காலம் தாண்டியும் காதலைத் தேடி 35

Loading

காலம் தாண்டிய பயணம் 35 

 

மித்ரன் எண்ணியது போலவே  சிறு அமைதிக்கும் பின் மகிழே ஆரம்பித்தான்

 

“நடக்குற எல்லாத்தையும் எனக்குள்ள உள்வாங்கிக்க எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்ப்பா, நம்பவே முடியாத பல விஷயம் ஆனா நம்பித்தான் ஆகணும். என்னோட உணர்வுகள் இப்போ எப்படி இருக்குனு என்னாலேயே புரிஞ்சிக்க முடியலப்பா… ஏதோ ஒரு மேஜிக் நடந்து நிமிசத்துல நம்ம லைஃப் அப்படியே கலர் புல்லா மாறின மாதிரிக் கனவு வருமே! சில நேரம் அது கனவுன்னு நம்மளால உணரக்கூட முடியும். ஆனா அந்தக் கனவுல இருந்து முழிச்சிக்காதனு உள்ளம் கெடந்து அடிச்சிக்கும், அப்படியொரு மனநிலைல இருக்கேன். இப்போ இந்த நொடி உனக்கு என்ன வேணும்னு கடவுளா என்கிட்ட வந்து கேட்டா என்ன சொல்லுவேன்னு தெரியுமா?” என்று இறுதியில் கேள்வியோடு நிறுத்தியவன் மித்ரனின் முகம் பார்த்தான்.

 

மகன் தன் பதிலை எதிர்பார்க்கிறான் என்பதை உணர்ந்தவன் “என்ன கேப்ப?” என்றான்.

 

“எதுவுமே நான் எனக்காகக் கேக்கவே போறதில்ல, நீங்க எனக்கு எது தருவீங்களோ அது தான் தி பெஸ்ட் பிளான் ஒப் மை லைஃப்னு சொல்லுவேன்” என்றான்.

 

“என் மகன் ரொம்ப தத்துவம் எல்லாம் பேசுறானே என்னாச்சு?” என்று மித்ரன் கேட்க,

 

“ஆமால, கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தெரிஞ்சிகிட்டேன்ல அதான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா பேசுறேன், நீ போய்த் தூங்கு, நான் இப்படியே அங்க கொஞ்சம் போய்ட்டு வறேன்” என்றவன் சற்று தூரத்தில் தெரிந்த பைரவன் கோயிலைக் கை காட்டினான்.

 

“இப்போவா, வா நானும் வறேன்” என்று அவனும் எழ, “நோ நோ, நீ போ நான் கொஞ்சம் தனியா இருக்கனும் ப்ளீஸ்” என்றான்.

 

“ரொம்ப பண்ணுற யாழ் நீ… போறது சரி சீக்கிரம் வந்துடனும்… நீ வந்ததும் வந்துட்டதா மெஸேஜ் பண்ண அப்பறம் தான் அப்பா தூங்குவேன் சரியா, கவனமா போ” என்றவன் மகனின் கரத்தில் அழுத்தம் ஒன்றைக் கொடுத்தவன் உள்ளே சென்றான்.

 

போகும் மித்ரனையே பார்த்தவன் மனதோ ‘லவ் யூ ப்பா, அந்தப் பழைய வாழ்க்கையோட ரணங்கள் வடுக்கலா கூட உன் நினைவுல இல்லாம நீ சந்தோசமா இருக்கறதே எனக்குப் போதும்ப்பா’ என்று எண்ணிக் கொண்டது.

 

தங்கள் அறைக்குள் வந்த மித்ரனைப் பார்த்த யாழினியோ “என்ன அப்பாவும் மகனும் கொஞ்சி முடிச்சாச்சா, நான் கூட விடிஞ்சிரும்னு நினைச்சேனே, அதுக்குள்ள வந்துடீங்க?” என்றபடி அவர்களது மெத்தையை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அவளை அப்படியே பின்னிருந்து அணைத்தவனோ “என்ன என் பொண்டாட்டிய நான் கொஞ்சலனு அவளுக்குக் கோபமோ? வேவு பார்க்க வந்தியாடி கள்ளி” என்றான்.

 

“ஆமா அப்படியே கொஞ்சாம இருக்குற ஆளு தான், டைம் கிறக்கிறப்போ எல்லாம்  மிச்சம் வைக்காம கொஞ்சிட்டு தானே இருக்கீங்க. அப்பறம் அபாண்டமா ஒரு கேள்வி வேற, இதுல இவங்கள வேவு வேற பார்க்கிறாங்கலாமா?” என்று நொடித்துக் கொண்டவளோ

 

“மாலதி அண்ணி தூங்கப் போனதும் என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும்னு பார்க்க வந்தா, அங்க ஒரே பாச மழை தான். அதான் நனையாம உள்ள வந்துட்டேன்” என்றவள் அவன் பக்கமாகத் திரும்பி அவன் மீசையை கடித்து வைத்தாள்.

 

“ரொம்ப தாண்டி, உன்ன ஓவரா கொஞ்சுறதால என் அருமை உனக்குப் புரியல, இரு என்னைக் கொஞ்சுங்கனு உன்ன கெஞ்ச வைக்கிறேன். எங்களையே கலாய்க்கிற பார்த்தியா” என்றவன் அவளை மெத்தையில் தள்ளி விட்டுத் தானும் அருகில் படுத்துக்கொண்டான்.

 

“அச்சோ என்ன தேவ் இது, இப்போதான் இத நீட்டா அரேஞ் பண்ணேன். இப்படி கலச்சிடீங்களே” என்று அவன் தோளில் இரண்டு அடிகளை வைத்தாள்.

 

“அடியேய் மக்கு பொண்டாட்டி, மெத்தைனா கலைக்கணும். அப்பறம் உன்னோட கலக்கணும்” என்று கண் சிமிட்டிச் சொல்ல, அவன் இடுப்பில் வலிக்கக் கிள்ளி வைத்தாள் அவன் மனைவி…

 

“ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ, என்னடி ராட்சசி கிள்ளுற வலிக்குது, வர வர ரொம்ப தான் அடிக்கிற நீ” என்று இடையைத் தடவி விட்டுக்கொண்டான்.

 

“பின்ன அப்பாவும் புள்ளையும் என்ன பேசுனீங்கனு கேட்டா பதில் சொல்லாம இப்படி வாலுத்தனம் பண்ணிட்டு இருந்தா கிள்ளாம கொஞ்சுவாங்களா?” என்றாள்.

 

“அதத் தான் சொல்லாம டைவேர்ட் பண்ணுறேன்ல விடேன்டி” என்று அதுவரை நேரமும் மனைவியைப் பார்த்தபடி ஒருங்கழித்து படுத்திருந்தவன் இப்போது விட்டதைப் பார்த்தபடி படுத்துக்கொண்டான்.

 

அதில் அவன் ஏதோ மனதுக்குள் உருட்டுகின்றான் என்று புரிந்தவள் “என்னாச்சு தேவ், மகிக்கு என்ன?” என்றாள்.

 

“சரியா தெரியலடி, ஆனா அவன் ஏதோ குழப்பதுல இருக்கான், ரொம்ப எமோஷனலா பேசுறான். எதையோ உள்ளுக்குள்ள போட்டு வருத்துறான்னு நினைக்கிறேன். எனக்கிட்ட சொல்லக்கூடிய விஷயம்னா அவனே சொல்லி இருப்பான், இது வேற ஏதோ அதான் என்னனு புரியல” என்றவனின் குரலில் மிதமிஞ்சிய வேதனை தான் ஒளிந்திருந்தது.

 

“நாளைக்கு நிச்சயம்ல தேவ்  இன்னும் இனியாகிட்ட இந்த விஷயத்த சொல்லவே இல்லைனு அந்த டென்ஷனா கூட இருக்கலாம்ல, நீங்க ரொம்ப யோசிக்காம தூங்குங்க” என்றாள்.

 

“ம்ம்ம் ஒருவேளை அப்படியும் இருக்கலாம், யாழ் அங்க கோயில் வரைக்கும் போயிருக்கான்டி வந்ததும் தூங்குறேன்” என்றான்.

 

அவனை முறைத்தவளோ “அவன் பெரிய பையனா வளர்ந்துட்டான் தேவ். இப்போவும் உங்ககிட்ட சொல்லிட்டு எல்லாம் செய்யணுமா, நீங்க மகிய இன்னும் அதே பன்னிரெண்டு வயசு மகியா தான் பார்க்குறீங்க தேவ், கொஞ்சம் உங்க பார்வைய மாத்துங்க. அவனை உங்க கைக்குள்ளயே வெச்சிக்க முடியாது. அவன் வாழ்க்கைய அவன் வாழணும்ல. நாம வழி கட்டணுமே ஒழிய வழியா நாமளே இருக்கக்கூடாது”  என்றாள் அவனுக்குப் புரியும் படி…

 

“புரியிது யாழ் ஆனா ஏதோ ஒரு பயம் என்னனு சொல்லத் தெரியல உன் அண்ணன் வேற என்ன பண்ணுவாரோன்னு இருக்கு” என்றான்.

 

“அவர நெனச்சு என்னங்க பயம், அவரால எல்லாம் எதுவும் பண்ண முடியாது. அவர் வீரம் எல்லாம் பதிமூணு வருசத்துக்கு முதல் அந்த முரட்டுக் காளைய ஜெயில்ல பிடிச்சு போட்டதோட போயிடிச்சு, இப்போ எல்லாம் வெட்டிப் பந்தா தான்” என்று அவள் சொல்ல,

 

அவனோ “அது சரி ஆமா அந்த முரட்டு பீஸ் இப்போ என்ன பண்ணுது?” என்றான் கேள்வியாக…

 

“நானும் அந்தப் பீஸத் தேடித் தான் வந்தேன். போன மாசம் இனியாகிட்ட ஏதோ தப்பா பேசுனானாமே! அவ ரெண்டு அறை கொடுத்திருக்கா தான், ஆனா எனக்கு மனசு கேக்கல இன்னும் ரெண்டு வைக்கலாம்னு ஆர்வமா வந்தேன். ஆனா பாருங்க ரெண்டு பொண்டாட்டி ஊரெல்லாம் வப்பாட்டின்னு சுத்தி கண்ட நோயையும் வாங்கிட்டு வந்துட்டானாம், இப்போ அடங்கி ஒடுங்கி போய்க் கிடைக்கனாம், அந்தச் செத்த பாம்ப ஏன் அடிப்பானேன்னு  நானும் விட்டுட்டேன், கடவுளே தண்டனை கொடுத்தவனுக்கு நாம வேற ஏன் கொடுக்கனும்” என்றாள்.

 

“ஓஹோ, தப்புக்குக் கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பாரு யாழ்… அவனால நம்ம யாழ் நிச்சயத்துல எந்தப் பிரச்சனையும் வராதவரை  நல்லது” என்று பதில் சொன்னவன் மீண்டும் ஏதோ யோசனையில் சூழல,

 

விட்டால் இந்த எண்ணத்திலேயே கணவன் மனதை குழப்பிக்கொள்வான் என்று உணர்ந்த மனைவியோ மனதை மாற்ற எண்ணி,

 

“எங்க ரெண்டு பேருக்கும் ஒரே பெயரை வெச்சி படுத்துறீங்க தேவ், யாரை பேசுறீங்கன்னு கேக்குறவங்க குழம்ப போறாங்க பாருங்க” என்றாள்.

 

அவனோ புன்னகைத்தபடி “என்னோட ரெண்டு யாழும் என்னோட ரெண்டு கண்ணு, கண்ணுல ரெண்டும் ஒரே போல இருக்குறது மாதிரி பெயரும் ஒன்னா இருக்கு அவ்வளவு தான், உங்களுக்குப் புரியுதுல நான் எப்போ யார பேசுறேன்னு அது போதும்” என்றான்.

 

___________

 

இதே நேரம் அங்கே கோயிலுக்குள் நுழைந்த மகிழின் உள்ளம் அதுவரை இருந்த அழைப்புறுதல் அடங்கி அமைதி பெற்றது.

 

எதுவுமே பேசவோ கேட்கவோ தோன்றாமல் நிறைந்த மனதுடன் பைரவன் முன்னே கண் மூடி நின்றிருந்தான்.

 

மித்ரனின் வாழ்வு மட்டுமன்றி அனைவரின் வாழ்வும் சீரான உணர்வு…

 

உலகையே பேரழிவிலிருந்து காத்து, இன்று தன்னுள் நிம்மதியை நிலைக்கச் செய்திருக்கும் கடவுளுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதுமா என்ன?

 

அவனுக்கும் மற்றவர்களைப் போல் நடந்தது எதுவுமே ஞாபகம் இருந்திருக்காவிடின் இந்தச் சரித்திர உண்மை இயற்கையோடு மறைந்தே போயிருக்குமே!

 

தனக்கு தெரிந்ததும் ஏதோ ஒரு நன்மைக்கே என்று அவன் உள்ளம் எண்ணிக் கொண்டிருந்தது.

 

சிறிது நேரத்தில் அருகே யாரோ நிழலாடும் உணர்வில்  கண்களைத் திறந்தவன் முன்னே அவனவள்…

 

“ஸ்பைசி இங்க என்ன பண்ணுறடா?” என்று இனிமையாய் அதிர்ந்தான் அவன்…

 

அவளோ இப்போதும் பதில் சொல்லாமல் அவனை முறைக்க, “என்னாச்சுடா, எதுக்கு இந்த நேரத்துக்கு இங்க வந்திருக்க” என்று மீண்டும் அவன் வினவினான்.

 

அவன் கேள்விக்குப் பதில் சொல்லாதவளோ “எதுக்காகப் பொய் சொன்னீங்க மகி மாமா?” என்று கேள்வியாகக் கேட்டாள்.

 

அவனோ என்னவென்று புரியாமல் “என்னடி என்ன பொய்” என்று கேட்டு வைத்தான்.

 

“அதான் இல்லாத உங்க காதலி” என்று உதட்டைச் சுருக்கி அவள் சொன்ன விதம் அவனுள் புதிய கவிதை தான்.

 

“இல்லாத காதலியா? என்னோட காதலிக்கு அழகா ரெண்டு கண்ணு அதோட குட்டியா ஷார்ப்பா மூக்கு, இது எல்லாம் விடத் தேன் தான் கொட்டுதோனு சந்தேகப்படும் படியா பலாச்சுளை போல ரெண்டு இதழ்கள்” என்று அவளை முழுங்கி விடும் பார்வையோடு அவன் வர்ணிக்க, அவளோ அவன் பார்வையை தாங்க முடியாமல் தடுமாறினாள்.

 

“இப்படி எல்லாமே அம்சமா இருக்குற அவளைப் போய் இல்லாத காதலினு சொன்னா எப்படிமா?” என்றான் குறும்பு மின்ன…

 

அவளோ ஒருவாறு தைரியம் வந்தவளாக “நான் லவ் சொல்ல வந்த நேரம் இதெல்லாம் ஒத்துகிறதுக்கு என்ன மாமா உங்களுக்கு,  அன்னைக்கு என்ன அழ வெச்சிட்டு இப்போ இவ்வளவு காதலக் காட்டணுமா?” என்று கோபமாய் கேட்கப் போனவளின் குரல் சற்று உடைந்தே வந்தது.

 

“டேய் ஸ்பைசி” என்று அவளை நெருங்கியவன் ஒரு கரத்தால் அவள் கரங்களை அழுத்தி, அதில் அழுத்தம் கொடுத்தவனோ,

 

“இது ஏற்கனவே பண்ணுன பிளான்டா சக்கரக்கட்டி, அப்பறம் எப்படி உடனடியா ஒத்துகிறதாம்… நாளைக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துடலாம் நீ ரொம்ப ஹாப்பி ஆவன்னு பார்த்தா உனக்கு இப்போவே தெரிஞ்சிடிச்சு, எப்படிடா கண்டு பிடிச்ச, அதான் சீக்ரெட்டா வெச்சிருந்தோமே” என்றவனுக்கு அவள் கையில் மறைத்து வைத்திருந்த அவனது நாட்குறிப்பைக் காட்டினாள்.

 

அவனோ கேள்வியாய் அவனையே பார்க்க, அவளோ அந்த நாட்குறிப்போடு இருந்த பொம்மியின் கழுத்தில் போடப்பட்டிருந்த மணியைக் காட்டினாள்.

 

“அட அந்தப் பொம்மி குட்டிட வேலையா இது?” என்று நெற்றியை நீவியவனோ “மண்டைல இருந்த கொண்டைய மறந்துட்டோம் மொமெண்ட்ல” என்றான்.

 

அதில் அவளுக்கும் லேசாய் புன்னகை எட்டிபார்த்தது.

 

“ஃபுல்லா படிச்சிட்டியா ரசகுல்லா?” என்றான் சற்று உட்சாகம் கலந்த குரலில்…

 

“ம்ம்ம்ம்” என்றவளோ “அதென்ன ஸ்பைசி விட்டுட்டு இப்போ சக்கரக்கட்டி ரசகுல்லானு புதுப் புதுப் பெயர்?” என்று கேட்டவளுக்கு வெட்கத்தை மறைக்க முடியாமல் போனது…

 

“அதுவாடி என் குலாப் ஜாமுனே, முன்னாடி தான் ஸ்வீட் பிடிக்காது அதனால ஸ்பைசி இப்போதான் என் அம்மா கூடவே இருக்காங்களே ஸ்வீட் ரொம்ப பிடிக்குமே!” என்றவனை புரியாத பார்வை பார்த்து வைத்தாள்.

 

அவள் பார்வையைக் கண்டவனுக்கு அதன் பின்னே தான் உளறியது புரிய,

 

‘அடேய் மகி கவனமா பேசுடா’ என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவனோ,

 

“என் பொண்டாட்டிய நான் எப்படி வேணா கூப்பிடுவேன். தோணுற பெயர் எல்லாம் சொல்லுவேன். தோணுற நேரம் மென்னு கூட முழுங்குவேன், ஸ்வீட்டோட சேர்த்து இனிப்பான அவளையும்” என்றவனின் விழிகளில் எல்லை இல்லாத காதல்…

 

அந்தக் காதலில் அவளும் கட்டுண்டு தான் நின்றிருக்க,

 

“மேடம் என்ன எப்படிக் கூப்பிடுவீங்க?” என்று கேட்டவனுக்கு “மகி மாமானு தான்” என்றாள் அவள் பதிலாக….

 

“ம்ம்ம்கூம்” என்றவன் “நான் உன்னோட ஸ்மைல் இல்லையா?” என்று கேட்க, அவளோ தான் கோலி குண்டுக் கண்ணை இன்னும் பெரிதாக விருத்தவள்

 

“என்னோட டயரி கள்ளத்தனமா படிச்சியா மாமா?” என்று கோபமாய் கேட்க, அதில் உல்லாசமாகப் புன்னகைத்தவனோ எதுவும் சொல்லாமல் அவளை அணைத்துக்கொண்டான்.

 

அவன் அணைப்பில் மற்றது மறந்தவளோ அவன் அணைப்பில் தன்னைக் கொடுத்து நின்றாள்.

 

அணைப்பு நீண்டு கொண்டே தான் போனது. இருவருக்கும் அடுத்தவர் அருகாமை அந்த ஷனத்தில் தேவையான ஒன்றும் கூட, மகிழுக்கோ இரண்டு வருட பொத்தி வைத்த காதல் கைக்கூடுமா என்று தவித்த காலம் எல்லாம் போய் அவன் காதல் அவன் கரங்களினுள் சுகமாய் அவனை ஆட்கொண்டிருந்தது.

 

அடுத்த சில வினாடிகளின் பின் அவள் அணைப்பில் இருந்து விடுபட்டவன், அவளை நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றைப் பதித்தவன் அதிலேயே சில நொடி இளைப்பாறி, மீளவே மனமின்றி அவளிலிருந்து விலகியவன்,

 

“ஜோடியா பைரவர் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோவோமா?” என்று கேட்க, தலையசைத்தவளின்  சம்மதத்தில் அவளுடன் பைரவர் அருகே விரைந்து தம்பதி சகிதமாய் ஆசீர்வாதமும் வாங்கிகொண்டான்.

 

இனியாவோ கண்மூடி அவர்களது நல் வாழ்வுக்கான பிரத்தனையில் இருக்க,

 

மகிழ் பைரவரையே கண் மூடாமல் பார்த்திருந்தவன் ‘எனக்கு எப்போவும் நீ நல்லது தான் பண்ணி இருக்க, உனக்கிட்ட எனக்காக கேட்டு வாங்கிக்க இப்போ எதுவுமே இல்ல… இந்த பழைய ஞாபகங்கள் நீதான் எனக்கு கொடுத்த,  அது என் நினைவுல இருக்குறது மன நிறைவு தான். ஆனா எனக்கும் அது எல்லாம் இல்லாம வாழ தோணுது. என்னைக்காவது என்னை மீறி கூட அந்த ரணம் என்னை சார்ந்தவங்க வாழ்க்கைல வேணாம். அதை இப்போ நீயே திருப்பி வாங்கிக்கிட்டா சந்தோஷப்படுவேன்’ என்று எண்ணிவன் மனதார பைரவரை வணங்கியும் கொண்டான்.

 

அடுத்த சில வினாடிகளில் அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்து வெளியே செல்ல, கோயிலில் அசைந்த மணிகளும், அங்கிருந்த மரத்திலிருந்து விழுந்த மலர்களும் அவர்களை ஆசீர்வதித்திருந்தது.

 

கூடவே பைரவர் சிலையும் அவர்கள் கேட்டதை கொடுப்பேன் என்பது போல, கண் திறந்து புன்னகைக்க, அவர்கள் எதிர்காலம் அவர்களுக்காய் விரிந்து காத்திருந்தது.

 

காதலை அணைக்கும்…

 

ஆஷா சாரா…

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்