
சமுத்திரா – 18:
அமரனின் பக்கத்தில் அமர்ந்திருந்த ப்ரதீப்பை காணவில்லை என்ற பதற்றம் நொடிப்பொழுதில் அனைவரையும் தொற்றிக்கொண்டது. கலக்கம் நிறைந்த கண்களால் நம்பமுடியாத சக்தி, “எ..என்ன டா? எங்கடா போனான்?” என கேட்டிட,
“தெரியல டா..” என ரங்காவும் சுற்றியும் பார்த்தான்.
“என்னங்க டா இவன் காத்துல காணாம போய்ட்டானா? என்னோட பக்கத்துல தான இருந்தான். அவன் எழுந்திரிச்சு போயிருந்தா கூட நமக்கு தெரிஞ்சிருக்குமே..” என்று பதட்டம் நிறைந்த குரலில் அமரனும் அனைவரையும் பார்த்தான்.
“அதான் ஒண்ணுமே புரியல. ஒன்னு மாற்றி ஒன்னு வந்துட்டே இருக்கே..” என்று புலம்பிய விலோ, ப்ரதீப்பிற்கு வந்த குறிப்பை படிக்க தொடங்கினாள்.
“வளியவனில் அரூபமாவாய்..
ஆறுபோட மீண்டு வருவாய்!”
என்று அந்த நீர் குமிழில் தோன்றிய எழுத்தை விலோ சத்தமாக வாசிக்க, “வளின்னா காற்று! கா..காற்றோட காற்றாய் கா..காணாம போய்ட்டாங்க போல..” என்ற ஷிவன்யாவின் விளக்க குரலில் அனைவரின் இதயமும் படபடத்தது.
“ஹே! ப்..ப்ரதீப்..” என்று உதடுகள் நடுங்க ப்ரதீப்பை அழைத்த விலோ சுற்றும் முற்றும் பார்த்தபடியே “விளையாடாம எங்க முன்னாடி வா டா..” என ஒருபுறம் அழைக்க,
“ப்ரதீப்.. எங்கடா போன?” என்று சுற்றியும் கண்களை சுழற்றி தேட தொடங்கினான் ரங்கராஜ்.
“ப்ரதீப் நாயே விளையாடாத, மரியாதையா எங்க கண்ணு முன்னாடி வந்து நில்லு..” என்ற மிரட்டலுடன் அமர் அழைத்தான்.
எப்பொழுதோ காற்றில் கலந்து மாயமாய் மறைந்திருந்த ப்ரதீப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கத்தியும் மிரட்டியும் அவனை தொடர்ந்து அழைத்துக்
கொண்டே இருந்தனர். இவர்களாவது வாய்விட்டு அவனை கூப்பிட்டனர். ஆனால், நடந்ததை நம்பமுடியாமல் தீக்பிரம்மை பிடித்ததை போல் அசையாமல் அமர்ந்திருந்தான் சக்தி.
சிறிது நேரம் பழகினாலும் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டும்; கிண்டலடித்தாலும் கண்ணியமாக நடந்துக்கொண்ட ப்ரதீப்பை நினைத்து ஷிவன்யாவிற்கும் வருத்தம் மேலோங்கியது. ஆனால், ‘தானும் அவர்களை போன்று கலங்கினால் வேலைக்கு ஆகாது..’ என்று புரிந்துக் கொண்டவள்,
“அமர்” என்று அமரனின் தோள்தொட்டு திசைத் திருப்பினாள். அவளை பார்த்தவனிடம் கண்களால் சக்தியின் நிலையை காட்டினாள். பின்பே அவனை பார்த்து தலையிலடித்தவன், “சக்தி..” என்றழைக்க, சக்தியோ அமைதியாக எழுந்து அந்த கப்பலின் கைப்பிடியின் அருகே சென்று நின்றுக் கொண்டான். ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற கேள்வி தான் அவனை ஆக்கிரமித்திருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ப்ரதீப் அங்கு இல்லாததை உணர்ந்த விலோ அழுகையுடன் ரங்காவை பார்த்தாள். “என்..என்னால தான் ரங்கா. நான்தான் எல்லாத்துக்கும் காரணம்! ப்ரதீப்புக்கு எதுவும் ஆகாது தான? அவன் திரும்பி நம்மக்கிட்ட பத்திரமா வந்துடுவான் தான?” என அழுதபடியே அவனின் கையை பற்றிக்கொண்டாள். அவனும் அவளின் கையை இறுக்கிப்பிடித்து ஆறுதல் கொடுத்தான்.
என்னதான் எப்பொழுதும் சண்டைபிடித்தாலும் ப்ரதீப்பை என்றுமே எங்குமே விட்டுக்கொடுத்ததில்லை விலோ. இன்னும் சொல்ல போனால் உரிமையுடன் அனைத்தையும் அவனிடம் மட்டுமே பகிர்ந்துக் கொள்வாள். இப்பொழுது அவன் இங்கில்லை. அதற்கு தான் மட்டும் தான் காரணம் என்று எண்ணியவள் ரங்காவின் மடியில் முகம் புதைத்து அழுதாள்.
அவர்களை பார்த்த அமரன் சக்தியிடம் சென்றான். சக்திக்கு ப்ரதீப்பை தான் மிகவும் பிடிக்கும் என்று அனைவருமே அறிவர். எனவே, இந்நிகழ்வு அவனை எவ்வளவு பாதிக்கும் என்றும் உணர்ந்திருந்தான்.
அதற்கு ஏற்றதுபோல் சக்தியின் கண்கள் கலங்கி தக்காளி பழம்போல் சிவந்திருந்தன. ‘உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான்’ என்பது சக்தி, அவனின் கைக்கு கொடுக்கும் அழுத்தத்தில் நன்கு தெரிந்தது. அப்படி அழுத்தி பிடித்திருப்பதால் அவனின் இடது தோள் பட்டையில் இருந்த காயத்திலிருந்து இரத்தமும் கசிய தொடங்கியது.
அவனின் நிலையை அருகில் பார்த்த அமரன், “சக்தி!” என்று நண்பனின் தோளில் கை வைத்தான். ரங்கா, விலோ, ஷிவன்யா மூவரும் கூட அவர்களை நெருங்கினர்.
இருள் சூழ்ந்த கடலில் நுரைப்பொங்க மேலெழும்பிய அலைகளை வெறித்த சக்தி, “அவன் ஊருக்கு போயிருக்க வேண்டியவன் அமர். நா..நான்தான் ட்ரிப் போகலாம்னு கூப்பிட்டேன். என்னை நம்பிதான் வந்தான். ம்ப்ச்..” என கண்ணை மூடி தலையை அழுத்தி கோதிக்கொண்டான்.
“இங்க என்ன நடக்குதுனே புரியல அமர். எதுக்கு நாம இங்க வந்திருக்கோம்? இது என்ன இடம்? எதுக்காக இதெல்லாம் நடக்கணும்? இதுனால யாருக்கு என்ன கிடைக்க போகுது?” என்றவனால் மேல சொல்ல முடியாமல் தொண்டையடைத்தது. சக்தியின் மறுபுறம் வந்து அவனின் கையை ரங்கா பிடித்துக் கொண்டான்.
ஷிவன்யா, “எனக்கும் ப்ரதீப்பை நினைச்சா வருத்தமா தான் இருக்கு. ஆனா, நம்மால அவரை திருப்பி கொண்டு வர முடியும். நாம யாராவது ஆறு போட்டா அவங்க திரும்பி வந்திடுவாங்க. அதுக்கு நாம தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடி ஆகணும்.” என்று அனைவரின் முகங்களையும் பார்த்து சொல்லி முடித்தாள்.
“ஏற்கனவே, சக்திக்கு காயம். விலோவுக்கு வேற என்ன நடக்கும்னே தெரியல. ப்ரதீப்பையும் இப்போ காணோம். இதை தொடர்ந்து விளையாடி இன்னும் வேற என்னலாம் வருமோ..”என்ற ரங்காவின் பேச்சில் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடுவதற்கான மறுப்பு அப்பட்டமாக தெரிந்தது.
“நீ சொல்லுறது சரி தான் ரங்கா. ஆனா அதுக்கான தீர்வும் இந்த விளையாட்டுல தான இருக்கு. இதை இப்படி நம்மளால பாதில விட முடியாதே..” என அமரன் தெளிவு படுத்தினான்.
இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்க சக்தியின் கவனம் இங்கில்லாமல், ப்ரதீப்பை முதன்முதலில் சந்தித்த நாளுக்கு சென்றது.
பல வண்ண கனவுகள் நிறைந்த முதலாம் ஆண்டு மாணவர்கள், அவர்களுக்கான வகுப்பறையை தேடியபடியே புகழ்பெற்ற பெங்களூரில் இருந்த பல்கலை கழகத்தில் சுற்றிக் கொண்டிருந்தனர். இறுதியாக தன்னுடைய வகுப்பை கண்டுபிடித்த ப்ரதீப் கண்ணன், அந்த வகுப்பறைக்குள் சென்றான்.
அனைவரையும் பார்த்துக்கொண்டே அங்கு தனியாக அமர்ந்திருந்த சக்திவேலின் அருகில் சென்று அமர்ந்தான். அவனுக்கு ஒரு சிரிப்பை கொடுத்தவன் வகுப்பறையை சுற்றிலும் பார்த்துக் கொண்டான்.
பால் நிறத்தில் பதினெட்டு வயதிலே அளவான மீசையும் முறுக்கேறிய உடம்புமாக இருந்த சக்தியை பார்த்த ப்ரதீப் அவனை வடநாட்டவன் என்று எண்ணினான். பின்பு பெயரை கேட்டதும், தமிழ் என்று உறுதியானப்பின் எந்த ஒரு தங்குதடையுமின்றி அவனிடம் சுலபமாக நட்பு பாராட்டினான். எப்பொழுதும் அமைதியாக இருக்கும் சக்திக்கு, ஓயாமல் வாய் பேசும் ப்ரதீப் நட்பாய் கிடைத்தது விந்தை தான்.
ஒரு வருடம் சென்று சக்தியின் பின்புலம் ப்ரதீப்பிற்கு தெரியவர அவனின் உயரம் பார்த்து மிரண்டவன் அவனை விட்டு விலக தொடங்கினான். ஆனால் அவனின் நோக்கத்தை புரிந்துக்கொண்ட சக்தி அவனை இறுக்கி பிடித்துக் கொண்டான்.
அதன் பிறகு, அந்தஸ்து, செல்வாக்கு என்று அனைத்திற்கும் அப்பாற்பட்டு அவர்களின் நட்பு வளர்ந்தது. அனைத்தையும் ஒரு நொடி நினைத்த சக்தியின் செவியில், “என்ன ஆனாலும் விட்றாதீங்க டா..” என ப்ரதீப் அவர்களிடம் கூறிய கடைசி வாக்கியம் மீண்டும் மீண்டும் ஒலித்தது. “ப்ரதீப் நம்மகிட்ட தான விட்ராதீங்கன்னு சொன்னான். அப்புறம் எப்படி டா அவனை விட முடியும்?” என்ற சக்தி கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டான்.
“நம்மல்ல ஒருத்தன் இப்ப நம்ம கூட இல்லை. அவனை நாம தான திருப்பி கொண்டு வரனும். என்னை நம்பி தான் இந்த ட்ரிப்க்கு ப்ரதீப் வந்தான். என்னுடைய உயிரை கொடுத்தாவது ப்ரதீப்பை மீட்பேன்.” என்று உறுதியாக கூறினான் சக்திவேல்.
“வேற யாருக்காவது எதாவது ஆகிடும்னு தான் நான் சொன்னேன். ஆனா, ப்ரதீப் இல்லாம நம்மால இந்த கேமை முடிக்கவும் முடியாது; நம்ம உலகத்துக்கு போகவும் முடியாது. நாம எல்லாரும் சேர்ந்து ப்ரதீப்பை நிச்சயமா திருப்பி கொண்டுவரலாம் சக்தி.” என நம்பிக்கையாக ரங்கா சொல்ல,
“ஆமா. ஆறு போட்டா ப்ரதீப் வந்திட போறான். அடுத்து போட போற அமர் ஆறு போட்டா கூட ப்ரதீப் உடனே வந்திடுவானே! அப்புறம் என்ன?” என விலோவும் கண்ணை துடைத்தப்படி சொன்னாள். ஆனால் அந்த ஆறு அவர்களுக்கு வருவதற்குள் எவ்வளவு இன்னல்கள் வரும் என்பதை அந்த ‘சமுத்திரா’ மட்டுமே அறிவாள்!
அனைவரின் கலக்கம் நிறைந்த முகங்களை பார்த்த மார்ட்டின், “நாம நம்ம பெஸ்ட்டை கொடுக்கலாம். கண்டிப்பா அதுக்கான பலன் கிடைக்கும். உங்க பிரென்ட் நிச்சயம் உங்க கிட்ட வந்துடுவாங்க.” என அனைவரையும் தேற்றி அழைத்து சென்றார். செல்லும் அவர்களையே பார்த்த கடற்கன்னி மெல்ல சிரித்தாள்.
அறுவர் இப்பொழுது ஐவர் ஆகியிருக்க, சமுத்திர விளையாட்டை சுற்றி ஐவரும் அமர்ந்தனர். அந்நேரம், “சக்தி..” என்ற ப்ரதீப்பின் குரல் காற்றில் மிதந்து வந்தது. பிரம்மையோ என்று எண்ணி கொண்டிருக்கையிலே,
“அமர்”
“ரங்கா”
“விலோ”
“ஷிவ்”
என அனைவரின் பெயர்களும் வரிசையாக ப்ரதீப்பின் குரலில் விளிக்கப்பட்டது.
“எனக்கு ப்ரதீப் குரல் கேட்குதே..” – சக்தி.
“எனக்கும் கேட்குது!” – அமர்.
“ஐயையோ செத்து போய் ஆவியா வந்துட்டானோ..” என்று விலோ பீதியுடன் கூறினாள்.
“டேய் ஏறுமைங்களா நான் உங்க முன்னாடி தான இருக்கேன். உங்க யாருக்கும் கண்ணு தெரியலையா?” என்று ப்ரதீப் கத்தினான்.
ஆனால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் இருந்தவனிடம், “ப்ரதீப், நீங்க எங்க யார் கண்ணுக்கும் தெரியலையே! எங்க இருக்கீங்க?” என்றாள் ஷிவன்யா.
“என்ன? தெரியலையா? நான் பேசுறது கேட்குது தான? உங்க முன்னாடி தான இருக்கேன்..” என மீண்டும் ப்ரதீப் கத்த, குரல் வந்த திசையில் அனைவரும் திரும்பினர். கடலில் வீசிக்கொண்டிருந்த காற்றை தவிர வேறெதுவும் அவர்களுக்கு புலப்படவில்லை.
“சத்தியமா தெரியலை டா நாயே. நீ பேசுறது மட்டும் தான் கேட்குது.” என அமரன் கூறுகையில்,
அங்கு தோன்றிய குறிப்பை நினைவு கூர்ந்த ஷிவன்யா, “வளியவனில் அரூபமாவாய்னு வந்துச்சு. வளின்னா காற்று. அரூபம்னா உருவம் தான் இருக்காது. அப்படினா காத்துல ப்ரதீப் உருவம் தான் நமக்கு தெரியாம மறைஞ்சிருக்கும். அவர் பேசுறது நமக்கு கேட்கும் போல..” என்று கண்டுபிடித்த குதூகலத்துடன் கூறினாள்.
“டேய் ப்ரதீப். இவ்வளவு நேரம் பக்கத்துல தான் இருந்தியா டா? எருமை.. சொல்லுறதுக்கு என்ன?” என்றான் சக்தி அவ்வளவு நேரம் துடித்த துடிப்பு நீங்கியவனாக.
“நான் ஏதோ இருட்டு ரூம்ல இருந்த மாதிரி இருந்துச்சு டா. அப்பறம் தான் அது கப்பலோட அடித்தளம்னு புரிஞ்சிது. உங்க எல்லாருக்கும் என்னாச்சோன்னு பயந்துகிட்டே அங்க இருந்து மேல வந்தேன். இங்க வந்து பார்த்தா எல்லாரும் சுற்றி உட்கார்ந்திருக்கீங்க. அதான் எல்லாரோட பேரையும் சொல்லி கூப்பிட்டேன்” என ப்ரதீப் விளக்கமளித்தான்.
“ப்ரதீப், நீ இப்ப மம்மியா மாறிட்டியா?” என்ற விலோவின் கேள்வியில், “மம்மியா..?” என்று அதிர்ந்த ப்ரதீப்பின் குரல் காற்றில் வந்தது.
“ஆமாம் டா. இப்ப உன்னோட ஆவித்தான் இங்க இருக்கு. உடம்பு வேற எங்கயோ இருக்கும் போல. அப்ப நீ மம்மி தான..?” என்று அமரன் சிரிப்புடன் கேட்க.
“டேய் எருமை, நான் இன்னும் சாகலை டா. அதுக்குள்ள ஆவினு சொல்லுறியே பாவி..” என்று அமரனை திட்டியவன், “ஐயோ! கல்யாணம் பண்ணி டாடியாக வேண்டிய என்னை.. இப்படி மம்மியா மாத்தி புலம்ப விட்டுட்டாங்களே..” என்று காற்றிலே புலம்பினான்.
“ஹே ப்ரதீப் உன்னால தொட முடியுமா? அப்படி தொட முடிஞ்சுதுனா நாங்க யாரும் ஆறு போடலனா கூட நீயும் விளையாடலாம். நீ மூணு போட்டா கேம் முடிஞ்சிடுமே?” என்று சக்தி கேட்க பர்தீப்பும் அந்த பகடையை எடுக்க முனைந்தான்.
– சமுத்திரா வருவாள்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
+1

