Loading

சமுத்திரா – 33:

கப்பலின் ஒரு முனையில் ஆக்டொப்ஸும் ட்ராகனும் சண்டை போட்டு கொண்டிருந்தன. மற்றொரு பக்கம் விளையாட்டை முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் நண்பர்களின் கூட்டம் இருந்தது.

வரம் கேட்டு வருகிறான் படைநடுங்கும் பண்புடையவன்,

இருபால் தெய்வ நாமத்தை உடையவரிடம் உடையும் சாபம்!

என குமிழில் தோன்றிய எழுத்துக்களை ஷிவன்யா சத்தமாக வாசித்தாள்.

“டேய். நாங்களே இங்க நொந்து போயிருக்கோம் டா. எங்ககிட்ட யாருடா வரம் கேட்டு வரீங்க..” என்று ப்ரதீப் சுற்றிலும் பார்த்து கத்தினான்.

“அதான் படைநடுங்கும்னு சொல்லிருக்கே.. அப்படினா எது வர போகுதுன்னு உனக்கு புரியலையா டா?” என சக்தி நக்கலாக ப்ரதீப்பை கேட்டான்.

“பாம்பை கண்டா தான டா படைநடுங்கும்னு சொல்லுவாங்க. அதுவா வர போகுது..” என ரங்கா யோசைனையுடன் கேட்டான்.

“கரெக்ட்..” என அமரனும் அதனை அமோதித்தான்.

உணவு சங்கிலியின் விதிப்படி பாம்பு தவளையை உண்டு வாழும் பண்புடையது. அதனால் “பாம்பு!” என்ற சொல்லை கேட்டதும், தவளையின் உருவில் இருக்கும் விலோவின் உடல் தானாகவே பதறி துடிக்க தொடங்கியது.

அவளை அறியாமலே அவளின் உடல் நடுங்க துவங்கியது. அப்பொழுது தான் அவளின் நிலையை உணர்ந்தவர்கள், ‘என்ன செய்வது?’ என யோசிக்க தொடங்கினர்.

“அது என்ன வரம் கேட்கும்னு தெரியல.. அது கொடுக்கலனா என்னாகும்?” என ப்ரதீப் கேட்க,

“உன்னைய கேட்டா தாராளமா கொடுத்துடுவோம் டா.” – ரங்கா.

“அதுல வந்ததை முழுசா படிக்கலாம்.” என்ற ஷிவன்யா மீதி இருந்த குறிப்பின் பொருளை தேட துவங்கினாள்.

“இருபால் தெய்வம்னா அர்த்தநாரீஸ்வர்! அவங்களோட நேம் இங்க யாருக்கு இருக்கு..” என்ற அமரனின் கேள்விக்கு அவர்களின் அருகே கடற்கன்னி வந்தாள்.

“ஒருவேளை கடற்கன்னி தான் வரம் கொடுக்கணுமா? அதுக்கு தான் நம்ம பக்கத்துல வந்து உட்கார்ந்திருக்கா போல. இந்த ஷிவ் தேவையில்லாமா அவளை திட்டுனா வேற..” என ரங்கா முடிக்கும் முன்,

கடற்கன்னி ஷிவன்யாவையும் சக்தியையும் அழைத்தாள். “எதுக்கு?” என அனைவருமே அவளிடம் கேட்டனர்.

“இருபால் தெய்வம் அர்த்தநாரீஸ்வரர். சிவனும் சக்தியும் சேர்ந்து இருப்பது தான் அவங்க. இப்ப இங்க இருக்குறதுல சிவன் நாமத்தை கொண்ட ஷிவன்யாவும், சக்தியின் நாமத்தை கொண்ட சக்திவேலும் சேர்ந்து வரம் கொடுத்தா தான் சாபம் விலகும்.” என்றாள்.

“இதென்ன டா புது ட்விஸ்ட்டு! அவங்க பேசிக்கவே மாட்டாங்க அவங்க போய் வரம் கொடுக்கணுமா” என ப்ரதீப் தவளை ரூபத்தில் இருந்த விலோவிடம் சொன்னான். அவளோ அவனை முறைத்து பார்த்தாள். “பாம்பு வந்தா என்ன பண்ணுறதுன்னு இருக்க உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. நான் உன்னை காப்பாத்திடுறேன் ப்ராக். சாரி விலோ.” என்றான் ப்ரதீப்.

“என்னாலலாம் யாருக்கும் வரம் கொடுக்க முடியாது. என்னோட கையை விடு.” என அவளின் கையை பிடித்திருந்த கடற்கன்னியின் கையை உதறிவிட்டாள் ஷிவன்யா.

“ஆமா. எதுக்குன்னு தெரியாம நாங்க எதுக்கு உன்கூட வரணும்?” என சக்தியும் எதிர்த்து கேட்டான்.

இவர்கள் இங்கு சண்டை போட்டு கொண்டிருக்க ஆழ்கடலில் இருந்து நீரினை பாய்ச்சியபடியே வெளிவந்ததை பெரிய கருநாகம்.

அதனை தன் தொலைநோக்கு கருவியால் பார்த்த ஆரலி, “வருணன் வந்துவிட்டான்.” என மெல்ல அவளுக்குள்ளே சொல்லிக் கொண்டவளின் விழியில் குரோதம் நன்கு தெரிந்தது.

அந்த பெரிய கருநாகம் அவர்களின் கப்பலை நோக்கி கடலிலே ஊர்ந்து வந்தது. “டேய் சௌந்தர்யா ஒரு படத்துல நடிச்சிருப்பங்களே! என்ன படம்? அதுல வர மாதிரியே பெரிய பாம்பு நம்ம கப்பலை நோக்கி வருது டா..” என நடுங்கிய ப்ரதீப் அருகில் இருந்த விலோவை கட்டி பிடித்தான்.

“ஹ்ம்ம்..” என அவனை தள்ளிவிட்டவள் பாம்பினிடம் இருந்து ஒழிந்துக்கொள்ள சென்றாள்.

அவர்களின் கப்பலை நெருங்கி அதனின் மேலே வந்தது கருநாகம். அதனின் அருகில் சென்று நின்றாள் கடற்கன்னி. பார்ப்பதற்கு அசுரதனமாக இருந்தாலும் கடற்கன்னியின் முன் ஒரு குழந்தையாக அடங்கியது அந்த நாகம்.

“விரைவிலேயே நமக்கு விடிவு காலம் பிறந்துவிடும் வருணன். நிச்சயம் நாம் அனைத்தையும் கடந்து விடுவோம்.” என மகிழ்ச்சி பொங்க சொல்லிய கடற்கன்னி, ஷிவன்யா மற்றும் சக்தியின் அருகில் மீண்டும் சென்றாள்.

“நீங்கள் இருவரும் மனமுவந்து உங்களின் உதிர துளிகளை கொடுங்கள். அப்படி கொடுத்தால் மட்டுமே அந்த நாகத்திற்கு வரம் கிடைக்கும்.” என அவர்களின் கையை மீண்டும் பிடித்தாள்.

“வரம் கிடைக்குமா இல்லை சாபம் விலகுமா?” என ஷிவன்யா பட்டென்று கேட்டாள். அதில் கோவம் கொண்டு அவளை கடற்கன்னி முறைத்தாள்.

“நீங்கள் வரம் கொடுக்கவில்லை என்றால் இங்கு என்ன நடக்கும் என்பதை காட்டட்டுமா?” என கடுமையான குரலில் கேட்ட கடற்கன்னி,

“உன்னுடைய பலத்தை இவர்களுக்கு காட்டு வருணன்..” என அந்த பெரிய கருநாகத்திடம் சொன்னாள்.

அதுவோ அவளின் சொல்லை கட்டளையாக ஏற்றுக் கொண்டு அங்கிருந்த விலோவை துரத்த துவங்கியது. விலோவும் அவளால் முடிந்தவரை தாவி தாவி சென்றாள். ஆனால் அது அவளை துரத்துவதை நிறுத்தவில்லை.

அதை பார்த்த மற்றவர்கள் விலோவிற்கு உதவ சென்றனர். ஆனால் அந்த கருநாகம் யாரையும் விடாமல் அனைவரையும் தீண்டுவது போல் அருகே சென்று  அச்சுறுத்தியது.

ஷிவன்யா மற்றும் சக்தியின் கரம் அந்த கடற்கன்னியிடம் சிக்கியிருக்க இருவருமே அவளின் பிடியில் தான் இருந்தனர்.

“இதுவரை வருணன் அவர்களுக்கு பயத்தை மட்டுமே காட்டியிருக்கிறான். நீங்கள் உங்கள் முடிவை மாற்றி கொள்ளவில்லை என்றால் உங்கள் நண்பர்களின் உயிர் போவது உறுதி.” என அவர்களை மிரட்டினாள்.

“ச்சி நீயெல்லாம் ஒரு பொண்ணா?” என அவளை பார்த்த ஷிவன்யா கேட்டாள்.

அதில் அந்த கடல் அதிரும் வண்ணம் சிரித்த கடற்கன்னி, “சுயநலமான மனிதர்களாகிய உங்களை விட நான் நல்லவள் தான்.” என்றவளிடம்,

“வரம் வரம்னு கேட்குறியே? வரம் கொடுப்பதற்கு நாங்க கடவுள் ஒன்னும் இல்லையே..” என சக்தி சொன்னான்.

அதில் ஒருநொடி இமைகள் முடிச்சிட யோசித்த கடற்கன்னி, “கடவுளாக இல்லையென்றாலும் பிறப்பால் உங்கள் இருவரால் மட்டுமே வருணனின் சாபம் விலகும்.” என தெளிவாக சொன்னாள் கடற்கன்னி.

“இவ்வளவு நேரம் வரம் கொடுக்க சொன்ன? இப்ப சாபம் விலகும்னு சொல்லுற?”

“வரம் கிடைத்தால் சாபம் தன்னாலே விலகிவிடும் தானே!” என்ற கடற்கன்னியின் பேச்சில் எதோ மறைபொருள் உள்ளதை ஷிவன்யாவும் சக்தியும் உணர்ந்தனர்.

“சரி. நாங்க வரம் கொடுக்குறோம். உன்னோட பாம்பு கிட்ட எங்க நண்பர்களை விட சொல்லு..” என்றான் சக்தி. அதில் ஷிவன்யா அவனை முறைக்க, கண்ணாலே அமைதியாக இருக்குமாறு சொன்னான்.

“எங்களை ஏமாற்ற நினைத்தால் நீங்கள் கனவிலும் நினைக்காத நிகழ்வு உங்களுக்கு நடக்கும்.” என அவர்களை எச்சரித்த கடற்கன்னி கருநாகமாய் அவர்களிடம் சீறிக் கொண்டிருந்த வருணனை அழைத்தாள். அவனும் வந்து அவளின் அருகில் நின்று கொண்டான்.

“பொட்டி பாம்பா அடங்குறதுனா இது தான் போல டா.” என சொல்லிய ப்ரதீப் அமரனிடம் முறைப்பை பெற்றுக் கொண்டான்.

“வாங்க நாமளும் அங்க போய் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.” என்ற ரங்கா அனைவரையும் அழைத்து சென்றான்.

கடற்கன்னி அவளின் தலையில் இருந்த கிரீடத்தை கழட்டினாள். அதில் ஒளிர்ந்து கொண்டிருந்த நீல நிற கல்லை எடுத்து அவளின் உள்ளங்கைக்குள்ளே வைத்துக் கொண்டாள்.

“ஹ்ம்ம். இருவரும் இந்த நீல நிற கல்லின் மீது உங்களின் உதிர துளியை வையுங்கள்.” என்றாள்.

“முதல்ல இந்த பாம்பிற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லு. அப்ப தான் நாங்க எங்க இரத்தத்தை கொடுப்போம்.” என்ற சக்தி நிமிர்ந்து நின்றான்.

அதில் அந்த கடற்கன்னி அவனை முறைக்க, “நாங்க மனமுவந்து உங்களுக்கு வரம் கொடுக்கணும். இல்லனா அது வேலை செய்யாதே!” என ஷிவன்யா நக்கலாக சொன்னாள். அந்த கடற்கன்னி அங்கு வந்ததில் இருந்து அவளையே கவனித்த ஷிவன்யா கிடைத்த இடத்தில் அவளை வெறுப்பேற்றினாள்.

“ஆமா. உங்களுக்கு என்ன சாபம் வந்துச்சு. எதனால சாபம் வந்துச்சுனு எல்லாத்தையும் சொன்னா தான் நாங்க இரத்தம் கொடுப்போம்.” என்றான் சக்தி மீண்டும்.

“டேய் இரத்தம் தான கேட்குது. கொடுத்துடேன் டா.” என ப்ரதீப் கடற்கன்னிக்கு சாதகமாக பேசினான்.

“டேய் நம்ம இரத்தத்தை தனமாவா கேட்குறாங்க. சும்மா வந்து இரத்தம் கொடுனா நீ கொடுப்பியா..?” என்றான் அமரன்.

அப்படியே செய்கையில் ரங்காவை போடுமாறு சக்தி சொல்ல அதனை கவனித்த கடற்கன்னி அந்த பகடையை அவளின் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

“உங்களுக்கு, என்ன சாபம் என்று தெரிய வேண்டும் அது தானே?. அது தெரிந்துவிட்டால் உங்கள் இருவரின் உதிரத்தையும் மனமுவந்து கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த படகையை நடுக்கடலில் தூக்கி வீசிவிடுவேன்.” என அவர்களிடம் பேரம் பேசினாள்.

“சரி. என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லணும்.” என்றான் சக்தி.

“இந்த நாகத்தின் பெயர் வருணன்.”

“ஓ! இந்த உலகத்துல பாம்புக்கெல்லாம் நேம் இருக்கா..” என்ற ப்ரதீப்பின் கழுத்தை நெறித்த அமரன்,

“ஆக்டொபஸ் கிட்ட இருந்து தப்பிச்சிட்டன்னு நினைக்காத. அது அங்க தான் டிராகன் கூட சண்டை போடுது. நீ அமைதியா இல்லைனா நானே பிடிச்சி கொடுத்துடுவேன்.” என அமரன் சொன்னதும் அமைதியாக கதை கேட்க உட்கார்ந்துவிட்டான் ப்ரதீப்.

“இந்த வருணன் என்னுடைய காதலன் தான்.”

“கடற்கன்னியும் பாம்பும் எப்படி லவ்..” என்ற ப்ரதீப்பை அனைவருமே முறைக்க வாயில் கைவைத்த படி அமர்ந்துவிட்டான்.

“நீங்கள் நினைப்பது போல் என் பிரபு நாகம் இல்லை.” – கடற்கன்னி.

‘பிரபு யாருன்னு கேட்டா நிச்சயமா திட்டுவாங்க. சோ அமைதியாவே இருப்போம்.’ என அவனுக்குள்ளே நினைத்துக் கொண்டான் ப்ரதீப்.

“இவரும் எங்கள் கடற்கன்னி உலகத்தை சேர்ந்தவர் தான். ஆனால் சேர கூடாத இனத்துடன் சேர்ந்து; செய்ய கூடாத பாவத்தை செய்த பலனை தான் இப்பொழுது அனுபவிக்கிறார்.” என்ற கடற்கன்னியின் கண்ணில் இருந்து இரு சொட்டுக்கள் கண்ணீர் சிந்தியது.

“அப்படி யார் கூட சேர்ந்தாரு?” – சக்தி.

“வேறு யார். அந்த கொள்ளைக்கூட்டத்தையே அடக்கி ஆளும் அந்த அரக்கி ஆரலியிடம் தான்.” என்ற கடற்கன்னியின் பேச்சில் வெறுப்பே மண்டி கிடந்தது.

“செய்ய கூடாத காரியம்னு சொன்னீங்க? அப்படி என்ன பண்ணாங்க?” – அமரன்.

“அந்த ஆரலியின் துர்போதனையால் எங்கள் குலத்திற்கே துரோகம் செய்தார்.” என்று ஒருவித வலி நிறைந்த குரலில் கடற்கன்னி சொல்ல, அவளின் இடுப்பை சுற்றி சுருண்டு கொண்டது கருநாகம்.

அனைவரும் அவர்களின் நிலையை தான் கண் சிமிட்டாமல் பார்த்தனர்.

இங்கு கொள்ளைக்கூட்டத்தின் மத்தியில் இருந்த ஆரலியும் நடந்து முடிந்தவற்றை தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்