Loading

காலம் தாண்டிய பயணம்-10

 

தோழி கேட்டுக்கொண்டதற்கு இணங்க மார்த்தாண்டனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள் பூவிழி.

 

“பல ஆண்டுகளுக்கு முன் எம் மூதாதையர்கள் காலத்தில் வாழ்ந்தவன்  தான் மார்த்தாண்ட வளவன்,  சரியாகச் சொல்வதென்றால் எம் பாட்டனாரின் சிறிய தந்தை” என்ற பூவிழி, யாழினி புரியாமல் முழிப்பதைக் கண்டு சிரித்தபடி,

 

“எம் தந்தையாரின் தந்தை எமக்குப் பாட்டன். அவருடைய தந்தையாரின் இளைய சகோதரன் தான் இந்த மார்த்தாண்ட வளவன்” என்றாள் தெளிவாக…

 

இப்போது யாழினியும் புரிந்தும் புரியாமலும் தலையசைக்க, மீண்டும் பூவிழியே தொடர்ந்தாள்.

 

“அந்தக் காலத்தில் அவர் தீவிர பைரவ பக்தன்.  எந்த நேரமும் அவரை பைரவன் கோயிலில் தான் காண முடியுமாம். திருமணம் கூடச் செய்து கொள்ள மறுத்து விட்டாராம். ஆனால் இவை யாவும் மாற்றம் பெற்றது  அவள் ஒருத்தியினால் தான்”  என்க, யாழினியோ “யாரு?” என்றாள் கேள்வியாக…

 

பூவிழியோ “மோகினி” என்றவள்,

 

மீண்டும் “தீய சக்தியான அரத்த மோகினியின் புதல்வி அவள். அவர்கள் உலாவும் நேரம், பின் இரவுகள் தான். இரத்தபலி, பூஜையென அவர்கள் ராச்சியம் மொத்தமும் அந்த அடர்ந்த காட்டினுள் தான். இங்கே காலபைரவனின் பாதுகாப்பை மீறி அவர்களால் உள்ளே நுழைய முடிவதில்லை. ஆனால் ஊரில் இருக்கும் கால்நடைகள் தினமும் ஒன்றாய் காணாமல் போனது, இது போதாதென அந்தக் காட்டுப்பக்கம் செல்லும் எம்மக்கள் கூடச் சில நேரம் காணாமல் போகவென அவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்தது. கோபம் கொண்ட ஊர் தலைவரான மார்த்தாண்டனின் தந்தை வீரவேந்தன், விசேட பூஜை ஒன்றுக்காக அந்தக் காட்டிலிருக்கும் மூலிகையைப் பறித்துவர மார்த்தாண்டனை அனுப்பினார்” என்றாள்.

 

“அச்சச்சோ, அப்பறம் என்னாச்சு? அவரு அவங்க கிட்ட மாட்டிக்கிட்டாரா? அப்போ அவரு நல்லவரா?” என்று கேள்விகளை அடுக்கினாள் யாழினி.

 

மறுப்பாய் இடம் வளமாகத் தலையசைத்த பூவிழி “மாட்டிக்கொண்டது அவரல்ல யாழினி, யாம்” என்றாள்.

 

யாழினியோ புரியாமல் என்னவென்று கேள்வியோடு தான் பார்த்தாள்.

 

“அப்படி மூலிகை பறித்து வர அனுப்பியவர் ஒரு வாரம் கடந்தும் ஊருக்கு வரவில்லை என்றதும் அவரின் தந்தையார் மகன் மீதுள்ள பாசத்தில் யார் தடுத்தும் கேட்காமல் அந்தக் காட்டுக்கு விரைந்தார்” என்று அடுத்து நடந்தவற்றை தொடராகச் சொல்லத் தொடங்க, பூவிழி யாழினி இருவரின் கற்பனையில் ஓரளவுக்கு அவை காட்சியாய் விரிந்தது.

 

அப்போதையே காலகட்டத்தில் காலபைரவன் கோட்டையின் தலைவர் மார்த்தாண்டனின் தந்தை வீரவேந்தன்.

 

இயற்கையிலேயே சக்தி வாய்ந்தவர் அவர். பல நோய்களை, ஏன் பிறவி நோய்களைக் கூடப் பைரவனின் அருளால் குணப்படுத்தும் சக்தி பெற்றவர். கூடவே சில மந்திர சக்திகளும் உண்டு, அதற்கு அவரது சக்தி வாய்ந்த நாக மச்சமே காரணம்.

 

ஆனால் அதற்கான செருக்கு சிறிதுமின்றி தலைவன் என்ற பொறுப்புக்குத் தகுதியானவர். மக்களின் நலன் அறிந்து நடந்து கொள்பவர்.

 

தீய சக்தியான அரத்த மோகினியிடமிருந்து மக்களைக் காப்பதில் பெறும் பங்கு அவருடையது.

 

 

அவருக்கு இரு மகன்கள். அதில் இளையவன் தான் மார்த்தாண்ட வளவன். இளையவனின் கடவுள்மீதான பக்தியைக் கண்கூடாகக் கண்டவர் ‘தனக்குப் பின் இந்த ஊரைக் காக்க அவன் இருக்கிறான்’ என்ற நம்பிக்கையில் அவர் மட்டும் அறிந்த பல ரகசியங்களில் சிலவற்றை அவனிடமும் பகிர்ந்து கொண்டார்.

 

இதோ மூலிகைக்காக அனுப்பிய மகனைக் காணாத தவிப்பில் வீரவேந்தன் ஊரைவிட்டு செல்ல ஆயத்தமாக, அவரது மூத்த மகன் அத்தனை தடுத்தும், அவரோ இளைய மகன் மீதுள்ள பாசத்தில் பிடிவாதமாய் வெளியேறினார்.

 

அப்போது அங்கே வந்த சித்தர் வான்மீகி “இன்று இந்த இரவில் தாங்கள் வெளியே செல்வது அத்தனை உவப்பானதல்ல மகனே” என்றார்.

 

அவசியம் ஏற்படின் மாத்திரமே வான்மீகி தோன்றுவார்கள் என்பது வீரவேந்தன் அறிவார் தான். ஆனால் மகன் என்று வருகையில் அதுவும் பின்னே சென்றது.

 

 

அவரோ பணிவாக “சுவாமி, என் மகன் அங்கே இன்னல்படும்போது யான் இங்கே எதையும் அறியாதவன் போல் இருப்பதா?? கோயில், பூஜை, புனஸ்காரம் என அவன் வாழ்க்கையே ஆர்ப்பணித்த அவனுக்கு ஒரு தந்தையாய் யான் உதவாமல் விடுவதா?” என்று உடைந்த குரலில் வினவினார்.

 

அதற்குப் புன்னகைத்த வான்மீகி சித்தரோ “எதுவும் காரண காரியமின்றி நடப்பதில்லை மகனே! ஆட்டுவிப்பவன் வழியிலே நம் செயலும், அவனே இன்று கட்டுன்று இருக்கையில் யார் நம்மை ஆட்டுவிப்பார். உன் விருப்பப்படி செய்யும் செயலுக்கு நீயே அதிபதி, விளைவுக்கு ஏற்ற பதிலும் நீயே, உலகைக் காண முதல் மட்டுமே அவனுக்கு அழிவு உண்டு, நினைவில் வைத்துக்கொள். அதுவும் உடையவன் கரங்களில்” என்றவர் அங்கிருந்து அகன்று செல்ல, அவர் சொல்வதை ஊகிக்க விடாமல் பாசம் அவர் கண்ணை மறைத்தது.

 

அடுத்து அவர் அந்தக் காட்டை நோக்கிச் செல்ல, அவரைத் தனியே விடாமல் மூத்த மகனும் பின்னே சென்றார்.

 

அங்கே அந்தக் காட்டினுள் அந்த இருளில் சிறு வெளிச்சம் கூட இருக்கவில்லை…

 

நூறு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஆமாவாசை நாள் அன்று, வான் கூட என்றுமில்லா காரிருளை ஆடையாய் சூடிக்கொண்டிருந்தது.

 

அப்படியே உள்ளே நடக்க அடுத்த அரைமணி நேரத்தில் அந்தக் காட்டின் மையத்தை அடைந்த இருவரின் விழிகளும் விரிந்து கொண்டது.

 

அங்கே நடுநாயகமாக மார்த்தாண்டன் அமர்ந்திருக்க, அவனைச் சூழ வட்டவடிவில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கண் மூடித் தியான நிலையில் அவன்,  கூடவே அவனைச் சூழ எட்டு அகோரிகளின் கரங்கள் காற்றில் ஆட,  அவர்களின் கோர இதழ்கள் எதையோ உச்சரித்துக் கொண்டிருந்தது.

 

இவர்களது வாசனையை உணர்ந்த மார்த்தாண்டனோ பட்டென விழிகளைத் திறந்தவன், “வந்துவிட்டயா வீரவேந்தா?, எத்தனை நாள் கனவு இது. ஏன் தாமதம், மகனின் ஆசையை நிறைவேற்ற விரைந்து வரவேண்டாமா?” என்று கேட்டு உறக்கச் சிரித்தான்.

 

அவனது சிரிப்பில் தான் அவனது தந்தையும் சகோதரனும் நடப்புக்கு வந்தனர்.

 

“என்ன வீரவேந்தா அப்படி அதிசயமாகப் பார்க்கின்றாய், உன் மகன் தானா என்ற  ஐயமே வேண்டாம், நானே மார்த்தாண்ட வளவன்” என்றவன் மீண்டும் வெடித்து சிரிக்க, அவனது தந்தை வீரவேந்தன் திகைத்து விழித்தார்.

 

பூஜை வட்டத்திலிருந்து எழுந்த மார்த்தாண்டனோ இவர்கள் அருகில் வந்து  “என்னை உன் பைரவனின் அடிமையென எண்ணினாயோ?  யான் மார்த்தாண்டன், உலகை ஆட்டுவிக்கப் பிறந்தவன்” என்றவன் வீரவேந்தனின் பார்வை பூஜை நடக்கும் இடத்தைத் தொட்டு மீள்வதை உணர்ந்து,

 

“புரியவில்லையா வேந்தா, சாகா வர யாகம். நீ கற்றுக் கொடுத்த ரகசியம் தான், இனி யான், இந்த உலகை என் கரங்களில் அடக்கியாளும் நாள் வெகுதூரமில்லை” என்று மீண்டும் கோரமாய் சிரித்தான்.

 

அடுத்து அவனே அருகில் நின்ற மோகினியின் தோள்மீது கரத்தைப் போட்டுக் கொண்டு, அவள்  நிறை மாத மணி வயிற்றை வருடியவன்,

 

“பிறக்கப் போகும் என் உயிரே இவ்வுலகின் அதிபதி, ஆள்வான் உலகையே அடக்கி ஆள்வான். தீய சக்தியின் உறைவிடம் அவன்,  உன் ஊர் மக்களைக் காணவில்லை என்று நாய்போல் தேடினாயே, அவர்கள் எல்லாம்  பிறக்கப்போகும் என் மகனுக்கான படையல்கள். இன்னும் சில மணி நேரங்களில் உதிப்பான் உலகையே தீய சக்தியின் கையில் ஒளியாய் ஏற்றுவான்” என்று கர்வமாய் மொழிந்தான்.

 

 

அவன் சகோதரனோ “வளவா, ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய் உனக்கு என்னவாகி விட்டது. வா வீட்டுக்குச் சென்று விடலாம், எதுவாகினும் பைரவன் உன்னைக் காப்பான்” என்று அவன் கரத்தைப் பிடிக்க,

 

அவர் கரத்தைத் தட்டிவிட்டு கேலியாய் சிரித்தவனோ “யார் யாரைக் காப்பது? வேண்டுமென்றால் உன் பைரவணை என்னிடம் அடிபணியச் சொல், யான் காக்கிறேன் அவனை…” என்று நிறுத்தியவன் மீண்டும்

 

“அதுவும் அவனே என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலேயன்றி சாத்தியமில்லை” என்று மொழிந்தவன் வேந்தனின் கண்களுக்கு விசப்பாம்பாய் தான் தெரிந்தான்.

 

வீரவேந்தனோ “வேண்டாம் வளவா, விளைவு விபரீதம் ஆகும். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்ததால் நிகழ்ந்த சோகம் இது,  வந்துவிடு” என்று  அப்போதும் கண்ணால் காண்பதைக் கூட நம்பாமல் இறைஞ்சினார்.

 

அவனோ “விளைவு விபரீதமா?? ஆம் விபரீதமே தான்…  எமக்கல்ல உனக்கும் உன் கேட்பாரற்ற பைரவனுக்கும்.  இதோ இன்று என் உயிர் உதிக்கும் நாள். இந்த நாளிகை அவனுக்கான படையல் நீ. இதற்காக இந்த ஆமாவாசை நாளுக்காகத் தான் இத்தனை வருட காத்திருப்பு. சக்தி வாய்ந்த நாக மச்சத்துடன் பிறந்து சாகா வரம் பெறும் சாவி நீயாய் இருக்கையில், உன்னைப் பலியிட்டு அதனை அடையாமல் விட நான் ஒன்றும் பேதை அல்லவே” என்றவன் பின்னே பார்க்க, அகோரிகள் இருவர் வீரவேந்தனை பிடித்துக் கொண்டனர்.

 

அடுத்த அரைமணி நேரத்தில்  மார்த்தாண்டனும் மோகினியும் பூஜைக்கு ஆயத்தமாகி இருக்க, பூஜையின் மையக் கூடத்தில், வீரவேந்தன் அமர வைக்கப்படிருந்தார்.

 

அவர் கரங்களோ மந்திர கட்டுக்களில் கட்டுன்றிருக்க, அவர்மேல் நீர் ஊற்றப்பட்டது. அவரோ கண்கள் கலங்க மகனைத்தான் பார்த்திருந்தார்.

 

‘இத்தனை மோசமானவனா தன் மகன் என எண்ணாமல் இருக்க முடியவில்லை. எப்படி கவனிக்காமல் விட்டோம்’ என நொந்து கொண்டிருந்தார்.

 

அந்த நேரம் சரியாக மார்த்தாண்டனோ அவரைப் பலிகொடுக்க வாளை ஓங்கி இருந்தான்.

 

‘இதோ எல்லாம் முடிந்து விட்டது. இந்த உலகை இப்படி ஒருவன் கையில் காலத்துக்கும் விட்டுச் செல்வதா? அதிலும் ஜனிக்க முதலே இத்தனை உயிரைக் குடித்த அந்த உயிருக்கு சாகாவரமா?? இயற்கை தாங்குமா?’ என்று பல கேள்விகள் அவர் மண்டையை குடைய, சித்தரின் குரல் அசரீரியாய் அவர் காதில் ஒலித்தது.

 

 ‘உலகை காண முதல் மட்டுமே அவனுக்கு அழிவு உண்டு,  நினைவில் வைத்துக்கொள்… அதுவும் உடையவன் கரங்களில்’

 

சடுதியில் தோன்றிய எண்ணங்களுடன் கண்களை மூடித்திறந்தவரோ பைரவனை மனதில் நிறுத்தித் தன் மூத்த மகன்மீது பார்வையை நிலைக்க விட்டார்.

 

அவரோ மார்தாண்டனின் அருகில் மயக்கத்தில் இருக்க, திடமாய் கண்களை மூடியவர் உடல் சட்டென்று காற்றில் பறக்க, அடுத்த நொடி அவரது மூத்த மகனின் உடலும் காற்றில் பறந்து தரையை அடைந்த நொடி மார்த்தாண்டன் என்னவென்று உணர்வதற்கு முன் அவன் கரத்தில் இருந்த வாள் மோகினியின் வயிற்றில் இறங்கியிருந்தது.

 

மார்த்தாண்டன் கரத்தில் வாளுடன் அப்படியே உறைந்து நின்றிருக்க, ‘மோகினி’  என்று அவன் உள்ளம் அடித்துக் கொண்டது.

 

அதனை ஆசை தீரப் பார்த்த, மூத்த மகன் உடலினுள் புகுந்திருந்த வீர வேந்தனோ இதழ்களில் புன்னகையுடன் “நான் உன் தந்தை மார்த்தண்டா” என்ற வசனத்துடன் சொடுக்கிட்டவர் அப்படியே விழ, மீண்டும் அவர் உயிர் அவர் கூட்டில் மாறிக் கொண்டது.

 

அப்போது சுயம் பெற்ற மார்த்தாண்டன் கைகளில் சரிந்து விழுந்த மோகினியையும் அவளது கால்களின் நடுவே ஓடும் குறுதியின் ஈரத்திலும் “ஆஆஆஆ” என்று உரக்க ஒலியெழுப்பினான்.

 

அவளோ “வளவா, என்னைக் காப்பாற்று,  எம்குழந்தையை அழிய விடாதே!” என்ற வசனதோடு கண்களை மூட, விரைந்து செயல்பட்டவன் குழந்தையைக் காக்க எண்ணி,  குழந்தையை வெளியே எடுக்கத் தொடங்கினான்.

 

இதில் மந்திரக்கட்டில் கிடந்த தகப்பனும் நினைவில் வரவில்லை, அருகில் இருந்த யாரும் அவன் கருத்தில் பதியவில்லை. அவன் எண்ணத்தில் எல்லாம் அவனது குழந்தை தான்…

 

ஒருவழியாய் குழந்தையை வெளியே எடுக்க, குழந்தை அழவே இல்லை. மார்த்தாண்டனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.

 

குழந்தையின் இதயத்தில் கையை வைத்தவன் “ஆத்ரீக வளவா எழுந்து கொள்ளடா… உனக்கு என்றும் அழிவு இல்லை, ஆளப்பிறந்தவன் நீ… எழுந்துகொள்” என்று எத்தனை பேசியும் அடித்தும் சிறிதும் சத்தம் இல்லா சதைப்பிண்டமாய் அவன் மகன் அவன் கையில்,

 

வெறிபிடித்தவன் போல் மகன் உடலையும் மனைவி உடலையும் வைத்து ஏதேதோ செய்தான். அவன் குருதியை மகன் உடலையும் மனைவி உடலிலும் விழச்செய்தான். இப்படி ஏதேதோ செய்து கொண்டு கோரமாய் அமர்ந்திருந்தவனைப் பார்க்க வேந்தனுக்கு உண்மையில் கிலி பரவியது.

 

அவர் அப்படியே பார்த்தபடி இருக்க,  மார்த்தாண்டனின் முன்னே இருந்த இரண்டு உடலிலும் இருந்து உயிர் மட்டும் வெளியே வர, மோகினியின் உயிர் அப்படியே காற்றில் பறக்க,  மார்த்தாண்டன் எவ்வளவு தடுத்தும் அவனது மகனின் உயிர் மட்டும் வானில் கலந்து விட்டது.

 

அதில் “ஆஆஆ” என்ற கதறலுடன் தந்தையின் புறம் திரும்பியவனோ “தவறிழைத்து விட்டாய் வீரவேந்தா. மிகப்பெரிய தவறை இழைத்து விட்டாய். யாரை காக்க என்னுயிர் அழித்தாயோ அம்மக்கள் நிம்மதியாய் உறங்க அனுமதிக்கவே மாட்டேன். என் மனைவி மகன் இருவரையும் உயிர்பிப்பேன் அதுவும் உன் மக்கள் கொண்டே. இனிமேல் உன் மக்களில் பிறக்கும் ஒவ்வொரு மூத்த பெண்ணும் உன் நாக மச்சத்தைக் கொண்டே பிறப்பர், அந்த வரிசையில் என் மனைவி மோகினிக்கு உடலைக் கொடுக்கவும் ஒருத்தி பிறப்பாள். அவளை அழித்து என்னவளுக்கு உடல் கொடுப்பேன். அவள் வயிற்றிலிருந்து,  இன்று இறந்த என் மகன் மீண்டும் பிறப்பான். அவனை இவ்வுலகை ஆளவைப்பேன்” என்று உரக்க கத்தியவன் வீரவேந்தனின் தலையை ஒரே வெட்டாக வெட்டத் தலை தனியே அங்கிருந்த சிலையில் பட்டதுத் தெரித்தது.

 

அத்தனை நேரம் ஓரளவு சக்தியைத் தன்னகத்தே கொண்டிருந்த அரத்த மோகினியோ, சக்தி வாய்ந்த ஒருவரின் பலியை ஏற்று மகா சக்தியாக உறுமாறி அவன் முன்னே காட்சியளித்தாள்.

 

அவளை வணங்கி நின்றவன் “யான் கேட்ட அனைத்தும் நடந்தாக வேண்டும் தாயே” என்று கட்டளைபோல் அவன் சொல்ல, அவளும் “அப்படியே ஆகும், கூடவே சாகவரமும் உனக்கே மார்த்தாண்டா” என்று சொன்னவளோ மீண்டும்,

 

“என் மகளை விரைவில் உயிர்பித்து என் முன் கொண்டு வா. அடுத்த மகா ஆமாவாசைக்குள் உன் ஆசை நிறைவேற வேண்டும். நிறைவேறியே ஆகா வேண்டும்” என்று சத்தமிட்டு சொல்லி மறைந்தாள்.

 

இது அத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த மார்த்தாண்டனின் சகோதரனோ கண்களை மூடி “பைரவா உலகைக் காத்திடு” என்று வணங்கியவர் அப்படியே மயங்கி சரிந்திருந்தார். .

 

 

காதலைத் தேடும்…

 

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்