
காலம் தாண்டிய பயணம் 27
அடுத்து கடந்த இரண்டு நிமிடங்களும் மௌனமாகப் பார்வையூடே கடக்க, அதற்கு மேல் பொறுமை இல்லாமல் எழுந்து அவளருகில் சென்றவனோ, அடைத்திருந்த கதவைப் பார்த்துப் புன்னகையுடன் ‘தேக்ங்ஸ் யாழ்’ என்று மகனுக்கு நன்றியை மானசீகமாய் தூதனுப்பினான்.
நெருங்கியவனை நிமிர்ந்து பார்க்காமல் அவள் தவிக்க,
“யாழ்” என்ற மித்ரனின் அழைப்புக்கு அவளிடம் மௌனம்.
அவன் மீண்டும் அழைத்தும் பதில் பூஜ்ஜியம் தான்.
அவள் கரத்தைப் பற்றியவனோ “என் வாயாடிக்கு என்னோட பேசாம கூட இருக்கத் தெரியுமா?” என்றவனின் கேள்விக்கு அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் நீர்…
அவன் விம்பத்தை மறைத்த கண்ணீரைக் அவள் உள்ளிழுக்க, “பதிமூனு வருசமா நீ இல்லாத தனிமை என்ன கொன்னுடிச்சு யாழ். இனிமேலும் அந்தத் தனிமை வேணாமே! உன்னோட இருப்பை என்னோட ஒவ்வொரு செல்லும் உணரணும். உன்னோட குரல் என் காதுல கேட்டுட்டே இருக்கனும். நீ இல்லாத ஒரு நொடி என் வாழ்க்கைல இனிமேல் எப்பவுமே எனக்கு வேணாம். சோ என்ன இறுக்கிக் கட்டி, என்னை உன்னோட தேவ்வா மாத்திக்கோ யாழ்” என்றவனின் குரலில் தெரிந்த ஏக்கம் அவளையும் தாக்க,
“தேவ்” என்ற கேவலுடன் அவனை முடிந்த மட்டும் நெருக்கமாய் அணைத்துக்கொண்டாள்.
அவள் அணைப்புக்கு சுகமாய் தன்னைக் கொடுத்து நின்றிருந்தான் அவன்.
அந்த நொடி அவன் காயத்தை அவளும் மறந்தாள் அவனும் மறந்தான்.
அவள் அணைப்பு இன்னும் இறுக, இவனுக்கு வலித்தது.
ஆனாலும் அந்த வலி அவனுக்கு வேண்டும்…
அவள் அண்மையை உணர்த்தும் அந்த வலி அவனுக்கு இன்பமே!
ஒவ்வொரு நாளும் இரவின் தனிமையில் அவள் இல்லாத பொழுதுகளின் வலியைப் போதும் போதும் என்ற அளவுக்கு அனுபவித்தவனுக்கு, அவளால் உண்டாகும் இந்த வலி சுகமான சுமை தானே!
நேரம் செல்ல, அவள் வன்மை குறைந்து மென்மையாய் ஒரு அணைப்பு…
விலகவே தோன்றாமல் அவள் அப்படியே நிற்க, காது மடலில் இதழ் கொண்டு உரசியவனோ “யாழ், இப்படியே இருந்துடலாமா? அணைப்பு மட்டும் போதுமா?” என்று மெல்லிய குரலில் கேட்க, வெட்கம் கொண்டவன் அவன் நெஞ்சில் இன்னும் சாய, அப்போதுதான் அவன் வயிற்றில்இருக்கும் காயம் அவள் எண்ணத்துக்கே வர, பட்டென்று அவனை விட்டு நகர்ந்தாள்.
நகர மட்டுமே அவளால் முடிந்தது. மீண்டும் அவன்மீது மோதியவளை அணைப்பது இப்போது அவன் முறையானது.
“தேவ் காயம்” என்றாள், அவன் அணைப்பை தடுத்தபடி…
“சோ வாட், எனக்கு என் யாழ் எனக்குள்ள வேணுமே! என் காயம் கூட என் பொண்டாட்டிய தேடுதாம்” என்றவன் மீண்டும் அணைக்க,
“அதெல்லாம் இல்லை விடுங்க என்னை, சேட்டை கூடிடிச்சு உங்களுக்கு” என்றவளின் மிரட்டல் குரலில் அவன் கரம் அவளை விடுவிக்க, மனதோ பறக்கத் தொடங்கியது.
அவனுக்கே அவனுக்கான அவளது மிரட்டல் அல்லவா அது!
“இதத்தான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன், என் வாயாடிப் பொண்ணோட மிரட்டல் இல்லாம ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்றவன் அவள் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைக்க, அவன் மனைவியோ எதையும் யோசிக்காமல் அவன் வன்மையான இதழில் அவள் மென் இதழ் கொண்டு வன்மையால் வர்ணம் தீட்டினாள்.
ஆரம்பித்தது மங்கை என்றால் அவன் கணவனவனோ விடாமல் மனைவியின் செயலைக் கையில் எடுத்திருந்தான்.
விடாமல் தொடர்ந்த முத்தம், அடுத்த சில நிமிடங்களின் பின் முற்றுப்பெற, அவளை விட்டு விலகியவனோ “எப்படி மாமாவோட ஹாட் கிஸ்?” என்றான் முன்பு எப்போதும் அவளிடம் கேட்பது போல…
யோசிப்பதைப் போல் பாவனை காட்டியவள் “கொஞ்சம் போர்ஸ் கம்மி ஆகிடிச்சே! ஒருவேள வயசாகிடுச்சுல அதனால இருக்குமோ?” என்றாள் அவளும் எப்போதும் போல் சேட்டையாய்…
அவனோ அவள் சேட்டையில் புன்னகைத்தவன் “ஏன்டி சொல்லமாட்ட, பாவம் பொண்ணு நம்ம வேற இத்தனை வருஷமா காஞ்சி போய் இருக்கோம், ஒரேடியா பாய்ஞ்சா பயந்துடுவாளேன்னு கொஞ்சம் சாப்ட்டாக் கொடுத்தா ரொம்ப தான்டிப் பண்ணுற?” என்க,
அவளது மனசாட்சியோ ‘இதுவா சார் உங்க சாப்ட்டு?’ என்ற கேள்வியுடன் மனதினுள் அவனைக் கேலி செய்ய, புன்னகைத்தவளின் கண்களில் தெரிந்த குறும்பில் அவள் எண்ணவோட்டம் அவனுக்குப் புரிந்தது.
அதில் இருவரும் புன்னகைத்து விட, மித்ரனோ “நீ அப்படியே இருக்க, எனக்குத் தான் வயசாகிடுச்சுல” என்க, அவளோ ‘அப்படியா வயசாகிடிச்சா?’ என்று தான் பார்த்து வைத்தாள்.
அவள் பார்வை புரிய, “ஜிம் பாடிமா வயசு தெரியாது. ஆனாலும் இந்த நாலு நரைச்ச முடி பார்த்துமா புரியல? நான் இப்போ இருபத்தேழு வயது தேவ் இல்லைமா… இப்போ ஐ அம் போர்ட்டி” என்றான் அவளிடம் அவன் கேசத்தில் புதிதாக முளைத்திருக்கும் நரைமுடிகளை காட்டியபடி…
அவளோ “அதுக்கு என்ன?” என்று நிறுத்த, அவள் பதில் கேள்வியில் அவன் சிரித்தே விட்டான்.
“அதுக்கு என்னவா? நல்லா கேட்ட போ. அப்பவே சைல்ட் மேரேஜ் பண்ணிட்டனு கம்பளைண்ட் பண்ணுவ இப்போ சொல்லவா வேணும்” என்றான் முகம் கொள்ளாப் புன்னகையுடன்…
“கம்பளைண்ட் தானே கொடுத்துடலாம். இன்னும் ஒரு நூறு வருஷம் வாழ்ந்துட்டு கம்பளைண்ட் கொடுத்துடலாம்” என்றாள் அவளும் அதே மனநிறைவுடன்…
“நூறு வருஷம் போதுமா தங்கமே” என்று கேட்டு அவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினான் அவன்.
அவளோ யோசிப்பது போல் பாவனை செய்தவள் “போதாது தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றாள் கெத்தாக…
அவனோ “இப்போவே எனக்கு நாப்பது, நூறு வருஷம்னா பாடி தாங்காதுமா” என்க,
“அதெல்லாம் தாங்கும், தாங்கலனா வேற காலத்துக்குப் போய்டலாம்” என்று கண் சிமிட்டி சொன்னவளை ஆதூரமாய் அணைத்துக் கொண்டான்.
அவனுக்கோ அவளிடம் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றே தோன்றியது, அவளுக்கும் அப்படியே…
மனதில் காதல் நிறைந்திருக்கையில் வயது வித்தியாசம் எல்லாம் அவர்களை சிறிதும் அசைக்கவில்லை…
‘என் தேவ் இவன்’
‘என் யாழ் இவள்’ என்ற எண்ணங்கள் தான் மனதினுள்…
அவனை மெத்தையில் அமர்த்தியவள், பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே இருந்தாள்.
“பதிமூணு வருஷமா என்னை தேடுற அளவுக்கு காதலா ஆபிசர் சார்” என்று கேலியாகக் கேட்டாலும், விழிகளில் அதன் தாக்கம் இருந்ததை தேவ்வும் உணர்ந்து கொண்டான்.
“எவ்வளவு காதல் இருக்குன்னு என் யாழுக்குத் தெரியாதாமா? காட்டிட்டாப் போச்சு” என்றவன், அவள் முகத்தை கையில் ஏந்த,
“இந்த முகத்தை பார்க்குற வரை, உன்னோட தேவ் வெறும் உடல் மட்டும் தான் யாழ், உயிர் எப்பவும் உன்ன சுத்தி மட்டும் தான்” என்றான் உள்ளார்ந்தது.
அவனது காதலை அவன் சொல்லியா அவளுக்கு தெரிய வேண்டும்???
தேவ் மித்ரன் மயக்கமாக இருந்த இந்த இரண்டு நாளில், மகிழ் அனைத்தையும் சொல்லி இருந்தானே!
அவள் இல்லாமல் தேவ் எப்படி இருந்தான் வாழ்ந்தான்? அவளுக்காக எப்படி போராடினான்? என எல்லாம் ஒன்று விடாமல் தாயிடம் சேர்த்திருந்தான்.
அவனிடம் மௌனமாக அனைத்தையும் அன்று கேட்டிருந்தவள் மனது சொன்னது என்னவோ ‘அவன் என் தேவ்’ என்பதே!!
அவன் சொல்லி இருக்காவிட்டாலும் அவளது தேவ் பற்றி அவள் அறியாததா??
இப்போது தன் முன்னே தன் முகத்தை கையிலேந்தி காதல் சொட்டும் விழிகளுடன் தன்னையே பார்த்திருந்தவன் முகம் நோக்கியவள் “தேவ் தான் தேவ் மட்டும்தான் அவனோட யாழுக்கு” என்றவள் நொடியும் தாமதிக்காமல் அவன் இதழில் நிறைந்தாள்.
முத்தமிட்டு கொண்டிருந்தவளோ அவனைக் கொன்று தின்று கொண்டிருந்தாள். அப்படியொரு வேகம் அவளுள்…
இந்த முறை அவன் இழந்த பதிமூன்று வருடங்களை திருப்பிக் கொடுக்க எண்ணினாள் போலும், அவள் முத்தத்தில் அத்தனை அழுத்தம்.
அவளது உணர்வுகள் அவனுக்குப் புரிய, அவளுக்காகத் தன்னைக் கொடுத்து நின்றிருந்தவன், நிமிடங்கள் கரைவதை உணர்ந்து அவளை தன்னை விட்டு மெல்ல பிரித்து, “இன்னைக்கு மட்டுமில்ல இனிமேல் வர்ற ஒவ்வொரு நொடியும் தேவ் உனக்கு தான்டா” என்று விஷமத்துடன் கண் சிமிட்டிப் புன்னகைத்தான்.
அவளோ அவனையே பார்த்திருக்க, “எதையும் போட்டு குழப்பிக்காத யாழ், இப்போ எல்லாமே சரி ஆகிடிச்சு” என்றான்.
அப்போதும் அவள் முகம் தெளிவில்லாமல் இருக்க, அவள் மனதை மாற்றும் பொருட்டு “டோல் கூடப் பேசுனியா யாழ்?” என்றவனின் பேச்சுக்கு “ம்ம்ம்” கொட்டினாள்.
“யாழ், என்னாச்சுடி, பேசுனியானு கேட்டேன்” என்றவன் மீண்டும் கேட்க,
அப்போதும் அவளிடம் மௌனம்… கூடவே அவள் எண்ணங்களில் இனியாவுடன் பேசிய நாள் விரிந்தது.
_______________________
மித்ரன் அன்று மயங்கி விழுந்து அவன் காயத்துக்கு மருந்து போட்டிருந்தது துயிலனும் மகிழும் தான்.
மருந்தின் வீரியத்தில் அடுத்த நாள்வரை அவன் தூக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.
இனியா மிகவும் பயந்து தான் போயிருந்தாள்.
அவன் அருகிலேயே அமர்ந்திருந்தவளை சமாதானம் செய்ய மகிழ் முயன்றாலும் முடியாமல் தான் போனது.
அதுவரை யாழினியிடம் மௌனம் தான்…
நடந்தவற்றை மனதுக்குள் ஓடிப்பார்த்து கொண்டிருந்தாள்.
அதற்கு அவளுக்குத் தனிமை தேவைபட்டது. சட்டென்று அனைத்தையும் உள்வாங்க முடியவில்லை
ஆனால் அவளைத் தனியே விடாமல் மகிழே அவளைத் தேடி வந்து பேசினான்.
ஒருவரை ஒருவர் அறியா விட்டாலும் இருவருக்கும் பாலமாய் ஒருவன் இருக்கிறானே!
அவனைப் பற்றிப் பேசி அவர்கள் ஓரளவுக்கு உறவை ஏற்றுக்கொள்ள மனதை தயார்படுத்தி இருந்தனர்.
இப்போது அவள் இருக்கும் நிலைக்கு அவளைவிட வயதில் பெரியவன் அவள் மகன், ஆனால் அது இருவருக்கும் முரணாய் தோன்றாதது தான் விந்தை…
அவர்களை இணைக்கத் தான் தேவ் மித்ரன் இன்னும் நேர் கோடு இருக்கிறதே!
முரண்களையும் நேராக்கும் காதல் எண்ணும் தேடல் இருக்கையில் எதுவும் சாத்தியமே!
இனியாவின் மனதை மாற்ற மகிழ் சென்று நின்ற இடம் அவன் தாய் யாழினி தான்.
அங்கே மரத்தின் கீழே தனியே அமர்ந்திருந்தவளை நோக்கிச் சென்றவன் “யாழினிமா” என்று அழைக்க என்னவென்று நிமிர்ந்து பார்த்தாள் அவள்…
“மா உங்க மருமக சாப்பிடாமலே உக்காந்திருக்கா போய் என்னனு கேளுங்கமா” என்றான்.
இருவரும் பேசாமல் அமைதியாய் இருப்பதைத் தான் அவனும் பார்க்கின்றானே!
இத்தனை பெரிய கால இடைவெளியைக் குறைத்து, அவர்களைப் பேச வைக்க நிச்சயம் ஒரு ஆரம்பம் வேண்டும். அது அவனாக இருக்க முடிவு செய்தான்.
அவள் சாப்பிடவில்லை என்றதும் இங்கே இவளுக்கு உருகிவிட அதற்கு மேல் தயக்கத்தைத் தூரப் போட்டவள் மருமகளை தேடிச் சென்றிருந்தாள்.
அங்கே மித்ரன் ஓய்வில் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
மித்ரனை அந்த நிலையில் பார்க்கச் சக்தி அற்றவளாகவே அவள் இங்கே வராமல் இருந்ததாள்.
இப்போது கணவனின் நிலை அவளைக் கூறு போட, கண்களை மூடித்திறந்தவளின் பார்வை வாடிய மலராக மித்ரனின் அருகே அமர்ந்திருந்த இனியாவில் படிந்தது.
பெருமூச்சை விட்டுக் கொண்டவளோ “இனிக்குட்டி” என்று அழைத்தாள்.
அதுவரை சோகமாய் உருவாய் அமர்ந்திருந்தவளை அந்தக் குரலும் அதன் உணர்வுகளும் தாக்க, நிமிர்ந்து பார்த்தவளின் முன் அவள் அத்தையின் உருவம்.
எப்படி அவள் மனதில் அத்தையின் உருவம் பதிந்து போய் இருக்கிறதோ அதே தோற்றம்.
முன்பு சிறு வயதில் யார் கைவளைவில் தூங்கினாளோ அதே உருவம்.
இத்தனை ஆண்டுகள் தாண்டி மீண்டும் தன் அத்தையே அதே போலப் பார்த்திருந்தவளிடம் பேச ஒரு தயக்கம் தொற்றிக் கொண்டதாலேயே பேசாமல் தவிர்த்திருந்தாள்.
ஆனால் இன்று தன் முன்னே வந்து தன்னை அழைக்கும் அத்தையை தவிர்க்க முடியாமல் எழுந்து நின்றவளின் கால்கள் அவள் பேச்சைக் கேட்காமல் சண்டித்தனம் செய்தது.
அத்தையானவளுக்கு அவளது இனிக்குட்டியின் தயக்கம் புரிய, எதையும் யோசிக்காமல் நேரே சென்று அவள் வளர்த்த மகளை இறுக அணைத்துக்கொண்டான்.
அந்த நேரம் அந்த அணைப்பு இருவருக்கும் தேவைப்பட்டது.
ஒருவரின் உணர்வை இன்னொருவரின் அணைப்பு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க, அப்படியொரு ஆத்மார்த்தமாய் ஒரு அணைப்பு அது…
நீண்ட அந்த அணைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது என்னவோ யாழினி தான்.
“இனிக்குட்டி, அத்தைடா என் பொண்ணு ரொம்ப வளர்ந்துட்டீங்களா? அத்தைய தெரியுதாடா?” என்று பேசுபவளையே கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் இனியாள்.
அதன் பின் யாழினியிடம் தயக்கம் இருக்கவில்லை. தோன்றுவதை எல்லாம் பேசினாள், ஆனால் இனியாவிடமிருந்து வார்த்தை ஒன்றுமே வெளியே வரவில்லை…
பேசும் அத்தையையே விழி எடுக்காமல் பார்த்திருந்தாள்.
இனியா பேசாததை உணர்ந்தவளோ “என்னாச்சுடா இனிக்குட்டி, பேசுடா அத்தை தானே, இனிக்குட்டியோட யாழி அத்தைடா” என்று தன்னை உணர்த்த முயன்றவளின் வார்த்தையில் தைரியம் பெற்றவளோ
“என்னை ஏன் அத்தை அங்க தனியா விட்டுட்டு போன? என்னையும் கூட்டிட்டு போய் இருக்கலாமே? இல்லனா கொன்னு போட்டுட்டு போய் இருக்கலாமே!” என்று தான் முதல் வார்த்தைகளை உதிர்த்தாள்.
அந்த வார்த்தைகளில் இருந்த உணர்வுகள் யாழினியை அடியோடு சாய்த்தது.
அந்த ஒரு வார்த்தை போதாதா அவள் அந்த நரகத்தில் வாழ்ந்த வாழ்க்கையை விபரிக்க…
இப்போது வார்த்தை வராமல் தடுமாறுவது யாழினியின் முறையானது.
யாழினிக்கு மட்டும் தான் பேச வார்த்தை சிக்கிக்கொண்டது ஆனால் இனியா அதன் பின் வாய் மூடவில்லை…
தன் சோகத்தை, தான் பட்ட ரணத்தின் உணர்வுகளைக் கடத்த ஒரு தோள் கிடைத்த நிம்மதியில் அத்தனையும் கொட்டித் தீர்த்தாள்.
யாழியின் மனதிலோ பாரம் சேர்ந்து கொள்ள, இது துவழும் சமயம் இல்லை என்பதை உணர்ந்தவள் இதுவரை காலமும் கிடைக்காத ஆறுதல் வார்த்தைகளை இனியாவுக்கு கொடுக்கத் தொடங்கினாள்.
அடுத்து இனியாவை சாப்பிட வைத்து, தன் மடியிலேயே தூங்க வைத்தவளின் மனது என்ன உணர்கிறது என்பதே அவளுக்குப் புரியாத நிலை…
அந்த வள்ளி காசிநாதனை இப்போதே கொன்று போடும் கோபம் அவளுக்கு…
தன் மடியில் சுகமாய் தூங்குபவளின் தலையை வருடிக் கொடுத்தவளுக்கு அன்று தூங்கா இரவாகிப் போனது.
_________________
“யாழ் என்னடி பேசமாட்டேங்குற” என்று மித்ரன் உளுக்கியதில் அந்த நினைவுகளிலிருந்து மீண்டவளோ,
“பேசினேன் தேவ், என் இனிக்குட்டி இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்து நிக்கிறானு வாயடைச்சு போய் நிக்கிறேன் தேவ், என் கூட பேசவே அவ்வளவு தயக்கம் அவளுக்கு, ஆனா நானே பேச வெச்சப்பறம் பேசினா… அவள அவங்க படுத்தின பாட்ட சொல்லும்போது அவ கண்ணு கலங்கிச்சு தேவ், அவங்க எல்லாம் காலம் எவ்வளவு கடந்தும் மாறமாட்டாங்கல்ல. இந்தப் பிஞ்சிக் குழந்தைக்கு அந்த எரும மாடு முரட்டுக்காளைய கட்டி வைக்கப் பார்த்திருக்காங்க, அதனால தான் வீட்ட விட்டே வெளியே வந்திருக்கா தேவ், நீங்க மட்டும் அப்போ போகலனா என்ன ஆகி இருக்கும்?” என்றவளின் குரல் கரகரத்தது.
“நடந்த எல்லாத்துக்கும் காரணம்னு ஒன்னு இருந்திருக்கு யாழ். நம்ம டோல் நம்மகிட்டயே வந்துட்டால்ல, கவலைய விடு, இனி எல்லாமே சுபம் தான்” என்றான் சமாதானமாக…
அவளுக்கும் இப்போது அவர்களிடமே இனியா வந்து விட்டதை நினைத்து மனம் ஆறுதல் அடையவே செய்தது.
“இனிமேல் நாம பாத்துக்கலாம் அவள” என்றவளுக்கு புன்னகையையுடன் சம்மதத்தை பதிலாகக் கொடுத்தவன், “நம்ம யாழ் அவளை இன்னும் நல்லா பார்த்துப்பான்டி” என்றிருந்தான்.
அவளோ அவனை முறைத்து பார்க்க, “என்னடா தங்கம் மாமாவ பாசமா பார்க்குற” என்று அவளிடம் இரண்டு அடிகளைப் பெற்றுக்கொண்டான்.
“ஏன்டி அடிக்கிற?” என்றவன் அவள் கரங்களை அவன் ஒன்றை கரத்தால் பற்றி அடக்கியபடி கேட்க, அவளோ மூக்குவிடைத்த கோபத்தோடு “அதென்ன ரெண்டு பேரும் யாழ்… நான் தான் உங்களோட யாழ், என்னோட பெயரை ஏன் அவனுக்கும் வெச்சீங்க?” என்றாள்.
“அடடா என் பொண்டாட்டிக்கு புள்ள மேலையே பொஷ்ஷசிவ்வா? உன்ன இழந்து தவிச்ச நேரம் எனக்குக் கிடைச்சவன், அவனை யாழ்னு தான் கூப்பிட தோணிச்சு நீயும் அவனும் எனக்கு வேற வேற இல்லடி… உன்மேல எவ்வளவு பாசம் இருக்கோ அதே அளவு அவன் மேலையும் இருக்கு. நம்ம பையன்டி அவன். உன்னால அவனை அக்செப்ட் பண்ணிக்க முடியலையா?” என்றவன் இறுதியில் கேள்வியுடன் நிறுத்த…
அவளோ அவன் வாயில் அடி ஒன்று வைத்தவள் “நான் சொன்னனா ஏத்துக்க முடியலனு. உங்களுக்குப் பையன்னா எனக்கு யாராம்? அதெல்லாம் இல்லை, மகி கூட நான் கூட்டு சேர்ந்துகிட்டேன். நடந்த எல்லாமே அவன் எனக்குச் சொன்னான். நீங்க அவனுக்கு எவ்வளவு முக்கியம்னும் சொன்னான். கூடவே நான் இல்லாம நீங்க எப்படி கஷ்டப்பட்டீங்கன்னும் சொன்னான். உங்க ஒருத்தருக்காக உருவாக்கப்பட்ட எங்க உறவு என்னைக்கும் தொடரும். அதையும் விட என் கருவுல உருவாகுன முதல் குழந்தை அவன். இப்போ வளர்ந்து பெரியவனா நிற்கும் போது கசக்குமா என்ன?” என்றவள் அவள் வயிற்றைத் தடவி கண்ணீருடன் அவன் தோளில் சாய்ந்து மென்மையாக அணைத்துக்கொண்டாள்.
அந்த அணைப்பு இருவருக்கும் கடந்து வந்த ரணங்களை சற்று ஆற்றியது என்றே சொல்லலாம்.
இப்போது கிடைத்த அருகாமையும், இயற்கைக்கு மாற்றமாய் இந்த சில நாட்களில் காண கிடைத்த விடயங்களும் ஒரு பக்குவத்தை கொடுத்திருந்தது.
இழந்தவைகள் பல இருந்தும் அதனைப் பேசி, இருவரும் இப்போதைய நிம்மதியை கெடுக்க நினைக்கவில்லை…
தங்களை விட்டுச் சென்றது இந்த உலகைக் காக்கவே என்ற புரிந்துணர்வைக் கடந்து வந்த பாதை அவர்களுக்குக் கொடுத்திருந்தது.
அதில் அவர்களது உயிர்பெறா முதல் கருவும் அடக்கம்…
விளக்கம் தேடும் நிகழ்வுகள் அல்லவே அவை, கண்முன்னே அத்தனையும் பார்த்தவர்கள் ஆகிற்றே! மறந்து கடக்க, மனது தயாராய் இருந்தது…
எது எப்படி இருந்தாலும் காலம் தாண்டியும் அவர்கள் காதல் இணைந்து கலந்திருந்தது.
அவர்களின் காதலின் முன் காலம் கூட எட்ட நின்று தான் பார்க்க வேண்டும் போல…
மனம் இணைந்த பின் காலம் எங்கிருந்து தடையை வழங்க, காலத்தின் எங்கு எந்த மூளைக்கு சென்றாலும் காதல் என்றும் காதல் தானே!
காலம் கடந்த பொக்கிஷம் காதலன்றோ????
காதலை அணைக்கும்…
ஆஷா சாரா…

