
சமுத்திரா – 34:
கப்பலில் படர்ந்திருந்த அடர்ந்த கொடிகளினுடே நண்டுகள் ஓடிக் கொண்டிருந்தன. நண்டுகளுக்கு இணையாக நத்தைகளும் அதனின் உடலை வளைத்து, நெளித்து ஊர்ந்துக் கொண்டிருந்தன.
அதனிடம் சிக்கிக் கொள்ளாமல் நண்பர்கள் அனைவரும் அமர்ந்தப்படியே கடற்கன்னி சொல்லும் கதையை கேட்க தயாராகினர்.
“இந்த பூக்களை பெற்றுக்கொள் சௌந்தர்யம். இவை அனைத்தையும் யாம் உனக்காகவே எடுத்து வந்தேன்.” என பல வண்ண கலவைகளில் இருக்கும் பூக்களை கடற்கன்னியான சௌந்தர்யத்தின் கையில் கொடுத்தான் வருணன்.
வருணன், கடற்கன்னியின் ஆண் பாலினத்தை சார்ந்தவன். மன்மதனுக்கு இணையாக அழகில் மிளிருபவன். கருமைநிற அடர்ந்த கூந்தல் தோள்வரை படர்ந்து சிங்கத்தின் பிடரியை நிச்சயம் நினைவூட்டும்.
பூக்கள் மட்டுமன்று, அரியவகை சிப்பிகள், முத்துகள் மற்றும் பலவிதமான அற்புத கற்கள் என அனைத்ததையும் ஆபரணங்களாய் செய்து அவனின் மனம் கவர்ந்த சௌந்தர்யத்திற்கு பரிசளிப்பான், வருணன்.
காதல் தழும்பும் விழிகளால் அவனை பார்த்த கடற்கன்னியும் அவனிடமிருந்து அதனை பெற்றுக் கொண்டாள்.
“பரிசு கொடுத்த உன்னவனுக்கு எந்த பரிசும் இல்லையா சௌந்தர்யம்?” என மயக்கும் குரலில் கேட்டபடியே கடற்கன்னியை நெருங்கினான் வருணன்.
கையில் காப்பும் கழுத்தில் சிறு பதக்கம் வைத்த சங்கிலியும் அணிந்திருந்தான். இடுப்பின் கீழ் தங்க நிற செதில்கள் நிறைந்திருக்க, மேலே வெற்று உடலில் இருந்தான் வருணன். தன்னிடம் நெருங்கியவனின் திண்ணிய மார்பில் கைவைத்து வெட்கத்துடன் தடுத்தாள் சௌந்தர்யம்.
“இன்னும் ஒரு திங்களில்(மாதத்தில்) நமக்கு திருமணம் நடக்க உள்ளதே சௌந்தர்யம்! நான் உன் அருகில் நெருங்க கூடாதா? எதற்கு என்னை தடுக்கிறாய்..” என உடுக்கை போல் வளைத்திருந்த சௌந்தர்யத்தின் இடையில் அழுத்தம் கொடுத்தவன் அவளின் காது மடலை உரசியபடியே தாபமாக கேட்டான்.
“என்னால் தங்களை மறுக்க இயலாது பிரபுவே! அதை செய்யும் நிலைக்கு என்னை உட்படுத்தாதீர்கள்..” என மெல்லிய குரலில் சொன்னவள் இறைஞ்சும் விழிகளால் அவனை கெஞ்சினாள்.
அதில் காதல் பொங்க அவளை பார்த்தவன், “நம் இனத்தின் பொக்கிஷமான நவரத்தின கற்களாலான சிவலிங்கத்தை பாதுகாக்கும் பணியில் என்னையும் சேர்த்திருக்கிறார்கள் சௌந்தர்யம். ஆகையால், என்னால் உன்னை அடிக்கடி சந்திக்க இயலாது.” என அவளை பார்க்க முடியாத ஏக்கத்தை வார்த்தையில் வடித்தான்.
கடலுக்கடியிலே அவர்கள் குலத்திற்கென ஒரு சிவாலயம் இருக்குறது. அங்கு உள்ள லிங்கம் நவரத்தினங்களால் செய்யபட்டிருக்கும். அவர்களின் இன மீன்களுக்கு குலதெய்வமாக சிவ பெருமாள் தான் இருக்கிறார்.
அந்த கடலில் தான் கொள்ளைக்கூட்டமும் சுற்றி கொண்டிருந்தன. எப்படியோ இந்த நவரத்தின சிவ லிங்கத்தை பற்றி அறிந்து கொண்டவர்கள் அதனை எப்படியாவது அவர்களுக்கு சொந்தமாக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர்.
ஆகையாலே, கடற்கன்னியின் இனத்தில் பலமிக்க ஆண் வகை மீன்களை அதற்கு காவலாக இருக்க பணிப்பர். அப்படி தான் வருணனும் அதில் ஒருவனாக தேர்வானான். அப்படி காவல் பணியில் இருக்கும் மீனின் குடும்பத்திற்கு ஏக போக வரவேற்பு கிடைக்கும். வருணனை திருமணம் முடிக்க இருக்கும் சௌந்தர்யத்திற்கு இந்த விஷயம் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. எனவே அதனை வருணனிடமும் பகிர்ந்துக் கொண்டாள்.
“நம் குலத்தின் கடவுளான சிவ பெருமானிற்கு தொண்டு செய்வது என்பது எவ்வளவு பெரிய காரியம். அதில் என்னவரின் பங்கும் இருக்கும் என்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்.” என அவனின் இதழில் இதழை பதித்தாள்.
அவர்களின் கடற்கன்னி இனம் கடலுக்கடியில் இருந்தாலும் அனைவரும் அடிக்கடி கடலின் கரைக்கு வந்து வந்து தான் செல்வார்கள். அப்படி ஒருநாள் சௌந்தர்யமும் வருணனும் கரையில் சந்தித்த பொழுது தான் கடற்கொள்ளைக்காரியான ஆரலியின் கண்ணில் சிக்கினார்கள். “இவன் தான் என் திட்டத்திற்கு சரியாக இருப்பான்.” என ஒரு திட்டத்தை நொடியில் வகுத்தாள்.
ஒருநாள், கடற்கரையின் ஓரத்தில் சிதறி கிடந்த சிப்பிகளை எடுத்துக்கொண்ட வருணன் அதனை மாலையாக கோர்க்க துவங்கினான். அப்பொழுது அங்கே ஆரலி வந்தாள்.
“இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தான் இப்படி சோழியையும் சிப்பிகளையும் பொறுக்கி கொண்டிருக்க போகிறாய் வருணன்? உன்னுடைய உலகத்தில் இதனை விட்டால் வேறெதுவும் கிடையாது வேறு!” என நக்கலாக கேட்டாள் ஆரலி.
“யார் சொன்னது? எங்கள் குலத்தின் கடவுளான சிவபெருமானிற்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. பேராசை கொண்டு; அதனை அடைந்து அற்ப சந்தோசம் அடையும் மனிதர்களாகிய உங்களுக்கு எங்களை பற்றி என்ன தெரிந்துவிட போகிறது?” என உதட்டை வளைத்து இகழ்ச்சியுடன் சொல்லிவிட்டு கடலில் குதிக்க தயாரானான்.
“நீ சொல்வதும் சரி தான் வருணன். ஆனால், ஒன்றை நினைவில் கொள். ஆசை என்ற ஒன்றில்லாமல் எப்படி வளமான வாழ்க்கையை வாழ முடியும்? ஆசைக்கொண்டு; அதனை அடைந்து; அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி தான். அதைவிட்டுட்டு எனக்கு இருப்பதே போதும் என சோம்பேறி தனமாக இருக்கும் உங்களை போன்றவர்களால் நிச்சயம் மனிதர்களை புரிந்துக் கொள்ள முடியாது தான்.”
“இப்பொழுது தங்களுக்கு என்ன வேண்டும்.” என நேராகவே கேட்டுவிட்டான் வருணன்.
“நவ இரத்தின கற்களாலான சிவலிங்கத்தை நீ என்னிடம் கொண்டு வர வேண்டும். அதனைக்கொண்டு இந்த சமுத்திரா சாம்ராஜ்யத்தையே என்னால் ஆட்டி படைக்க முடியும். அதில் உமக்கும் ஒரு பங்கு கொடுக்கிறேன்.” என ஆசை வார்த்தையில் அவனின் மனதில் கல்லெறிந்தாள் ஆரலி.
“செத்தாலும் சாவேனே தவிர ஒரு பொழுதும் என் குலத்திற்கு துரோகம் இழைக்க மாட்டேன்..” என வீரமாக பேசிய வருணன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
‘இப்பொழுது தானே ஆட்டம் அரம்பித்திருக்கிறது. போக போக உன்னை என் வலையில் விழ வைக்கிறேன் பார்.’ என சபதம் எடுத்தாள் ஆரலி.
இவ்விஷயம் சௌந்தர்யத்தின் செவியை அடைந்தது. “இனி நீங்கள் அந்த ஆரலியின் பக்கம் செல்லாதீர்கள் பிரபுவே! அவளின் நிழலையும் தீண்டாதீர்கள்.” என வருணனை எச்சரித்தாள்.
‘எறும்பு ஊற கல்லும் தேயுமாம்.’ என்பதை போல் தினமும் எப்படியாவது வருணனை சந்தித்து அவனின் மனதை குழப்ப துவங்கினாள் ஆரலி. முதல் நாள் அவளை திட்டிய வருணன், போக போக அவனை அறியாமலே அவளின் திட்டத்தில் கைகோர்த்துக் கொண்டான்.
இன்னும் இரு தினங்களில் திருமணம் என்ற நிலையில் சௌந்தர்யம் வருணனை பார்க்க வந்திருந்தாள். ஆனால் வருணனோ ஆரலியோடு சதி ஆலோசனை செய்து கொண்டிருந்தான்.
அதனை பார்த்த சௌந்தர்யத்தின் இதயத்தை யாதோ பிளப்பது போல் வலித்தது. அவர்களின் வழக்கப்படி ஒருவனுக்கு ஒருத்தியே! அப்படி மனதில் நினைத்தவருடன் சேர முடியவில்லை என்றால் வாழ்க்கை முழுக்க அவர்கள் தனியாகவே வாழ்ந்து மரணிப்பார்.
சௌந்தர்யத்தால் வருணனின் இந்த துரோக செயலை அவ்வளவு எளிதில் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, ஆரலி சென்ற பின் வருணனிடம் சென்றாள்.
“வாருங்கள் தேவியே! இன்னும் இரு நாட்களில் நமக்கான திருமணம் முடிந்துவிடும். அதன் பிறகு நமக்கு வளமான வாழ்க்கை காத்திருக்கிறது.” என அவளின் கையை பிடித்தான்.
அவனிடம் இருந்து கையை உருவிக்கொண்ட சௌந்தர்யம், “நம் குலத்திற்கு எதிராகவே தங்களால் எப்படி செயல் பட முடிந்தது பிரபுவே?” என கோபமாக கேட்டாள்.
“அனைத்தையும் அறிந்துகொண்டாயா? அது எல்லாவற்றையும் நம் நல்லதுக்காக தான் செய்கிறேன் சௌந்தர்யம்.” என மீண்டும் அவளின் கையை பிடிக்க முயன்றான்.
“இனி உமக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இனி நீங்களும் நானும் தனித்தனியாக தான் வாழ வேண்டும்.” என அழுதபடியே சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள். ‘இப்படி சொன்னால் வருணன் நிச்சயம் திருந்தி என்னை தேடி வருவான்!’ என அவளுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.
இவை அனைத்தையும் கொள்ளைக்காரியான ஆரலியிடம் தெரிவித்து அவளிடம் இருந்து விலக முயன்றான் வருணன். “அந்த லிங்கத்தை எடுத்து நீ பெரிய நிலைக்கு வந்துவிட்டால் உன் காதலி உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வாள்.” என அவனை மூளை சலவை செய்து அந்த லிங்கத்தை எடுப்பதற்கான நேரத்தையும் குறித்தாள்.
மறுநாள் அமாவாசை இரவில், நடுக்கடலின் ஆழத்தில் இருக்கும் சிவலாயத்திற்கு வந்தான் வருணன். அங்கு மேலே கப்பலில் அவளின் ஆட்களுடன் ஆரலியும் காத்துக் கொண்டிருந்தாள்.
திட்டமிட்டபடி வருணன் சிவலிங்கத்தை எடுத்துவிட்டான். ஆனால், சக கடற்கன்னிகளிடம் மாட்டிக் கொண்டான். விஷயம் அறிந்து வேகமாக அங்கே வந்தாள் சௌந்தர்யம்.
அவர்கள் குலத்தின் மூத்த குடிமகனான மகாமுனியும் அங்கே இருந்தார். அங்கிருந்த அனைவரும் வருணனை கொன்றுவிட சொல்லி அவர்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
‘நான் உங்களை எவ்வளவு தடுத்தேன்? இது நமக்கு தேவையா?’ என கேட்டபடியே வருணனிடம் அழுதாள் சௌந்தர்யம்.
“நம் குலத்திற்கே துரோகம் செய்த நீ கருநாகமாய் உருமாறி அந்த நவஇரத்தின கற்களாலான சிவலிங்கத்தை பாதுகாப்பது இனி நின் கடமையாகும்.” என சாபமிட்டார் மகாமுனி.
“வேண்டாம் ஐயனே! எனக்கு இப்படி ஒரு பெரும் தண்டனை வேண்டாம். மானிடரின் ஆசை வார்த்தைகளில் மயங்கி மாபெரும் தவறை இழைத்துவிட்டேன். தயை கூர்ந்து என்னை மன்னித்தருள்க. இனி என் காலம் முழுக்க நிச்சயம் நான் இந்த அரும்பெரும் லிங்கத்திற்கு காவலனாக இருப்பேன்.” என மகாமுனியிடம் மன்றாட துவங்கினான் வருணன்.
“சாபம் கொடுத்தது கொடுக்க பட்டது தான் வருணன். நீ இழைத்த தவறுக்கு அதை அனுபவித்தே ஆக வேண்டும்.” என மகாமுனியும் அசையவில்லை.
“அவர் நாகமாய் மாறிவிட்டால், என்னுடைய நிலைமை என்ன ஐயனே! இனி நான் என்னை மாய்த்துக் கொள்வதை தவிர எனக்கு வேறு வழியும் இல்லையே!” என கண்ணீரில் கேட்டாள் சௌந்தர்யம்.
“அதை அவன் தவறிழைக்கும் முன்னே யோசித்திருக்க வேண்டும் மகளே!”
“எங்களுக்கு மட்டும் எதற்கு இந்த சோதனை? மற்றவர்களை போல் நாங்களும் மகழ்ச்சி நிறைந்த காதல் வாழ்வை வாழும் தகுதியை இழந்து விட்டோமா? தங்களின் சாபம் விலக வேண்டுமென்றால் நாங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்கிறோம்.” என சௌந்தர்யம் மன்றாடினாள். கருநாகமாய் உருமாறிவிட்ட வருணனும் அங்கே அருகில் தான் இருந்தான்.
“அனைத்து தவறுக்கும் மன்னிப்பென்பது தீர்வாகாது தான். ஆனால், தவறை உணர்ந்தவர்களுக்கு மன்னிப்பு என்பது நிச்சயம் திருந்தி வாழ மற்றொரு வாய்ப்பாக அமையும்.” என்ற மகாமுனி,
“என்னால் ஒன்று மட்டும் கூற முடியும். சிவன்-சக்தி என இருபால் தெய்வமான அர்த்த நாரீஸ்வரரால் மட்டுமே வருணனின் சாபம் உடையும். அதுவரை அவனுக்கான தண்டனையை அவன் அனுபவித்தே தீர வேண்டும்.”
“எப்பொழுது சிவன் மற்றும் சக்தி என்ற நாமத்தில் இங்கு மனித குலத்தை சேர்ந்தவர்கள் வருகிறார்களோ. அன்று தான் வருணனின் சாபம் முழுமையாக விலகும். நீயும் அதுவரை உன்னுடைய குலத்துடன் வாழ முடியாது சௌந்தர்யம். அதுவரை உனக்கும் இங்கு இடமில்லை.” என்று மகாமுனி உத்தரவிட்டார்.
“அன்றிலிருந்து இந்த விளையாட்டில் வருபவர்களுக்கு நான் சிறிது உதவிகள் செய்து அவர்களை வழி நடத்துவேன். ஆனால், அவர்கள் விளையாட்டை முடிக்காமல் இந்த உலகத்திலே மாட்டிக்கொண்டு மாண்டுவிடுவர். இல்லை நான் எதிர்பார்த்த பெயருள்ள நபர் வராமலே இருப்பர்.”
“ஆனால், இப்பொழுது உங்கள் இருவரையும் இங்கு பார்த்த பொழுது தான் எனக்கே நம்பிக்கை பிறந்தது!”
என முழுக்கதையையும் சௌந்தர்யம் சொல்லி முடித்தாள். அதனை கேட்டவர்களுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
“சத்தியவான் சாவித்ரி கதை மாதிரி இருக்கு..” என ஷிவன்யா கிண்டலாக சொன்னாள்.
“நோ ஷிவ். அவங்க மனுஷங்களா இல்லாம போகலாம். ஆனா அவங்களுக்குன்னு இருக்க உலகத்துல நேர்மையாவும் ஒழுக்கமாவும் தான வாழுறாங்க. அதுனால தான் வருணன் இல்லைனா வேற கல்யாணமே பண்ணிக்காம அவன் பண்ண தப்புக்கு இவளும் சேர்ந்தே தண்டனையை அனுபவிக்கிறா..” என்றான் அமரன்.
“எஸ். நம்மால அவங்க சாபம் போகும்னா அதை செய்றதுல என்ன இருக்கு. அதுக்கு நம்ம இரத்தத்தை கொடுக்குறதுல தப்பே இல்லை.” என்ற சக்தி தானாகவே முன்வந்தான். வேறுவழியில்லாமல் ஷிவன்யாவும் கடற்கன்னியின் முன்னே வந்து நின்றாள்.
– சமுத்திரா வருவாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1


