
காலம் தாண்டிய பயணம் 20
அவள் கரத்தைப் பற்றிய படியே அனைத்தையும் சொல்லி முடித்தவன் அவள் கண்களையே பார்க்க, அதில் ஒரு துளிக் கண்ணீர் உருண்டு ஓடியது.
அவளது இந்த உணர்வு அவளுக்கே புதிது. அவள் வாழ்வில் அவள் அறியாத பக்கம் அல்லவா அவை?
“பொம்மிதான் அந்தக் குட்டியா?” என்று கேட்க, அவனோ ஆமோதிப்பாய்க் கண்களை மூடித்திறந்தான்.
மேலும் அவனே, “அன்னைக்கு உனக்குப் பட்ட அடி குணமாகக் கூடியதுன்னு ஒரு டாக்டரா என் மூளைக்குப் புரிஞ்சிருந்தாலும், என் மனசுக்குப் புரியலை. உனக்கு என்ன ஆச்சோன்னு உள்ளுக்குள்ள ஏதோ பண்ணிட்டே இருந்துச்சு. நீ நல்லா இருக்க அப்படிங்கிற வார்த்தையாவது கிடைச்சிடாதான்னு ரெண்டு வருஷமாத் தவிச்ச எனக்குப் பதிலா, நீயே என் கண் முன்னாடி வந்து நின்னப்போ என் இதயம் துடிச்ச துடிப்பு எனக்குத்தான் தெரியும்” என்றவனின் கண்ணில் இன்றும் அன்று அவளைக் கண்ட உணர்வுகள் கொட்டிக்கிடந்தது.
காதலாய் அவளது விழிகளை நோக்கியவனுக்கு அதில் தெரிந்த தவிப்பு புரிய, “அன்னைக்கு அப்பறம் என்ன ஆச்சு? ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனாங்களா?” என்றான் அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு…
அவளோ, “எனக்குச் சரியாத் தெரியலை. அப்பானா ஊர்ல கொஞ்சம் பயம். அதனால டீச்சர்ஸ் எல்லாம் கொஞ்சம் பயந்துட்டாங்க… அவசரமா என்னை இங்கேயிருந்து கூட்டிட்டுப் போயிட்டாய்ங்க. போற வழியில் ஏதோ ஒரு ஹாஸ்பிடல்ல காட்டி மருந்து எடுத்திருப்பாங்க போல. மயக்கம் தெளிஞ்சதும் கொஞ்சமா வலி தெரிஞ்சுச்சு… கொஞ்ச நாள் காயம் இருந்துச்சு, அப்பறம் குணமாகிடுச்சு” என்றாள்.
அவனோ தலையசைத்து அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அடுத்து என்ன பேசவென்று அவள் அமர்ந்திருக்க, அவனோ அவள் கரத்தில் அழுத்தம் ஒன்றைக் கொடுத்தவன், “எதையும் குழப்பிக்காதே. இதெல்லாம் உன்கிட்ட இப்போ சொல்லணும்னு நான் நினைக்கவே இல்லை. இப்போ இந்த நிமிஷம் நீ கேட்கவும் மறைக்கத் தோணலை, சோ சொல்லிட்டேன். பொறுமையா யோசிக்கலாம். எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்… அப்பறம் நீ பொறுமையா என்னை லவ் பண்ணு. இப்போ நம்ம லவ் எனக்கே எனக்கு மட்டும் தான் சொந்தம்” என்றான் கண் சிமிட்டியபடி…
அவளிடம் எந்தப் பதிலும் இல்லை, பதில் சொல்லும் நிலையிலும் அவள் இல்லை.
அந்த நாள் இன்று வரை மறக்கவே முடியாமல் அவள் மனதில் பதிந்து போன வடுவாகத்தான் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது…
எத்தனை நாள் பாதித் தூக்கத்தில் பயந்து எழுந்திருப்பாள்? இன்று நினைத்தாலும் பயம்தான்.
நாய்களிடமிருந்து அவள் பயந்து ஒதுங்கிப் போக இதுவும் காரணம் அல்லவா???
ஆனால் இன்றோ அந்த நாளின் இன்னொரு பக்கத்தை அவன் கூறிக் கேட்கையில் ஏதோ உள்ளுக்குள் மலர்வதுபோல் ஓர் எண்ணம்.
அது காதல் என்றெல்லாம் இல்லை. தன்னை ஒருவர் இத்தனை தேடி இருக்கிறாரா என்றொரு ஆர்ப்பரிப்பு அவ்வளவே!
ஒதுக்கம், ஒதுக்கம் மட்டுமே அவள் இதுநாள் வரை பார்த்து வளர்ந்தது. யாழினியின் அன்பு கூட அவளுக்குச் சரியாக ஞாபகம் இல்லாத ஒன்று.
விஜயா மட்டும் இல்லை என்றால் அவள் நிஜத்தில் பைத்தியம்தான் ஆகி இருப்பாள்.
ஆனால் இன்று அவளைச் சூழ அத்தனை நல்ல உறவுகள்.
தன்னை நேசிக்க, தன்னைப் புரிந்துகொள்ள, தன்னைத் தாங்க என அத்தனை சொந்தமும் கூடி வந்த உணர்வு அவளுக்கு. அவர்களைப் பிரித்து வேறு ஆளாய்க் கருத முடியவில்லை.
இவர்கள் இப்படியே அமர்ந்திருக்க, அவர்களுக்கான உணவுடன் வந்திருந்தாள் பூவிழி.
மகிழ் இனியாவின் அருகில் அவள் கரம்பற்றி அமர்ந்திருப்பதைப் பார்த்து அவள் முறைக்க, இரண்டு வருடக் காதலைத் தன்னவளிடம் சொல்லிய குதூகலத்துடன் தாயின் முறைப்பும் சேர்ந்துகொள்ள, மகிழ் உற்சாக மனநிலையில் தான் இருந்தான்.
அவனோ இன்னும் இனியாவை நெருங்கி அமர, இனியா அவனை அதிர்ச்சியுடன் தான் பார்த்து வைத்தாள்.
அதனையெல்லாம் கணக்கில் எடுக்காதவனோ, “உங்களைத் தான் அணைக்க விடமாட்டீங்க, என் வருங்கால மனைவியைக்கூடவா தொடக் கூடாது?” என்று வினவ,
பூவிழியோ, “உன்னைப் போன்ற ஒருவன் எனக்கு எப்படி மகனாக இருப்பான் என்ற கேள்விதான் மனதில் ஓடுகிறது. ஆனாலும் சுவாமி கூறியதை மறுக்கவும் முடியவில்லை. அதனால் ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் சரியாக நடந்துகொள்ளப் பழகு. முதலிலிருந்து உனக்குக் கற்றுக்கொடுக்கிறேன். இப்போது அந்தப் பெண்ணை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்துகொள்” என்று கட்டளைபோல் சொல்ல, அவனும் புன்னகையுடன் தள்ளி அமர்ந்தான்.
அடுத்து பூவிழி அமைதியாக உணவைப் பரிமாற, மகிழோ,
“இந்த நேரம் எல்லாரும் வெளியே வரமாட்டாங்கன்னு சொன்னாங்களே, நீங்க மட்டும் எப்படிம்மா வெளியே வந்தீங்க?” என்றபடி உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டவனது கண்கள் விரிந்தது.
எத்தனை வருடம் இழந்த அவன் அன்னையின் கைப்பக்குவம், கண்கள் இலேசாகக் கலங்கத் தொடங்க, மற்றவர்கள் பார்க்கும் முன் மறைத்துக்கொண்டான்.
பூவிழியோ, “இங்குள்ள இளம் பெண்களைப் பலி பூஜையென அவன் கவர்ந்து செல்ல, எம்மக்களிடையே பயம் பல்கிப் பெருகியது. பதினெட்டு வயது முடிந்த பெண்களில் என்னைப் போல இன்னும் சிலரே இந்த ஊரில் உயிருடன் இருக்கின்றோம், அதுவும் ஒன்று அந்த மச்சம் இல்லாமல் பிறந்தது இன்னொன்று எங்கள் தைரியம். ஆனால் அந்த தைரியம் வருவது தான் இங்கே அதிசயம். இப்படி உயிர் வதம் செய்யும் அவன்மீது தோன்றும் பயம் அவ்வளவு சாதாரணமாய்ப் போய் விடுவதில்லையே! அதுவே அவன் வெற்றி. இன்றுவரை அந்தப் பயத்தைப் போக்க எம்மால் முடியவில்லை. அவர்களது பயத்தைக் கலைக்க அவன் மரணத்தால் மட்டும்தான் முடியும்” என்று நிறுத்தினாள்.
மீண்டும் அவளே, “யான் இளவேந்தனின் மகள், பயம் என்பது அருகில் கூட நெருங்காது. அதனால் என்னையும் அந்த மார்தண்டனால் நெருங்க முடியாது” என்று முடித்தவளின் குரலில் அத்தனை நிமிர்வு…
மகிழுக்கு அவள் நிமிர்வு பிரமிப்பையே கொடுத்தது.
உணவு பரிமாறி முடித்த பூவிழியோ, அவனுக்கு உருண்டைபோல ஓர் இனிப்புப் பண்டத்தை வைக்க, அவனோ என்னவென்று புரியாமல் நிமிர்ந்து பார்த்தான்.
“உணவருந்தி முடித்ததும் இனிப்பு வழங்குவது எங்கள் முறை” என்றாள் வேறெங்கோ பார்த்தபடி. அதிலேயே அவள் சொல்வது பொய் என அவனுக்குப் புரிய, யாருக்காக இனிப்பு உண்பதைத் தவிர்த்தானோ, அவர் கையால் அந்த இனிப்பு கிடைத்த பின் கசக்கவா செய்யும்? விரும்பியே வாய்க்குள்ளே போட்டுக்கொண்டான்.
அதைப் பார்த்தும் பார்க்காதது போல் பூவிழி அவனை ஓரக்கண்ணால் பார்க்க, மகிழுக்கோ அவளை அணைத்துக்கொள்ளவே கைகள் பரபரத்தது.
ஆனால் அருகில் நெருங்கினால் தான் குருவாளை நீட்டி விடுவாளே என்று அடக்கி வாசித்தான்.
பெண்கள்தான் எத்தனை வயதிலும் தாய்மையை உணரக்கூடியவர்கள் ஆகிற்றே! இதில் பூவிழி மட்டும் விதிவிலக்கா என்ன??
இவர்கள் இங்கே இப்படி இருக்க, அங்கே மார்த்தாண்டனைத் தேடிச் சென்ற நால்வரும் அவனிடம் அகப்பட்டு அவன் முன்னே கைதியாய் நின்றிருந்தனர்.
நால்வரும் அந்தக் காட்டின் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்த நேரம் துயிலனோ “சுவாமி அவனை வீழ்த்த இவருடைய மகன் வேண்டும் என்று கூறினீர்களே பின்னே ஏன் அவரை அங்கேயே விட்டு வந்தீர்கள்?” என்றான் முன்னே கிளைகளை உடைத்து பாதை அமைத்தபடி…
அவரோ “காரணம் உள்ளது துயிலா” என்று மட்டும் சொன்னவர் வேறு எதுவும் பேசவில்லை அமைதியாகவே நடக்கத் தொடங்கினார்.
சிறிது நேரம் அமைதியான பயணம் தொடர, அந்த அமைதியைக் களைத்த வான்மீகியோ எதையோ உணர்ந்தவராக “இதோ நெருங்கி விட்டோம்” என்றவர் சுற்றும் முற்றும் பார்த்தபடி கையில் இருந்த பொடி ஒன்றைத் தூவ, அங்கே அவர்களது உருவம் தன்னால் மறைந்து கொண்டது.
யாரின் கண்களுக்கும் புலப்படாத வகையில் நால்வரும் முன்னோக்கி பயணிக்க, சற்றுத் தொலைவில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க, அதில் நடுநாயகமாக ஒருவரின் முதுகு தெரிந்தது.
மித்ரனோ அவன் தான் மார்த்தாண்டன் என்ற ஊகத்துக்கு வந்தவன் சுற்றிப் பார்க்க, அவன் கண்ணில் விழுந்தாள் அவன் மனைவி…
மந்திர கட்டுக்களுடன் அமர வைக்கப்பட்ட யாழினி மீது பார்வையில் விழ, கோபமாக முன்னேறப் போனவனைத் தடுத்தார் வான்மீகி.
அவரோ இடம் வலமாகத் தலையசைக்க, தன் முன்னே தன் மனைவி இருந்து ஒன்றும் செய்யமுடியாத கோபத்தை அடக்க வழி தெரியாமல் பல்லைக் கடித்தப்படி நின்றான் மித்ரன்.
வான்மீகியோ “இளவேந்தா அரத்த மோகினியை வரவழைக்க முயற்சி செய்” என்க, அவரும் அங்கேயே அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்க தொடங்கினார்.
அரத்த மோகினியை கட்டுக்குள் கொண்டு வந்தால் இவனைத் தடுக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு…
அவன் இவர்களது எண்ணத்திற்கே அப்பாற்பட்டவன் என்பதை இவர்களுக்கு யார் சொல்வது???
இளவேந்தனின் மந்திரம் இரண்டு மூன்று முறை வேலை செய்யாமல் போக, கண்களைத் திறந்து வான்மீகியை இல்லை என்கிற ரீதியில் பார்த்தவர் “சுவாமி என் மந்திரங்கள் அங்கே நுழைய முடியாதபடி கட்டுக்கள் அரத்த மோகினியைச் சூழ்ந்துள்ளது” என்க, வான்மீகி கண்களை மூடித் திறந்தார்.
அடுத்து என்னவென்று அவர் மூளை செயற்படத் தொடங்க, அந்த நேரம் மார்த்தாண்டனின் நாசி எதையோ உணர்ந்து கொண்ட உணர்வில் இதழ்கள் கேலியில் வளைந்தது.
எழுந்து நின்றவனோ இவர்கள் நின்றிருந்த அந்தச் செடி மறைத்த இடத்தைப் பார்த்தபடி திரும்பியவனோ,
“ஹாஹா… வந்துவிட்டாயா மித்ரா என்னைத் தேடி. இல்லை இல்லை உன்னைத் தேடி நீயே வந்துவிட்டாயா?” என்று சத்தமாய் சிரித்தான்.
விளைவு அடுத்த சில வினாடிகளில்
மார்த்தாண்டனை தேடி வந்த நால்வரும் மந்திரக் கட்டில் அவன் முன்னே நிற்க வைக்கப்பட்டிருக்க, மித்ரனின் கண்களும் சேர்த்து கட்டப்படிருந்தது.
மித்ரனுக்கோ அத்தனை நாள் போராட்டமும், இப்போது கண்முன் அவனவள் கட்டப்பட்டு அங்கே பூஜை நடுவில் அமர வைக்கப்படிருப்பதை பார்த்தும் எதுவும் செய்ய முடியாத கையாளாகாத நிலைமையும் அவனை வெகுவாய் தாக்கக் கொதித்துத் தான் போயிருந்தான்.
இதில் மார்த்தாண்டனின் புன்னகை வேறு எரிச்சளைக் கொடுக்க “உனக்கு என்ன வேணும் இப்போ, மரியாதையா என் யாழ விட்டுடு, இல்லனா உன்ன கொல்லக் கூடத் தயங்க மாட்டேன்” என்றான் கோபத்துடன்…
அதற்கும் மார்த்தாண்டனிடம் சத்தமான கேலிச் சிரிப்பு தான்…
“என்னை நீ கொள்வாயா? நன்றாக இருக்கிறதே! என்னை என்னவென்று நினைத்தாய் மித்ரா? இந்த உலகத்தை அடக்கி ஆள பிறந்தவன், உலகையே தன் கரத்தில் ஆட்டிப் படைக்கப் போகும் உங்களது புதுக் கடவுளுக்கே பிறப்புக் கொடுக்கப்போகிறவன் யான். இனிமேல் இந்த உலகம் எங்களை வணங்கும், வணங்க வைப்பேன்” என்றான் கர்வத்துடன்…
மந்திர கட்டில் நின்றிருந்த வான்மீகியோ “மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறாய் மார்த்தாண்டா, பைரவனின் கோபப்பார்வைக்கு ஆளாகி விட்டாய், உன் அழிவு வெகு தொலைவில் இல்லை” என்றார்.
மார்த்தாண்டனோ கோபத்துடன் வான்மீகியைப் பார்த்தவன், “யாருக்கு யார் கையால் அழிவு வான்மீகி? இதற்கான பதில் இன்றே உனக்குக் கிட்டும். உன் பைரவன் வேண்டுமானால் என்னிடம் உயிர் பிச்சை கேட்கட்டும்” என்று
உரைத்தபடி அங்குப் பூஜைக்குத் தயாராக இருக்கும் இடத்தில் அமர்ந்தான்.
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…


