
சமுத்திரா – 22:
நண்பர்களின் கூட்டம் மற்றும் மாலுமிகளான மார்ட்டின், விக்டர் மற்றும் ரிச்சார்ட் என அனைவரின் கரங்களும் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னே ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்திருந்தாள், அந்த கொள்ளைக்கூட்டத்தின் தலைவி!
அவ்விடத்தில் கடற் கொள்ளைக்கார கூட்டத்தில் இருந்த மாலுமிகள் அங்கிட்டும் இங்கிட்டுமாக நடந்தபடியே அலைந்துக் கொண்டு இருந்தனர். நம் நண்பர்கள் குழு அனைத்தையும் கவனித்தப்படி அமைதியாக அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரத்திற்கு முன்,
நம் நண்பர்களின் கப்பலை இடித்தப்படி வந்து நின்ற கொள்ளைக்கார கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் நொடியும் தாமதிக்காமல் கயிற்றாலே அவ்விரு கப்பலுக்கும் பாலம் அமைக்க முயன்றனர். அந்த கயிற்றுப்பாலத்தின் மூலம் கொள்ளைக்காரர்கள் அனைவரும் நம் நண்பர்களின் கப்பலுக்குள் அத்துமீறி வர துவங்கினர். சுலபமாக அவர்கள் செய்வதை பார்த்த நம் நண்பர்களின் கூட்டத்திற்கு ‘அவர்கள் இதனை வாடிக்கையாகவே செய்கின்றனர்’ என புரிந்தது.
முதலில் ஐந்தாறு கொள்ளைக்காரர்கள் இந்த கப்பலுக்கு வந்ததும், அடுத்ததாக கடல் கொள்ளைக்கார கூட்டத்தில் தலைமை பதவியில் இருப்பவனும் ஜங்கென்று நம் கப்பலிற்குள் குதித்தான். அவனை பின் பற்றி அங்கு மீதி இருந்த கொள்ளைக்காரர்கள் அனைவரும் நம் நண்பர்களின் கப்பலிற்குள் பொத் பொத்தென்று அங்கங்கே குதித்து கப்பலை முழுதாக முற்றுகையிட்டனர்.
கடற்கொள்ளையர்களின் செயல்களை தொடர்ந்து பார்த்தபடி இருந்த நண்பர்களுக்கு பகீரென்று தான் இருந்தது. அவர்களின் தோற்றத்தை பார்த்தாலே கொலை செய்வதற்கும் அஞ்ச மாட்டார்கள் என்று தெள்ளத் தெளிவாக புரிந்தது. “யாரும், எதுக்கும் வாய திறக்காதீங்க. அவங்க என்ன கேட்டாலும் அமைதியாவே இருங்க.” என்ற எச்சரிக்கையுடன் அமரன் அனைவருக்கும் தைரியமும் கொடுத்தான்.
தலையில் தொப்பியும் அதில் கடல்கொள்ளையர்களின் அபாயகரமான குறியீடான எலும்புகூடு சின்னமும் பதித்திருக்க நண்பர்கள் அனைவரின் முன்னும் வந்து கால்களை அகட்டி திமிராக நின்றார், கொள்ளைக் கூட்டத்தின் தலைவர். கையில் பெரிய கூர்மையான வாள் ஒன்றும் வைத்திருந்தார் அவர். அதன் பளபளப்பு நிச்சயமாக எதிரில் இருப்பவரை அச்சம் கொள்ளும் வகையில் தான் இருந்தது. அவரது நரைத்த தலை, அவருக்கு ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும் என்பதை நிரூபித்தாலும், அவரின் உடலை கட்டுக்கோப்பாகவே பேணி காத்திருந்தார்.
நம் கப்பலில் இருந்த நண்பர்கள் கூட்டத்தை பார்த்தவர், “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என மிடுக்காகவே கேட்டார். அவரின் கேள்விக்கு பதில் கூறாமல் அனைவரும் அமைதியாகவே இருந்துக் கொண்டனர்.
“நான் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? இல்லை அனைவரும் செவிடர்களா?” என நக்கல் கலந்து கோபமாக கேட்டார். அதற்கும் இங்கு அனைவரும் அமைதியையே கடைபிடிக்க,
அதில் எரிச்சலடைந்த கொள்ளைக்கூட்டத்தின் தலைவன், “இப்பொழுது நீங்கள் யாரென்று சொல்ல போகிறீர்களா இல்லை, என் வாளுக்கு இரையாக போகிறீர்களா?” என இடுப்பில் சொருகி இருந்த வாளினை சட்டென்று வெளியெடுத்தார். அதில் அனைவரும் சற்று பீதியடைந்தனர்.
திரும்பி அனைவரையும் பார்த்த அமரன் கண்ணசைவில் தான் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தான். அதன் படி ஓரடி முன்வைத்தவன், “நாங்கள் அனைவரும் வேற்று நாட்டை சேர்ந்தவர்கள். வழிதவறி இங்கு வந்துவிட்டோம்..” என சமாளிக்க முயன்றான்.
“என்ன! வேற்று நாட்டை சேர்ந்தவர்களா?” என கண்கள் இடுங்க சந்தேகமாக பார்த்தார் கொள்ளைகூட்டத்தின் தலைவர்.
பின், “எது எப்படியோ.. உங்கள் அனைவரிடமும் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தையும் எங்கள் வசம் ஒப்படைத்து விடுங்கள். அப்படி செய்தால் உங்கள் அனைவரின் உயிராவது உங்களிடம் மிச்சமாகும். இல்லையென்றால், உங்களின் உடலில் ஒரு மயிர் கூட மிஞ்சாது..” என்று கர்ஜனையாக அந்த கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் மிரட்ட தொடங்கினான்.
“விலையுயர்ந்த பொருளுக்கு நாங்க எங்க போறது? எங்ககிட்ட இருந்தா நாங்க கொடுக்க மாட்டோமா? மாச கடைசி வேற நீங்க வேற ஒரு கப்பல்ல போய் கேட்டு பாருங்க திருடன் சார்..” என்று ப்ரதீப் கூறியது நண்பர்களின் செவியை தவிர வேறு யாரையும் அடையவில்லை.
“டேய் ப்ரதீப். அமைதியா இரு டா. நீ சொல்லுறதுல எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.” என்ற விலோ தனியாக சிரித்து கொண்டிருந்தாள். அவளை பைத்தியம் போல் பார்த்து வைத்தனர் கொள்ளை கூட்டத்தினர்.
“இங்கு என்ன நகைச்சுவையா கூறுகிறேன், நகைப்பதற்கு? மூடனே.. வாயை மூடுகிறாயா இல்லை என் வாளிற்கு இரையாகுகிறாயா?” என விலோவை பார்த்து உருமினார். அதில் பயந்த விலோ பக்கத்தில் நின்ற ரங்காவின் கரத்தை பிடித்துக்கொண்டாள்.
“டேய் ரங்கா. இவங்க எல்லாரும் பயப்படுறாங்க சரி. நீ ஒரு போலீஸ் தான டா. நீ எதுக்கு டா இவனுங்கள பார்த்து பயப்படுற? அவங்கள எதிர்த்து சண்டை போடு டா.” என பிரதீப் மீண்டும் காற்றில் வந்தது.
“டேய் எரும ப்ரதீப்! இவனுங்க கிட்ட நம்ம பலத்தை காட்டி என்ன டா பண்ண போறோம்? முதல்ல இவனுங்களை இங்க இருந்து அனுப்புற வழியை பார்க்கணும். அதைவிட்டுட்டு அவனுங்க கூட சும்மாவே சண்டை போட முடியுமா டா” என ரங்காவும் பல்லிடுக்கில் ப்ரதீப்பிடம் காய்ந்தான்.
“இங்கு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன தனியாக அங்கு பேசுகிறீர்கள்? இவர்கள் அனைவரையும் தனித்தனியாக கட்டி வையுங்கள்.” என அங்கிருந்த மாலுமியிடம் ஆணையிட்டான் அக்கூட்டத்தின் தலைவன்.
நண்பர்களை தனித்தனியாக கட்டுவதற்கு அவர்களின் அருகில் கயிருடன் வந்தனர் கொள்ளைக்காரர்கள். முதலாவதாக இருந்த ஷிவன்யாவின் கரத்தை கட்டிவிட்டவன் அவளின் கன்னத்தை மெல்ல தடவினான். கோபம் கொண்டு அவனை முறைத்தவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். ஆனால், அவளின் அருகில் இருந்த அமரன் அந்த கடற்கொள்ளையனை பட்டென்று அறைந்து விட்டான். உடனே மற்ற கொள்ளைக்கார்கள் அனைவரும் அமரனை சுற்றி வளைத்தனர்.
“டேய் அமர்! பார்த்து டா.” என்ற ரங்காவும் சக்தியும் அமரனுக்கு அரணாக அவனுடன் இணைந்துக் கொண்டனர்.
அந்நேரம், “நிறுத்துங்கள்!” என்ற சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசைக்கு அங்கிருந்த அனைவரின் கவனமும் திரும்பியது. அந்த கொள்ளை கூட்டத்தின் கப்பலில் இருந்து இந்த கப்பலில் நங்கென்று குதித்து வந்தாள் அழகே உருவான நங்கை ஒருவள்.
கருப்புநிற உடை; தலையில் ஒரு தொப்பி மற்றும் கையில் வாள் என வீரநடை போட்டு அவர்கள் அனைவரையும் நெருங்கி வந்தவள், ஷிவன்யாவை தடவியவனின் கன்னத்தில் இடியாக கரத்தை இறக்கினாள். இதனை எதிர்பாராத அனைவரும் சற்று அதிர்ந்தனர்.
“என்னங்க டா, கடல்கொள்ளையர்னா பைரேட்ஸ் படத்துல காட்டுன கேப்டன் ஜாக் ஸ்பரோ ரேஞ்க்கு எதிர்ப்பார்த்தா. ஜாக்கி சான்ல வர கள்ளிராணி மாதிரி ஒருத்தி வந்து நம்ம முன்ன நிக்குறா..” என்று ப்ரதீப் கூறியது நண்பர்களின் செவியை எட்டினாலும் யாரும் எதுவும் கூறவில்லை.
“என் அருமை மகளே! ஆரலி! தந்தை சொன்னால் கேட்க மாட்டாயா? உன்னை நம் கப்பலில் இருக்குமாறு தானே நான் உரைத்துவிட்டு வந்தேன். என் பேச்சை கேட்க கூடாது என்ற எண்ணம் என் மகளுக்கு எப்பொழுதிலிருந்து வந்தது?” என அவ்வளவு நேரம் சிங்கம் போல் கர்ஜித்து கொண்டிருந்த தலைவனின் குரல் அன்பொழுக கரிசனையாக வந்தது.
“தந்தையே! நான் நம் கப்பலிற்குள்ளே அடைந்து கிடந்தால், தங்களுக்கு பின் நம் கூட்டத்தை எப்பாடு என்னால் வழி நடத்த இயலும்?” என புருவம் உயர்த்தினாள் அம்மங்கை.
தன் தந்தையிடம் பேசினாலும் இங்கு அனைவரையும் நோட்டம் விட்டது அந்த காரிகையின் விழிகள்.
“தந்தையே! இனி இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களின் உதவி தேவைப்பட்டால் நிச்சயம் தங்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வேன்.” என்று அவளின் தந்தையிடம் உறுதியளித்த கொள்ளைக் கூட்டத்தின் இளவரசி நண்பர்கள் கூட்டத்தின் அருகில் வந்தாள். மகளின் விருப்பத்திற்கு உடன்பட்டு அங்கு ஓரமாக அமர்ந்தார் அவ்வளவு நேரம் அனைவரையும் பதட்டத்தில் வைத்திருந்த கொள்ளைக்கார தலைவர்.
“பண்ணுறது திருட்டு வேலை. இதுல ஏதோ பிசினஸை டேக் ஓவர் பண்ணுற மாதிரி ஒரு பில்டப் வேற..” என்று சொன்ன ப்ரதீப்,
“ஆனாலும் அழகான பொண்ணுங்க எல்லாம் இந்த உலகத்துல தான் இருக்காங்க போல..” என்று முடித்தான்.
“உன்னோட வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டியா?” என்று விலோவும் பேச, “அமைதியா இருங்க..” என்று ரங்கா அதட்டினான்.
அமரனை சுற்றி நின்ற கொள்ளைக்காரர்களை கண்ணசைவில் அகற்றியவள், அங்கிருந்த எட்டு பேரையும் ஒரு ஒருவராக பார்த்தாள்.
“யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களது உடைக்கும் கப்பலிற்கும் இந்த உலகிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே?” என யோசனையுடன் கணீரென்று வந்தன காரிகையின் குரல்.
“என்ன பொண்ணுடா..” என அவளின் ஆளுமையில் வியந்த ப்ரதீப்பின் குரல், “எதையாவது சொல்லி சமளிங்க டா..” என்று நண்பர்களுக்கு அறிவுரை வழங்கவும் தவறவில்லை.
அனைவரும் ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருக்க, “ம்ம்ம். சொல்லுங்கள். எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என மீண்டும் அவளின் குரல் மிடுக்குடன் ஒலித்தது.
தனது குரலை சரிசெய்த அமரன், “நாங்கள் அனைவரும் வேற்று நாட்டை சேர்ந்தவர்கள்..” என மீண்டும் அதனையே சொன்னான். பின் கீழே சிதறி கிடந்த மது குடுவைகள் நிறைந்த அட்டை பெட்டிகளை பார்த்துவிட்டு, “ம..மது விற்பனை செய்யும் வியாபாரிகள். வேறொரு நாட்டிற்கு சென்று கொள்முதல் செய்து எங்கள் நாட்டிற்கு எடுத்து செல்லும் பொழுது வழி தவறி இங்கு வந்துவிட்டோம்.” என்று அமரன் கூறிய கூற்றை நம்பாமல் அவனை மேலிருந்து கீழ்வரை சந்தேகத்துடன் பார்த்தாள்.
அனைவரின் முகத்தையும் பார்த்தவள் அவர்களின் அருகில் இருந்த பெட்டிகளையும் பார்த்தாள். “அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று சோதனை செய்யுங்கள்.” என்று அங்கிருந்த கொள்ளைக் காரர்களை ஏவியவள், “இவர்கள் எங்கும் தப்பி செல்லாமல் இருக்க இவர்கள் அனைவரின் கரங்களையும் கட்டி வையுங்கள். பெண்கள் மேல் கைப்பட கூடாது. கவனம்!” என்று அங்கிருந்த கொள்ளைக்காரர்களுக்கு கட்டளையும் பிறப்பித்தாள்.
“அந்த கேமை சீக்கிரமா முடிக்கலாம்னு பார்த்தா.. இந்த கள்ளிராணி வந்து என்னமோ பண்ணிட்டு இருக்காளே. ஆனா கொஞ்சம் நல்லவா மாதிரி தான் இருக்கா” என ப்ரதீப் அவளுக்கு சான்றிதழ் வழங்கினான்.
“டேய் நீ என்ன ஒரு ஒரு பொண்ணுக்கா பேரு வெச்சிக்கிட்டு இருக்க? முதல்ல அந்த கடற்கன்னியை ஏஞ்சல்னு சொன்ன? இப்ப இந்த திருடிய கள்ளிராணினு சொல்லுற?” என்று விலோ, “ஆமா அந்த கடற்கன்னி எங்க போனா..?” என சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளை தொடர்ந்து அனைவரும் திரும்பி பர்த்தனர்.
“யாரை தேடுகிறீர்கள்? உங்களை தவிர இக்கப்பலில் வேறு யாரேனும் உள்ளனரா?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி இடுப்பில் கைகளை வைத்தபடி கள்ளிராணி அவர்கள் முன் வந்து நின்றாள்.
“இந்த கொள்ளைக்கூட்டத்தை பார்த்ததுமே அந்த கடற்கன்னி நீச்சல் குளத்துக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டா.” என்று சக்தி சொல்ல, “க்கும். முதல்ல ஹெல்ப் பண்ணா. அடுத்து கையைகட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்தா. இப்ப ஆளே ஜூட் விட்ட்டு ஓடிட்டா..” என்று விலோ பதிலுரைக்க.
“அமைதியாக இருக்க மாட்டீர்களா..” என அவர்களை பார்த்து கத்திய கள்ளிராணி, “இவர்களை கட்ட சொல்லி உங்களிடம் கூறினேனே. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என அங்கிருந்த கொள்ளைகார்களிடமும் எரிச்சல் அடைந்தாள். பின், அருகில் இருந்த அட்டை பெட்டியில் இருந்த மது குடுவையை கையில் எடுத்துக்கொண்டாள்.
“அத்தாடி.. திருடினு மட்டும் நினைச்சா, குடிகாரியா கூட இருப்பா போல. நம்ம எப்ப கேமை முடிச்சி நம்ம உலகத்துக்கு போவோமா?” – ப்ரதீப்.
ஆரலியின் கட்டளையை நிறைவேத்த இங்கு எட்டு பேரின் கரங்களையும் கட்டி அவர்களை வரிசையாக அமர வைத்தனர். ப்ரதீப்பும் அவர்களின் அருகே காற்றிலே கரைந்திருந்தான்.
“ப்ரதீப் நீங்க வேண்டுனது உண்மையாகிடுச்சு.. இந்த கொள்ளைக்கூட்டத்தோட கண்ணுல படக்கூடாதுன்னு வேண்டுனீங்க தான? அது இப்ப நிறைவேறிடுச்சு பார்த்தீங்களா. எங்க கையை மட்டும் கட்டி இப்படி உட்கார வெச்சுட்டாங்க.” என ஷிவன்யா கூற, “உங்களுக்கு ஆறு வரணும்னு கூட தான் வேண்டுனேன். அது எங்க நடக்குது” என ப்ரதீப் சலுத்துக்கொண்டான்.
“அமர் சட்டுனு பார்க்காத.. அந்த கள்ளி ராணி உன்னையே வைச்ச கண்ணு வாங்காம பார்க்குறா பாரு டா.” என்ற ப்ரதீப்பின் குரல் காற்றில் வர,
“அது ரொம்ப நேரமா நடக்குது. நீ இப்ப தான் பார்த்தனு சொல்லு..” என்று ரங்காவும் சொல்ல, நண்பர்கள் கூட்டம் மொத்தமும் அவளையும் அமரனையும் தான் நோட்டம் விட்டனர்.
அங்கு அமர்ந்தபடி மது குடுவையை வாயில் சரித்தப்படி அமரனை தான் பார்த்தாள் ஆரலி என்ற கொள்ளைக்கார கூட்டத்தின் தலைவி. அவளது மற்றொரு கையில் புகையிலை சுருட்டும் இருந்தது.
“நீயும் பாரு அமர். நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். எனக்கு ஏஞ்சல். உனக்கு கள்ளிராணி. நம்ம உலகத்துக்கு போக முடியலானாலும் இங்கயே ஆளுக்கு ஒரு பொண்ணா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடலாம்” என ப்ரதீப் முடித்ததும்.
“மவனே நீ மட்டும் கண்ணுக்கு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் நீ காலி டா.” என சீறிய அமரன் ஆரலியின் பக்கம் கூட திரும்பவில்லை.
“அந்த தைரியத்துல தான நான் பேசிட்டு இருக்கேன்” – ப்ரதீப்.
“இங்கிருக்கும் அனைத்து மது குடுவைகளையும் நம் கப்பலிற்கு எடுத்து செல்லுங்கள். சீக்கிரம்!” என்ற ஆரலியின் உத்தரவின் பெயரில், அங்கிருந்த மது நிரம்பிய அட்டை பெட்டிகளை கயிற்று பாலத்தின் மூலம் அவர்களின் கப்பலிற்கு மாற்ற தொடங்கினர்.
“ஏய் விலோ. நான் சரக்கு கேட்டப்ப என்னை எவ்ளோ கேவலமா திட்டுன. இப்ப பாரு அது தான் உங்க எல்லாரையும் காப்பாத்தியிருக்கு.” – ப்ரதீப்.
“ரொம்ப நல்லவேளை தான் நீ பார்த்துருக்க விடு..”என்ற விலோவிற்கு தீடீரென்று உடல் வலி அதிகமாகியது. கைகள் இரண்டும் கட்டியிருக்க வலியை பொறுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
– சமுத்திரா வருவாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1



