் கொண்டிருந்தார்.
அந்த வார்த்தைகளில் அதிர்ந்து போய் அவள் வாசலில் நின்றுவிட,
“என்னங்க என்ன பேசுறீங்க?” என்று தாட்சாயணி பதறினார்.
“காலையிலருந்து எவ்ளோ பேசுறோம். அவங்க மனசிறங்கல தான? அதென்ன வார்த்தை? மூத்த மருமகனத்தான் தாங்குறோமாம். மாப்பிள்ளை காதுல விழுந்தா எத்தனை வருத்தம் அவருக்கு? அவர சங்கடப்படுத்தி ஒரு கல்யாணத்த இந்த வீட்ல நடத்தனுமா தாட்சா? நமக்கு ஆம்பளப்பிள்ள இல்லாத குறைய தீத்தவரு அவரு” என்று சச்சிதானந்தம் கத்த,
தன் காதுகளில் விழும் வார்த்தை உண்மை தானா என்று அதிர்வாக நின்றிருந்தாள் பெண்.
“என்னவாகிப் போச்சு? என் பொண்ணுக்கு என்ன குறை? அவளுக்கு ராசா மாதிரி மாப்பிள்ளை பார்த்து குறிச்ச தேதில கட்டிவைப்பேன். இந்த மாப்பிள்ளை கூட நம்ம பொண்ணு ஒன்னும் மத்த பொண்ணுங்க மாதிரி ஃபோன் அது இதுனு பேசி பழகலையே? அப்றம் என்ன?” என்று சச்சிதானந்தம் கூற,
பயத்தோடு அதிர்ந்து தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
அழுகை அருவியாய் வந்தது.
வீட்டிற்குள் நுழைய முடியாமல் வாசலிலேயே தேங்கி நின்றுவிட்டாள்.
‘இன்னும் பேசி பழகலை தானே?’ என்ற வார்த்தை அவளைத் தீயாய் சுட்டது. என்ன கூறிவிட இயலும் அதற்கு? ‘நீங்களா பாத்த பையனத்தானப்பா விரும்பினேன்?’ என்று மனம் அடித்துக்கொள்ள, விக்கி அழவேண்டும் போல வந்தது.
என்ன முயன்றும் கட்டுப்படுத்த இயலாத கண்ணீரை பெற்றோரிடம் வெளிக்காட்டிட பயம் எழுந்து நெஞ்சை அடைத்தது.
“காலைல தாலி செய்யச் சொல்லி கேட்க கூப்பிட்டாங்க. பெரிய மாப்பிள்ளை வரவும் வரேன்னு சொன்னேன். என்ன நினைச்சாங்களோ? கொஞ்ச நேரத்தில் அவங்க வீட்டம்மா ஃபோன போட்டு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாங்க. கேட்டா எல்லாத்துக்கும் பெரிய மாப்பிள்ளைனு அவரயே தலைல தூக்கி வச்சிருக்கீங்க. என் பிள்ளைக்கு ரெண்டாம் பட்சமா மரியாதை கிடைக்கும் வீட்ல பொண்ணு எடுக்க விரும்பலனு சின்னப்புள்ளத்தனமா பேசுறாங்க” என்று சச்சிதானந்தம் யாரிடமோ அலைபேசியில் பேசுவது அவளுக்கு நன்றாகவே கேட்டது.
“அதுவும் பெரிய மாப்பிள்ளைக்கான மரியாதைய குறைச்சுக்கோங்க பொதுவிடத்துலனு வேற சொல்றாங்க” என்று அவர் உள்ளே கத்த, நெஞ்சை பிடித்துக் கொண்டு திடுக்கிட்டாள்.
‘என் அத்தானுக்கான மரியாதையைக் குறைப்பதா?’ என்று நினைக்கவே உள்ளம் பதறியது அவளுக்கு.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் சொந்த வீட்டின் வாசலில் மறைந்து நின்றுகொண்டு கண்ணீர் வடித்தாள். கொடுமையாய் உள்ளம் வதைபட்டது. காதல் தோல்வியில் தோழிகள் கண்ணீர் சிந்தும்போது தாய் தகப்பனை விட இதென்ன அத்தனை முக்கியமா? அத்தனை வேதனையா? என்று அவள் யோசித்ததுண்டு. ஆனால் தற்போது தனக்கென்று வருகையில் தான் அதன் நரக வேதனையை உணர முடிந்தது.
முகத்தை துப்பட்டாவில் அழுத்தமாய் துடைத்துக் கொண்டு மூச்சை இழுத்துவிட்டவள், சோர்வாக நுழைவதைப் போல் நுழைய, மகளைக் கண்ட தாட்சாயணி பரிதாபமாக கணவரைப் பார்த்தார்.
‘என் மகள் என் முடிவுக்கு முடியாதென்று கூறிவிடமாட்டாள்’ என்ற அபார நம்பிக்கையோடு எழுந்த சச்சிதானந்தம், “பாப்பா. உனக்கு இந்த கல்யாணம் வேணாம்டா” என்று கத்திக் கூற,
தெரிந்த விடயத்தை மீண்டும் தந்தை வாய்வழிக் கேட்க, நெஞ்சம் அடைத்தது.
“ஏ..ஏன் ப்பா?” என்று கேட்டவளுக்குப் பயத்தில் கண்கள் கலங்கியது.
“அதட்டி பேசாதீங்க. பிள்ள பயப்படுறா” என்று தாட்சாயணி மகளை வந்து ஆதரவாய் பற்றிக் கொள்ள,
“உன் அத்தான்மேல நீ எவ்வளவு மரியாதையும் பாசமும் வச்சிருக்க? அவர அசிங்கப்படுத்தும் குடும்பத்துக்கு நீ மருமகளா போகனுமா?” என்று கேட்டார்.
என்ன கூறிவிட இயலும் அவளால்? அவள் பதிலை அவர் எதிர்ப்பார்க்கவும் இல்லை போலும்.
“அப்பா மேல நம்பிக்கை இருக்கு தானேடா? இவர விட நூறு மடங்கு பெரியாளா பாத்து குறிச்ச தேதில நான் உனக்குக் கட்டி வைக்குறேன்டா” என்று மார் தட்டிக் கூறியவர், “குணமுள்ள குடும்பம்னு சம்மதம் பேசினா, நான் புள்ளயா நினைக்குற என் மாப்பிள்ளையவே கொறவா நடத்த சொல்றாங்களே? ஒரு கண்ணுல வெண்ணையும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பயும் வைக்க முடியுமா?” என்க,
‘என் விருப்பத்தக் கேக்க மாட்டீங்களா ப்பா?’ என்று அவள் மனம் ஊமையாய் கதறியது.
“ஏங்க ஒருவார்த்த அவளையும் கேளுங்கங்க” என்று தாட்சாயணி பயத்தோடு கூற,
“அவ என் பொண்ணுடி. என் முடிவுக்கு மறுபேச்சு பேசமாட்டா” என்றவர், “அப்பா எது முடிவு பண்ணாலும் உனக்கு நல்லதா தான் அமையும்னு உனக்கு நம்பிக்கை இருக்குலடா?” என்று கேட்டார்.
ஆம் என்றும் கூற இயலாமல் இல்லையென்றும் கூற இயலாம் வதைபட்டு மனதால் மடிந்து துடித்தாள். வாழ்க்கையில் முதன்முறை பெற்றோர் சொல் பேச்சுக் கேட்டு நடப்பதை அறவே வெறுத்து நின்றாள். தனக்காகக் குரல் கொடுக்க இயலாத தன் இயலாமையை வெறுத்தாள். தன்னவன் மீதான நேசத்திற்காக குரல் கொடுக்க இயலாதத் தன் பயத்தை வெறுத்தாள்.
அவள் மௌனம் கண்டு சச்சிதானந்தம் பதற, தந்தையின் பதட்டம் தாழ இயலாமல் துக்கத்தை மென்று விழுங்கியவள், “உ..உங்க இஷ்டம்ப்பா” என்றதோடு அறைக்குள் ஓடிவிட்டாள்.
‘என்ன இருந்தாலும் முடிவானத் திருமணம் இல்லையென்று ஆவது அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் கடந்துவிடுவாள்’ என்றே பெற்றோர் நினைத்துக் கொள்ள,
தன் காதல் மடிந்து போனதில் உள்ளே ஊமையாய் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் சங்கமித்ரா.
அங்கு தன் வீட்டு மொட்டை மாடியில் ரௌத்திர மூர்த்தியாக தலையைத் தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தான், திருமாவளவன்.
மித்ராவைப் போல் தான் அவனுக்கும். வீட்டிற்கு மிக இனிமையான மனநிலையோடு நுழைந்தவனுக்கு வீடே கலேபரமான சூழலில் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் புரிந்தது. அந்த கலேபரம் தன் வாழ்வைப் பற்றியப் பேச்சினால் என்பதில் மேலும் அதிர்ந்தான்.
“அவ என்ன பெரிய ஒலக அழகியா? அவளவிட அழகியா, மாப்பிள்ளனு என் மவேன் நிழலுக்கு அஞ்சுற சனமா பாத்து குறிச்ச தேதில நாங்கட்டி வைக்கேம்” என்று தெய்வநாயகி கத்த,
“எகன மொகனயா பேசாத நாயகி. இத்தன வயசுக்கு பொறவு பிள்ளைய முன்னுக்க ஒன்னய கைநீட்டின பாவம் எனக்கு வேணாம்” என்று சுயம்புலிங்கம் கத்தினார்.
“என்னயவே கைநீட்டுவியளா?” என்று கத்தியவர் குழப்பமான பார்வையோடு உள்ளே வந்த மகனிடம் விரைந்து,
“ஏம்லே, ராசா, அம்மா பேச்ச கேப்பிய தான?” என்றார்.
அவன் புரியாதுத் தன் தந்தையை நோக்க,
“இந்த கல்யாணம் உனக்கு வேணாம்யா” என்று அவன் இதயத்தில் இடியை இறக்கினார் தெய்வா.
தாயை அதிர்ந்து பார்த்தவன் தந்தையை நோக்க,
“உங்கம்மைக்கு கோம்பலே. அவிய மூத்த மாப்பிள்ளைக்கு நெறயா மருவாத தாராவளாம். நீ போனா ரெண்டாம் பட்சமாயிடுவனு வேணாங்குறா. இதெல்லாம் பொண்ணு பாக்க மின்னுக்க தோனலையா? நமக்கும் ரெண்டு மாப்பிள்ளை இருக்காவ நாயகி. கேட்டா தப்பா நெனக்க போறாவ” என்று கத்தினார்.
“நீங்க சும்மாருங்கப்பா. உங்கள போல அவிய என்ன சமமாவா நடத்துறாவ?” என்று திரிபுரா கூற,
“அக்கா என்னத்தயாது சொல்லி அம்மாவ ஏத்தாத” என்று விக்ரமன் கத்தினான்.
கார்த்திகாவும் தனலட்சுமியின் பயமும் படபடப்புமாய் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நான் என்னம்லே ஏத்தி விடுதேம்? அவிய நடத்துனதத்தேம் பாத்தியல்ல? மூத்த மருமகேன் மூத்த மருமகேன்னு அவோள வச்சிட்டுத்தான அத்தனயும் செய்றாவ?” என்று தம்பியைப் பார்த்து கத்தியவள், “அம்மா எனக்கென்னமே அவியதேம் இந்த புள்ள கண்ணாலத்துக்கு காசு போடுதாவனு தோணுது. அதேம் அவியளயே புடிச்சு தொங்குறாவ. நாளபின்ன கட்டிக்கொடுத்தா உம்மவந்தேம் அவியள பாத்துகிடனும் போல?” என்று கூடக் கொஞ்சம் ஏற்றிவிட்டாள்.
“அக்கா” என்று விக்ரம் கத்த,
“சும்மாருலே. சம்மந்தப்படவனே அனக்கத்தக்காட்டாமதேம் இருக்கியான்” என்று கத்தினாள்.
திரிபுராவுக்குத் தன்னை முதன்மைப் படுத்தாத திருமணத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே ஒட்டுதல் இல்லை. வேறு ஊர் பெண் என்பது, தாங்கள் இல்லாது பெண் பார்த்தது என்று அனைத்தும் அவளது தான் என்ற அகங்காரத்தை வெகுவாக பதம் பார்த்தது.
தெய்வாவும் சற்றே குழப்பமான மனநிலையில் நிலையான முடிவில் இல்லாதிருக்க, தன்னை முதன்மைப்படுத்தவில்லை என்பதை அவ்வப்போது அவரிடம் ஒரு குறையாக முன்வைத்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு விருப்பம் இல்லை என்பதைப் பதிவு செய்துக் கொண்டே இருந்தாள் என்றும் கூறலாம்.
இப்படியான குழப்ப சூழலில் தாலி செய்வது பற்றிய பேச்சு வர, சச்சிதானந்தம் இயல்பாய் முன் வைத்தத் தன் மூத்த மருமகனின் வருகை அவரை கோபம் கொள்ள வைத்தது.
அப்போதும் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்கவில்லை தான். மூத்த மருமகனைத் தூக்கி நிறுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். என் மகனுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கோபித்தார். இரண்டாம் பாதியை மட்டும் அவர் கூறியிருந்தால் கூட சச்சிதானந்தம், இயல்பான பெற்றோரின் எண்ணமாக கடந்திருப்பார். தன் மூத்த மருமகனுக்கான மரியாதை அங்கு அடிவாங்குவதைக் கண்டவர், இன்னும் வராத மருமகனுக்காக இத்தனை காலம் தங்களைத் தாங்கிய மருமகனை இறக்குவதா? என்ற கோபத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
வாதங்கள் முற்றி, வார்த்தைகள் தடித்து வாழ்வே இல்லையென்றான நிலைக்கு வந்து நிறுத்தியிருந்தது.
அனைத்தையும் அடக்கப்பட்டக் கோபத்துடன் பார்த்த வளவன் அமைதியாக இருக்க,
“ஏம்லே அமைதியாருக்க?” என்று தெய்வா கேட்டார்.
“ஓம்பேச்சுக்கு அவேம் மறுப்பானாம்மா? என்று திரிபுரா கேட்க,
“யாரைக்கேட்டு எம்முடிவ நீங்க எடுத்தீய?” என்று அடக்கப்பட்டக் கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.
“என்னம்லே?” என்று திரிபுரா அதிர்வாய் கேட்க,
“யாரைக் கேட்டு எம்முடிவ நீங்களா எடுத்துக்கிட்டீயனு கேட்டேம்” என்று கத்தினான்.
அவன் சப்தத்தில் வீடே ஒரு நொடி ஆட்டம் கண்டிருக்கும் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
“ஏ மக்கா.. அம்மா உன் நல்லதுக்குதேம்” என்று தெய்வா பேச வர,
“எது நல்லது?” என்று கத்தினான்.
அவர் பதறிக் கொண்டு பின்னே ஓரடி வைக்க,
“வளவா வெசனப்படாத. ஐயா பேசிகிடுதேம்” என்று சுயம்புலிங்கம் மகனை சமாதானம் செய்ய முன்வந்தார்.
“அவியட்ட பேசுற வார என்ன ஐயா செஞ்சீய?” என்று வலி நிறைந்தக் குரலில் அவன் கேட்க,
பெரியவர் மனம் வருந்தி மகனையும், கோபத்துடன் மனைவியையும் பார்த்தார்.
“லே..” என்று திரிபுரா ஏதோ பேச வர, விரல் நீட்டி பத்திரம் காட்டியவன், “அவிய அவிய, அவிய இஸ்டத்துக்குதேம் கட்டிருக்கீய. நாங் குறுக்கால வந்தேனா? கோம்பத்தனமா பேசாதீய. இது என் வாழ்க்க. எனக்கு அவோளத்தேம் புடிச்சிருக்கு. அவோளத்தேம் கட்டுவேம்” என்று மிக அழுத்தமாய் கூறினான்.
தெய்வா மகனை அதிர்ச்சியாய் பார்க்க, அவனது அழுத்தத்தில் திரிபுரா ஆடிதான் போனாள்.
விக்ரமனும் கூட மனைவிக்குப் பறிந்துதான் நடந்துகொள்வான் என்றாலும் அது வெளிப்படையாய் தெரியாது. இன்னும் திருமணம் கூட ஆகாத நிலையில், யாரோ ஒரு பெண்ணுக்காக தன்னைத் தன் மகன் எதிர்க்கின்றானே? என்று தெய்வாவிற்கு அத்தனைக் கோபமாக வந்தது. பழைமை எண்ணம் கொண்ட பல மாமியார் நினைப்பது, திருமணத்திற்குப் பிறகும் மகன்கள் தங்கள் கைக்குள் இருக்க வேண்டும் என்பதுதானே? அதுதான் அவரும் நினைத்தார். ஆனால் திருமணம் இன்னும் கூட ஆகிடாத நிலையில் அவளுக்காக மகன் தன் பேச்சை எதிர்ப்பது ஆத்திரத்தைக் கிளப்பியது. அதேநேரம் ஒரு தாயாக, மகன் ஆசையைத் தான் எதிர்த்தால் அவன் எதிர்காலம் வண்ணம் பெறுமா? என்ற அச்சமும் எழுந்தது.
மாமியார் என்ற பதவிக்கும், தாய் என்ற ஸ்தானத்திற்கும் இடையேவுள்ள அன்பு மற்றும் அதிகாரத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு நிலையில்லாமல் தத்தளித்தார்.
“அம்மா சவட்டுமேனிக்கு பேசாதீய ம்மா. அவேம் இஸ்டபட்ட புள்ளைக்கு கட்டிவச்சீயனாதேம் அவேம் சந்தோசமா இருப்பியான்” என்று விக்ரமன் பேச,
“இதுக்கு மேல ஒருத்தரும் பேச வேணாம். அந்த புள்ளதேம் இந்தூட்டு மருமவ. அதை யாராது மாத்த நினைச்சீயனா” என்று அழுத்தமாய் கூறித் தன் மகளையும், மனைவியையும் பார்த்த சுயம்புலிங்கம், “என்னை மீறி பண்ண மாட்டீயனு நம்புதேம். அப்படி ஒன்னு நடக்குறதா இருந்தா, நான் இல்லனு நினைச்சுடுவ” என்றுவிட்டுத் தோளில் உள்ளத் துண்டை உதறிக் கொண்டு உள்ளே சென்றார்.
மனைவி பேசும் முன்பே இதையெல்லாம் கூறியிருக்க வேண்டுமோ? என்று காலம் கடந்த ஞானம் உதித்தது அந்த பெரியவருக்கு.
கோபத்துடன் மாடிக்கு விரைந்த வளவன் சங்கமித்ராவிற்கு அழைத்திருக்க, முடிவெடுக்க இயலாமல் தடுமாறி வதைப்படுக்கொண்டு அவனையும் வதைத்து விட்டிருந்தாள்.
இத்தனைக்குப் பிறகும் அவள்மேல் அவனுக்குக் கோபம் வரவில்லை என்பது தான் விந்தையே! அவள் இடத்திலிருந்து யோசித்தான். அவள் குணம், பயம், நிலை என்று அனைத்தும் அவன் அறிந்தவொன்றே. எப்படியான வார்த்தைகள் அவளை நோக்கி வந்து திருமண முறிவுக்கு அவளை ஒப்புக்கொள்ள வைத்திருக்கும் என்பதை யூகிக்க அவனுக்கு தனி மூளை ஒன்றும் தேவைப்பட்டிருக்கவில்லை.
தலையைத் தாங்கிக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
விடயம் அறிந்து, அதிர்ந்து மகாதேவன், தீபிகா மற்றும் வடிவேலு வர, கீழே பெரும் வாக்குவாதம் சென்றது.
அனைத்தும் காதில் விழுந்தாலும் அவன் கீழே செல்லவில்லை. ஆத்திரமாக வந்தது. நிலையாக செயலாற்ற இயலாது அப்படியே அமர்ந்துவிட்டான்.
இறுக்கமாய் அமர்ந்திருந்தவன் தோளில் வடிவேல் கரம் வைக்க, சிவந்தக் கண்களைப் பிரித்து, இமை திறந்து அவனை நோக்கினான்.
“ஒன்னுமில்லலே” என்று வடிவேலு கூற,
“செத்துறுப்பாலே இந்நேரத்துக்கு” என்று உடையத்துடித்தக் குரலில் கூறினான்.
வடிவேல் வேதனையாய் நண்பனைப் பார்த்தான்.
“ஏ மக்ளே என்னம்லே வெசனம் வேண்டி கெடக்கு ஒனக்கு?” என்றபடி மகாதேவன் அங்கு வர,
“அத்தான்” என்று குரல் கமர அழைத்தான்.
“நாங்க இம்புட்டு பேரு இருக்கம். அப்புடி விட்டுபுடுவமா?” என்று கூறியபடி தீபிகா வர,
கண்களை மூடிக் கொண்டு தலை கவிழ்ந்தான்.
அவன் தோள் தட்டிய மகாதேவன், “அவிய பக்கட்டுருந்து யோசிலே. மகேன்போல பாத்துகிட்ட மருமவன தூக்கி வீசுனு சொன்னா யாருக்குதான் கோவம் வராது? அந்த கோவத்துல பேசிருப்பாவ. நீ வெசனப்படாதலே. ரெண்டு நா ஆறபோட்டு பேச்ச எடுப்பம். நம்ம பக்கட்டுருந்து மன்னிப்பு கேட்டுகிட்டா முடிஞ்சுபோவும்” என்று கூற,
பெருமூச்சுடன் தலையசைத்தான்.
அனைவரும் அவனைப் பாவமாய் பார்க்க, தன் இரட்டையன் மனநிலையை உணரப் பெற்ற திருவிக்ரமன், “ஏ மக்கா அவேன தனியாருக்க வுடுங்க” என்று கூறினான்.
அவன் தோளில் ஆதரவாய் தட்டிவிட்டு அணைவரும் நகர, மண்டியிட்டு அமர்ந்து தன் இரட்டையணை இறுக அணைத்துக் கொண்டவன், “அந்த புள்ளதாம்லே ஒனக்கு. யாரு தடுத்துடப் போறாவ? நான் இல்லியா? தட்டித்தூக்கிட்டு வானா வந்துடப்போறேம்” என்று கூறினான்.
கண்ணோரம் கண்ணீர்த்துளி கோடாய் வழியத் தன் இரட்டையணை மிக இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
“எல்லாம் சரியாப்போவும்லே” என்று அவனுக்குத் தட்டிக் கொடுத்து ஆறுதல் அளித்த திருவிக்ரமன் கீழேச் செல்ல, பெருமூச்சுடன் இருள்வானை வெறித்தபடி சாய்ந்தமர்ந்தான்.
மனம் இன்னுமே அவன் பேச்சைக் கேட்க மாட்டேன் என்று தவித்தது. விரைந்து எழுந்தவன் கீழேவர, தெய்வாவும் திரிபுராவும் புலம்பிக் கொண்டிருந்தனர்.
எதையுமே கவனத்தில் கொள்ளாது வெளியே சென்றவன் வந்து நின்றதென்னவோ அவர்களது மாட்டு கொட்டகைக்குத்தான்.
கொட்டகையின் தாழ்ப்பாளைத் திறந்தவன், “லே நந்தி” என்க,
கதவைத் தன் கொம்பால் திறந்துத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான், காரிருளின் மையைப் பூசிக் கொண்டதைப்போலிருக்கும் அவர்களது காளைமாடான நந்தி.
அவன் கழுத்துப் பட்டியைப் பற்றிக் கொண்டு வயலோரமாய் வளவன் நடக்க, யாரையும் அருகேகூட சேர்த்துக்கொள்ளாத நந்தி, தன் பாசம்மிகுந்த எஜமானனின் இழுப்பிற்கு இசைந்தபடி நடந்து சென்றான்.
சில நிமிடங்கள் நந்தியுடன் நடந்துவிட்டு வந்தவன், திண்டில் அமர்ந்துகொண்டு நந்தியை வருட, அவனை முகர்ந்து பார்த்த மாடும், அவன் முகத்தோடு தன் முகம் இழைத்து அவன் சோகம் உணர்ந்ததை வெளிப்படுத்தியது.
“எனக்குத்தெரியும் லே? அவோள..” என்று தன் நெஞ்சை நீவிக் கொண்ட வளவன், “பயந்துவருதுலே” என்க,
அவன் முகத்தோடு முகம் முட்டி, “மா..” என்று சப்தம் கொடுத்தது.
அதன் ஒலி அவனுக்கு ஆறுதல் கூறும் விதமாய், அப்படியே திண்டில் படுத்தவன் அருகே கீழே நந்தியும் படுத்துக் கொள்ள, அதன்மேல் கைப்போட்டுப் படுத்தபடி, “அவோ வோணும்லே” என்றான்.
தன் தலையை மேலும் கீழுமாய் ஆட்டிய மாடு, அவன் கன்னத்தில் தன் நாவால் வருட, அதனைத் தட்டிக்கொடுத்தான்.
“துடிச்சிருப்பாளே நந்தி. வாயத்தொறந்து பேசக்கூட மாட்டியாளே” என்று இந்த சொற்ப நாட்களில் அவளைப் பற்றி உணர்ந்தவனாய் வருத்தம் கொண்டவன், அவளுடன் இரவுப் பயணம் சென்றதையெல்லாம் மனதோடு ஓட்டிப் பார்த்தான்.
“ஓம் மைணிய எங்கூட சேத்து வச்சுடுவாவளாலே நந்தி?” என்று அவன் வருத்தமாய் கேட்க,
“ம்மா..” என்று நந்தி சப்தம் எழுப்பினான்.
“ஏம்லே அம்மா இப்புடி யோசிக்காவ? வெசனமாருக்குதுலே. அவோ ஐயாவும் ஒரேடியா வேணாமுங்காவ. இதுக்காலே பத்துநா அப்புடி.. அப்புடி ரசிச்சோம்?” என்று கேட்கையில் வளவனையும் மீறி அவன் விழியோரம் நீர் வழிய,
அந்த இருளிலும் கூட அதை உணர்ந்ததைப் போல் நந்தி அவன் கன்னத்தில் தன் நா கொண்டு வருடி கண்ணீர் துடைத்தான்.
அவனுக்கும் நந்திக்கும் உள்ள ஆத்ம பினைப்பது. நந்தி மாடு என்பது ஒன்றுதான் வித்தியாசம். மற்றபடி இருவரும் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளைப் போன்றுதான் தங்களை உணர்ந்து கொண்டனர்.
அதனால் தான் வளவனின் சோகத்தை நந்தியால் புரிந்துகொள்ள இயன்றது.
நந்தியின் துணை நாடி வந்த வளவனுக்கான துணையை நந்தியின் இருப்பு வழங்க, சோகத்தின் சுவடோடு படுத்தான்.
உள்ளிருந்து மற்றொரு மாடு வருவதுத் தெரிய, லேசாய் தலையை நிமிர்ந்தவன், “லே முனியா.. உள்ளக்கப் போ” என்க,
“ஏம்போனும்? நீயு ஓம் நந்திய கொஞ்சுர தானம்லே? ஏம் முனியன உள்ளக்கப் போவச்சொல்லித் தவிக்கச் சொல்றீயளோ?” என்று கேட்டபடி விக்ரமன் அங்கு வந்தான்.
அவன் குரலில் வளவன் எழுந்து அமர, முனியைத் தடவிக் கொடுத்தபடி அங்கே வந்த விக்ரமன் அவன் அருகே அமர்ந்துக் கொண்டான்.
அடுத்துக் கருப்பன் வருவதன் மணியோசைக் கேட்க, எதிரே வடிவேல் வருவதைப் பார்த்தான்.
தானும் வந்து ஜோதியில் ஐக்கியமான வடிவேல், கருப்பனைத் தடவிக் கொடுத்தபடி, “என்னம்லே நந்தி.. ஓம் அண்ணே ரொம்ப அழுறாவளோ?” என்க,
நந்தி மேலும் கீழுமாய் தலையசைத்து, “ம்மா..” என்று சப்தமெழுப்பியது.
“கத்தாதம்லே.. உள்ளக்க ஓம் புள்ளையலாம் தூங்குறாவத்தான?” என்று விக்ரமன் கூற,
“அவேன ஏம்லே அறுப்புத (திட்டுற)?” என்று வளவன் கேட்டான்.
“இஞ்சார்ரா..” என்று விக்ரமனும் வடிவேலும் கூற,
மாடுகள் மூன்றும் அவர்கள் காலடியிலேயே படுத்துக் கொண்டன.
“வருந்தாதல்லே” என்று வடிவேல் கூற,
“என்னலே இப்புடிலாம் ஆவுது? எப்புடிலாம் இருந்துச்சு தெரியுமா இந்த பத்து நா(ள்)” என்று வருத்தமாய் கேட்டான்.
“கல்யாணமுன்னா என்னமாது ஒடக்கு வாரதுதாம்லே.. இந்தா கார்த்திகூட நானுந்தேம் ஜாலியா போனெல்லாம் பேசினேம். அவிய வீட்டுல என்னமோ ஒடக்குனு அது எங்கக் கல்யாணத்துல விடிஞ்சு ஒரு வாரம் சரசமா போவலியா? என்ன ஒங்களவு கல்யாணமே இல்லனு அவளதேம். சும்மா பேச்சுக்கு சாவடிச்சுடுவேம்னு சொல்றோம். செஞ்சுபுடுதோமா? அப்படித்தாம்லே இதுவும்” என்று தம்பிக்கு விக்ரமன் ஆறுதல் கூற,
“அனுபவஸ்தரு சொல்றாவ. கேட்டுகிடுலே” என்று வடிவேல் கூறினான்.
“ஏம்லே.. எங்களுக்காது அவிய அம்மா. ஒனக்கு மாமியா.. என்னமாதுனா ஆஞ்சுபுடுவாவ” என்று விக்ரமன் அவன் காதோரம் மெல்லமாய் முனுமுனுக்க,
“என்ன அம்மைய காட்டி மெரட்டுதீயாக்கும்?” என்று பீதியாய் தானும் மெல்லிய ஒலியில் அவனிடம் கேட்டவன், “இஞ்சாரு.. நீங்கதேம் லச்சுவ எங்கிட்டக் கட்டிவச்சு அனுப்பப் போறீய. ஏதோ நான் ஓங்க வீட்டுக்குக் கட்டிவாராப்ல சொல்றீய” என்றான்.
அதில் விக்ரம் பக்கென்று சிரித்திட, வளவன் அவனை விநோதமான பார்வை பார்த்தான்.
அதில் வடிவேல் பீதியடைய, சமாளிக்கும் விதமாய் அவன் தோளில் தட்டிக் கொடுத்த விக்ரம், “எல்லாம் சுளுவா முடிஞ்சுப்போவும்” என்க,
“நாங்க இருக்கம்லே” என்று வடிவேலும் ஆறுதல் கூறினான்.

