Loading

சுழலி – 1

கல்லூரி மாணவர்கள் அனைவரும் பதற்றத்துடன் அந்த வகுப்பறைக்கு வெளியே நின்றுக் கொண்டிருக்க, இன்னும் ஒரு படி மேல் பயபந்தை தொண்டையில் இருத்தி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழ் நிலா.

உள்ளே நான்கு மீட்டர் நீளம் கொண்ட ஓலைப் பாம்பை பொறுமையாக பிடித்துக் கொண்டிருந்தாள் இவளின் சகோதரி அங்கையற்கண்ணி. மேசைகளுக்கு நடுவே புகுந்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த அந்த பாம்பின் வாலை ஒரு வழியாகப் பிடித்து விட்டாள் அங்கை.

பேரன்பு, பாம்பு பிடிக்கும் நீண்ட கருவியினை அங்கையிடம் கொடுக்க, மெதுவாக அதனின் தலையை அதில் சிக்க வைத்தவள், அதன் வாயை அழுத்திப் பிடித்தவாறு தூக்கினாள்.

அதனை பேரன்பு வைத்திருந்த பொறி பையில் மெதுவாக விட்டு, பையை இறுக்கக் கட்டிவிட்டாள். இன்னும் ஏதாவது அங்கிருக்குமா என்று ஒரு முறை அவ்விடத்தை நன்கு ஆராய்ந்த பிறகே வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர் பேரன்புவும் அங்கையும். இதுவரை அவர்கள் செய்த அனைத்தையும் காணொளியாக எடுத்து தனது கைப்பேசியில்  சேமித்துக் கொண்டான் அறிவு.

“இங்க வேறெதுவும் இருக்கான்னு ஒன்ஸ் பாத்துடு அன்பு. நான் ஜீப்க்கு போறேன். அறிவு வா.” என்று அழைத்தபடி வெளியே வந்தாள் அங்கையற்கண்ணி.

“அக்கா, புடிச்சிட்டியா?” பயம் இன்னும் குறையாமல் வந்து கேட்டாள் யாழ்.

“புடிச்சிட்டேன். ஏன், பாக்குறீயா?”

“அய்யோ, வேண்டவே வேண்டாம். அது என் கால் மேல ஏறி போனது இப்போ நினச்சா கூட ஒரு மாதிரி உடம்புலாம் சிலுக்குது.”

மெலிதாகப் புன்னகைத்தவள், “இரு இத வச்சிட்டு வரேன்” என்று பாம்பு இருக்கும் பையை தனது ஜீப்பில் வைத்து விட்டு வந்தாள்.

பேரன்பு உள்ளிருந்து மீண்டும் அங்கையை அழைத்தான்.

“அங்கை”

“அறிவு கேமரா ஆன்ல வச்சிக்கோ” என்று அவனுக்கு உத்தரவிட்டவள் மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

“என்னாச்சுடா”

“இங்க ரெண்டு பாம்போட சட்ட இருக்கு. ஒன்னு இதுன்னாலும், இன்னொன்னு இங்க தான் இருக்கணும். அது மட்டும் இல்ல, இங்க பாரு முட்டை போட்டு இருக்கு.”

“என்ன, முட்ட போட்டு இருக்கா? வாவ். எத்தன?”

“ஒரு பத்து இருக்கும் போல”

“உடனே ப்ரிசர்வ் பண்ணணும். காட்டுல விட்டுடலாம்.”

“இல்ல, அங்கை. ரேஞ்சர் கிட்ட கொடுத்துடலாம். லாஸ்ட் டைம்மே கணக்கெடுக்குறப்போ நாம புடிச்சு கொண்டு வந்தத ஏன் சேர்க்கலன்னு கேட்டாரு. கார்ட் மணி அண்ணா தான் அடுத்து ஏதாவது புடிச்சா வந்து என்ட்ரி போட்டுட்டு அப்ரோம் உள்ள விட்டுட சொன்னாரு.”

“சரிடா. அறிவு, வெளிய யாழ் இருப்பா வர சொல்லு” என்றபடி அதன் முட்டைகளை ஆராய்ந்தாள் அங்கை.

“நேத்து தான் போட்டிருக்கும் போல. இன்னும் குட்டிகள் வெளியே வர ரெண்டு நாள் ஆகலாம்.”

பயத்துடனேயே வந்தாள் யாழ். “என்னக்கா, இன்னும் இருக்கா என்ன?”

“அறிவு கேமராவ அவக்கிட்ட கொடுத்துட்டு ஜீப்குள்ள எக் பிரிசர்வ் கிட் இருக்கும்ல எடுத்துட்டு வா. யாழ் வீடியோவ ஒழுங்கா கவர் பண்ணு. பயந்து போன கீழ போட்டுடாத. இங்க எந்த பாம்பும் இல்ல. ஜஸ்ட் முட்டைங்க தான். அது எடுக்குற வரைக்கும் சரியா கவர் பண்ணு.” என்றவளின் கட்டளைக்கு சம்மதமாய் தலையாட்டினாள். ஆனாலும் உள்ளுக்குள் அந்த பயம் இன்னும் இருக்கத்தான் செய்தது.

அறிவு தேவையான பொருட்களை எடுத்து வர, அங்கை அதில் பொறுமையாக பத்து முட்டைகளையும் எடுத்துப் போட்டாள். பின், மூவரும் மீண்டும் ஒரு முறை மற்றொன்று பாம்பு இருக்குமா என்று தேட, எதுவும் கிடைக்கவில்லை.

யாழ் கைபேசியை கொடுத்ததும் அவசரமாக வெளியே வந்துவிட்டாள்.

“என்ன அங்கை, உன் தங்கச்சி இப்படி பயப்படுறா?” முட்டைகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்ட பேரன்பு கேட்டான்.

“எல்லாருக்கும் இருக்குற பயம் தான. அவ முன்னாடி எதுவும் சொல்லாத அழுதுடுவா.”

மூவரும் வெளியே வந்தனர். அப்போது அந்த கல்லூரி முதல்வர் வர, அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள் அங்கை.

“சார், ரெண்டு இருந்துருக்கு. ஆனா, ஒன்னு தான் புடிச்சிருக்கோம். ஒரு டூ ஹவர்ஸ் பர்மிசன் கொடுத்தீங்கன்னா காலேஜ் சரவுண்டிங்க் செக் பண்ணிடலாம். ஏன்னா, இந்த வகையான பாம்புங்க எப்போவும் கூட்டமாதான் வாழும். பத்து முட்ட வேற எடுத்து இருக்கோம்.”

“என்ன அங்கை சொல்ற? பத்து முட்டையா? சரி, வெக்கேசன் முடிஞ்சு இப்போ தான ஓப்பன் பண்ணோம். அதுனால கூட இருக்கலாம். இன்னும் ஒன் ஹவர் தான் க்ளாஸ். பட், பரவால்ல நான் க்ளாஸ்சஸ் கேன்சல் பண்ண சொல்லிடுறேன். நீங்க அது என்னன்னு பாத்துட்டு முடிஞ்ச அளவு கிடச்சா பிடிச்சிடுங்க.”

“நீங்க பயப்படுற மாதிரி இல்ல சார். இந்த வகை பாம்புங்களுக்கு விசம் கிடையாது. அப்டியே கடிச்சாலும், வலி தான் இருக்கும். நாங்க செக் பன்றோம். தாங்க் யூ சார்”

“அன்ட், அங்கை!”

“சொல்லுங்க சார்”

“நாளைக்கு ப்ரீயா இருந்தா, ஜூ டிபார்ட்மென்ட் ஸ்டுடன்ஸ்க்கு ஒரு க்ளாஸ் எடுக்க முடியுமா? செர்பன்ட்ஸ் பத்தி. ஒரு அவார்னஸ் மாதிரியும் இருக்கும்ல?”

“ஓகே சார், டைம் பாத்துட்டு நான் ஈவ்னிங்க் கால் பன்றேன்.” என்று விடைபெற்றாள்.

அனைத்து மாணவர்களும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். யாழ்தான் அங்கையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“இதுலாம் தேவையா அக்கா?”

“எதுலாம்?” தான் சேகரித்த பாம்பு முட்டைகளை பத்திரப்படுத்திக் கொண்டே பேசினாள் அங்கை. பேரன்புவும் அறிவும் இன்னும் சிலரோடு அந்த கல்லூரியின் அடர்ந்த புற்கள் இருக்கும் பகுதியில் மற்ற பாம்புகளை தேடிக் கொண்டிருந்தனர்.

“தெரியாத மாதிரி கேட்காதக்கா. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீ இப்படி செய்றது கொஞ்சம் கூட பிடிக்கல. நீ நம்ம வீட்டுக்கு வந்து எத்தன நாள் ஆச்சுன்னு தெரியுமா?” கண்கள் கலங்கி இருந்தது யாழ் நிலாவிற்கு.

“இது எனக்கு பிடிச்சுருக்கு யாழ். இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாது. அதுசரி, நீ என்ன ஃபாரஸ்டரி எடுத்து இருக்க? உனக்கு ஜியாலஜில தான இன்ட்ரெஸ்ட்?” முட்டைகளை அப்புறப்படுத்தியவள் இந்த கேள்வியை கேட்டாள்.

ஒரு நிமிடம் இந்த நேரடி கேள்வியில் தடுமாறித்தான் போனாள் யாழ்.

“அது… அது உனக்கு எப்டி இது பிடிச்சு இருக்கோ. எனக்கும் ஃபாரஸ்டரி புடிச்சு இருக்கு. அதான்”

“நல்லா சமாளிக்குற. எனிவே, ஒழுங்கா படி. அன்ட், ஒன் திங்க். ஃபாரஸ்டரி புடிச்சா மட்டும் போதாது, எத பாத்தும் பயப்படாம இருக்கணும்.”

அப்போது பேரன்பு சிறுசேணி (Walky Talky) மூலம் அழைத்தான்.

“எமர்ஜன்சி! எமர்ஜன்சி! காலேஜ் பின் கேட் பக்கம் பெரிய இராஜநாகம் இருக்கு. ஐ ஆம் ரிப்பீட். எமர்ஜன்சி”

அழைப்பை கேட்ட அறிவும் அங்கையும் உடனே அவ்விடம் விரைந்தனர்.

மாலை பொழுதும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது. இன்று அமாவாசை வேறு. வெளிச்சம் சிறிதும் இருக்காது என்று உணர்ந்திருந்தாள் அங்கை.

“யாழ், அந்த கிட் எடுத்துக்கிட்டு என்கூட வா. அன்ட் அகைன் வீடியோ ரெக்கார்ட்டு பண்ணணும்” என்று அவளை அழைக்க, அவளுக்கோ பயத்தில் நாக்கு உலர்ந்து போனது.

“ஏய் யாழ், என்ன நின்னுட்டு இருக்க? அதுலாம் எடுத்துட்டு வா.” என்றவாறு அங்கை முன்னே சென்றாள்.

‘அய்யோ, இவளோட அட்வென்ஜர்ஸ்க்கு என்னை பலிகாடா ஆக்க பாக்குறாளே. ஓலப்பாம்புக்கே அல்லு விட்டுருச்சு. இப்போ இராஜநாகம்னுல சொல்றாங்க. கொத்துன உடனே செத்துடுவாங்கல. கடவுளே, நான் உசுரோட வீடு போய் சேரணும். காப்பாத்து’ பயத்துடனேயே அவளும் விரைந்தாள்.

புதரின் மறைவில் அதன் கண்களோ பழிங்குபோல் மின்னியது. கிட்டத்தட்ட பத்து அடி நீளம் இருக்கும் இராஜநாகம். அதுவும் பேரன்பு ஒற்றையாளாக அதன்முன் நின்றுக் கொண்டிருந்தான். அறிவும் அங்கையும் வந்துவிட்டனர்.

“அறிவு, ரேன்ஜருக்கு கால் பண்ணு” என்றபடி பொறி வைக்க ஏற்பாடு செய்தாள் அங்கை.

நடக்கும் அனைத்தையும் தன்னிடம் இருந்த கைபேசி மூலம் காணொளியாக எடுத்துக் கொண்டிருந்தாள் யாழ். அங்கை குழுவின் மற்ற நபர்களும் வந்துவிட்டனர்.

அறிவும் வெகுநேரமாக வனத்துறை அதிகாரிக்கு அழைத்துக் கொண்டிருந்தான். அவனின் நேரமோ என்னவோ கைபேசி சமிக்ஞை ஒரு கோடுதான் காட்டிக் கொண்டிருந்தது.

அங்கை குழு தங்களின் அனுபவத்தில் தற்போதுதான் இத்தனை பெரிய இராஜநாகத்தை காண்கிறார்கள். அதிகபட்சம் இது 12 அடி வளரும் என்றாலும் இந்த மலைப்பகுதிகளில் 5 அடி 6 அடி தான் இவர்களின் கண்களில் சிக்கும். அது மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்தால் பிடித்துக் காட்டில் விட்டுவிடுவார்கள்.

அங்கையற்கண்ணி இருபத்தைந்து வயது நிரம்பிய அரிவை. இயற்கை மீது அலாதி பிரியம். அதுவும் அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்றான பாம்புகளின் மீது ஏனோ பிடித்தம் அதிகம். ஆனால், அவளின் இந்த பிடித்தம் பெற்றோர்களுக்கு அச்சத்தையும் கோபத்தையும்தான் ஏற்படுத்தியது.

புதருக்குள் இருந்த இராஜநாகம் உணவாக அந்த வகுப்பறைக்குள் இருந்து வெளியேறிய பாம்பைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போதுதான் பேரன்பு அதனை பார்த்தான். அது உண்டு முடிக்கும் வரை அமைதிக் காத்தவன், அதன் பிறகே மற்றவர்களை அழைத்தான். இருட்டத் தொடங்கிவிட்டது. ஆனால், அதனை இன்னமும் பிடிக்க முடியவில்லை. எப்போதும் யார் ஒருவர் பாம்பை பார்க்கின்றனரோ அவரே அதனை பிடிப்பர். இதில் யாரும் தலையிடக் கூடாது என்பது அங்கை குழுவின் பரஸ்பர முடிவு. அதனாலேயே பேரன்பு பிடிக்கட்டுமென மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கை பொறியை சரியாக அமைத்துவிட்டாள். அறிவும் வனத்துறைக்கு தகவல் அனுப்பிவிட்டு அவ்விடம் வந்தான்.

ஏனோ, பேரன்புவிற்கு அதனின் சீற்றத்தைக் கண்டு உள்ளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. இதற்குமுன்னும் ஐந்தடி இராஜநாகத்தை இவன்தான் பிடித்திருந்தான். ஆனால், அதனைவிட இது இரண்டு மடங்கு பெரியது என்பதால், உள்ளுக்குள் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.

“அன்பு, கை நடுக்கத்த காட்டிடாத. உன்னோட பலவீனம் தெரிஞ்சா அது படையெடுக்க ஆரம்பிச்சுடும். பொறி வச்சிட்டேன். நீ அப்படியே அதோட வால புடிச்சு கேட்சிங்க் ஸ்டிக்ல தலைய ஹோல்ட் பண்ணு.” தொடர்ந்து அவனின் பதற்றத்தை குறைக்கும் பொருட்டு பேசிக்கொண்டிருந்தாள்.

பேரன்புவின் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. பாம்புகளுக்கு 90 டிகிரி பார்வை கோணம் உண்டு. மேலும், அது அனைத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கும் தன்மை கொண்டது. தாம் தாக்கப்படப் போகின்றோம் என்ற சிறிய அச்சம் ஏற்பட்டாலே அது எதிர் தாக்குதல் செய்ய தயாராகிவிடும்.

பேரன்பு பிடித்திருந்த அந்த இராஜநாகமும் வெகுநேரமாக பேரன்புவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது. சொல்லப் போனால், அது தாக்குவதற்கான சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். அதுவும் இருட்டில் கருநாகம் படையெடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே எச்சில் விழுங்கச் செய்கிறது.

அன்புவின் கைகள் நடுக்கம் கொண்டன. அவனின் பிடி தளர ஆரம்பித்தது.

“அன்பு என்னடா பன்ற? விட்றாத. ஹோல்ட் பண்ணு.”

“அங்கை” என்றபடி மயங்கி விழுந்தான் பேரன்பு.

…..

ஜருகுமலை மலைக்கிராமம் – மேலூர்.

தனது நான்கு சக்கர வாகனமான ஜீப்பில் கண்கள் முழுக்க ஏக்கத்தோடு பயணித்துக் கொண்டிருந்தான் பிறைசூடன். அவனுடன் தன் வாகன ஓட்டும் திறமையை காட்டிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. பின் இருக்கையில் காதில் ஊடலை மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டே அந்த இயற்கை அழகை இரசித்தவாறு பயணப்பட்டுக் கொண்டிருந்தான் சிவரஞ்சன்.

ஜருகுமலையின் இருபதாவது கொண்டைஊசி வளைவை கடந்த பின் ஒரு ஒற்றையடி பாதை தென்பட்டது. அதில் வாகனத்தை செலுத்தினாள் ஆருத்ரா.

“ஆரு, ஜீப்ப நிறுத்து” பிறையின் சொல்லுக்கேற்ப வண்டியை நிறுத்தினாள் ஆருத்ரா.

“இங்க இருந்து நடந்துதான் போகணும். லக்கேஜ்லாம் எடுங்க” என்றபடி தனது தோள்பையை எடுத்தான் பிறைசூடன்.

“டேய், அதான் ரோடு போட்டுதான இருக்காங்க. ஜீப்லயே போலாமே. ஏன் நடக்கணும்?” தன் பெருத்த சந்தேகத்தை முன் வைத்தான் ரஞ்சன்.

“ரஞ்சு, அவன்கிட்ட வாங்கிக்கட்டிக்கணும்னே கேட்பியா? ஆல்ரெடி சொல்லி இருக்கான்ல. இங்க அதிகமா அனிமல்ஸ் இருக்கும். முக்கியமா பாம்புலாம் வரும். சோ, இங்க இருந்து வண்டில போகக் கூடாதுன்னு அவங்க தலைவர் சொல்லி இருக்குறதா முன்னாடியே சொன்னான்ல?” சிவரஞ்சனின் காதைக் கடித்தாள் ஆருத்ரா.

“நல்லவேள ஞாபகப்படுத்துன. ஆனாலும், பாம்புன்னு சொன்ன அப்ரோம்தான் லைட்டா அல்லுவிடுது” எச்சிலை விழுங்கியபடி தனது உடைமைகளை எடுத்தான்.

“அதான் இவன் இருக்கான்ல. பாத்துப்பான். டேய், இங்க இருந்து பாரு, வியூ செமயா இருக்கு.”

இவர்களின் உரையாடல்களில் பிறை கலந்துக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து தன் கிராம மக்களை சந்திக்க செல்கிறான். அவனுள் ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தன. அவனின் பெற்றோர்கள் தன்னை அடையாளம் காண்பார்களா? சொக்கனுக்கு தற்போது எப்படியும் இருபது வயதாவது இருக்கும்? அவன் என்ன செய்துக் கொண்டிருப்பான்? கல்லூரி சேர்ந்து இருப்பானா? இல்லை அன்று இருந்தது போல்? நினைக்கவே அவனுக்கு கசந்தது.

பெருமூச்சொன்றை விட்டவன், ‘என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். முதல்ல ரேன்ஜர போய் பாக்கணும்’ என்று எண்ணிக் கொண்டே தன் நடையை தொடர்ந்தான்.

“பிறை, இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணும்?” மூச்சு வாங்கியபடி கேட்டான் சிவரஞ்சன்.

“இன்னும் ஒரு கிலோ மீட்டர்தான். ஊர் வந்துடும்” என்றவனின் கண்கள் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தது.

அவனின் இல்லத்திற்கு இன்னும் ஒரு கொண்டைஊசி வளைவை கடந்தால் சாலைமார்க்கமாகவே சென்றுவிடலாம். ஆனால், சிறுவயது முதல் ஓடியாடிய இந்த இடம் இவனின் மனத்திற்கு இன்னும் நெருக்கமானதும் கூட. ஆகவேதான் இதன் வழியாக தன் இல்லத்திற்கு சென்றால் நிச்சயம் சொக்கனை காணலாம் என்றே தேர்ந்தெடுத்தான்.

இன்னும் சிறிது நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும் என்று உணர்ந்த பிறை, “கொஞ்சம் வேகமா நடங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும்”

“எனக்கு வீட்டுக்கு போற ஃபீல் இல்ல, ட்ரக்கிங்க்கு போற மாதிரியே ஃபீல் ஆகுது.”

“புலம்பாம வாடா. அவன் நம்மள கூட்டிட்டு வந்ததே பெரிய விசயம். இதுல நீ பேசுற பேச்சுல, திக்கு தெரியாத காட்டுல விட்டுட்டு போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல” அவனை இழுத்துக் கொண்டு நடந்தாள் ஆருத்ரா. என்னதான் நடந்தாலும் பிறையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட கிராமத்தின் நுழைவாயிலுக்கு வந்தாயிற்று. மலைக்கிராமத்திற்குள் நுழைந்ததுமே வரவேற்றது ஒரு பெரிய கிணறு. நான்கைந்து பேர் அருகில் இருந்த பெரிய திண்ணையில் அமர்ந்திருந்தனர்.

“ஆருப்போய், பொழுது சாஞ்ச அப்ரோம் ஊருக்குள்ள வரது? சுத்திப்பாக்க வந்தவுகன்னா முதல்ல அங்கேயே நில்லுங்க” என்று சத்தமிட்டப்படி ஒருவர் அருகில் வந்தார்.

பிறை சிரிப்புடனேயே நின்றுவிட்டான். இது ஊர்வழக்கம், பொழுது சாய்ந்த பின்னர் வெளியாட்கள் உள்ளே வரக் கூடாது என்பது.

“மணி அண்ணாதான?”

“நான் மணிதான்பா. நீ ஆரு? ஆரு வூட்டுக்கு வந்து இருக்க?”

“அண்ணா, நான் பிறைசூடன். சொக்கனோட அண்ணா.”

“நிஜமாவா? பிறைசூடனா நீ? வருசக்கணக்குள்ள ஆச்சு? வா, நம்ம ஆத்தாக் கோவிலுக்கு போய் மஞ்சத்தண்ணீல கால கழுவிட்டு ஊருக்குள்ள வா. இவங்க யாரு?”

“என்னோட ப்ரெண்ட்ஸ்தான் அண்ணா. ரெண்டு நாள்ல கிளம்பிடுவாங்க.”

“சரி என்கூட வாங்க” என்றபடி வந்த வழியே மற்றொரு ஒற்றையடி பாதை பிரிவிற்குள் அழைத்து சென்றார். இருட்டிவிட்டது. மணி எட்டுபோல் இருக்கும். அங்கு, அந்த வனக்கோவிலின் முன் வைக்கப்பட்டிருந்த தொட்டியில் மஞ்சளும் வேப்பிலையும் நிறைந்து இருந்தது. காலணிகளை கழற்றிவிட்டு அந்த நீரைக்கொண்டு கால்களை கழுவினர். பின், மணி அவர்களை கோவிலின் நுழைவாயில்வரை அழைத்து சென்றார்.

“சாமிய நல்லா வேண்டிக்கிட்டு ஊருக்குள்ள வாங்க. இத்தன நாளா உன்ன எதிர்பாத்துட்டு ஆத்தா இருக்கா. நல்லா கும்புட்டு வா பிறைசூடா.” என்றவரும் கடவுளை வேண்டினார்.

‘ஆத்தா, ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் நான் ஊருக்குள்ள வரேன். இத்தன வருசம் கண் இமைக்குற நொடில போய்டுச்சு. அப்பாவும் அம்மையும் என்னை ஏத்துக்கணும். முக்கியமா நான் செஞ்ச காரியத்துக்கு சொக்கன் என்கூட பேசுவானான்னு கூட தெரியல. இனிமே நடக்குற எல்லாத்துக்கும் நீ தான்மா துணையா இருக்கணும். மஞ்சரி மறுபடியும் பாக்குற சந்தர்ப்பம் கிடைக்குமா?’ பிறையின் மனது பல கேள்விகளால் சூழப்பட்டு இருந்தது.

“பிறை, இந்த சாமி யாரு? பொதுவா இப்படி காட்டுக்கு வனகாளி, வன தேவதை, வனமாயி இப்படிலாம் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன். இவங்களும் அப்படிதானா?”

“கிட்டத்தட்ட அப்டித்தான் ஆரு. இவங்க இந்த மலையையும், மக்களையும் காத்துட்டு வராங்க. இது வெறும் நம்பிக்க மட்டும் கிடையாது. உண்மையும் கூட.”

“என்ன பிறை சொல்ற?”

“புள்ளைங்களா, இதெல்லாம் அப்ரமேட்டுக்கு பேசிக்கலாம். ஏப்பா, பிறைசூடா அல்லாரயும் வூட்டுக்கு கூட்டிட்டு போ. இன்னைக்கு அமாவாச வேற. ஓதம் இருக்கும்னு தெரியும்ல. வேகமா போ”

“வாங்க போலாம்.”

சிவரஞ்சனிற்கு இந்த இடமே தற்போது வித்தியாசமாகத் தோன்றியது. காலையில் பயணப்படுகையில் இரம்மியமாகத் தெரிந்த இடம் தற்போது ஏதோ அச்சமூட்டுவதாய் இருந்தது. இருந்தும் தனது பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாது அமைதியாக உடன் சென்றான்.

வீட்டிற்குள் நுழையும் முன்னே பிறைக்குள் ஆயிரமாயிரம் உணர்வுகள் உள்ளுக்குள். வனக்கோவிலின் வடக்கே ஒரு சிறு சந்து செல்ல அங்கிருந்து இடதுப்பக்கம் சென்றனர். ஒரு பெரிய பாறை மீது இவனின் வீடு இருந்தது. மேலே யாரோ நிற்பது தொலைவில் இருந்து பார்க்கும் போதே தெரிந்தது.

“அடேய், திருட்டுப்பயலே. மணிக்கிட்ட காசு வாங்கி கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. இன்னும் திருப்பிக் குடுக்காம டிமிக்கி குடுத்துட்டு திரியுறியா? இனிமே பஞ்சாயத்து அது இதுன்னு என்கிட்ட வந்தீங்க. தோல உறிச்சுப்புடுவேன்.” என்று சத்தமிட்டவாறே ஒருவனை இன்னொருவன் எட்டி உதைத்தான்.

உதை வாங்கியவன் நேராக விழுந்தது பிறையின் காலடியில்தான்.

“ஆத்தாடி, நல்ல வரவேற்பு.” என்று இரண்டடி தள்ளி நின்றனர் ஆருத்ராவும் ரஞ்சனும்.

“டேய், சொக்கா” என்ற பிறையின் அழைப்பில் நிமிர்ந்தவன் ஒருநிமிடம் கண்ணோரம் சுருங்கப் பார்த்தான்.

பின் யாரென்று உணர்ந்துக் கொண்டவன், “வந்துட்டீங்களா? காலைலயே ரேஞ்சர் சொன்னாப்புல. வீட்டுக்கு போகலாம்.” பட்டும்படாமலும் பேசியவன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.

“இவன்… உன் தம்பியா பிறை?” கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட்டான் ரஞ்சன். சொக்கன் திரும்பிப் பார்க்க, “ஈஈஈ… இவர்ர்ர்… இவ்வ்வரு உங்க தம்பியா பிறை?” என்றான் இளித்துக்கொண்டே.

பிறை ஏதும்பேசாது தலையைமட்டும் அசைக்க, சிவரஞ்சன் “இந்தா மச்சான். முந்தாநேத்து உன்கிட்ட வாங்குன 252 ரூவா. 75 பைசா.”

“பைத்தியமா நீ? இத எதுக்கு இப்போ தர?”

“அதுக்கில்ல மச்சான். என்னதான் நான் உன் பிரெண்டா இருந்தாலும் சில பல அடிகளுக்கு மேல பாடி தாங்காது. நீ என்மேல எதாவது கோபமா இருந்து அது எசக்குபிசக்கா உன் தம்பி காதுல போச்சுன்னா, அப்ரோம் இந்த உதைக்கு நான் அடிவாரத்துல கிடப்பேன். அதுவும் இல்லாம, கடன் வாங்குனாலும் கரெக்ட்டா நான் கொடுத்துடுவேன்ல அதான். வச்சிக்க.”

“ஏய் லூசே, நீ வேற ஏன்டா?” என்றபடி பணத்தைத் திருப்பிக் கொடுக்க முயல, அதனைத் தடுத்தாள் ஆருத்ரா.

“வந்தவரைக்கும் லாபம்டா. பேசாம என்கிட்ட குடு” என்று அதனை வாங்கி அவளின்வசம் வைத்துக் கொண்டாள்.

“கிராதகி” என்று ரஞ்சனால் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.

மூவரும் சொக்கனோடு அந்த பாறை மேல் இருக்கும் இல்லத்திற்குள் சென்றனர். அவர்கள் கீழிருக்கும் போது பார்த்தது ஒரு மனிதன் என்று நினைக்கையில், மனிதன் போல் ஒரு பொம்மைதான் அங்கிருந்தது.

“என்ன ஆரு, இவன் வீட்டுக்கு பொம்மைலாம் காவலுக்கு வச்சி இருக்காங்க?”

“அதுலாம் எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் எனக்கு உறுதியா தெரியும்”

“என்னது?”

“இங்கருந்து போறதுக்குள்ள பிறைக்கிட்டயும் அவன் தம்பிக்கிட்டயும் செமத்தியா வாங்கதான் போற.”

‘ஆத்தா வனத்தாயி, என் உசுருக்கு எந்த ஆபத்தும் இல்லாம ஊர் போய் சேர்த்துடு’ உடனே ஒரு வேண்டுதலை வைத்தான்.

உள்ளே சென்ற சொக்கன் தனது அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“இப்போ எதுக்கு இத்தன கோவம்? ஏதோ போய்ட்டான். இப்போ நம்ம சனத்துலயே நல்ல நிலைமைல இருக்குறது இவன்தான். இந்த கோவம்லாம் எத்தன நாளைக்கு? அவன உள்ளார வர சொல்லுங்க அப்பு. அம்மே நீயாவது சொல்லேன்”

“அவனுக்கும் சேர்த்து தான புள்ளைங்க படிக்கணும்னு உன் அப்பு ஆசப்பட்டாரு. ஆனா, இவன் மட்டும் ஊரவுட்டு போய்தான் படிக்கணுமா என்ன? ஆத்தா வனத்தாயி நீதான்மா என் புள்ளைக்கு கவசமா இருந்து காப்பத்தணும்”

“ஏன்ம்மே, இன்னுமா உனக்கு புரியல. ஆத்தா கூட இருக்கங்காட்டியும்தான் அவன் இவ்ளோ தூரம் பாதுகாப்பா இருக்கான். இல்லன்னா அவன் செஞ்ச தப்புக்கு இந்நேரம் என்ன நடந்து இருக்கும்னு நமக்கு தெரியும்ல. அவன உள்ளார கூப்டுங்க அம்மே”

தன் தாய் தந்தை இருவரிடமும் தனது தமையனுக்காகப் பேசிக் கொண்டிருந்தான் சொக்கன்.

“இருந்தாலும் சொக்கா ஆத்தாக்கிட்ட கேட்காம கொள்ளாம நாமளே எந்த முடிவும் எடுக்க முடியாது.”

“அது வரைக்கும் அவன வூட்டுக்குள்ள சேர்க்காம இருக்க போறீங்க அப்டிதான? அவன் மட்டும் வரல, கூட அவனோட கூட்டாளிங்களயும் கூட்டிட்டு தான் வந்து இருக்கான். இப்போ என்ன பண்ண போறீங்க?”

சொக்கனின் இந்த கேள்விக்கு இருவரும் பதில் சொல்லவில்லை.

“சொக்கா, வீட்ல இருக்கீயா?” என்றபடி வந்தார் அந்த பகுதியின் வனக் காப்பாளர் கார்த்திகேயன்.

“வாங்க சார்.” என்று சொக்கன் அவரை வரவேற்க,

“கும்புடுறோங்கய்யா.” என்று பெரியவர்கள் இருவரும் அவரை உள்ளே அழைத்தனர்.

“மன்னிக்கணும். நான் நீங்க பேசுனத கேட்டுட்டு தான் வந்தேன். பிறையயும் அவனோட ப்ரெண்ட்ஸ்சயும் நான் என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.”

“அது வந்துங்க…” பெரியவர் இழுத்தார்.

“நீங்க உங்க சாமிக்கிட்ட குறி கேட்டுட்டு பதில் சொல்ற வரைக்கும் இந்த குளுருல மூணு பேரும் இருக்க முடியுமா சொல்லுங்க? நீங்க பொறுமையா எல்லாம் செய்ங்க. என்னாலதான் அவன் இந்த இடத்த விட்டு போற மாதிரி ஆச்சு. இப்போ நானே கூட்டிட்டு வந்துட்டேன். மஞ்சரி இல்லாம போனதுக்கு பிறை எந்த விதத்துலயும் காரணம் கிடையாது. அதுமட்டும் இப்போவும் நான் உறுதியா சொல்வேன். வரேன்ங்க” என்றுவிட்டு வெளியே வந்தவர், “பிறை, நீயும் உன் ப்ரென்ட்ஸ்சும் என்கூட வாங்க” என்று அழைத்து சென்றார்.

தனது வீட்டையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே அவருடன் பயணித்தான் பிறைசூடன் நம் நாயகன்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 3.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அங்கயற்கண்ணி அறிமுகம் அருமை. யாழ்நிலா, பேரன்பு, அறிவு என படிப்பிற்காக நண்பர்களின் தைரியமான செயல்பாடுகள் அருமை. 👌🏼

    பிறைசூடன், சிவரஞ்சன், ஆருத்ரா ❤️‍🔥❤️‍🔥 ஜருகு மலைகிராமம் எல்லாம் சிலிர்க்க வைக்கின்றது.

    வாழ்த்துகள் சகோதரி 👏🏼🥰🥰

    1. Author

      Thank you sis. Keep reading and support 😍