
காலம் தாண்டிய பயணம் 05
அங்கே மார்த்தாண்டனின் கோபம் எல்லை மீறி இருந்தது. இதோ இருள் அகலும் தருவாயும் நெருங்க, எல்லாம் கைமீறி போன உணர்வில், அவனுக்கு இரத்த நாலங்கள் புடைத்து வெடிக்கக் காத்திருந்தது.
அவனுடைய பல ஆண்டுகளான தவம் தான், ஒற்றை நொடியில் சிதைந்து விட்டதே!
அவனோ மீண்டும் மீண்டும் எத்தனையோ பூஜைகளை மேற்கொண்டும் தீய சக்தி கடவுளான அர்த்தமோகினி அவன் முன்னே காட்சியளிக்க மறுத்துவிட்டாள்.
தன் முன்னே படுக்க வைக்கப்படிருந்த பெண்ணையும் தீய சக்தி கடவுள் சிலையையும் மாறி மாறிப் பார்த்தவனுக்கு, கண்களில் ஏதோ மின்னல் வெட்டியது.
இதழில் ஒரு நாளிகை விரிவு தோன்றி மறைய, கண்களை மூடி மீண்டும் மந்திரத்தை உச்சரித்தவனோ சிறிது நேரத்தில், தன் முன்னே படுக்க வைக்கப்பட்டிருந்தளது பின் கழுத்திலிருக்கும் நடுத்தர அளவிலான சிவப்பு நிற நாக மச்சத்தில் அவனது இரத்தத்தை ஒரு துளி விட, எப்போதும் போல் ஐம்பூதமும் அவனுக்குக் கட்டுப்பட்டு நிற்க, அவன் காதலி மோகினி அவன் முன்னே அரூபமாய் தோன்றினாள்.
நடந்து முடிந்தவை அவள் அறியாததா? “வளவா, தோல்வியைப் பரிசளிக்கவா இத்தனை நாட்களாய் யான் உமக்காய், உம் காதலுக்காய் காத்திருந்தேன்” என்று கோபமும் வலியுமாய் வினவ, அவனிடம் மௌனம்.
“பதில் சொல் வளவா? அமைதியாய் இருப்பதன் நோக்கம் என்னவோ?” என்றவளின் கேள்விக்குப் பதில் அளிக்காதவன்,
“யான் உன் தாயைக் காண வேண்டும் மோகினி” என்றான் ஸ்திரமான குரலில்…
அவளோ “வளவா, தாம் அழைத்தும் தாயார் வரவில்லை என்றால், அவருக்கு உம்மைக் காண விருப்பமில்லை என்று தானே அர்த்தம், பின்னே எப்படிக் காண்பது?” என்றாள் பதிலுக்குக் கேள்வியாக..
“எனக்குக் காண வேண்டும் மோகினி” என்று மீண்டும் உரக்கக் கத்தியவனின் குரலில் தெரிந்த தீர்க்கம், மோகினியை அசைத்தது.
“யான் தாயாரிடம் பேசுகிறேன், ஆனால் விடியும் தருவாய் நெருங்கி விட்டதால், குகையினுள்ளே தான் தாயாரைக் காண முடியும்” என்றாள்.
அவனும் “ம்ம்” என்று உருமினான்.
அடுத்த கால் மணி நேரத்தில் மந்திர கட்டுக்கலால் அந்தப் பெண்ணின் உடல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிடுக்க, அவர்கள் இருவரும் மார்த்தாண்டனின் மாய சக்தி மூலம், குகையை நோக்கிச் சென்றிருந்தனர்.
அவர்கள் சென்று வெகுநேரம் கழித்து அந்தப் பெண்ணுக்கு மயக்கம் கலைய, தட்டுத் தடுமாறி எழுந்தவள், பெருவிரலை நிலத்தில் ஊன்றி நிற்க முயல, முயற்சித்தது ஒருவாறு பயனளித்தது.
அப்படியே தள்ளாடியபடியே நடந்து மந்திரக் கட்டைத் தாண்டிக் காலை வைத்தவளது பின் கழுத்தில் இருந்த சிவப்பு நிற நாக மச்சம் மின்ன, தன்னால் அந்த மந்திர கட்டுக்கள் அவிழ்ந்திருந்தது.
அந்த நேரம் சரியாக அங்கே குகையில் பேசிக்கொண்டிருந்த மார்த்தாண்டனுக்கு கட்டுக்கள் அவிழ்ந்தது தெரிய, விரல்களை மேலே உயர்த்தியவன் சொடுக்கிட, இரண்டு கருப்பு நிறப்புகை அந்தக் காட்டை நோக்கிச் சென்றது.
மின்னல் வேகத்தில் அவள் இருந்த இடத்தை அடைந்த கரும்புகைகள் அவளை நெருங்க விளைய,
அதனால் துளியும் அவளை நெருங்க முடியவில்லை, ஒவ்வொரு முறை நெருங்கும் போதும் மச்சம் மின்ன, தூக்கி எரியப்பட்டது அவை இரண்டும்.
மீண்டும் மீண்டும் அவள் மச்சம் மின்னி மறைந்ததில் அவளது உடலின் சக்தி மொத்தமும் வடிந்திருக்க, அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்திருந்தாள் பெண்ணவள்.
மீண்டும் இப்போது அவளை நெருங்க வந்த கரும்புகைகளுக்கு ஏதோ விரும்பத் தகாத வாடை அடிக்க, அங்கிருக்க முடியாமல் இரண்டும் அவற்றின் எஜமானை நாடிச் சென்றது.
அவற்றின் சக்தி முற்றிலுமாய் வடியும் வாடை அது..
சரியாக அந்த நேரம் அவ்வழியாக வந்த ஆடவன் ஒருவனின் கையில் ஒரு மூலிகை செடி இருக்க, எதையோ தேடியபடி நடந்து வந்து கொண்டிருந்தவனின் கண்ணில், மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணவள் தென்பட்டாள்.
புருவத்தில் ஒரு கேள்வியுடன் அவ்விடம் விரைந்து அவளை ஊற்று நோக்கியவனுக்கு அவள் தங்கள் குலப் பெண் இல்லை என்பது புரிந்தது.
குழப்பத்துடன் இரு விரல்களை அவள் நாசியில் வைத்து அவள் நிலையைப் பரிசோதித்தவனுக்கு அவள் உயிரோடு இருப்பது புரிய, கையில் இருந்த நீரை அவள் முகத்தில் தெளித்தான்.
ஆனால் அவளிடமோ சிறு அசைவு கூட இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் பதில் என்னவோ பூச்சியம் தான்.
அங்கே அந்தக் காட்டில் காலம் தாழ்த்துவதில் இருக்கும் அபாயம் அவனறிந்ததே!
கையில் இருக்கும் செடியைப் பார்த்துக் கண்களை மூடியவனுக்கு, அதனைக் கண்டறிய அவன் எத்தனை போராட்டம் கொண்டான் என்பது மனக்கண்ணில் தோன்றினாலும் தன் முன் இருக்கும் உயிர் மேலாகத் தோன்ற,
நொடியும் தாமதிக்காமல் கையிலிருந்த செடியின் சாறினை, பிரிந்திருந்த அவளிதழ் வழியே துளித் துளியாக உள்ளே விட்டான்.
அடுத்த சில வினாடிகளில் அவளிடம் அசைவு.. அவன் அவளையே தான் பார்த்திருந்தான்.
அவளோ கண்களைத் திறக்கப் போராடியும் முடியாமல் போக, மீண்டும் முயன்று கண்களைத் திறந்து கொள்ள, தன் முன்னே நிற்கும் ஆடவனின் உருவம் அவளுக்கு மங்களாய்த் தான் தெரிந்தது.
மீண்டும் கண்களை மூடித்திறந்து அவன் உருவத்தைத் தெளிவு படுத்த முயற்சி செய்தவளின் எண்ணம் ஈடேற, அவன் உருவம் அவள் பார்வைக்கு நன்கு புலப்பட்டது.
பட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு திடீரெனத் தலை சுளீரென்று வலித்ததில் தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டாள்.
“தங்களுக்கு என்னவாகிற்று பெண்ணே? தாங்கள் இங்கே எப்படி? மெல்ல எழுந்து கொள்ளுங்கள். இந்தச் செடியின் சாறு எப்பேற்பட்ட பிணியையும் போக்கிவிடும், கவலை வேண்டாம் பெண்ணே” என்றான் அவன்.
அவளோ என்னவென்று சுதாகரிக்க முயன்றவள் “ஊர விட்டுப் போறதுக்கு பஸ் ஸ்டாண்ட் போனது தான் ஞாபகம் இருக்கு? எப்படி இங்க வந்தேன்? இங்க இருந்து சென்னைக்குப் போக பஸ் எப்போ வரும்?” என்று ஒவ்வொரு கேள்வியாய் அடுக்க, அவள் பேசியது புரியாமல் விழி இடுங்க நின்றிருந்தான் அவன்.
“நான் செடிகளைப் பறித்துவிட்டேன் தமையரே விரைந்து சென்றுவிடலாம் வாருங்கள்” என்று சத்தமிட்டபடி மற்றுமொரு பெண் அங்கே வந்து சேர்ந்தவள், அவனுடன் நின்றிருந்த புதிய பெண்ணைத் தான் கேள்வியாகப் பார்த்திருந்தாள்.
“யார் தமையரே இந்த மாது?” என்று மீண்டும் அவள் கேட்க, அப்போதுதான் உணர்வுக்கு வந்தவன்,
“எமக்கும் தெரியவில்லை பூவிழி, யாம் செடியைத் தேடி இங்கு இந்தப் பாதை வழியாக வந்த நேரம் தான், மயங்கிய நிலையில் இந்த மாதுவைக் காண நேர்ந்தது” என்றான்.
அப்போது தான் அங்கே தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவளுக்கு, இவர்கள் பேசும் பாஷை ஏதோ வித்தியாசமாகப்பட்டது.
“இப்போ டைம் என்ன? சென்னைக்கு பஸ் இல்லையா?” என்க, அவர்கள் இருவரும் இவளைத் தான் பார்த்திருந்தனர்.
நேரம் கடப்பதை உணர்ந்த பூவிழி “தமையரே, இன்னும் இங்கே இருப்பது ஆபத்தானது” என்று சுற்றிப் பார்த்தபடி நிலைமையை உணர்த்தினாள்.
அவனோ “பெண்ணே தாங்கள் பேசுவது அத்தனை தெளிவாய் எமக்குப் புரியவில்லை, இன்னும் நேரம் தாழ்த்த இந்த இடமும் அத்தனை பாதுகாப்பானதில்லை, யாம் வந்தது கூட ஒரு உயிரைக் காக்க எண்ணித்தான். சற்று தொலைவில் தான் எங்கள் ஊர் இருக்கிறது. தாங்களும் வந்தீர்கள் என்றால் இருள் சூழ முன் அங்கே சென்றுவிடலாம்” என்றவன் அவளைத்தான் பார்த்திருந்தான்.
அந்தக் காட்டில் தனிமையில் அவளும் என்ன தான் செய்வாள், சம்மதமாகத் தலையசைத்து அவர்களுடன் நடந்தவளுக்கு ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பதை மட்டும் ஊகிக்க முடிந்தது.
மூவரும் அந்தக் காட்டில் நடந்து சென்றுகொண்டிருக்க, பூவிழி அந்தப் பெண்ணை நோக்கியவள் “யான் பூவிழி, இவர் என் தமையர் துயிலன். தங்களது நாமம் என்ன தோழியே?” என்று கேட்டாள்.
“நாமமா?” என்று எண்ணியவளுக்கு தன் பெயரைக் கேட்கிறாள் என்று புரிந்து கொள்ள சில நாளிகை எடுத்தது.
“தளிர் யாழினி” என்றாள் சிறு புன்னகையுடன்..
அவள் தனது பெயரைச் சொன்னதும் தான் தாமதம், துயிலனின் நடை ஒருநிமிடம் தேங்கி மீண்டும் தொடர்ந்தது.
பூவிழி சாதாரணமாகப் பேசிக்கொண்டு நடக்க, அதனைக் கேட்ட யாழினிக்கோ பதில் சொல்லவும் தோன்றாமல், அவளது குழப்பத்தைக் கேட்கவும் தோன்றாமல், “ம்ம்” கொட்டிக்கொண்டே கூட நடந்தாள்.
‘என்ன நடக்கிறது? யார் இவர்கள்? நான் இங்கே எப்படி? நேற்று யாரோ ஒரு ஆடவனைக் கண்டேனே! உருவம் கூட மனதில் பதியாத அவன் யார்?’ என்று பல கேள்விகள் குழப்பங்கள் அவளைச்சூழ, அவளுக்கோ தலையே வெடிப்பது போல் இருந்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் காட்டின் முடிவுப் பகுதி வரக் கண்களுக்கு அந்த ஊர் தென்பட்டது.
மாலை அகன்று சற்று இருள் சூழ்ந்திருக்க, அங்கே அந்த நேரத்துக்கே வீடு எல்லாம் பூட்டியிருந்தது.
வெளியில் யாரையும் காணவில்லை, ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு சிறிய விளக்கு வைக்கப்பட்டிருக்க, கூடவே வாயிலில் ஒரு ஆடு கட்டி வைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொன்றாய்ப் பார்த்தபடி வந்த தளிர் யாழினிக்கு, இவர்கள் மூவரையும் தவிர வேறு மனித நடமாட்டம் அங்கே இல்லாதது போலொரு தோற்றம்.
அவளுக்கோ பயம் மனதை வியாபிக்கத் தொடங்க, பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருந்த பூவிழியின் கைகளைப் பற்றிக் கொண்டவளுக்கோ, தான் ஏதோ வேண்டாத கனவு தான் காண்கிறோமோ என்ற எண்ணம் வலுப்பெற, கண்களை மூடித் திறந்து பிடித்திருந்த பூவிழியின் கையில் அழுத்தம் கொடுத்தாள்.
“என்னவாகிற்று யாழினி?” என்று அவள் கொடுத்த அழுத்தத்தை உணர்ந்து பூவிழி வினவ,
அவளோ “இ..து என்..ன்ன இ..டம்? ஏன் யாரையும் காணோம்?” என்று பயத்தில் உதடுகள் குழற வினவினாள்.
“தோழியே, பயம் வேண்டாம். இது எங்கள் குலத்துக்கான கிராமம். நாமம் காலபைரவன் கோட்டை, இருள் சூழ்ந்து கதிரவனின் துயிலுக்குப் பின் வெளியில் வரும் பாக்கியம் எம்மவர்களுக்கு இன்றளவிலும் கிட்டவில்லை யாழினி.. பைரவன் விரைவில் தருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்” என்று பெருமூச்சுடன் மொழிந்தவளின் முன் பாதி பதிலிலே யாழினியின் மனம் திடுக்கிட்டு நின்று விட்டது.
‘காலபைரவன் கோட்டையா? இதுவா? ஆனால் எப்படி?’ என்று அந்த இடத்தையே சுற்றிநோட்டம் விட்டாள் பெண்ணவள்.
அவள் சிறுவயது முதல் வளர்ந்த ஊரின் பெயரில் இன்னொரு ஊரா? இருக்க முடியுமா? கேள்விப்படவே இல்லையே! என்ற பல கேள்விகள் அவளுள் பிரவாகம் எடுக்க, மூச்சு அடைக்கும் போலொரு உணர்வு அவளுக்கு…
அவளின் யோசனைகளின் நடுவிலே அவர்கள் வரவேண்டிய அந்த வீடு வந்து சேர்ந்தது.
அந்த ஊரிலேயே அந்த நேரம் மூடப்படாமல் திறந்திருந்த வீடு அது ஒன்று தான்.
அண்ணன் தங்கை இருவரும் உள்ளே நுழைய, யாழினியும் அவளுக்கே தெரியாமல் அவர்களுடன் இழுபட்டு சென்றாள்.
உள்ளே நுழைந்ததும் நடப்புக்கு வந்தவள், அங்கே நடப்பவற்றை அவதானிக்கத் தொடங்கினாள்.
உள்ளே ஒரு முதியவர் படுத்த படுக்கையில் கிடக்க, அப்போதும் அவர் தோற்றம் கம்பீரமாய் தான் இருந்தது.
ஆனால் உடலில் ஏதோ உபாதை என்பது அவர் தலையில் போடப்பட்டிருந்த மருந்தைக் கொண்டே அவளால் ஊகிக்க முடிந்தது.
இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவரின் முகத்திலோ அத்தனை வெளிச்சம்.
“வா துயிலா, கிடைத்துவிட்டதா?” என்று இன்னுமொருவர் கேட்க, அங்கே படுக்கையில் இருந்தவரின் சாயல் அந்த நபரிடம் தெரிந்தது.
அவரின் உறவினராக இருக்கக்கூடும் என்று யாழினி எண்ணிக்கொண்டாள்.
துயிலனோ “ஆம் தந்தையே, எங்கள் இருவருக்கும் கிடைத்தது. ஆனால் பூவிழியிடம் உள்ளதே இப்போது மீதமாய் இருக்கிறது” என்றவன் பூவிழியைப் பார்க்க, அவளோ அதனைத் தந்தையிடம் கொடுத்தாள்.
அவரோ அதனை வாங்கிக்கொண்டே துயிலனை கேள்வியாகப் பார்க்க, அப்போதுதான் அங்கே நின்ற யாழினி அவர் கருத்தில் பதிந்தாள்.
‘யார்?’ என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் கேட்கவில்லை, இப்போது மருந்தின் தேவை முக்கியம் என்பதால், மகளிடம் அதனைப் பெற்றுக்கொண்டவர், படுக்கையிலிருந்த முதியவரை நோக்கிச்சென்றார்.
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…


