Loading

காலம் தாண்டிய பயணம் 07

 

 

இதோ இனியா தேவ் மித்ரன் வீட்டுக்கு வந்து நான்கு நாட்கள் கடந்திருந்தது.

 

அந்த மருத்துவமனை வளாகமே அத்தனை பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

 

ஆனால் அந்தப் பதட்டம் தன்னை தொற்றாது என்பது போல அவனுக்கான அறையில் மௌனமாய் அமர்ந்திருந்தான் மகிழ் யாழன்.

 

அந்த மருத்துவமனையின் மருத்துவர்களில் அவனும் முக்கியமானவன். இன்று அவன் உடல் மட்டும் தான் இங்கே வந்ததே ஒழிய, மனம் மொத்தமும் அங்கே அவனது வீட்டில் இருப்பவளிடம் தான்.

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்த, அவனுக்குக் கீழே பணி புரியும் தாதியும் அவனது தோழியுமான ஷில்பா,

 

‘என்னாச்சு இவனுக்கு, இந்த மூணு நாளா மந்திரிச்சு விட்ட போலவே சுத்துறான், நம்ம ஊருக்குப் போன கேப்புல ஏதோ சம்பவம் நடந்திருக்கு’ என்று எண்ணியவள் அவன் மண்டையில் ஓங்கி ஒன்று வைக்க, மகிழின் மனம் தன்னால் நிகழ்வுக்கு வந்தது.

 

“ஏன்டி எரும இந்தக் கொலவெறி, உன்ன எங்கிட்ட விட்டுவிட்டு, உன் ஆளு அங்க மத்த நர்ஷுங்க கூட ஜாலியா சுத்துறான்” என்றான் வலித்த தலையைத் தடவிய படியே…

 

“அவன் தான கிழிப்பான், சொந்த மாமன் பொண்ணு எங்கிட்ட லவ் சொல்லவே மூணு வருஷம் ஆச்சு, இதுல மத்தவங்க கூட ஜாலியா பேசிட்டாலும் அவன் எல்லாம் பேசன்ட் கிட்ட எப்படித்தான் பேசுறானோ?” என்றவள்,

 

மீண்டும் “அதெல்லாம் விடு, நீ சொல்லு என்ன மேட்டரு?” என்றாள் ஒற்றை கண்ணைச் சிமிட்டி…

 

“என்ன மேட்டர்? ஒன்னுமில்ல அடுத்த பேசன்ட்ட வரச்சொல்லு, சும்மா வெட்டிக் கதை பேசாம” என்று பேச்சை மாற்ற, அவளோ கரத்தை நெஞ்சுக்கு குறுக்கே கட்டியவள் அவனையே தீர்க்கமாய் பார்த்திருந்தாள்.

 

அந்த நேரம் சரியாக மகிழனின் நண்பனும், ஷில்பா சற்று முன் பாராட்டிய அவளது காதல் கணவனுமான அசோக் “ஷில்லு ஜூஸ் குடிக்கிற டைம் ஆச்சுடி” என்றபடி உள்ளே நுழைந்திருந்தான்.

 

அவனது சத்தத்தில் இருவரும் திரும்பிப்பார்க்க,

 

அவனோ, மேடிட்ட வயிற்றுடன் நண்பனை முறைத்துக் கொண்டிருக்கும் மனையாளைப் பார்த்து “என்ன ஷில்லு விசாரணை? சார் மறுபடியும் அவரோட ஸ்பைசி புராணத்த தொடங்கிட்டாரா?” என்றவனை முறைத்த மகிழோ, கண்களாலேயே அவனை மிரட்டினான்.

 

அதில் சிரித்த அசோக்கோ, “அடேய் ரெண்டு வருஷமா நாங்க கேக்குறது பத்தாதுன்னு எங்க பேபியையும் கேக்க வெச்சு கொடும படுத்துற பாத்தியா, அதுக்கே உன்ன அடி வெளுக்கலாம். ஆனா என்ன பண்றது, ஃபிரண்ட்டா போய்ட்டியே! அதனால மன்னிச்சு விடுறேன் தப்பிச்சு போ, வா ஷில்லு நாம போகலாம்” என்றான்.

 

அவளோ கணவனின் புறம் திரும்பியவள் “என்ன சார் உங்க ஃபிரண்ட்ட காப்பாத்த ட்ரை பண்ணியாச்சா?” என்றாள் உங்களை நான் அறிவேன் என்பதைப் போல, அதன்பின் அசோக்  வாயைத் திறக்கவில்லை…

 

மீண்டும் மகிழிடம் “என்ன சார் நீங்களா சொல்லுறீங்களா இல்ல நானா தெரிஞ்சிக்கடுமா?” என்றாள்.

 

மகிழோ, இனியும் மறைக்க முடியாது என்பதை உணர்ந்தவன் இனியாவை கண்டது முதல் அவன் அறிந்தவற்றைச் சொன்னான். அதில் மித்ரனாய் அனுமானித்த இனியாவின் இல்லாத காதலும் அடக்கம்.

 

அமைதியாய் கேட்டவளோ “சோ அவ இன்னொருத்தர லவ் பண்ணி ஏமாந்திருக்கா ரைட்?” என்றாள் கேள்வியாக,

 

மகிழோ “எப்படி இருந்தாலும் அவ என் ஸ்பைசி ஷில்பா, இனிமேல் அப்படி பேசாத, அந்த லவ் கூட அவ எங்கிட்ட வரணும் எங்கிறதுக்காகத் தானா இருக்கும்” என்றான் குரலில் அத்தனை உறுதியுடன், அவள் அப்படி பேசியது கூட அவன் மனதை அறிய எண்ணித்தானே!

 

“ஓகே, நீ தெளிவா தான இருக்க. அப்பறம் என்ன டென்ஷன் மகி?” என்றாள் அவனிடமே, அவள் தான் கடந்த மூன்று நாளாய் அவனைப் பார்க்கிறாளே…

 

“சொல்லத் தெரியல ஷில்பா, இத்தன நாளா பார்ப்போமான்னு ஏங்கித் தவிச்ச உருவம் இப்ப என் கண் முன்னாடி இருக்கு, ஆனா எனக்குச் சொந்தமா இல்லையே! அவள விட்டுத் தள்ளி நிற்க முடியலடி, எதோ என்னை மீறி அவளை நெருங்கிடுவேனோன்னு ஒரு பயம். அவளுக்கு என்ன ஞாபகமே இல்லை, யாரையோ பாக்குற மாதிரி பயந்து பார்த்து வைக்கிறா. அப்போலாம் கோபமா வருது… இதுல பொம்மிக்கு பயந்து வேற ஒதுங்கிக்கிறா, நீயே சொல்லு நான் என்னதான் பண்ண?” என்று அவனது அத்தனை குழப்பத்தையும் அவளிடமே இறக்கி வைத்தான்.

 

இத்தனைக்கும் அசோக் தான் அவன் நண்பன், அவன் மூலம் தான் ஷில்பாவைத் தெரியும். இருந்தும் தனியே வளர்ந்தவனுக்கு ஷில்பா தங்கையாகிப் போக இன்னும் உறவு வலுப்பெற்றிருந்தது.

 

“இங்க பாரு மகி, ரெண்டு வருஷத்துக்கு முதல் பார்த்த உன்ன அவ ஞாபகம் வெச்சிருக்கணும்னு யோசிக்கிறது பிராக்டிகல் இல்லன்னு உனக்கே தெரியும்.  இப்படியே அவள விட்டு விலகி ஓடுனா உன்ன எப்படி அவளுக்குப் புரியும், கொஞ்சம் ஃபிரண்ட்லியா பேசு. உன்ன, உன் ப்ரசென்ஸ்ஸ அவ உணரனும். அதுக்கப்பறம் தான் காதல் உரிமை எல்லாம். பொண்ணுங்களுக்குத் தேவப்படுறது எல்லாமே கம்ஃபோர்ட்னெஸ் தான். அத முதல்ல அவளுக்குக் கொடு, தன்னால போகப் போக எல்லாம் சரி ஆகும். அவளை உன்கிட்ட கடவுள் கொண்டு வந்து சேர்த்ததே பெரிய விஷயம் தான், ஐ நோ. பட் அதுக்காக உன்னோட ரெண்டு வருஷ காதல நாலு நாளுல அவ மேல திணிக்க முடியதுல? கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரியா வரும் ஓகே” என்றவள் முடிக்க அசோக் அவள் முன்னே ஜூஸை நீட்டி இருந்தான்.

 

அதுவோ சினிமா காட்சிகளில் வரும் கேலி போல் இருந்ததில் மகிழ் சிரித்துவிட, ஷில்பாவோ கணவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

“அட நான் என் பேபிக்கு மூச்சு முட்டும்னு கொடுத்தேன்டி, நானும் இதையே தான் மூச்சு பிடிக்க ரெண்டு நாளா கத்துறேன் அசையவே இல்லையே! எல்லாம் சொல்லுறவங்க சொன்ன தான் எடுபடுது” என்று அசோக் கோபமாய் சொன்னதில், வேண்டுமென்றே மற்ற இருவரும் சிரித்தனர்.

 

அவனும் பொய் கோபம் கொண்டு, அங்கிருந்து சென்று விட ஷில்பாவும் நண்பனின் கரத்தில் அழுத்தம் ஒன்றை கொடுத்தவள் வெளியேறி இருந்தாள்.

 

அப்படியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, இன்றே அவனது ஸ்பைசியிடம் பேச வேண்டும். தான் இத்தனை நாளாய் பொத்தி வைத்திருந்த காதலைச் சொல்ல வேண்டும் என முடிவை எடுத்த மகிழோ,

 

“கன்ட்ரோல்ல இருந்துக்கடா மகி” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

 

அவனே அறியாதது அவளிடம் அவன் கட்டுப்பாடுகள் என்றும் செல்லுபடியாகப் போவதில்லை என்பதை…

 

__________________

 

இப்படியே நாட்கள் கடந்து அன்று ஞாயிற்றுக் கிழமையும் வந்து சேர்ந்தது.

 

காலை வேளையில் சமயலறையில் நின்றிருந்தாள் இனியாள்.

 

அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு அவளால் வர முடியவில்லை, அந்த எண்ணங்களை மனதில் நிறுத்தி யோசிக்கத் தோன்றவுமில்லை…

 

இதோ இப்போதும் கொதிக்க வைத்த பாலில் கவனமில்லாது எங்கோ வெறித்தபடியே யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

 

ஏதோ யாருமற்று அனாதரவாக நிற்பதைப் போல் எண்ணம் பிரவாகம் பெற, மனது லேசாய் வலிப்பதைப் போலொரு எண்ணம்.

 

அவளது அண்ணி விஜயாவிடம் பேச வேண்டும் என்று உந்துதல் எழுந்தாலும் அது தான் இப்போதைக்கு எட்டா கனியாகிற்றே! விஜயாவுக்கு அழைத்து பேசி விடலாம் தான். ஆனால் அங்கே அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்பதை அறியாமல் எங்கனம் அழைப்பது??

 

முயன்று மனதைத் திசை திருப்பியவளின் எண்ணம், இறுதியாய் மகிழிடம் வந்து நின்றது.

 

முதலில் அவனைப் பற்றி எந்தவித எண்ணமும் அவள் மனதிலில்லை, ஆனால் முதலில் தெரியாத மகிழின் கோபமான பார்வை, அடுத்து வந்த நாட்களில் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.

 

ஏன் என்று காரணம் தெரியவில்லை என்றாலும் இதுவாக இருக்குமோ என்றொரு அனுமானத்தை அவளாக வகுத்துக் கொண்டாள்.

 

ஆனால் அந்தோ பரிதாபம் அவன் காதல் பார்வை இன்றுவரை அவளது கருத்தில் பதியவில்லை. அவனாகப் பேச விழைந்த நேரமும் இவள் விலலிச் செல்ல, அவன் கோபம் மேலும் அதிகரித்தது தான் மிச்சம்.

 

எது எப்படி இருந்தாலும் ‘தான் இங்கே அதிகப்படி தானே’ என்ற அவளது எண்ணமானது அவன்  கோபத்தைக் கூடத் தவறாக எடுத்துக்கொள்ள விடவில்லை.

 

ஆனால் இங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது மட்டும் அவள் மனதில் ஸ்திரமாகப் பதிந்து போனது.

 

இந்த முடிவைப் பற்றி இன்றே தேவ் மித்ரனிடம் பேசி விட வேண்டும் என்ற எண்ணமும் வலுப்பெற, கண்களை மூடித் திறந்தவளது கரங்கள் தன்னால் குளம்பியைத் தயாரிக்கத் தொடங்கியது.

 

அடுத்த ஒரு  நிமிடத்தில் குளம்பியும் தயாராகி விட, அதனை அதற்குரிய பாத்திரத்துக்கு மாற்ற விழைந்த நேரம் காலருகே புடவையை  யாரோ இழுப்பது போல் தோன்ற, குனிந்து பார்த்தவளின் கண்கள் தெறித்து விடும் அளவுக்குப் பயத்தில் விரிந்து கொண்டது.

 

அவளுக்கு இருக்கும் பதட்டத்தில், கரங்கள் தன்னால் நடுங்க, சூடான குளம்பி கீழே அவள் காலில் மொத்தமாகக் கொட்ட காலருகே நின்றிந்த ஜீவனிலும் சிறிதாய் பட்டுத்தெறித்தது.

 

அவள் கால் அப்படி எரிந்தது. ஆனால் அசைய கூட முடியாதளவு பயம் அவளை ஆட்கொண்டிருக்க, அந்த ஜீவனையே வெற்றித்துப் பார்த்திருந்தாள்.

 

அதுவோ வலியில் சத்தமிடத் தொடங்க, அதன் உரிமையாளனோ சத்தம் வந்த திசைக்கு ஓடி வந்திருந்தான்.

 

“பொம்மி” என்று அழைத்தபடியே வந்தவன், தரையில் சிந்தி இருந்ததை பார்த்ததும் விடயம் ஓரளவுக்குப் புரிய, அவனுக்கு முதலில் தெரிந்தது என்னவோ வலியில் அவளையே பார்த்திருந்தபடி நின்றிருந்த அவன் பொம்மி தான்.

 

இவன் குரல் கேட்டதும் அவனிடம் தாவத் துடித்தாள் அவன் பொம்மி.

 

இனியாவை ஒரு தீப்பார்வைப் பார்த்தவன் “ஆர் யூ மேட், இப்படிதான் கவனமில்லாம நடந்துப்பியா?” என்று அவளிடம் கோபமாகக் கேட்டவன் பொம்மியைத் தூக்கிக்கொண்டு சமயலறையிலிருந்து சென்றிருந்தான்.

 

இவளோ விக்கித்துப் போய் நின்றிருந்தாள். காலின் வலி கூடப் பயத்தில் மரத்துப் போன உணர்வு, வந்த முதல் நாளும் இப்படித்தான் பயந்து நடுங்கினாள்.

 

அவள் அப்படியே நின்றிருக்க, அவனோ மீண்டும் சமையலறைக்குள் வந்தவன், கண்கள் இரண்டிலும் கண்ணீருடன் வெறித்துப் பார்த்தபடி நின்றுந்தவளைப் பார்த்துக் கோபம் சற்று மட்டுப் பட, நிலைமையின் வீரியம் புரிந்தது.

 

“ஐ அம் சாரி, அவ ரொம்ப சின்னப் பொண்ணு, நீ பயப்பட அவசியமே இல்ல, அவளுக்கு யாரையும் ஹர்ட் பண்ணத் தெரியாது. கடுகு சைஸ்ல இருந்துட்டு பெரிய ரௌடி மாதிரிச் சத்தம் மட்டும் தான். புதுசா உன்ன பார்த்ததும் உன்னோட ஒட்டிக்க ஆசப்படுறா அதான் உன்கிட்ட வந்திருப்பா, இனிமேல் உன்கிட்ட வராம நான் பாத்துக்கிறேன்.” என்று பெருமூச்சுடன் வெளியேறப் போனவன், சட்டென ஏதோ தோன்ற, பார்வையை அவளது காலுக்குச் செலுத்தினான்.

 

புடவையினூடு சிவந்திருந்த அவளது கால்கள் அவன் கவனத்தில் பதிய, ‘ஓஓ சிட்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன்,

 

“ஹேய் ஸ்பைசி உனக்கும் காயம் ஆகியிருக்கு பாரு, வா மருந்து போட்டுக்கலாம்” என்று பதட்டத்தில் அவள் கைபிடித்து அழைத்துச் சென்றவன், அங்கே முன்னறையில் அவளை அமர்த்தியிருந்தான்.

 

அவளும் அவன் இழுப்புக்குச் செல்ல, அங்கே படுத்திருந்த பொம்மி மீண்டும் இவளிடம் தாவப்பார்க்க, “பொம்மி” என்றொரு சத்தம் அவனிடமிருந்து…

 

சத்தம் வைத்தே அவன் கோபத்தைப் புரிந்து கொண்ட அவனது செல்ல நாய்க்குட்டி அமைதியாய் அவ்விடமே படுத்துக்கொண்டாள்.

 

பொம்மி போமேரியன் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி, அதிலும் அவள் கருப்பு நிறம், பார்க்கவே குட்டியாக அத்தனை அழகாய் இருப்பாள். ஆனால்  இனியாவிற்கோ நாய்கள் என்றாலே பயம் எங்கையில் பொம்மி மட்டும் விதி விளக்கா என்ன?

 

இந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் அந்தச் சிறிய ஜீவனைக் கண்டு இவள் பயம் கொள்ள, அந்த ரௌடிக்கு ஏக குஷியாகி போனதோ என்னவோ இவளிடமே தாவத் துடித்துக் கொண்டு பயம் காட்டிக் கொண்டிருக்கிறாள்.

 

மருந்து போட்டு முடித்தவனோ “ஓகே நீ ரெஸ்ட் எடு, இன்னைக்கு சமைக்க வேணாம் நான் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணுறேன். வந்த நாள்ல இருந்து நீதான சமைக்கிற, இன்னைக்கு உனக்கு ரெஸ்ட்” என்றான் புன்னகையுடன்…

 

அவளோ அவன் முகத்தையே பார்த்திருந்தாள். அவனது புன்னகை இந்த நான்கு நாளில் அவள் பார்க்காத ஒன்றல்லவா?

 

‘எப்படி இவனால் இத்தனை இலக்குவாக உரிமையாய் பேச முடிகிறது’ என்ற கேள்வி  அவள் மூளையில் ஓடியது என்னவோ உண்மை.

 

சட்டென அவனது கோபமான பார்வை ஞாபகம் வர, கூடவே இங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமும் நினைவுக்கு வர, மித்ரனை தேடி கண்களைச் சுழலவிட்டாள். ஆனால் அவன் அங்கிருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை…

 

கடந்த மூன்று நாட்களும் அவள் எழும் நேரம் அவனும் எழுந்துவிடுவான். இவள் சமைக்கும்போது அங்கே தான் உதவிக்கு இருப்பான். ஆனால் இன்று இத்தனை நேரம் ஆகியும் அவனைக் காணவே இல்லை.

 

அவளது பார்வை வீட்டினுள் சுழன்றதன் காரணம் உணர்ந்தவனோ,

 

“மித்துவ இன்னைக்கு பிடிக்க முடியாது, இன்னைக்கு பூரா அந்த ரூம் விட்டு வரமாட்டாங்க, அம்மா ஞாபகமா எவ்ரி சண்டே அந்த ரூம் உள்ள தான்” என்றவன் அங்கிருந்த ஒரு அறையைக் காட்டிச் சொன்னவன்,

 

மீண்டும் அவளிடம் “உனக்கு ஏதாச்சும் மித்து கிட்ட பேசணுமா?” என்றான்.

 

அவளோ “ம்ம்ம்” என்றாள் மெல்லிய குரலில்…

 

அவனோ “அப்பாகிட்ட தான் சொல்லனுமா? உனக்கு அப்ஜெக்ஷன் இல்லனா எங்கிட்ட சொல்லு,  எதா இருந்தாலும் பண்ணிக் கொடுக்குறேன்” என்றவனது விழிகளில் அத்தனை எதிர்பார்ப்பு,

 

அது அவளுக்குப் புரிந்தாலும் ஏனென்று காரணம் தான் தெரியவில்லை,  இருந்தும் அவன் கண்களைப் பார்த்திருந்தவளுக்கு மறுக்கத் தோன்றாமல்

 

“நான் இங்க இருந்து போகணும்” என்றாள் மெல்லிய குரலில்…

 

அவன் முகமோ இறுக, “ஏன்” என்றான் ஒற்றைக் கேள்வியாக, அதில் அவனது முக மாற்றமானது, அதுவரை மறைந்திருந்த அவளது பயத்தை தூண்ட, முகம் அதனை அப்படியே காட்டிக்கொடுத்தது.

 

அவளது முகத்தில் அவன் எதிர்பார்ப்பது பயத்தை அல்லவே!

 

“இப்போ என்னடி உனக்கு, நான் என்ன மிருகமா? இப்படியொரு ரியாக்ஷன் கொடுக்கிற” என்று முன்னே அமர்ந்திருந்தவளின் கரத்தின் முஷ்டியை பிடித்து அருகில் இழுத்தவன் அவளது விழிகளையே ஊடுருவியபடி,

 

“நல்லா கேட்டுக்கோ, எத்தனையோ நாளா உன் நினைவுல வாழ்ந்த எனக்குக் கடவுளா உன்ன கொடுத்திருக்கும்போது, உன்ன போக விட்டுட்டு வேடிக்க பார்ப்பேன்னு மட்டும் நினைக்காத, எங்கிட்ட வந்துட்டல்ல இனி எங்கையும் போக முடியாது, போக விடவும் மாட்டேன்.  என்ன புரிஞ்சிதா ஸ்பைசி?  சும்மா கனவு காணாம போய் ரெஸ்ட் எடு” என்றவன் கண் சிமிட்டி அங்கிருந்து எழுந்து செல்ல,

 

இவளோ ‘என்ன நடக்கிறது’ என்ற கேள்வியுடன் அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

இதுவரை கருத்தில் பதியாத அவனது உரிமையான அழைப்பு இப்போது அவள் மண்டையை குடைய, அதுவோ அவனது காதலை எல்லாம் உணர்த்தவே இல்லை மாறாக இருக்கும் பிரச்சனையில் இது வேறா என்ற சலிப்பைத்  தான் அவளுக்குக் கொடுத்தது.

 

 

 

காதலைத் தேடும்.

 

ஆஷா சாரா

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்