
காதலைத் தேடிய பயணம் 09
மார்த்தாண்டன் அரத்த மோகினியைச் சந்தித்து வந்து இதோ நான்கு நாட்கள் கடந்திருந்தது.
யாழினி அவன் கட்டுக்களைத் தாண்டிச் சென்று அங்கே கால பைரவன் கோட்டையில் இருப்பதும் அவனுக்குத் தெரியும்…
ஆனால் எதிர்வினை ஆற்றவில்லை, அவன் நினைத்தால் நொடியில் அவளை அவன் முன்னே நிறுத்தி விட முடியும் ஆனால் சந்தர்ப்பம் வேண்டிக் காத்திருந்தான்.
இந்த நான்கு நாட்களும் கண்மூடி தியானத்தில் தான் அமர்ந்திருந்தான்.
அந்த ஒற்றை மண்டையோடு அவன் இத்தனை வருட தவத்தையும் கலைத்து விட்ட கோபம் உள்ளே தீயாய் எரிந்து கொண்டிருந்தது.
நூறு வருடங்களுக்கு ஒரு முறை வரும் அந்த ஒற்றை ஆமாவாசை தான், தீய சக்தியின் மொத்த சக்தியும் பல்கிப் பெருகும் நாள். அதுக்காக அவன் காத்திருப்பும் கொடுத்த பலியும் ஏராளம்.
ஆனால் அந்த ஒரு சிறு நாழிகையில் மொத்தமும் சிதைந்து விட்டது.
ஆம் அன்று யாழினியை தூக்கி வந்த நாளன்று அவன்மீது நாய் பாய்ந்திருந்ததில் நூறு என இருந்த மண்டையோடுகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது.
அதனால், அவன் மீண்டும் செல்ல வேண்டிய அந்த ஆமாவாசை இரவு கடந்தது அடுத்த நாளிற்கே அந்தக் காட்டை அடைந்திருந்தான்.
முதலில் புரியாத மாற்றம் பின்னர் மேலே வானத்தை தலை உயர்த்திப் பார்த்தவனுக்குப் புரிந்தது.
மீண்டும் அந்த ஆமாவாசையை அடைய இன்னும் நூறு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
அது அவனால் முடியும். ஆனால் யாழினி???
அவளது உடலை இன்னும் நூறு ஆண்டுகள் அப்படியே வைத்திருக்க முடியாதே!
காலப் பயணம் செய்திருந்தாலும் அவள் சாமான்ய பெண் தானே! நிச்சயம் அவளுக்கு இறப்பு உண்டு.
அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன் தான் அன்று அரத்த மோகினி முன்னே போய் நின்றான்.
முதலில் அதிருப்தி கொண்டு அவனைப் பார்க்க முடியாமல் தவிர்த்தாலும் பின் மகளுடன் வந்த அவனைச் சந்திக்கச் சம்மதித்தாள் அரத்த மோகினி.
“மார்த்தாண்டா கைக்குக் கிடைத்த வரத்தைக் கைவிட்டு விட்டாயே!” என்று சொன்னவளைப் பார்த்தவன்,
“தாயே, எனக்கு வழி வேண்டும், நிச்சயம் வேண்டும்” என்றவனின் குரலில் அத்தனை உறுதி.
மகளுக்கு உயிர் கொடுக்க அவனையன்றி யாராலும் முடியாது என்பதை நன்கு உணர்ந்தவளாகிற்றே இந்த அரத்த மோகினி…
அவனை நோக்கி “அதற்கு மீண்டும் எண்ணிக்கை நூறாக வேண்டும் மார்த்தாண்டா” என்றாள் உள்ளர்த்தத்துடன்…
அவனோ “தாயே, அதற்குத் தான் துளியும் வாய்ப்பில்லையே! நூறு பெண்களையும் பழிகொடுத்தாகிவிட்டதே!” என்றான்.
கண்களை மூடித்திறந்து எதையோ உச்சரித்த அரத்த மோகினியின் கண்கள் மின்ன அந்தக் குகை அதிரும் வண்ணம் சிரித்தவள்,
“ஆமாம் மார்த்தாண்டா இந்த நூற்றாண்டில் இல்லை தான், ஆனால்?” என்று நிறுத்த,
மார்த்தாண்டனோ “அப்படி என்றால்?” என்று கேள்வியாய் நிறுத்தியவன், மீண்டும், “தாயே வேறு நூற்றாண்டில் தேட வேண்டும் என்கிறீர்களா? அதற்கும் வாய்ப்பில்லையே! காலப் பயணம் தான் இப்போது சாத்தியமில்லை என்றாகி விட்டதே!” என்றான்.
அவளோ இடம் வளமாகத் தலையசைத்து “யாம் தேட வேண்டியதில்லை மார்த்தாண்டா, எமக்குத் தேவையானது எம்மிடம் வந்து சேரும். அதுக்கான காலம் விரைவில் கைகூடும்” என்று மீண்டும் அந்தக் குகை அதிரும் வண்ணம் கோரச் சிரிப்பு, அது அந்தக் குகை எங்கும் பட்டு எதிரொலித்தது.
_____________________
அங்கே தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், உயரதிகாரி குமரவேலின் முன்னே நின்றிருந்தான் மித்ரன்.
அவரோ “இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே காரணம் சொல்லுவீங்க மிஸ்டர் மித்ரன், இதோ பதிமூணு வருடம் கடந்துடிச்சு இன்னும் நீங்க காரணம் மட்டும் தான் சொல்லிட்டே இருக்கீங்க. அந்த ஊருக்குப் போய்க் கஷ்டப்பட்டு நமக்குத் தேவையானதைக் கூட, நீங்க தான் கண்டுபிடிச்சீங்க என்கிறதுக்காக இவ்வளவு நாள் பொறுமையா இருந்தாச்சு, இனியும் காலம் தாழ்த்துறதுல எனக்கு இஷ்டம் இல்ல, உங்கள விடத் திறமையானவங்க இல்லையா என்ன?” என்று ஏகத்தாளமாய் அதே நேரம் கோபமாய் பேசிக்கொண்டிருந்தார்.
அவனுக்கோ ஆயாசமாய் வந்தது. இத்தனை வருடமாய் அவனும் போராடுகிறான் தான் ஆனால்??? முடிவு சாதகமானதாய் இல்லை என்னும்போது அவனும் என்ன பதில் தான் சொல்வான்.
“சார், நெருங்கிட்டேன் சார்… இன்னும் ஒரு ஆறே ஆறு மாசம் மட்டும் தந்தீங்கன்னா போதும் அப்பவும் முடியலனா நிச்சயமா நானே இதுல இருந்து விலகிடுறேன் சார்” என்றான்.
“நோ வேய் மிஸ்டர் மித்ரன், இந்த ப்ராஜெக்ட்காக எவ்வளவு பணம் வாங்கி இருக்கேன்னு உங்களுக்குத் தெரியும்ல, டென் இயர்ஸ் அக்ரிமெண்ட் தான் போட்டுக்கிட்டோம் இப்போ எக்ஸ்ட்ரா மூணு வருடம் ஆகிடிச்சு. இவ்வளவு நாள் அவங்க பொறுமையா இருந்ததே பெரிசு, இதுக்கு மேலையும் என்னால உங்களுக்கு டைம் தர முடியாது. அவங்களே ஆளு அனுப்புறதா சொல்லி இருக்காங்க, இன்னும் வன் வீக்ல மிஸ்டர் ராபர்ட் இதுக்காகவே அமெரிக்கா இருந்து இந்தியா வரார். நீங்க என்ன பண்றீங்க அவர ரிசீவ் பண்ணி எல்லாத்தையும் அவர்கிட்ட ஒப்படைச்சிடுங்க” என்றவர் வேலை முடிந்தது என்பது போல் எழுந்து கொள்ளப் பார்க்க, அவரைத் தடுத்தான் மித்ரன்.
“சார் ப்ளீஸ், அல்மோஸ்ட் எல்லாமே முடிஞ்சிடிச்சு சார். இனிமேல் இன்னொருத்தர் இத முதல்ல இருந்து பண்ணனும்னா இன்னும் காலம் தான் வேஸ்ட் ஆகும். அதுலயும் யூஎஸ்ல இருந்து வர்றவருக்கு நம்ம ஓலைச்சுவடி எப்படி புரியும்?” என்றான் கடைசி ஆயுதமாய்…
அதற்கவரோ சத்தமாய் சிரித்தபடி “அவர யாருனு நினைச்சீங்க, தமிழ்ல டாக்ட்டரேட் முடிச்ச சயின்டிஸ்ட் அவரு… நம்ம நாட்டோட வரலாறு நம்மள விட வெளிநாட்டுல இருக்குறவங்களுக்கு அத்துப்படி, அதிகமா பேசாம சொன்னத செய்ங்க” என்று அங்கிருந்து அகன்றவர் மீண்டும் அவன் புறம் திரும்பி,
“அப்பறம் மித்ரன் நீதி நியாயம்னு இதப்பத்தி வேற யார்கிட்டயும் சொல்லணும்னு நினைச்சீங்க, அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை, என்னோட சேர்ந்து நீங்களும் தான் கம்பி எண்ணனும் நினைவு இருக்குல்ல” என்றவர் ஒரு கோணல் சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார்.
காலப்பயணம் தொடர்பான ஓலைச்சுவடி காலபைரவன் கோட்டையில் இருப்பதாக முதலில் அறிந்து கொண்டது மித்ரன் தான். அவனும் அதனைக் குமரவேலிடம் சொல்லிருக்க, அவரோ சில நாட்களிலே அமெரிக்காவிலிருக்கும் அவரது ரகசிய வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்தி இருந்தார்.
இங்கே ஏதாவது வித்தியாசமான பொருள் கிடைத்தால் அதனை மறைமுகமாக அவரிடம் கொள்ளைக் காசுக்கு விற்பது குமரவேலின் வழக்கம். அப்படி இருக்கையில் இதனை விட்டு வைப்பாரா என்ன?
அப்படி அவர் மூலமாகப் போடப்பட்டது தான் அந்த ஒப்பந்தம். கண்டெடுத்து அது உண்மையாகும் பட்சத்தில் அது அவர் உடமை என்பது தான் ஒப்பந்தத்தின் சாரம்சம்.
அரசாங்கத்துக்குத் தெரியாமல் செய்யும் ரகசிய ஆய்வு என்பதால் கணிசமான தொகையும் கைமாறப்பட்டிருந்தது.
வேலையில் சேர்ந்த ஆரம்பகட்ட காலத்தில், வேலை மீதிருந்த ஆர்வத்திலும் இளமை துடிப்பிலும், எப்படியும் சாத்தியமே இல்லாத விடயம் என்று எண்ணித்தான் மறைமுகமாக இந்த ஒப்பந்ததில் இவனும் கையெழுத்திட்டிருந்தான்.
இளமைத் துடுக்கில் ஒரு ஆர்வதில் ஆமென்று விட்டான் தான் ஆனால் பணம் என எதையும் அவன் தொடவில்லை, அதற்கு அவன் மனமும் ஒப்பவில்லை, குமரவேலும் வந்தவரை லாபம் எனக் குதூகளித்துத் தான் போயிருந்தார்.
இப்போதும் காலப்பயணம் கைகூடவில்லை தான், ஆனால் ஆரம்பத்தில் இருந்த அலட்சியம் இப்போது அவனிடம் இல்லை, நிச்சயம் சரியான வழியில் போனால் நடக்கும் என்பது, கடந்த இத்தனை வருடத்தில் அவன் மனதில் ஆணியாய் பதிந்து போன உண்மையும் கூட…
இடைப்பட்ட வருடத்தில் ஒப்பந்தத்தை முற்றிலுமாய் மறந்தே போயிருந்தான். ஆனால் இப்போதுதான் நிதர்சனம் புரிந்தது அவனுக்கு…
நடக்காது என்று எண்ணி இருந்த நேரம் அசட்டையாய் விட்டவனால் இப்போது விட முடியவில்லை…
வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என்றிருக்கும் பொக்கிஷம், கெட்டவர்கள் கையில் சிக்குவதா?? எப்படியும் தடுத்தே ஆக வேண்டும் என்பது மண்டையை குடைந்தது அவனுக்கு.
அதற்கு ஒரே வழி இந்த ஒரு வாரத்தில் அதனை அவன் செய்து முடிப்பது மட்டுமே! வேறு எந்த வழியும் இருப்பதாய் அவனுக்குத் தெரியவில்லை.
காதலுக்காக இத்தனை வருடமாகப் போராடுகிறான். இப்போது காதலுடன் உலக நலனுக்காகவும் போராட வேண்டும் என்கையில் இந்தப் போராட்டம் வெற்றியில் முடியுமா???
இப்படி காலப்பயணம் உண்மையாகிப் போகும், அதில் தனக்கு அவசியம் ஏற்படும் என்றெல்லாம் அவன் கனவிலும் எண்ணி இருக்கவில்லை.
ஆனால் ஏற்பட்டு விட்டதே! ஆம் அவசியம் தான். காரணம் அவனவள், அவனை விட்டு எங்கோ சென்றவளைத் தேடியாக வேண்டிய தேவை அவனுக்கு…
அப்படியே கால் போன போக்கில் நடந்தவனது கால்கள் இளைப்பாற எண்ணியதோ என்னவோ? அவை தன்னால் அங்கிருந்த பூங்கா ஒன்றின் உள்ளே நுழைந்து அமர்வதற்காகப் போடப்பட்டிருந்த இருக்கையின் முன் போய் நின்றது.
அவனையறியாமலே அதில் அமர்ந்து கொண்டவனது எண்ணங்கள் மொத்தமும் அவனவள் மீது தான்…
“எங்கடி போன என்ன விட்டுட்டு, எங்கயோ போய் ஒளிஞ்சிக்கிட்டு என்ன இத்தன வருசமா தவிக்க விட்டுட்டல்ல, நேர்ல மட்டும் மாட்டு அப்போ இருக்கு உனக்கு” என்று இயலாமையுடன் ஆரம்பித்து, கோபமாய் பேசியவன் இறுதியில் மீண்டும் மானசீகமாக எப்போதும் அவளிடம் கேட்கும் கேள்வியையே இன்றும் கேட்டு வைத்தான்.
“எங்கடி பட்டு இருக்க?”
__________________________
“இங்க இருக்கேன்” என்று குரல் கொடுத்த யாழினி முன்னே ஓடும் அருவியை வெறிக்கத் தொடங்கினாள்.
அவள் அருகில் வந்த பூவிழியோ “இங்கே தான் இருக்கின்றாயா யாழினி, மதிய ஆகாரம் கூட எடுத்துக்கொள்ளாமல் இங்கே என்ன செய்கிறாய்?” என்றபடி அவளும் அருகில் அமர்ந்தாள்.
“பசிக்கல பூவிழி” என்பதோடு பதிலை முடித்துக் கொண்டாள் யாழினி…
அவளது மனநிலை பூவிழியால் புரிந்து கொள்ள முடிந்தது. பெரிய மூச்சொன்றை எடுத்துக் கொண்டவளோ,
“விரைவில் இடர் தீரும் யாழினி, எதையும் எண்ணி வருந்தாதே! அந்தப் பைரவன் உனக்குத் துணையிருப்பான்” என்றவள் யாழியின் கையில் அழுத்தம் கொடுக்க,
அந்த அழுத்தம் அவளுக்கு எதனை உணர்த்தியதோ அப்படியே தன்னருகே அமர்ந்திருந்த பூவிழியின் மடியில் சாய்ந்து கொண்டாள் யாழினி.
தன் மடி மீது சாய்ந்திருந்தவளின் தலை கோதியவள் “இப்படி ஆகாரம் அருந்தாமல் இருந்தால் இடர் தீரும் என்றால் யாம் எப்போதோ மோட்சம் பெற்றிருக்க வேண்டும் யாழினி. ஒவ்வொருவர் வாழ்விலும் சோதனை கடவுளால் விதிக்கப்படிருக்கும், அதிலிருந்து நிச்சயம் மீள முடியும். யாம் இத்தனை ஆண்டுகளாய் காத்திருக்க வில்லையா? பொறுமை கொள் நிச்சயம் வழி பிறக்கும்” என்றாள் புன்னகையுடன்…
அவள் வார்த்தைகளில் தெரிந்த ஏதோ ஒன்று யாழினியை வாட்ட, “என்னாச்சு பூவிழி? இங்க என்னதான் பிரச்சனை? யார் அந்த மார்த்தாண்டன்? அவன் எதுக்கு என்ன அழைச்சிட்டு வரணும்?.. அவனால தான் உங்களுக்கும் பிரச்சனையா?” என்று தொடர் கேள்விகளுடன் எழுந்தமர்ந்தாள்,
கடந்த நாட்களாக இங்கே அவளுக்குத் தோன்றிய சந்தேகத்தைத் தெளிவு படுத்த எண்ணி…
பூவிழியோ “அது மிக நீண்ட கதையாகிற்றே! நீ இன்னும் ஆகாரம் அருந்தவில்லையே பின் எப்படி கூறுவதாம்?” என்றாள் கேலியுடன்…
யாழினியோ, “கதை கேட்டுட்டு நிச்சயம் சாப்பிடுறேன் இப்போ சொல்லேன்” என்றாள் கெஞ்சலுடன்…
பூவிழியோ, தன் புதிய தோழியின் மனம் கவலையிலிருந்து சிறுது நேரம் மாறும் என எண்ணி சொல்ல ஆரம்பித்தாள்.
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…


