Loading

சிற்பமே 1

சென்னை, பெரம்பூரில் அமைந்திருந்த ஹௌஸிங் போர்ட் யூனிட் அது. அடுக்கடுக்காய் அடுக்குமாடியில் அமைந்திருந்த வீடுகளில் இருக்கும் மக்களிடம் பெரிதாக காசு பணம் இல்லை என்றாலும் சந்தோஷம், நிம்மதி மற்றும் மனித நேயம் நிறையவே இருந்தது. 

 

“ரிஷி! அக்காவும் மாமாவும் சென்னை வந்திருப்பாங்களா?” என்று பத்து நிமிடத்திற்கு ஒரு நொடி ஆர்வத்துடன் ஆரவாரமாக கேட்டுக்கொண்டே இருந்தார் சரஸ்வதி, ரிஷியின் தாயார். 

 

“அம்மா, அவங்க துபாய்ல இப்போ தான் ஃபிளைட் ஏறியிருப்பாங்க. இன்னும் அஞ்சு மணி நேரம் மேல ஆகும். நீங்க தூங்குங்க! நான் சரியான டைம்ல ஏர்ப்போர்ட்க்கு சென்று கூப்பிடப் போயிடுவேன்” என்று பொறுமையாக ஆனால் அழுத்தமாக எடுத்துரைத்தான். 

 

“மாப்பிள்ளையும் அக்காவும் வராங்கன்னு நான் இந்த முறை நம்ம முத்தைய்யா கடையில நல்ல பழைய மரக் கட்டிலா வாங்கியிருக்கேன்” என்று வாய் முழுக்க பல்லுடன் சந்தோஷம் பொங்கக் கூறினார் மாணிக்கம், ரிஷியின் தந்தை. 

 

“அப்படியே நாளைக்கு மீன் குழம்பு வாங்கிட்டு வந்திடுங்க! மாப்பிள்ளை விரும்பி சாப்பிடுவாரு” என்று சரஸ்வதி கூறிக்கொண்டிருக்க, 

 

“ரெண்டு பேரும் ஏன் புரிஞ்சிக்கவே மாட்டிங்குறீங்க! எப்போ அக்காவும் மாமாவும் இந்தியா வந்தால் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க? இப்போ வர! எப்பவும் போல நீங்க ரெண்டு பேரும் தான் மாமா வீட்டுல போய் இருக்கணும்” என்று சலிப்புடன் கூறினான் ரிஷி. 

 

“அதெல்லாம் சரி. ஆனால் நீ கண்டிப்பா மாமாவை நம்ம வீட்டுக்கு கூப்பிடு ரிஷி. நம்ம முறை தவறிடக்கூடாது” என்று தீவிரமாகக் கூறிய அன்னையிடம், 

 

“ஆமா ஆமா எல்லாமே முறைப்படியா தான் நடந்திருக்கு பாருங்க. இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று அவன் முணுமுணுத்தாலும், அவனுடைய அக்காவின் கணவன் பாலாஜி என்றால் ரிஷிக்கு அத்தனை பிடித்தம் மற்றும் மரியாதை. பின்னே தன் அக்கா வித்யாவை தங்கத் தட்டில் வைத்து தாங்கும் கணவன் அல்லவா. 

 

வித்யா, ரிஷியின் ஒரே அக்கா… அவனை விட மூன்று வருடங்கள் மூத்தவள். மாணிக்கம் மற்றும் சரஸ்வதி படிக்கவில்லை என்றாலும், இருவருக்கும் நிரந்தர வேலை இல்லை என்றாலும், பிள்ளைகள் இருவரையும் நன்கு படிக்க வைத்தனர். அதன் பிரதிபலிப்பால் இருவருமே மெரிட்டின் அடிப்படையிலேயே பொறியியல் பட்டதாரி ஆகினார்கள். 

 

வித்யா கல்லூரியில் படிக்கும் போது  அவளின் வகுப்புத் தோழனான பாலாஜி அவளைக் கண்டதும் காதல் வயப்பட்டு, அவள் பின்னாடி சுற்றித் திரிந்து எப்படியோ அவளையும் ஒத்துக்கொள்ள வைத்துவிட்டான். 

 

வித்யாவின் வீட்டில் எதிர்ப்பென்ற வார்த்தைக்கே இங்கே பேச்சில்லை. ஏனெனில் பாலாஜி படிப்பிலும் உசத்தி, அந்தஸ்தில் ஒசத்தியோ ஒசத்தி. இதில் அவனுக்கு அப்பா அம்மா முன்னமே இறந்துவிட்டதால் மாமியார் கொடுமையும் இல்லை என்று ரொம்பவே சந்தோஷமாக படித்து முடித்த உடனே பொண்ணைக் கட்டிக் கொடுத்தனர்.

 

பாலாஜியின் தாத்தா மற்றும் பாட்டி, பேரன் படித்துமுடித்த உடனே காதல் விஷயத்தை அறிந்து திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். பொறியியல் முடிக்கும் போது கேம்பஸில் தேர்வாகி இருந்தவன் அடுத்த இரண்டு வருடத்தில் ஆன்சைட் ஆப்பர்சூனிட்டி பெற்று மனைவியுடன் அமெரிக்கா சென்றிருந்தான். 

 

வித்யா மற்றும் பாலாஜிக்கு திருமணம் நடந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆயிற்று ஆனால் இன்னும் குழந்தை இல்லை.

 

இதுவரை மூன்று முறை அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு விடுமுறைக்கு வந்தாயிற்று ஆனால் பாலாஜி ரிஷியின் வீட்டிற்கு வந்தபாடில்லை. வரவும் மாட்டான். மாமனார், மாமியார் மற்றும் மைத்துணன் மீது அலாதி பிரியம். ஆனாலும் அவனால் இவர்கள் வீட்டு ஆட்கள் வசிக்கும் இடத்தில் வந்து இருக்க தயக்கம். கல்யாணமாகிய புதிதில் ஒரு முறை வந்தவன் அதன் பின் அறவே நிறுத்திக்கொண்டான். அதை வித்யாவின் பெற்றோர்கள் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் ரிஷிக்கு அப்படி இல்லை, ஆதங்கமாக இருந்தது. 

 

ரிஷி, சென்னை முகப்பேரில் ஈபி ஆபிஸில் ஈபி என்ஜினீயராக வேலைப் பார்க்கிறான். கை நிறைய சம்பாதித்தாலும் அவனின் சம்பாத்தியம் தான் மொத்த குடும்பத்தையே இப்போது காப்பாற்றுகிறது! வயது முதிர்ந்த அப்பா மற்றும் அம்மாவை வேலைக்கு அனுப்ப மகனுக்கு துளி அளவும் விருப்பமில்லை. 

 

பிறரிடமிருந்து தனக்கு மிகவும் மரியாதை எதிர்ப்பார்ப்பான். அவனும் அனைவரையும் மதிப்பான் தான். பணத்தை விட படிப்பு, உத்தியோகம், தன்மானம் மற்றும் ரோஷமே ரொம்ப முக்கியம் அது தன்னிடம் நிறையவே இருக்கிறது என்று மனதினுள் பெருமைக் கொண்ட கர்வி. 

 

மாமா தன் வீட்டிற்கு வராததால் ரிஷியும் அக்காவின் புகுந்த வீட்டிற்கு கல்யாண சடங்குகள் பிறகு இதுவரை சென்றதில்லை. இவ்விஷயத்தில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் பனிப்போர் இது. 

 

ஒரு டாக்சியை புக் செய்து சென்னை ஏர்ப்போர்ட்டிற்கு அந்த நடுநிசியில் சென்று அவன் காத்துக்கொண்டிருக்க, அடுத்த அரை மணி நேரத்தில் சிரித்த முகத்துடன் பாலாஜியும் வித்யாவும் ரிஷியை கண்டறிந்து அவனை நோக்கி நடந்து வந்தனர். 

 

“டேய் ரிஷி! ஆளு பார்க்க ஹீரோ மாதிரி ஆயிட்ட டா… என் குட்டித் தம்பி இப்படி வளர்ந்துட்டானே” என்று தம்பியை பாசத்தில் அணைத்தபடி வித்யா நெகிழ, 

 

“வாங்க மாமா! வாக்கா!” என்று முதலில் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றவன், இருவரிடமும் பொதுப்படையாக நலம் விசாரித்துவிட்டு, அக்கா புறம் திரும்பி, 

 

“நீ லாஸ்ட் டைம் வரும் போது நான் என்ன குட்டி பையனாவாக்கா இருந்தேன்… இப்போ எனக்கு இருபத்தி ஏழு வயசு ஆயிடுச்சு” என்று காலரை தூக்கியபடி புன்னகைத்தான். 

 

“நீ எவ்வளவு பெரிய ஆளானாலும் இந்த அக்காக்கு நீ என் குட்டி தம்பி தான்” என்று மனைவி மைத்துனனைக் கொஞ்சுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த பாலாஜியின் மனம் அவனுடைய ஆருயிர் குட்டித் தங்கையைத் தேடி ரொம்பவே ஏங்கியது. 

 

‘எப்படியும் வரமாட்டாங்க ’ என்று யோசித்தபடியே, “மாமா! நம்ம வீட்டுக்கு போலாமா?’ என்று ரிஷி கேட்க, 

 

“ஆமா ரிஷி… நம்ம அடையார் வீட்டுக்குத் தான்” என்று உரைத்த கணவனை ஏமாற்றம் கலந்த ஆதங்கத்துடன் பார்த்த வித்யாவை சலிப்புடன் பார்த்த ரிஷி, 

 

“என்னமோ புதுசா நடக்குற மாதிரி ஃபீல் பண்றாள்” என்று மிகவும் மெதுவாக முணுமுணுத்தபடி பெட்டிகளை டாக்சியில் எடுத்து வைத்தப் பின்னர், அடையாரில் உள்ள பாலாஜியின் வீட்டை நோக்கி அவர்களின் பயணம் தொடர்ந்தது.

 

பாலாஜியின் தந்தை மற்றும் தாய் அவன் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதே, அவசர வேலையாக சூரத் செல்லும் பொழுது விமான விபத்தில் இறந்திருந்தார்கள். 

 

கெட்டதில் நல்லது போல அப்போது ஆறு வயது பாலாஜியின் தங்கையான ஜானவியும், பாலாஜியும் பள்ளியில் முழு ஆண்டு தேர்வு இருந்ததின் காரணத்திற்காக செல்லாமல் பாட்டி மற்றும் தாத்தாவுடன் இருந்தனர். 

 

காலம் காலமாக ஜவுளிக்கடை தொழிலில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருக்கும் குடும்பம் தான் பாலாஜியின் குடும்பம்…  

 

குசேலன் மற்றும் காஞ்சனாவின் மூத்த மகனின் மக்கள் தான் இருப்பிள்ளைகளும். மகன் மற்றும் மருமகள் இறந்த பின்னர் பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி தான் எல்லாமே! அதிலும் சிறிய வயதிலேயே தாய் தந்தையை இழந்த ஜானவியை தங்கத்தட்டில் வைத்துத் தான் தாங்கினார்கள் மொத்த குடும்பமும். 

 

வந்திருப்பது முதலாளி என அறிந்து அடையாரில் உள்ள இந்திரா நகரில் அமைந்துள்ள பங்களாவின் வாசல் கேட்டை திறந்துவிட்டான் வாட்ச்மேன் ராசமணி . 

 

உற்சாகத்துடன் வீட்டு பெல்லை அழுத்திவிட்டு மனைவியிடம் இருந்த லக்கேஜை வாங்க சென்ற பாலாஜியிடம், ரொம்ப வருடங்களாக வீட்டில் வாட்ச்மேன்னாக பணிபுரியும் ராசமணி, “நல்லா இருக்கீங்களா சின்னய்யா” என்று பாலாஜியின் கையை வாஞ்சையுடன் பிடித்து  பேசினார், 

 

வீட்டு வாசலின் பக்கம் லக்கேஜ்களை வைத்துக்கொண்டிருந்தான் ரிஷி. காலிங் பெல் சத்தத்தில் பேரன் வந்துவிட்டான் என ஆர்வமாக மூக்கு கண்ணாடியைப் போடாமலயே கதவைத் திறந்த பாட்டிக்கு அரை குறையாய் தெரிந்தது ரிஷி தான்… 

 

கிட்டத்தட்ட அவனைப் பார்த்தே மூன்று வருடங்கள் இருக்கும். அதனால் அவன் வித்யாவின் தம்பி என்ற நினைவும் இல்லை, மூக்குகண்ணாடியின்றி பாட்டிக்கு கண் வேற சரியாக தெரியவில்லை. 

 

“யாரு நீ?” என்று தன் முன் தெரிந்த ரிஷியை பாட்டி புரியாமல் கேட்க, 

 

லக்கேஜை கீழே வைத்து நிமிர்ந்தவனுக்கோ, ‘நான் யாருன்னு கூட இவங்களுக்கு தெரியாதா’ என்று மனதில் கோபம் எழ,

 

“என்ன பேச மாட்டிங்குற! பப்புமா யாரோ தெரியாத ஆளு நிக்குறான்” என்று பதறி கத்த, வாட்ச்மேனிடம் பேசிக்கொண்டிருந்த பாலாஜியும் வித்யாவும் வேகமாக இவர்களை நோக்கி வந்தனர். 

 

ஒரு கேக்கை காஃபி மேஜை மீது  வைத்தபடி, பக்கத்து சோஃபாவில் தன் இரவு உடையான முக்கால் பேன்ட் மற்றும் சட்டை அணிந்தபடி ஒற்றை காலை சோஃபாவின் மேல் தூக்கிவைத்து, ஒரு கையை கால் முட்டியில் முட்டுக்கொடுத்து அதை தலையணையாய் பயன்படுத்தி கன்னத்தை அதில் பார்க் பண்ணி வைத்திருந்த படி அரைத் தூக்கத்தில் கண்களை மூடியிருந்த ஜானவியின் காதில் பாட்டியின் அலறல் விழ, “ஐய்யயோ திருடன் எல்லாரும் வாங்க” என்று அரைகுறையாய் புரிந்து கொண்டு கத்த, 

 

வீட்டில் வேலையாட்கள் ஒன்று கூடி சூழ, அவர்களோடு சேர்ந்து வாசல்புறம் வந்த ஜானவி, வாசலில் அசைவற்று  விரைப்பாக நின்றிருந்த ரிஷியைக் கண்டு, “ஐய்யயோ திருடன்” என்று கத்தவும், வேலையாட்களும் “திருடன் திருடன்” எனக் கத்த, ரிஷியோ ஜானவியிடம் சுட்டெரிக்கும் அனல் பார்வையை வீசியபடி, பற்களை நரநரத்தபடி தன் கை விரல்களை மூடி இறுக்கி கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் போதே, 

 

“அவன் என் தம்பி ரிஷி” என்று தன் கணவனை முந்தி வேகமாக வந்து ஜானவியைப் பார்த்து உரைத்த நித்யாவின் வார்த்தையில் அத்தனை கோபத்தை மறைத்து வெளிவந்த ஆதங்கம். 

 

“அக்கா, நான் லக்கேஜ் எல்லாம் வெச்சிட்டேன்! கிளம்புறேன்” என்று ஜானவியை அழுத்தமாக முறைத்தபடியே அக்காவிடம் திரும்ப, ‘எதுக்கு இந்த ஆள் இப்படி எண்ணெய சட்டியில போட்ட மாதிரி கொதிக்குறான்! நம்ம தெரியாமல் தானே சொன்னோம்… சரி தான் போடா’ என்று மனதில் கூலாக நினைத்தாள் ஜானவி. 

 

“திமிருப் பிடிச்சவள்” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வேக நடையுடன் சென்ற தம்பியை தடுத்து நிறுத்த முடியாது திணறிய வித்யாவிற்கு தம்பியுடைய கோபத்தின் வீரியம் தெரியும். 

 

நடந்தவை அனைத்தையும் செவி வழியாக கேட்டபடி வந்த பாலாஜியோ, “ரிஷி, நீ வீட்டுக்கு அடிக்கடி வந்திருந்தால் உன்னை அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்” என்று அழுத்தமாகச் சொல்ல, 

 

‘நீங்கள் வராமல் நான் ஏன் வரணும் மாமா’ என்று மனதில் அவரிடம் வாதாடியவனோ, அக்காவுக்காக உடனே முக வாட்டத்தை மாற்றி ஒன்றுமே நடவாதது போல், “மாமா! நீங்க சொல்றதும் சரி தான்” என்று பாசாங்கான புன்னகையை வீசிவிட்டு, “நான் அப்போ கிளம்புறேன் மாமா” என்று கூறியபடியே செல்பவனை புன்னகையுடன் பார்த்த பாலாஜிக்கு மைத்துனனை நினைத்து பெருமை தான். 

Click on a star to rate it!

Rating 3.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்