Loading

சமுத்திரா – 19:

“பார்த்து மேல வா டேனி. இன்னும் இந்த ஒரு ப்ளோர் தான் இருக்கு. அதை கடந்துட்டா நாம மேல போய்டலாம்.” என டேனியல் ஏறுவதற்கு கைகொடுத்தான் ரிச்சார்ட்.

முன்பு நம் நண்பர்கள் அமர்ந்திருந்த தளத்திற்கு அவர்கள் இப்பொழுது வந்திருந்தனர். அங்கே, நண்பர்களின் லேப்டாப், ஃபோன் என அனைத்தும் சிதறி கிடந்தன. அதனை பார்த்த இருவரும், “இங்க ஏதோ நடந்திருக்கு. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு டேனி..” என அதுவரை டேனியலுக்கு தைரியம் அளித்த ரிச்சார்ட் சொன்னான்.

“பயப்படாத ரிச்சார்ட். அந்த மினி தியேட்டர் வழியா நாம மேல போய்டலாம்..” என உள் தாழ்ப்பாள் போட்டிருந்த அறையை இருவரும் கையில் வைத்திருந்த கட்டையால் அடித்தே திறந்தனர். பின் அங்கே உள்ளே இருந்த பெரிய ஆமையை பார்த்ததும் இருவரும் அலறிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே ஓடிவிட்டனர்.

*****

காற்றில் அரூபமாய் மறைந்திருந்த ப்ரதீப் அங்கிருந்த பகடையை தொட முனைந்தான்.

ஆனால், ப்ரதீப்பின் கரம் அந்த பகடையை மட்டுமின்றி அங்கிருந்த அனைத்து பொருட்களையும் ஊடுருவி சென்றது. அதில் சோர்ந்த ப்ரதீப், “இல்ல சக்தி. என்னால எதையுமே தொட முடியல; என்னால எல்லாத்தையும் பார்க்க முடியுது; நான் பேசுறதை உங்களால கேட்க முடியுது. ஆனா நான் யார் கண்ணுக்கும் தெரியவே இல்லை..”

“அப்படினா ஆறு வர்ற வரைக்கும் நீ அரூபம் தான் டா..” – அமரன்.

“கவலை படாத ப்ரதீப். நாங்க ஐந்து பேர்ல கண்டிப்பா யாராவது ஆறு போட்டு உன்னை திருப்பி கொண்டு வருவோம்.” என்ற ரங்கா காற்றிலே ப்ரதீப்பிற்கு வாக்களித்தான்.

எங்கோ பார்த்தபடி பேசி கொண்டிருந்த நண்பர் கூட்டத்தின் செயல்களை புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர் மார்ட்டின் மற்றும் விக்டர். அதை பற்றி கேட்ட அவர்களுக்கு நடந்ததை கூறினார். ஆனால், அவர்களால் ப்ரதீப் பேசுவதை கேட்க முடியவில்லை.

‘ஒருவேளை இந்த கேம்ல இருக்கவங்களால மட்டும் தான் ப்ரதீப் பேசுறதை கேட்க முடியும் போல..’ என்று அவர்களே முடிவுக்கும் வந்தனர்.

“எனக்கு ஆறுலாம் லூடோ விளையாடுறப்ப கூட வராதே..” என விலோ புலம்பினாள்.

“நீ லாஸ்ட் தான் வருவ. அதுக்குள்ள இவங்க நாலு பேர்ல யாராவது ஆறு போடுவாங்க.” என்று ப்ரதீப் கூறியதும், இவ்வளவு நேரம் அழுகையில் கரைந்தவர்களா இவர்கள் என அனைவரையும் பார்த்த ஷிவன்யாவிற்கு பொறுமை கரைய தொடங்கியது.

“நாம டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது அமர். நீங்க தான் அடுத்து போடணும் வாங்க.” என அழைத்தப்படியே அமரனின் கையில் பகடையை திணித்தாள்.

“ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ஷிவன்யா வந்துட்டாங்க டோய்..” என காற்றில் தவழ்ந்து வந்த ப்ரதீப்பின் குரலில் நக்கல் மிகுதியாகவே இருந்தது.

அதில் பொறுமையை இழந்த ஷிவன்யா, “ப்ரதீப், உங்க உருவத்தை மறைய வெச்ச மாதிரி, உங்க வாய்க்கும் ஒரு பூட்டு போட்டிருக்கலாம்.” என்று சொல்லிவிட்டாள்.

“என்னால உன்னை மாதிரி எப்பவும் சீரியசாகவே இருக்க முடியாது ஷிவ். வாழ்க்கைல கொஞ்சம் விளையாட்டு தனமும் வேணும். அப்படி ஸ்டிர்க்ட்டா, சீரியஸா இருந்து என்னத்தை சாதிக்க போற?” என்ற ப்ரதீப்பின் குரல் அடித்துக்கொண்டிருந்த காற்றிலும் அனைவருக்கும் தெளிவாக கேட்டது.

ஒருநொடி அமைதியான ஷிவன்யாவின் முகத்தை தான் அனைவரும் பார்த்தபடியே இருந்தனர். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருந்தும், “எல்லாருக்கும்.. எல்லாரோட சூழ்நிலையும் ஒண்ணுயில்லை ப்ரதீப். எல்லாரோட வாழ்க்கை, எல்லாரும் வளர்ந்த விதம்னு எதுவுமே யாருக்கும் ஒரே மாதிரி இருக்காது.” என சிறுகுரலில் கூறியவள், “நீங்க டைசை உருட்டுங்க அமர். சீக்கிரமா விளையாட்டை முடிச்சிட்டு நம்ம உலகத்துக்கு போகனும்.” என யாரின் முகத்தையும் பார்க்காமல் சொல்லிவிட, அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகியது.

ஆசிரமத்தில் வளர்ந்த ஷிவன்யா எதற்கும் யாரையும் எதிர்பார்த்ததே இல்லை. வளர்ந்து, படிப்பை முடித்து வேலைக்கு என வெளியே வந்தபின், ‘அவளை அவளே தான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற நிலையில் தானாகவே ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு அகற்குள்ளே இருந்துக் கொண்டாள். அப்படி ஒரு சூழலில் வளர்ந்தவளிடம், ‘நீ விளையாட்டாக இருக்க மாட்டாயா? எதற்கு இவ்வளவு சீரியஸ்?’ என கேட்டதும் அவளுக்கு எரிச்சல் தான் வந்தது.

சாதாரண பேச்சு எங்கோ சென்றதை உணர்ந்த ப்ரதீப் குற்றவுணர்வில், “சாரி ஷிவ்” என கேட்க, “நான் சொன்னதும் தப்பு தான ப்ரதீப். பேசுறது உங்க இயல்பு. அதை நான் தப்பா பேசியிருக்க கூடாது.” என்று அமைதியாகி விட்டாள்.

“நான் டைஸ் போட போறேன்” என்ற அமரன் அனைவரின் கவனத்தையும் அவன் புறம் கொண்டுவந்தான்.

“ஆறு போடு டா..” என ப்ரதீப் வேண்ட, “எது வந்தாலும் நல்லதா வரணும்.” என விலோ வேண்டினாள்.

ஆனால் பகடையில் அமரனுக்கு விழுந்ததோ  ஒன்று! “இதுலாம் இப்ப வரலைன்னு யாரு அழுதா..” என ப்ரதீப் சலித்துக் கொண்டான்.

இரண்டில் இருந்த அமரனின் ஊதா நிற கப்பல் ஒரு கட்டம் தாண்டி மூன்றில் சென்று நின்றது.

“ரட்சிக்கும் எண்ணமில்லா ராட்சசன் பின் தொடர்கிறான். கவனம் கொள்!”

என்ற குறிப்பை படித்த விலோ, “இதுவரைக்கும் வந்ததுங்க மட்டும் நம்மள ரட்சிக்கவா செஞ்சது?” என சலித்தப்படி கேட்டாள்.

“பின்னாடி யாரும் வரலையே..” என கப்பலின் பின்னே பார்த்து சொன்ன ப்ரதீப், “ஆனா கப்பலுக்கு உள்ள இருந்து வராங்க..” என சொன்னதும் திரும்பி பார்த்த அனைவரும் திகைத்துவிட்டனர்.

ஏனெனில், கப்பலின் உள்ளிருந்து ரிச்சார்ட் மற்றும் டேனியல் வந்தனர். அதுவும் ஆங்காங்கே ரத்த காயத்துடன் வந்தவர்களை பார்த்து மிரண்டாலும் அவர்களை உயிருடன் பார்த்தது சற்று ஆசுவாசத்தை அவர்களுக்கு கொடுத்தது. முக்கியமாக நண்பர்களின் குற்றவுணர்வையும் கொஞ்சம் குறைத்தது.

“ரிச்சார்ட்! டேனியல்! நீங்.. நீங்க எப்படி.. அது.. உங்களுக்கு எதுவும் இல்லை தான? எப்படி மேல வந்துதீங்க?” என அவர்களை பார்த்த மகிழ்ச்சியில் மார்ட்டினும் விக்டரும் அவர்களை நெருங்கினர்.

“எங்களுக்கு ஒன்னுமில்லை மாஸ்டர். பட், அலெக்ஸ்..” என்று ரிச்சார்ட் தொடங்கும் முன், “தெரியும் ரிச்சார்ட்.” என்ற மார்ட்டின் அவனின் கையை பற்றினார்.

“இங்க என்ன நடக்குது மாஸ்டர்? நம்ம போட் எப்படி இப்படி சைலிங் ஷிப்பாக(பாய்மர கப்பல்) மாறுச்சு? அந்த முதலை எல்லாம் எப்படி நம்ம கப்பலுக்குள்ள வந்துச்சு?” என ரிச்சர்டும் டேனியல் மாற்றி மாற்றி கேள்வி எழுப்பினர்.

“இவனுங்க என்னடா மேல வந்ததும் ஓவரா பர்ஃபார்ம் பண்ணுறாங்க? நாம இங்க வௌவாலையே லெப்ட் அண்ட் ரைட் பார்த்துட்டோம். இவனுங்க முதலைக்கு போய் இப்படி குதிக்குறாங்க..” என்று ப்ரதீப் நண்பர்களின் சொல்ல, “கொஞ்ச நேரம் அமைதியா இரு டா.” என ராங்க அவனை அதட்டினான்.

“நான் பேசுறது உங்களுக்கு மட்டும் தான டா கேட்கும். அப்புறமென்ன?” என்ற ப்ரதீப்பின் குரல் மீண்டும் காற்றில் வந்தது. அவனின் குரலை கேட்ட ஷிவன்யாவிற்கு அவனை நினைத்து ஆச்சர்யம் தான் வந்தது. ‘எப்படி நான் பேசியதை லேசாக எடுத்துக் கொண்டார்?’ என்றும் எண்ணிக்கொண்டாள்.

அங்கு நடந்ததனைத்தையும் ஒன்றுவிடாமல் மார்ட்டின் ரிச்சார்டிடமும், டேனியலிடமும் தெரிவித்தார். மாஸ்டர் கூறியதை கேட்ட இருவருக்கும் அதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. ஆனால் மார்ட்டின் கூறுவதால் அமைதியாக கேட்டனர்.

டேனியல், “மாஸ்டர் நீங்க கூட இதெல்லாம் நம்புறீங்களா? முதல்ல போட் எதுக்கு இங்க நிக்குது? நீங்க கரைக்கு திருப்பலாம் தான?” என எரிச்சலுடன் நண்பர்கள் கூட்டத்தை பார்த்தபடி சொன்னான்.

“போட் எடுக்க முடியல டேனி. நீ நம்ப முயற்சி பண்ணு. நாங்க சொல்லுறதெல்லாம் உண்மை தான்.” என அங்குமிங்கும் பார்த்த விக்டர், “இங்க பாரு.. இந்த பாக்ஸ். இதுக்குள்ள இருக்க ட்ரிங்க்ஸ் எல்லாமே அந்த விளையாட்டுல இருந்து தான் வந்துச்சு. அதோ அந்த மெர்மைட்(கடற்கன்னி) கூட அதுல இருந்து தான் வந்துச்சு.” என மதுவால் நிறைந்த அட்டை பெட்டிகளையும் கடற்கன்னியையும் சுட்டி காட்டினான்.

அந்த அட்டை பெட்டியை

திறந்து பார்த்த டேனியல் அதில் இருந்த மது குடிவை ஒன்றை கையில் எடுத்தான். ‘என்ன பண்ண போகிறான்?’ என அனைவரும் அவனையே பார்க்க, சிறிதும் யோசிக்காமல் அந்த மதுவை அருந்த தொடங்கினான்.

அதுவரை அவனையே பார்த்துக்கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம் முகம் சுழித்தனர். “ப்ரதீப் எல்லாம் உன்னால தான். நீ குடிக்க வர வெச்சதை அந்த மொட்டையன் எடுத்து குடிக்கிறான்.” என விலோ கடுப்புடன் கூறினாள்.

ஏற்கனவே ஷிவன்யாவும் ப்ரதீப்பை பேசியிருக்க இப்பொழுது விலோவும் அவனை சாட நிதானமிழந்த சக்தி, “ரொம்ப பேசாத விலோ! அவன் சரக்கடிக்கவே மாட்டான். அவன் டீடோட்டலர்.” என்றான்.

“நிஜமாவா.. அப்ப என்கிட்டே நாங்க சரகடிக்க போறோம்ன்னு சொல்லிட்டு போவான்.” – விலோ

“அது சும்மா உன்னை வெறுப்பேத்த விலோ.” என ரங்கா சொன்னான்.

“அடப்பாவி அவ்ளோ நல்லவனா நீ?” என விலோ அதிர்ச்சியாக,

“அவனுக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல.  சரக்கு தான் அடிக்க மாட்டான். ஆனா இருக்க சைட் டிஷ் மொத்தத்தையும் ஒரே ஆளா காலி பண்ணிடுவான்.” என அமர் சிரிப்புடன் கூறினான்.

அங்கு மதுவை அருந்திய போதையில், “என்னென்னமோ வரும்னு சொன்னீங்க? இங்க இருந்து வருமா? இல்ல அங்க இருந்து வருமா?” என கப்பலில் அங்குமிங்கும் நடந்தபடியே டேனியல் குழறலாய் கேட்டான்.

“நீங்க சொன்ன மாதிரி இன்னும் ஒன்னு கூட வரலையே மாஸ்டர்..” என மாலுமிகள் கூட்டத்திடம் நக்கலாகவும் கேட்டான் டேனியல். அவர்களும் அவனை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

“இந்த மொட்டை எதுக்கு டா இப்படி பண்ணுறான். ஒருவேளை இந்த சரக்கை குடிக்க தான் அவ்ளோ கஷ்டப்பட்டு மேல வந்தானா?” என நக்கல் குரலில் ப்ரதீப் கேட்டது நண்பர்களுக்கு மட்டும் கேட்டது.

“டேய் அவனுங்களே முதலைகிட்ட இருந்து உயிர் பொழச்சி வந்துருக்காங்க. நாமளும் அப்படி தான மேல வந்தோம். நீ அமைதியா இரு..” என அமரனின் அதட்டல் குரலில் வாயை மூடினான் ப்ரதீப்.

முழு போதையில் இருந்த டேனியலின் பார்வை இப்பொழுது பெண்களின் மேலும் பளிங்கு சிலையாக அமர்ந்திருந்த கடற்கன்னியின் மேலும் விழுந்தது. சக்தி, அமர், ரங்கா மூவரும் டேனியலை முறைத்தபடியே தோழிகள் இருவருக்கும் அரணாய் நின்றுக் கொண்டனர்.

“அங்க பாருங்களேன். அந்த கடற்கன்னி அவனையே மொறைச்சி பார்த்துகிட்டு இருக்கா. அநேகமா அடுத்த ஸ்கெட்ச் அந்த குடிகாரனுக்கா தான் இருக்கும்.” என விலோ கூறியதும் ஏதோ பெரிய உருவம் ஒன்று அவர்களின் கப்பலை இடித்தபடி நகர்ந்தது.

அந்த ஒரு தாக்குத்தலுக்கே கப்பல் ஆட்டம் காண, ஒருநொடி தடுமாறிய அனைவரும் சுதாரித்து நின்றனர். குடி போதையில் தள்ளாடிய டேனியல் மட்டும் நின்ற இடத்திலே விழுந்து வாரினான்.

ஒருபக்கம் அவர்களை வேட்டையாட கொடூரமான உயிரினம் கப்பலுக்கடியில் கடலில் உலாத்திக் கொண்டிருக்க.. மறுபக்கம், கப்பலின் விளக்கொளியின் மூலம் அவர்களை கண்டுக்கொண்ட கொள்ளைக்கார கூட்டம், அவர்களை தாக்க வந்து கொண்டிருந்தனர்.

– சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்