
காலம் தாண்டிய பயணம் -08
அன்றைய நாள் முழுவதும் அறைக்குள் தான் மித்ரனின் வாசம். இன்றென்று இல்லை இது ஒவ்வொரு ஞாயிறும் நிகழ்வது தான்.
மனதை அழுத்தும் பாரத்துக்கும் காதலுக்கும் இடையில் தவிப்பவன் அவன். தன் காதல் மனைவி தன்னுடன் இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் இன்றளவிலும் போராடுகிறான்.
தேவ் மித்ரன், வயது தற்போது தான் நாற்பதைத் தொடவிருக்கிறது. ஆனால் இருபத்தைந்து வயதுப் பையனின் அப்பா அவன்!
தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறான். எதையோ ஒன்றைத் தேடி ஆரம்பித்த அவன் பயணமானது கடந்த பதின்மூன்று வருடமாக வேறொன்றின் தேடலில் முற்றுப் பெறாமல் தொடர்கிறது.
அவன் முன்னே மேசையில் ஒரு பொருள் இருக்க, அதையே பார்த்துக் கொண்டிருந்தவனது மூளை எதையெதையோ யோசித்துக் கொண்டிருந்தது.
கூடவே கரங்களில் பழைய காலத்து ஓலைச்சுவடி ஒன்று இருக்க, அதில் உள்ளவற்றை இன்றும் லட்சம் தடவையாகப் படிக்கத் தொடங்கினான்.
அவன் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளன் என்கையில், அதில் உள்ளவற்றை படிப்பது அவனுக்கு ஒன்றும் சிரமமில்லையே!
‘உடையவனின் செந்நீர் உயிரில் இணைந்து நனைந்த அணி,
இடர் தீர்க்கும் ஆயுதமாய் மாற, பெட்பு வரமாய் கரங்களில் சேரும்’
இந்த வசங்களை புரிந்து கொள்வதில் முக்கால்வாசியை கடந்துவிட்டான்.
ஆனால் அந்த முதல் வரியில் யார் அந்த உடையவன்? என்பது இன்றளவிலும் புரியவில்லை…
அவன் உதிரம் கொண்டு சோதித்துப் பார்த்தாகி விட்டது, அது சரியாக வர வாய்ப்பில்லை என்று அறிந்திருந்தாலும் முயற்சி எடுத்துப் பார்த்ததில் எதிர்பார்த்த பதில் தான் வந்தது. கூடவே மகிழுடையதை சோதித்தாலும் பதில் என்னவோ பூச்சியம் தான்.
அவனும் யாரென்று அடியும் தெரியாது நுனியும் தெரியாது யாருடையதைத் தான் சோதிப்பான். எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடக்கிறதே என்ற இயலாமை அவனுள்…
அப்படியே அமர்ந்திருந்தவனைக் களைத்தது என்னவோ அழைபேசி ஒலிக்கும் ஓசை தான்.
அது யாரென்றும் அவன் அறிவான். உயிர்ப்பித்துக் காதில் வைக்க அந்தபக்கம்,
“மித்து விடிஞ்சிடிச்சு, கதவத் திற வெளியே தான் இருக்கேன்” என்றான் மகிழ், இன்னதென்று பிரித்தறிய முடியா உணர்வு குவியலுடன்…
தேவ் மித்ரன் வெளியே வர, அவன் முக வாட்டமே அவன் தூங்கவில்லை என்று மகனுக்கு எடுதுரைத்தது.
“ப்பா, என்ன இது?” என்றவனுக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தான் தெரியவில்லை, தந்தையின் வலி, போராட்டம் எல்லாம் இத்தனை வருடங்களில் அவன் அறியாததா?
அவனும் அவன் பங்குக்கு முயற்சித்துக் கொண்டுதானே இருக்கிறான். அதுவும் தந்தைக்கே தெரியாமல், தெரிந்தால் அனுமதிக்க மாட்டான் என்பது சர்வ நிச்சயம். அதனால் இவனும் காட்டிக்கொள்ளவில்லை.
மித்ரனோ மகன் கவலைப்படுவது பொறுக்காமல் “ஐ எம் ஓகே யாழ், ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்” என்றவன் அந்த அறையைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
போகும் தந்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கோ, மித்ரனின் தந்தையுடைய தோழரும், மகிழின் மருத்துவமனை டீனுமான ராமமூர்த்தி சொன்னவையே ஓடிக்கொண்டிருந்தது.
“லிசன் மகிழ், தேவ் இப்போலாம் ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கான். எவ்வளவு நேரம் தூங்குறானான்னு கூடத் தெரியல, ஐ திங் ரொம்ப குறைவுனு நினைக்கிறேன். இப்படியே இருகிறது நல்லதில்லை, அவன் ஸ்ட்ரோங் பெர்சன் தான் பட், இப்படி தூக்கத்தை கெடுத்துகிட்டா எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்தாலும் மெண்டல் ஹெல்த்த பாதிக்கிறது மட்டுமில்லாம, எட் தீ சேம் டைம் அவன் உடம்பையும் பாதிக்கும். இத ஒரு டாக்டரா மட்டுமில்லாம அவனுக்கு அப்பா ஸ்தானத்துல இருந்தும் சொல்ல வேண்டியது என் கடமை பாத்துகோப்பா” என்றிருந்தார்.
அப்போதே முடிவெடுத்துவிட்டான் தந்தையை இன்னும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை…
அதன் முதல் படி அவனது தேடல், அதனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் அவனிடம் சேர்க்க வேண்டும், அது நிச்சயம் இலகுவான காரியம் இல்லை என்பது அவனறிந்தது தான். ஆனால் தனக்காக எவ்வளவோ செய்த தந்தைக்காக இயற்கையுடனே போராட முடிவெடுத்திருந்தான் மகிழ் யாழன்.
அடுத்த அரைமணி நேரத்தில் மித்ரனும் தயாராகி வர, மகன் தந்தை இருவரும் அமைதியாகச் சாப்பிட அமர்ந்தனர். இன்றும் இனியா தான் சமையல் செய்திருந்தாள்.
முன்னரும் மகன் தந்தை இருவரும் மாறி மாறிச் செய்து கொள்வர் தான். இருவருக்கும் சமையல் தெரியும் என்பதால் சிரமம் இருந்ததில்லை.
ஆனால் இன்று அவளாகப் பிரியப்பட்டு செய்கையில் அவள் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவளை அவள் விருப்பபடி அங்கே இருக்க விட்டனர் ஆண்கள் இருவரும்.
அவளும் மௌனமாய் பரிமாற, அவளைக் கண்ட மித்ரனோ, “குட் மோர்னிங் டோல்” என்றான்,
அவளும் புன்னகைதவள், “குட் மோர்னிங் அண்ணா” என்றாள் மென் குரலில்,
அவன் அவளை இயல்பாக ‘டோல்’ என்று அழைக்கிறான். அவனுக்கு ஏனோ அவளை அப்படிதான் அழைக்கத் தோன்றியது. அதில் இருக்கும் அன்பை அவளாலும் உணர முடிந்தது. அன்புக்காக ஏங்கியவளுக்கு அதன் அருமை புரியாமல் போகுமா என்ன?
தன்னை ‘அங்கிள்’ என்று அழைக்கும்படி மித்ரன் இத்தனை நாட்களில் சொல்லி இருந்தாலும் அவளுக்கு இயல்பாக அழைக்க வரவில்லை, அவனைப் பார்த்தாள் அங்கிள் போலவா இருக்கிறான். அவளுக்கோ ‘அண்ணா’ என்று தான் அழைக்க வந்தது.
இதில் கடுப்பானது என்னவோ மகிழ் தான்.
என்றும் போல இன்றும் அவளை மனதுக்குள்,
‘அண்ணாவாமே, இவள நாம வைஃப் ஆக்கலாம்னு பார்த்தா இவ நம்மள மருமகனாக்குறாளே! விடாதடா மகி, கடையச் சாத்து’ என்று எண்ணியவன்,
அவளிடம் “என்ன எப்போ பாரு அண்ணாங்குற, அவர் எனக்கு அப்பா தெரியும்ல, என்ன விடச் சின்னப்பொண்ணு நீ அவர அண்ணாம்பியா? மரியாதையா அங்கிள்னு கூப்பிடு இல்லனா மித்துனு கூப்பிடு இன்னொருவாட்டி அண்ணான்னு கூப்பிடுறத பார்த்தேன் தொலைச்சிடுவேன்” என்றான் கோபமாக,
அதில் அவள் மிரள, மித்ரனோ “டேய் யாழ் பாவம் விடு, இதுக்கெல்லாம் மிரட்டுவியா? டோலுக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அவ அப்படியே கூப்பிட்டுகட்டும்” என்றான்.
மகிழோ ‘இவர் ஒருத்தர் என்னன்னே புரியாம இடைல வர்றாரே’ என்றெண்ணியவன்,
“மித்து, எதையும் சரியா பண்ணணும்ல, விடு இனி அவ அங்கிள்னு கூப்பிடுவா” என்று இனியாவைப் பார்த்தவனது பார்வையில், ‘நிச்சயம் நீ அப்படிதான் அழைக்க வேண்டும்’ என்ற கட்டளை தான் ஒளிந்திருந்தது.
சிறிது நேரத்தில் மௌனமாகச் சாப்பிட்டு முடித்த ஆண்கள் இருவரும் வேலைக்குக் கிளம்பி இருந்தனர். அதன் பின் இனியாவிற்கோ தனிமை தான்.
இருந்த கொஞ்சப் பாத்திரங்களைக் கழுவி வைத்து, எப்போதும் போல் மௌனமாய் சோபாவில் அமர்ந்து கொண்டவளுக்கு விஜயாவின் எண்ணம் தான்.
‘அங்கே தனிமையில் என்ன செய்வாரோ?’ என்ற எண்ணம் தான் அவளை வாட்டியது. அங்கே வீட்டில் இவர்கள் இருவரும் தானே ஒருவருக்கு ஒருவர் ஆதரவு…
“பைரவா, அண்ணிக்கு நல்லா படியா குழந்தை பொறக்கணும், அவங்க ரெண்டு பேரும் நீண்ட ஆயுளுக்கு எந்த நோய் நொடியும் இல்லாம நல்லா வாழனும்” என்று வாய்விட்டே வேண்டுதல் வைத்தாள்.
அவளால் இப்போது செய்ய முடிந்தது அது ஒன்று தானே!
இங்கே இவள் இப்படி என்றால் அங்கே விஜவின் நிலை சற்று மோசம் தான்.
சாதாரண நேரம் என்றாலே வள்ளியின் வாயில் தேள் தான் குடியிருக்கும். அதிலும் இப்போது எல்லாம் கைமீறிப்போன அவமானத்தில், கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடாத குறைதான்.
இனியா வீட்டை விட்டுச் சென்ற நாளிலிருந்து விஜயாவிற்கு நரகம் என்றே சொல்ல வேண்டும். அது கூட இதைவிட நன்றாக இருக்குமோ என்னவோ?
அவள் தலைப் பிரசவத்துக்கு தன் வீட்டுக்குச் செல்ல அத்தனை ஆர்வத்துடன் தான் காத்திருந்தாள், ஆனால் அந்தச் சந்தோசம் கூட வள்ளியால் பறிக்கப்பட்டிருந்தது.
இவளன்றி யாரால் இனியாவிற்கு உதவியிருக்க முடியும், அது தெரியாதவர்களா?? அந்த வீட்டினர் தான் கடைந்தெடுத்த கேடுகெட்டவர்கள் ஆகிற்றே…
இதோ இன்றும் முரட்டுக் காளை காசிநாதனின் வீட்டுக்கு வந்திருந்தான்.
“ஏலேய் பெரிய மனிசா வெளியே வாயா” என்று வாசலில் அவன் குரல் சத்தமாய் அதே நேரம் குழறலாய் ஒலித்தது.
அந்தக் காலை நேரமே மதுவின் பிடியில் திளைத்திருந்தான். சற்று முன்னர் தான் மாதுவின் பிடியிலிருந்து மீண்டிருக்க, நேரே இங்கயே வந்துவிட்டான்.
கடந்த சில நாட்களாக இதுவே வாடிக்கையாகிப் போனது.
சத்தம் கேட்டு வெளியே வந்த வள்ளியோ வாயிலில் நிறைந்திருந்த கூட்டத்தைப் பார்த்து “டேய் காளை வீட்டுக்குள்ள வாடா பேசிக்கலாம்” என்றார்.
அவனோ “என்ன பேசப் போற, எங்க உன் புருஷன் அந்தாள வரச்சொல்லு” என்றான் இன்னும் சத்தமாக, அது உள்ளே அமர்ந்திருந்த காசிநாதன் காதிலும் நன்கு விழுந்தது.
அவருக்கோ அவமானத்தில் முகம் கருத்துப்போனது. ஊரில் எத்தனை மரியாதையாக வாழ்ந்தவர் அவர்…
இப்படி மரியாதை இல்லாம பேச வைத்து விட்டாளே என்று இனியாவின் மீது கட்டுக்கடங்காத கோபம்.
இப்போது கண்டாலும் அவளை வெட்டிப்போடுமளவுக்கு அவருக்கு ஆத்திரம் நெஞ்சுக்குள் வெதும்பிக் கிடந்தது.
ஆணவக்கொலைகள் கோழைகளின் ஆயுதமன்றோ??
அவர்களால் வேறு எதனைச் சிந்தித்திட முடியும். தங்களை பேசி நியாயப்படுத்த முடியாதவர்கள் எதிர்ப்பவரை அழிப்பது இன்று நேற்றா நடக்கிறது.
வெளியே நின்றிருந்த வள்ளியோ “டேய் எதுவா இருந்தாலும் உள்ள வாடா பேசிக்கலாம். உன் மாமாவ ஊருக்கு முன்ன அவமானப்படுத்துவியா? மரியாதையாப் பேசு” என்றார் அவனைக் கண்டிக்கும் குரலுடன்…
“யாரு அந்தாளுக்கு மரியாதையா? பெரிய மனிசன்னா சொன்ன சொல்லக் காப்பாத்தணும், அதுதான் அவனுக்குச் சுட்டுப்போட்டாலும் வராதே! ஒன்னுக்கு ரெண்டு தடவ ஏமாந்த எனக்குத் தெரியாதா?” என்றான் எகத்தாளமாய்.
வள்ளியால் தான் என்ன பேசிட முடியும் அவன் சொல்வதும் நிஜம் தானே! மகள்மீதும் கணவன்மீதும் கட்டுக்கடங்காத கோபம் தான் பீரிட்டது அவருக்கு…
“டேய் காளை” என்று விம்மிய குரலில் அழைக்க,
அவனோ “நீ எதுக்குக்கா அழற, கூப்பிடு அந்தாள” என்று கத்திக் கொண்டிருக்கையில் குடும்பமே வெளியே வந்தது.
காசிநாதனோ குரலைச் செருமியவர் “என்ன காளை இது வீட்டுக்கு முன்ன சத்தம் போட்டுட்டு இருக்க” என்றார் பல்லைக் கடித்துக் கோபத்தை அடக்கியபடி…
“எங்க உன் மவ, அந்த ஓடுக்காலிய ஒரு வாரத்துல கூட்டிட்டு வந்துடுவேன்னு பெரிசா பேசிட்டு போனியே இப்போ என்னடான்னா வீட்டுக்குள்ள அடஞ்சி கெடக்குற” என்றான் படு நக்கலாய்…
“இப்போ உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு இப்படி பிரச்சனை பண்றீங்க?” என்றான் ரத்னவேலு.
“அடடே! மாப்பிள்ளை நீயா?” என்று பொய்யாய் ஆச்சர்யம் காட்டி,
“நீ இன்னும் ஓடிப்போகலையா?” என்று கேட்டவன்,
மீண்டும் அவனே “அதுசரி நீ ஆம்பளையா போய்ட்டியே, இல்லனா நீயும் ஓடிப்போயிருப்ப” என்றான்.
காசிநாதனுக்கோ அப்படியே மண்ணில் புதைந்து விட மாட்டோமா என்றிருந்தது.
மரியாதை மரியாதை என்று வாழந்தவருக்கு இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லலை, வாழ்க்கையில் இரண்டாவது பெரிய அடி.
கிரிதரனோ “மாமா, இது நம்ம வீட்டு விஷயம், வீட்டுக்குள்ள வாங்க பேசிக்கலாம்” என்றான் நிலைமையைச் சுமூகமாக்கும் பொருட்டு…
அவர்களுக்கும் வேறு வழி இல்லையே! எப்படியாவது ஓடிப்போனவளைக் கண்டுபிடிக்கலாம் என்று, கடந்த இத்தனை நாட்களாக முயன்றும் பதில் என்னவோ பூச்சியம் தான்.
இப்போது முரட்டுக்காளையோடு சமாதானமாகச் செல்வதே புத்திசாலித்தனம் என்பதை அவன் அறிவான்.
காளையோ “எதுடா நம்ம குடும்பம், ஒன்னு விட்டேன்னா மூஞ்சி அந்தப் பக்கம் திரும்பிக்கும், ஓடிகாளிகளையே பெத்துகிற குடும்பம் என் குடும்பமா? முதல்ல ஒருத்தி ஓடிப்போனாளே அப்போவே உங்கள எல்லாம் வெட்டிப் போட்டிருக்கணும்” என்று கிரிதரனை நோக்கிப் பேசியவன்,
காசிநாதனிடம் “என்ன மாமோய், உன் குடும்பத்துல வேற சின்னப் பொண்ணுங்க இல்ல போலயே, இல்லனா இந்த நேரத்துக்கு அதைக் கட்டித் தருவேன்னு சத்தியம் பண்ணி இருப்பியே” என்றவனின் பார்வை சட்டென விஜயாவின் மணி வயிற்றில் பதிந்தது.
மீண்டும் காசிநாதனை நோக்கியவன் “ஒருவேள உள்ள இருக்குறது பொண்ணா இருந்தா அத பண்ணி இருப்பியோ என்னவோ, பையனா போனதுனால வாய மூடிட்டு நிக்கிற” என்றவன் இத்தனை நேரம் குழறாலாய் பேசியதில் இருந்த சொற்ப சக்தியும் வடிந்து போக, போதை மயக்கத்தில் அங்கேயே சரிந்து விழுந்திருந்தான்.
அப்போதுதான் வள்ளிக்கும் அவர் மகன்களுக்கும் அப்பாடா என்றிருந்தது.
காசிநாதனோ விருட்டென வீட்டின்னுள் நுழைய, மற்றவர்களும் நுழைந்து கொண்டனர்.
முரட்டுக்காளையை உள்ளே அறையில் படுக்க வைத்துக் கிரிதரனும் அவ்விடம் வர, காசிநாதனோ கோபமாய் பேசத் தொடங்கினார்.
“ரத்னா, நீ என்ன செய்வியோ தெரியாது அந்த நாய எப்படியாவது கண்டுபிடி, அவளை வெட்டிப் போட்டா தான் என் மனசு ஆரும், அந்த ஓடுக்காலி நாய் போனப்பவே தேடிப் பிடிச்சு வெட்டி இருந்தா இந்த நாய்க்கு ஓடத் தைரியம் வந்திருக்குமா?” என்றார் கட்டுக்கடங்காத கோபத்துடன்…
அவனோ “அப்பா நம்ம ஆளுங்கள விட்டுத் தேட சொல்லி இருக்கேன்ப்பா, எல்லா இடமும் தேடுறாங்க கண்டிபிடிச்சிடலாம்” என்றவன் மனைவியை முறைக்கத் தவரவில்லை.
உதவியது அவள் தான் என்று அங்கு அனைவருக்கும் தெரியும். எப்படிக் கேட்டும் அவளிடம் பதில் இல்லை, அடித்துக் கூடப் பார்த்து விட்டான். வாயைத் திறப்பேனா என்றிருப்பவளிடம் என்ன தான் சொல்வது.
நிறை மாத வயிற்றுடன் இருப்பவளிடம் ஒரு கட்டத்துக்கு மேல் கோபத்தைக் காட்ட முடியாமல் அவளைப் பார்வையாலேயே எரித்துக் கொண்டிருக்கிறான்.
காசிநாதனோ “ம்ம்ம், நம்ம ஆளுங்க ஐம்பது பேர சேர்த்து அனுப்பு, கூடவே அவளையும் தேடச் சொல்லு” என்றபடி எழுந்து சென்றிருந்தார். அவர் சொல்லிச் சென்ற அவள் யாரென்றும் அவனுக்குத் தெரியும்.
தேடும் அவர்களுக்கு வேண்டியது கிடைக்குமா????
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…


