
சமுத்திரா – 21
“ஆர் யு ஓகே ஷிவ்?” என அவளை ஆராய்ச்சியாக பார்த்த விலோவிற்கு எந்த பதிலும் சொல்லாமல் நடுங்கியபடியே இருந்தாள், ஷிவன்யா.
“ஷிவ்? ஷிவ்?” என அவளின் கன்னம் தட்டி அவளை நிகழ்வுக்கு கொண்டுவர அமரன் முயன்றான்.
கண்களை மூடியிருந்த ஷிவன்யா, “காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. ஹெல்ப் ப்ளீஸ்..” என கத்தியப்படியே உடலை உதறினாள்.
“ஷிவ் டா.. இங்க பாரு. நீ இப்ப சேஃப் டா..” என அவளின் கண்ணை திறக்க வைத்தான் அமரன்.
“அ.. அமர்.. அது.. அந்த சுறா.. என்..என்னை என்கிட்ட..” என்றவள் சொல்ல வந்ததை கூட சொல்ல முடியாமல் திக்கி திணறி அழுகையில் அமரனை அணைத்தபடி கதறினாள். அமரனும் அவளின் முதுகை வருடி அவளை நிதானமாக்கினான்.
அவளை பார்த்த அனைவருக்கும் கண்கள் கலங்கியது. நூலிலையில் உயிர் தப்பியிருக்கிறாள் என்றாலும் கண்முன்னே ஒரு கோர விபத்தையும் பார்த்த விளைவு அவளிடம் நன்கு தெரிந்தது.
குளிரிலும் உடல் நடுங்கியபடியே ஆங்காங்கே கிழிந்திருந்த உடையில் நத்தையை போன்று சுருண்டபடி அமர்ந்திருந்தாள் ஷிவன்யா. அருகிலிருந்த லைஃப் ஜாக்கெட்டை எடுத்து விலோவிடம் கொடுத்த சக்தி அதனை அவளுக்கு அணியுமாறு சொன்னான். பின் ஷிவன்யாவை ஓரளவு தேற்றிவிட்ட அனைவரும் மீண்டும் கடலை பார்த்தனர்.
அதுவரை வெண்மை நிற நுரைபொங்கிய கடலில் அப்பொழுது டேனியலின் குருதியினால் செந்நிறமாக காட்சியளித்தது. அதனை கண்ட அனைவரின் கண்களும் கலங்கி தவித்தது.
கண்முன்னே ஒரு உயிர் அதுவும் கொடூரமாக பிரிந்திருக்க அவர்களை அது மிகவும் பாதிக்கவே செய்தது. வாழ்நாளில் கற்பனை கூட செய்ய முடியாத நிகழ்வு அங்கே அரங்கேறியிருக்க பயம், பதட்டம், அதிர்ச்சி, குற்றவுணர்வு என பல கலவையான உணர்வுகளில் அனைவரும் சிக்கி கதிகலங்கி போயினர்.
ஷிவன்யா கிடைத்துவிட்டால் என்றாலும் குழுவில் ஒருவரின் உயிர் போயிருக்க நண்பர்களின் கூட்டம் மாலுமிகளை பார்த்தனர். அவர்கள் முகத்தில் அப்பியிருந்த சோகமே அவர்களின் நிலையை உரைத்தது.
“இனிமே விளையாட்டு ரொம்ப கடுமையா இருக்கும் போல டா.” – சக்திவேல்.
“அது எப்படி இருந்தாலும் நாம விளையாடி தான் ஆகணும் சக்தி. நாம நம்ம உலகத்துக்கு போறதுங்குறதை தாண்டி. நமக்காக எந்த ஒரு காரணமும் இல்லாம போயிருக்க ரெண்டு உயிரை திருப்பி கொண்டுவரனும்.” என ரங்கா சொல்ல அனைவரும் அமைதியாக அதனை ஆமோதித்தனர்.
“நம்ம ஏஞ்சல்(கடற்கன்னி) மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கா பாருங்க..” என்ற ப்ரதீப்பின் குரல் காற்றில் வந்து அவனின் இருப்பை உணர்த்தியது.
“அவளை பற்றி பேசாத ப்ரதீப். ஷிவ்வை காப்பாற்றுனு அவகிட்ட சொன்னா அதை காதுல கூட வாங்கவே இல்லை.” என கோபமாக கடற்கன்னியை பார்த்தபடியே சொன்ன விலோவை அந்த சௌந்தர்யமும் (கடற்கன்னி) நீலவிழியால் விழியகலாது பார்த்தாள்.
அந்நேரம் மீண்டும் கடலில் நீரின் சலசலப்பு அதிகரித்தன. “என்னனு பாரு ப்ரதீப். திரும்பியும் அந்த சுறா வந்துடுச்சா?” என்று அமரன் ப்ரதீப்பிடம் சொல்ல, சுறா என்ற பெயரை கேட்டதும் உடல் பதற பயந்தபடி அமர்ந்தாள் ஷிவன்யா. “ஒன்னுமில்லை ஷிவ்!” என அவளை தாங்கிக்கொண்டாள் விலோ.
‘மீண்டுமா?’ என்று அனைவரும் பயத்தில் உறைய, கூட்டமாக நீந்திக் கொண்டிருந்த மீன்கள் தான் அந்த இருட்டில் ப்ரதீப்பின் கண்களுக்கு புலப்பட்டது. “சுறா இல்லை. ஏதோ மீனுங்க தான் அமர் இருக்கு. ஆனா கூட்டமா இருக்கு..” என ப்ரதீப் கூற,
“உன்னோட கண்ணனுக்கு எல்லாமே மீனா தான் தெரியும்..” என்றபடியே அமரனும் எட்டி பார்த்தான்.
“நீங்க தான கடல்ல போய் மீன் பிடிக்குறவங்க. நீயே அதை பார்த்து சொல்லு..”
கடலில் அந்த மீனின் கூட்டத்தை கூர்ந்து கவனித்த அமரன், “பிரானாஸ்!(piranhas)” என கூறினான்.
“எது அந்த மீனா? அதை படத்துலயே ரொம்ப கொடூரமா காட்டுவாங்களே! நிஜமா அது தான் வந்திருக்கா அமர்?” என அதிர்ச்சி விலகாமல் சக்தி கேட்டிட, “ஆமாம் டா..” என்ற அமரனுக்கும் யோசனை தான்.
கடலில் ஆபத்துகளை ஏற்படுத்தும் மீன்வகைகளில் ஒன்று தான் இந்த பிரானாஸ்! கிட்டத்தட்ட இரண்டடி நீளமே வளரக்கூடிய இந்த வகை மீனுக்கு கூரிய பற்களும் திடமான தாடைகளும் இருக்கும். மேலும் இதன் கூரிய ஈட்டி போன்ற பற்களுக்கு எலும்பை நொறுக்குமளவு வலு இருப்பதால் வேட்டையாட சிறிதும் தயக்கம் காட்டாது. அப்படிப்பட்ட கொடூர மீன்கள் தான் அவர்களின் கப்பலை சூழ்ந்தவண்ணம் நீந்திக் கொண்டிருந்தன.
“ஐயோ படத்துல காட்டுற மாதிரி இது நம்மளை வேட்டையாடுமா?” – விலோ
“அப்படின்னு சொல்ல முடியாது. சில வகை பிரானாஸ் தாவரவகை உன்னியா கூட இருக்கும்.” என அமரன் சொன்னதும் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.
“ஆனால், காரணமில்லாம இது இப்ப இங்க வந்து சுத்திட்டு இருக்காது..” என நூற்றுக்கணக்கான பிரானாஸ் அவர்களின் கப்பலை சூழ்ந்துள்ளதை குறிப்பிட்டு சொன்ன அமரன் அனைவரின் முகத்தையும் பார்த்தான்.
“எதுவா இருந்தாலும் முழுசா சொல்லு டா..” – ரங்கா
“இரத்த வாசனைக்கு இது வரும். டேனியலோட ப்ளாட் ஸ்மெல்க்கு வந்திருக்கலாம்.” என அவன் முடித்ததும் அனைவருக்கும் ஈரகொலையே நடுங்கியது. ‘இரத்த வாசனைக்கு வந்ததென்றால் அதனை சுவைக்காமல் செல்லாதோ?’ என்று ஐயம் அனைவரின் மனதிலும் எழுந்தது. இருக்குற பிரச்சனையில் இது வேறயா என்று தான் அனைவரும் நினைத்தனர்.
எப்பொழுதும் அடுத்தது யார் போட வேண்டும் என்று ஞாபகப்படுத்தும் ஷிவன்யா, உடலை குறுக்கிக்கொண்டு நடுங்கியடியே வானை வெறித்தப்படி அமர்ந்திருந்தாள். கடலில் தத்தளித்தது; டேனியலை சுறா சூறையடியது என அனைத்தும் அவளின் கண்முன்னே வந்த வண்ணமே இருந்தது.
“ரங்கா அடுத்து நீ தான்.” என சக்தியின் நினைவூட்டலில் அவனிடம் இருந்து பகடையை வாங்கிக்கொண்டான் ரங்கா.
“டேய் போலீஸ்! ஆறு போடு டா..” என ப்ரதீப்பின் குரல் மட்டும் வந்தது.
“உனக்கு உன் கவலை..” என்று பகடையை உருட்டிய ரங்காவிற்கு மூன்று என விழுந்தது.
ஐந்தில் இருந்த ரங்காவின் மஞ்சள் நிற கப்பல் மூன்று கட்டம் நகர்ந்து எட்டில் சென்று நிற்க, நீர் குமிழில் அவனுக்கான குறிப்பு நிறைந்த எழுத்துக்கள் மின்ன தொடங்கியது.
தீயவன் தீயவனல்ல!
கருகவைக்க காத்திருக்கும் காலனாவான்!
என்று தோன்றிய குறிப்பை பகடையை போட்ட கையோடு படித்த ரங்கா, “ஒரு டேஷும் புரியல..” என்று சலித்துக் கொண்டான். மீண்டும் அனைவரும் அதனை ஒருமுறை படித்தனர்.
“ஈசி தான டா.” என்ற ப்ரதீப், “யாரோ கெட்டவனாம். ஆனா கேடு கெட்டவன் இல்லையாம். நெருப்பை உருவாக்கி கருக வைப்பான் போல..” என்று ப்ரதீப் அவனுக்கு புரிந்ததை கூற அனைவரும் சிரித்துவிட்டனர்.
அந்நேரம், “அங்க யாரோ இருக்காங்க..” என்று ஷிவன்யா அவர்கள் இருந்த மேல்தளத்தில் உள்ள அறையை கைகாட்டி சொன்னாள்.
அவள் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்த அனைவரும் “அங்க யாருமில்லையே ஷிவ்.” என்றனர்.
“இல்..இல்ல நான் பார்த்தேன். அங்க இருக்க கதவு வழியா எதோ நம்மளை எட்டி பார்த்துச்சு..” என ஷிவன்யா மேலும் உறுதியாக சொன்னாள். சிறிது நேரம் அவ்விடத்தையே கூர்ந்து பார்த்த அனைவருக்கும் அங்கு எந்த ஒரு மாற்றமும் தோன்றவில்லை.
“இ..இல்லை நான் பார்த்தேன். எனக்கு பயமா இருக்கு..” என்ற ஷிவன்யா விலோவை நெருங்கி அமர, “ஆ..அம்மா!” என்று விலோ அலறினாள்.
“என்னாச்சு?” என அனைவரும் பரபரப்பாக விலோவை கவனிக்க, “ஒண்ணுமில்லை இவ கால் மேல வந்து உட்கார்ந்தா அது தான். கால் ரொம்ப வலிக்குது..” என்ற விலோவிற்கு கால்வலி உயிர் போனது. அதனால் காலை நீட்டி அமர்ந்தாள்.
“உனக்கு எதுக்கு இப்ப கால் வலிக்குது?” என்ற ப்ரதீப்பின் கேள்வி காற்றில் வர, “இவ்வளவு நேரம் ஈர ட்ரஸ்ல நின்னுட்டு இருந்தா கால் வலிக்க தான செய்யும்.” என விலோ வலியில் முனங்கினாள். அந்த கடற்கன்னி விலோவின் தலைமுதல் கால் வரை அவளை முழுதாக குரோதம் வழிந்த கண்களால் கண்டதை நண்பர்கள் கூட்டம் கவனிக்கவில்லை.
ஷிவன்யா மீண்டும் அவ்விடத்தையே பார்த்துக் கொண்டிருக்க, “ப்ரதீப்! நீ தான யார் கண்ணுக்கும் தெரிய மாட்ட? அங்க என்ன இருக்குனு நீ போய் பாரு.” – சக்தி.
“டேய் கண்ணுக்கு தான் டா தெரிய மாட்டேன். ஆனா பார்க்குற எனக்கு பயமா இருக்கும்ல?”
“டேய் எருமை தைரியமா போய் பார்த்துட்டு வா டா” என்ற அமரன் சொன்னதற்கு,
“அமர். நான் காமெடியனாவே இருந்துக்குறேன் டா. என்னை விட்ருங்க..” என ப்ரதீப் நழுவ பார்க்க, அந்த அறையில் இருந்து வேகமாக ஒரு சிறிய உருவம் அவர்களை நோக்கி உருண்டு வந்தது.
அதில் பயந்த அலறியபடியே அனைவரும் எழுந்து நின்றுகொள்ள, அச்சிறிய உருவம் ஷிவன்யாவின் அருகில் சென்று நின்றது.
“இது சீல்(seal) தான?” என அதனை பார்த்துவிட்டு விலோ கூற, “அப்படினா? தமிழ்ல சொல்லு..” என்றான் ப்ரதீப்.
“கடல் நாய்” என்ற ஷிவன்யாவிற்கு இதற்கா பயந்தோம் என்றாகிவிட்டது.
“ஊட்டி மலைல இருந்து உருட்டுவிட்ட உருளைக்கிழங்கு மாதிரி இருக்கு. இதை போய் நாய்ன்னு சொல்லுறீங்க? இது கடிக்குமா?” என்ற ப்ரதீப்பின் கேள்விக்கு, “நீ கடிக்காம இரு டா.” என ப்ரதீப்பை அடக்கினான் ரங்கா.
ப்ரதீப் கூறியதை போல் அந்த கடற்நாயின் உருவம்,
பெரிய உருளை கிழங்கை உருட்டிவிட்டது போன்று தான் இருந்தது. அதை பார்த்தவர்களுக்கு இது எதற்கு வந்தது என்ற எண்ணம் தான் எழுந்தது.
“இது தான் அந்த தீயவனா? இது எப்படி தீ வைக்கும்?” என்ற விலோவின் குழப்பமான கேள்வியில்,
“ஒருவேளை டால்பின் வந்துட்டு சுறா வந்த மாதிரி இது வந்ததுக்கபுறம் தான் அது வருமோ?” என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், அந்த கடற்நாயோ அங்கே நீச்சல்குளத்தில் அமர்ந்திருந்த கடற்கன்னியின் அருகே சென்று அமர்ந்தது.
“என்ன இதுவும் அவ பக்கத்துல போய் உட்கார்ந்துடுச்சு?” – விலோ.
“எல்லாம் ஒரே உலகத்துல இருக்குறது தான. ஒன்னுக்கொன்னு தெரியாமலா இருக்கும்?” – சக்தி
“அப்படினா இதுவும் நம்ம க்ளுக்காக வந்தது இல்லையா?” என்று தொடர்ந்து அனைவரிடமும் கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தது.
“ஐயோ! இதுங்கல்லாம் எதுக்கு வருதுன்னு அதுக்கும் தெரியல.. நமக்கும் புரியல..” – ப்ரதீப்.
“அந்த க்ளுல தான் காத்திருப்பான்னு போட்டிருக்கே? அப்படினா அது எப்ப வரணும்னு இருக்கோ, அப்ப தான் வரும் போல..” என்ற ஷிவன்யாவின் விளக்கத்தில் அவளும் சற்று தெளிந்துவிட்டாள் என்று அனைவருக்கும் புரிந்தது.
“எதோ ஒன்னு. எப்படியிருந்தாலும் நம்ம முன்னாடி தான அது வரணும். அப்ப பார்த்துக்கலாம். சக்தி அடுத்து நீ தான்.” என்ற ரங்கா பகடையை அவனிடம் கைமாற்றினான்.
அப்பொழுது, அவர்கள் கப்பலின் முகப்பை இடித்தப்படி வந்து நின்றது, கொள்ளைக்காரக்கப்பல். எந்த கூட்டதிடமிருந்து இருட்டில் மறைந்து தப்பித்து வந்தனரோ அக்கூட்டமே அவர்களை முற்றுகையிட மீண்டும் வந்திருந்தது.
கிட்டத்தட்ட நாற்பதிற்கும் மேற்பட்ட கொள்ளைக்காரர்களை சுமந்தப்படி வந்திருந்த கப்பலை பார்த்து அதிர்ந்த நண்பர் கூட்டத்திற்கு, “அடுத்தது இவங்களா?” என்று ஆயாசமாக இருந்தது.
அவர்களின் கவனத்தை கவராமல் சக்தியிடம் நகர்ந்து வந்த அமரன், “சக்தி டைஸை அந்த போர்டு குள்ள போட்டு அதை பத்திரமா மறைச்சு வை.” என் அறிவுறுத்தினான். அதன் படியே சக்தியும் சமுத்திரா பெட்டியை மறைத்து வைத்தான்.
எங்கு? எப்படி? யாரிடம்? இருக்க வேண்டும் என முடிவு செய்யும் சமுத்திராவை மனிதர்களால் மறைக்க இயலுமா?
– சமுத்திரா வருவாள்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

