Loading

 

காதலைத் தேடிய பயணம் 04

 

நள்ளிரவு காரில் மெல்லிசையை ஓடவிட்டவனது கண்கள் வீதியில் நிலைத்திருக்க, கரமோ காரை ஓட்டியபடியே தாளமிட்டுக் கொண்டிருந்தது.

 

நெஞ்சை ஏதோ பிசைவது போல் தோன்ற, கரங்களோ தடைகளையும் தாண்டி ஏதோ ஒரு எண்ணை உயிர்ப்பித்துக் காத்திருந்தது.

 

இந்த நேரத்தில் எடுக்க வேண்டாம் என்ற எண்ணங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியிருக்க, இதோ அழைப்பும் சென்று கொண்டிருந்தது.

 

அவன் எதிர்பார்த்தது போல அந்தப் பக்கம் அழைப்பு உயிர்பிக்கப்பட “அப்போ தூங்கல அப்படித் தானே” என்றான் சற்று உயர்ந்த குரலில்..

 

அந்தக் குரலில் இருந்த உணர்வு அந்தப்பக்கம் இருந்த நபருக்குப் புரிய, அங்கே மௌனம்.

 

“உன்னைத்தான் கேக்குறேன் யாழ். காது கேக்குதுல?” என்று மீண்டும் குரலை உயர்த்த, இந்த முறை மௌனம் எடுபடாது என்பதை உணர்ந்த நபரோ “ப்ப்பா” என்று அழைக்க, அந்தக் குரலிலோ ஒரு உடைவு.

 

“உன் மித்து, இப்போ தான் அப்பா ஆனேனா?” என்று கேட்டவனது குரலிலும் ஒரு உடைவு, மகன் உடைந்திருக்கும் வேளைகளில் மட்டும் தானே ‘அப்பா’ என்ற இந்த அழைப்பு வரும்.

 

“எப்போ வருவ மித்து” என்றான் அந்தப்பக்கம் இருந்தவன்.

 

இவனோ “மார்னிங் அங்க இருப்பேன் யாழ், எதையும் நினைச்சு மனசக் குழப்பிக்காத.  அந்தப் பொண்ணப் பத்தின நினைவுகளை கொஞ்சம் தள்ளி வை யாழ். எத்தனை வருசமா இதுக்காக உடைஞ்சி உக்கார போற” என்று கேட்டான்.

 

மகனோ “அவ உயிரோட இருப்பாளா ப்பா” என்று உள்ளிறங்கிய குரலில் கேட்க,

 

காரில் இருந்தவனோ “நிச்சயம் உயிரோட இருப்பா யாழ். என் பையனோட எண்ணங்கள் எல்லாமே கைகூடும்” என்று சிறிது நிறுத்தியவன் குரலைச் செருமியபடி “இந்த அப்பா உயிரோட இருக்குறவர நிச்சயம் கைகூடும்” என்று முடித்திருந்தான்.

 

அந்தப்பக்கம் “தேங்க்ஸ் மித்து” என்று பதில் வர,

 

“அது சரி பொம்மி உன் பக்கத்துல இல்லையா?” என்றான் தந்தையாகப்பட்டவன்.

 

மகனோ “இருக்கா, என் பக்கத்துல என் கைவளைவுல தான்” என்றான் பெருமூச்சுடன்.

 

“நீ ஒரு பொண்ணப் பத்தி பேசுறது தெரிஞ்சும் சும்மா இருக்காளா? மெடிக்கல் மிராக்கில்” என்று சிரிக்க,

 

மறுமுனையில் இருந்தவனோ “இன்னைக்குத்தான் அவளே சும்மா இருக்கா உனக்குப் பொறுக்காதே! சீக்கிரம் வந்து சேரு, பாய்” என்று அழைபேசியைத் துண்டிக்க, இவனோ புன்னகையுடன் வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினான்.

 

சற்று தூரத்தில் வாகனம் ஒன்று சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்க, இவனது வாகன வெளிச்சத்தில் அங்கே சிதறிக் கிடந்த பொருட்கள் கண்ணில் பட்டது.

 

அதனைக் கடந்து சென்றவனின் உள்ளம் ஏதோ தவறென உரைக்க, மீண்டும் அவ்விடத்துக்கு காரைப் பின்னால் செலுத்தியவன் நிறுத்தி இறங்கிக் கொண்டான்.

 

காரினையும் சிதறி கிடந்த பொருட்களையும் பார்த்தவாறே அவற்றைத் தாண்டியிருந்த மரங்களுக்கு இடையே இறங்கி நடக்க, யாரோ முணங்கும் சத்தம்.

 

சட்டெனச் சத்தம் வந்த இடத்தை நோக்கிக் காதைக் கூர்மையாக்கியபடி விரைந்தவனுக்கு, கயவர்கள் இருவர் ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயல்வது புரிய,  அங்கே விரைந்து சென்றான்.

 

குடிபோதையில் இருந்த இருவரையும் தாக்குவது ஜிம் சென்று உடலைக் கச்சிதமாய் வைத்திருக்கும் அவனுக்கு ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை, அவனைக் கண்டு அவர்கள் தான் மிரல வேண்டியிருந்தது.

 

அடுத்து கடந்த நிமிடங்களில் இருவரையும் அடி வெளுத்தவன், முகத்தைப் பார்க்க விழைய, அவர்களோ கையில் சிக்காமல் தப்பினோம் பிழைத்தோம் என ஓடியிருந்தனர்.

 

அவர்கள் சென்றதும் அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி “ஆர் யூ ஓகே மா?” என்று கேட்டவன், அவள் எழ கைக்கொடுக்க,

 

அவளும் அவன் கையைப் பற்றி எழுந்து கொண்டவள் “எனக்கொன்னும் ஆகலண்ணா” என்றாள் மெல்லய குரலில்..

 

அவர்கள் அவளைப் பலவந்தப் படுத்த முயன்ற நேரமே அவன் வந்திருக்க, பெரிதாய் அவளுக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை புரிந்து கொண்டவனிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு.

 

ஆனால் அவர்களின் வெறிச் செயலால் அவள் தாவணி சற்று கிழிந்திருந்தது. அதனை கை கொண்டு அவள் மறைக்க போராடிக் கொண்டிருப்பது புரிய,

 

“வா மா, அங்க கார்ல என் ஷேர்ட் இருக்கு தரேன்” என்றவன் முன்னே நடக்க, பேதையும் அவன் பாதம் சென்ற வழி அவன் பயணத்தை தொடங்கினாள்.

 

அவள் பதற்றத்தை உணர்ந்தவனோ அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு “என்னை அண்ண்ணா சொன்ன? நல்லா சொன்ன போ, இத என் பையன் கேட்டான் ரெண்டு நாளைக்கு பொறாமைல பொங்குவான்” என்று சிரித்தான்.

 

அவளுக்கு என்னவென்று புரியவில்லை என்றாலும் அவனுக்காக மெல்ல முயன்று இதழ் பிரித்தாள்.

 

அவளுக்குப் புரிந்தது என்னவோ அவன் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தந்தை என்று சொல்ல வருகிறான் என்ற எண்ணம் தான்.

 

“ஓகே இப்போ என்ன பண்ணலாம்னு நீ தான் சொல்லணும் ” என்றவன் மெல்ல வேகத்தைக் குறைத்து அவளருகே நடந்தப்படியே கேட்க, அவளிடமோ மௌனம்.

 

அவளுக்கே அந்தக் கேள்விக்கான பதில் தெரியாத போது எங்கிருந்து  பதில் சொல்ல…

 

சற்று முன் நடந்தவைகள் நினைக்கவே உள்ளம் பதறியது அவளுக்கு…

 

அந்த நினைவுகளின் தாக்கத்தில் இன்னும் அவள் உடல் நடுங்கி கொண்டே தான் இருந்தது.

 

அவளை அந்த ஓநாய்கள் குதற முன்னரே அவன் தான் ஆபத்பாந்தவனாக வந்து காத்திருந்தானே,  அந்த ஒரு நிம்மதி மட்டுமே இப்போது அவளிடம்…

 

அவன் பின்னே வந்தவளும் காரின் அருகில் வர, அந்தக் கயவர்களின் வாகனம் அங்கு இருக்கவில்லை, கூடவே அதிலிருந்த விலாசத்துடன் மொத்தமாய் அவளது பையும் அவர்கள் காருடன் காணாமல் போயிருந்தது.

 

நிராயுதபாணியாய் யுத்த கலம் செல்லும் நிலைதான். அவளுக்கென இருந்த ஒரே பிடிப்பு அண்ணியின் தோழி சரண்யா தான்.

 

ஆனால் இனி அதற்கும் வழி இல்லை, கூடவே சற்று முன் நடந்த விடயத்தின் பின், அவளிடமிருந்த சொற்ப தைரியமும் காற்றில் கரைந்த உணர்வு.

 

கண்ணிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிய, அவன் முன்னே கைகையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தாள்.

 

அவனோ காரினுள் இருந்த அவனது சட்டை ஒன்றை அவளிடம் கொடுக்க, தயக்கத்துடனே வாங்கிக்கொண்டவள் அணிந்து கொண்டாள்.

 

அவளுக்குக் குடிக்க நீரைக் கொடுத்து, அவள் குடித்து முடிக்கும் வரை பொறுமை காத்தவன் “எங்க போகணும்னு சொல்லுமா நானே ட்ராப் பண்ணிடுறேன்” என்க, அவளிடம் மௌனம்.

 

பதில் இல்லாமல் தொடர்ந்த அவளது மௌனம், அவனுக்கு எதையோ உணர்த்த, “வீட்ட விட்டு வந்துட்டியா?” என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.

 

அவளோ “ம்ம்” என்றாள் மெல்லிய குரலில்,

 

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு ‘அந்தக் கயவர்களில் ஒருவர் தான் காதலனாக இருக்குமோ?’ என்றொரு ஊகத்துக்கு அவனாக வந்தவனுக்கு, அதனைக் கேட்டுச் அவளை சங்கடப் படுத்தத் தோன்றவில்லை..

 

“இப்போ என்ன பண்ண போறமா,  வீட்ல பேசி நானே விட்டுடவா?” என்க, அவளோ பயந்துடனும் அருவெறுப்புடனும் சட்டென இல்லையெனத் தலையசைக்க, அவன் பார்வையோ கேள்வியாக அவளை நோக்கியது.

 

அவளும் “எனக்கு நாளைக்கு கல்யாணம், அது எனக்கு வேண்டாம். காப்பாத்துனதுக்கு நன்றி” என்றவள் மெல்ல முன்னே நடக்கத் தொடங்கினாள்.

 

அவனோ எப்படி அழைக்க என்று அவள் பெயர் தெரியாமல் தடுமாறியவன் “டோல்” என்று அழைத்தான்.

 

அவளைப் பார்த்தபோது அவனுக்கு ஒரு குட்டி பொம்மைபோல் தான் தோன்றினாள் அவள். அதனால் யோசிக்காமல் அழைத்துவிட்டான். அவனுக்கோ அவள் ஏதோ அவனுக்கு பரீட்சயம் போல ஒரு தோற்றம். அவனுக்கு நெருக்கமான ஒருவரை நினைவு படுத்துவதாய் தான் இருந்தது.

 

ஏன் அப்படி அழைத்தோம் என அவனுக்கும்  தெரியவில்லை, ஆனால் மனம் உந்தியதில் அழைத்துவிட்டான்.

 

ஆனால் அவள் காதிலோ அவனது அழைப்பு விழுந்தால் தானே!

 

இரண்டு எட்டுக்களாக ப் பெரிதாய் வைத்து அவளை நெருங்கி அவள் முன்னே நின்றவன், எதையும் யோசிக்கவில்லை..

 

இப்படி அவளைத் தனியே விட்டுச்செல்ல மனம் இடம் கொடுக்காததால் “அங்கிள் கூடவே வரியா?” என்று கேட்க,

 

அவளோ அவனை விரித்திரமாகப் பார்த்ததில், புரிந்து கொண்டவன் “என்னத்தான் சொன்னேன் என்கூட வரியா? என் வீட்டுக்குப் போகலாம். மீதி அங்க போய் என்னனு யோசிப்போம். இப்படி அன்டைம்ல இங்க நிக்குறது சரியா படல” என்றான்.

 

அவளுக்கும் ‘ஆம்’ என்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை, மறுக்கும் நிலையிலா இருக்கிறாள் அவள்??

 

ஆனால்  அவளுக்கோ ஒரு தயக்கம், கைகளை பிசைந்தபடியே நின்றவளின் அனாதரவான நிலை அவனுக்குப் புரிய, மௌனமாய்  அவள் முடிவு எடுக்கட்டும் என்று அவளுக்கான நேரத்தைக் கொடுத்தான்.

 

அவள் எப்படி சரி என்பாள்? சற்று முன்னர் இப்படித்தான் தனியே நின்றிருந்தவளின் முன்னே வந்து ஒழுக்கமாய் பேசியவர்கள் காரில் ஏறிய சிறிது நேரத்திலே அவர்களது உள்ளத்தின் நிறத்தை காட்டி இருக்க, நம்பிக்கை எப்படி வரும்???

 

ஆனால் அவளை காப்பாற்றி அவள் முன்னே நிற்கும் மனிதன் மீது அவளுக்கு சந்தேகம் சிறிதும் எழவில்லை, மாறாக ஒரு தயக்கம் அவளிடம்…

 

அவளது மனநிலை அவனுக்கும் புரிவதைப் போலத்தான் இருந்தது.

 

“இங்கப் பாருமா, உன் மனநிலை எனக்கு நல்லாவே புரியுது, ஆனா என்னை நீ நம்பலாம்” என்றவன் காரினை திறந்து உள்ளே இருந்த ஒன்றை தேடி எடுத்து அவள் கையில் கொடுத்தவன்,

 

“உனக்கு நான் ஏதாச்சும் பண்ணிடுவேன்னு பயமா இருந்தா தாராளமா இதவெச்சு என்னை குத்திடு, ஓகேயா?” என்று சொல்ல, அவளோ கரத்தில் இருந்த கத்தியைப் பயத்தில் கீழே போட்டவள், எதுவும் பேசாமல் அவனது காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

அதுவே அவள் மனதை அவனுக்கு எடுத்துரைக்க, அவள் நம்பிக்கை உணர்ந்து கொண்டவன், மென் புன்னகையுடன் சென்று காரை உயிர்பித்திருந்தான்.

 

அடுத்த அரைமணி நேரத்துக்கு அங்கே அமைதி மட்டுமே!

 

 

வாகனம் ஓட்டிக்  கொண்டிருந்தவனோ  தன்னருகே அமர்ந்திருந்தவளின் முகம் நோக்கி “உன் பெயர் என்னமா?” என்றான்.

 

அதுவரை இருந்த அமைதி கலைந்ததில் அவளும் மெல்லிய குரலில் “இனியாள்” என்றாள்.

 

“நைஸ் நேம்” என்றவனுக்கு சட்டென மூளையில் ஒரு முகம் மின்னி மறைந்தது.

 

அந்த யோசனைகளை விரட்டியவன் மீண்டும் “எந்த ஊர்?” என்று கேட்டு அவளையே பார்த்திருக்க, அவளுக்கோ பதில் சொல்ல ஒரு தயக்கம்.

 

எங்கே சொன்னால் தன்னை ஊரில் கொண்டு விட்டு விடுவானோ என்றொரு பயம் அவளுக்கு…

 

உயிர் தன்னை விட்டுப் போகும் சூழ்நிலை ஆயினும் மீண்டும் அங்கே செல்லும் எண்ணம் தான் அவளுக்குச் சிறிதும் இல்லையே!

 

தொடர்ந்த அவளது மௌனம் அவனுக்கு எதையோ உணர்த்த, புரிந்து கொண்டவனும்,

 

“அதுசரி என் பெயர் என்னனு கேட்க மாட்டியா?” என்றான் அவன், பேச்சை மாற்ற எண்ணி..

 

அவளும் “பெயர் என்ன?” என்றாள் அவன் பேச்சுக்குக் கட்டுப்பட்டவள் போல,

 

அதில் சிரித்தவன், “ரொம்ப ஆர்வமா கேக்குறடா” என்றான், ஏனோ தானோவென்று அவள் கேட்ட தொணியில் சிரிப்பாக..

 

“என் பெயர் தேவ் மித்ரன், யாழனோட அப்பா” என்றவனுக்கு மகனின் பெயரும் எப்போதும் போல அவன் அறிமுகத்தில் சேர்ந்து ஒட்டிக் கொண்டது.

 

அவளோ பதிலுக்கு இதழ் பிரித்துச் சிறு புன்னகையை வெளிவிட,

 

அவனோ “ஓகேமா நீ படுத்துக்கோ சென்னைக்கு போய் என்ன பண்றதுனு பார்த்துக்கலாம்” என்றவன் காரை மிதமான வேகத்தில் செலுத்தத் தொடங்க,

 

அவளது பதினெட்டு வருட போராட்டத்தையும் தாண்டிய ஓய்வு மனதுக்குத் தேவைப்பட்டதில், இருக்கையில் தலைசாய்த்து கண்களை மெல்ல மூடிக்கொண்டாள்.

 

இதோ அவள் பயணம் புது அத்தியாயத்தை நோக்கி அந்தப் புதியவனுடன் தொடர்ந்தது..

 

இந்தப் பயணம் அவளுக்கு எதை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறதோ???

 

காதலைத் தேடும்…

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்