Loading

காலம் தாண்டிய பயணம் 36 (இறுதி அத்தியாயம்)

 

 

நான்கு வருடங்களின் பின்

 

அந்தப் பைரவன் கோயிலே அன்று திருமணக்கோலம் பூண்டிருந்தது.

 

அங்கே யாழினி ஒரு பக்கம் பம்பரமாய் சுழல, இன்னொரு பக்கம் மித்ரன் நிற்கக் கூட நேரம் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.

 

அவனது யாழின் திருமணமாகிற்றே அத்தனை உவகை உள்ளே!

 

அதிலும் கூடுதலாய் அவனது மகனுக்கு அவனது செல்ல டோலுடன் திருமணம். அப்படி இருக்கையில் சந்தோஷத்துக்கா பஞ்சம்???

 

கோயில் மண்டபத்தில் காணும் இடம் எல்லாம் மித்ரன் இருந்தான். ஆனால் கையில் தான் பிடிக்க முடியவில்லை அவனை…

 

 

இப்போதும் ஐயர் எதுவோ வேண்டும் என்று கேட்டிருக்க, அவசரமாய் அதனை எடுக்க ஓடி வந்தவன், எதிரில் வந்த யாழினி மேல் மோதி இருக்க, இருவரும் நெற்றியை நீவிக் கொண்டனர்.

 

இருவருக்கும் ஒரே நேரத்தில் புன்னகையும் வந்து ஒட்டிக் கொண்டது.

 

“ஹெலோ மாப்பிளையோட அப்பா கொஞ்சம் நகர்ந்து தான் போறது?” என்று கேலியுடன் அவள் கேட்க,

 

அவனும் அதே கேலியுடன், “அத பொண்ணோட அத்தையும் பண்ணலாம்ல” என்றான்.

 

“பொண்ணு வீட்டுக்காரங்கள மதிக்கலனா மாப்பிளையோட அப்பாவ கடத்திடுவோமாக்கும்” என்றாள் அவள் அப்போதும் கெத்தாக…

 

“அப்படியா?  அப்போ கடத்திட்டுப் போனா கூடப் பொண்ணோட அத்தையும் வருவாங்களா? அவங்களும் வந்தா மாப்பிளையோட அப்பாக்கு கடத்துற பிளான்னுக்கு சம்மதமாம். கொஞ்சம் அவங்க கிட்ட கேட்டுச் சொல்லுறது. அவங்க கம்பெனி இருந்தா மாப்பிளையோட அப்பா எங்க வேணா வருவாராம்” என்றவன் அவளையே பார்க்க,

 

“ஹெலோ சார் என்னை பார்வை இங்க வருது, மாப்பிளையோட அப்பாவா பொறுப்பா இருக்க வேண்டாமா? நாளுன்னு இருந்த நரைச்ச முடி இப்போ நாப்பது ஆகிடிச்சு நினைவு இருக்கட்டும்” என்க,

 

“ஆஹான், அப்படியா? ஆனா எம்பொண்டாட்டிக்கு அது தானே பிடிச்சிட்டுக்காம். வேணும்னா அவகிட்ட கேட்டுட்டு டை அடிச்சிட்டா போச்சு” என்று அவளைச் சீண்ட,

 

அதே நேரம் அங்கு வந்த அவன் தமக்கை மாலதியோ “அடேய் மித்து அங்க ஐயர் உன்ன தேடிட்டு இருக்காரு இங்க என்னடா பண்ணுற?” என்று மித்ரனிடன் கேட்டவர்,

 

யாழினியிடம் “உன்ன என்னத்துக்கு இங்க அனுப்புனேன். தேங்கா எடுத்துட்டு வர சொன்னன்ல அத செய்யாம இங்கயே நின்னுட்டு இவன் கூட பேசிட்டு இருக்க நேரமாகுது போய் இனியாவ கூட்டிட்டு வா. நானே தேங்காய எடுத்துக்குறேன்” என்று சொல்ல, அந்தக் கணவன் மனைவி இருவரும் மாட்டிக்கொண்ட குழந்தைபோல செய்வது அறியா முழித்தவர்கள் வெட்கத்தில் ஆளுக்கொரு பக்கமாய் ஓடினர்.

 

இதனைக் கண்ட மற்றவர்களுக்கும் புன்னகை, அசோக் மேடையில் அமர்த்திருக்கும் மகிழிடம் “அடேய் உன் மித்து காதல் தாங்களைடா? இந்த வயசுலயும் எப்படி லவ் பண்ணுறாரு பாரேன். நாம எல்லாம் அவர்கிட்ட பிச்சை எடுக்கணும். இருந்தாலும் மனிசன் அநியாயத்துக்கு காதலிச்சு கடுப்பேத்துறாருடா, அவங்களுக்கு இடைல ஏதாச்சும் கோர்த்து விடணுமே” என்று நம்பியார் போல கையை வில்லத்தனமாக அசைக்க, மகிழ் ஐயர் சொன்ன மந்திரங்களை உச்சரித்த படியே நண்பனை முறைத்தான்.

 

அசோக் என்னவென்று முழிக்க, அவனருகில் நின்றிருந்த அவன் மனைவியோ, “மித்துக்கு அப்படி ஒன்னும் வயசாகிடலையே! இல்ல மகிழ். இருந்தாலும் உன் அப்பாக்கு இவன் எல்லாமா எதிரி. இவனை வீட்டுக்குள்ள விடும் போது கவனமா இருந்துக்கடா, புருஷனா இருந்தாலும் நியாயத்தின் பக்கம் தான் இந்த ஷில்பா நிப்பா” என்று கணவன் காலை நேரம் பார்த்து வார, அசோக் திருட்டு முழி முழித்தான்.

 

‘அடேய் அவசரப்பட்டூட்டியேடா அசோகா’ என்று எண்ணியவனோ மனைவியிடம் “ஏன்டி சில்லு உன் புருஷன மாட்டி விடுறதுல அப்படி என்ன சந்தோசம் உனக்கு, இது ஷில்ப்பா நிப்பானு ரைமிங் வேற” என்று மெல்லிய குரலில் கடுகடுத்தான்.

 

அவளோ “எல்லாம் ஒரு சமூக சேவை தான் மாமா” என்க,

 

அவளை முறைத்து ‘பிறகு கவனித்துக் கொள்கிறேன்’ என்று சைகை செய்தவன்,

 

நண்பனிடம் “ஏஜ் இஸ் ஒன்லி நம்பர் மச்சான். நம்ம மித்து யாழினிமாவ பிரிக்க ஒருத்தர் பிறந்துல்ல வரணும்” என்று சிரித்து வைக்க, மீண்டும் முறைப்பு தான்.

 

மித்ரன் மேல் மகிக்கு இருக்கும் பைத்தியம் அவன் அறிந்தது தானே!

 

ஆனாலும் இப்படி எப்போதாவது பேசி வாங்கிக்கட்டிக் கொண்டால் தான் அவனுக்கு பொழுதே போகும்.

 

இன்று அவனது நல்ல நேரம். மகிழ் மாப்பிளை என்பதால் தப்பித்தான். இல்லையேல் இன்று முதுகில் மத்தளம் உறுதியாகி இருக்கும்…

 

நண்பனின் கவனத்தை மாற்ற எண்ணிய அசோக், மணமேடைக்கு அழைத்து வரப்பட்ட இனியாவைக் கண்டு, நண்பனை மகன் பொசிஷனில் இருந்து, காதலன் பொசிஷனுக்கு மாற்றி தப்பித்து இருந்தான்.

 

அங்கே தன் தாயுடனும், அவனது தங்கை பூவிழியுடனும், அவனது உறவுப் பெண்கள் அனைவருடனும் நடந்து வரும் அவன் காதலைக் கண்டவன் கண்களில் அவனையும் தாண்டிய ஒளி…

 

அதுவும் அவன் ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்த புடவையில் அவள்…

 

காணவே ஆயிரம் கண் வேண்டும் போலிருந்தது அவனுக்கு…

 

அவன் எண்ணங்களோ அவள் முதல் முதலில் புடவை கட்டிய நேரத்துக்குச் சென்றது.

 

அவள் பெரிய பெண்ணாகிய அன்று அவன் வீட்டில் தான் இருந்தால், இவனுக்கு ஓரளவுக்கு அதெல்லாம் தெரியும் வயது தான்.

 

ஆனால் அனுபவம் அவளது நிகழ்வில் தான். அத்தனை நாள் சிறுபெண்ணாய் அவன் முன்னே ஓடி ஆடித் திரிந்தவள், அன்று புடவையில் நடக்க முடியாமல் நடந்து வந்ததும் அவனைக் கண்டு மறைந்ததும், அதில் அவள் மீது பார்வையை அவன் கூர்மையாக்கியதும் ஞாபகம் வந்தது.

 

ஆம் இப்போது மகிழுக்கு மாறிய புதிய நினைவுகள் மட்டுமே! பழையவை அவன் நினைவுகளில் இல்லை…

 

எதனை அன்று அவன் பைரவனிடம் யாசித்தானோ அதுவே அவனுக்கு கிடைத்திருந்தது….

 

பழைய ரணங்களின் சுவடு அங்கே மிச்சயமாய் சிறிதும் இல்லை…

 

மகிழின் விழிகள் இரண்டையும் அவனது காதல் ஆக்கிரமித்திருக்க, அவன் இதழ்களில் புன்னகை பூத்திருந்தது.

 

இன்றும் அதே சிறு வயது யாழினி போலத்தான் நடக்க முடியாமல் மனம் கொள்ளாப் புன்னகையுடன், மணமேடையில் அமர்ந்திருக்கும் அவனருகில் வந்து அமர்ந்தாள் அவனது காதல் தித்திப்பு…

 

இவனோ புன்னகையுடன் அவள் காதின் அருகே குனிந்தவன் “சாரி கட்டி இன்னுமா நடந்து பழகுற நீ? இனிமேல் மாமா கட்டி விடுறேன்” என்று கண் சிமிட்ட, அவளுள் வெட்கத்தில் சாரல்…

 

நான்கு வருடங்களாகக் காதல் பறவைகளாகச் சுற்றிய அவர்கள் இருவரும் இனிக்க இனிக்க காதலை அனுபவித்திருந்தனர்.

 

இனியாவின் படிப்பு முடிந்தவுடன் தனக்கான ஒரு வேலையையும் அவள் தேடிக் கொள்ள, இதோ திருமணம் என்கிற அடுத்த கட்டத்தில் வந்து நிற்கின்றது அவர்களது காதல்…

 

அவள் வெட்கம் அவனை ஏதோ செய்ய, மீண்டும் அவள் காதின் அருகில் நெருங்கியவனோ “ஸ்வீட் டேஸ்ட் பண்ண நேரம் வந்துடிச்சுடி பஞ்சுமிட்டாய்” என்று கிசுகிசுப்பான குரலில் அவன் பேச அவளுக்கோ மேனியில் மின்சாரம் பாய்ந்த உணர்வு…

 

அந்த நேரம் அசோக் சும்மா இராமல் “என்ன வேணும்டா மகி?  இங்க எனக்கிட்ட கேளு, அங்க பொண்ணுகிட்ட கேட்டா எப்படிக் கிடைக்கும், அப்பறம் மாப்பிளை தோழன்னு நான் எதுக்கிருக்கேன். உனக்கு ஒரு குறையும் இல்லாம பார்த்துக்கணும்ல” என்றவனை மகிழ் தீயாய் முறைத்தான்.

 

“ஏன்டி ஷில்லு இவன் ஏன் இப்போ என்ன இவ்வளவு காதலா பாக்குறான்?” என்று மனைவியிடம் வேறு கேட்டு வைக்க, அங்கே நின்றுந்த இளைஞர் பட்டாளத்திடமிருந்து ஆரவாரம் கிளம்பியது.

 

அடுத்துத் தாலி கட்டும் நேரம் நெருங்கி விட, மணப்பெண்ணின் பக்கம் அவளுக்குத் தாய் தந்தையாக நின்றிருந்தது என்னவோ தேவ் மித்ரனின் அக்கா மாலதியும் அவர் கணவரும் தான்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காசிநாதன், அவரது மூத்தமகன் ராஜவேலு இருவரும் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி இருக்க காசிநாதன் சம்பவ இடத்திலேயே இறைவனடி சேர்ந்திருந்தார்.

 

ராஜாவேலுவிற்கு பயங்கர அடி, இப்போது ஓரளவுக்கு இந்த இரண்டு ஆண்டுகளில் தேறி வருகின்றான்.

 

கணவனின் மறைவுக்குப் பின் வள்ளி பெரிதாய் எந்த இடமும் செல்வதில்லை.

செல்வதில்லை என்பதை விட அவரைச் சேர்ப்பதில்லை என்று கூடச் சொல்லலாம்.

முன்னே அவர் தான் கணவனை இழந்த பெண்களை எந்த விசேஷத்துக்கும் சேர்த்துக் கொள்வதில்லையே!

இப்போது அது அவருக்கு நடக்கும்போது பெரிய குற்றமாய் தெரிந்தது.

 

அதில் மட்டுமல்ல இன்னும் பெண்களுக்கு கட்டுப்பாடு என்று எதையெல்லாம் சொன்னாரோ அத்தனையையும் ஒவ்வொன்றாய் திருப்பி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

 

அவரை அனைவரும் அப்படி ஒதுக்குவதெல்லாம் இல்லை… வள்ளியைப் போலக் குணம் படைத்தவர்களும் அங்கே இருக்கத் தானே செய்தனர், சிலர் இதனை வைத்துப் பழைய பகையை கூடத் தீர்த்துக் கொள்கின்றனர்.

 

யாரை நோவது, மக்கள் அவர்களாகவே திருந்த நினைக்காதபோது, உள்ளே மனங்களில் மாற்றம் வருவது கடினம் தான். இதற்கொல்லம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…

 

வள்ளி அப்போதும் திருந்தி விடவெல்லாம் இல்லை, தன்னை தானே தனிமை படுத்திக் கொண்டார் அவ்வளவே.

 

மற்றவர்களின் சாதாரண பார்வையும் அவருக்கு கேலி பார்வை போலவே தோன்றும். யாரையும் பார்ப்பதற்கே பயந்து தான் போனார்.

அந்த ஒரு அறைக்குள்ளேயே அவரது வாழ்க்கை இப்போதெல்லாம் சுருங்கிப் போயிருந்தது போயிருந்தது.

 

ஆனால் அகங்காரத்திலும் திமிரிலும் இன்னும் அவர் வள்ளி தான்.

 

சிறுத்தை எப்போதும் அதன் புள்ளிகளை மாற்றிக் கொள்வதில்லையே!

 

இந்த முறையும் இவர்கள் ஒதுக்கவெல்லாம் இல்லை முறையாகத் திருமணத்துக்கு அழைத்திருந்தனர் தான் ஆனால் அவர் வரவில்லை…

 

அவர் கட்டாயம் வந்தே ஆகவேண்டும் என்று எண்ணுவதற்கு அவர் அப்படி ஒன்றும் இனியாவிடிற்கு பெரிதாய் நல்லது எதுவும் செய்து விடவில்லையே!

 

பெற்றெடுத்தார் அவ்வளவே! அதற்கு கடமைக்கு அழைத்தாகி விட்டது.

 

அவரின் வரவு இல்லை என வருத்தம் என்று பெரிதாய் ஒன்றும் இருக்கவில்லை, தாய் என்று எதை அவர் ஒழுங்காகச் செய்தார் இதைச் செய்வதற்கு, என்பதைப் போலக் கடந்து போகப் பழகி இருந்தனர்.

 

அங்கே கல்யாண வேலை எல்லாம் நடந்து கொண்டிருக்க, பந்தியில் உணவு வேலையை கிரிதரனும், ராஜவேலுவும் பார்த்து கொண்டிருந்தனர்.

 

இப்போதெல்லாம் அவர்களிடம் ஓரளவு மாற்றம் தெரிகிறது. சுயநலம் கொண்டவர்கள் தான். ஆனால் யாழினியின் தலையீட்டில் சிறிது மனிதர்கள் என்றாவது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மாற்றம்.

 

கிரிதரனின் கடன் எல்லாம் ஓரளவுக்கு முடிந்து, செலவு கையை கடிக்காமல் கடக்கப் பழகிக்கொண்டான். அதில் பெரும் பங்கு மித்ரனுடையது. அவனுக்கு தொழில் நுட்பங்கள் சிலவற்றுக்கு வழி காட்ட, கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தவன், அதனை கெட்டியாய் பற்றிக்கொண்டான்.

 

அவன் மாற்றத்தில் சுபாஷினி வாலை சுருட்டி அமர வேண்டிய நிலை…

 

இவன் இப்படி என்றால் மூத்தவனிடம் அப்படியே மாறிப் போனான்.

 

அந்த விபத்தின் பின் ராஜேவேலுவினுள் பல மாற்றம். அதில் சிறந்த ஒன்றாய் மனைவி விஜயாவின் அருமை இப்போதெல்லாம் அதிசயத்திலும் அதிசயமாய் புரியவே செய்கிறது.

 

அவளது மனம் உணர்ந்து நடந்து கொள்கிறான்.

 

படுத்த படுக்கையாய் கிடந்தவனை எழுந்து நடமாட வைத்த செயலில் பெரும் பங்கு அவளுடையது தானே!

 

சமையல் நடக்கும் இடத்தில் நின்றிருந்த கணவனைத் தேடி வந்த சுபாஷினியோ “அங்க முகூர்த்த நேரம் ஆரம்பிக்கப் போகுதாம், யாழினி சித்தி உங்கள வர சொன்னாங்க” என்று கணவனிடமும், அவனது தமையனிடமும் சொன்னவள்,

 

அங்கே நின்றிருந்த விஜயாவிடம் “கிருஷ் அழுதுட்டே இருந்தான் கா, இப்போ தான் மாலதி அத்தைகிட்ட கொடுத்தேன். அவனுக்கு பசி போல பால் கலக்கி தர சொன்னாங்க” என்று விஜயாவிடம் முடித்தாள்.

 

இப்போதெல்லாம் சுபாஷினி விஜயாவிடம் மரியாதையாகவே பேசுகிறாள், மாமியார் தயவும் அந்த வீட்டில் இல்லாத போது, இவளை நன்றாக நடத்தினால் தான் தன்னை நன்றாக நடத்துவாள் என்ற சுயநலம் அவளை தணிந்து போக வைத்தது.

 

மற்றவர்களுக்கு அது புரிந்தாலும் இந்த அளவில் இருப்பது போதும் என்று விட்டு விட்டனர். விஜயாவும் அப்படியே, அவள் ஒன்றும் பகைமை பாராட்டும் ஆள் அல்லவே,

 

விஜயாவோ அவள் பேச்சிக்கு பதிலாய் “அதான் இங்க வந்தேன் சுபா, அவன் காலைல சரியா சாப்பிடவே இல்ல, இதோ எடுத்துட்டேன் போகலாம்” என்க, பெண்கள் இருவரும் முன்னே நடக்க, ஆண்கள் இருவரும் அவர்களை தொடந்து மணமேடையை அடைந்தனர்.

 

முக்கூர்த்த நேரம் சரியாக வந்ததும் தம்பதி சகிதமாகத் தேவ் மித்ரனும் தளிர் யாழினியும் தாலியை எடுத்துக்கொடுக்க, மகிழ் தன் சரிபாதியானவளுக்கு மங்கள நானைப் பூட்டி தன் மனைவி ஆக்கி இருந்தான்.

 

தாலி கட்டி முடித்து அவள் நெற்றில் திலகமிட்டவனோ “ஹாப்பி மேரிட் லைப் மிஸிஸ் மகிழ் யாழன்” என்று நெற்றியில் முத்தம் பதிக்க, அவளோ புன்னகை முகமாய் அவன் முத்தத்துடன் சேர்த்து அவன் காதலையும் உள்வாங்கிக்கொண்டாள்.

 

அதே நேரம் மனநிறைவுடன் மித்ரனோ யாழினியின் கரங்களைக் காதலுடன் கோர்த்துக் கொள்ள, அவன் கரத்தில் அழுத்தம் ஒன்றைக் கொடுத்தவளோ அவன் தோளில் உரிமையாய் காதலாய் சாய்ந்து கொண்டாள்.

 

அன்று போல் இன்றும் மாறாப் புன்னகையுடன் வீற்றிருந்த பைரவனின் ஆசி என்றும் அவர்களுக்குத் துணையாய்…

 

காலம் கடந்தும் காதலைத் தேடிப் பயணித்த காதல் புறாக்கள் காதலை அணைத்து காதலுடன் ஆண்டாண்டுகளாக வாழும்…

 

 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

 

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

 

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.                                                     

                                     (பகவத் கீதை)

 

…முற்றும்…

 

ஆஷா சாரா…

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்